Tuesday 22 August 2017

ஆரிராரிரோ - அன்புக் குழந்தையின் ஆழ்ந்த உறக்கத்துக்கு...


னித்துளி ஒற்றி எடுக்கப்பட்ட மல்லிகை மொட்டு, பச்சிளம் குழந்தை கண்ணுறங்கும் காட்சி. ஆனால், குழந்தை தொடர்ச்சியான தூக்கமின்றி அடிக்கடி கண்விழித்துக் கொள்ளும்போது, பரிதவிக்கும் தாய் மனம். 
``குழந்தையின் உடல் உறுப்புகளின் வளர்ச்சி சீராக இருக்கவும் அதன் மூளை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆரோக்கியமாக  இருக்கவும் தேவையான நேரத்தில் அது தடையற்ற உறக்கம்கொள்ள வேண்டியது அவசியம். ஆனாலும், அதன் தூக்கம் கெடுவதற்கான காரணங்கள், குழந்தை பிறந்த ஒரு வருடம் வரை  தாய்க்குப் பெரும்பாலும் புலப்படுவதில்லை’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் குமுதா, குழந்தைக்குத் தொடர்ச்சியான, ஆழ்ந்த உறக்கம் கிடைக்கச் செய்கிற ஆலோசனைகளைத்  தருகிறார்.
இரவா.. பகலா..

பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் குறைந்தபட்சம் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். ஆனால், அதற்கு இரவு பகல் வித்தியாசம் தெரியாது. எனவே, பிறந்த ஒரு மாதம் வரை பசிக்கும்போதும் மடி நனைக்கும்போதும் மட்டுமே விழிக்கும். மற்ற நேரங்களில் எல்லாம் தூங்கிக்கொண்டிருக்கும். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம் சிறப்பாக இருக்கும். 

தொட்டில் தூக்கம்

பிறந்த குழந்தையை, தாய் அருகில் இருக்கும்போது அவரின் அரவணைப்பிலும் மற்ற நேரங்களில் பருத்தித் துணியில் கட்டிய தொட்டிலிலும் உறங்கவைக்கலாம். குழந்தை தன் தாயின் கருவறையில் உணர்ந்த அசைவைத் தொட்டிலிலும் உணர்வதாலேயே அதில் நீண்ட நேரம் உறக்கம் கொள்கிறது. மேலும், அணைத்தபடியும் போதிய காற்று கிடைக்கும்படியாகவும் இருக்கும் அதன் அமைப்பும் பாதித் தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலும் அதைத் தொடர்ந்து கண்ணயரச் செய்யும். 
வீட்டின் சூழல்

குழந்தையின் தூக்கத்துக்கு உகந்த சூழல் வீட்டில் இருக்க வேண்டும். குழந்தை உறங்கும் அறையில் சத்தம், அதிக வெளிச்சம் இருக்கக் கூடாது; கொசுத்தொல்லை, எறும்புக்கடி உள்ளிட்ட தொந்தரவுகள் அற்ற சூழலும் தாயின் அரவணைப்பும் குழந்தைக்கு நீண்ட நேர உறக்கம் கொடுக்கும். 

பாட்டில் பால் வேண்டாம்!

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் சில பெண்கள்கூட, நடு இரவில் விழிக்கும் குழந்தைக்குத் தங்களின் இரவுத் தூக்கம் கெடாமல் இருக்க வீட்டில் உள்ளவர்களைக் கொண்டு புட்டிப்பால் கொடுக்கவைத்துப் பழக்கப்படுத்துவார்கள். ஆனால், இது குழந்தையின் தூக்கத்துக்கு எதிரானது. பாட்டில் பால் குடிக்கும்போது குழந்தை காற்றையும் சேர்த்து உள்ளிழுத்துக் கொள்ளும். அது குழந்தையின் வயிற்றில் அசௌகர்யத்தை உண்டுபண்ணுவதால் இரவில் சரியான தூக்கம் கிடைக்காமல் அழும். குழந்தையின் அழுகையை நிறுத்த இவர்கள் மீண்டும் பாட்டில் பாலையே கொடுக்க, அழுகை அதிகமாகும். எனவே, தாய்ப்பால் கொடுக்க முடிந்தவர்கள் முடிந்தவரை இரவில் தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும். பாட்டில் பால் கொடுப்பவர்கள் குழந்தையை ஒருக்களித்துப் படுக்கவைப்பதன் மூலம் அதன் வயிற்றில் உள்ள காற்று வெளியேற வாய்ப்பு உண்டாக்கலாம்.  
 
பகல் நேர விளையாட்டு 

தாய்மார்கள் பகலில் தங்கள் வேலையை முடிப்பதற்காகக் குழந்தையை அதிக நேரம் தூங்க வைப்பார்கள். இதனால் இரவில் அது விழித்துக்கொள்ளும். இரவில்தான் அதற்கு அதிக நேரம் உறக்கம் தேவை என்பதால், பகலில் அதைக் கட்டாயப்படுத்தித் தூங்க வைப்பதைத் தவிர்த்து, விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம்.
சுகாதாரமும் சுகமான தூக்கமும்

குழந்தையின் ஆடைகள், தொட்டில், மெத்தை விரிப்புகள் என அதைச் சுற்றியுள்ள சூழல் சுகாதாரமாக இருக்க வேண்டும். குழந்தை சிறுநீர் கழித்த உடன் ஆடை மாற்றப்பட வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டுகளில் குழந்தையை உறங்கவைக்கும்போது அது வெளியிடும் வெப்பம் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் என்பதால் தவிர்க்கவும். 

