Monday 7 May 2018

அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், வடநாகேஸ்வரம், குன்றத்தூர் - சென்னை


தொலைபேசி எண்: +91- 44 - 2478 0436 , 93828 89430

அமைவிடம்:

சென்னையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலுள்ள இத்தலம் போரூரிலிருந்து 10 கி.மீ. தூரமும், பல்லாவரத்திலிருந்து ஐந்து கி.மீ.துரமும் உள்ளது.

இந்த இடத்திற்கு நகரப் பேருந்து விடப்படுகிறது.

அனைத்து இடங்களிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.

ஆலய அமைப்பு :

கிழக்கு முகமான ஆலயம். ஐந்து அடுக்கு ராஜ கோபுரம், ஏழு கலசங்களுடன் புதுப் பொலிவுடன், சிற்ப கோபுரமாக பக்தர்களை வரவேற்கிறது.

நுழையுமுன் இடப்பக்கம் தெப்பக்குளம்.

தைப்பூசத் திருவிழாவில் மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும்.

முதல் நாள் சோமாஸ்கந்தர் உலா;

இரண்டாம் நாள் சந்திரசேகரர் உலா;

மூன்றாம் நாள் தேவியருடன் முருகவேள் பவனி வருகிறார்.

ஆலயத்துள் பிரவேசித்தால் இடப்புறம் சேக்கிழார் சன்னிதி உள்ளது. சேக்கிழாரின் பிறந்த நாளான வைகாசி பூசத்தன்று விழா கொண்டாடப்படுகிறது. சொற்பொழிவுகள், அபிஷேகம், அலங்காரம், திருமுறை பாராயணம் அனைத்தும் சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும் பிரதோஷம் கோலாகலமாக நடக்கிறது.

நுழைவாயிலுக்கு நேரே துவஜஸ்தம்பம்; பலிபீடம், பிரதோஷநந்தியின் நான்குகால் மண்டபமும் இருக்கிறது.

இடப்புறம் கற்பக விநாயகர்; வலப்புறம் கோடி தீப மண்டபம் உள்ளது.

வள்ளலார் சேக்கிழாரைப் போற்றிப் பாடியுள்ளதால் அவரது வண்ணச் சித்திரத்தின் முன்பும் இடைவிடாமல் தீபம் ஏற்றப்படுகிறது.

சுதையாலான துவார பாலகர்களை தாண்டி உள்ளே சென்றால் நாகேச்வரர் தரிசனம் தருகிறார்.அவருக்கு இடப்புறம் அம்பாள் சன்னிதி.

அம்பாள் நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் சதுர் கரங்களுடன் எதிரே பலிபீடம், சிம்மவாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.

சன்னிதியில் இடப்பக்கம் பள்ளியறை காணப்படுகிறது.

பிராகாரச் சுற்றில் பைரவருக்கு தனி சன்னிதி காணப்படுகிறது.

உட் பிராகார வலத்தில் உற்சவ சேக்கிழார், சூரியன், சந்திரன், பரவை நாச்சியாருடன் சுந்தரர், விநாயகர், சத்தியநாராயணர், அப்பர், சம்பந்தர், மாணிக்க வாசகர்,நாகேந்திரர், நாக நாதேச்வரர், காளிங்க நர்த்தன கண்ணன் என வரிசையாக சிலா வடிவங்களைக் காணலாம்.

சுவாமி சன்னிதி கோஷ்டத்தில் பிள்ளையார், தக்ஷிமூர்த்தி, திருமால், நான்முகன், விஷ்ணு துர்கை ஆகியோரைத் தரிசிக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் சைவ நால்வருக்கு விசேஷ அபிஷேகம், பூஜை நடத்தப்படுகிறது.

செவ்வாய்க் கிழமைகளில் விஷ்ணு துர்கைக்கு சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

ஒரு பெரிய மேடையில் காசி விஸ்வநாதர், அண்ணாமலையார், திருமகள், கலைவாணி, வீரபாகு முதலானோரின் சிலை வடிவங்கள் கம்பீரமாக உள்ளன.

நாக தோஷம் நீக்கும் சிவன்:

நாகேஸ்வரர், இத்தலத்தில் ராகுவின் அம்சமாக காட்சி தருகிறார். தினமும் இவருக்கு காலை 6.30, 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாலபிஷேகம் செய்கின்றனர்.

நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள் (கோயிலிலேயே உளுந்து சாதம் செய்து தருவர்). இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

அம்பாள் காமாட்சி தெற்கு நோக்கி, எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள்.

தை வெள்ளிக் கிழமைகளில் இவளுக்கு பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர்.

சித்ரா பவுர்ணமியை ஒட்டி இக்கோயிலில், 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

இவ்விழாவின் எட்டாம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். அப்போது சுவாமிக்கு முன்புறம் அவரை பார்த்தபடி ஒரு சப்பரத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் உலா செல்வர்.

சித்ரா பவுர்ணமியன்று சிவன், அம்பாள் திருமணம் நடக்கிறது. விழாவில் ஒருநாள் சுவாமி, நாக வாகனத்தில் உலா செல்வார்.

 சேக்கிழாரின் சிவ தரிசனம்:

கோயில் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. சிவனை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றிருக்கும் இவர், வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஏடு வைத்திருக்கிறார்.

அனைத்து பூசம் நட்சத்திரத்தன்றும் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.

வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.

குருபூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி இங்கிருந்து தேரடிக்குச் செல்வார். அப்போது பொதுமக்கள் சிவன் சார்பில், சேக்கிழாரை கோயிலுக்குள் அழைத்து வருவர்.

அதன்பின்பு, சேக்கிழார் மூலஸ்தானத்திற்குள் சென்று நாகேஸ்வரரை தரிசிக்கும் வைபவம் நடக்கும். அன்றிரவில் சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி உலா சென்று, மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார்.

அன்று இரவு முழுதும் கோயில் திறந்தே இருக்கும்.

இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் சேக்கிழார் பிறந்த தலத்தில், அவருக்கு தனிக்கோயில் உள்ளது.

அங்கும் சேக்கிழார் குருபூஜை விழா 11 நாட்கள் நடக்கும். அவ்விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவனை தரிசிப்பார்.

தல வரலாறு:
 
சோழமன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்ட போது, அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழி ராமதேவர், குலத்தின் பெயரால் "சேக்கிழார்' என்றழைக்கப்பட்டார்.

சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான்.

அவரது சிறப்பான பணிகளைக் கண்டு மகிழ்ந்தவன், "உத்தமசோழ பல்லவர்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான்.

சிவபக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறை, "பெரியபுராணம்' என்னும் தொகுப்பாக வெளியிட்டார்.

ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனை தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினார்.

அதேசமயம் அடிக்கடி திருநாகேஸ்வரம் செல்ல முடியாதென்பதால், நாகேஸ்வரருக்கு தனது ஊரில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார்.

நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, இங்கு ஒரு கோயில் எழுப்பினார்.

சிவனுக்கு, "நாகேஸ்வரர்' என்று பெயர் சூட்டி, தினமும் வழிபட்டார். தலமும், "வடநாகேஸ்வரம்' என்று அழைக்கப்பெற்றது.

உமாபதி சிவாச்சாரியார் சேக்கிழாரைப் பாராட்டி புராணமே பாடியிருக்கிறார். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆலயம் என்பது சரித்திர ஆய்வாளர் கூற்று.

மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1178-1218) மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி.1246-1271) காலத்திய 45 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

திருவிழா காலங்களில் நாட்டியமாடியவர்களில் பிரபலமான இருவர் பெயர்களும் காணப்படுகின்றன. ஒருவர் சித்திரமேழி நங்கை; மற்றொருவர் திருபுண்ணாழிகை நங்கை.

நாகேஸ்வரர் தன்பெருமையை உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம்.

ஒரு சமயம் ஆலயத்தின் பிரதான லிங்கமான ஸ்ரீ நாகேஸ்வர லிங்கத்தின் தலைப்பாகம் சற்றே சேதப்பட்டது. அதை ஆலய அதிகாரிகளிடம் தெரிவித்தார் அர்ச்சகர். அவர்கள் கலந்து பேசி மூலமூர்த்தியை எடுத்துத் திருக்குளத்தில் சேர்ப்பித்து விட்டு,

பிராகாரத்திலிருக்கும் அண்ணாமலையாரை கருவறையில் பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.

பேச்சு செயலானதும், திருக்குள ஜலம் சிகப்பானது.

அன்றிரவு ஒரு சிவனடியார் சொப்பனத்தில் சிவபெருமான் தோன்றி "பொய்கையிலுள்ள என்னை எடுத்து பழையபடி பிரதிஷ்டை செய்" என அருளியிருக்கிறார்.

அவ்விதமே செய்ய, குளத்து நீர் இயல்பு நிலைக்கு வந்தது.

சிறிது நேரம் கருவறையில் இருந்ததால், அருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

பிராகாரத்தில் ஸ்தல விருட்சத்தைப் பார்க்கலாம். நித்தமும்

நான்கு வேளை பூஜை நடைபெறுகிறது. அனைத்து திருவிழாக்களும் முறைப்படி நடத்தப்படுகின்றன.

ராகுதோஷ நிவர்த்தி க்ஷேத்திரமாக இத்தலம் இணைக்கப்பட்டுள்ளது.

 ராகு - சில தகவல்கள்:

நிழல்கிரகம். சிவனைப் போற்ற போற்ற அருள் தருபவன். பாம்பின் தலையும் மனித உடலும் கொண்டவன்.

தீக்ஷிதர், தனது பாடலில் வியாதியை தீர்ப்பவன், விஷத்தால் ஏற்படும் பயத்தை போக்குபவன், அருள் பொழியும் ஓரவிழி நோக்குடையவன், என்று பாடியிருக்கிறார்.

ஐந்தில் ராகு இருக்க அவர்களுக்கு பெண்பிள்ளை பிறந்தால் யோகமாக இருப்பார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

மூலவர் : நாகேஸ்வரர்

உற்சவர் :சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : காமாட்சி

தல விருட்சம் : செண்பக மரம்

தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி

ஆகமம்/பூஜை : காரணாகமம்

 நடை திறக்கும் நேரம்:
 
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், பொழிச்சலூர் - சென்னை

அமைவிடம்:

வடதிருநள்ளாறு என்று போற்றப்படுவது பொழிச்சலூரில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம். இது பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் பம்மலை தாண்டியதும் 2 கி.மீ தொலைவில் அமைந் துள்ளது.

சென்னை, பல்லாவரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்தலமிது.

பொழிச்சலூர் சிவன் கோவில் நிறுத்தம் என்று கேட்க வேண்டும்.

பேருந்து நிறுத்ததின் அருகிலேயே இருக்கிறது ஆலயம்.

அகத்தீஸ்வரர் ஆலயம் அகத்தியர் காலத்தில் அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

தொண்டைமண்டல புகழ்நாட்டில், புகழ்சோழநல்லூர் என்று சோழர்கள் காலத்தில் அழைக்கப்பட்டது.

பல்லவர்கள் காலத்தில் பொழில் சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, பொழிச்சலூர் என்றானது என வரலாறு கூறுகிறது.

ஈசனை சரணாகதி அடைந்த எவருக்கும் நவகிரகங்கள் எதுவும் செய்வதில்லை. அதைத்தான்

'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.' - என்று கோளறு பதிகமும் தெரிவிக்கிறது.

அகத்தியர் பொதிகை நோக்கி நதியோரமாக பயணப்பட்ட போது தர்ப்பைப் புற்களை நீரில் இட்டு விடுவாராம்.

அவை எங்கெல்லாம் ஒதுங்குகின்றனவோ, அவ்விடங்களிலெல்லாம் சுயம்பு சிவலிங்கமோ அல்லது ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமோ தரிசனம் தருமாம்.

அப்படி இல்லாத இடங்களில் இவரே ஒரு லிங்கத்தை நிறுவிவிட்டு தன் தீர்த்த யாத்திரையை தொடர்வாராம். அப்படி அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் உள்ள ஒரு கோயில் பொழிச்சலூரில் உள்ளது.

இவ்வூர் பூம்பொழிலோடு மலர்ந்திருந்ததால் பொழில் சேரூர் என்றும் வழங்கப்பட்டது.

தொண்டைநாட்டு நவகிரகத் தலங்களில் சனி பகவானுக்குரிய பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.

அகத்தியர் இத்தலத்தின் பெருஞ் சக்தியால் ஈர்க்கப்பட்டு சுயம்புவாய் நின்ற ஆதிசிவனை பூஜித்து சில காலம் இங்கேயே தங்கினார். மூலவர் சந்நதி விமானம், யானையின் பின்பக்கம் போன்ற (கஜப்ருஷ்ட) தோற்றம் கொண்டிருக்கிறது.

கோயிலின் முகப்பு மண்டப வாயிலிலிருந்து நேராக நோக்கினால் பிரதானமாக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், சற்று தள்ளி இடப்பக்கமாக ஆனந்தவல்லி அம்பிகை தெற்குப்புறம் நோக்கியும், தனித்தனி சந்நதிகளில் அருளாட்சி செய்கிறார்கள்.

இத்தலத்தின் பிரதானமானவர், சனீஸ்வர பகவான் தான். சனீஸ்வர பகவானே இங்குள்ள சிவனை பூஜித்து, நள்ளாறு தீர்த்தத்தில் நீராடியதால் தன் தோஷம் நீங்கப்பெற்று, தனிச் சந்நதி கொண்டு அருட் பாலிக்கிறார். எனவே, இவ்வூர் வடதிருநள்ளாறு என்று வழங்கப்படுகிறது..

