Saturday 31 December 2016

அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்,(லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர் - திருவாரூர்


மூலவர் : சகலபுவனேஸ்வரர்

உற்சவர் : பஞ்சமூர்த்தி

அம்மன்/தாயார் : மேகலாம்பிகை, சவுந்தரநாயகி

தல விருட்சம் : மந்தாரை, வில்வம்

தீர்த்தம் : சூரியபுஷ்கரிணி

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருமீயச்சூர் இளங்கோயில்

ஊர் : திருமீயச்சூர் இளங்கோயில்

பாடியவர்கள்: திருநாவுக்கரசர்

தேவாரபதிகம்

பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று மின்னு மேகலை யாளொடு மீயச்சூர் இன்ன நாள்அக லாரிளங் கோயிலே. - திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 57வது தலம்.

திருவிழா:

தை மாத ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய, அம்பிகைக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கும்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். சேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 120 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலை களுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலை களுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.

பிரார்த்தனை

இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.

பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் லலிதாம்பிகையிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். 

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் லலிதாம்பிகைக்கு கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

இங்கு மூலவர் சகல புவனேஸ்வரர் சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். இத்தலத்தில் தான் கருடன், அருணன்(சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரீவன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்துள்ளனர்.

ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன், இங்கு வந்து வழிபட்டு, தனது கருமை நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான். இது காளிதேவி பூஜித்த தலம்.

அருணனின் கதை: சூரியனின் தேரோட்டி யார் என்றால் "அருணன்' என்பீர்கள். இவரது கதையை மியச்சூரில் தான் கேட்க முடியும். காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழி பட்டனர். அவர்களுக்கு ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து கருடன் பிறந்தது. அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது. கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தான். அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.

சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயத்தை அவனது பெயரால் "அருணோதயம்' என வழங்குவர் என்றும் அருள் செய்தார். அருணன் சிவபக்தனாக திகழ்ந்தான். சிவதரிசனம் வேண்டி தவமிருந்தான். இதையறிந்த சூரியன் உடலில் குறைபாடுள்ள நீ எப்படி கைலாயம் செல்ல முடியும் என கேலி செய்தான். இருந்தாலும் விடாமுயற்சியால் சிவனை குறித்து தவம் செய்து, சிவனின் தரிசனத்தைப் பெற்றான் அருணன். மேலும் அவனைக் கேலி செய்த சூரியனை ஒளி யிழக்கும்படி சபித்து விட்டார் சிவன். 

பதறிப்போன சூரியன், பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து வழிபாடு செய்து, மீண்டும் ஒளி பெற்றான். இந்த சிவனே இங்கு "மேகநாதன்' என்ற பெயரில் அருளுகிறார். சுவாமியின் கருவறை விமானம் யானையின் பின் பக்கமான கஜப்பிருஷ்ட வடிவில் உள்ளது. இந்த விமானத்தின் மேல் மூன்று கலசங்கள் உள்ளன. சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் "மீயச்சூர்' என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீசக்ர நாயகி: அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு.

இரண்டு லிங்கம் : இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். பிரண்டை சாத நைவேத்தியம்.

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக சக்தி உண்டு என்பார்கள். சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான். பிரகாரத்தில் இரு விமானங்களுக்கு மத்தியில் நின்று பார்த்தால் பிரம்மா, லிங்கோத்பவர் (சிவன்), விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி சன்னதிகளை தரிசிக்கலாம்.

சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.

தல வரலாறு:

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக "மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார்.அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள்.

தன் முகத்திலிருந்து, "வசின்யாதி வாக் தேவதைகள்' என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே "ஸ்ரீ மாத்ரே' என துவங்கும் "லலிதா சகஸ்ரநாமம்' ஆயிற்று.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். சேத்திர புராணேஸ்வரர் சிலையில் உள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல் - திருவாரூர்


மூலவர் : கோணேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பெரியநாயகி

தல விருட்சம் : வாழை

தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரணாகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்குடவாயில்

ஊர் : குடவாசல்

பாடியவர்கள்: சம்பந்தர், அருணகிரியார்

தேவாரப்பதிகம்

பொன்னொப் பவனும் புயலொப் பவனும் தன்னொப் பறியாத தழலாய் நிமிர்ந்தான் கொன்னற் படையான் குடவாயில் தனில் மன்னும் பெருங்கோயில் மகிழ் தவனே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 94வது தலம்.

திருவிழா:

மாசிமகத்தில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவாதிரை, பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:

தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய இத்தலத்தை திருப்பணி செய்த கோச்செங்கட்சோழ மன்னன், மாடக்கோயிலாக கட்டினார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 157 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு எதிரே வெளியில் அமுத தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் சுவாமி சன்னதி பார்த்தபடி "ஆதி கஜாநநர்' என்று அழைக்கப்படும் விநாயகர் இருக்கிறார். சுவாமி சன்னதியில் இருந்து வெளியில் பார்க்கும்போது, இந்த விநாயகரின் விமான கலசம் தெரியும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். மாசி மகத்தன்று சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் அமுத தீர்த்தத்திற்கு எழுந்தருளி, தீர்த்தநீராடுகின்றனர்.

பிரகாரத்தில் "குடவாயிற்குமரன்' சன்னதி இருக்கிறது. இந்த முருகனை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். இடும்பனுக்கும் சன்னதி உள்ளது. அருகருகே இரண்டு பைரவர் (ஒருவருடன் நாய் வாகனம் இல்லை), சூரியன், சந்திரன் ஆகியோரும் உள்ளனர். இதில் சூரியன் அமர்ந்தும், சந்திரன் நின்ற கோலத்திலும் இருக்கிறார். பெற்றோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் சூரிய, சந்திரனை வழிபட்டு மன அமைதி பெறுகின்றனர்.

அருகில் சூத முனிவர், சிவனை வணங்கி தியானம் செய்தபடி இருக்கிறார். நால்வர், பரவை நாச்சியாருடன் சுந்தரர், வீணை இல்லாத சரஸ்வதி, கஜலட்சுமி, சப்தமாதர் ஆகியோரும் உள்ளனர்.

பிரார்த்தனை

தாயின் ஆசைகளை நிறைவேற்றி வைக்காமல் வருந்துபவர்கள் இங்கு சிவனை வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். திருமணதோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சையில் நெய் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

தலபெருமை:

பெரிய துர்க்கை: சிவன் சதுர பீடத்துடன், சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சுவாமியின் மேனியில் கருடனின் அலகு பட்ட தழும்பு இருக்கிறது. பெரியநாயகி அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவள் துர்க்கையின் அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம். எனவே இவளை "பெரிய துர்க்கை' (பிருஹத்துர்க்காம்பிகை) என்றும் அழைக்கின்றனர்.

சிவன் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கை இல்லை. மேற்கு நோக்கிய இத்தலத்தை திருப்பணி செய்த கோச்செங்கட்சோழ மன்னன், மாடக்கோயிலாக கட்டினார். இதனை திருஞானசம்பந்தர், "எழில்கொள் மாடக்கோயில்' என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். உயரமான இடத்தில் இருந்து சிவன் காட்சி தருவதால், இத்தலத்தை "சிறிய கைலாயம்' என்றும் சொல்கிறார்கள்.

கோணேஸ்வரர்: சூதமகரிஷி, பிருகு மற்றும் தாலப்பியர் ஆகியோர் இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளனர். உயிர்களை (கோ) நேசித்து, அவர்களை மீண்டும் படைக்க அருளியவர் என்பதால் இவருக்கு, "கோணேஸ்வரர்' என்று பெயர் ஏற்பட்டது. அமுதக்குடத்தின் வாயில் விழுந்த தலமென்பதால் தலம் "குடவாயில்' என்றழைக்கப்பட்டு, "குடவாசல்' என மருவியது.

சுவாமிக்கு அமுதலிங்கேஸ்வரர் என்றும், புற்றிற்குள் இருந்ததால் "வன்மீகநாதர்' என்றும் பெயர்கள் உண்டு. கோயில் நுழைவு வாசல் எதிரே காசி விஸ்வநாதர் காட்சி தருகிறார். தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. அருகே நடராஜர், சிவகாமியம்பாளுடன் இருக்கிறார்.

விதவிதமான விநாயகர்: அமுத தீர்த்தக்கரையில் ஆதிகஜாநநர் என்னும் விநாயகர் இருக்கிறார். இக்கோயிலுக்குள் நுழைந்ததும் வலது புறத்தில் "அனுமதி விநாயகர்' சன்னதி இருக்கிறது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பிறகே சிவனை வழிபடச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். எனவே இவருக்கு இப்பெயர். இதுதவிர பிரகாரத்தில் "மாலை வழிபாட்டு விநாயகர்' என்ற விநாயகரும் இருக்கிறார். சாயரட்ச பூஜையில் இவருக்கே முதல் பூஜை செய்யப்படுவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இதுதவிர, இரட்டை விநாயகர் சன்னதியும் உள்ளது.

தல வரலாறு:

பிரளயகாலத்தில் படைப்புக்குரிய வேதங்களை பிரம்மா, ஒரு அமுத குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. மீண்டும் உயிர்களைப் படைக்க சிவன், வேடன் வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தார். அமுத குடத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.

குடத்தின் வாய் பாகம் இத்தலத்தில் விழுந்தது. சிவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தார். காலவெள்ளத்தில் இந்த லிங்கம் புற்றால் மூடப்பட்டது. பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை, சத்ரு என்பவளின் சூழ்ச்சியால் அவளிடம் அடிமையாக இருந்தாள். தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, கருடன் தேவலோகம் சென்று அமுதக்குடம் எடுத்து வந்தார். வழியில் இத்தலத்தில் இறங்கினார். அப்போது அசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து அமுதக்குடத்தை பறிக்க முயன்றான்.

கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு, சண்டையிட்டார். அவனை வென்று அமுதக்குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள் புதைந்திருந்தது. எனவே தனது அலகால் கீறவே, அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். கருடன் தனது தாயின் நிலையைக்கூறினார். அவரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அருளினார் சிவன். அதன்பின்பு கருடனே இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்,மன்னார்குடி - திருவாரூர்


மூலவர் : கொழுந்தீஸ்வரர் ( அக்ர பரமேஸ்வரர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : தேனார் மொழியம்மை (தேனாம்பிகை என்ற மதுர பாஷினி)

தல விருட்சம் : வன்னி

தீர்த்தம் : முள்ளியாறு, சிவகங்கை, பிரம, சிவ, மண்டை, அமுத, இந்திர, விசுவகன்ம, அரம்பா என 9 வகை தீர்த்தங்கள்.

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : இந்திரபுரம், மேலக்கோட்டூர் கோயில், திருக்கோட்டூர்

ஊர் : கோட்டூர்

பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்

தேவாரப்பதிகம்

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய் கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைக ளன்னஞ் சேர்ந் தழகாய் குலவு நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தே என்று எழுவார்கள் நிலவு செல்வத்தராகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 111வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகம் பிரமோற்ஸவம். ஆடிப்பூரம். நவராத்திரி. திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 175 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம். இரண்டு பிரகாரம். உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அகோர வீரபத்திரர், நந்திகேஸ்வரர், வல்லபகணபதி, நடராஜர், பிரம்மா, மகிஷாசுரமர்த்தினி, பைரவர், நவகிரகம், சண்டிகேஸ்வரர்,

பிரார்த்தனை

இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள்.

தலபெருமை:

தேவலோக மங்கை ரம்பை இந்திர லோகத்தில் செய்த தவறுக்காக பூமிக்கு செல்லும்படி சபிக்கப்பட்டாள்.

அவள் மீண்டும் இந்திர லோகம் செல்வதற்காக இத்தலத்து ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்துள்ளாள். பிரதோஷ கால மூர்த்தி இங்கு தனி சன்னதியில் சிலை வடிவில் உள்ளது.

மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை இன்றும் பார்க்கலாம்.

தல வரலாறு:

விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான். அதற்கு பிரம்மா, ""இந்திரனே! ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும்.

அவரது முதுகெலும்பு மிகவும் பலமானதா விளங்குவதற்கு காரணம் உள்ளது. முன்னொரு காலத்தில் திருப்பாற்கடல் கடைவதற்கு முன்பாக தேவர்கள் அனைவரும் தத்தமது ஆயுதங்களை இந்த முனிவரிடம் ஒப்படைத்து பத்திரமாக வைத்திருக்க வேண்டினார்கள்.

இவர் அனைத்து ஆயுதங்களையும் தன் வாயில் போட்டு பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். இவரது தவத்தின் சக்தியால் அனைத்து ஆயுதங்களும் உருகி அவரது முதுகெலும்பில் சேர்ந்துவிட்டன. இதனால் அவரது முதுகெலும்பு மிகவும் பலமுள்ளதாகிவிட்டது,'என்றார்.

இந்திரனும் அதன்படி முனிவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி அரக்கனை கொன்றான். முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

இந்த தோஷத்தை போக்க தேவகுருவை நாடினான். அவரும்,""இந்திரனே! நீ பூவுலகில் சிவதல யாத்திரை செய்து சிவபூஜை செய். அப்போது, தேவர்கள் அமுதம் பெறும் போது சிந்திய அமுதத்துளியால் உண்டான வன்னிமரத்தின் அடியில் சிவலிங்கம் இருக்கும்.

இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் உனது தோஷம் நீங்கும்,'என்றார்.

அதன்படி இந்திரன் இங்கு தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றான்.

இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும், ஐராவத யானை பூமியில் கோடு கிழித்ததால் கோட்டூர் என்றும் அழைக்கப்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர் - திருவாரூர்


மூலவர் : கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி

உற்சவர் : -

அம்மன்/தாயார் : வனமூலையம்மன், சுந்தரகுஜாம்பிகை

தல விருட்சம் : பத்ரி, இலந்தை

தீர்த்தம் : சரவணப்பொய்கை, அக்னி, சேஷ, பிரம்ம, சூரிய, சந்திர, குபேர தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கீவளூர், திருக்கீழ்வேளூர்

ஊர் : கீழ்வேளூர்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும் பன்னு லாவிய மறையொளி நாவினர் கறையணி கண்டத்தர் பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர் சீரு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 84வது தலம்.

திருவிழா:

சித்ராபவுர்ணமியில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 147 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய சன்னதி. இரண்டு பிரகாரங்கள். உள்பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, நடராஜர், சோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அகத்தியர், விஸ்வநாதர், கைலாசநாதர், பிரகதீஸ்வரரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. குபேரனுக்கும், முருகப்பெருமானுக்கும் தனித்தனியாக மிகப்பெரிய சன்னதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் பத்ரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை

பாவங்கள்,தோஷங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடை அளித்து வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

வேளூர் என்ற பெயருடைய தலங்கள் பல இருந்ததால் கிழக்கே உள்ள இத்தலம் "கீழ்வேளூர்' ஆனது. கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள அஞ்சுவட்டத்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அகத்தியர் பூஜித்த லிங்கமும் உள்ளது. இங்குள்ள நடராஜர் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்தியருக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

நோய் தீரும் பிரார்த்தனை: படைப்பாற்றல் குறைந்ததால், கோயில் வடக்கு கோபுர வாசலின் எதிரில் பிரம்மதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் மூழ்கி அட்சயலிங்க சுவாமியை வழிபட்டார் பிரம்மா. அவருக்கு மீண்டும் படைக்கும் ஆற்றல் கிடைத்தது. இங்குள்ள திருமஞ்சனக்குளம் தோஷ நிவர்த்தியை அளிக்கிறது. நிருதி மூலையிலுள்ள இந்திர தீர்த்தத் தடாகத்தில் இந்திரன் மூழ்கி தன் சாபம் நீங்கப் பெற்றான். தென்மேற்கு மூலையிலுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடினால் தோல் நோய் குணமடைவதாக நம்பிக்கையுள்ளது.

சிற்ப வேலைப்பாடு: அம்பிகை பிம்பம் சுதையால் ஆனதால் அபிஷேகம் கிடையாது. சாம்பிராணித்தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. முருகன் வடக்குப்பார்த்து பாலரூபமாய் புன்சிரிப்புடன் நின்று தவம் புரிகிறார். தேவநாயகர் என்று அழைக்கப்படும் தியாகராஜர் திருவுருவம் சிறப்பானதாகும். கோயிலிலுள்ள சிங்க உருவங்களும், யாளி வரிசைகளும், வளைந்து தொங்கும் சட்டங்களும், அவற்றின் நுனியில் வாழைப்பூத் தொங்கல்களும், அதைத் தம் மூக்கால் கொத்தும் கிளிகளும் சிற்ப வேலைப்பாடுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

விசேஷ அம்பாள்: மூலவர் அட்சயலிங்க சுவாமி என்ற கேடிலியப்பர் என்றும், அம்பாள் சுந்தரகுஜாம்பாள் என்றும், வனமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பத்ரகாளியின் அம்சமான "அஞ்சுவட்டத்தம்மன்' என்ற தெய்வமும் இங்கு குடியிருக்கிறாள். நான்கு திசைகள் மற்றும் ஆகாயம் ஆக ஐந்து புறங்களிலும் இருந்து பிரச்னை ஏற்பட்டாலும், பாதுகாப்பு தருபவளாக விளங்குவதால் இந்தப்பெயர் சூட்டப்பட்டது. இவள் ஒரு சமயம் ஐந்துமுறை ஆகாயத்தில் வட்டமடித்து நடனமாடியதாகவும், அதனால் இந்தப் பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. எப்படியாயினும், இவள் ஆகாய தெய்வம் என்பதால், அடிக்கடி விமானபயணம் மேற்கொள்வார், இந்த அம்பாளை வணங்கி விபத்தின்றி பயணம் செய்ய வேண்டிக் கொள்ளலாம். பாலசுப்பிரமணியர், அகஸ்தியர், ஆளுங்கோவேஸ்வரர், விஸ்வநாதர், மகாலட்சுமி, கைலாசநாதர், பிரகதீஸ்வரர், அண்ணாமலைநாதர், ஜம்புகேஸ்வரர், குபேரன், தேவேந்திரன் சன்னதிகளும் இங்கு உள்ளன. மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உற்சவரான கல்யாணசுந்தரரும், நர்த்தன கணேசரும் அருள்பாலிக்கின்றனர். 

தல வரலாறு:

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை கொன்ற கொலைப்பாவம் நீங்க சிவனை வேண்டினார். கீழ்வேளூர் திருத்தலத்தில் குளம் உண்டாக்கி சிவனை வழிபட்டால் பாவம் விலகும் என சிவன் அருளினார். அதன்படி முருகப்பெருமானும் நவவீரர்களுடன் இத்தலம் வந்தார். முதலில் முழுமுதற்கடவுளான விநாயகரை மஞ்சளால் பிடித்து வழிபட்டார். அதுவே இப்போது கீழ்வேளூர் அருகே "மஞ்சாடி' எனப்படுகிறது. அடுத்து சிவலிங்க பூஜை செய்வதற்காக, தேவதச்சன் மயனை கொண்டு அருமையான சிவாலயத்தை கட்டி, புஷ்கலம் எனப்படும் விமானத்தையும் அமைத்தார்.

கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் தனது வேலால் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் தானும், தன்னுடன் வந்த நவவீரர்களையும், சேனாதிபதிகளையும், பூதப்படையினரையும் சேர்ந்து நீராடினார். இதனால் இத்தலம் "வேளூர்' ஆனது. பின் முருகன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவம் முழுமையடையாமல் இருக்க தீய சக்திகள் இடையூறு விளைவித்தன. இதிலிருந்து தன்னை காக்க பார்வதியை அழைத்தார் முருகன். முருகன் அழைத்தவுடனேயே தாய் பார்வதி, "அஞ்சுவட்டத்தம்மன்' என்ற திருநாமம் கொண்டு நான்கு திசை மற்றும் ஆகாயத்திலுமாக சேர்த்து காவல் புரிந்தார்.

சிங்கத்துவஜன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடி அலைந்த போது களைப்பால் தாகம் ஏற்பட்டது. ஒரு முனிவரின் ஆஸ்ரமத்துக்கு சென்று, அரசன் என்ற ஆணவத்துடன் தண்ணீர் கொண்டு வரும்படி ஆரவாரமாகக் கத்தினான். இதனால், தியானத்தில் இருந்த முனிவர் கோபத்துடன் வெளியில் வந்து, "கழுதை போல் கத்துகிறாயே, நீ கழுதையாகப் போ,'' என்று சபித்தார். மற்றொரு காட்டரசன் விந்திய மலையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியரைத் தரிசிக்க சென்றவர்களை துன்புறுத்தி வந்தான். இதனால் அந்த அரசனையும் கழுதையாகுமாறு அகஸ்தியர் சபித்தார்.அவர்கள் கழுதையாகப் பிறந்தனர். வணிகன் ஒருவன் அவற்றை பொருள் சுமக்க பயன்படுத்தினான். ஒருநாள், கழுதைகள், தற்போதைய அட்சயலிங்க சுவாமி கோயிலிலுள்ள பிரம்மத் தீர்த்தத்தில் நீர் பருகின. இறைவனின் அருளால் அவை தமது முற்பிறப்பு வரலாற்றை உணர்ந்தன. அதை மனித மொழியில் பேசிக்கொண்டன. கழுதைகள் பேசுவதைக் கவனித்த வணிகன், அவற்றை விட்டுவிட்டு ஓடிவிட்டான். இரண்டு கழுதைகளும் கோயிலை வலம் வந்தன. அட்சயலிங்க சுவாமியின் அருள் பெற்றன. ஆடிமாதம் பவுர்ணமி முதல் சதுர்த்தி வரையில் பிரம்மதீர்த்தத்தின் நீரருந்தினால், நீங்கள் மீண்டும் மனித வடிவை அடைவீர்கள் என்று அசரீரி ஒலிக்கவே, இரண்டும் நீர் அருந்தி மனித வடிவத்தைப் பெற்றன. சிரஞ்சீவியாக விளங்கும் மார்கண்டேய முனிவர் ஒரு நாள் தம் நித்திய சிவ பூஜையை துவங்கினார். அப்போது பிரம்மகற்பம் முடிந்து, கடல் பொங்கி அண்டபகிரண்டங்கள் அழியத் துவங்கியது. "எந்தக்காலத்திலும் அழியாத தென்னிலந்தை வனம் சென்று கீழ்வேளூர் கேடிலியை வணங்குவாய்''என்று அசரீரி ஒலித்தது. அதன்படி மார்கண்டேய முனிவர் வணங்கி பேரு பெற்ற இடம் அட்சயலிங்க சுவாமி கோயில். இது உலகம் அழியும் காலத்திலும் அழியாத தலமாக விளங்குமென குறிப்பு உள்ளது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம் - தொண்டியக்காடு , திருவாரூர்


மூலவர் : கற்பக நாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பாலசுந்தரி

தல விருட்சம் : பலா

தீர்த்தம் : விநாயகர் தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கடிக்குளம்

ஊர் : கற்பகநாதர்குளம்

பாடியவர்கள்: சம்பந்தர்

தேவாரப்பதிகம்

பொடி கொண்மேனி வெண்ணூலினர் தோலினர் புலியுரியதளாடை கொடி கொளேற்றினர் மணிகிணி எனவரு குறைகழல் சிலம்பார்க்கக் கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையும் கற்பகத்தைத்தம் முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 109வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 173 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இத்தல விநாயகர் மாங்கனி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை

சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் வெண்ணெய் தானம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

இத்தல சிவபெருமான் 8 முக பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் வெண்ணெய் தானம் செய்வது சிறந்தது. ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது.

இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது. ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர்.

தல வரலாறு:

கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான்.

தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், கரைவீரம் - திருக்கண்ணமங்கை , திருவாரூர்


மூலவர் : கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பிரத்தியட்சமின்னம்மை

தல விருட்சம் : செவ்வரளி, அலரி

தீர்த்தம் : அனவரத தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கரவீரம், கரையபுரம்

ஊர் : கரைவீரம்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

பண்ணி னார்மறை பாடல் ஆடலன் விண்ணி னார்மதில் எய்தமுக் கண்ணி னான் உறையுங் கரவீரத்தை நண்ணுவார் வினை நாசமே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 91வது தலம்.

திருவிழா:

மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி,பங்குனி உத்திரம்

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 154 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை

அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள்.இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

சிவபெருமான் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பராமரிக்க கவுதம முனிவரை நியமித்தார். கவுதம முனிவர் இத்தலத்தில் தவம் செய்து இறைவனின் அருள் வேண்டினார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் வேண்டும் வரம் கேள்,'என்றார். அதற்கு முனிவர் இறைவா! நான் இறந்த பின் எனது உடலை யாரும் பார்க்க கூடாது. ஏனெனில் உனக்கு சேவை செய்ய வந்தவன் நான். சிவனை வணங்க வருபவர்கள், முனிவராகிய என்னையும் சேர்த்து வழிபாடு செய்வார்கள். எனவே என்னை இத்தலத்தின் தலவிருட்சமாக ஏற்று அருள்புரியுங்கள் என்றார். இறைவனும் அதன்படி அருள்புரிந்தார். எனவே தான் அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள்.

கரவீரம் என்பதற்கு பொன்னலரி என்பது பொருள். அலரியைத்தலமரமாக கொண்டதால் இத்தலம் கரவீரம் எனப்படுகிறது.திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

கழுதைக்கு முக்தி: சிவபெருமானின் தரிசனம் வேண்டி ஒரு கழுதை இத்தலத்தில் தவம் இருந்தது. தரிசனம் கிடைக்காத வருத்தத்தில் நாகூர் வரை நடந்து சென்று கடலில் விழ இருந்தது. அப்போது ஏதோ சப்தம் கேட்க, கழுதை திரும்பி பார்த்த போது இத்தலத்தில் இருந்தபடியே இறைவன் தரிசனம் தந்து, மோட்சம் அளித்தார் என புராணம் கூறுகிறது. எனவே தான் சிவனின் எதிரில் கொடிமரமும், நாகூர் வரை வீடுகளும் கிடையாது.

இத்தலத்து சிவபெருமான் கழுதைக்கு மோட்சம் அளித்துள்ளார். எந்த உயிரினமாக இருந்தாலும் உண்மையான பக்தி இருந்தால் சிவதரிசனம் நிச்சயம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் தேவகன்னியர்கள் கைலாயத்தில் சிவனையும் சக்தியையும் தரிசிக்க சென்றனர். அப்போது அவர்கள் பார்வதியிடம்,""தேவி! தங்களுக்கு சிவபெருமான் கணவனாக உள்ளார். குழந்தைகளும் உள்ளது. எங்களுக்கும் திருமண பாக்கியம் தந்தருள வேண்டும்,'என வேண்டினர். அதற்கு பார்வதி தேவி சிவனிடம்,""இறைவா, இதற்கு தாங்கள் தான் பதில் கூறவேண்டும்,'என வேண்டினாள். உடனே சிவபெருமான் காவிரியின் தென்கரையில் தானே லிங்கம் அமைத்து கொடுத்து, அதை அமாவாசை தினத்தில் தேவகன்னியரை வழிபாடு செய்ய கூறினார்.

தேவகன்னியரும் அதன்படி செய்து பலனடைந்தனர் என தலபுராணம் கூறுகிறது. எனவே அமாவாசை நாட்களில் பெண்கள் இங்கு வந்து இங்குள்ள தலவிருட்சத்தில் தண்ணீர் ஊற்றி, சிவனை வழிபாடு செய்கின்றனர். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் , நன்னிலம் - திருவாரூர்


மூலவர் : ஐராவதீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : வண்டமர் பூங்குழலி , சுகந்தகுந்தளாம்பிகை

தல விருட்சம் : பாரிஜாதம், தற்போது இல்லை

தீர்த்தம் : வாஞ்சியாறு, மற்றொன்றாகிய சூரிய தீர்த்தம் கோயிலின் முன் உள்ளது.

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கோட்டாறு

ஊர் : திருக்கொட்டாரம்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரபதிகம்

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய் கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைக ளன்னஞ் சேர்ந் தழகாய் குலவு நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தே என்று எழுவார்கள் நிலவு செல்வத்தராகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே. - திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 53வது தலம்.

திருவிழா:

ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம்

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 116 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் ""ராசராசப் பாண்டி நாட்டு உத்தமச் சோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டானான் மும்முடிச்சோழ நல்லூர்'' என்று குறிக்கப்படுகிறது. இக்கோயிலைக் கட்டுவித்தவன் ""சோழ மண்டலத்து மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான் குலோத்துங்க சோழ கேரள ராசன்'' ஆவான் (காலம் கி.பி.1253), கல்வெட்டில் இறைவனின் பெயர், ""இராசேந்திர சோழீசுவரமுடைய மகாதேவர்'' என்று காணப்படுகின்றது.

பிரார்த்தனை

திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

கோடு - கரை . வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் இத்தலம் கோட்டாறு எனப்பட்டது. வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு என இத்தலப்பெயர். அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம். உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுபக முனிவர், முருகன், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரிய, சந்திரர், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன.

முன்மண்டபத்திற்கு அருகில் குமார புவனேஸ்வரர் கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் உள்ளது. அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை கேட்கலாம். ஞானசம்பந்தரின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மூலவர் மிகச் சிறியவர். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம்.

தல வரலாறு:

ஐராவதம் சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமாக உள்ள யானை. வெண்மை நிறமும் நான்கு கொம்புகளும் உடையது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறை வனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது.

துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். அவர் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடற்புராண வரலாறு. ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.

சுபமகரிஷி என்பவர் நாள்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது. அதைக் கண்ட "சுபர்' தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார். அக்காலந் தொடங்கி மூலவர் சன்னதியில் தேன்கூடு இருந்து வருகிறது'', தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம். மீண்டும் கூடுகட்டப்படுகின்றதாம். இம் மகரிஷியின் - சுபமக ரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்றத்தில் உள்ளது.

முன் மண்டபத்திற்கு அருகில் குமாரபுவனேசுவரர் கோவிலுள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் இங்குள்ளது. இதை அகத்தியரும் சுகமகரிஷியும் சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோயில், கணபதீச்சரம், திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர்


மூலவர் : கணபதீஸ்வரர்

உற்சவர் : உத்திராபசுபதீஸ்வரர்

அம்மன்/தாயார் : வாய்த்த திருகுகுழல் உமைநாயகி ( சூளிகாம்பாள்)

தல விருட்சம் : காட்டாத்தி

தீர்த்தம் : சூர்ய, சந்திர புஷ்கரிணி

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கணபதீச்சரம்

ஊர் : திருச்செங்காட்டங்குடி

பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர், அருணகிரியார்

தேவாரப்பதிகம்

தோடுடையான் குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும் காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 79வது தலம்.

திருவிழா:

சித்திரை பரணியில் பிள்ளைக்கறி சமைத்த விழா, மார்கழி சதயசஷ்டியில் கணபதி விழா, சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

இத்தல மூலவர் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனி சன்னதியில் அருள்பாலிக்கும் உத்திராபசுபதீஸ்வரர் தற்போதும் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 142 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

பிரகாரத்தில் புஜங்கலலிதமூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரமூர்த்தி, கங்காளமூர்த்தி, பிட்சாடனார், திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர் என வரிசையாக எட்டு சம்ஹாரமூர்த்திகள் காட்சி தருவது விசேஷம்.

இவ்வாறு அட்ட வீரட்ட தலங்களிலுள்ள சுவாமிகளையும் இங்கு தரிசிக்கலாம். தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், அசுர மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்றவர் இவர்.

சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் வில்லுடன் காட்சி தருவது சிறப்பு. சிறுதொண்டரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்ற சிற்பம், உள்ளது.

பிரகாரத்தில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, நால்வர், சங்கநிதி, பதுமநிதியுடன் நாகர், இரட்டை பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறார்.

பிரார்த்தனை

செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டுபவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தோஷம், மனக்குழப்பங்கள் நீங்கவும் இங்கு வணங்கலாம். கர்ப்பிணிகள் அம்பிகையிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமி, உத்திராபசுபதீஸ்வரர், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

உத்திராபசுபதீஸ்வரர்: மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறத்தில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில் உத்திராபசுபதீஸ்வரர் இருக்கிறார். இவரே இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்படுகிறது. கைகளில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் இவர் காட்சி தருகிறார்.

முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பரஞ்சோதி என்பவர், பல்லவ மன்னரின் போர்ப்படை தளபதியாக இருந்தார். சிவபக்தரான இவர், சிவனருளால் பல போர்களிலும் வெற்றி வாகை சூடினார். பரஞ்சோதியாரின் பக்தியையும், சிவத்தொண்டையும் அறிந்த மன்னன், அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அது சிவனுக்கே நேர்ந்ததாகும் என கருதி, அவரை சிவத்தொண்டு செய்யும்படி வேண்டிக்கொண்டான். அவரும் ஏற்றுக்கொண்டார். மங்கை நல்லாள் என்பவரை மணந்து, சீராளன் என்னும் மகனைப் பெற்றார். தினமும் சிவத்தொண்டர்களுக்கு உணவு படைத்தபின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்த இத்தம்பதியினர், அடியார்கள் கேட்டதை இல்லை என்று சொல்லாமல் படைத்து வந்தனர்.

ஒருசமயம் சிறுத்தொண்டர் வீட்டிற்கு அடியார் யாரும் வரவில்லை. எனவே அடியாரைத்தேடி அவர் வெளியில் சென்றார். அப்போது சிவன், அடியார் வேடத்தில் அவரது இல்லத்திற்கு சென்றார். சிறுதொண்டரின் மனைவி திருவெண்காட்டுநங்கை, பணியாள் சீராளநங்கை அவரை வரவேற்று, சாப்பிட அழைத்தனர். கணவன் இல்லாத வீட்டில் சாப்பிட மறுத்த அவர், இக்கோயில் காட்டாத்தி மரத்தினடியில் இருப்பதாக சொல்லிவிட்டு இங்கு வந்தார். வீடு திரும்பிய சிறுத்தொண்டரிடம் மனைவி நடந்ததைக் கூறினார். மகிழ்ந்த சிறுதொண்டர் கோயிலுக்கு வந்து அடியாரை அழைத்தார். அவர் சிறுதொண்டரின் மகனை சமைத்து படைத்தால் மட்டுமே, உணவருந்த வருவதாக கூறினார். அவரும் ஏற்றுக்கொண்டு மகனை அறுத்து, சமைத்தார். சாப்பிடும் முன்பு அடியார், சிறுதொண்டரின் மகனையும் சாப்பிட அழைக்கும்படி கூறினார்.

திகைத்த சிறுத்தொண்டரும், மனைவியும் வெளியில் நின்று மகனை அழைக்க, அவன் ஓடி வந்தான். மகிழ்ந்த தம்பதியர் வீட்டிற்குள் சென்றபோது, அடியவர் வடிவில் வந்த சிவன், அம்பிகையுடன் காட்சி தந்து, நால்வருக்கும் முக்தி கொடுத்து அருள்புரிந்தார். இவரே இங்கு உத்திராபசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் காட்டாத்தி மரமும், சிறுத்தொண்டர் குடும்பத்தினருடன் காட்சி தருகின்றனர்.

நான்கு அம்பாள்: முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு குழந்தை இல்லை. சிவபக்தரான அவர் புத்திரப்பேறுக்காக சிவனை வேண்டி யாகம் நடத்தினார். சிவன் அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்றார். ஒருசமயம் வேட்டையாடச் சென்றபோது மன்னர் 4 பெண் குழந்தைகளை கண்டார். அக்குழந்தைகளை வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை வாய்த்த திருகுகுழல் நாயகியாகவும், திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, கணபதீச்சரத்தில் சரிவார்குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.

தனிக்கோயில் அம்பிகை: அம்பிகையர் நால்வருக்கும், "சூலிகாம்பாள்' என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமுற்றாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக் கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்பமுடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்' என்ற பெயரும் உண்டு. "சூல்' என்றால் "கரு'வைக் குறிக்கும். பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியில் நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது மட்டும் சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.

வாதாபி கணபதி: ஒருசமயம் பரஞ்ஜோதி, போருக்குச் சென்றபோது அங்கிருந்த விநாயகரை வணங்கி போர் புரிந்தார், வெற்றி பெற்றார். வெற்றியின் அடையாளமாக விநாயகரை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். கஜமுகாசுரனை அழித்ததற்காக விநாயகர் தோஷ நிவர்த்தி பெற்ற இத்தலத்தில், பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகே தமிழகத்தில் விநாயகருக்கு உருவ வழிபாடு உண்டானதாக சொல்வர். எனவே இவரை "ஆதிவிநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். தனிச்சன்னதியில் இருக்கும் இந்த விநாயகர், இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். சதுர்த்தி திதியில் விசேஷ பூஜை நடக்கிறது. விநாயகருக்கு சிவன் ஒரு மார்கழி மாத சதயம் நட்சத்திரத்துடன் கூடிய, சஷ்டி திதியன்று தோஷ நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் மார்கழி சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை, வழிபாடு மற்றும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது.

சிலையாய் அமைந்த சிவன்: ஒருசமயம் சிறுத்தொண்டருக்கு காட்சி தந்த சிவனுக்கு, இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிலை வடித்தார். ஆனால், பலமுறை சிலை சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த சிவனடியார் ஒருவர் தாகத்திற்கு நீர் கேட்டார். சிற்பிகள் சிலை அமையாத கோபத்தில், சிலை செய்ய வைத்திருந்த உலோக கலவையை கொடுத்துவிட்டனர். அதை அருந்திய அடியார், அப்படியே சிலையாக மாறினார். சிவனே, சிலையாக அமைந்ததை உணர்ந்த மன்னர் இங்கு பிரதிஷ்டை செய்தார். அப்போது அச்சிலையில் நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் தட்டவே காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. பின்பு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கவே ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையில் இவருக்கு பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ சாத்தப்படுகிறது. சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்பு, சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய விசேஷ நாட்களில் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (சிவப்பு இரத்தம்) இப்பகுதியில் ஆறாக ஓடியதாம். எனவே இத்தலம் "திருச்செங்காட்டங்குடி' என்று அழைக்கப்படுகிறது. "ரத்தாரண்யக்ஷேத்ரம்' என்பது இத்தலத்தின் மற்றொரு பெயர்.

தல வரலாறு:

யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலம் வந்தார். சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கியருளினார். எனவே சிவன், "கணபதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். 

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தற்போதும் நெற்றியில் காயத்துடனே உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார்.

அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை - குடவாசல்


மூலவர் : அபிமுக்தீஸ்வரர் ( பிரிய நாதர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : அபினாம்பிகை (ஏழவார் குழலி)

தல விருட்சம் : வன்னி

தீர்த்தம் : சரவணப்பொய்கை

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : பெருவேளூர், காட்டூர் ஐயன்பேட்டை

ஊர் : மணக்கால்ஐயம்பேட்டை

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

குணக்கும் தென்திசைக் கண்ணும் குடபாலும் வடபாலும் கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் மொழிந்தோர்க்கும் வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும் பிணக்கம் செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம்.

திருவிழா:

கந்த சஷ்டியும், வைகாசி விசாகமும் இத்தலத்தின் முக்கிய திருவிழா ஆகும். இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 155 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இத்தல விநாயகர் கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கங்கை, முருகன், பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். சுமார் 70 சென்ட் பரப்பளவில் கிழக்குநோக்கிய 5 நிலை ராஜ கோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. கோச்செங்கண்ணன் என்ற சோழமன்னன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. கோயில் கீழ்பகுதியில் விநாயகரும், அர்த்தநாரீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள்.

இடதுபக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியுமாக கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் உள்ளது. கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கிறார்கள்.

பிரார்த்தனை

திக்குவாய் உள்ளவர்கள், பேசும் ஆற்றல் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். சுக்கிரனுக்குரிய பரிகார ஸ்தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். அன்னதானம் செய்கின்றனர்.

தலபெருமை:

சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் பூஜை செய்த தலங்கள் வைத்தீஸ்வரன் கோவில், கீவளூர், பெருவேளூர், திருவிடைக்கழி ஆகியன. அதேபோல், முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் "பெருவேளூர்' எனப்பட்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.

தேவ அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, அது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்ய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் என தல வரலாறு கூறுகிறது. பெருமாள் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

சரஸ்வதீஸ்வரர் கோயிலின் கீழ் பிரகாரத்தில் ஆறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு லிங்கம் "சரஸ்வதீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறது. முன்பு ஒரு முறை ஊமைச்சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் இந்த சரஸ்வதீஸ்வரர் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபாடு செய்தனர். இவர்களது வழிபாட்டில் மனமிறங்கிய சிவன் சிறுவனுக்கு பேசும் சக்தியை தந்தார் என கோயில் வரலாறு கூறுகிறது.

தல வரலாறு:

ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம்,""இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்,''என வேண்டினாள்.

கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,""கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்,''என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் பாவங்களை போக்கி கொண்டதாக வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பாடல் பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம், திருமீயச்சூர் ஆகிய தலங்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இத்தலத்திலும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இத்தலத்தில் தான் "லலிதா திரிசதை' பாடப்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே) ஆருர் அரநெறி - திருவாரூர்


மூலவர் : அசலேஸ்வரர், அரநெறியப்பர்

உற்சவர் : அரநெறியப்பர்

அம்மன்/தாயார் : வண்டார்குழலி

தல விருட்சம் : பாதிரி

தீர்த்தம் : சங்கு தீர்த்தம், கமலாலயம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : ஆருர் அரநெறி

ஊர் : ஆருர் அரநெறி

பாடியவர்கள்: திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் கழித்தனர் கல்சூர் கடியரண் மூன்றும் அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 88வது தலம்.

திருவிழா:

மார்கழி திருவாதிரை. மாசி சிவராத்திரி.

தல சிறப்பு:

இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 151 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. சீழக்கோபுரம் 118 அடி உயரமுள்ளது.

மொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் சென்றால் விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும், உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார். அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் அடுத்து ஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதிதீர்த்தம் முதலியவை உள்ளன.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

கழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன் தன் மனைவியுடன் இத்தலத்திற்கு வந்தான். அப்போது இறைவனுக்கு சாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மலரை, ராணி முகர்ந்து பார்த்தாள்.

இந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது. செருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

தல வரலாறு:

நமிநந்தியடிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.

இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை.

தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், ""கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே. 

அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே?'என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,""இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர். இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்?'என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக,""அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று'என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். கோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான். இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் விஞ்ஞானம் அடிப்படையில்: அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு - திருத்துறைப்பூண்டி, திருவாரூர்


மூலவர் : அக்னீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி

தல விருட்சம் : வில்வம் மரம்

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கீராளத்தூர்

ஊர் : திருக்கொள்ளிக்காடு

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும் மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும் வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே. - திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 115வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. இத்தல முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார். இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

கோயில் முன்புறவாயிலில் ராஜகோபுரமில்லை. மேலும் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி மட்டுமே உள்ளது. கொடிமரம் கிடையாது. பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன. விநாயகர், காசிவிசுவநாதரை வணங்கி வலம் முடித்து உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம். மேற்கு பார்த்த சன்னதி. அக்கினி வழிபட்டதால், சிவலிங்கத்திருமேனி சற்று சிவப்பு நிறமாக இருக்கிறது.

குட்டையான சிறிய பாணம். சுவர் ஓரத்தில் நால்வர் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்னால் இடதுபுறம் அம்பாள் சன்னதி உள்ளது. சிறிய திருமேனி நின்ற திருக்கோலம். கோஷ்ட மூர்த்தங்களாக பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முதலிய திருமேனிகள் உள்ளன.

பிரார்த்தனை

சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

அக்னி பகவான் தன் சாபம் நீங்க இத்தலத்து ஈசனை வணங்கியதால் இறைவன் "அக்னீஸ்வரர்' எனப்படுகிறார். இங்கு மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பாகும். இத்தலத்திற்கு வன்னி, ஊமத்தை, கொன்றை என 3 தலவிருட்சங்கள் உள்ளன. இதில் வன்னிமரம் குபேர செல்வத்தையும், ஊமத்தை மனக்கவலையையும், கொன்றை குடும்ப ஒற்றுமையையும் தருகிறது. பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

நாம் செய்யக்கூடிய பாவங்கள் அனைத்தையும் இத்தல இறைவன் அழித்து விடுவதால், பாவங்களுக்கு தண்டனை அழிக்கும் வேலை, இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. எனவே மாறுபட்ட கோணத்தை விட்டு அனைத்து நவகிரகங்களும் "ப' வடிவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கலப்பை ஏந்திய சனி இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை சனிக்கிழமைகளில் மட்டுமின்றி அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

நவகிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். ஆனால் தேவர் முதல் மனிதர் வரை சனிபகவான் செய்யும் நன்மைகளை கண்டு சந்தோஷப்படாமல், அவர் செய்யும் தீய பலன்களைப்பற்றி மட்டுமே நினைத்து பயப்படுவர். இதனால் மனம் வருந்திய சனி, வசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அக்னி உருவில் தரிசனம் தந்து, சனியை பொங்கு சனியாக மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோருக்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என அருள்புரிந்தார்.

சிவன் அருளின்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வங்களை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார். நளச்சக்கரவர்த்தி தனக்கு சனிதோஷம் ஏற்பட்ட காரணத்தினால் நாடு, நகரம், மனைவி, மக்களை பிரிந்து மிகவும் துன்பத்திற்கு ஆளாகிறான்.

சனி தோஷம் விலகிய பின் இத்தலம் வந்து பொங்கு சனியை வணங்கி நலமடைந்ததாக வரலாறு கூறுகிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. இத்தல முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார். இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர் - திருவாரூர்


மூலவர் : அக்னிபுரீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : கவுரி பார்வதி

தல விருட்சம் : வன்னி

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருஅன்னியூர், திருவன்னியூர்

ஊர் : அன்னியூர்

பாடியவர்கள்: திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

இம்மை அம்மை என இரண்டும் இவை மெய்ம்மை தான் அறியாது விளம்புவர் மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை வம்மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 62வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகம், மாசி மகம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 125 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7.30 - இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

முன்மண்டபத்தில் நால்வர் சன்னதி, வலப்பால் அம்பாள் தரிசனம், சிறிய திருமேனி, நேரே மூலவர், துவராபாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசயாகவுள்ளன. பக்கத்தில் ஆலமர் கடவுள் உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன.

பிரார்த்தனை

திருமணத்தில் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து, திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நைவேத்யம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.

தலபெருமை:

பார்வதி தேவி காத்தயாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். றைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நைவேத்யம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.

கட்டடம் கட்டுதவதில் தாமதம் ஏற்பட்டால், 7 செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால் தடையின்றி கட்டலாம் என்பது ஐதீகம். இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.

தல வரலாறு:

சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை.

யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், இத்தலம் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்க பெற்றான். வன்னி என்றால் அக்னி என்று பொருள்.

அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் அன்னியூர் ஆனது. இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பாசூர் - திருவள்ளூர்


மூலவர் : வாசீஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : தங்காதலி

தல விருட்சம் : மூங்கில்

தீர்த்தம் : சோம, மங்கள தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : -

ஊர் : திருப்பாசூர்

பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் செஞ்சடை வைத்த அழகனார் காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர் பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே. - அப்பர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 16வது தலம்.

திருவிழா:

வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், மார்கழியில் திருவாதிரை, சிவராத்திரி.

தல சிறப்பு:

கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள்.சிவன் இங்கு லிங்க வடிவில், பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 249 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இங்குள்ள தல விநாயகர் வலம்புரி விநாயகர். இங்குள்ள விமானம் கஜபிருஷ்டம்.

பிரார்த்தனை

தடைபட்ட திருமணங்கள் நடக்கவும், தோஷங்கள் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் விநாயகர் சபையில் 11, ஸ்ரீசக்கரத்தில் 5 நெய் தீபங்கள் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

சிவன் சன்னதிக்கு வலப்புறத்தில் அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை சிவன், அம்பாள் திருமணம் செய்த கோலம் என்பார்கள். இருவரது சன்னதிகளுக்கும் இடையே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் அமைந்து சுப்பிரமணியர் என ஒரே வரிசையாக சிவ குடும்ப தெய்வங்கள் இருக்கிறது. இவ்வாறு கோயில்கள் அமைந்திருப்பது அபூர்வம்.

