Friday 23 March 2018

அருள்மிகு செளந்தர நாயகி உடனுறை கச்சாலீஸ்வரர்(கச்சபேஸ்வரர்) திருக்கோயில், பாரிமுனை- சென்னை.

Image result for கச்சாலீஸ்வரர்

Ⓜ அமைவிடம்:Ⓜ

சென்னை பாரிமுனை, அரண்மனைக்காரத் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிடம் நடந்தால் கோயிலை அடையலாம்.

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

திருத்தலங்கள் என்றாலே தல புராணங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு புராணப் பின்னணி அல்லாத கோயில்களும் உண்டு. இக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள பல தெய்வச் சன்னதிகள் காரணமாக பல விதமான நற்பயன்கள் ஏற்படுவது கண்கூடு.

அப்படிப்பட்ட, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசர் அல்லாத சாமானியரால் கட்டப்பட்ட திருக்கோயில் சென்னை பாரீசில் உள்ள அரண்மனைக்காரத் தெருவில் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு செளந்தர நாயகி உடனுறை கச்சாலீஸ்வரர் திருக்கோயில்.

Ⓜ அருள்மிகு கச்சபேசர் எனப் பெயர் வரக் காரணம் :Ⓜ 

திருமால் தசாவதாரத்தில் ஆமைவடிவம்  கொண்டு இத்தலத்து ஈசனை-கச்சபேசனை-வணங்கினார்.  அதாவது கச்சபேசர் = கச்சப் + ஈசர் எனப்  பிரிக்கலாம். இதன்படி கச்சபம் என்றால் ஆமையைக் குறிக்கும்.  ஆமைக்கு அருள் புரிந்த ஈசனே  கச்சபேஸ்வரர் ஆனார். அதாவது திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கிய தால் இத்தலத்து ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர் வந்தது.

Ⓜ கச்சபேஸ்வரரின் மகிமை :Ⓜ

 இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள் புரிந்து கொண்டு இருக்கும் கச்சபேசனை (வழிபட வேண்டும்) கும்பிட வேண்டும் என்று சென்றவர்களும், செல்ல வேண்டும்  என நினைத்தவர்களும், சென்று கச்சபேசனைக் கண்டவர்களும், யாவரும் இவ்வுலகத்தில் துன்பம்  நீங்கி இன்பம் எய்தி, மீளா முக்தியும் அடைவார்கள்.

Ⓜ திருமண தடை நீக்கும் ஸ்ரீதுர்கை அம்மன்:Ⓜ

கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீதுர்கைக்கு அடுத்தபடி, ஸ்ரீகச்சாலீஸ்வரர் கோவிலில் இருக்கும் கோஷ்டத்தில் கொலுவிருக்கும் ஸ்ரீதுர்கை அம்மனே. ஸ்ரீதுர்கையின் உத்ஸவத் திருக்கோலம் கொள்ளை அழகு!, இங்கே உள்ள ஸ்ரீதுர்கைக்கு உத்ஸவ மூர்த்தம் இருப்பது சிறப்பு.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீதுர்கை அம்மனுக்கு  விளக்கு ஏற்றி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை பிராகார வலம் வந்து வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மற்றும் தேய்பிறை நவமி அன்று காலையில் இங்கு ஸ்ரீதுர்கா சண்டி ஹோமம் விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொண்டால், ஸ்ரீதுர்கையின் பேரருளைப் பெறலாம் !

ராகு- கேது பெயர்ச்சியின்போது இங்கே உள்ள ஸ்ரீதுர்கைக்கும், சித்தி-புத்தி சமேத ஸ்ரீபஞ்சமுக விநாயகருக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல நன்மைகளும் கைகூடும். ராகு- கேது பெயர்ச்சியின்  போது ஸ்ரீதுர்கை விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும். குழந்தை வரம் கிட்டும்.

Ⓜ ஆலய அமைப்பு: Ⓜ

பிரதான சாலையான அரண்மனைகாரத் தெருவிலிருந்து ஆலயத்தில் நுழைந்ததும் வலப்பக்கத்தில் தெய்வ விருட்சமான அரசும், வேலும் பின்னி பிணைந்து இருக்கும் அற்புத காட்சியையும், இடது புறம் பிரம்மாண்டமான அரச மரத்தின் கீழ் முழுமுதற் கடவுளான மகாகணபதியும், நாக விக்ரகங்களும் அமைந்துள்ளது ஒரு அழகு காட்சி.

கோபுர வாசலை அடைந்ததுமே நம் எதிரே கயிலாய மலையில் சிவபெருமான், பார்வதி தேவி, கணபதி, முருகன் ஆகியோருடன் வீற்றிருக்கும் காட்சியை காண்கிறோம். கயிலாய மலையை தன்னால் தூக்க முடியும் என்ற ஆணவத்தில் இராவணன் அதை தூக்க முயற்சிக்க, சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் அதை அழுத்த, இராவணன் சிக்கி தவிக்கிறான்.

தன்னை இந்த நிலையில் இருந்து காக்க சிவபிரானை வேண்டி - சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான சாமவேதத்தை சாமகானமாக தனது பத்து தலைகளில் ஒன்றை கொய்து, வீணையின் தலைகுடமாக்கி, இருபது கைகளில் ஒன்றை வீணையின் தண்டாக்கி, தனது நரம்புகளையே நாணாக்கி இசை பாடுகிறான். இதில் மயங்கிய சிவபெருமான் அவனை விடுவித்து இராவணேஸ்வரன் என்ற பட்டத்தையும் அளிக்கிறார். இக்கயிலாய மலை காட்சியிலே, பாரத போருக்காக பாசுபதாஸ்திரம் வாங்க அர்ச்சுனனை அழைத்து செல்லும் ஸ்ரீ கிருஷ்ணர், கயிலாயத்தில் கால் பட்டால் பாவம் எனக் கருதி தன் கைகளாலேயே தலை கீழாக  கைலாயம் செல்லும் காரைக்கால் அம்மையார் மற்றும் பரிவார தேவர்களும், பிருகு முனிவர், ஒளவையார் ஆகியோரும் காட்சி அளிப்பது, நம்மையே கைலாயம் அழைத்து செல்வது போல் ஓர் அரிய அமைப்பாகும்.

ஆலயத்துக்கு அணிகலனான, பிரம்மாண்ட கொடி மரம் பலிபீடம், நந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் ஸ்ரீ கச்சபேசனின் இருமருங்கிலும் ஐந்து முகங்களுடன் சித்தி புத்தி சமேதராக பஞ்சமுக கணபதி சிங்க வாகனத்திலும், - ஆறுமுகப்பெருமான் சன்னதியின் மேல் பகுதியில் இருக்கும் காட்சி, கந்தன் சூரனை சம்ஹரித்ததும், சூரனின் உடல் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறி, முருகனை வணங்கும் கோலம், ஆனந்தப் பரவசமூட்டும்.

எந்தத் திருக்கோயிலிலும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சியாக, இவ்வாலயத்தின் மூலவர் சிவபெருமான் கச்சபேசன் 5 ஆசனங்கள் இருக்கைகள் கூர்மாசனம் (ஆமை) அஷ்ட நாகாசனம் (8 நாகங்கள்) சிம்ம ஆசனம் (சிங்கம்) யுகாசனம் (காலங்கள்) கமல்-விமலாசனம் (தாமரை மலர் குவிந்தும் விரிந்தும் )அமர்ந்து, ஆனந்தக் காட்சியைத் தருகிறார். இந்த ஐந்து ஆசனங்கள் மேல் அமர்ந்துள்ள சிவபெருமானின் மேற்கூரையாக பன்னிரெண்டு சூரிய தூண்கள் மேல், பிரம்மா, விஷ்ணு , சிவன் மூவரும் மூன்று சிகரங்களாக அமைந்துள்ளதும், மிகச் சிறப்பானதாகும்.

சிவபெருமான் அனைத்து ஆலயங்களிலும், லிங்க உருவமாகத் தான் தரிசனம் தருகிறார். ஆனால் இத்திருக்கோயிலில் தான் மூலலிங்கத்தின் பின்புறம், ஐந்து முகங்களுடன் சிவபெருமான், சதா சிவ மூர்த்தி மனோன்மணித் தாயாருடன், காட்சி தருகிறார்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முற்பட்டபோது மத்தாக மந்தர மலையை வைக்க அது கடலில் அழுந்தவே, மகா விஷ்ணு ஆமையுரு (கச்சபம்) எடுத்து தன் மீது மத்தை வைத்து கடையச் சொன்னார். அதன்படி செய்து அமுதமும் கிடைத்தது. திருமால் ஆமை வடிவில் இறைவனை பூஜித்ததால்* "கச்சப இதி ஈஸ்வரனா"* அதாவது "கச்சபேசுவரர்" என்று பெயராயிற்று. இந்த வரலாறு எல்லோருக்கும் எளிதில் விளங்குமாறு தென் சுவரில் பல வர்ணங்கள் தீட்டப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்தின் உட்பிரகார சுவர்களிலும், அலங்கார மண்டபத்தில் சிவபெருமானின் பல்வேறு சிறப்புகளை விளக்கும், அழகிய வண்ணப்படங்களும், ஆலய சுவர்களில் இறைவன் புகழை விளக்கும் அழகிய தேவார பாடல்களும், நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தும்.