திருநள்ளாருக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தோஷப் பரிகாரம் செய்து மகிழ்வோடு திரும்புகின்றனர். இங்குள்ள தீர்த்தத்திற்கும் நள்ளார் தீர்த்தம் என்றே பெயர்.

சனிபகவான் பிறர்க்கு எப்பொழுதும் கண்ட சனி, ஜென்ம சனி, ஏழரை சனி, என்று பலவிதமாக பக்தர்களை பிடித்து வாட்டி வதைத்து துன்பம் கொடுத்து வந்ததால், அதனால் இவருக்கு ஏற்பட்ட தன் பாவங்களை போக்கிகொள்ள இங்கு நள்ளார் தீர்த்தம் உண்டுபண்ணி சிவபெருமானை வழிபட்டு சனிபகவான் அவர் பிறர்க்கு செய்த தன் பாவத்தை போக்கி அவரது தோஷம் நீங்கி பாவ விமோசனம் கிட்டியதால், இவ்வாலயத்தில் சனிபகவான் திருநள்ளாருக்கு அடுத்ததாக தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார்.

வடதமிழ்நாட்டில் சென்னையில் இந்த ஒரே ஆலயம் ஒன்று தான் சனிபகவானுக்கு என்று சனிதோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலமாகவும், நாடி ஜோதிடத்தின் பாவவிமோசனம் செய்ய பரிகார ஸ்தலமாகவும் சிறப்புற்று விளங்கிவருகின்றது.

இந்த ஆலயத்தில் சனிபகவானுக்கு நெய்வேத்தியம் செய்யும் நேரத்தில் சனிபகவானுடைய வாகனமான நடமாடும் தெய்வமான காக்கைகள் கூட்டமாக வந்து அர்ச்சகர் போடும் அன்னங்களை சாப்பிட்டு செல்லும். இந்த நேரத்தில் தோஷநிவர்த்தி செய்பவர்களும் இவ்வாலயத்தில் உள்ள, வருகின்ற நடமாடும் தெய்வங்களாக உள்ள காக்கை, மாடு, நாய் இவற்றிக்கு அன்ன தீவணம் செய்தால் உங்களுக்கும் தோஷங்கள் நீங்கி பாவவிமோசனம் கிட்டும் என்பது ஐதீகம்.

பழமை வாய்ந்த கோயிலாக விளங்கும் இவ்வாலயத்தில் இருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும் கி.பி 12-ம் நூற்றாண்டு சோழ மன்னர் ஆட்சிபுரிந்த காலகட்டத்தில் கஜபிருஷ்ட விமான அமைப்புடன்  கட்டப்பெற்றதாகும்.

இவ்வாலயத்தில் அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி வந்தபொழுது இங்கு சிலகாலம் தங்கி பூஜை செய்து வந்ததால் இறைவன் அகத்தீஸ்வராகவும் இறைவி ஆனந்தவல்லியாகவும் காட்சியளிக்கின்றனர்.

இக்கோவிலுக்கு மற்றொரு குறிப்பிட்ட அம்சமும் உண்டு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று அம்சங்களும் ஒருங்கே கொண்டு சிறந்த புண்ணியதலமாக விளங்குகிறது.

 இவ்வாலயத்தில் ஈசன் கிழக்கு பார்த்திருப்பதும் அம்மன் தெற்கு பார்த்திருப்பதும், சித்திரை 7,8,9 தேதிகளில் மட்டும் சூரியன் உதயம்; ஆகும்போது சூரியன் உள்ளே இருக்கும் சிவலிங்கம் மீது மட்டும் விழும் அமைப்புடன் வடக்குபுற வாசல் அமைப்பு கொண்டு கட்டப்பெற்றதாகும்

இறைவன் : அகத்தீஸ்வரர்

தாயார் : ஆனந்தவல்லி

தீர்த்தம் : நள்ளாறு தீர்த்தம்

தல விருட்சம் : மா மரம்

நடை திறக்கும் நேரம்:
 
காலை 5.45 மணி முதல் பிற்பகல் 12.00 வரை மாலை 4.00 முதல் இரவு 08.30 வரையிலும் (திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும்) திறந்திருக்கும்..

காலை - 5.30 மணி முதல் பிற்பகல் 01.00 வரை மாலை - 3.00 முதல் இரவு 09.00 வரையிலும் {சனி & ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்}
திறந்திருக்கும்..

தொலைபேசி எண்: +91  44  22631410 ; +91  93818 17940

அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில், மாங்காடு - சென்னை


அமைவிடம்:

சென்னை மாங்காட்டிலுள்ள அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகிலேயே உள்ளது இந்தக்கோயில்.

கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது.

இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உண்டு.

ஆலய அமைப்பு:

சுக்ராச்சாரியார் சிவதரிசனம் பெற்ற இந்த இடத்திலுள்ள கோயில் முகப்பில், சுதை சிற்பங்களைக் காணலாம்.

உள்ளே பிரவேசித்ததும் நந்தவனம், நந்தி தேவர், கருவறையில் சுக்ரருக்கு அருளிய வெள்ளீச்வரர் நாகாபரணம், வெள்ளி விபூதிப்பட்டையுடன் காட்சியளிக்கிறார்.

கர்ப்பக்கிரக வாயிலின் இருபுறமும், மாங்கனி விநாயகரும், தேவியருடன் சுப்பிரமணியரும் அருளுகின்றனர்.

கணபதி நெற்கதிரும், மாங்கனியும் ஏந்தியிருக்கிறார். உழவர் பெருமக்கள் விளைச்சல் பெருக இவரை வேண்டிக் கொள்கின்றனர்.

ஒரே கல்லால் வடிக்கப்பட்டவர் வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான்.

நந்தி தேவரின் முன், பீடம் போன்ற ஒரு கல்லில் காமாட்சியம்மை நின்ற பாதச் சுவடுகளே இங்கே அம்பாள் சன்னிதி.

காஞ்சி செல்லும் முன் இங்கு நின்று தன் பதி, சுக்ரனுக்குத் தரிசனம் கொடுப்பதை அரூபமாகக் கண்டு மகிழ்ந்தாராம் சக்தி.

வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் இங்கு நெய்தீபம் ஏற்றுவதாகக் கூறுகின்றனர்.

சேவார்த்திகள் தாயின் திருவடிகளைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கின்றனர்.

சுவாமி கோஷ்டங்களில் வேழமுகன், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், திசைமுகன், ஆதி துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

காசி விஸ்வநாதர்-விசாலாட்சி மற்றும் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகா, வீரபத்திரர் அருளும் தனிசன்னதிகள் காணப்படுகின்றன.

பிரகாரத்தில் வீரபத்திரர் இருக்கிறார். இவரது வலது பாதத்திற்கு அருகே ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.

சுவாமி விமானத்தில் எண்திசை அதிபர்கள் சிற்பம் இருக்கிறது.

சிவன் கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இடப்புறம் திரும்பியிருப்பதும், லிங்கோத்பவர் அருகில் பிரம்மாவும், பிரயோக சக்கரத்துடன் விஷ்ணுவும் வணங்கிய கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

கோஷ்டத்தில் உள்ள துர்க்கையிடமும், பிரயோக சக்கரம் இருக்கிறது. துர்க்கையை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

திருமணத் தடை நீங்கவும், பிரிந்தவர் சேரவும் அருளும் க்ஷேத்திரமிது.

இக்கோயிலில் சிவன், சதுர பீடத்துடன் அருளுகிறார்.

துவாரபாலகர்கள் கிடையாது.

சுக்ராச்சாரியாருக்கு (வெள்ளி என்றும் பெயருண்டு) காட்சி தந்தால் இங்கு சிவன், "வெள்ளீஸ்வரர்' என்ற பெயரிலேயே அருளுகிறார். பார்க்கவேஸ்வரர் என்றும் இவருக்கு பெயருண்டு.

இவருக்கான அம்பாள், மாங்காடு தலத்தில் இருக்கிறாள். எனவே, காஞ்சிபுரம் போலவே இங்கும் அம்பிகை சன்னதி கிடையாது.

சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது. இங்கு சுவாமியிடம் வேண்டிக் கொள்பவர்கள், சன்னதி எதிரே தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

விவசாய விநாயகர்:

முன் மண்டபத்தில் இருக்கும் விநாயகர் மிகவும் விசேஷமானவர். இவர் இடது மேல் கையில் நெற்கதிரும், கீழ் கையில் மாங்கனியும் வைத்திருக்கிறார்.

விவசாயிகள் இவரிடம் மாங்கனி, நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை.

கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரம் வைத்து நின்ற கோலத்தில் இருக்கிறார். இவ்வாறு இத்தலத்தில் இரண்டு வித்தியாசமான விநாயகர்களை தரிசிக்கலாம்.

ஸ்தல புராணம்:

கைலாயத்தில் ஒருசமயம் சிவன், தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த அம்பிகை, விளையாட்டாக அவரது கண்களை மூடினாள். இதனால், உலகம் இருளில் மூழ்கியது. எனவே, அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். அம்பிகை, தவறை மன்னித்து அருளும்படி சிவனிடம் வேண்டினாள். அவர் பூலோகத்தில் இத்தலத்தில் தவமிருந்து வழிபட, குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி அம்பிகை இத்தலத்திற்கு வந்து பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தார். அவளுக்கு அருள்புரிவதற்காக சிவன், இத்தலத்திற்கு வந்தார். இதனிடையே, சுக்கிராச்சாரியாரும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.

(அதிதி - கச்யபரின் அருந்தவப் புதல்வனாய் அவதரித்த வாமனர், பிறந்தவுடன் வேகமாய் வளர்ந்தார். சிறப்பாக உபநயனம் நடந்தது.

தாழங்குடை பிடித்து, கமண்டலம் சுமந்து, மகாபலியின் யாக சாலை வந்து, மூன்றடி நிலம் தானமாகக் கேட்டார்.

மகாபலி ஒரு ஊரையே தாரை வார்த்துத் தருவதாய் சொல்லியும் அவர் ஏற்பதாயில்லை.

அப்போதுதான் அசுரகுருவான சுக்ராச்சாரியாருக்கு ஐயம் ஏற்பட்டது. "இவன் குள்ளன் மட்டுமல்ல கள்ளன். இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. ஒப்புக் கொள்ளாதே" என மகாபலியைத் தனியே அழைத்துக் காதில் ஒதினார் சுக்ரர்.

மகாபலி வாக்களித்து விட்டுப் பின்வாங்க மறுத்து விட்டான்.

ஒரு சிறு வண்டாக உருமாறி சந்தியாவளி (பலியின் மனைவி) பிடித்திருக்கும் கெண்டியின் நீர் வரும் துவாரத்தை அடைத்துக் கொண்டார் சுக்ரர்.

மஹாபலி, மந்திரங்களை உச்சரித்து நீர் வார்க்கும் சமயம் எவ்வளவு சாய்த்தும் கெண்டியிலிருந்து ஜலம் விழவில்லை !

வேறொரு பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டான் மகாபலி.

'தேவையில்லை' என்ற வாமனர் கீழே கிடந்த ஒரு தர்ப்பையை எடுத்து கெண்டியின் துவாரத்தை குத்த தண்ணீரும், உதிரமும் சேர்ந்து வந்தது. கீழே ஒரு கண் குருடாகி சுக்ரவண்டும் விழுந்தது !

மூன்றடி நிலம் பெற்று திரிவிக்ரமனாய் வளர்ந்து, இரண்டடியால் விண்ணையும், மண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்க, மகாபலி தன் சிரஸைக் காட்ட, அவன் தலையில் கால்வைத்து அழுத்தி பாதாள உலகத்துக்கு அனுப்பினார்.

தானத்தைத் தடுத்த பாபம் தீரவும், கண்ணொளி பெறவும் ஈசனைக் குறித்து மாங்காட்டில் தவம் புரிந்தார் சுக்ரர்.)

ரிஷப வாகனத்தில் அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார்.

அப்போது அவர் சிவபூஜை செய்யவே, சிவனால் இங்கிருந்து செல்ல முடியவில்லை. எனவே, இங்கிருந்தபடியே அம்பிகையிடம் அசரீரியாக காஞ்சிபுரத்தில் தவம் செய்யும்படியும், அங்கு தான் காட்சி தருவதாகவும் கூறினார். அதன்படி அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தன் தவத்தை தொடர்ந்து, பின் சிவனருள் பெற்றாள்.

"என் அம்சமும் உங்களோடு இங்கே இணைந்திருக்க வேண்டும் என் பெயரால் தாங்கள் விளங்க வேண்டும்" என வேண்டினார் சுக்ரர். அப்படியே வரமளித்தார் வெள்ளீச்வரர்.

சுக்ரர்- சிலதகவல்கள்:

சுக்ரருக்கு வெள்ளி, பார்க்கவர், சுக்ல பூஷணன்,காவியன், கவி என்றெல்லாம் பெயர்களுண்டு.

வாழ்க்கைத் துணைக்கு ஜாதகத்தில் சுக்ரன் நிலையே முக்கிய காரணம்.

துலாம், ரிஷபம் இரண்டும் இவரது சொந்த வீடு. மீனம் இவரது உச்சஸ்தானம்.

இவரது உலோகம் வெள்ளி. இவருக்குரிய ரத்தினம் வைரம்.

முக்கால் பங்கு சுபர். புதனும், சனியும் இவரது நண்பர்கள். குருவும், குஜனும் பகையும், நட்புமற்ற சமநிலையுடையவர்கள்.