ராஜகோபுரத்திற்கு நேரே நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். மூலவர் விமானம் கஜபிருஷ்ட அமைப்பிலும், அம்பாள் விமானம், கோபுரம் போன்ற அமைப்பிலும் வித்தியாசமாக இருக்கிறது. கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையின் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லாமல் காட்சி தருகிறாள்.

தாழம்பூ பூஜை : தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன (பிரம்மனுக்காக பொய் சொன்னதால்) தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். இந்த நேரத்தில் சிவனை தரிசித்தால் ஆணவம், பொய் சொல்லும் குணங்கள் மறையும் என்கிறார்கள்.

தங்காதலி அம்பாள் : தட்சனின் யாகத்திற்கு சென்றதால் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும்படி சபித்தார் சிவன். சாபத்தால் பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்த அம்பாள், சிவனை வேண்டி தவம் செய்தாள். அவளுக்கு இரங்கிய சிவன், அம்பாளை "தன் காதலியே!' என்று சொல்லி அன்போடு அழைத்து அவளை மன்னித்து அருளினாராம். இதனால் இங்குள்ள அம்பாளை "தங்காதலி அம்பாள்' என்கின்றனர். இவளிடம் வேண்டிக்கொண்டால் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. அம்பாளின் பெயரால் இவ்வூருக்கு "தங்காதலிபுரம்' என்ற பெயரும் உண்டு.

விநாயகர் சபை : விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு. இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, "விநாயகர் சபை' என்கின்றனர். இதில் மூன்று விநாயகர்கள் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறத்தில் இருபுறமும் சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப்புறத்தில் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனியே இருக்கிறார்.

திரிபுராந்தகர்களை அழிக்கச் சென்ற சிவன் விநாயகரை வணங்காமல் செல்லவே அவரது தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார் விநாயகர். அவர் ஒரு சபை அமைத்து சிவனிடம், தன்னை வணங்காமல் சென்றது ஏன்? என கேட்டு விசாரணை செய்ததாகவும் விநாயகர் சபை உண்டானதற்கு மற்றொரு வரலாறு சொல்கின்றனர்.

சொர்ண காளி : இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு அதனை வெற்றி பெற்றது. மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். பின் மன்னன் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றினான்.

நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் பிரகாரத்தில் நான்கு கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பவுர்ணமி தோறும் மாலை வேளைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

தல வரலாறு:

பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு ஒரு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டி பார்க்க உத்தரவிட்டான்.

காவலர்கள் இவ்விடத்தில் வாசி எனும் கருவியால் தோண்டி பார்த்தனர். அப்போது மண்ணிற்கு அடியில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்தபோது சிவன், சுயம்பு லிங்கமாக இருந்தார். பயந்துபோன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான்.

மறுநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான். வாசி எனும் கருவியால் வெட்டுப்பட்ட சிவன் என்பதால் இவர், "வாசீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார்.

புராண வரலாறு : மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலைசெய்யமுடியவில்லை. எனவே, மகாவிஷ்ணு மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை.

அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு - திருவள்ளூர்


மூலவர் : வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : வண்டார்குழலி, மகாகாளி

தல விருட்சம் : பலா

தீர்த்தம் : முத்தி

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : -

ஊர் : திருவாலங்காடு

பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.

திருவிழா:

மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 248 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை திறந்து இருக்கும்.

பொது தகவல்:

முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர்என்றழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை

நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

நேர்த்திக்கடன்:

மார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.

தலபெருமை:

காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.

தல வரலாறு:

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, ""நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்,''என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,""என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர் - திருவள்ளூர்


மூலவர் : படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி

தல விருட்சம் : மகிழம், அத்தி

தீர்த்தம் : பிரம்ம, நந்தி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரணம், காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவொற்றியூர்

ஊர் : திருவொற்றியூர்

பாடியவர்கள்: சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார்

தேவாரப்பதிகம்

மனமென்னும் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றிச் சினமெனும் சரக்கையேற்றிச் செறிகடல் ஓடும்போது மதமெனும் பாறைதாக்கி மறியும்போது அறியவொண்ணா துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 20வது தலம்.

திருவிழா:

சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது. பைரவர், இத்தலத்தில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார்.

இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும்.இக்கோயிலில் இருந்து 15 கி.மீ., தூரத்திலுள்ள மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், 25 கி.மீ., தூரத்திலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். இந்த மூன்று அம்பிகையரையும் பவுர்ணமியன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். அன்று இந்த மூன்று கோயில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, வட்டப்பாறையம்மன் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதிகளில் காட்சி தருகின்றனர். தியாகராஜர் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் வங்காளவிரிகுடா கடற்கரையில் பட்டினத்தார் கோயில் உள்ளது.

பிரார்த்தனை

திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

மாணிக்க தியாகர்: சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர், மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது, சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர், "மாணிக்க தியாகர்' என்றும் அழைக்கப்படுகிறார்.


பெட்டி வடிவ லிங்கம்: வாசுகி என்னும் நாகம், உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய சிவன், புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இவர், "படம்பக்கநாதர்' என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் அணிவித்திருக்கிறார்கள். சுவாமி இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். அர்ச்சகர்கள் சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை. இத்தலத்தில் மூலவர் படம்பக்கநாதர் எப்போதும் கவசத்துடன் மட்டுமே காட்சி தருவார். கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி 3 நாட்கள் மட்டும், இவரது கலசம் களைந்து தைலாபிஷேகம் செய்யப்படும். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். மூன்றாம் நாள் இரவில் மீண்டும், சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் சுயரூப கோலத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.

மூன்று அம்பிகையர் தரிசனம்: அம்பிகை வடிவுடைநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் "இக்ஷீ' பீடமாகும். அம்பாளுக்குக் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கேரள நம்பூதிரிகளே இவளுக்குப் பூஜை செய்கின்றனர். தினமும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு இவள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, "புஷ்பாஞ்சலி சேவை' காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு இந்த அலங்காரம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதை, "சுயம்வர புஷ்பாஞ்சலி' என்கிறார்கள்.

வட்டப்பாறை அம்மன்: பாண்டியன் அரசவையில் அநீதி இழைக்கப்பெற்ற கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன் கிளம்பினாள். அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும், அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தைத் தணிக்க எண்ணிய சிவன், தாயக்கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி, தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள். அப்போது சிவன், அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடி விட்டார். பின்பு, கண்ணகி பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவே இவள், "வட்டப்பாறையம்மன்' என்று பெயர் பெற்றாள். பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில், தனியே சிலை வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக, இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார். பக்தர்கள் இங்கு மஞ்சள், குங்குமம் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.

சுந்தரர் திருமணம்: சென்னை செங்குன்றம் அருகிலுள்ள ஞாயிறு என்னும் ஊரில் பிறந்த சங்கிலியார், சிவ பக்தையாக திகழ்ந்தார். இளவயதிலேயே இத்தலம் வந்து சிவனுக்கு சேவை செய்தார். திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்திருந்த சுந்தரர், இத்தலம் வந்தார். சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் அவர் மீது காதல் கொண்டார். தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார். அவரும் ஒப்புக்கொண்டு சங்கிலியாரிடம், சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். அப்போது சங்கிலியார் சிவனிடம், சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணந்து கொண்டதால், இரண்டாவதாக தான் எப்படி மணக்க முடியும்? எனக்கேட்டாள். சிவன் அவளிடம், சுந்தரரை அவளை விட்டு பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித்தருவதாகக் கூறினார். இதையறிந்த சுந்தரர், தான் சன்னதி முன்பு சங்கிலியாருக்கு சத்தியம் செய்து தருவதாகவும், அப்போது பிரகாரத்திலுள்ள மகிழ மரத்தடியில் எழுந்தருளும்படியும் சிவனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், சிவன் சங்கிலியாரிடம் சுந்தரரை மகிழ மரத்தடியில் சத்தியம் வாங்கும்படி சொல்லிவிட்டார். அதன்படி இங்குள்ள மரத்தடியில் சத்தியம் செய்து சுந்தரர், சங்கிலியாரை மணந்து கொண்டார். மாசி மாதம், மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடக்கிறது. இவ்விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார். மாசியில் நடக்கும் இந்த விழாவை, "மகிழடி சேர்வை' என்கிறார்கள். இவ்விழாவின்போது அறுபத்துமூவரும் எழுந்தருளுவர். இங்குள்ள மகிழ மரத்தடியில், சிவன் பாதம் இருக்கிறது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கிறார்கள். நீண்டநாட்களாக திருமணத்தடை உள்ளவர்களும், திருமணமான தம்பதியரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

கலிய நாயனார் முக்தி: கலியனார் என்னும் சிவபக்தர், இங்கு சுவாமிக்கு தினமும் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் அவர் விளக்கிட்டு சிவனை வழிபட்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் தீபத்திற்கு எண்ணெய் வாங்கக்கூட பணமில்லை. எனவே தனது கழுத்தை அறுத்து, ரத்தத்தில் தீபம் ஏற்ற முயன்றார். அப்போது சிவன் அவருக்குக் காட்சி தந்து, அவரது பக்தியை உலகறியச் செய்தார். கலியனார் நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. இங்கு சிவனுக்கு அதிகளவில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.