இங்கு நவக்கிரகங்கள் வேறெங்கும் காணமுடியாத நூதன ஜாதகக் கணிப்பாகும். அதிதேவதைகள், நட்சத்திர நாயகர் இவர்களுக்கெல்லாம் சிகரமாயமைந்த சிவபெருமானின் கீழ் அஷ்ட மூர்த்திகள், திக்பாலகர்கள், பன்னிரண்டு ராசிகள், நான்கு யுகம், திதி வார நட்சத்திரம், கரணம் யோகம், ஸப்த மாதா அஷ்டவஸு, த்வாதச ஆதித்யர்கள், அபிஜித்துடன் கூடிய 28 நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவைகளை விமான அமைப்பில் தரிசிக்கலாம்.

ஆலயத்தை உள்பிரகார வலம் வரும்போது மிகப் பிரம்மாண்டமான உற்சவ மூர்த்தியாக, சோமாஸ்கந்தராக கச்சபேசப் பெருமான், செளந்தரநாயகியை தரிசிக்கலாம்.. பண்டைய காலத்தில் அனைத்துத் திருவிழாக்களிலும் புறப்பாடு ஆன இப்பெருமான் மிகுந்த கனம் ஆனதால், இப்போது ஆண்டிற்கு இருமுறைதான் இத்திரு உருவின் வீதி உலா நடைபெறுகிறது.

சோமாஸ்கந்தரின் சன்னதிக்கு அடுத்து, ஸ்தல-கச்சப மகா கணபதி தரிசனம் கிடைக்கிறது. இத்திருக்கோயில் நிர்மானம் (1728) செய்வதற்கு முன்பே, இந்த மகா கணபதி, இக்கோயிலை ஒட்டியுள்ள குளக்கரையில் (அப்போதைய குட்டை) வீற்றிருந்ததாக சரித்திரம் கூறுகிறது.

மகாகணபதியின் சன்னதியை அடுத்து, சிவபெருமானின் மூலஸ்தானத்தின் நேர்பின்புறம், சிவபெருமானின் மறு அம்சமாக - ஐந்துமுகன் ஈசனின் நெற்றி உதித்த  ஆறுமுகப் பெருமான் - வள்ளி, தேவயானையுடன் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ ஷண்முகராக, மயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் அளிக்கும் ஆனந்த தரிசனம், நிலைத்து நின்று அருளை வாரி வழங்கும் கச்சியம்பதி ஸ்ரீ ஷண்முகனை வணங்கி வேண்டினால் நினைப்பது நடக்கும், கேட்பது கிடைக்கும். அடுத்து ஸ்ரீ துர்காம்பிகையின் உற்சவ மூர்த்தி தரிசனமும் இதயத்தை அள்ளும்.

வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ துர்கா தேவியின் மூலஸ்தானக் காட்சி அற்புதமானது. இந்த அன்னையை உள்ளன்போடு வெள்ளி செவ்வாயில் தொடர்ந்து வழிபட்டால் மனைப்பேறு, மணப்பேறு, மக்கட்பேறு ஆகியவை கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவப் பூர்வ உணர்வு, அன்னையின் சன்னதிக்கு நேர் எதிரே சப்த மாதாக்கள் சப்த பர்வதங்கள், சப்த சமுத்திரங்கள் அமைந்துள்ள காட்சி, அனைத்துமே அன்னையின் அருளாட்சி தான் என்பதை உணர்த்துகிறது.

அடுத்து தேவாசிரியர் மண்டபத்தில் சிவனடியார்களான 63 நாயன்மார்களின் அழகிய சிலை உருவக் காட்சிகளும், அந்தந்த நாயன்மார்களின் பாதத்திலே, அவர்களின் குறிப்புகளும் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தும், பெரிய புராண ஆசிரியர் சேக்கிழாரும், நாயன்மார்கள் சரிதத்தை உணர்த்த வந்த பொள்ளா பிள்ளையார் தரிசனமும் கூட உண்டு.

உள் பிரகாரத்தை வலம் வருகையில் நால்வர், ஸ்கந்த புராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார், நீல கண்ட சிவாச்சாரியார் இவர்களது சிலா விக்ரகங்களும் காணப்படுகின்றன.

சைவத்தின் மேன்மையை நிலை நாட்ட பூர்வாசிரமத்தில் கஞ்சனூரில் வைஷ்ணவ குலத்தில் உதித்து சுதர்ஸன ஆழ்வார் என்ற திவ்ய திருநாமம் தாங்கி சைவமே சிறந்தது என்று உலகிற்கறிவிப்பான் வேண்டி பழுக்கக் காய்ச்சிய இரும்பு பீடத்தில் இனிது ஏறி இக்குவலயம் மெச்சும்படி நேர்ந்த ஹரதத்தரையும் இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீ நடராஜர் சந்நதியில் அம்பிகை சிவகாமியுடன் பன்னிரு திருமுறை வேதங்கள் இவற்றுடன் சிதம்பர ரகசியமும் இடம் பெற்றிருக்கிறது. இச்சந்நிதி வாயிலின் வலபுறத்தில் கோவிந்தராஜப் பெருமாளும், இடப்புறத்தில் பதிபக்தி நிறை அனுசூயாவிற்கு காட்சி தந்த தத்தாத்ரேயரும் காட்சியளிக் கின்றனர்.

சிதம்பரத்தில் சயன கோலத்தில் காணப்படும் பெருமாள் இங்கு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். இக்காரணங்களால் இச்சந்நதி சிதம்பரத்திற்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது.

இரண்டு கரங்கள் கொண்டு துதிக்க கமலங்களில் அமர்ந்து காணும் கெஜலட்சுமியையும் வெள்ளைத் துணியணிந்த வெண்தாமரைச் செல்வி வீணையை விரல்கொண்டு மீட்டும் சரஸ்வதியையும், தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம்.

வலம் வந்ததும், உலகை காக்கும் அன்னையாம் உமாதேவியை அழகு கொஞ்சும் சௌந்தர நாயகியாய் தரிசிக்கும் போது இதயம் லேசாகி, மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது. அன்னையின் இருமருங்கிலும், வீரபத்ரஸ்வாமியும், கால பைரவ மூர்த்தியும் காட்சியளிப்பது ஒரு அற்புதமாகும்.

செளந்தரநாயகி மலைமகளாய் காட்சிதர, அலைமகளாய் மகாலட்சுமியும், கலைமகளாய் சரஸ்வதியும் தரிசனம் அளிப்பது மிகச் சிறப்பானது.

ஆலய வெளிப்பிரகாரத்தை வலம் வரும்போது, மகா கணபதியின் அற்புத தரிசனம் கண்டதும், முருகப்பெருமான் சன்னதி தெரிகிறது. இவ்வாலய முருகன் - செங்கல்வராயன் என்ற பெயரோடு தனிச் சன்னதியிலும், இருபக்கமும் தனிதனி சன்னதியாக, வள்ளி தேவானையும் இருப்பதும் ஆனந்தம்.

பாம்பன் சுவாமிகள் தன் பாடலில் "செங்கல்வராயா" என்று முருகனை அழைத்தது இத்திருத்தல முருகன் பெருமையைதான். முருகனுக்கு மயில்தான் என்றாலும் இங்கு மட்டும் மயிலுக்கு பதிலாக யானை-ஐராவதம் இடம் பெற்றிருப்பது மிகமிக அபூர்வமாகும். இச்சன்னதி காட்சி திருத்தணி முருகன் சன்னதிக் காட்சியாகும்.

ஸ்ரீ ஆதிசங்கரரின் தனிச்சன்னதியை தரிசித்து. இவ்வாலயத்தை நிர்மாணித்த திரு. தளவாய் செட்டியார் சார்ந்திருந்த பேரிச் செட்டியார்கள் குலத்தின் குல குருவான முந்திகேஸ்வர சுவாமியின் சன்னதியை தரிசித்து, தனிச் சன்னதியில் தரிசனம் தரும் ஆஞ்சனேயரை அருள் வேண்டலாம்.

அடுத்துள்ள தனி மண்டபத்தில் காலங்களைக் கடந்த தூண் ஆஞ்சனேயரின் தரிசனத்தோடு. மண்டபம் ஏறினால் இடப்புறம், பூரணை புஷ்களா சமேத ஹரிஹரபுத்திரரின் மூலவிக்ரக தரிசனம் நம்மை ஈர்க்கிறது.

இம்மண்டபத்தில் பஞ்சலோகப் பொன்னால் செய்யப்பட்ட ஹரிஹர சுதன், ஆனந்த சித்தன், சபரி கிரிசன், ஸ்ரீ சின்முத்திரையோடு, தவக்கோலத்தில் ஞான குருவாக, ஸ்ரீ ஐயப்பப் சுவாமியாக அருள் பாலிக்கும் தெய்வீகம் நமக்கு அருளை வழங்குகிறது. இச்சன்னதியின் தனிச்சிறப்பு, 1949-50 காலகட்டத்தில் தற்போதைய சபரிமலை ஆலயம் புதிதாக நிர்மாணம் செய்யப்படும் போது, இன்று சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனின் திருஉருவம், பல ஊர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, சென்னையில் நம் திருக்கோயிலில் மட்டும், மூன்று தினங்கள் அமர்ந்திருந்து பிறகு சபரிக்கு சென்றது. சபரி ஐயன் அமர்ந்த அதே இடத்தில் ஐயப்ப விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சென்னை மாநகரிலேயே முதல் ஐயப்பன் சன்னதி அமைந்த சிறப்பு, இத் திருக்கோயிலுக்கே உரியது.