பிறந்த ஜாதகத்தில் இவர் 3, 6, 8, 12-ல் மறையாதிருந்தால் ஐஸ்வர்ய யோகம் சித்திக்கும்.

பெருந்தன்மை, அதிர்ஷ்டம், கெளரவம் இவைகளை வாரி வழங்குவார்.

ஜனன உறுப்புகளைக் காப்பவர் இவர்.

ஆபரணங்கள் இசை, நடனம், நாடகம், திரைப்படம் போன்ற கலைத்துறைகளில் புகழ், அழகு, காதல், வசதி அனைத்தையும் அளிப்பவர் இவர்.

ஸ்ரீ முத்துசுவாமி தீக்ஷிதர் "ஸ்ரீ சு'க்ர பகவந்தம் சிந்தயாமி ஸந்தகம்" என ஆரம்பிக்கும் கீர்த்தனையில் இவர் மகிமைகளைப் போற்றிப் பாடியிருக்கிறார்.

"சுபிட்சத்தை மட்டுமல்லாது சாஸ்திர விற்பன்னராகவும் ஆக்குவான்" என்கிறார்.

இவருக்குப் பிடித்த சுவை- இனிப்பு, தானியம்-மொச்சை, வாகனம் - கருடன், சமித்து- அத்தி, புஷ்பம் - வெள்ளைத் தாமரை, வஸ்திரம்- வெள்ளை.

ஐங்கோண ஆசனத்தில் வீற்றிருக்கும் இவர், பிருகுரிஷி- புலோமைக்குப் பிறந்தவர் இவர்.

 மனைவியர் சுபகீர்த்தி, சுகரி, சிருங்கினி- புதல்வி தேவயானி.

மூலவர்: வெள்ளீஸ்வரர் ( பார்க்கவேஸ்வரர்)
 
அம்மன்/தாயார்: காமாட்சியம்மை

தல விருட்சம் : வில்வம் , மாமரம்

தீர்த்தம் : சுக்ர தீர்த்தம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்

 நடை திறக்கும் நேரம்:
 
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்..

அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் - சென்னை



அமைவிடம்:

சென்னை, போரூரிலிருந்து குன்றத்துர் போகும் மார்க்கத்தில் போருர் பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலுள்ள ஆலயமிது.

குரு பரிகார க்ஷேத்திரமிது.

இந்த ஆலயம் ஆதி ராமேஸ்வரம் என்றும் வழங்கப்படுகிறது.

சுப காரியங்களை நடத்துவதற்கு முன்பாக இத்தலம் வந்து தரிசனம் செய்வது விச‌ஷம். குறிப்பாக வியாழன் தோறும் விரதம் இருந்து, குரு ஸ்துதியை மனதால் ஜெபித்து, வழிபாடுகள் நடத்துவதால் குருவின் பலமானது விரும்பியபடி கிடைக்கும்.

ஆலய அமைப்பு:

கருவறை முன்மண்டப முகப்பிலுள்ள சுதை சிற்பங்கள் வசீகரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

ஜோதிர் லிங்கங்கள், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள், மகான்கள் வடிவங்கள் குறிப்பிடத் தக்கவை.

கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் ஆறடி உயர ராமநாதேஸ்வர லிங்க பாணம் அமைந்துள்ளது.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஆரத்தழுவிய லிங்கமிது. தெற்கு முகமாக உள்ளது.

ஸ்ரீசிவகாம சுந்தரியம்மை நின்ற திருக்கோலம்; சதுர்புஜங்களுடன் அருள்பாலிக்கிறார். எதிரே சிம்ம வாகனம்.

கோஷ்டத்தில் விக்னேஸ்வரர், சுப்பிரமணியர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி கொடுக்கின்றனர்.

கோமுகத்தருகே சண்டிகேஸ்வரர் 2350 ஆண்டுகள் புராதனமானவர் என தொல்பொருள் ஆராய்ச்சியினர் சான்றிதழ் அளித்துள்ளனர்.

பிராகாரத்தில் கணேசர், சண்முகர், பைரவர், சனிபகவான், நவக்கிரகங்கள் வாகனங்களுடன், அவரவர் வாழ்க்கைத் துணையுடன் சன்னிதி கொண்டுள்ளனர்.

இங்கே ஈஸ்வரனே குருவாயிருந்தபடியால் தக்ஷிணாமூர்த்திக்கான அர்ச்சனை ஆராதனைகளும் மூலஸ்தானத்திலேயே செய்யப் படுகின்றன.

பக்தர்கள், வியாழக்கிழமைகளில் கடலை சுண்டல் நிவேதனம் செய்து விநியோகிக்கின்றனர்,

திராட்சை மாலை, கடலை மாலை சாற்றுகின்றனர்.

சோம வாரங்களில் தயிர் சாதம் நிவேதிப்பதாக வேண்டிக் கொண்டால் காரியம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்தல புராணம்: 1

ராமபிரான் சீதா தேவியைப் பிரிந்திருந்த காலத்தில் குரு கடாட்சம் வேண்டி, இத்தலத்தில் அமர்ந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு கீழேயே ஒரு லிங்கம் புதைந்து கிடப்பதை உணர்ந்தார்.

அந்த லிங்கத்தை லக்ஷ்மணர் உதவியோடு வெளியே எடுத்து அருகிலிருந்த நதி நீரால் அபிஷேகம் செய்து, காட்டு மலர்களைப் பறித்து அர்ச்சித்தார்.

லிங்கம் இருந்த இடத்திற்கு மேல் உட்கார்ந்த பாபம் நீங்க நெல்லிக்கனி மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தார்.

கயிலை நாதர் தோன்றி "இராமேச்வரம் செல், விரைவில் கவர்ந்து சென்ற கள்வனை அழித்து ஜானகியை அடைவாய்" என ஆசீர்வதித்தார்.

அதன்படி செய்து சீதையுடன் அயோத்தி திரும்பினார் ரகுநந்தனர்.

ஸ்தல புராணம்: 2

சிவனுக்கும் சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், சிவனின் திருவிளையாடலால் சக்திதேவி தோல்வி அடைந்தாள். இதன்பின், ஒன்பது கங்கைத் துளிகளாக ஆழ்கடலில் அமிழ்ந்துவிட்டாள்.

அதனைச் சுற்றி 21 துளிகளாக சக்திக்கு சிவன் தரிசனம் கொடுத்தார். அதில் ஒரு துளி நீர் தரிசனம் தந்த இடமே, கைலாயகிரிபுரம் என்பதாகும் (தற்போதைய ராமேஸ்வரம்).

இச்சம்பவத்திற்கு பிறகு, சக்திதேவி தன் அண்ணன் மஹாவிஷ்ணுவிடம், காளிரூபத்தோடு சிவனை அடக்கி ஆளவேண்டும். பின்னர் சிவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்பதே அந்த வரம்.

அவ்வாறே ஆகட்டும் என்ற விஷ்ணு, சிவன் காஞ்சிபுரத்தில் லிங்கவடிவில் இருப்பதாகவும், அங்கு போய் அவரை அடக்கியாளலாம், என்றும் சொன்னார்.

சக்தி அங்கு சென்றதும், மாயவனின் லீலையால் காஞ்சிபுரம் முழுவதுமே லிங்கமயமாக இருந்தது. உண்மையான சிவன் யார் என்று தெரியாமல் சக்தி திணறினாள். அவளது கோபம் அதிகமானது. தான் கணவரை பிரிந்து வாடுவது போல், தன் அண்ணன் விஷ்ணுவும், ராம அவதாரம் எடுத்து மனைவியாகிய சீதையை பிரிந்து துன்புற வேண்டும். பின்னர் சிவனை வழிபட்டு சீதையை அடைய வேண்டுமென்று சாபம் கொடுத்தாள்.

இந்த சாபத்தின் படி, விஷ்ணு ராமாவதாரத்தின் போது சீதையைப் பிரிந்தார். அவளை தேடிச்சென்ற ராமன், இலுப்பைக்காடு சூழ்ந்த போரூர் என்னுமிடத்தில் ஒரு நெல்லி மரத்தடியில் அமர்ந்தார்.

பூமிக்கடியில் லிங்கம் இருப்பதை அறிந்து, அதை வெளிக் கொண்டு வர 48 நாட்கள் தவம் செய்தார். அத்தவத்தால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு லிங்க வடிவில் வந்தார். ராமன் லிங்கத்தைக் கட்டி அணைத்து அமிர்தலிங்கமாக மாற்றினார்.

ஸ்ரீராமர் வழிபட்ட ஈஸ்வரர் ராமநாதேஸ்வரர் ஆனார்.

நாதர் என்பதற்கு குரு என்றொரு பொருள் உண்டு. தாசரதிக்கு குருவாக இருந்து ஈசன் வழி காட்டிய க்ஷேரத்திரமிது.

சண்முகப் பெருமான் சூரசம்காரம் செய்யப் புறப்பட்ட போது இங்கு வந்து சிவனை ஆராதித்து, போருக்கு வாழ்த்துப் பெற்றதால் ஊர் போரூர் ஆயிற்று என்பர்.

ஸ்ரீ ராமர் பஞ்சாட்சரம் ஜபித்த இடமானபடியால் திருநீறோடு தீர்த்தமும், சடாரியும் கொடுக்கப் படுகிறது.

சீதா நாயகர் அயோத்திக்குத் திரும்பிய போதும் இங்கே இறங்கி லிங்க பூஜை செய்த பதியிது.

மூலவர்: ஸ்ரீ ராமநாதீஸ்வரர்
 
அம்மன்/தாயார் : ஸ்ரீ சிவகாமசுந்தரி

தல விருட்சம் : நெல்லி

நடை திறக்கும் நேரம்:
 
காலை 6 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு சௌந்தராம்பிகை சமேத அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் ,கோவூர் - சென்னை


அமைவிடம்:

சென்னை, போரூர் – குன்றத்தூர் சாலையில் கோவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து சுமார் அரைகிலோ மீட்டர் தொலைவிலுள்ளது ஆலயம்.

ஆலய அமைப்பு:

85 அடி உயர இராஜகோபுரம் நம்மை வரவேற்க , நுணுக்கமான சிற்பக்கலைகளுடன் நம் மனதை கொள்ளை கொள்ளும் இவ்வாலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இங்குள்ள சுந்தரேஸ்வரர் கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் இதுவாகும்.

ஏழடுக்கு ராஜ கோபுரம் ஒன்பது கும்பங்களுடன் கம்பீரமாக தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.

வெளிப்பிராகாரத்தில் நேத்ர கணபதி, வரசக்தி விநாயகர், சனீஸ்வரரின் தனி சன்னிதி, நவக்கிரக சன்னிதிகளைக் காணலாம்.

சிவகங்கை தீர்த்தமென்று அழைக்கப்படும் இத்தல தீர்த்தம், இந்திரனின் வாகனமான ஐராவதத்தினால் சீரமைக்கப் பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்தல விருட்சமான வில்வம் மூன்று தளங்கள் மட்டுமின்றி ஐந்து, ஏழு, ஒன்பது தளங்களுடன் மகா வில்வமாகத் திகழ்கிறது.

சோம வாரத்தில் இந்த விருட்சத்தை பிரதட்சணம் செய்தால் செல்வமும், செழிப்பும் பெறுவர் என்கிறது சிவபுராணம்.

கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் உள்ள கர்ப்பக் கிரகத்தில் சுந்தரேஸ்வர லிங்கம் பெயருக்கேற்றபடி அழகுடன் விளங்குகின்றது.

கோஷ்டத்தில் கணபதி, தென்முகக் கடவுள், பிரம்மா, துர்க்கை, லிங்கோற்பவர், சண்டிகேஸ்வரர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.

சைவ நால்வர், சோமாஸ்கந்தர், வள்ளி-தெய்வயானை சகிதம் கந்தவேள், 63வர், தனி சன்னிதியில் ஸ்ரீதேவி சமேதராக கருணாகரப் பெருமான், வீரபத்ரர், மாகாளி முதலானோரும் அருள்பாலிக்கின்றனர்.

தியாகப் ப்ரம்மம் தனது பஞ்சரத்னக் கீர்த்தனையில் இத்தல ஈசனைப் போற்றி பாடியிருக்கிறார்.

செளந்தராம்பிகை சன்னிதி தெற்குப் பார்த்து அமைந்துள்ளது.

அம்பாள் சன்னிதியை வலம் வருகையில் வைஷ்ணவி, வாராஹி, திருமகள், பிராம்மி,சண்டிகை, துர்க்கை ஆகியோரைத் தரிசிக்கலாம்.

வியாழனன்று அம்பாள் சன்னிதியில் நெய் விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும் என்கிறது ஸ்தல புராணம்.

Ⓜ புதன்: சில தகவல்கள்:Ⓜ

ஞாழல் மொட்டுப் போல் ஒளியுடையவன். அழகே வடிவானவன், சந்திரனுக்கும், தாரைக்கும் பிறந்தவன். செளம்யமானவன்.

புதனுக்குப் பிடித்த நிறம் பச்சை, பிரியமான ரத்தினம் மரகதம்.

உயரமானவன், ஜாதகத்தில் உச்சனாயிருந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் கல்வியில் சாதனை படைப்பர்.

ஜோதிடத்தில் நிபுணராவார், பேச்சாற்றல் பெருகும்.

கணிதம், தர்க்க சாஸ்திரம், மருத்துவம் அனைத்துக்கும் மூலகர்த்தா இவரே.

கன்னியோ, மிதுனமோ லக்னமாயிருந்தால், உடன் ராகு–கேது, சனி, செவ்வாய் இல்லாமலிருப்பின் நாடகம், நடனம், எழுத்தாளர், கவிஞர் இவர்களை உருவாக்குவார்.

