சிவராத்திரி சிறப்பு தரிசனம்!
ஒரே தலத்தில்... 108 சிவலிங்க தரிசனம்!
குடமுருட்டி ஆற்றுக்கு அருகில், மிகுந்த கவலையுடன் அமர்ந்திருந்தார் ஸ்ரீராமர். 'ராவணனுடன் போரிட்டதில் எத்தனையோ பேர் இறந்தனர். அவர்களைக் கொன்ற தோஷத்தை (ராமேஸ்வரத்தில்) நிவர்த்தி செய்தபோதும், கர- தூஷன் எனும் அரக்கர்களைக் கொன்ற பாவம் மட்டும் நம்மை விடாமல் துரத்தி வருகிறதே...’ என வருந்தினார். கூடவே, 'காசியில் இருந்து சிவலிங்கம் எடுத்து வரும்படி அனுமனை அனுப்பினோம்; போனவனை இன்னும் காணோமே!’ என்ற கவலையும் அவருக்கு இருந்தது.
அனுமனின் மன ஓட்டத்தை அறிந்த ஸ்ரீராமர், அவர் கொண்டு வந்த லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார். 107-வது லிங்கம், ஸ்ரீராமலிங்க ஸ்வாமி என்றும், ஸ்ரீஅனுமன் கொண்டு வந்த லிங்கம் 108-வது மூர்த்தமாக, ஸ்ரீஅனுமந்த லிங்கம் என்றும் அழைக்கப்பட்டது. ஆக மொத்தம், 108 சிவலிங்கங்களும் அருள்பாலிக்கும் ஒப்பற்ற தலமாகத் திகழ்கிறது பாபநாசம் ஸ்ரீராமலிங்க ஸ்வாமி திருக்கோயில். தஞ்சை மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயிலை, 108 சிவாலயம் என்றே அழைக்கின்றனர், பக்தர்கள்.
ஸ்ரீஅனுமன், காசியில் இருந்து சிவலிங்கம் எடுத்து வந்தார், அல்லவா? அதையடுத்து வசிஷ்ட முனிவர், 'என்ன... இங்கே ஒரு சிவலிங்கத்தைக் காணோமே’ எனத் தேடினார். சூரிய பகவானிடம் இதுகுறித்துக் கேட்க, 'எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார் சூரிய பகவான். கோபம் கொண்ட வசிஷ்டர், சூரியனாருக்குச் சாபம் கொடுத்தார். அந்தச் சாபத்தில் இருந்து விடுபட... தஞ்சை- திருக்கண்டியூர் தலத்தில் உள்ள ஸ்ரீஹரசாப விமோசன பெருமாளிடம் முறையிட... அங்கே அவரின் அரை சாபம், அதாவது பாதி சாபம் விலகியது. பிறகு, திருவையாறு ஸ்ரீஐயாறப்பரின் வழிகாட்டுதலின்படி, பாபநாசம் தலத்துக்கு வந்து, தீர்த்தத்தில் நீராடி, சிவனாரை வழிபட... முழுச் சாபமும் நீங்கப் பெற்றார்.
அவர் மட்டுமா? சிவலிங்கம் காணாமல் போன கோபத்துடன் இருந்த வசிஷ்டரிடம் ஒரு காகம் (ஸ்ரீசனீஸ்வரர்) வந்து, விவரத்தைச் சொல்லிற்று. 'இதனை முன்னமே தெரிந்திருந்தும், ஏன் சொல்லவில்லை?’ என ஆத்திரத்துடன் காகத்துக்கும் சாபம் கொடுத்தார் வசிஷ்டர். கூடவே, 'இனி நீ காசியில் இருக்கக்கூடாது’ என உத்தரவிட்டார். அதையடுத்து, ஸ்ரீசனீஸ்வரரும் திருக்கண்டியூர் பெருமாளை வணங்கினார்; அரை சாபம் நீங்கப் பெற்றார்; பின்பு, திருவையாறு ஸ்ரீஐயாறப்பனின் பேரருளால் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீராமலிங்க ஸ்வாமியை வழிபட்டு, முழுச் சாபமும் நீங்கப் பெற்றார்.
இங்கே ஸ்ரீசூரியனார், ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோர் அருகருகே இருந்தபடி அருள் பாலிக்கின்றனர். அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து பரிகாரங்கள் செய்தால், பலன்கள் நிச்சயம் என்பது ஐதீகம்.
தஞ்சை- கும்பகோணம் சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பாபநாசம். இங்கே மெயின்ரோட்டுக்கு அருகிலேயே அமைந்துள்ளது 108 சிவாலயம். காசி மற்றும் ராமேஸ்வரம் தலங்களுக்கு இணையான அற்புதத் தலம் இது. அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபர்வதவர்த்தினி.
காசி, ராமேஸ்வரம் தலங்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு இந்த ஆலயத்துக்கு உண்டு. அதாவது, 108 சிவலிங்க மூர்த்தங்கள் கொண்ட இந்தக் கோயிலுக்கு வந்து வணங்கினால், 108 சிவன் கோயில்களுக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்று ஸ்ரீராமரே அருளியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இந்தக் கோயிலில், மகா சிவராத்திரி திருநாள், வெகு விமரிசையாக நடந்தேறுகிறது. இந்த நாளில் தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், மாயவரம், தாராசுரம், ஒரத்தநாடு, திருவையாறு போன்ற சுற்று வட்டார ஊர்களில் இருந்தெல் லாம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள்.
''மகாசிவராத்திரி அன்னிக்கு, 108 சிவலிங்கத்துக்கும் அபிஷேகம் பண்றது ரொம்பப் புண்ணியம். வெளிநாடுகளிலிருந்தெல்லாம் அன்பர்கள் முன்கூட்டியே அபிஷேகத்துக்கு பதிவு பண்ணிடுவாங்க. அபிஷேகம் பண்ணணும்னு விரும்பறவங்க பெயர், ராசி, நட்சத்திரத்தோட தெளிவா முகவரி எழுதி, நூறு ரூபாய் மணியார்டர் அல்லது டி.டி. அனுப்பினா, அவங்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கிறதை கடமை யாவே செய்துக்கிட்டு வரோம்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் ஒருவர்.
மகாசிவராத்திரி விழாவையட்டி, முதல் நாள் மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை; பிறகு இரவு 10 மணி; அடுத்து, அதிகாலை 3 மணி மற்றும் 5 மணி ஆகிய நேரங்களில் 108 சிவலிங்கங்களுக்கும் அபிஷேகம், ஆராதனை எனச் சிறப்புற கொண்டாடப்படுகிறது மகா சிவராத்திரிப் பெருவிழா! மேலும், அன்றைய தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவாலயத்தை 108 முறை வலம் வந்து, ஸ்வாமியை வணங்குவார்கள். விடிய விடிய... கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்கின்றனர் பாபநாசம் மக்கள்.
ஸ்ரீராமர், ஸ்ரீசூரியன் மற்றும் ஸ்ரீசனீஸ்வரரின் சாபங்கள் நீங்கப் பெற்ற தலம் ஆதலால், இதை சாப- பாப தோஷ நிவர்த்தி ஸ்தலம் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.
108 சிவாலயத்துக்கு வந்து, 108 முறை வலம் வந்து, 108 சிவலிங்க மூர்த்தங்களையும் தரிசியுங்கள்; 108 சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசித்த புண்ணியத்தைப் பெற்று, பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று, உங்களைப் பரம சந்தோஷத்துடன் வாழ வைப்பான், பரமேஸ்வரன்.
ஹரஹர ஹரஹர மகாதேவா!
No comments:
Post a Comment