இதிகாச, புராண, நாயன்மார் வரலாறுகளை விளக்கும் பிம்பங்களை சாதாரணமாக எல்லா கோயில் கோபுரங்களும் தாங்கி இருக்கின்றன. ஆனால், இக்காட்சிகள், ஒரே இடத்தில் இல்லாமல் இத்திருக்கோயிலில் தனித்தனியே ஆங்காங்கே சுவர்கள், மண்டபங்கள் மீது பெரிய அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பக்தர்கள் ஒன்றையும் விடாமல் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதியாய் இருப்பது இக்கோயிலின் மற்றொரு விசேஷமாகும்.

ஆலயத்தை தரிசித்து அண்ணலின் அருளோடு வெளி வரும்போது முன்கோபுரத்தின் மேற்கு நோக்கி பஞ்சபூத ஸ்தலங்களின் தெய்வக் காட்சிகளும், சப்தலிங்க தரிசனமும். இறையருளை நமக்கு மேலும், மேலும் வழங்குவது ஸ்ரீ சௌந்தர நாயகி உடனுறை ஸ்ரீ கச்சபேசன் அருளால்தான்.

Ⓜ பஞ்சவாகன சிவன்:Ⓜ

பாற்கடலை கடைந்தபோது, மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு, ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால், "கச்சபேஸ்வரர்' என்றும், "கச்சாலீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

"கச்சபம்' என்றால் "ஆமை' என பொருள். இங்குள்ள லிங்கம், கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். நாகதோஷம், விஷ ஜந்துக்களால் பயம் கொண்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் சதாசிவ மூர்த்தி இருக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும், அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Ⓜ ஸ்தலபுராணம்:Ⓜ

வரலாறும், சிறப்பும் கோவில்கள் ஏற்பட்டதற்கு ஆதாரமாக இதிகாச புராண கதைகளும், சரித்திர சான்றுகளும் கேள்விப்படுகிறோம். இவை எதுவும் இன்றி பக்தர்களுக்கிடையே பிரபலமாய் விளங்கும் கோயில்களும் சில உண்டு. அவைகளில் ஒன்று தான் சென்னையில் உள்ள ஸ்ரீ கச்சபேசுவரர் திருக்கோயில் மொழிவழக்கத்தில் கச்சாலீஸ்வரர் என்று வழங்கி வருகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கச்சபேசுவரர் கோவிலைப் போலவே இது அமைந்துள்ளது.

1700 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியில் சென்னை கோட்டையில் கிழக்கு இந்திய கம்பெனியில் "துபாஷ்" ஆக வேலை பார்த்த தளவாய் செட்டியார் பெரிய சிவபக்தர். காஞ்சியில் உள்ள ஸ்ரீ கச்சபேஸ்வரரை அங்கு சென்று தினசரி தரிசித்து விட்டு வருவது வழக்கம்.

அப்படி ஒரு நாள் கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது.

"என்ன செய்வேன் இறைவா !' என தவித்து நின்றார். ஆனால், மழையோ ஒரு வாரம் விடாப்பிடியாகக் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் பிடித்தது. பக்தர் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். என்ன அதிசயம் ! அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப்பட்டிருந்தன, தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார்.

பின்னர் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்தார் பக்தர்.  இறைவன் அவர் கனவில் தோன்றி சென்னையிலேயே ஆலயம் அமைத்து வழிபட பணித்தார். வெள்ளை அதிகாரிகள் ஆதரவுடன், அப்போது ஒரு கணபதி சிலையும், ஒரு குட்டையும் அமைந்திருந்த, தற்போது நம் ஆலயம் அமைந்துள்ள இடத்தை தேர்வு செய்து, 1720 ஆம் ஆண்டில் தொடங்கி இத்திருக்கோயிலை நிர்மாணித்து 1728 ஆம் ஆண்டு, முதல் கும்பாபிஷேகத்தை நிகழ்த்தினார்.

ஸ்ரீ தளவாய் செட்டியார் அவரது மகனைவி சுந்தரி ஆகியோரின் திருஉருவங்களை ஆலயத்தின் தென்பிரகாரத்தில் உள்ள ஒரு தூணில் காணலாம்.

இறைவன் : ஸ்ரீ கச்சாலீஸ்வரர்(கச்சபேஸ்வரர்).

தாயார் : ஸ்ரீ அழகாம்பிகை.

தல விருட்சம் : கல்யாணமுருங்கை மரம்

தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்


Ⓜ நடை திறக்கும் நேரம்:Ⓜ

 
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


🅱 பூசைக்காலம் : 🅱


கச்சாலீஸ்வரருக்கு தினந்தோறும் 4 காலப் பூசைகள் நடைபெறுகின்றன.

🌀 காலை சந்தி காலை 8 மணிக்கு

🌀 உச்சி காலம் முற்பகல் 11 மணிக்கு

🌀 சாயங் காலம் (சாயராட்சை)மாலை 6 மணிக்கு

🌀 அர்த்த சாமம் இரவு 8.30 மணிக்கு


🅱 திருவிழாக்கள் :🅱


♻ சித்திரை – பிரம்மோத்சவம்

♻ வைகாசி - வைகசி விஷாகம்

♻ ஆனி - ஆனி திருமஞ்சனம்

♻ ஆடி - ஆடி பூரம்

♻ ஆவணி – உற்சவம்

♻ புரட்டாசி – நவராத்திரி

♻ ஐப்பசி - கந்தா சஷ்டி

♻ கார்த்திகை - ஐயப்பன் பூஜை : கார்த்திகை தீபம்

♻ மார்கழி - தனுர்மாத பூஜை

♻ தை - பொங்கல் திருவிழா

♻ மாசி - மகா சிவராத்திரி

♻ பங்குனி - பங்குனி உத்திரம்  

Saturday 17 March 2018

இனி இல்லை ஸ்ட்ரெஸ் - ஈஸி டிப்ஸ் 100

ருபது வருஷத்துக்கு முன்னால ஸ்ட்ரெஸ்னா என்னன்னு கேட்போம். இன்று சின்னக் குழந்தைகூட, ‘எனக்கு எவ்ளோ ஸ்ட்ரெஸ் தெரியுமா’ என்று கேட்கிறது. ஸ்ட்ரெஸ் தவிர்க்க முடியாத விஷயமாகப் போய்விட்டது. எனவே, அதைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது...
வாழ்க்கை முறை, பொருளாதாரம், சமூகச்சூழல் மனிதர்களின் உறவு நிலைகள், அரசியல் சூழல், வேலைச் சூழல், நகர நெருக்கடிகள் எனப் பல விஷயங்கள் மன அழுத்தத்துக்குக் காரணமாகின்றன. மன அழுத்தத்தைக் கையாள மூன்று வழிமுறைகள் உண்டு. மன அழுத்தம் வராமல் தடுப்பது, மன அழுத்தத்தைக் கையாள்வது, மன அழுத்தம் நீங்கியதும் பின்பற்ற வேண்டியவை இந்த மூன்றும் மிக முக்கியம்.
மன அழுத்தம் ஏற்பட்டபின் தீர்வு தேடுவதை விட வருமுன் காப்பதுதான் ஆகச்சிறந்த வழி. அதற்கான 100 வழிமுறைகளைப் பார்க்கலாம்.

1.அதிகாலை எழும்போதே புன்னகையுடன் எழலாம். முடிந்தவரை புன்னகையுடன் அன்றைய பொழுதைக் கழிக்கலாம். புன்னகையே மன அழுத்தத்துக்கு முதல் மருந்து. 

2. எழுந்த உடன் படுக்கையில் அமைதியாக கண்திறந்து 10 நிமிடம் அமரலாம். மூச்சை நன்றாக இழுத்து சுவாசிக்கலாம். 

3. 
எழுந்து அமர்ந்தபடியே, நாம் மகிழ்ச்சியுடன் வாழ வாய்ப்பளித்து நம் விருப்பங்களை அடைய உதவிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லலாம். நமக்கு உதவும் நண்பர்களுக்கும் மனதளவில் நன்றி சொல்லலாம். நன்றி சொல்வது மன அழுத்தம் வராமல் வைத்திருக்கும்.
4. எழுந்ததுமே செல்போன் ஒளித்திரையைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். குறிப்பாகத் தலைமாட்டில் செல்போன் வைப்பதைத் தவிருங்கள். 

5. காலை எழுந்து ரெஃப்ரெஷ் ஆனதும் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்து ‘ஹாய்’ சொல்லலாம். அழகான, மகிழ்ச்சியான ஆள் நீங்கள்தான் என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். 

6. வீட்டில் உள்ள எல்லோருக்கும் இயந்திரத் தனமாக இல்லாமல் மனப்பூர்வமாக இதயத்தில் இருந்து ‘குட் மார்னிங்’ சொல்லலாம். 

