Friday, 18 August 2017

சைவ சித்தாந்தம் - சங்கற்ப நிராகரணம் பகுதி-1.2

பரிசுஇயல்பு,வகை. ஏயும்பொருந்தும். முன்னிய காலைநேரும்போது, தூசுஉடை, துணி, தேசுஒளி

ஐக்கியவாதி சங்கற்ப நிராகரணம்
முத்தி என்பதை எவனோ சுத்த
அறிவு எனில் பாசம் செறியா மாயை
உருஇரு வினையால் வரும் இரு வினையும்
உருவால் அன்றி மருவாது இவற்றின்
மூந்தியது ஏதோ வந்து அணைவதற்கு ஓர்

ஏது வேண்டும் தான் இயல்பு என்னில்
வீடு உற்றவரினும் கூடக் கூடும்
ஈங்குஇவை நிற்க நீங்காக் கருவிகள்
கொண்டு அறிவு அறியக் கண்டதும் அன்றி
மருவிய உருவு துயில் பெறும் காலைச்
சிறுபொறித் தறுகண் கறைஅணல் கடிகைத்
துத்திக் கடுவுள் துணை எயிற்று உரக்க
கொத்து அயல் கிடப்பினும் குவைதரு நவமணி
ஒருபால் துதையினும் பெருகு ஆர்வத்தினோடு
அச்சமும் அணுகாக் கொச்சைமை என்னோ
கருவி யாவும் பிரிவுறு நிலையேல்
பொறிபுலன் ஆதி குறைவற நிறைந்து
காட்சியது அளிக்கும் மூட்சியின் முன்னாக்
கொடுத்து ஓர் ஆழி விடுத்தவன் நாடிக்
கொள்வோர்க் காணாது உள்கி மீண்டுழித்


தந்தவன் கண்டாங்கு அந்தமில் அதனைத்
தருக வென்னும் பெருமதி பிறங்கும் அது
அறிவிலாமை என்றனை அது மலமாகத்
குறிகொளாளர் அறைகுவர் அன்றே
அறிவிற்கு அறிவு செறியவேண் டின்றே

உண்மையில் இருமையும் ஒளியே எனில் ஒரு
தன்மை யாகமுன் சாற்றினர் இலரே
முன்பு நன்றுடன் ஒன்றிய காலை
இன்பம் எய்துதற்கு இலது உயிர் ஆதலின்
நியலை பொருத மாயா வாதி
ஆயினை அமையும் அருள்நிலை கேண்மதி

முத்தி நிலை என்பது என்ன? அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். முதலில் நீ கூறிய கட்டு நிலை பற்றிய விளக்கம் பொருத்த மானதுதானா என்பதைக் காணலாம். உயிர் அறிவாக இருக்கும் என்றால் அதனை மாயையும் கன்மமும் இடையில் வந்து பற்றுவானேன்? மாயையின் விளைவாகிய உடல் வினையால் வரும் என்றனை. வடிவம் இல்லாத ஒரு பொருள் இருவினையும் ஆற்றுதல் இயலாது. இவ்வாறாயின் மாயை முந்தியதா? கன்மம் முந்தியதா? இந்தக் கேள்விகளக்கு விடை கூறுதல் வேண்டும். இரண்டில் எது முந்தி வந்தது என்று சொன்னாலும் அது ஏன் வந்து பொருந்திற்று என்பதற்குக் காரணம் கூறியாக வேண்டும். கன்மமும் மாயையும் உயிரைப் பொருந்துவது இயல்பு என்று கூறினால் வீடுபேறு அடைந்தவர்களையும் அத்தளைகள் பொருந்தும் எனல் வேண்டும்.

உயிர் அறிவுடைய பொருள் என்றாய் ஆயினும் கருவிகளோடு கூடிய போதே உயிரால் அறிய முடிகிறது என்பதையும், கருவிகளிலிருந்து நீங்கிய போது உயிர் அறிவற்று இருப்பதையும் கண் கூடாகக் காண்கிறோம். ஒருவன் தூங்கும்போது, உடம்பில் சிறு புள்ளிகளும், கருத்த கழுத்தும், படமும், உள் துளை உள்ள பற்களும், நஞ்சும் கொண்ட பாம்புக் கூட்டம் பக்கத்திலே கிடந்தாலும் மற்றொரு புறம் நவமணிகள் குவிந்து கிடந்தாலும் பாம்புக் கூட்டத்தரல் அச்சமும், குவிந்த நவமணிகளில் ஆர்வமும் இல்லாது அவன் உறங்குகிறானே, அது ஏன்? கருவிகள் நீங்கிய நிலையில் அவன் அவ்வாறு அறிவற்றுக் கிடக்கிறான்.