பஞ்சபூதங்களில் மண் இவர்.

மிதுனம், கன்னி இரண்டும் இவரது சொந்த வீடு.

கன்னி உச்ச வீடுமாகும், மீனம் நீசவீடு– சூரியன், சுக்கிரன் இருவரும் நண்பர்கள்– சந்திரன் எதிரி.

புதனது உலோகம் பித்தளை; பச்சைப் பயிறு, பயத்தம் பருப்பு இவருக்குப் பிடித்த தானியம்.

பயத்தம் பருப்பு போட்ட வெண் பொங்கல், பாசிப்பயிறு சுண்டல், பயத்தம் பருப்புப் பொடி சாதம் ஆகியன இவருக்குரிய நிவேதனங்கள்.

ஐந்தாம் எண்ணிற்குரியவர் புதன்.

இவருக்குரிய சமித்து நாயுருவி வேர்.

இவரது சுவை உப்பு.

மலர்-வெண் காந்தள், அல்லது பச்சை நிற தவணம், மரு, துளசியால் அர்ச்சித்தால் திருப்தியுறுவார்.

புதனது மனைவி இளை; புதல்வன் புரூரவஸ். "புதம் ஆச்'ரயாமி ஸததம்" எனத் தொடங்கும் கீர்த்தனையில் முத்துசுவாமி தீக்ஷிதர் புதனின் பிரபாவங்களைப் புகழ்கிறார்.

கிரகபதி, ஞானி, செளம்யன் என்ற பட்டங்களைப் பெற்ற புதனை வழிபட்டால் பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு வரும்.

கர்நாடக சங்கீத வித்துவான்  தியாகராஜரால் கோவூர் பச்சரட்னம் என்று அழைக்கப்பட்ட ஐந்து பாடல்களையும் தொகுத்து வழங்கினார்.

ஸ்தல புராணம்:

பலவிதங்களிலும் சிறப்பு மிக்க இந்த ஆலயம் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு முன்பானது எனத் தெரிகின்றது.

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக சுந்தர சோழன் துவக்கி வைத்த ஆலயத்தை பல்லவ மன்னன் முடித்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆலயம் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டு உள்ளது. சாதாரணமாக அனைத்து ஆலயங்களுமே கிழக்கை நோக்கித்தான் அமைந்து இருக்கும். ஆனால் இந்த ஆலயமோ தெற்கு நோக்கி அமைந்து உள்ளதின் காரணம் அந்த ஆலயத்தில் சௌந்திராம்பிகையாக அன்னை பார்வதி அமர்ந்து இருந்தார்.

சிவபெருமான் ஒரு முறை தவத்தில் இருந்தார். வெகு காலம் கண் திறக்கவில்லை. ஆகவே தற்போது திருமேனீஸ்லரர் ஆலயம் உள்ள இடத்தின் அருகில் இருந்த மாங்காட்டில் பார்வதி சிவபெருமானின் அங்கத்தில் தாம் பாதியாகி அவரை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தவத்தில் அமர்ந்து இருந்தார். அவள் தவத்தினால் ஏற்பட்ட உஷ்ணத்தினால் உலகம் தகிக்கலாயிற்று. அனைத்தும் கருகலாயின.

உயிர் சேதங்கள் துவங்கின. அப்போது கண்களை மூடியபடி தவத்தில் அமர்ந்து இருந்த சிவபெருமானை எழுப்ப முடியாமல் போன தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று உதவி கேட்க அவர் தனது மனைவி மகாலஷ்மியை அந்த இடத்துக்கு அனுப்பினார்.

இலஷ்மி தேவியும் ஒரு பசுவின் உருவில் அந்த இடத்துக்குச் சென்று சிவலிங்கத்தின் மீது தன் மடியில் இருந்து பாலை சுரந்து அபிஷேகித்து சிவனை வேண்ட அவர் கண் திறந்தார்.

ரிஷப வாகனத்தில் பார்வதிக்கு காட்சி தந்தார். அவர் கண் திறந்ததும் அனைத்து இடங்களும் குளிர்ந்தன. அவளுடைய பக்தியை மெச்சிய சிவனார் அந்த இடத்துக்கு கோபுரி எனப் பெயரிட்டார்.

கோ என்றால் பசுமாடு. புரி என்றால் இடம். அதுவே பின்னர் மறுவி கோவூர் ( கோ+ஊர்) என ஆயிற்றாம்.

புதன் கிரகம் சூட்டு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு நிவாரணம் தருபவர்.

புதன் மன இறுக்கத்தையும் குறைப்பவர். அவர் குளுமையானவர். அதற்கும் ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.

ஒரு முறை சந்திரன் பிரஹஸ்பதியிடம் பாடம் பயின்று கொண்டு இருந்தபோது அவருடைய மனைவியின் மீது மையல் கொண்டு அவளை தூக்கிப் போய்விட சண்டை மூண்டது. யுத்தத்தில் தோற்றுப் போன சந்திரனுக்கு தான் செய்த தவறு புரிந்து மன்னிப்புக் கேட்டார்.

ஆனால் அதற்குள் சந்திரனுக்கும் குருவின் மனைவிக்கும் குழந்தைப் பிறந்து விட்டது. அதை பிரகஸ்பதி ஏற்க மறுத்தார். ஆகவே அந்த குழந்தைக்கு விஷ்ணுவே பாடம் பயில்வித்து வளர்த்து பெருமையை ஏற்படுத்தினார். ஆகவே தான் சந்திரனின் குளுமையான குணம் புதனுக்கு வந்ததாம்.

ஆகவே தான் சிவபெருமான் கண் விழித்து குளுமையான அந்த இடம் புதனுக்கு அர்பணிக்கப்பட்டது. அங்கு தேவர்களுடன் சேர்ந்து வந்து வணங்கிய புதன் கிரகத்தை சிவபெருமான் தன்னுடன் அங்கு தங்கி அந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு அருள் புரியுமாறு கூற அந்த ஆலயம் புதன் கிரகத்துக்கு முதன்மை தரும் தலமாகியது.

அந்த ஆலயத்துக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. இந்த ஆலயத்தில் மட்டுமே மகா வில்வம் என்று சொல்லக் கூடிய இந்த மரத் தளம் ஒவ்ஒன்றிலும் 5, 7 மற்றும் 9 இலைகளைக் கொண்ட தளங்களைக் கொண்ட வில்வ மரம் உள்ளதாம்.

எந்த ஒரு இடத்திலும் வில்வத்துக்கு ஒரு தளத்தில் மூன்று இலைகள்தான் இருக்கும். ஆகவே இந்த இடத்தில் வந்து அந்த வில்வ இலைகளினால் பூஜை செய்பவர்கள் பெரும் பாக்கியத்தை அடைந்தவர்கள்.

ஒரு முறை தியாகராஜர் அந்த வழியாக செல்லும்போது திருடர்கள் தாக்கினர்.

வழிப்போக்கர்கள் போல வந்து அவரை இராமரும் லஷ்மணரும் காப்பாற்றினர். அதற்கு முன்னர்தான் தியாகராஜரை இராமர் மீது பாடல்களைப் பாடுவது போல சிவன் மீதும் பாடல் பாடுமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ள அவர் மறுத்து இருந்தார்.

ஆனால் தம்மை அந்த இடத்தில் ராம - லஷ்மணர்கள் காப்பாற்றியதினால் அந்த பூமிக்கு விஷேச சக்தி உள்ளது எனப் புரிந்து கொண்டு சுந்தரீஸ்வரர் புகழ் பாடும் பஞ்சரத்தின கீர்தனையை அந்த இடத்துக்கு மீண்டும் வந்து பாடினார்.

புதனுக்கு இரட்டை தரிசனம் கிடைத்த ஸ்தலமானதால் புத பரிகார க்ஷேத்திரமாயிற்று.

தற்போதைய பெயர் : கோவுர் 

இறைவன் : திருமேனீஸ்வரர் ,சுந்தரேஸ்வரர்

இறைவி : சௌந்தராம்பிகை - திருவுடை நாயகி 

தலமரம் : வில்வம் (27 இலை அடுக்குகள்)

நடை திறக்கும் நேரம்:
 
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருவையாறு !!

Image result for திருவையாறு ஐயாறப்பர் கோயில்

தஞ்சையிலிருந்து வடக்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருவையாறு.

காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து நதிகள் பாய்வதால் திருஐயாறு எனத் தலமும், ஐயாறப்பர் என மூர்த்தியும்  அழைக்கப்படுகின்றன.

‘‘ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே’’ என்ற அப்பர் வாக்கின்படி பஞ்ச கெளவியத்தால் (பசும்பால், தயிர், நெய்,  கோமூத்திரம், கோசாணம் இவற்றின் கலவை) அபிஷேகம் செய்யப்படுவதால் ஐயாறு எனப் பெயர் பெற்றது என்பர்.

ஐயாறப்பரும் (பஞ்சநதீஸ்வரர்) அறம் வளர்த்த  நாயகியும் (தர்ம சம்வர்த்தனி) குடிகொண்டிருக்கும் திருக்கோயிலை நோக்கிச் செல்கிறோம். சித்ரா பெளர்ணமியின் போது இங்கு நடக்கும் ஏழூர் (சப்தஸ்தானம்)  திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. யாகசாலை நிலத்தை உழுதபோது மக்கட்பேறு வேண்டித் தவம் செய்து கொண்டிருந்த சிலாத முனிவருக்கு நந்தி தேவரே  குழந்தையாகக் கிடைக்கப் பெற்றார்.

ஐந்து வித புனித நீரால் இறைவனே அக்குழந்தைக்கு அபிஷேகம் செய்தார். காவற் பொறுப்பை அதனிடம் ஒப்படைத்து ‘அதிகார நந்தி’ என்ற பட்டமும்  சூட்டினார். வியாக்ரபாதர் மகளுடன் திருமணமும் செய்து வைத்தார். இதன் அங்கமாகவே சித்திரை மாதத்தில் ஏழூர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

திருவையாறைச்  சுற்றியுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) ஆகிய  ஊர்க்கோயில்களோடு, திருவையாறையும் சேர்த்து சப்தஸ்தானத் திருக்கோயில்கள் என்று அழைக்கின்றனர். ‘சப்தஸ்தானத் திருப்புகழ்’ என்ற ஒரே பாடலில்  அருணகிரிநாதர், இவ்வேழு தலங்களையும் ஒரு சேரப் பாடியுள்ளார்.

‘‘திருவின் மாமரமார் பழனப்பதி
அயிலு சோறவையாளு துறைப்பதி
திசையில் நான்மறை தேடியமுற்குடி, 
விதியாதிச்
சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ்பதி, நெய்ப்பதி
திருவையாறுடன் ஏழு திருப்பதி
பெருமாளே’’

பொருள்: லட்சுமிகரம் பொருந்திய, மாமரங்கள் நிறைந்த திருப்பழனம், உண்பதற்குரிய திருச்சோற்றுத்துறை, எல்லா திக்குகளிலும் வேதங்கள் ஈசனைத் தேடி  அடைந்த மூதூராகிய திருவேதிகுடி, அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றாகிய திருக்கண்டியூர் (பிரமனது சிரம் அரிந்த இடம்), தாமரையின் நாயகனாம் சூரியன்  பூசித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறுடன் ஆக ஏழு திருப்பதிகளிலும் வாழ்கின்ற பெருமாளே !

திருவையாற்றில் எம்பெருமான்  சித்திரா பெளர்ணமிக்கு அடுத்த விசாகத்தில் நந்தியம் பெருமானுடன் புறப்பட்டு ஏழூர்களுக்கும் செல்வார். ஏழூர் இறைவரும், உலாவரும் ஐயாறப்பரை எதிர்  கொண்டழைப்பதுடன் கண்ணாடிப் பல்லக்கில் ஊர்வலம் செல்வது காணவேண்டிய தொன்றாகும்.

ஏழூர் மக்களும் இதைத் தத்தம் வீட்டு விழாவாகவே எண்ணி, இறைவன் வரும் வழியைத் தோரணங்களால் அலங்கரித்து மரியாதை செய்வதைக் காணக் கண்  கோடி வேண்டும். வாரத்தின் ஏழு நாட்கள், ஏழு நிலைகளுடைய ஐயாறு ராஜகோபுரம், ஏழு நிறங்களுடைய வானவில், சப்த ரிஷிகள், சப்த மாதர்கள்,  சப்தஸ்வரங்களால் ஏழுலகை வென்ற தியாகப்பிரம்மம் என ஏழு எனும் எண் நம் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து நிற்கிறது.

சப்தரிஷிகளும் இத்தலங்களில் ஆசிரமங்கள் அமைத்து ஈசனைப் பூசித்தனர். அவர்கள்: கண்டியூர் - காஸ்யபர்; பூந்துருத்தி - கௌதமர்; சோற்றுத்துறை - ஆங்கிரசர்; பழனம் - குத்ஸர்; திருவேதிகுடி - அத்திரி; நெய்த்தானம் - பிருகு; ஐயாறு - வசிட்டர். 