7. 
செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருந்தால், நல்ல செய்திகளை முதலில் தேடிப்படிக்கலாம். நம்மை முதலில் டென்ஷன் ஆக்குவது பொதுவான செய்திகள்தான் என்கிறது ஓர் ஆய்வு! பஸ் கட்டண உயர்வு என்றதும் மனம் கோபப்படுகிறது. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற ஆதங்கம் இயலாமையாக மாறி அழுத்தம் ஏற்படுகிறது. 

8.காலை சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடம் நிற்கலாம் அல்லது நடக்கலாம். புதிய சிந்தனைகள் தோன்றும். 

9. காபி அல்லது டீ குடிக்கும்போது ரசித்துக் குடிக்கலாம். எந்த வேலையாக இருந்தாலும் ரசித்துச் செய்தால் அது சுமையாகத் தெரியாது.
10. நிற்கும்போதும் நடக்கும்போதும் அன்று செய்ய வேண்டிய வேலைகளை மனதில் வரிசையாகப் பட்டியலிடலாம். மறதியால் ஏற்படும் டென்ஷனைத் தவிர்க்க இது உதவும். 

11. 
யோசித்த செயல்களை, வேலைகளை உடனடியாக ஒரு நோட்டில் அல்லது டைரியில் எழுதலாம். செய்ய வேண்டிய வேலைகளை எழுதுபவர்கள், மன அழுத்தத்தில் இருந்து தன்னைக் காத்துக்கொள்கின்றனர். 

12. தூங்கி எழுந்து, காலைக்கடன்கள் முடித்து 30 நிமிடத்துக்குப் பின்னர் செல்போனைத் தொடுங்கள். அதுவும், முதல் நாள் இரவில் இருந்து நமக்கு வந்த அழைப்புகள், குறுஞ்செய்திகளைப் பார்த்தால் போதும். 

13.வாட்ஸ்அப் குரூப்களுக்குள் அதிகாலை போய் ‘குட்மார்னிங்’ போட்டே ஆகவேண்டும் என்று இல்லை. 

14.யோகா அல்லது மூச்சுப்பயிற்சி செய்யும் வழக்கம் இருந்தால், காலையில் 20 நிமிடம் ஒதுக்கலாம். வழக்கம் இல்லாதவர்கள் உடனே யோகா கற்றுக் கொண்டு செய்யத் தொடங்குங்கள். 

15.காலை மிதமான சுடுநீரில் நிதானமாகக் குளிக்கலாம். அப்போது பரபரப்பு வேண்டாம். 

16.குளிக்கும்போது பிடித்த பாடலை, சத்தமாகப் பாடலாம் அல்லது ‘ஹம்’ செய்யலாம்.
17.அதிகாலையில், வார்த்தைகளில்லாத இசை கேட்கலாம். ஏதாவது ஓர் இசைக்கருவியின் ஒலி, நம்மை உற்சாகப்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளை தடுக்கும். 

18.பக்திப்பாடல்கள் அல்லது இதம் தரும் உரைகள் கேட்கும் வழக்கமிருந்தால், அதுவும் பலன் தரும். நல்ல சிந்தனைகள் ஏற்பட வழிவகுக்கும். 

19.சில பாடல்களைக் கேட்டால் சட்டென மனம் உற்சாகம் கொள்ளும். அப்படி நல்ல நினைவுகளை உருவாக்கும் 10 பாடல்களைத் தேர்வுசெய்து அவற்றை தினமும் கேட்கலாம். 

20.காலை 11 மணிவரை ஃபேஸ்புக்குக்குள் போகாமல் இருக்கலாம். இதனால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

21.பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் நம் உணர்வுகளைப் பதிவிடுவதில் தவறில்லை. அவை எதிர்வினை ஏற்படுத்தாதவையாக இருத்தல் நலம். மேலும் லைக்கோ, கைதட்டலோ வரவில்லை என்று அதனையே திரும்பத் திரும்பப் பார்ப்பது ஸ்ட்ரெஸ் உருவாக்கும். 

22. சமூக வலைத்தளங்களில் நாம் பதிவிடும் கருத்துகள் வேறு யாரையாவது எதிர்வினை செய்யத் தூண்டுமாறு இருந்தால், அந்த நட்பை இழக்காமல் எப்படி பதில் சொல்வது என்பதற்குத் தயாராக வேண்டும். 

23. நம்மைச் சுற்றியோ, நம் நட்பு வட்டத்திலோ எப்போதும் எதிர்மறையாகப் பேசிக் கொண்டு எதிர்வினையாற்றும் நபர்கள் இருந்தால், அவர்களிடமிருந்து உடனடியாக ஒதுங்கிவிடலாம். 

24. சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது, சமூக வலைத்தளத்தில் உலவுவதைத் தவிர்த்து ரசித்துச் சாப்பிடலாம். உங்கள் உணவில் போதுமான சத்துகள் இருக்கட்டும். உடலுக்குப் போதுமான எனர்ஜி கிடைப்பதும் தேவையற்ற டென்ஷனைத் தவிர்க்கும். 

25. உங்கள் உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். 

26. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது செரிமானப் பிரச்னையை உருவாக்கும். அதனால், தேவையற்ற டென்ஷன். சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள்.
27. வீட்டிலிருந்து கிளம்பும்போது அலுவலகத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய பொருள்களை எடுத்திருக்கிறீர்களா என்பதைச் செக் செய்துவிட்டு கிளம்புங்கள். எதையேனும் மறந்துவிட்டால் தேவையற்ற டென்ஷன் ஏற்படும். உங்களது வாகனத்தில் போதுமான எரிபொருள் உள்ளதா என்பதையும் கவனிப்பது அவசியம். 

28. சாலையில் வேகமெடுக்கிறீர்கள். வாகன நெரிசலைக் கண்டவுடன் டென்ஷன் ஆகவேண்டாம். நீங்கள் எரிச்சல் அடைவதால் எதுவும் மாறிவிடாது. வாகன நெரிசலை வேடிக்கைப் பாருங்கள். 

29. ஓர் இடத்துக்குச் செல்ல பயண நேரத்துக்கு 10 நிமிடம் முன்னரே கிளம்புங்கள். இடையில் ஏற்படும் தாமதங்களால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்க்கலாம். 

30.பணியிடத்தில் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவது முக்கியம். இதனால் உடன் இருப்பவர்களால் ஏற்படும் சவால்களைத் தவிர்க்கலாம். 

31.யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். பிறர் பற்றி இன்னொருவர் குறை கூறினாலும் அதற்கு காதுகொடுக்காமல் பேச்சை மடை மாற்றலாம். 

32. அலுவலக அரசியல்களுக்குள் சிக்காமல் இருக்க ஒரே வழி சொன்ன வேலைகளைத் திறம்படச் செய்வது. அதற்கு வரும் விமர்சனங்களை நேர்மறையாக ஏற்றுக்கொண்டு நம்மைக் கூர்தீட்டிக் கொள்ளலாம்.
33. நன்றாக வேலை செய்ததற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அங்கலாய்ப்பதைத் தவிருங்கள். எல்லோரும் நம் வேலையைப் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவசியமற்றது. 

34. உழைப்பையும் உற்சாகத்தையும் சரிவிகிதமாகக் கலந்து வேலை பார்த்தால் எல்லா இடங்களில் இருந்தும் பாராட்டுக் குவியும்.

35. செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள். வேலைகளைத் தள்ளிப்போடுவதால் ஏற்படும் மன அழுத்தம் பெரியது. 

36.  உடனடியாக முடிக்க வேண்டிய வேலை எதுவோ அதில் கவனம் செலுத்தலாம். 

 37. வேலை செய்யும் இடத்தில், அனைவரிடத்திலும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கண்டுபிடித்து உளமாரப் பாராட்டலாம். அது அவர்களிடத்தில் புன்னகையை வரவழைக்கும். 

38. பிடித்த வேலையைச் செய்வதைவிட தேவை யான வேலையைச் செய்யலாம். நமக்குப் பிடித்த வேலையைப் பிறகு செய்துகொள்ளலாம்.
39. நண்பர்கள் வெளியில் செல்ல அழைக்கும்போது வேலை இருந்தால், உடனடியாக நோ சொல்லுங்கள். அவர்களைத் திருப்திப்படுத்த நினைப்பது நிச்சயம் மன அழுத்தத்தை உருவாக்கும். 

40. பிறருக்கு இயன்றால் உதவி செய்யலாம். அப்படிச் செய்துவிட்டு சிக்கல் வந்தால் பின் அதனையும் சமாளிக்க முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும். 

41 . ஒருவருக்கு உதவிவிட்டு அவர் நன்றி சொல்லவில்லை, நாம் செய்த உதவியின் வலிமை தெரியவில்லை. நம்மை அவர்கள் மதிக்கவில்லை என்று எண்ணுவது தவறு. உதவியை நிம்மதியாகச் செய்துவிட்டு நகர்தல் நலம். 

42 . நகைச்சுவையாகப் பேசப்பழகுங்கள். காணும் காட்சிகளில், செயல்களில் நகைச்சுவையைக் கண்டறிந்து பேசலாம். அது உங்களை ரிலாக்ஸ் ஆக்கும்.
43 . நல்ல நூல்களைப் படிக்கலாம், படைப்புகளும், கவிதைகளும் மன அழுத்தத்தை நீக்கும். 

