Saturday, 5 August 2017

வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் !


காவிரியின் தென்கரை சிவத்தலங்களில் ஒன்று வேதாரண்யம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு பெற்றது.
வேதங்கள் சிவபூஜை செய்த தலம்; ஈசனின் அருளால் அவை, செடி-கொடிகளாக உறைந்திருக்கும் ஊர் என்பதால் திருமறைக்காடு என்று பெயர். மறைவனம், சேதுவனம், ஆதிசேது, வேதவனம், சத்யகிரி என்று வேறு பெயர்களும் உண்டு.
இலங்கைக்குச் செல்ல சேதுவில் பாலம் அமைக்கும் முன், இந்தத் தலத்தில் பாலம் அமைத்தாராம் ஸ்ரீராமன். எனவே, இந்தத் தலத்தை ஆதிசேது என்பர்.
விஸ்வாமித்திரர், மேனகை, திலோத்தமை, இவர்களின் சாபம் இங்கே நீங்கப்பெற்றது. நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோரால் வழிப்படப்பெற்ற தலம் இது.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய தேவார மூவரால் பாடப்பெற்ற 44 தலங்களுள் திருமறைக்காடும் ஒன்று! அதேபோல், பத்துக்கும் மேல் பதிகங்கள் பெற்ற 10 திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பதிகங்கள் பாடி, நெடுங்காலம் மூடப்பட்டுக் கிடந்த கோயிலின் திருக் கதவை திறக்கவும்- மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் இது. தற்போது வெள்ளி வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது இந்த திருக்கதவு.
திருஞானசம்பந்தரால் கோளறு பதிகம் பாடப்பட்டது இந்தத் தலத்தில்தான்!
விளக்குத் திரியைத் தூண்டிய எலி, மறுபிறவியில் மகாபலிச் சக்ரவர்த்தியாகப் பிறக்க ஈசன் அருள் புரிந்ததும் இந்த வேதாரண்யத்தில்தான்.
இறைவனின் திருநாமம் ஸ்ரீவேதாரண்யேஸ்வரர். இவரை மறைக்காட்டுறை மணாளன் என்றும் போற்றுவர்.
அகத்தியருக்கு, நித்திய கல்யாணக் கோலத்தினராக இறைவன் காட்சி தந்த தலம் இது. தரிசனம் தந்த நாள்- சித்திரை மாதம், ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய சப்தமி திதி நாள்.
சப்த விடங்க திருத்தலங்களில் 2-வது தலம் திருமறைக்காடு. இங்கே மூலவர் சந்நிதியின் அருகிலேயே ஸ்ரீதியாகராஜர் சந்நிதி உள்ளது. இங்கே ஹம்சபாத நடனம் ஆடும் 'புவனி விடங்க'ராக அருள்பாலிக்கிறார். மரகத லிங்க தரிசனம், காலை 900 மணி மற்றும் மாலை 600 மணிக்கு கிடைக்கப் பெறும்.
64 சக்தி பீடங்களில் சுந்தரி பீடம் இது. அம்பாளின் திருநாமம்- ஸ்ரீயாழைப் பழித்த மொழியம்மை; வடமொழியில்- வீணாவாத விதூஷணி. கலைமகளது வீணையின் இசையைவிட இனிமையான குரலைப் பெற்றவள் என்பதால் இந்தப் பெயர். இதற்கேற்ப இங்கே அருள்பாலிக்கும் கலைமகளும் வீணையில்லாமல் தரிசனம் தருகிறாள்.
இங்கிருக்கும் ஸ்ரீநடராஜ சபை... ஸ்வாமி ஆனந்த நடனமாடும் 16 சபைகளில் தேவ சபையாக திகழ்கிறது.
இந்தத் தலத்தில் அறுபத்து மூவருடன் தொகையடியார் மற்றும் திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் சேர்த்து எழுபத்து மூவரை தரிசிக்கலாம்!
வடமேற்கு மூலையில் சுதைக்கட்டால் செய்யப்பட்ட கஜலட்சுமி தரிசனம் அற்புதம். கஜலட்சுமி மூர்த்தத்துக்கு பின்புறத்தில் சுரங்கம் ஒன்று இருந்ததாகவும், இது தஞ்சை பெரிய கோயிலுக்குச் செல்லும்படி அமைந்திருந்ததாகவும் கூறுவர். தற்போது இந்தப் பாதை அடைக்கப்பட்டு விட்டதாம்.
சிவ- பார்வதி மணக்கோலத்தைக் காண வந்தவர்கள் ஆதலால், இங்கிருக்கும் அனைத்து தெய்வங்களும் ஸ்ரீவேதாரண்யேஸ்வரரை நோக்கியபடி அருள்பாலிக்கின்றனர். நவக்கிரகங்களும் வழக்கத்துக்கு மாறாக வரிசையாகக் காட்சி தருகிறார்கள்.
ஸ்ரீதுர்கையும் தென்திசை (மூலவர் சந்நிதியை) நோக்கி காட்சி தருகிறாள். எனவே, ஞான துர்கை என்பர். இவளை வழிபட்டால் குழந்தை இல்லாமை, திருமணத் தடை, பில்லி- சூனியம், கிரக கோளாறுகள் போன்ற குறைபாடுகள் விலகுமாம்.
தலதீர்த்தம்- வேதாமிர்தம் எனவும், கடல்- வேத நதி என்றும் போற்றப்படுகின்றன.
ஸ்ரீராமனின் வேண்டுதல்படி உச்சிப் பொழுதில் தோன்றிய தீர்த்தம் இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தக்குளம். உச்சிப் பொழுதில் இதில் நீராடி வழிபடுவது சிறப்பு.
ராவணனைக் கொன்றதால் ஸ்ரீராமனை பிரம்மஹத்தி மற்றும் வீரஹத்தி தோஷங்கள் பற்றிக்கொண்டன. ஸ்ரீராமன் இந்தத் தலம் வந்து லிங்கம் நிறுவி வழிபட்டதால் பிரம்மஹத்தி நீங்கியது. ஸ்ரீவீரஹத்தி விநாயகரின் அருளால் வீரஹத்தி தோஷம் அகன்றது. மேற்குப்புற வாசலில் வீரஹத்தி பலி தூணும், ஒரு காலை தூக்கிய நிலையில் வீரஹத்தி விநாயகரும் காட்சி தருகின்றனர்.
கோயிலின் உள்ளே- மண்டப விதானத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராசிகளும், நட்சத்திரங்களும் உள்ளன. தவிர நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கும் மூலிகைச் சித்திரங்களும், மூலவர் சந்நிதியின் பின்புறம் உள்ள பிரம்மன், விஷ்ணு மற்றும் காலனின் சித்திரங்களும் அற்புதம்.
வேதாரண்யம் விளக்கழகு என்பர். மாலை நேர வழிபாட்டின்போது வரிசையாக சரவிளக்குகள் ஏற்றப்பட்டு நடக்கும் இறைவழிபாடு கண்கொள்ளாக் காட்சி.
தாயுமானவர், திருவிளையாடற்புராணம் மற்றும் வேதாரணிய புராணம் ஆகிய நூல்களை இயற்றிய பரஞ்சோதி முனிவர் பிறந்ததும் இந்த ஊரில்தான்.

No comments:

Post a Comment