ஐயாறப்பர், நந்தி - சுயம்பிரகாசை தம்பதியை அழைத்துக் கொண்டு, அவர்கள் முனிவர்களின் ஆசியைப் பெற வேண்டி இவ்வேழு ஆசிரமங்களுக்கும் சென்றார் என்பது புராணம். இதை ஏமூர் விழாவாக முதலில் கொண்டாடியவர் ராஜராஜ சோழனின் மனைவியான ஓலோகமாதேவி. ஆதலால் கோயிலிலுள்ள வடகயிலாயம் ஓலோக மாதேவீச்சரம் என்றும், சோமாஸ்கந்தர், ஓலோக மாவீதிவிடங்கர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

காவிரியின் வடகரைத்தலமான திருவையாறு சப்தஸ்தானங்களுள் முதன்மையானது. ‘ஐ’ என்றால் சுபம் என்று பொருள். மனிதனின் இறுதிக்காலத்தில் இது நெஞ்சில் தங்கி மூச்சை அடைக்கும்போது அஞ்சேல் என அபயம் தந்து அப்பன் ஆறுதலளிக்கிறான். இதையே ‘‘ஐயாறு வாயாறு பேசாமுன் ஐயாறு வாயால் அழை’’ என்பார் ஐயடிகள் காடவர் கோன்’’ என்று வித்தியாசமாக விளக்கம் அளிக்கிறார் தமிழ்ப்பேராசிரியர் சுவர்ண காளீஸ்வரன். சம்பந்தப்பெருமானது ஐயாறு பாடலும் இத்துடன் ஒத்து வருகிறது.

‘‘புலன் ஐந்து பொறி கலங்கி நெறி மயங்கி 
அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்தபோது அஞ்சேலென்று அருள் 
செய்வான் அமரும் கோயில்’’

பட்டினத்தடிகள் கூறுகிறார்:

‘‘மண்ணும் தணலாற, வானும் புகையாற,
எண்ணரிய தாயும் இளைப்பாற, பண்ணும் அயன்
கையாறவும், அடியேன் காலாறவும் கண் 
பார் ஐயா திவையாறா’’

பொருள்: இம்மண்ணுலகமும் எனது கணக்கற்ற உடல்களைச் சுட்டதால் ஏற்பட்ட வெம்மை தணியும்படியும், இந்த வானமும் என் உடம்புகளைச் சுடுவதால் எழுந்த புகை நீங்கித் தூய்மை உடையதாய் ஆகுமாறும், பல பிறவிகளில் என்னைப் பெற்ற தாய்மார்களும் இளைப்பாறும்படியும், எனக்கு எண்ணற்ற உடல்களைப் படைக்கின்ற நான்முகனும் தம் கைகளை இளைப்பாறுமாறும், அடியேனின் கால்கள் இளைப்பாறுமாறும் என்னைக் கடைக்கண் பார், ஐயா ! ஐயாறப்பனே !’’

திருவையாறு - கால் தேய நடந்து கயிலை சென்று கொண்டிருந்த அப்பரைத் தடுத்தாட்கொண்டு ஆடி அமாவாசையன்று ஈசன் கயிலைக் காட்சி தந்த திருத்தலம்; சுசரிதன் எனும் சிறுவனை யமனிடமிருந்து விடுவித்து ஜோதி சொரூபராய் அவனை ஆட்கொண்ட தலம்; (ஆட்கொண்டார் எனும் தனிச்சந்நதி உள்ளது. இவர் காலின் கீழே யமன் கண்கள் பிதுங்க, நா தொங்க, உடல் நடுங்கக் கிடக்கிறார்.) இறைவன் தந்த இரு நாழி நெல்லால் அம்பிகை 32 அறங்களை வளர்த்த திருத்தலம்;

தியாகப் பிரம்மத்தின் இசைக்கு மயங்கி ஸ்ரீராமன் அவருக்குத் தரிசனமளித்த இடம். சிலாத முனிவருக்குக் குழந்தையாக நந்திதேவரைத் தோன்றச் செய்து, வியாக்ரபாதரின் மகள் சுயம் பிரகாசையை (சுயஸாம்பிகை என்றும் கூறுவர்) திருமழபாடியில் திருமணம் செய்து வைத்தார் இத்தல நாயகனான ஐயாறப்பர்.

சேரமான் பெருமானும், சுந்தரரும் இங்கு வந்தபோது காவிரி பெருக்கெடுத்து ஓட, ‘‘பரவும் பரிசொன்றறியேன் பண்டே உம்மைப் பயிலாதேன்’’ என்று துவங்கி சுந்தரர் பதிகம் பாட, ஈசன் வெள்ளத்தை ஒதுக்கி வழிவிடச் செய்தார்.

எதிர்க்கரையிலிருந்த விநாயகர் ஓலம் ஓலம் என்று அபாயக்குரல் கொடுத்ததால் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கோயிலினுள் நுழைந்ததும் இடப்புறம் உள்ள மயில் மண்டபத்தை வணங்கிவிட்டு நிமிர்ந்தால் எதிரே நூற்றுக்கால் மண்டபம். உள்ளே ஞான தண்டபாணி கோயில் அமைந்திருக்கிறது. பூஜை வேளையில் மட்டுமே சந்நதி திறக்கப்படுகிறது. கருவறையில் வீற்றிருக்கும் பிருத்வி லிங்கமான ஐயாறப்பரைத் தரிசிக்கிலாம்.

கருவறையை ஒட்டிய முதல் பிராகாரத்தில் அறுபத்து மூவரையும், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம்.குருவின் மேல் நோக்கிய வலது கையில் கபாலம். கீழ் நோக்கிய வலது கை சின் முத்திரை காட்டுகிறது. மேல் நோக்கிய இடக்கையில் சூலம், கீழ் நோக்கிய இடக்கையில் சிவஞான போதம், திருவடியின் கீழ் ஆமை.

உ.வே.சாமிநாத அய்யர், இவரை சுரகுரு தட்சிணாமூர்த்தி எனக் குறிப்பிடுகிறார். ஆனால், கோயிலில் ஹரிகுரு தட்சிணாமூர்த்தி என்று எழுதப்பட்டுள்ளது. (திருவீழிமிழலையில் கண்மலர் கொண்டு அர்ச்சித்து சக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து இங்கு வந்து தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்ற புராண குறிப்பும் உள்ளது. அதனாலும் ‘ஹரி குரு’ என்றழைக்கப்படுகிறார் போலும் !) ஞான குருவைத் தரிசித்துத் தொடர்ந்து கருவறையைச் சுற்றிவர இயலாதபடி வழி அடைக்கப்பட்டுள்ளது. இறைவனின் சடை கருவறைக்குப் பின்னும் விரிந்து கிடப்பதாக ஐதீகம்.

அதனால் அதை மிதித்துவிடக் கூடாது என்பதற்காக, சுற்றி வர பக்தர்கள் அனுமதிக்கப் படுவதில்லை.

சந்நதியைவிட்டு வெளியில் வரும்போது நந்தியெம்பெருமானையும், சுயஸம்பிகையையும் தரிசிக்கலாம்.

அடுத்த பிராகாரத்தில் அமைந்திருக்கிறது ஜெப்பேசர் மண்டபம். இறைவனால் இப்பெயர் சூட்டப்பட்ட நந்தி அமர்ந்து ஜபம் செய்த மண்டபம். இதுவே முத்தி மண்டபம் எனப்படுகிறது. நாகப்பட்டினம், காசி தவிர திருவையாறில் மட்டுமே முத்தி மண்டபம் உள்ளது. தியாகராஜ சுவாமிகளும் இங்கு அமர்ந்து பஞ்ச நதீஸ்வரர் மீது 4 கீர்த்தனைகளும், இறைவி தர்மசம்வர்த்தினி மீது 8 கீர்த்தனைகளும் பாடியுள்ளார்.

நான்காம் பிராகாரத்தில் வலம் வரும்போது தென்புறம் அப்பர் திருக்கயிலை காட்சி கண்ட வைபவத்தை நினைவூட்டும் ஒரு கற்கோயிலைக் காணலாம். இது தென்கயிலாயம் எனப்படுகிறது. கோயில் கோபுர வாயில் அவருக்குக் கயிலை மலையாகக் காட்சி தர, மனமுருகி,

‘‘மாதர் பிறைக் கண்ணியான மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியா தன கண்டேன்’’ - எனப் பாடி நெகிழ்ந்திருக்கிறார் அப்பர் சுவாமிகள்.

கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர் சந்நதிகள் உள்ளன. திருவோடு மரம் என்று ஒரு மரம் உள்ளது. இறைவன் சந்நதிக்குப் பின்புறமுள்ள கோஷ்டத்தில் உமையை வலப்பாகம் கொண்டு விளங்குகிறார் அர்த்தநாரீஸ்வரர்.

மூன்றாம் பிராகார மதிற்சுவரின் கோடியில் நின்று ‘ஐயாறா’ என்று உரக்கக் கூவினால் ஏழு முறை எதிரொலிக்குமாம்.

திருவையாறு கோயிலிலுள்ள முருகன், தனுசு சுப்ரமண்யன் எனப்படுகிறான். மயில், சுவாமியின் வலப்புறத்திலுள்ளது.

ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட முருகன் கிழக்கு நோக்கி தேவியருடன் நிற்கிறான். முருகன் கையில் வில் இருப்பது பற்றி ‘சுப்ரமண்ய பராக்ரமம்’ எனும் நூல் விவரிக்கிறது. வனவாசம் முடிந்து திரும்ப வருவேன் என்று சொல்லிச் சென்ற ஸ்ரீராமன், யுகங்களாகியும் திரும்பவில்லையே என்று ராமனின் பிரிவாற்றாமையால் குகன் மிகவும் துயருற்றிருந்தான். வள்ளி - தெய்வயானையரை, சீதா - லட்சுமணனாகவும், தன்னை ஸ்ரீராமராகவும் (கோதண்டராமன்) உருமாற்றி, குகன் கனவிலே தோன்றிய சுப்ரமண்யப் பெருமான் நடந்தவையனைத்தையும் நாடகமாக நடத்திக் காட்டினான். அது கண்டு குகன் மிகவும் சாந்தமடைந்தானாம்.

‘‘சுந்தரச் சிலை இராமன் தோற்றமும் காட்டி,  ஞான 
முந்திய பிரமானந்த சித்தியும் கொடுத்து வேத 
மந்திர குக சுவாமி என்னவும் வாய்ந்த பேர்
ஆனந்த நாயகனென்று ஓது நாமமே குமரன் பெற்றான்’’ - என வரும் செய்யுளால் இதை அறியலாம்.

கோயிலை வலம் வந்து, பர்வதவர்த்தினி, ராமநாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், ஜுரஹரேஸ்வரர், சண்டிகேசர், பிராணதார்த்திஹரர் ஆகியோரைத் தரிசித்து, ஆடல் வல்லானையும், சப்தஸ்தான லிங்கங்களையும் ஒரே இடத்தில் தொழுகிறோம். (மற்ற ஆறு இடங்களிலும் இதே போன்று சப்தஸ்தான லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது)

தனிச்சந்நதியில் வீற்றிருக்கும் தர்மசம்வர்த்தினியைத் தரிசிக்க, கோயிலுக்கு வெளியே போகும் வழியிலுள்ள விக்ரம சோழ கோபுரத்தருகே வர வேண்டும். மேற்புறம் காணப்படும் அலங்கார வளைவு வழியே தர்மசம்வர்த்தினியைத் தரிசிக்கச் செல்லலாம். தமிழில் அறம் வளர்த்த நாயகி என்று பெயர். இறைவன் அளித்த இருநாழி நெல்லால் முப்பத்திரண்டு அறம் வளர்த்த காரணத்தினால் அம்பிகைக்கு இப்பெயர்.

தெருவிலிருந்து நேரடியாகவும் அம்பிகை சந்நதிக்குள் வரலாம். நவராத்திரி மண்டபம், நந்தி மண்டபம் கடந்து விசாலமான உட்பிராகாரத்தை அடைகிறோம். திரிபுரசுந்தரி, சரபேஸ்வரர், முருகன், விநாயகர் ஆகியோரை வணங்கி அம்பாள் சந்நதிக்கு நேரே நின்று மெய்ம்மறக்கிறோம்.

கருணை கனிந்த நோக்குடன் நம்மைப் பார்த்து புன்முறுவல் பூக்கும் அன்னையின் தத்ரூப உருவத்தை பிரமிப்புடன் கண்டு வியக்கிறோம். அம்பிகையின் கைகளில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. ஆம், இங்கு அம்பிகை விஷ்ணுரூபிணியாக இருக்கிறாள் ! இடக் கீழ்க்கரத்தைத் தொடையில் ஊன்றி விஷ்ணுவைப் போலவே நிற்கும் அழகும், நளினமும், கம்பீரமும் கலந்த திருவுருவம் !

பொதுவாக வெள்ளிக்கிழமையன்று பஞ்சநதீஸ்வரர் சந்நதிக்கு அருகில் ஒரு நிலைக்கண்ணாடி முன் மகாலட்சுமிக்கு அலங்காரங்கள் நடக்கும் என்றும், அவர் விஷ்ணு ரூபிணியாக நிற்கும் தர்மசம்வர்த்தனியைத் தொழ வருகிறார் என்று சொல்லுகிறார்கள்.

இரவு இருவருக்கும் ஒன்றாக தீபாராதனை நடத்தப்படுகிறது. எனவேதான் அப்பர் பெருமான் பாடுகிறார், ‘அரியல்லால் தேவியில்லை, ஐயன் ஐயாறனார்க்கே’ என்று !

காஞ்சி காமாட்சி, நாகை நீலாதாட்சி, ஐயாறு தர்மசம்வர்த்தினி இம்முவர் பேரில் மட்டுமே சங்கீத மும்மூர்த்திகளும் கீர்த்தனை இயற்றியுள்ளனர். கல்வெட்டுகளில், முற்காலத்தில் அன்னை, திருக்காம கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்றும், உலகுடை நாச்சியார் என்றும் குறிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ‘புவனமுழுதுடையான் வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாறு’ என்றும் இத்தலம் அழைக்கப்பட்டதாம் !

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

விபூதியின் திருக்கதை !