44 . உடல் நலத்தில் அக்கறையுடன் இருங்கள். நாக்குக்குப் பிடித்த உணவுகளைக் கட்டுப்பாடின்றி சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் மன அழுத்தம் உருவாகாமல் தடுக்கும். 

45 . மாலை வீட்டுக்கு வந்த உடன் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் சில நிமிடங்கள் உரையாடலாம். அன்றைய நிகழ்வுகளில் சுவாரஸ்யமானவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம். 

46 . மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. அன்பு என்பதே குறைகளுடன் ஏற்றுக்கொள்வதுதான். ஆகவே, இல்லத்தில் உள்ளவர்களைக் குறை காணாமல், அன்பாகச் சரிசெய்ய முயலலாம். 

47 . பொருளாதாரத்தில் கொஞ்சம் விழிப்பு உணர்வு தேவை. நம் வருமானத்துக்குள்ளாக செலவுகளை வைத்துக்கொள்வது மாதாந்திர மன அழுத்தத்தைக் குறைக்கும்.
48 . அதிக எதிர்பார்ப்பில்லாத நிதிமேலாண்மை முக்கியம். வேலையில் எவ்வளவு சம்பளம் வரும்; தொழிலில் இவ்வளவு சராசரி வருமானம் வரும் என்று தெரியும். அதற்கு மேல் இவ்வளவு இன்சென்டிவ் வரும் என்று கற்பனையாக நினைப்பதால், அதில் ஒரு ரூபாய் குறைந்தால்கூட அழுத்தத்தைக் கொடுக்கும். 

49 . ஒரு பொருளை வாங்குவதற்கு முன் ஒருமுறைக்கு பத்துமுறை இது நமக்குத் தேவையா என்று யோசித்துப் பார்த்து வாங்கலாம். தேவையில்லாத பொருள்களை அதிகமாக வாங்கினால் பின் தேவையான பொருள்களை விற்க வேண்டிவரும்.
50 . வாங்கும் பொருளின் தரத்தை கவனித்தே வாங்க வேண்டும். விலை குறைவாகக் கிடைக்கிறதென்று தரமில்லாத பொருள்களை வாங்குபவர்கள் கட்டாயம் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். 

51 . அண்டை அயலார், உறவினர்கள், நண்பர்களின் வாழ்க்கைத்தரத்துடன் நமது வாழ்க்கைத்தரத்தை ஒப்பிடுவது மிகப்பெரிய மன அழுத்தக் காரணி. அவர்கள் பின்னணி, நிதிநிலைமை இவற்றை நம்முடன் ஒப்பிட்டால் நமக்கு வரும் மன அழுத்தம் எதையுமே ரசிக்க விடாது. 

52 . `நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்’ என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். ‘எப்படி இருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘சூப்பர், செமையா இருக்கேன்’ என்று உற்சாகமான பதிலைச் சொல்லுங்கள். உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
53 . ‘என்னவோ இருக்கேன்’, ‘ஓடிக்கிட்டு இருக்கு’ என்பது போன்ற பதில்களைச் சொல்ல வேண்டாம். அப்படி பதில் சொல்பவர்களிடம் நாம் ஒட்டவும் வேண்டாம். உற்சாகமாகப் பேசுபவர்களிடம் நட்பைத் தொடர்வோம். 

54 . குடும்பத்துக்குள் எதிர்பார்ப்பு களைக் குறைத்துக் கொள்ளலாம். நாம் நினைத்தபடி நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைப்பது, நாம் எதிர்பார்ப்புகளை குடும்பத்தில் உள்ள அனைவரும் பூர்த்தி செய்ய வேண்டும் என நினைப்பது, இரண்டும் நமக்கும் அவர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 

55 . வீட்டில் குழந்தைகளுடன் விளையாடலாம். கொஞ்சம் பெரிய குழந்தைகளாக இருப்பின் படிப்பைத் தவிர மற்ற விஷயங்கள் பேசலாம். 

56 . இரவு தூங்கப் போவதற்கு முன் நல்ல இசை, நல்ல நூல், நல்ல தகவல்கள் மனதுக்குள் செல்வது நிம்மதியாகத் தூங்க வைக்கும்.
57. இரவு விரைவாகத் தூங்கச் செல்வது முக்கியம். அதிகபட்சம் இரவு 11 மணிக்கு மேல் விழித்திருக்க வேண்டாம். 

58 . இன்னொருவரின் செயலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபடலாம். நிதானமாகச் சிந்தித்து பதிலளிப்பதன் மூலம் மன அழுத்தம் ஒதுங்கி நிற்கும். 

59 . எந்தச் செயலுக்கும் ‘ரியாக்ட்’ செய்வதை விட, ‘ரெஸ்பாண்ட்’ செய்யும்போது நமக்கு மரியாதை அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து செயல்படுத்தும்போது நம்மால் பிறருக்கும் மன அழுத்தம் வராது. 

60 . எப்போதும் மன அழுத்தம் வராமல் இருக்க நிதானமாக, நிறுத்தி ஆழமாக சுவாசித்தாலே போதும். எண்ணங்களில் நிதானம் இயல்பாக வந்துவிடும்.
61. அதிகாலை சீக்கிரம் எழுந்து விடுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். அதிகாலையில் விழிப்பவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதில்லை. இது அனைத்து வேலையிலும் பிரதிபலிக்கும். தாமதமாக எழுந்துவிட்டோமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஏதோ ஒரு காரணத்துகாக மன அழுத்தம் வந்துவிட்டதென்றால் மனம் அந்த ஒரு விஷயத்தையே நினைத்துக்கொண்டிருக்கும். வேறு எந்த வேலையிலும் ஒட்டாது. அது அடுத்தடுத்த தவறுகளைச் செய்ய வைக்கும். விரக்தி அதிகமாகி தற்கொலை எண்ணம் வரை கொண்டுசெல்லும். இந்தச் சூழலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

62 .இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வந்துவிடுங்கள். இயற்கையை வேடிக்கை பார்க்கலாம். குழந்தைகள் கூடும் இடம், பூங்கா, கடற்கரை, மலை, ரயில்வே ஸ்டேஷன் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று அமருங்கள். 

63 .வெதுவெதுப்பான நீரில் நீண்ட நேரம் குளிக்கலாம். எப்போதும் உபயோகிக்கும் சோப்புக்குப் பதில் புதிய வாசனையுள்ள சோப்பைப் பயன்படுத்தலாம். வாசனைக்கு எண்ணங்களை மாற்றும் சக்தி உண்டு.
64 .மன அழுத்தம் இருக்கும் போது அறைக்குள் அடைந்திட வேண்டாம். ஹால், வராண்டா என நன்றாக காற்று வரும் இடங்களில் அமருங்கள். அகர்பத்தி அல்லது ரூம் ஸ்பிரே பயன்படுத்தி இருக்கும் இடத்தை நறுமணம் கமழ வைத்திருங்கள். 

65 .இருப்பதிலேயே புத்தம் புதிய, பிடித்த ஆடையை அணியுங்கள். அந்த ஆடையோடு வெளியில் ரிலாக்ஸ்டாக நடக்கலாம்.

66 .தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மனிதர்கள் கண்ணில் படும்படி இருந்தால் மனம் லேசாகும்.
67 .நல்ல நண்பர்களுக்கு போன் செய்து பேசலாம். அவர்கள் பிசியாக இருந்தால் வருந்தாமல் யார் ஓய்வாக இருக்கிறார்களோ அவர்களிடம் ஜாலியாகப் பேசுங்கள். 

68 .கிராஃப்ட் வொர்க், பெயின்டிங், சமையல் எனப் பிடித்த பொழுதுபோக்கில் இறங்குங்கள். மனம் லேசாகும். 

69 .எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். உப்பும் சர்க்கரையும் சமமாகக் கலந்திருக்க வேண்டும். வைட்டமின் சி, மன அழுத்தத்தைச் சரி செய்ய உதவும்.
70 .பெட் அனிமலுடன் நேரம் செலவிடலாம். 

71 .உண்மையான அன்பு கொண்டவர்களின் அருகாமையில் இருக்கலாம். அவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம். 

72 . டயரி எழுதலாம். உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்கள், சந்தித்த நல்ல மனிதர்கள் பற்றி எழுதலாம். 

73 . டெடி பியர், தலையணை போன்ற மென்மையான பொருள்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்திருக்கலாம். அதனுடன் பேசலாம். மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்க்கலாம்.
74 . கண்ணாடியில் நம்மைப் பார்த்து ரசிக்கலாம். பெண்கள் மனதுக்குப் பிடித்த வகையில் மேக்கப் செய்து அழகுபடுத்திக் கொள்ளலாம். ஆண்கள் கிளீன் ஷேவ் செய்துகொண்டு ஒரு குளியல் போடலாம். 

75 . பிடித்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். இனிப்பில்லாத சூயிங்கம் மெல்லலாம். 

76 . ஆன்மிக நம்பிக்கை இருந்தால் வழிபாட்டுத்தலங் களுக்குச் செல்லலாம். அங்கு அமைதியாக அமர்ந்திருங்கள். யாராவது யாருக்காவது சொல்லும் நல் வார்த்தைகள் நம்பிக்கையை உருவாக்கும்.
77 . மன அழுத்தத்துக்குக் காரணமானவர்களிடம் இரண்டு நாள்கள் கழித்து சாதாரணமாகப் பேசலாம். அழுத்தத்தில் இருக்கும்போது தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கக் கூடாது. 

