Tuesday, 22 August 2017

எனாமல் எனும் அரண்!


ற்களில் உள்ள எனாமல் என்பது பல்லின் வெளிப்புறம் அமைந்திருக்கும் உறை போன்றது. நம் உடலிலேயே மிகவும் கடினமான திசு இந்த எனாமல். கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனது. இந்தத் தாதுக்கள் குறையும்போது, எனாமல் தேய ஆரம்பிக்கிறது. அதுதான் பற்சிதைவுக்குக் காரணமாகிறது. 

எனாமல் தேயக் காரணங்கள்

சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்டால் எனாமல் சீக்கிரமே தேய்ந்துபோகும். நகம் கடிக்கும் பழக்கம், அடிக்கடி கோபத்திலோ மேனரிசமாகவோ பற்களைக் கடிப்பது மற்றும் புரூக்ஸிஸம் (Bruxism) என்று சொல்லப்படும் தூக்கத்தில் பற்களை அரைக்கும் பழக்கம் போன்றவையும் எனாமலைத் தேய வைக்கும்.
மிகுந்த அழுத்தத்துடனும் வேகத்துடனும் பல் துலக்குதல், மூன்று நிமிடங்களுக்கு மேல் பல் துலக்குதல், கடினமான இழைகள் (Hard bristles) உள்ள பிரஷ்களைப் பயன்படுத்துவது, பல் துலக்க கரி மற்றும் செங்கல் பொடிகளைப் பயன்படுத்துவது போன்றவையும் எனாமல் தேயக் காரணங்கள்.

டூத் பிரஷ்ஷில் அதிக அளவு பேஸ்ட் வைத்துத் தேய்ப்பது, புகையிலை மெல்லும் பழக்கம், அமிலம் நிறைந்த உணவுகளை உண்பது, கார்பனேட்டட் குளிர் பானங்கள், கோலா, ஆல்கஹால் மற்றும் ஒயின் குடிப்பது போன்றவையும் எனாமலைத் தேயச் செய்யும். நெஞ்செரிச்சல் பிரச்னையுள்ளவர்களுக்கு, வயிற்றில் தோன்றும் அமிலம் வாயைத் தாக்கி எனாமலைத் தேய்க்கும். பற்களைச் செயற்கையாகப் பளீரிட வைக்கும் பிளீச்சிங்குகள், ஹைட்ரஜன் பெராக்ஸைடு நிறைந்த பிளீச்சிங் போன்றவையும் எனாமலைத் தேயவைத்து, ஈறுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

எப்படித் தடுப்பது?

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் எனாமல் தேயாமல் பாதுகாக்கலாம். ஒவ்வொரு முறை உணவு உண்ட பிறகும் வாயைக் கொப்புளிக்க வேண்டும். காலை, இரவு என இருவேளைகளும் பல் துலக்க வேண்டும். ஃபுளோரைடு உள்ள டூத் பேஸ்ட், மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும். பற்களை வட்ட வடிவில் தேய்க்க வேண்டும்.

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி அளவும் சிறுவர்களுக்குப் பொட்டுக்கடலை அளவும் பெரியவர்களுக்குப் பட்டாணி அளவுமே பற்பசை போதுமானது.

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை உண்ணவேண்டும். வாயில் ஒட்டக்கூடிய சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் மற்றும் மைதா பண்டங்களைத் தவிர்க்கவும். சுகர்ஃப்ரீ சூயிங்கம்களை 20 நிமிடங்களுக்கு மிகாமல் மெல்லலாம்.

சர்க்கரை நோய், நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் அவ்வப்போது பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

No comments:

Post a Comment