நிரஞ்சனா பர்னாதன் என்பவன் சிறந்த சிவபக்தன். சிவனாரைக் குறித்து அவன் செய்யும் தவம் நெடுநாள்களுக்கு நீடிப்பது உண்டு.  
ஒருமுறை சிவனாரைக் குறித்துக் கடும் தவத்திலிருந் தவனுக்கு, விதி வசத்தால் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்தது. ஆகவே, தவம் கலைந்து கண்ணைத் திறந்தான். அப்போது அவனைச் சுற்றிலும் சிங்கங்களும், புலிகளும், பறவைகளுமாகப் பல உயிரினங்கள் காவலுக்கு இருந்ததைக் கண்டான். 

பசி வாட்டத்துடன் திகழ்ந்தவன்முன், பழங்களைப் பறித்துவந்து போட்டன பறவைகள். ‘இது ஈசனின் கருணையே’ என்று மகிழ்ந்த சிவபக்தன், கனிகளைச் சாப்பிட்டுவிட்டுத் தவத்தைத் தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கழிந்தன. 

ஒருவாறு அந்தத் தவத்தை முடித்துக்கொண்டு சிவவழிபாட்டைத் தொடங்கினான். ஒருநாள் தர்பைப்புல்லை அறுக்கும்போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது. ஆனால், அவனுக்கோ எந்தப் பதற்றமும் இல்லை. ஆனால், குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதுபோல அந்த ஈசன் பதறிப்போனார். 

உடனடியாக ஒரு வேடனாக வடிவெடுத்து ஓடோடி வந்தார். பக்தன் இருக்கும் இடத்துக்கு வந்தவர், அவனின் கையைப் பிடித்துப் பார்த்தார். என்ன ஆச்சர்யம்… அவர் தொட்டவுடன் ரத்தம் சொட்டிய இடத்தில் இருந்து சாம்பல் கொட்ட ஆரம்பித்தது. 

வந்திருப்பது தாயுமாகி தண்ணருள் புரியும் அந்த சர்வேஸ்வரனே என்பதைச் சடுதியில் புரிந்து கொண்டான் பக்தன். ஆகவே அவரிடம், “ரத்தத்தை நிறுத்திச் சாம்பலைக் கொட்டச் செய்த தாங்கள் நான் வணங்கும் சர்வேஸ்வரனே என்பதை அறிவேன். இந்த அடியேனுக்குத் தங்களின் சுய உருவைக் காணும் பாக்கியம் இல்லையா’’ என வேண்டினான்.

மறுகணம் சுயரூபத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான். அத்துடன், “உனக்காகவே இந்தச் சாம்பலை உருவாக்கினேன். மகிமைகள் நிறைந்த இந்தச் சாம்பல் இன்று முதல் `விபூதி’ என்று அழைக்கப்படட்டும். உனது அருந்தவத்தாலும் வழிபாட்டாலும் விபூதி உருவானது. அக்னியை எதுவும் நெருங்க முடியாததைப்போல் விபூதியை அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்ட சக்திகள் நெருங்காது. விபூதி என் ரூபம்’’ என்று அருள் புரிந்தார்.

விபூதியின் மகிமையைச் சொல்லும் திருக்கதை இது. நாமும், அளவில்லா நன்மைகளை அளிக்கவல்ல விபூதியை நாள்தோறும் அணிந்து நாதன் நாமத்தைப் போற்றி வழிபடுவோம். வினைகள் யாவும் நீங்கப்பெற்று வாழ்வில் வளம் பெறுவோம்.

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள் !


திருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான  தலைமுறைக்கும் வித்திடுகிறது. அறத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது திருமணப் பந்தம். ஆனால் சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடுவதில்லை. இதற்கு முன்வினை பயன் என்றும், ஜாதக நிலையென்றும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

அத்தகைய குறைகளைக் களையவும், தடைகளை அகற்றவும் வழியே இல்லையா? உண்டு. கல்யாண வரம் அருளும் கடவுள் வழிபாடுகள் குறித்து ஞானநூல்கள் விவரிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பங்குனி உத்திர வழிபாடும், தரிசனமும். குலம் செழிக்க அருள் வழங்கும் சாஸ்தாவை வழிபட உகந்தத் திருநாள் பங்குனி உத்திரம். அதுமட்டுமா? 
மீனாட்சி - சொக்கநாதர், ஸ்ரீராமர் - சீதை, முருகப்பெருமான்-தெய்வானை, நந்தியெம்பெருமான் - சுயசை, ஆண்டாள் - ரங்கமன்னார், இந்திரன் - இந்திராணி... என்று தெய்வத்திருமணங்கள் பலவும் நடைபெற்ற மகத்தான திருநாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் கல்யாணசுந்தர விரதம் முதலானவற்றைக் கடைப்பிடித்து வழிபடுவதுடன், கல்யாண வரம் அளிக்கும் திருத்தலங்களுக்குச் சென்று தரிசிப்பதால், எல்லாவிதத் தடைகளும் நீங்கி விரைவில் கல்யாண பாக்கியம் ஸித்திக்கும். 
அவ்வகையில், திருமண வரமளிக்கும் தமிழகத்தின் சிறப்புமிக்க சில தலங்களின் மகிமைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. திருமணத் தடையுள்ள அன்பர்கள், விவரங்களைப் படித்து மகிழ்வதுடன், அந்தத் தலங்களுக்கும் நேரில் சென்று வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.

மூக்குடி ஸ்ரீவீரகாளியம்மன் 

அம்மன் பெயர்:  ஸ்ரீவீரகாளியம்மன். 

முற்காலத்தில் வீரவனம் என்ற பெயரில் திகழ்ந்தது மூக்குடி எனும் இந்தக் கிராமம். பாண்டவர்கள் வன வாசத்தின்போது இந்தப் பகுதிக்கு வந்து, இங்கு கோயில் கொண்டிருந்த ஸ்ரீவீரகாளியம்மனை வணங்கியதாகக் கூறுகிறார்கள். தங்குவதற்கு இடமின்றி தவித்த அவர்களுக்குத் தகுந்த இடத்தை வீரகாளியம்மன் காட்டி அருளியதாக தலவரலாறு கூறுகிறது.  

தற்போதும், தன்னை நாடிவரும் பக்தர்களின் துயரங்கள் நீங்கிட வரம் தந்து, வாழ்வுக்கு வழிகாட்டி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறாள் ஸ்ரீவீரகாளி. இந்த அம்மனின் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டதாம். கருவறையில் சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம், அபயக் கரம் ஏந்தி, திரு முடியில் பாம்பை ஆபரணமாகக் கொண்டு, அமர்ந்த கோலத்தில் கம்பீர வடிவில் திருக்காட்சி தருகிறாள் ஸ்ரீவீரகாளியம்மன்.  
தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், மாசி மகம் மற்றும் சிவராத்திரி என எல்லா மாதங்களும் இங்கு விழாக்கோலமாகக் காட்சியளிக்கிறது. 

பிரார்த்தனை:  இங்கு வந்து அம்மனுக்கு, ‘பொட்டுக் காணிக்கை’ அளித்தால் திருமண வரம் கைகூடுகிறது என்கிறார்கள். சாதாரண சாந்துப் போட்டு முதல் தங்கம், வெள்ளியிலான பொட்டுகள் வரை அம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் காணிக்கை செலுத்துவது சிறப்பு என்கிறார்கள் பக்தர்கள். 

அமைவிடம்: புதுக்கோட்டை மாவட் டம், அறந்தாங்கியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மூக்குடி கிராமம். பேருந்து வசதிகள் உண்டு.

தண்டந்தோட்டம்  

இறைவன் :
  ஸ்ரீதிருநடனபுரீஸ்வரர் 

அம்பாள்:  ஸ்ரீசிவகாம சுந்தரி.

டனபுரி, நர்த்தனபுரி, தாண்டவர்தோட்டம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தத் தலத்தில், ஈசன் நடனம் புரிந்தபோது அவரின் சலங்கையின் மணிகள் உதிர்ந்து விழுந்தன. இதனால், திருநடனபுரீஸ்வரர் என்ற பெயரில்  ஈசன் இங்கு அமர்ந்து அருள்பாலிக்கிறார். 

அகத்தியர் இங்கு தவமியற்றி ஈசனின் திருமணக்கோலத்தைத் தரிசித்தார். அதனா லேயே இது திருமண வரமருளும் தலமாக விளங்குகிறது. சிதம்பரம் மற்றும் திருமணஞ்சேரி தலங்களுக்கு இணையான கோயில் இது. காஞ்சி மகாபெரியவர் தங்கி பூஜித்த தலம்.  
அகத்தியருக்குக் காட்சி தந்த ஈசன் ‘இந்தத் தலத்துக்கு வரும் அன்பர்களுக்குத் திருமணத் தடை முதலான சகல தடைகளும் நீங்கப் பெற்று, சுபிட்ச மாக வாழ வரமளிக்கிறேன்’ என்று அருள்பாலித்தாராம்.அதன்படி, இன்றும் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்குத் திருமண வரமளித்து ஈசன் அருள் செய்கிறார். 

ஸ்ரீகார்த்தியாயினி சமேத திருக்கல்யாண சுந்தரமூர்த்தி யாக, திருமணக் கோலத்தில் வரம் அருள்கிறார் இங்குள்ள உற்சவர். `மாப்பிள்ளை ஸ்வாமி' என்றும் சிறப்பிக்கப் படும் இந்த ஸ்வாமியைத் தரிசித்தாலே போதும், திருமணத் தடை கள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத் திருக்கல்யாணம் இங்கு விசேஷம். 

பிரார்த்தனை: தொடர்ந்து 11 பௌர்ணமி திருநாள்களில் இந்தக் கோயிலுக்கு வந்து, தங்களின் வயது அடிப்படையி லான எண்ணிக்கையில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி சிறப்பான இல் வாழ்க்கை அமையும். 

அமைவிடம்:  
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தண்டந்தோட்டம் எனப்படும் தாண்டவர் தோட்டம். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

திருமழபாடி  

இறைவன்:
 ஸ்ரீவைத்தியநாதர்.  இறைவி: ஸ்ரீசுந்தராம்பிகை. 

புருஷாமிருக ரிஷி, தேவலோகத்தில் இருந்த சிவலிங்கத்தை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். சிவலிங்கத்தை மீண்டும் கொண்டு செல்ல பிரம்மதேவர் முயற்சி செய்தபோது, சிவலிங்கம் சற்றும் அசைந்துகொடுக்கவில்லை. சோர்ந்துபோன பிரம்மதேவர், ‘இது என்ன வஜ்ர தூணோ’ என்று சலிப்புடன் கூறியதால், இறைவர், ‘வஜ்ரத் தூண் நாதர்’,  ‘வயிரத்தூண் நாதர்’ என்னும் திருப்பெயர்கள் ஏற்றார். சிவபெருமான் மார்க்கண்டே யருக்காக, மழுவேந்தி நடனமாடிய திருத்தலம். 

தனது நேசத்துக்குரிய நந்தியெம்பெருமானுக்குத் திருமணம் நடத்த விரும்பிய ஈசன், ஊரெங்கும் பெண் தேடி, இறுதியில் வசிஷ்டரின் பெயர்த்தியான சுயசையைத் தேர்ந்தெடுத்தார். 

நந்தியெம்பெருமான், சுயசையின் திருமணம் பங்குனி மாதம், வளர்பிறை, தசமி, புனர்பூச நட்சத்திரத்தில், திருமழபாடியில் தேவர்கள் புடைசூழ நடைபெற்றது.   
ஆக, தன்னை அன்புடன் வழிபடும் பக்தர்களுக்கு, ஈசனே வரன் தேடி திருமண பாக்கியத்தை அளிப்பார் என்பது சிறப்பம்சம். 

திருமழபாடி நந்தியெம் பெருமானின் திருமண விழாவே இங்கு வெகு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில், நந்தியின் தாய், தந்தையாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க திருவையாறு ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியம்மை ஆகியோர் திருமழபாடிக்கு வருவார்கள். 

பிரார்த்தனை: ‘நந்திக் கல்யாணம் பார்த்தால், முந்திக் கொண்டு கல்யாணம் நடக்கும்’ என்பார்கள். 

அதற்கேற்ப இங்கு பங்குனி மாதம் நடைபெறும் நந்தியெம் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசிப்பவர்களுக்கு அடுத்த ஆண்டு நந்திக் கல்யாணம் நடை பெறுவதற்குள் திருமணம் நடை பெற்றுவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 

அமைவிடம்: அரியலூர் மாவட் டத்தில் உள்ளது திருமழபாடி. இந்தவூர் திருவையாறில் இருந்து சுமார்7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருவிடந்தை 

இறைவன்: ஸ்ரீவராக மூர்த்தி. உற்சவர்- ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள்.

தாயார்: அகிலவல்லி நாச்சியார். 

நீதிமானாக ஆட்சிபுரிந்து வந்த மகாபலிச் சக்கரவர்த்தி தனது நண்பர் களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றார். போரினால் உண்டான தோஷம் நீங்க, இங்கு வந்து வராகத் தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராகரின் தரிசனம் பெற்றார். 

மகாபலியின் விருப்பத்துக்காகத் திருமகளைத் தாங்கிய திருக்கோலத்தில் இந்த தலத்திலேயே எழுந்தருளி விட்டார் வராகமூர்த்தி என்கிறது தலவரலாறு.  
இந்தத் தலம், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பிரம்மசாரியாக வந்த பெருமாள், காலவ மகரிஷி யின் பிரார்த்தனையை ஏற்று, அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒரு பெண் என மணம்  புரிந்த தலம் இது. இதனால் இங்கு தினமும் பெருமாளுக்குத் திரு மணம் நடைபெறுவதாக ஐதீகம். 

பெருமாளுக்கு உரிய எல்லா நாளுமே இங்கு விசேஷம்தான். 

பிரார்த்தனை - திருமணத் தடையால் மணமாகாமல் இருக் கும் ஆண்களும், பெண்களும், இங்கு வந்து இரண்டு மாலைகள் வாங்கிச் சென்று பெருமாளுக்குச் சமர்ப்பித்துத் தரிசிக்க வேண்டும். அப்போது சந்நிதியில் தரப்படும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு ஆலயப் பிரா காரத்தை 9 முறை வலம் வந்து வழிபடவேண்டும். 

 பின்னர், மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைக்கவேண்டும். பெருமாள் அருளால் விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் இந்தக் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். 

அமைவிடம்: சென்னை யிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலை வில்,  கிழக்குக் கடற்கரைச் சாலை யில் கோவளத்தின் அருகில் அமைந்துள்ளது திருவிடந்தை.

திருவேள்விக்குடி  

இறைவன்:  ஸ்ரீகௌதகேஸ்வரர், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர், ஸ்ரீமணவாளேஸ்வரர். 

அம்பிகை: ஸ்ரீபரிமளசுகந்தநாயகி, ஸ்ரீகௌதகேசி, ஸ்ரீநறுஞ்சாந்து நாயகி. 

யிலையில் ஈசன்-பார்வதி திருமணம் நடப்பதற்கு முன்னர் கங்கணதாரணம், யாகம் ஆகிய யாவும் இந்தத் தலத்தில்தான் நடைபெற்றனவாம். பிரம்மதேவர் தாமே முன் நின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடு களையும் செய்து, வேள்வி வளர்த்தார். சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த புண்ணியத் தலம் என்பதால், வேள்விக்குடி எனப் பெயர் பெற்றது. 

சோழ அரசன் ஒருவனுக்கு மணம்புரிய நிச்சயித் திருந்த மணமகளின் பெற்றோர் திடீரென மறைந்து விட்டனர். இதனால், மணமகளின் சுற்றத்தார் அந்த அரசனுக்கு மணமகளை மணம் செய்து கொடுக்காமல் மறுத்தனர். 

அதனால் வருத்தம் அடைந்த அரசன், இங்குள்ள இறைவனை வழிபட்டு வேண்டினான். 

மன்னனின் பக்திக்குக் கட்டுப்பட்ட இறைவன், உடனே மணமகளை அழைத்து வந்து, இந்தத் தலத்திலேயே வேள்வி வளர்த்து, திருமணத்தை நடத்தி வைத்ததாக தலவரலாறு கூறுகிறது.

இறைவன் மணவாளநம்பி, மணவாளேஸ்வரர், திருவேள்விக் குடி உடையார் ஆகிய பல திருப் பெயர்களில் போற்றப்படுகிறார். 

நீண்டநாள் திருமணம் ஆகாத வர்கள், இங்குள்ள கல்யாண சுந்தரரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

சிவபெருமானுக்கு உகந்த எல்லா விசேஷ தினங்களும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. 

பிரார்த்தனை - திருமணமாகாத ஆண்களும் பெண்களும், உற்சவர் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரருக்கும் அம்பிகைக்கும் மாலை சாத்தி, அர்ச்சனை செய்து, கோயிலை வலம் வந்து வழிபட்டால், திரு மண வரம் கைகூடும் என்கிறார்கள்.

அமைவிடம்: நாகை மாவட்டம், குத்தாலம் தலத்துக்கு நேர் வடக்கில் காவிரியின் வடகரையில் அமைந் திருக்கிறது இந்தத் தலம். நாகை மற்றும் மயிலாடுதுறையி லிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

திருவானைக்கா 
இறைவன்:  ஸ்ரீஜம்புகேஸ்வரர். 

அம்பிகை: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி. 

யிலையில் இருந்து பூமிக்கு வந்த அன்னை சக்தி, ஜம்பு மகரிஷி தவமியற்றிய வெண்நாவல் மரத்தடியில், ஈசனை நீரால் உருவாக்கி வழிபட்டாள். அதனால் இது பஞ்ச பூத தலங்களில் நீர்த் தலமானது. இங்குள்ள ஈசனை, யானையும் சிலந்தியும் வழிபட்டு மோட்சம் பெற்றன. 

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரி நாதர், தாயுமானவர் ஆகிய மகான்களால் போற்றிப் பாடப்பெற்ற தலம் இது. 

சிவலிங்கத்தைச் சுற்றி நீர் சுரந்துகொண் டிருக்க, அற்புத நாயகராக ஈசன் இங்கு வீற்றிருக்கிறார். அருள்பொங்கும் அகிலாண்டேஸ்வரி, தன் திருச் செவிகளில் ஆதிசங்கரரால் சமர்ப்பிக்கப்பட்ட ஸ்ரீசக்கரங் களையே தாடங்கங்களாக அணிந்து காட்சி தருகிறாள். 

தினந்தோறும் உச்சிவேளையில் அர்ச்சகர், சிவப்புப் பட்டுப் புடவை உடுத்தி, தலையில் கிரீடம் தாங்கி, கழுத்தில் ருத்ராட்சமும் மலர் மாலைகளும் அணிந்து அம்பிகையின் வடிவத்தில்,  ஈசனின் கருவறைக்குச் சென்று, பூஜிக்கும் காட்சி, தரிசிப்பவரைச் சிலிர்க்கவைக்கும்.   
இங்கு அம்பிகை யோகம் பயிலும் மாணவியாக இருப்பதால், சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக் கல்யாணம் நடைபெறுவதில்லை. ஆனால், உச்சிக் காலத்தில் அம்பிகை ஈசனுக்குச் செய்யும் பூஜையையும் கோ பூஜையையும் தரிசிப்பவர்களின் திருமணத் தடைகள் நீங்கி, சிறப்பான மணவாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

பிரார்த்தனை: தினமும் உச்சிவேளையில் அம்பாள் செய்யும் சிவபூஜை மற்றும் கோ பூஜையைத் தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், கல்யாண தோஷம் நீங்கி சந்தோஷ வாழ்வு அமையும் என்கிறார்கள். 

அமைவிடம்: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவானைக்கா.

திருச்செந்தூர் 
இறைவன்: ஸ்ரீசுப்ரமணியர். 

சொல்லொண்ணாத் துயரங்களை தேவர்களுக்குத் தந்த சூரபத்மனை, முருகப்பெருமான் வென்று தன்னிடம் சேர்த்துக்கொண்ட தலம் இது. 

முருகப்பெருமான் போர் புரிந்த தலமென்றாலும், தவக்கோலம் கொண்ட ருளும் ஆலயம் இது. மேலும், சிறப்பான திருமண பரிகாரக் கோயிலாகவும் விளங்குகிறது. 

பல்லாயிரம் வருடங்களைக் கடந்த முருகப்பெருமானின் ஆலயம், கடற் கரையில் 150 அடி உயர கோபுரத்துடனும் எண்ணற்ற சந்நிதிகளைக் கொண்டும் பிரணவ வடிவில் திகழ்வது சிறப்பு.

சூரபத்மனை வென்ற பிறகு, அந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்க, தனது தந்தையான சிவ பெருமானுக்கு முருகப்பெருமான் இங்கு சிவபூஜை செய்தார். 

இதனால் முருகப்பெருமான் தலையில் சிவயோகி போல ஜடா மகுடமும் தரித்திருக்கிறார்.  

தவக் கோலத்தில் முருகர் இங்கு இருப்பதாக ஐதீகம். எனவே,  மூலவர் கையில் வேலோ, அருகில் தேவியரோ இல்லை.  

இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழா, உலகப் புகழ் பெற்றது. மேலும் விசாகப் பெரு விழா, ஆவணிப் பெருவிழா  ஆகியனவும் சிறப்பாக நடை பெறுகின்றன. செவ்வாய்தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது திருச்செந்தூர்.

பிரார்த்தனை: திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்ள நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. 

இங்குள்ள கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடி, திருச்செந்தூர் முருகப் பெருமானை வணங்கி, குகை லிங்கத்தைத் தரிசித்தால், திருமண தோஷம் நீங்கி, நல்ல வரன் அமைந்து கல்யாணம் நிச்சயமாகும் என்பது ஐதீகம்.

அமைவிடம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது திருச்செந் தூர். தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருவீழிமிழலை  

இறைவன்:  ஸ்ரீவீழிநாதர். 

உற்சவர் : ஸ்ரீகல்யாணசுந்தரமூர்த்தி.

அம்பாள்: ஸ்ரீசுந்தர குசாம்பிகை. 

மகாவிஷ்ணு, 1008 தாமரை மலர்களைக் கொண்டு, ஈசனை பூஜித்து வணங்கி வரம்பெற்ற தலம். ஒருமுறை பூஜையின்போது ஒரு தாமரை மலர் குறைந்துவிட, விஷ்ணு தமது கண்களையே எடுத்துச் சமர்ப்பித்து ஈசனை வணங்கினாராம். இதனால் ஈசன் மனம் குளிர்ந்து விஷ்ணுவுக்கு சக்ராயுதத்தை வரமாக அளித்தார் என்று தலவரலாறு கூறுகிறது. 

திருநாவுக்கரசரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயி லின் இறைவனைப்பாடி படிக்காசு பெற்று அங்குள்ள மக்களின் பசியைப் போக்கினர். 16 சிங்கங்கள் ஏந்தித் தாங்கும் விண்ணழி விமானத் தைக் கொண்ட இந்த ஆலயத்தையும், இங்குள்ள ஈசனையும் விஷ்ணுவே உருவாக்கி வழிபட்டார் என்கின்றன புராணங்கள். 

ஸ்ரீகயிலாயநாதரும் காத்யாயணி அம்பிகையும் திருமணம் புரிந்துகொண்ட தலம் இது என்பர். சித்திரை மாத மக நட்சத்திரத்தில் இங்கு நடைபெறும் சிவசக்தி திருமணம் விசேஷமானது. விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அலங்காரத்தில், இறைவ னும் இறைவியும் திருக்கல்யாண மண்டபத்தில் காட்சி தருவதைத் தரிசித்தாலே திருமணம் நடைபெறும்.   
பிரார்த்தனை: இங்கு வந்து ஸ்ரீகல்யாண சுந்தரேஸ் வரருக்கும் அம்பிகைக்கும் மாலை சார்த்தி, அர்ச்சித்து வழிபட வேண்டும். அத்துடன், தொடர்ந்து 48 நாள்கள் வீட்டில் பூஜை செய்து, 'தேவந்திராணி நமஸ்துப்யம் தேவந்திரப்ரிய பாமினி விவாஹ பாக்யமாரோக்யம்' - என்று துவங்கும் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் ஸித்திக்கும். 

அமைவிடம்:  கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவீழிமிழலை.

கல்யாண வரம் அருளும் துதிப்பாடல்கள் 

ல்லறம் அதுவே நல்லறம் என்பார்கள் பெரியோர்கள். அப்படியான அறத்தின் நுழைவாயிலாகத் திகழ்வது திருமணம். சிலருக்கு, முன்வினைப் பயனாலும் தோஷங்களாலும் திருமணம் தள்ளிப்போவதுண்டு. அவர்களுக்குக் கல்யாண பாக்கியம் விரைவில் கிடைத்திட, தெய்வத்தின் அனுக்கிரஹம் மிக அவசியம். 

அவ்வகையில், திருமணத் தடைகளும் தோஷங்களும் நீங்கவும், விரைவில் கல்யாண மாலை தோள்சேரவும் அருளும் அற்புதமான துதிப் பாடல் இங்கே தரப்பட்டுள்ளது. அனுதினமும் வீட்டில் நெய் தீபம் ஏற்றிவைத்து, அம்பாளை காத்யாயினி தேவியாக மனதில் தியானித்து இந்தப் பாடலைப் பாடி வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல் அல்லது கற்கண்டு பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்.

காத்யாயனி மஹா மாயே
மஹாயோகின்யதீஸ்வரி
நந்தகோபஸுதம் தேவி
பதிம் மே குரு தே நம: 


கருத்து: கத கோத்திரத்தில் பிறந்தவளும், மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான தேவியே... உன்னை வணங்குகிறேன். உனது திருவருள் கடாட்சத்தால்,  நந்தகோபருடைய மகனான அந்தக் கண்ணனே எனக்குக் கணவனாக அமையவேண்டும்.  
இந்தப் பாடலை அனுதினமும் முறைப்படி பாடி அம்பாளைத் துதித்து வழிபட்டு வந்தால், கண்ணனைப் போன்றே குணத்திலும் செயலிலும் சிறந்த கணவன் வாய்ப்பான் என்பது பெரியோர் கருத்து.

அபிராமியம்மை பதிகம் சொல்லியும் அம்பாளை வழிபட்டு வரம் பெறலாம். குறிப்பாக...

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே


இந்தப் பதிகத்தைப் பாடி அன்னையைத் துதிப்பதால், திருமணப் பேறு மட்டுமின்றி சகலசெளபாக்கியங்களும் கிடைக்கும்; இல்லத்தில்   சந்தோஷம் பொங்கிப் பெருகும்.

மலைக்கோயிலில் மகேஸ்வரன்... தாழக்கோயிலில் காமாட்சி !