ஒருவன் நனவு நிலையிலேயே மற்றொருவனிடம் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து அதனை விற்று வா என்று வேண்டுகிறான். விற்கச் சென்றவன் பல நாள் பலரையும் நாடி முயன்றும் வாங்குவார் இல்லாமையால் மோதிரத்தை உடையவனிடமே மீண்டும் கொடுத்து விடுகிறான். சில நாள் கழிந்த பிறகு மோதிரத்தை மீண்டும் பெற்றுக் கொண்டதை மறந்து நான் கொடுத்த மோதிரத்தை மீண்டும் பெற்றுக் கொண்டதை மறந்து நான் கொடுத்த மோதிரத்தை தா என்று கேட்கிறான். விழித்திருக்கும் போது கொடுத்து விழித்திருக்கும் போதே மீளவும் பெற்றுக் கொண்டது எவ்வாறு அவனுக்கு மறந்து போயிற்று? அதுவும் மாயையில் விளைந்த அறியாமை என்று சொன்னால் அது பொருத்தமற்றது இந்த மறதிக்குக் காரணமாக உயிரைப் பற்றி நிற்கிற மலம் என்ற ஒன்று உண்டு என்பதனைப் பெரியோர் கூறுகிறார்கள்.

இறைவனும் ஞான வடிவினன். உயிரும் ஞானமே வடிவானது என்றால் ஒன்றோடு ஒன்று செறிதல் வேண்டும் என்ற தேவை இல்லை. உயிரும் இறைவனும் ஒரு தன்மையவாய் இருக்கும் என்பதை மிகச்சிலரே ஏற்றுக்கொள்வர். மேலும் நீ கூறிய மாயை கன்மம் ஆகிய இரு தளைகளும் உயிரை வந்து பற்றுவதற்கு. முன் உயிர் முத்தியின்பத்தைத் துய்த்துக் கொண்டிருந்தது என்பதும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நீயும் மாயாவாதியோடு ஒரு வனாகின்றாய். முத்தியின்பத்தைப் பற்றி நான் கூறுகிறேன் கேட்பாயாக.

இந்த ஐக்கியவாதியின் கொள்கையை மறுக்கின்ற பாடாணவாதியின் மறுப்பில் தொடக்கத்தில் முத்திநிலை பற்றி இப்போது பேச வேண்டாம் என்று குறிப்பிட்டது நினைவு கூர்தற்குரியது. ஏனெனில் ஐக்கியவாதியின் முத்திநிலைக் கொள்கை இதை அடுத்துவரும் பாடாண வாதியின் சங்கற்பத்தில் கூறப்படுகிறது அதற்காகவே ஆசிரியர் அருள்நிலை கேண்மதி அதாவது முத்தி நிலையைப்பற்றி நான் கூறுகிறேன் கேட்பாயாக என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்தார்.

கறையணல்கரிய கழுத்து. துத்திபடம், கடுநஞ்சு, உரகம்பாம்பு, கொச்சைமை அறியாமை. அலைபொரு மாயாவாதிமறுக்கப்பட்ட மாயாவாதி

பாடாணவாதி சங்கற்பம்
மூல மலத்தால் சாலும் மாயை
கருமத்து அளவில் தரும் உரு இறைவன்
செறிந்துஇரு பயனும் நுகர்ந்திடும் உயிர்கள்
இருள்உரு மலத்தில் பருவரல் படுதலின்
இடைஇரு நோக்கும் தடைபட் டோரில்

துயர்உறும் அதனால் செயிர்உறு துன்பம்
கொத்தை மாந்தர் உய்த்துஉறும் துயில் போல்
காட்சி என்னக் காணாத் துயர
காட்சியை முத்தி எனவகுத் தனரே
தோற்றமில் காலத்திலேயே உயிரைப் பற்றிக் கொண்டிருக்கும் ஆணவ மலம், மூலமலம் எனப்படும். இதனால் உண்டாகிய துன்பத்தைப் போக்குவதற்கு இறைவன் மாயையை உயிருடன் கூட்டுவான். உயிரின் வினைக்கேற்ற உடலையும் இறைவன் தருவான். அந்த உடலில் பொருந்தி உயிர் இருவினைப் பயன்களையும் நுகரும். அப்போது ஆணவ மலச் சேர்க்கையால் உயிர் துன்புறும். காணும் தன்மையுடைய கண்களைப் படலம் மறைத்தாற் போல ஆணவம் உயிரின் அறிவை மறைக்கும். இதனால் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் துன்புறும் இது கட்டு நிலை ஆகும். உறக்கத்தில் அழுந்திக் கிடக்கிற போது உயிர்கள் துன்பம் அற்று இருப்பது போல, முத்தி நிலையிலும் உயிர் எதனையும் அறியாது இன்பத் துன்பங்களும் இல்லாது இருக்கும் இத்தகைய உயர் நிலையையே முத்தி நிலை என்று முன்னோர் வகுத்தனர்.