பட்டினத்தார் கோயில்: காவிரிப்பூம்பட்டணத்தில் வசித்த பட்டினத்தார் என்னும் வணிகர், முக்தி வேண்டி சிவனை வழிபட்டார். அவருக்குக் காட்சி தந்த சிவன், கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, ""இந்த கரும்புடன் செல்! எவ்விடத்தில் நுனிக்கரும்பு இனிக்கிறதோ, அங்கு முக்தி கிடைக்கும்!'' என்றார். கரும்புடன் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், இங்கு வந்து சிவனை வழிபட்டார். அப்போது நுனிக்கரும்பு இனித்தது. தனது முக்திக்காலம் நெருங்கியதை உணர்ந்த அவர், இங்கிருந்தவர்களை அழைத்து தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் பட்டினத்தாருக்கு கோயில் எழுப்பப்பட்டது. இங்கு பட்டினத்தார் லிங்க வடிவில், காட்சி தருகிறார். இவரை சிவனாகவே கருதி பூஜிக்கின்றனர். பிரதோஷம், சிவராத்திரி பூஜை மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது. ஆடி பவுர்ணமியை ஒட்டி வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.

வள்ளலாருக்கு அருளிய அம்பிகை!: வள்ளலார் வடிவுடையநாயகி மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் இங்கு அம்பிகையை வழிபடுவார். ஒருசமயம் கோயிலில் அர்த்தஜாம பூஜையைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு தாமதமாகச் சென்றார். கதவு அடைத்திருக்கவே, சாப்பிடாமல் பசியுடனே வெளியில் திண்ணையிலேயே படுத்து விட்டார். வள்ளலாருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை, ஒரு இலையில் வெண்பொங்கல் வைத்து அவருக்குக் கொடுத்துச் சென்றாள். இதை வள்ளலார் தனது அருட்பாவில் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பசி நீக்குபவளாக இத்தலத்தில் அம்பிகை அருளுகிறாள்.

கலங்கரை விளக்கம்!: வங்கக்கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசர் கடலில் திசை தெரியாமல் செல்லும் கப்பல்களுக்கு, கரையிலிருக்கும் கலங்கரை விளக்கம் வழி காட்டுவதைப்போல, வாழ்க்கையில் வழி தெரியாமல் செல்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் "ஞான தீபமாக' இத்தலத்து சிவன் அருளுகிறார் என்று பாடியிருக்கிறார். வாழ்வில் பிடிப்பில்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

வரி இல்லாத தலம்!: சூரிய குலத்தைச் சேர்ந்த மாந்தாதா என்னும் மன்னனின் ஆளுகைக்குட்பட்டு, இப்பகுதியை சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம் அம்மன்னன், இப்பகுதிக்கு வரி கேட்டு ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க' என்று திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இறைவனே இவ்வாறு ஓலையில் திருத்தம் செய்ததாக கருதிய மன்னன், இவ்வூருக்கு வரி விதிக்காமல் விலக்கி வைத்தான். இதனாலும் இவ்வூருக்கு "திருவொற்றியூர்' என பெயர் உண்டானதாகச் சொல்வர். இதை சேக்கிழார் பெரியபுராணம்,

""ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும்

நாட்டமலரும் திருநுதலார்,'' என்கிறார்.

சிவன் இக்கோயிலில் கௌலீஸ்வரர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சுயரூபத்துடன், யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர், இடது மேல் கையில் ஓடு வைத்து, கீழ் கையை மார்புக்கு கீழே வைத்தபடி இருக்கிறார். வலது கையில் சின்முத்திரை காட்டுகிறார். "என்னை மனதில் நிறுத்தி வழிபடுபவருக்கு ஞானம் தருவேன்' என்று சொல்லும்படியாக இவர் இந்த கோலத்தில் காட்சி தருகிறார். குழந்தைகள் இவரிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும். படம்பக்கநாதர் சன்னதி முன்மண்டபத்தில் உள்ள விநாயகர்,"குணாலய ஏரம்ப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள நற்குணம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். குணாலயச்செல்வர் என்றும் இவரை அழைக்கிறார்கள்.

பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களின் பெயரில் வரிசையாக சிவலிங்கங்கள் இருக்கிறது. இந்த லிங்கங்கள் அனைத்தும் வடக்கு நோக்கியிருக்கிறது. மாசி மாதம் சிவராத்திரியன்று மாலையில் இந்த லிங்கங்களுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடக்கும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தங்களுக்கான நட்சத்திர நாட்களில், அந்தந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து, நெல் தானியத்தை தானமாகக் கொடுத்து வேண்டிக்கொண்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

திருப்தி தரும் சிவன்: வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு அருகில் "திருப்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார். இவர், ஒரு சதுர வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். வாழ்வில் திருப்தியில்லாதவர்கள் இவரிடம் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.

சுவாமி, கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நந்தி, ஒரு உயரமான பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. பிரகாரத்தில் ஆகாச லிங்க சன்னதி இருக்கிறது.

சிறப்புகள் சில வரிகளில்...

முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம் என்பன இத்தலத்தின் சிறப்பைக் காட்டும் பெயர்கள்.

நந்திதேவருக்காக சிவன், பத்ம தாண்டவம் ஆடிக்காட்டிய தலம் இது.

கார்த்திகை 3ம் திங்களன்று, தியாகராஜர் சன்னதியில் சங்காபிஷேகம் நடக்கும். ஐப்பசி பவுர்ணமியன்று ஆதிபுரீஸ்வரருக்கு மட்டும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள அருள்ஜோதி முருகன், அருணகிரியாரால் பாடப்பெற்றவர் ஆவார். வயிற்று வலி நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சங்கிலியாருடன், சுந்தரருக்கு சன்னதி இருக்கிறது. பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.

புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள குழந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தல வரலாறு:

பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், "ஆதிபுரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் "திருவொற்றியூர்' என்று பெயர் பெற்றது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது.

அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம் - பேரம்பாக்கம் ( திருவள்ளூர் )


மூலவர் : திரிபுராந்தகர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : திரிபுராந்தக நாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை : 500 வருடங்களுக்குள்

புராண பெயர் : கூவரம், திருவிற்கோலம்

ஊர் : கூவம்

பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்

தேவாரப்பதிகம்

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர்பொழில் கூக மேவினான் மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.

திருவிழா:

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆடியில் அம்மனுக்கு 10 நாட்கள் "பூ பாவாடை' திருவிழா, சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுவதாக சொல்கிறார்கள். சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது "அக்னி தலம்' ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இங்குள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாறை குறித்து பாடியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக இருக்கின்றனர்.

ராஜகோபுரத்திற்கு நேரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். அம்பாள், சுவாமிக்கு வலது புறத்தில் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கிறாள். இதனை சுவாமி, அம்பாளை திருமணம் செய்த கோலம் என்கிறார்கள். இவளுக்கு முன்புறத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக இருக்கிறது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்.

பிரார்த்தனை

திரிபுராந்தகரிடம் வேண்டிக்கொண்டால் ஆளுமைத் திறன் வளரும், தீய குணங்கள், ஆணவம், துன்பங்கள் நீங்கும், குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும் என்பது நம்பிக்கை. சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சிறுத்த விநாயகராக' பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர்.

தலபெருமை:

வில் ஏந்திய சிவன்: சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. தலைக்கு மேல் பச்சைக் கற்பூரம் மட்டும் தூவி, பாலபிஷேகம் செய்கின்றனர். இத்தலத்தில் சிவன் தவக்கோலத்தில் இருக்கிறாராம். எனவே, இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் குறிப்பாக தவளைகள் மட்டும் வாழ்வதில்லை. தவளை எழுப்பும் சத்தம் சிவ தவத்திற்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள்.

திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் சுவாமி "திரிபுராந்தகர்' என்றும், அம்பாளை "திரிபுராந்தகி அம்மன்' என்றும் பெயர் பெற்றுள்ளனர். சக்கர அச்சு முறிந்து நின்றபோது, போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன், தேரில் இருந்து இறங்கி கையில் வில் ஏந்திய கோலத்திலேயே இங்கு நின்றார். எனவே, இங்குள்ள சிவனுக்கு "திருவிற்கோலநாதர்' என்றும், தலத்திற்கு "திருவிற்கோலம்' என்றும் பெயர் உள்ளது. சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது மட்டும் சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார். சிவனின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

தர்க்க மாதா: முஞ்சிகேசர், கார்கோடர் என்ற இரு முனிவர்களின் வேண்டுதலுக்காக சிவன், திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ நடனம் ஆடி காளியின் செருக்கை அடக்கினார். இதனால் அவள் மிகுந்த கோபத்துடன் இருந்தாள்.

அவளிடம் சிவன், தான் இத்தலத்தில் ரக்ஷா (காத்தல்) நடனம் ஆடப்போவதாகவும், அப்போது தன்னை தரிசித்து கோபம் அடங்கி மகிழும்படி கூறினார். அதன்படி சிவன் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடியபோது, காளி சுவாமியை தரிசித்து அமைதியடைந்தாள்.

இவள் இக்கோயிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனிச்சன்னதியில் "தர்க்க மாதா' என்ற பெயரில் அருளுகிறாள். சிவனுடன், தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

தல வரலாறு:

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதிலாவது நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி.

இது சிவனுக்கும் பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் (ஏர்க்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின், விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் "கூரம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "கூவம்' என்று மருவியது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுவதாக சொல்கிறார்கள்.

அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம் - ஊத்துக்கோட்டை , திருவள்ளூர்


மூலவர் : சிவாநந்தீஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : ஆனந்தவல்லி

தல விருட்சம் : கள்ளி

தீர்த்தம் : நந்தி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரணாகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கள்ளில்

ஊர் : திருக்கண்டலம்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் ஓடுஅலாற் கலன்இல்லான் உறைபதியால் காடுஅலாற் கருதாத கள்ளின் மேயான் பாடெலாம் பெரியார்கள் பரசுவாரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 18வது தலம்.

திருவிழா:

திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி.

தல சிறப்பு:

இக்கோயிலில் சிவன், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 251 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

இத்தலத்தின் தல விநாயகர் திருநாமம் சுந்தர விநாயகர்.

மூலவரின் மேல் உள்ள விமானம்: கஜபிருஷ்டம்.

பிரார்த்தனை

பிரிந்திருக்கும் தம்பதியர்கள் தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். திருமணத்தடைகள் நீங்கும், வறுமை நீங்கி செல்வசெழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாள் மற்றும் தெட்சிணாமூர்த்திக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர்.

தலபெருமை:

சக்தி தெட்சிணாமூர்த்தி: பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒருசமயம் சிவனைப் பார்க்க அவர் கைலாயம் சென்றார். அங்கு சிவன், பார்வதியுடன் அமர்ந்திருந்தார். அருகில் சென்ற பிருகு, சிவனை மட்டும் வணங்கி அவரை சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதி தேவி மனதில் கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என நினைத்த அவள் சிவனை ஒட்டியபடி அமர்ந்து கொண்டாள். பிருகுவோ வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்தார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன், தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. "என்னதான் இருந்தாலும் சிவன்தானே பெரியவர்!' என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.

பின்னர் பிருகு பூலோகத்தில் சிவதல யாத்திரை வந்தபோது, கள்ளில் (ஒரு வகையான மரம்) வனமாக இருந்த இங்கு அகத்தியர் பூஜித்த சுவாமியை கள்ளில் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது சிவன் அவர் முன்பு தோன்றி, "சிவமும், சக்தியும் ஒன்றுதான். சக்தி இல்லாமல் சிவமும், சிவம் இல்லாமல் சக்தியும் இருக்க முடியாது' என்று உபதேசம் செய்து, அம்பாளை தன் மடியில் அமர வைத்து சக்தியுடன் இணைந்த தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்தார். பிருகு உண்மையை உணர்ந்தார்.

ஆனந்தவல்லி அம்பாள்: சக்தியின் பெருமையை உணர்ந்த பிருகு முனிவர், அம்பாளிடம் தன் செயலை மன்னிக்கும்படி வேண்டினார். இதனால் அம்பாள் மனதில் ஆனந்தம் கொண்டதோடு தன்னையும், சிவனையும் வழிபட்டு ஆனந்தமாக இருக்கும்படி அருளினாளாம். எனவே, அம்பாள் "ஆனந்தவல்லி' என்ற பெயர் பெற்றாள். இவள் சுவாமிக்கு இடது புறத்தில் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது இடக்கை பாதத்தை நோக்கி காட்டியபடியும், வலது கை அருள் வழங்கும் கோலத்திலும் இருக்கிறது. இதனை, தன் பாதத்தை சரணடைபவர்களுக்கு என்றும் குறைவிலாத ஆனந்தத்தையும், அருளையும் அம்பாள் தருவாள் என்பதை உணர்த்தும் கோலம் என்கிறார்கள்.

சிறப்பம்சம்: திருவெண்பாக்கம் (பூண்டி) தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தர் சிவனை வணங்கி விட்டு தன் யாத்திரையை தொடர்ந்தார். அவர் குசஸ்தலை ஆற்றின் கரையில் தான் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்கள், விபூதி பிரசாதம் ஆகியவற்றை வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். குளித்துவிட்டு திரும்பி வந்தபோது அப்பொருட்களைக் காணவில்லை. அதனைத் தேடிய சம்பந்தர் இங்கு வந்தபோது, சுயம்பு லிங்கத்திற்கு அருகே பூஜை பொருட்கள் இருந்ததைக் கண்டார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரவேண்டும் என்பதற்காகவே பூஜைப்பொருட்களை மறையச்செய்து அருள் செய்ததாக அசரீரியாக ஒலித்தார் சிவன். பின் சம்பந்தர் சுவாமியை வணங்கி பதிகம் பாடினார்.

பிரம்ம முருகன்: இக்கோயில் குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சுவாமி, அம்பாள் சன்னதியில் எப்போதும் அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. பிருகு முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்த சிவன் என்பதால் சுவாமிக்கு "திருக்கள்ளீஸ்வரர்' என்ற பெயரும், தலத்திற்கு "திருக்கள்ளில்' என்ற பெயரும் இருக்கிறது. அகத்தியருக்கு காட்சி தந்தது போலவே சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் தனிச்சன்னதியில் அமைந்து சோமாஸ்கந்த வடிவமாக இக்கோயில் இருக்கிறது.

இவர் வலது கையில் ஜெபமாலை, இடக்கையில் தீர்த்த கலசத்துடன் பிரம்மாவின் அம்சத்துடன் தனியே நின்ற கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. இங்குள்ள நந்தி மிகவும் விசேஷமானது.

இவரது பெயரிலேயே சிவனை "சிவா நந்தீஸ்வரர்' என்றும், தீர்த்தத்தை "நந்தி தீர்த்தம்' என்றும் அழைக்கின்றனர். பிரகாரத்தில் சுந்தர விநாயகர், காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நெல்லி மரத்தின் கீழே நாகர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரும் இருக்கின்றனர். பொருள்களை திருட்டு கொடுத்தவர்கள் பைரவருக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பொருள் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பொருள்கள் கிடைத்துவிட்டால் இவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

தல வரலாறு:

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, வடக்கு உயர்ந்து தெற்கு பகுதி தாழ்வாகியது. இதனால் பூமி சமநிலை இழக்கவே சிவன், அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். சிவனது திருமணத்தை தானும் காண வேண்டுமென விரும்பிய அகத்தியர் அவரிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்காட்சியை தரிசிக்கும்படி வரம் பெற்றார். தென்பகுதியை நோக்கி வந்த அகத்தியர், திருப்பாலைவனம் தலத்தை வணங்கிவிட்டு அங்கு தங்கியிருந்தார்.

அன்று இரவு அவரது கனவில் சிவன் தோன்றி, இத்தலத்தையும், தீர்த்தத்தையும் குறிப்பால் உணர்த்தி, சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். பின் அகத்தியர் இத்தலம் வந்து சுவாமியை வழிபட்டார். சிவன், அம்பாளுடன் திருமணக்காட்சி காட்டியருளியதோடு, முருகனோடு சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். அவரது தரிசனத்தால் அகத்தியர் சிவ ஆனந்தம் அடைந்தார்.

தனக்கு அருள்புரிந்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருளவேண்டும் என வேண்டினார் சிவனிடம் அகத்தியர் வேண்டினார். சிவனும் இங்கு சுயம்புவாக எழுந்தருளி "சிவாநந்தீஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவன், "சக்தி தெட்சிணாமூர்த்தி'யாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி - திருவள்ளூர்


மூலவர் : ஊன்றீஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : மின்னொளி அம்பாள்

தல விருட்சம் : இலந்தை

தீர்த்தம் : குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : பழம்பதி, திருவெண்பாக்கம்

ஊர் : பூண்டி

பாடியவர்கள்: சுந்தரர்

தேவாரப்பதிகம்

பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே. - சுந்தரர்

தேவாரப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் 17 வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வித்தியாசமாக இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்தே இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 250 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இங்குள்ள விநாயகர் வலம்புரி விநாயகர். இக்கோயில் முதலில் பூண்டிக்கு அருகே உள்ள திருவளம்புதூர் ஏரியின் அருகே இருந்தது. பிற்காலத்தில் இக்கோயில் பூண்டி பகுதியின் மத்தியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


இங்கு பிரதான வாசலுக்கு நேரே மின்னொளி அம்பாள் சன்னதி இருக்கிறது. ஒரே இடத்தில் நின்று சுவாமி, அம்பாள் இருவரையும் வழிபடும்படி அமைந்துள்ளது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடனும், நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். பைரவர் எட்டு கைகளுடன் கால பைரவராக தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.


இவருக்கு அஷ்டமி நேரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே பாடல் பெற்ற தலங்களான கூவம், திருப்பாசூர் ஆகிய தலங்கள் அமைந்திருக்கிறது.


பிரார்த்தனை

திருமணத்தடை உள்ளவர்கள், கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்கள் சுவாமி, அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபடலாம்.

தலபெருமை:

மின்னொளி அம்பாள்: சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு தடுமாறியபோது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். ஆனால், சிவன் தடுத்து விட்டாராம். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின் அம்பாள் சுந்தரரிடம், "மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்பவே நிகழ்கிறது. தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினைப்பயனே. எனவே, கலங்காது செல்லுங்கள்.

தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை கிடைக்கும்' என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்கள் பேசி சுந்தரரை சாந்தப்படுத்தினாள். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாளாம். இதனால் அம்பாள் "மின்னொளி அம்பாள்' என்றும், "கனிவாய்மொழிநாயகி' என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பாள் மிகவும் வரப்பிரசாதியானவள்.

நம்பிக்கை கோயில்: வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள், மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள், குடும்பம், தொழிலில் விருத்தி இல்லாதவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதியும், வாழ்க்கையின் மீது விருப்பமும் வரும் என்கிறார்கள். வாழ்க்கையே இருண்டுவிட்டதாக கவலையில் இருப்பவர்களுக்கு அம்பாள் ஒளி கொடுத்து வாழ வைக்கிறாள் என்பது நம்பிக்கை.

பொதுவாக தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை வாழவைக்கும் தலமாக இக்கோயில் திகழ்கிறது. எனவே, இக்கோயிலை "நம்பிக்கை கோயில்' என்றும் சொல்கின்றனர்.

தல வரலாறு:

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை.

இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை.

பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து "நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார். 

தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை.

கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது. பின் சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்து இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வித்தியாசமாக இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்தே இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த கோலத்தில் இருக்கும் படியாக இவரது சிலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.