78 . முதுகை வளைக்காமல், நிமிர்ந்து அமர வேண்டும். கண்களை மூடாமல் சுற்றுப்புறத்தைக் கவனிக்கலாம். 

79 .நல்ல நகைச்சுவைக் காட்சிகள், நிகழ்ச்சிகள், பேச்சுக்களை யூடியூபில் கேட்கலாம். ஜோக்ஸ் படிக்கலாம்.
80 .ஏதாவது இசைக்கருவி வாசிக்கத் தெரிந்தால் அதனை ஈடுபாட்டுடன் வாசிக்கலாம். புதிய டியூன்கள் உருவாக்கலாம். நன்கு தெரிந்த பாடலை மீண்டும் மெருகேற்றி வாசிக்கலாம். 

81 .வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யலாம். 

82 .பிரச்னையை அப்படியே ஒரு காகிதத்தில் எழுதலாம். அதற்கு என்ன தீர்வு என்பதையும் படிப்படியாக எழுதலாம். 

83 .அழுத்தத்துக்கு யார் காரணமோ அவர்களுக்கு எழுதுவதுபோல ஒரு நீண்ட கடிதம் எழுதலாம். அதில் நம் உணர்வுகளைக் கொட்டலாம். திட்ட வேண்டுமென்றால் திட்டலாம். எழுதும்போது அவர்களிடம் சொல்லிவிட்ட உணர்வு ஏற்படும். மனம் லேசாகும்.
84 .அடுத்து நாம் செய்ய வேண்டியவை, நமது பொருளாதாரம், குடும்பம், சமூக இலக்குகளை ஒரு பெரிய கார்ட்போர்டில் எழுதலாம். அதைக் கண்படும் இடத்தில் மாட்டி வையுங்கள். பெரிய இலக்குகள் உங்கள் மன அழுத்தங்களைப் போக்கிடும். 

85 .ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் வரையலாம். தெரியாதபட்சத்தில் கன்னாபின்னாவென்று நிறங்களை விரவி, ஓர் உருவமோ மாடர்ன் ஆர்ட்டோ வரைய முயற்சிக்கலாம். 

86 .புதினா சேர்த்துக் கிரீன் டீ தயாரித்துக் குடிக்கலாம். கிரீன் டீ மன அழுத்தத்தைக் குறைக்கும். 

87 .ஐஸ்கிரீம் சாப்பிடலாம். ரசித்து ருசித்துச் சாப்பிட வேண்டும். 

88 .ஏதேனும்  முதியோர் இல்லத்துக்கோ, ஆதரவற்றோர் இல்லத்துக்கோ தன்னார்வலராகச் செல்லலாம். முகம் தெரியாதவர்களுக்கு களத்தில் இறங்கி உதவலாம். சாலையோரங்களில் வசிப்போருக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கலாம். 

89 .பேருந்தில் நீண்ட தூரப் பயணம் போகலாம். அதுவும் பகல் பயணமாக இருக்க வேண்டும். வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லலாம்.
90 .யோகா செய்யலாம். ஆசனங்களை முறைப்படி கற்றுக்கொண்டு தினமும் செய்ய வேண்டும். 

91. மூச்சுப் பயிற்சியில் அமர்ந்து சுவாசத்தை கவனிக்கலாம். வயிறு பெரிதாகும் வரை மூச்சை இழுத்துப் படிப்படியாக வெளியில் விடலாம். 

92. இடது நாசியை ஒரு பக்கம் மூடிக்கொண்டு வலது நாசியால் சுவாசிக்க வேண்டும். இதை 12 முறை செய்ய வேண்டும். வலது நாசியை மூடிக் கொண்டு இடது நாசியால் 12 முறை சுவாசிக்க வேண்டும். முழுமையாக ஆக்சிஜன் உடலில் பரவும் போது மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். 

93. இலகுவான உடைகளை அணிந்துகொண்டு கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு ஒவ்வோர் உறுப்பாகக் கவனித்து ஓய்வெடுக்க வைக்கலாம். இது லேசான உறக்க நிலையை உருவாக்கும்.
94. மிதமான ஏசியில் வெள்ளை விரிப்பில் அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போடலாம். 

95. வீட்டை ஒழுங்குபடுத்தலாம் அல்லது அழகுப்படுத்தலாம். அலுவலக மேசையை ஒழுங்குப்படுத்தலாம். 

96. சமூகப்பிரச்னையால் வந்த மனஅழுத்தம் எனில் அதற்கு நம்மால் ஏதும் செய்ய முடியாது என்னும்பட்சத்தில், அதைக் கடந்து போவது உத்தமம்.
97. மன அழுத்தத்தில் இருந்து விடுபட்ட பின்னர், `நான் மன அழுத்தத்தில் இருந்தேன்’ என்ற நினைப்பு வரக்கூடாது. நாம் ஒரு மகிழ்ச்சிகரமான ஜீவன் என்று நினைத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் தரும் விஷயங்களில் இருந்து தள்ளியிருக்க வேண்டும். 

98. இந்த எல்லா வழிமுறைகளாலும் தீர்க்க முடியாத அளவுக்கு மன அழுத்தம் அதிகமிருந்தால் தகுந்த பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர் அல்லது மருத்துவரை அணுகலாம். 

99. எதுவாக இருந்ததாலும், ‘விடுங்கள் பார்க்கலாம்’ என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டால் எதுவும் உங்களைப் பாதிக்காது.
100. மூன்று மந்திர வார்த்தைகளைக் கடைபிடியுங்கள். ‘வாட் நெக்ஸ்ட்’, ‘வாட் பெஸ்ட்’, ‘வாட் எல்ஸ்’. எந்த நெருக்கடியான சூழலிலும் இந்த வார்த்தைகளைப் பொருத்திப் பாருங்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். 

கழிவுத் தொழிற்சாலை கிட்னி A to Z

“சிறுநீரகத்தை உடலின் கழிவுத் தொழிற்சாலை  அல்லது  இயற்கைச் சுத்திகரிப்பு நிலையம் என்று சொல்லலாம். உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதில் சிறுநீரகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. நீர் சேமிப்பு, கழிவுகள் வெளியேற்றம், சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குதல் எனப் பலவிதமான பணிகளுக்குச் சிறுநீரகமே பொறுப்பு. உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவு சிறிய உறுப்பான சிறுநீரகத்தின் பணி உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது.
 
கரு உருவாகும் நான்காவது மாதத்திலிருந்து தொடங்கும் அதன் இயக்கம், மரணம் வரை இடைவிடாமல் தொடரும். அத்தகைய சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால்,  உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு...” என்கிறார்  ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத் தலைவரும், இயக்குநருமான டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன். சிறுநீரகத்தின் பணிகள், அவற்றில் ஏற்படும் பாதிப்புகள், தீர்வுகள் குறித்து விரிவாக விளக்குகிறார்.
சிறுநீரக மண்டலம் 

சிறுநீரக மண்டலம், நமது உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்றும் பணியைச் சிறப்பாகச் செய்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழமுடியும். சிறுநீரகங்கள் (kidneys), உள்சிறுநீரகப்பாதை (Ureters), சிறுநீர்ப்பை (Urinary Bladder), வெளிச்சிறுநீரகக் குழாய் (Urethra) நரம்பு மண்டலம் ஆகியவை ஒருங்கிணைந்ததே சிறுநீரக மண்டலம்.
சிறுநீரகத்தின் அமைப்பு  

வயிற்றின் பின்பகுதியில், விலா எலும்புகளுக்குக் கீழே அவரைவிதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. வலது சிறுநீரகம், இடது சிறுநீரகத்தைவிடச் சற்று சிறியதாக இருக்கும். ஒவ்வொன்றும் 200-250 கிராம் எடை கொண்டிருக்கும். பழுப்பு கலந்த கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.
நெப்ரான்கள்

ஒவ்வொரு சிறுநீரகமும் 10 லட்சம் நெப்ரான்களைக் கொண்டுள்ளது. இந்த நெப்ரான்கள்தான் ரத்தத்தைச் சுத்தம் செய்யும் வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன. ரத்தமானது இதயத்தில் இருந்து தமனிகளின் வழியாக நெப்ரான்களை வந்தடைகிறது. அங்கு கழிவுகள் பிரிக்கப்பட்டு மீண்டும் மற்றொரு குழாய் வழியாக வெளியேறுகிறது. உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் உட்கிரகிக்கப்பட்டு, மீதமிருப்பவை சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.
சிறுநீரகத்தின் பணிகள்

* உடலில் உற்பத்தியாகும் கழிவுகள், நச்சுகளை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்தல்.

* உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்தல்.
* ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் அளவைச் சீராகப் பராமரித்தல்.

* ரெனின் (Renin) என்ற என்சைம் உற்பத்தியாவதைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுதல்.

ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கான ‘எரித்ரோபாய்டின்’ (Erythropoietin) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்தல்.
* ரத்தத்தில் அமிலத்தன்மை மற்றும் காரத் தன்மையை (PH அளவு) சமநிலையில் வைத்திருத்தல்.

* உணவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி அளவுகளைப் பராமரித்தல். 