நிறைந்த வயிறு, நிறைவான தூக்கம்!

ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு இரவு வேளையில் பால் மட்டுமே கொடுத்துத் தூங்கவைத்தால், பசியால் அதன் தூக்கம் கெடும். எனவே, மாலை 6 மணிக்கு மேல் குழந்தைக்கு எளிதில் செரிக்கும் வகையிலான திட உணவு கொடுத்து, அது செரிமானம் ஆகும் நேரம் வரை அதை விளையாட விட வேண்டும். பின்னர் தூங்கவைத்து, விழிக்கும் இடைவெளிகளில் தாய்ப்பால் கொடுத்தால் இரவு முழுவதும் குழந்தைக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். 

மாலைக்குளியல் மயக்கும்!

மாலையில் ஒரு முறை குழந்தையைக் குளிக்கவைப்பது, தளர்வான ஆடை அணிவிப்பது, ‘இனி நீ தூங்கப் போகிறாய்’ என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு ஏற்படுத்த அதை அணைத்தபடி இருப்பது, தொட்டிலில் கிடத்திப் பாடுவது... இவையெல்லாம் குழந்தையைத் தூக்கத்துக்குத் தயார்படுத்தும். 

பழக்கமே வழக்கம்!

தூக்கத்தில் குழந்தை அசைவதும்  சிணுங்குவதும் இயல்பு; உடனே தூக்கக் கூடாது. தட்டிக்கொடுக்க, தூளியை ஆட்ட என இருந்தால், மீண்டும் அது தூக்கத்தைத் தொடர்ந்துவிடும். பிறந்த ஒரு மாதத்திலிருந்தே இரவு விரைவில் தூங்கவைத்து, காலையில் விரைந்து எழக் குழந்தையைப் பழக்கப்படுத்துவது நன்று. பிறந்த குழந்தை மட்டுமல்ல, வளர்ந்த குழந்தைகளுக்கும் இரவில் ஆழ்ந்த, தடையற்ற உறக்கம் அவசியம்.’’ 

இரண்டு வயது வரை...

குழந்தைகளின் தூக்கத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! 

* ஒரு வயதிலிருந்து 2 வயது வரை தினமும் 10 - 13 மணி நேரம் வரை குழந்தைகள் உறங்குவார்கள். பகலில் அதிகபட்சம் 3 மணி நேரம் மற்றும் இரவில் 10 மணி நேரம் எனக் குழந்தையின் தூக்கத்தை முறைப்படுத்தலாம். 

* புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குச் சில தாய்மார்கள் தூக்கத்திலும் பால் பாட்டிலை வாயில் வைத்தபடியே இருக்குமாறு பழக்கப்படுத்துவார்கள். இது அவர்களின் பற்களின் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்பதால் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
* குழந்தைகள் வாயால் சுவாசித்தவாறு தூங்கினால் தூக்கநிலையில் அதன் மூக்கு அழுத்தப்பட்டிருக்கிறதா அல்லது ஜலதோஷப் பிரச்னையால் மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். 

*ஆறு மாதத்துக்கு மேல் குழந்தையின் தொட்டிலை அதிக உயரமின்றித் தாழ்வாகக் கட்டுவது பாதுகாப்பானது. அதேபோல் தொட்டிலை ஆட்டும்போது பக்கவாட்டில், சுவரில், நாற்காலியில், மேஜையில் என இடிக்காத விசாலம் முக்கியம். 

* ஒடுக்கமான தொட்டிலைவிட விரிதொட்டிலாகக் கட்டினால் குழந்தைக்குக் காற்றோட்டம் அதிகமாகக் கிடைக்கும். 

* வீட்டில் மூத்த குழந்தைகள் இருந்தால், தொட்டிலில் கழுத்தைக் கொடுத்து விளையாடுவது, தூக்கம் கலைந்த தன் தம்பி/தங்கையைத் தொட்டிலிலிருந்து தூக்க முயல்வது போன்ற விபரீதங்கள் நிகழாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். 

* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை மெத்தையில் உறங்கவைக்கும்போது, தூக்கம் கலைந்து எழுந்ததும் உருண்டோ, கீழே இறங்கும் முயற்சியிலோ அது கட்டிலிலிருந்து தவறி விழும் ஆபத்துள்ளது. எனவே குழந்தை தூங்கும்போது  பெற்றோர் வேறு வேலைகளில் இருந்தாலும் குழந்தைமீதும் ஒரு கண் அவசியம்.
 
ஒரு வயதுக்கு மேல் குழந்தையை மெத்தையில் உறங்கவைக்கப் பழக்குபவர்கள், பக்கவாட்டுத் தலையணைகள் முகம் புதையும் அளவுக்கு அதிக மிருதுவாகவோ உறுத்தும் அளவுக்குக் கடினமாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். 

* உறங்கும்வரை மொபைல், ஐபாட்களில் கார்ட்டூன்கள், ரைம்ஸ் என ஒளிர்திரைகளைக் குழந்தைகளின் கண்களுக்குப் பழக்கி அவர்களின் பார்வை பாழாகப் பெற்றோர்களே காரணமாகாதீர்கள்.

No comments:

Post a Comment