ராமாயணக் குகைகள் 

வற்றாத சுனை

வால்மீகி வழிபட்ட ஈஸ்வரன்

சரித்திரம் பேசும் கல்வெட்டுகள்
அற்புதம் நிறைந்த திருமுக்கல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பெருமுக்கல். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் கல்வெட்டுகள் நிறைந்த அற்புதத் தலம் இது. 
புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது அருள்மிகு முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்க, அடிவாரத்தில் தாழக் கோயிலான காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. `திருக் காம கோட்ட நாச்சியாா் கோயில்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் இந்தக் கோயில், சிதிலமடைந்த நிலையில் திகழ்கிறது.

எனினும், முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள அரிய ஆவணங்களாக, இக்கோயிலின் கல்வெட்டுத் தொடா்கள் அமைந்துள்ளன. 60 கல்வெட்டுகள் இங்குள்ளனவாம். இவற்றின் மூலம் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் திருக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.

விக்கிரம சோழனின் திருப்பணி 

ங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழைமை யானவை, உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டுக ளாகும். இவற்றையடுத்து முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் விக்கிரமச் சோழன் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. விக்கிரமச் சோழனின் காலத்தில்தான் மலைமீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக் கற்றளியாகத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 
இந்தப் பணிக்காக ஏராளமான கைங்கா்யங்கள் செய்த காக்கு நாயகனின் திருவுருவச் சிலையும், கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பெரியான் திருவனான சிறுத்தொண்டனின் சிலையும், திருக்கோயிலின் அா்ச்சகரான திருச் சிற்றம்பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனின் திருவுருவச்சிலையும் இங்கே அமைத்திருப்பது அற்புதம்!

இவ்வூரானது கல்வெட்டுகளில், `ஜெயங் கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விசைய இராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூா்’ என்று குறிப்பிடப் படுகிறது. முதலாம் ராசேந்திரன் காலத்தில் இவ்வூர், `கங்கைகொண்ட நல்லூர்' என்று பெயா் மாற்றப் பட்டிருக்கலாம் என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள். பெருமுக்கலில் அமைந்துள்ள மலையானது `திருமலை’ என்றும் `முக்யசைலம்’ என்றும் வணங்கப்பட்டுள்ளது.

மலையின் மீது அருளும் ஈசனுக்கு ஸ்ரீமுக்தி யாலீஸ்வரா், ஸ்ரீதிருவான்மிகை ஈஸ்வரமுடையாா், ஸ்ரீபெருமுக்கல் உடையாா் என்று பல திருப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. 

ஏல விற்பனை முறை 

ற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் மற்றும் மராமத்துப் பணிகளுக்காக பகிரங்க ஏலம் (open tender) விடப்படுவதை அறிவோம்.  இவ்வாறே நம் மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும் திருப்பணி களுக்காகக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்ததற்கான தகவல்கள் பெருமுக்கல் தலத்தின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. 
மட்டுமன்றி, நாட்டில் அறம் குறையக் கூடாது என்பதற்காக இத்திருக்கோயிலில் `அறமிறங்கா நாட்டுச் சந்தி’ என்று ஒரு கூட்டு வழிபாடு முக்யாசலேஸ்வரப் பெருமானுக்கு நடத்தப்பட்டது குறித்தும் ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆசீவகம் நந்தாசிரியன் 

மெள
ரிய சாம்ராஜ்ஜியம் கோலோச்சிய கி.மு. 3-ம் நூற்றாண்டில் புகழ் வாய்ந்த சமயமாகத் திகழ்ந்தது ‘ஆசீவகம்.’ இம்மதம் பற்றிய பல்வேறு தகவல்கள் பாலி மற்றும் வடமொழி நூல்களில் இருந்தாலும், இச்சமயத்தின் ஆணி வோ் தமிழகமே என்று வரலாற்று ஆய்வாளா்கள் சிலர் தெரிவிக் கின்றனா். ஆசீவக மரபில் பிறவிப்பெருநோயைக் கடந்து வீடுபேற்றினை அடைந்த மூவரில் ‘நந்த வாச்சா’ என்பவரும் ஒருவா். 

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள மாங்குளத்தில் கணிநந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் அவன் வாரிசுகள் கற்படுக்கைகள் அமைத்துக்கொடுத்துள்ளனா். அங்கு காணப்படும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நந்தாசிரியன் எனும் பெயரே, பாலி மொழியில் நந்தவாச்சா என வழங்கப்பட்டுள்ளது. நந்தவாச்சா வானியல் அறிவியலில் நிபுணத்துவம் பெற்றிருந்த காரணத் தினால் `கணிநந்தாசிரியன்' எனவும் சிறப்பிக்கப்பட்டுள்ளாா். 
இவர் பெருமுக்கல் மலையில் முக்தி அடைந்ததாகவும், இதனால் `முக்கல் ஆசான் நல்வெள்ளையாா்” என இவா் புகழப்பட்டதாகவும் இத்திருத்தலம் குறித்த வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் இத்தல இறைவன் முக்தியாலீஸ்வரா் என்று வணங்கப்படுவதாகத் தெரிவிக் கின்றனர் ஆசீவக அறிஞா்கள். 

போா்களால் சிதைக்கப்பட்ட பெருமுக்கல் கோட்டை

ற்காடு நவாபின் பிரதிநிதியான ஐதர்அலிகான் பெருமுக்கல் பகுதியை ஆட்சி புரிந்த காலம். அப்போது, சந்தா சாஹிபுவின் மகன் திருமணம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநா் கலந்துகொள்ள வேண்டுமென, பெரு முக்கலை ஆண்ட  ஐதர்அலிகான் நேரில் சென்று தங்க நகைகளைப் பரிசளித்து அழைப்பு விடுத்ததாக, புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக்குறிப்பு தெரிவிக்கிறது. 

இங்ஙனம் ஐதர் அலிகான் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்ததால், ஆங்கிலேயரின் பகையை எதிா்கொள்ள நேரிட்டது. பெருமுக்கலின் மீது போா் தொடுக்க தக்க தருணத்தை எதிா்பாா்த்துக் காத்திருந்த ஆங்கிலேயருக்கு அதற்கான நேரமும் வாய்த்தது. 

புதுச்சேரியைக் கைப்பற்ற பிரிட்டிஷ் தளபதி ‘கர்னா் அயா்கூட்’ தலைமையில் பெரும்படை திரண்டபோது, (1760-ல்) பெருமுக்கலையும் தாக்கி அங்கிருந்த செல்வங்களையும் கோட்டையையும் பிரிட்டிஷார் கைப்பற்றினார்களாம். 
பின்னா் 1780-ல் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் படைகள் பெருமுக்கல் கோட்டையைக் கைப்பற்றின. 1783-ல் மீண்டும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற இக்கோட்டையை 1790-ல் திப்புசுல்தான் கைப்பற்றினாா். அடுத்த சில ஆண்டுகளில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் மிகுந்திருந்தபோது மீண்டும் பெருமுக்கல் கோட்டை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

இப்படி, சோமநாதபுரம் போன்று பலமுறை தாக்குதலுக்கு உட்பட்ட இத்திருத்தலத்தில், கோட்டையின் இடிந்த மதிற் சுவரும் சிதிலமடைந்த திருக்கோயிலும் மட்டுமே எஞ்சிநின்று பல நூற்றாண்டுகால வரலாற்றுக்குச் சாட்சியாய் திகழ்கின்றன.

போா்களால் சீரழிக்கப்பட்டது போதாதென்று இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளாலும் சிதைக்கப் பட்ட பெருமுக்கல் மலை, தற்போது நல்ல உள்ளம் படைத்த அன்பர்களின் முயற்சியாலும் நீதிமன்ற நடவடிக்கையாலும் அழிவிலிருந்து பாதுகாக்கப் பட்டுள்ளது. நம் முன்னோரின் பண்பாடு, கலாசாரம் மற்றும் வாழ்வியல் நெறிகளை எதிா் காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் களமான இப்புராதனச் சின்னம் மேலும் சிதிலம் அடையாமல் காப்பாற்ற வேண்டியது, நமது பெரும் கடமையாகும்.

ராமாயணச் சிற்பங்கள் 

பெருமுக்கல் மலைக்கோயிலில்  ஸ்ரீதட்சிணா மூர்த்தி அருள்பாலிக்கும் தேவகோட்டத்தின் மேல், அசோகவனத்தில் சீதாபிராட்டி சோகமே உருவாக அமா்ந்திருக்கும் சிற்பம் உள்ளது. சீதையைச் சுற்றி ஓர் அரக்கியும், குரங்கு முகம் கொண்ட வானரப்பெண் தன் குட்டியைத் தழுவியுள்ளது போன்றும், மற்றொரு பூதகணம் தழுவக் காத்திருப்பது போன்றும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் பின்பகுதியில் தனிச் சந்நிதியில் புடைப்புச் சிற்பமாக அருள்பாலிக்கிறாா் அனுமன். அடுத்து அமைந்துள்ள திருக்குளத்தின் அருகில் குன்றுகளால் உருவான குகை உள்ளது. `சீதைக் குகை’ என்றழைக்கப்படும் இந்தக் குகையில்தான் லவனும் குசனும் பிறந்தார்கள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை (லவன், குசன் பிறந்த இடம் மகாராஷ்டிர மாநிலம் கான்பூருக்கு அருகே என்றும் கூறுவர்). வால்மீகி மகரிஷி இம்மலையில் நீண்டகாலம் தவமியற்றி ஈசனின் பேரருளைப் பெற்றுள்ளாா். அவா் தவமியற்றிய குகை வால்மீகி குகை என்று வணங்கப்படுகிறது. மலையின் மீது கோடைக் காலத்திலும் வற்றாத அழகிய சுனை ஒன்றும் உள்ளது. 

தற்போது, பெருமுக்கல் திருத்தலத்தில் பிரதோஷ விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஈசனின் சிவலிங்கத் திருமேனியை தரிசித் துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு சாந்நித்தியத்துடன் அருள்பாலிப்பார் ஸ்வாமி.  ஐயனின் தெய்வீக வனப்பில் நாம் மெய்ம்மறந்து கண்களில் நீா் மல்க தரிசிக்கும்போது, இப்பிறவியின் பேற்றினைப் பெற்றுவிடுகிறோம். 

மகாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பெளர்ணமி நாளில் கிரிவலம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத்தன்று இம்மலைமீதுள்ள கருங்கல் தீப மேடை யில் மஹா தீபம் ஏற்றப்படுகின்றது.

பக்தர்களது எதிர்பார்ப்பு 

மிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள இத்திருக்கோயிலின் புனரமைப்புப் பணிகளுக்காக, 2013-ம் ஆண்டில் ஒருகோடி ரூபாய் ஒதுக்கியது தமிழக அரசு. இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் ஊர்மக்கள் பகிர்ந்துகொண்டாலும், இத்தொகை மலைக் கோயிலையும் தாழக் கோயிலையும் புனரமைக்கப் போதுமானதாக இருக்காது என்பதே நிதர்சனம். 

தாழக்கோயிலான காமாட்சி அம்மன் கோயில் மிகவும் சிதிலம் அடைந்து திகழ்கிறது. ஒருகாலத்தில், மலைக்கு மேல் அருள்பாலிக்கும் ஈசன் அா்த்தசாம பூஜை முடிந்ததும், கீழேயுள்ள தாழக்கோயிலில் எழுந்தருளி பள்ளியறை துயிலும் வழக்கம் உண்டாம். தற்போது இத்திருக்கோயில் முற்றிலும் சிதிலமடைந்திருக்கும் நிலையில், இதுபோன்ற பூஜைமுறைகள் கைவிடப்பட்டுள்ளன. 

பெருமுக்கல் மலைமீதுள்ள ஈசனை தரிசிக்கச் செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தின் மேன்மையை அகிலம் அறிய, அரசு முயற்சி எடுக்க வேண்டும். மலைக்கு எளிதாகச் செல்ல முறையாகப் படிக்கட்டுகள் அமைத்து மின்வசதி, குடிநீா்வசதி, பயணிகள் தங்குவதற்கு இடம் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று வேண்டுகின்றனர் இப்பகுதி மக்கள். மக்களின் விருப்பம் நிறைவேற்றப்பட்டால் ஆன்மிகத் தலமான இத்தலம் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மிளிரும்.

காஞ்சி முனிவா் வழிபட்ட திருக்கோயில். 

1906-ம்
 ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 66-வது பீடாதிபதியாக இருந்த `ஸ்ரீசந்திரசேகரா்’ பெருமுக்கல் மலையிலுள்ள முக்தியாலீஸ்வரா் சந்நிதியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டிருந்தார். அப்போது தன் தந்தையுடன் காஞ்சி மடாதிபதியைத் தரிசிக்க சுவாமிநாதன் என்ற சிறுவன் வந்தார். அப்போது அச்சிறுவனின் பக்தியையும் ஞானத்தையும் கண்டு வியந்த பீடாதிபதி, சிறிது காலத்துக்குப் பிறகு அவரைக் காஞ்சி சங்கரமடத்தின் 68-வது பீடாதிபதியாக நியமித்தார். அந்த சுவாமிநாதன் வேறு யாருமல்லர். கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளே ஆவாா்.

இப்பூவுலகுக்கே குருவாகத் திகழ்ந்த காஞ்சி மஹானை அடையாளம் காணக் காரணமாக அமைந்த புண்ணிய பூமி பெருமுக்கல் திருத்தலம் என்பதை நினைக்கும்போது இங்கு அருள்பாலிக்கும் சிவனாரின் கருணையை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தோம். மேலும், மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலசித்தா் பாலயோகி சுவாமிகளும் இம்மலையில் தங்கி தவமியற்றி ஈசனின் அருளைப் பெற்றுள்ளாா்.

எப்படிச் செல்வது? 

தி
ண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் நெடுஞ்சாலையில், சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது பெருமுக்கல்.