* உடலில் தங்கும் உப்பின் அளவை சீராகப் பராமரித்தல்.
சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure)

சிறுநீரகம், கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதை `சிறுநீரகச் செயலிழப்பு’ என்கிறோம். இதனால், உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நச்சுகள் அதிகரித்து, உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். சிறுநீரகச் செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோகூட ஏற்படலாம். இந்தப் பாதிப்பை ‘திடீர் சிறுநீரகப் பாதிப்பு’ (Acute Kidney Injury), ‘நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு’ (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம்.
திடீர் சிறுநீரகப் பாதிப்பு 

சிறுநீரகம் திடீரென்று செயல்பாட்டை இழக்கும் இத்தகைய நிலையை உடனடியாகக் கண்டுபிடித்தால், உரிய சிகிச்சை மூலம் மீண்டும் இயங்க வைக்கலாம். நோய்த்தொற்று உண்டானாலோ, நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டாலோ திடீரென சிறுநீரகம் செயலிழக்கும். அப்போது சிறுநீரின் அளவு குறைவது, முகம் வீங்குவது போன்ற அறிகுறிகள் தோன்றும். அதேபோல, எதனால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதோ அதற்கான அறிகுறிகள் தென்படும். உதாரணமாக, லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்னும் எலிக்காய்ச்சலால்கூட சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும். அப்போது, எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு வரக்கூடிய உடல் வலி போன்றே அறிகுறிகள் இருக்கும். 

முக்கியக் காரணங்கள்

* சிறுநீரகத்துக்குத் தேவையான ரத்த ஓட்டம் தடைபடுதல்.

* சிறுநீரகங்களிலோ அல்லது சிறுநீரகப்பாதையிலோ அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுதல்.
* விபத்து காரணமாக ரத்த இழப்பு ஏற்படுவது, வாந்தி - வயிற்றுப்போக்கால் உடலில் நீரிழப்பு (Dehydration) குறைதல், நோய்த்தொற்று, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் எடுத்துக்கொள்வது, பிரசவத்தில் சிக்கல், விஷப் பாம்புக்கடி, வண்டுக்கடி, அறிந்தோ அறியாமலோ ஹேர்-டை அல்லது மயில் துத்தம் உட்கொள்வது போன்ற காரணங்களால் திடீர் சிறுநீரகச் செயலிழப்புகள் ஏற்படலாம். சிலநேரங்களில் காரணங்களே தெரியாமலும்கூட ஏற்படக்கூடும்.
சிகிச்சை முறைகள்

சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். உதாரணமாக, வாந்திபேதி காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்துபோகும். இதனால் சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தஓட்டம் தடைபடும். இந்த நிலையில், இழந்த நீரைச் சமன் செய்வதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும். குளூகோஸ் மற்றும் உப்பு கலந்த நீரை ஊசி மூலம் உடலுக்குச் செலுத்தினால் சரியாகிவிடும். நோய்த்தொற்று காரணமாக சிறுநீரகம் பழுதானால், அதற்குரிய ஆன்டிபயாடிக்கைச் செலுத்தினால் பாதிப்பு சரியாகிவிடும்.
நாள்பட்ட சிறுநீரக நோய்

சிறுநீரகமானது, ஒரே நாளில் இல்லாமல் சிறிது சிறிதாகத் திறனை இழக்கும். இது மிகவும் ஆபத்தானது. முற்றிய நிலையில்தான் இதன் அறிகுறிகள் தெரியவரும். நாள்பட்ட பாதிப்புக்குள்ளான சிறுநீரகத்தை சிகிச்சைகள் மூலம் மீண்டும் செயல்படவைக்க முடியாது. டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளே தீர்வு.
காரணங்கள்

* சர்க்கரை நோய் 

* உயர் ரத்த அழுத்தம்

* அதிக உடல்பருமன்

* சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று

* சிறுநீரக நீர்க்கட்டி நோய் (Polycystic Kidney Disease) போன்ற பரம்பரை மூலம் வரும் சிறுநீரக நோய்கள்

* சில மருந்துகள் மற்றும் நச்சுகள்

* சிறுநீர்ப்பாதை அடைப்பு

* க்ளோமெருலோநெப்ரைடிஸ் (Glomerulonephritis)  என்னும் சிறுநீரக அழற்சி
* இவைதவிர, காரணமே இல்லாமல் வரும் சிறுநீரகக் கோளாறுகளும் உண்டு. இதை, ஆங்கிலத்தில்  Chronic Kidney Disease of Unknown etiology (CKDu) என்பார்கள். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதால் அவற்றிலுள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்து இந்த வகைப் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இந்த பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன. பெரும்பாலும், வெளியேறும் வியர்வைக்கேற்ப தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த வகைப் பாதிப்புகள் உண்டாகலாம் என்கிறது அந்த ஆய்வு.

பிற நோய்கள்

சிறுநீரகக் கற்கள்
சிறுநீரகத்தில் படியும் அதிகப்படியான தாதுஉப்புப் படிவங்களே கற்களாக மாறுகின்றன. சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, அடைப்பு, போதுமான அளவு நீர் அருந்தாமை, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருள்களைச் சேர்த்துக்கொள்வது போன்ற காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். 
சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் சிறுநீரகக் கற்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில் உருவான கல், அதில் இருந்து வெளிப்பட்டு சிறுநீர்ப் பாதையில் வரும்போது, வலி அதிகமாக இருக்கும். கற்கள் எங்கே இருக்கின்றன என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சிறிய கற்களாக இருக்கும்பட்சத்தில், அதிகமாகத் தண்ணீர் குடிப்பதன்மூலம் வெளியேற்ற முயற்சி செய்யலாம். பெரியதாக இருந்தால், அறுவைசிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும்.
நோய்த்தொற்று - அறிகுறிகள்

சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவதை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection) என்கிறோம். அதாவது சிறுநீரகம், சிறுநீரகப் பாதை, சிறுநீர்ப்பை எனச் சிறுநீரக மண்டலத்தில் எங்கு வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். 

சிறுநீர் கழிப்பதில் சிரமம், எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், காய்ச்சல், வாந்தி, அடி வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். நோய்த்தொற்று எந்த இடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.
க்ளோமெருலோநெப்ரைடிஸ் (Glomerulonephritis) 

சிறுநீரகத்தின் உள்ளே உள்ள நுண்ணிய முடிச்சு போன்ற வடிகட்டிகள் (Glomeruli) மற்றும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவதால், சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதுவும் உடனடி மற்றும் நாள்பட்ட சிறுநீரகப் பிரச்னையாக வெளிப்படலாம். முகத்தில் நீர் கோத்தல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உயர் ரத்த அழுத்தம், புரதம் அதிகம் வெளியேறுதல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
சிறுநீரகப் பாதையில் தடை

சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். சிலருக்கு புராஸ்டேட்டின் (Prostate)அளவு பெரிதாவதால், தடை ஏற்பட்டு சிறுநீர் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படலாம்.
டயாலிசிஸ் (Dialysis)

சிறுநீரகம் செயலிழந்தால் மருத்துவச் சிகிச்சை மட்டும் போதாது. சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். இதற்கு ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்று பெயர். அதாவது, சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் நேரத்தில், சிறுநீரகத்தின் சில பணிகளை இயந்திரத்தின் மூலம் செய்யவைப்பதே டயாலிசிஸ். 

ஹீமோ டயாலிசிஸ் (Hemodialysis), பெரிட்டோனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) என இரு வகையான டயாலிசிஸ் இருக்கின்றன.
ஹீமோ டயாலிசிஸ்

ஹீமோ டயாலிசிஸ், மருத்துவமனையில் செய்யப்படும். இந்தமுறையில் கையில் இரண்டு குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குழாய் வழியாக கெட்ட ரத்தம் இயந்திரத்தினுள் செல்ல, அங்கு அது சுத்தம் செய்யப்பட்டு, மற்றொரு குழாய் வழியாக உடலுக்குள் செல்லும். பெரும்பாலும், ஒவ்வொரு முறையும் நான்கு மணி நேரம் என வாரத்துக்கு மூன்றுமுறை டயாலிசிஸ் செய்யப் பரிந்துரைக்கப்படும். திடீரென சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் கழுத்து வழியாகக் குழாய் பொருத்தப்பட்டு டயாலிசிஸ் செய்யலாம்.
பெரிட்டோனியல் டயாலிசிஸ்
 
பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்பது, வயிற்றில் சிறிய அறுவைசிகிச்சை செய்து நிரந்தரமாகக் குழாய் பொருத்திச் செய்யக்கூடியது. இதற்காக மருத்துவமனை செல்லத் தேவையில்லை. வீட்டிலேயே செய்துகொள்ளலாம். ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை என ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டியிருக்கும்.
சிறுநீரக மாற்று சிகிச்சை 

சிறுநீரகங்கள் முற்றிலும் செயலிழந்தவருக்குச் சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney Transplantation) செய்ய வேண்டியிருக்கும். சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் நிலையில், நச்சுப் பொருள்கள் வெளியேற்றும் பணியை மட்டுமே டயாலிசிஸ் மூலம் செய்ய முடியும். எனவே, இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாதவர்களுக்கும் இந்தச் சிறுநீரக மாற்று சிகிச்சையே தீர்வு.
முன்பு, ஒரே ரத்தப்பிரிவினரிடமிருந்தே சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டுப் பொருத்தப்பட்டது. தற்போது, மாற்று ரத்தப்பிரிவினரிடமிருந்தும் தானம் பெற்றுப் பொருத்தும் அளவுக்கு மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. உயிருள்ள ஒருவரிடமிருந்தோ அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்தோ பெற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யமுடியும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு தொற்றுப் பாதிப்புகள் வராதபட்சத்தில், ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும்.
சிறுநீரகப் பரிசோதனைகள்

* சிறுநீர்ப் பரிசோதனை மூலம் புரதம் வெளியேறுதல், ரத்தச் சிவப்பணுக்கள் வெளியேறுதல், சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று இருப்பதை அறிய முடியும்.

* ரத்தப் பரிசோதனை மூலம், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவு பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியப்படும்.

* இந்தப் பரிசோதனைகளில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால் வேறு பரிசோதனைகளுக்குப் பரிந்துரைக்கப்படும்.

* சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து, எந்த மாதிரியான கிருமித்தொற்று என்று கண்டறியப்படும். அடிக்கடி சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டால், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படும். 

* சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அடைப்பு போன்றவற்றை அல்ட்ராசவுண்ட் மற்றும் சி.டி ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் கண்டறியமுடியும்.
தவிர்க்கலாம்... தடுக்கலாம்...

* மரபுவழியாகத் தொடரும் சிறுநீரகப் பிரச்னை, பிறவியிலேயே குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க முடியாது. 

* சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

* உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

* 40 வயதுக்கு மேற்பட்டோர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, சிறுநீரில் ரத்த அணுக்கள் சோதனை, ஆண்டுதோறும் செய்துகொள்ள வேண்டும்.

* ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக்கல் உருவாவதைத் தடுக்கும்; சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கும்.
* வார்ம் அப் செய்யாமல் கடினமான உடற்பயிற்சி செய்வதையும், புரோட்டீன் பவுடர்களைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். 

* புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவை ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். சிறுநீரகத்துக்கான ரத்த ஓட்டத்தைக் குறைத்துப் பாதிப்பை உருவாக்கும். எனவே, இந்தப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

* ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
* வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.
* வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற காரணங்களால் நீரிழப்பு ஏற்பட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

* நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.

* மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.
* விளம்பரங்களை மட்டும் நம்பி என்னவென்றே தெரியாத மருந்துகளை உட்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகளைக் கண்டறிவது எப்படி?

``சிறுநீரகப் பாதிப்புகள் மற்ற நோய் பாதிப்புகளைப்போலன்றி, அறிகுறிகள் இல்லாமலேயே ஏற்படக்கூடியவை. வேறு ஏதேனும் பரிசோதனை அல்லது சிகிச்சைக்காகச் செல்லும்போதுதான் பெரும்பாலானோருக்கு பாதிப்பு இருப்பதே தெரியவரும். அதிலும் குழந்தைகள் என்றால் அதிக அக்கறை தேவை” என்கிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  மூத்த  சிறுநீரகவியல் நல மருத்துவர் ஆர். பத்மராஜ்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பிரச்னைகள் குறித்து விளக்குகிறார் இவர். 

``குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போது எடுக்கும் ஸ்கேன் மூலம் சிறுநீரகத்தின் வளர்ச்சிக் குறைபாடு, சிறுநீரக அடைப்பு போன்ற பாதிப்புகளைக் கண்டறிய முடியும். சாதாரண பிரச்னையாக இருந்தால், பிறந்த பிறகு அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யலாம். சிறுநீரகப் பாதை வழியாகவே செலுத்தப்பட்டுக் கண்டறியும் யூரிட்ரோஸ்கோபி (Ureteroscopy), சிஸ்டோஸ்கோப் (cystoscope) போன்ற நவீனக் கருவிகள் வந்துவிட்டன.
சிறுநீர்ப் பாதையில் பிரச்னைகளுடன் சில குழந்தைகள் பிறக்­கின்றன. இதை போஸ்டீரியர் யுரித்ரல் வால்வ் அப்ஸ்ட்ரக்ஷன் (Posterior Urethral Valve Obstruction என்கிறார்கள். இதுபோன்ற குறைபாடுகளைக் கருவிலேயே கண்டுபிடித்துவிடலாம். குழந்தை பிறந்­ததும், கண்டுபிடித்து சிகிச்சையளிக்­கலாம்.
இது­போ­லவே சிறு­நீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்த்தாரைக்கு இறங்­காமல், மேல்பகுதிகளுக்கு ஏறு­வதும் குழந்­தை­க­ளுக்கு உண்டாகும் ஒரு பிரச்னைதான். அப்போது சிறுநீரில் ஏற்பட்டிருக்கும் தொற்று மேல்நோக்கிப் போவதுடன் அழுத்தமும் ஏற்படும். இதனால், சிறுநீரகம் செயலிழந்துபோக வாய்ப்புள்ளது. எக்ஸ்ரே, ஸ்கேன் மூலம் கண்டறிந்து, ஆரம்பநிலையில் இருந்தால் மருந்துகள் மூலம் சரிசெய்யலாம். முற்றியநிலையில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்.
நெப்ராட்டிக் சிண்ட்ரோம் (Nephrotic syndrome)

சிறுநீரில் அதிகளவு புரதம் வெளியாவதால் ரத்தத்தில் புரதச்சத்தின் அளவு குறையும். இந்த நிலைக்கு `நெப்ராட்டிக் சிண்ட்ரோம்’ என்று பெயர். அதாவது, சிறுநீரகத்தில் இருந்து ஒருநாளைக்குச் சராசரியாக 150 மி.கி அளவுக்கு மட்டுமே புரதம் வெளியேற வேண்டும். இதுதான் இயல்பான அளவு. இதைவிட அதிகமாக வெளியேறும்போது, கை,கால் வீக்கம், கண்களைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படும். ஒரு வயது முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் சிறுநீரின் அளவு குறைந்து சிறுநீரகம் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற பாதிப்புகள் வேறு வகை நோய்களாலும் ஏற்படலாம். எனவே, நோயின் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டுகள் மூலம் இந்த நோய்களைக் குணமாக்கலாம். அதே நேரத்தில் வேறு சில நோய்களுக்கு இது பலனளிக்காது. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையே நிரந்தரத் தீர்வாக அமையும்.
நெப்ரைட்டிக் சிண்ட்ரோம்

(Nephritic Syndrome) 


ரத்தம் சிறுநீரில் கலந்து வெளியேறுவது ‘நெப்ரைட்டிக் சிண்ட்ரோம்’ எனப்படும். சிலருக்கு சிறுநீரில் சிவப்பணுக்களும் புரதமும்கூட வெளியேறும். இந்தநோய் ஏற்பட்டால் குழந்தைகளின் முகம் வீங்கிவிடும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சருமத்தில் புண்கள் ஏற்படுவதாலும், தொண்டையில் கிருமித்தொற்று காரணமாகவும் நெப்ரைட்டிக் சிண்ட்ரோம் ஏற்படும். நெப்ராட்டிக் மற்றும் நெப்ரைட்டிக் சிண்ட்ரோம் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் அல்லது மரபணுப் பிரச்னைகளால் ஏற்படக்கூடியவை.
சிறுநீரக நீர்க்கட்டி நோய் 

சிறுநீரகத்தில் சிறுநீர்க்கட்டிகள் தோன்றுவதை ‘பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ (Polycystic kidney disease) என்கிறோம். இது மரபுரீதியாகச் சிலருக்கு சிறுவயதிலேயே வரும். ஆனால், வயதான பிறகுதான் இந்த நோயின் அறிகுறிகள் தெரியவரும். சிலருக்கு, சிறுநீரகத்தில் நீர்கோத்தல் பிரச்னை நாளடைவில் மிகப்பெரிய கட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது. பிற்காலத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யவேண்டியிருக்கும்.
சிறுநீர்ப்பை தொடர்பான நோய்

சிறுநீர்ப்பைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால், மூளைக்குச் செல்லும் தொடர்பு தடைபடும். இதற்கு ‘நியூரோஜெனிக் பிளாடர்’ (Neurogenic Bladder) என்று பெயர்.
பொதுவாக, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஐந்தாவது வயதில் நின்றுவிடும். சிலருக்கு எட்டு வயது வரைகூட அது நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை இருந்தால், அது சிறுநீரகத் தொற்றால் ஏற்பட்டதா, மனம் சம்பந்தமான காரணங்களினாலா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், சிறுநீரகத்தில் பிரச்னை இருக்க வாய்ப்புண்டு. சிலருக்கு சிறுநீரகம் சுருங்கியிருக்கும். ஆனால், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வாந்தி வருவது என எந்த அறிகுறிகளும் தெரியாது. எனவே, வேறு எந்த நோய்களுக்காக மருத்துவமனைக்குச் சென்றாலும் ரத்த அழுத்தம், சிறுநீர்ப் பரிசோதனை போன்றவற்றைச் செய்துகொள்வது நல்லது. சிறுநீர் பிரிவதில் வேறு சிரமங்கள் எதுவும் இருந்தால் சிறுநீரகத்தை ஸ்கேன் செய்து பார்த்துவிடுவதும் நல்லது.