மூல மலம்ஆணவ மலம். உருஉடல் பருவரால்துன்பம் கொத்தைகுருடு, இங்கு அறியாமை. பாடாணம்கல். பாடாணவாதிமுத்தி நிலையில் உயிர் இன்பமோ துன்பமோ எதுவும் இல்லாமல் கல்லைப் போலக் கிடக்கும் என்ற கொள்கை உடையவன்.

பாடாணவாதி சங்கற்ப நிராகரணம்
வகுத்துஉரை பெருகத் தொகுத்திடும் முத்தி
நன்று நன்று இருள் ஒன்றிய மலத்து ஆம்
உளத்திற்கு உறுபொறி செறிபுலன் நுகர்தல்
விளக்கின் திகழும் மேன்மையது அன்றே
கருவிகள் அகல்வுழி மருவிய துயரமும்

நன்றுஎனல் ஆகும் துன்றிய படலத்து
இடைதடைப் பட்ட சுடர்வழி மாந்தர்
படலம் நீங்குதல் கடன் ஆதலினே
காட்சி என்னக் காணாத் துயர
காட்சியை முத்தி என வகுத்து உரைக்கில்

கரணா பாவம் மரணம் கருமரம்
ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவர் அன்றே
இனைய கதிக்குஓர் முனைவரும் வேண்டா
தனிதரு துயரம் எனும் இது திடனே
பாடாணத்தில் கூடா முத்தி

பல சொற்களால் வகுத்தும் தொகுத்தும் நீ கூறிய முத்திநிலை மிக நன்று! ஆணவத்தோடு கூடிய உயிர்களுக்குக் கருவி கரணங்களின் வாயிலாக வரும் நுகர்ச்சி விளக்கொளியில் காணும் காட்சியினைப் போன்றது. இது சகலநிலை எனப்படுவது, உயிர் கருவி கரணங்களை விட்டு அகலுமானால் அப்பொழுது அது மீண்டும் கேவல நிலைக்குத் திரும்பி ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும். நீ கூறுகிற வீடுபேற்று நிலையிலும் இதுவே பேசப்படுகிறது. ஏனெனில் அதிலும் உயிர் கல் போல அறிவற்றுக் கிடக்கிறது என்றாய். அது மட்டிலுமல்லாமல் இறந்தவர்களும், நிறைவடையாத கருவும், மரங்களும் கூட உன் கருத்துப்படி முத்தி பெற்றவனாக வேண்டும். இத்தகைய முத்தியை உணர்த்துவதற்கு ஓர் ஆசிரியனும் தேவையில்லை. உயிர் தனித்துக் கிடக்கும் என்ற உனது முத்தி துயரமே யன்றி வீடுபேறு.

இப் பகுதியின் இரண்டாவது வரியில் நன்று நன்று என்று கூறியது இகழ்ச்சுக்குறிப்புடன் கூறப்பட்டதாகும். நீ கூறியது நன்றல்ல என்பது கருத்து.

கரணாபாவம் கரணம், அபாவம் கரணங்களிலிருந்து நீங்கி நிற்றல் முனைவர் ஞான ஆசிரியர். பாடாணம். கல்

பேதவாதி சங்கற்பம்
ஈசனது அருளால் பாசத் தொகுதி
செறிவுறு செம்பில் கறையுறு களிம்பு
குளிகை தாக்க ஒளிபெற்று ஆங்கு
நித்த சுத்த முத்தர் ஆக
வைத்தனர் உலகில் மறைவல் லோரே

உயிர்களைப் பற்றியுள்ள பாசங்களின் தொகுதி இறைவன் அருளால் நீங்கும் அது எவ்வாறு எனில் செம்பில் கலந்துள்ள மாசு ஆகிய களிம்பு இரச குளிகையால் நீக்கப்பட்ட போது, செம்பு பொன் ஆனாற் போல. இவ்வாறு உயிர்களைப் பற்றிய தளைகள் யாவும் நீங்கிய உடன் இவ்வுயிர் என்றென்றும் தூய்மை உடையதாகி வீடுபேறு அடைந்து நிலைபெறும் என்று மறை வல்லவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment