Friday, 18 August 2017

சதுரகிரி யாத்திரை ! - 3


பணம் புரளும் வங்கிகளது பாதுகாப்புக்கு, ஆயுதம் தாங்கிய ஆஜானுபாகுவான செக்யூரிட்டிகளை ராத்திரி- பகல் பாராமல் காவலுக்கு நியமிக்கிறோம். இது கலியுகத்தின் தேவை.
இதே கலி யுகத்தில் இரும்பைத் தங்கமாக்க உதவும் மூலிகை ரகசியங்களையும், ஏராளமான தங்கப் புதையலையும் காலாகாலத்துக்கும் பத்திரமாகப் பாதுகாப்பது, சாதாரண விஷயமா, என்ன?! விலை மதிப்பில்லாத இந்த பொக்கிஷங்களைக் காக்க பலமான ஒரு செக்யூரிட்டி தேவை அல்லவா? எனவேதான், புதையல் அடங்கிய இந்த பூமியை பல நூற்றாண்டுகளாக காவல் காத்து வருகிறார் பிலாவடி கருப்பர். அவர், கற்சிலை வடிவில் இந்த சதுரகிரி மலைக்கே காவல் தெய்வமாக வீற்றிருந்து, தனது கண்காணிப்பின் மூலம் இந்தப் பணியைத் தொடர்கிறார்.
தைலக் கிணறு எனப்படும் ஒரு பிரமாண்ட கிணற்றுக்குள் புதையல்களும் ரகசியங்களும் இன்றளவும் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது.
தாணிப்பாறை அடிவாரமே சதுரகிரி யாத்திரை யின் துவக்கம்! கிட்டத்தட்ட பயணத்தின் இறுதிக் கட்டமாக நாம் அடைவது இந்த பிலாவடிக் கருப்பர் குடி கொண்டுள்ள ரம்மியமான பிரதேசத்தைத்தான். இந்த சந்நிதிக்கு அருகில்தான் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி ஆலயங்கள்! பிலாவடிக் கருப்பர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவு நடைபயணத்துக்குப் பின் வலப் பக்கம் சென்றால், சுந்தர மகாலிங்கம்; இடப் பக்கம் சந்தன மகாலிங்கம்.
ரசவாதம் (பிரத்தியேக மூலிகைகளின் சாறு கலந்து எந்த ஒரு சாதாரண உலோகத்தையும் தங்கமாக ஆக்கும் வித்தை) என்கிற கலையில் சிறந்த மேதையான காலாங்கிநாதர் எனும் சித்தர் உருவாக்கிய பிரம்ம தீர்த்தம், பிலாவடிக் கருப்பர் சந்நிதிக்கு முன்னால் ஓடுகிறது. மழைக் காலத்தில் இந்த பிரம்ம தீர்த்தத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடுமாம். இதில் மூழ்கி எழுந்து பிலாவடி கருப்பரை வணங்கினால், எத்தகைய பாவமும் அகன்று, புண்ணிய வாழ்வு கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது.
ஒரு மண்டபம் போல் அமைந்துள்ளது பிலாவடி கருப்பர் சந்நிதி. உள்ளே பழைய கருப்பர் இருக்கிறார்; புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பீரமான கருப்பரும் இருக்கிறார். மலைக்கு மேலே செல்லும்போதும்... கீழே இறங்கும்போதும் இவரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். ஒரு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து மனமார வழிபட்டாலே போதும்... கருப்பரின் அருளாசி கிடைத்து விடும். பெரிதான பலா மரத்தின் ஒரே ஒரு காய் மட்டும் சந்நிதியின் உள்ளே கருப்பரின் அருகே காய்த்துத் தொங்குகிறது. ‘‘எப்போதும் கருப்பருக்குப் பக்கத்தில் சுமாரான சைஸில் ஒரு பலாக் காய் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும். இது முற்றி விழுந்து விட்டால் அடுத்து அதே இடத்தில் இன்னொரு காய் காய்க்கும். இந்த அதிசயம் பல வருடங்களாக நடந்து கொண்டே வருகிறது!’’ என்றார் கருப்பருக்கு பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி ஒருவர்.
பொக்கிஷங்களும் சித்த ரகசியங்களும் அடங்கிய தைலக் கிணறு பிலாவடிக் கருப்பர் சந்நிதியின் அருகே உருவான கதை சுவாரஸ்யமானது. ‘ஆகா... இப்பேர்ப்பட்ட அந்தத் தைலக் கிணற்றை நாம் நேரில் சென்று பார்த்து விட வேண்டும்’ என்று மட்டும் ஆசைப்பட்டு விடாதீர்கள். காரணம்- தைலக் கிணறு இருக்கக் கூடிய இடம், மர்மமான ஒரு பூமி. எவருடைய பார்வைக்கும் அந்தப் பிரதேசம் தட்டுப்படவே படாது. சரி, தைலக் கிணறு உருவான கதையைப் பார்ப்போம்.
ஆதி காலத்தில் வாலைபுரம் எனப்படும் வளமான ஒரு கிராமத்தில் வாமதேவன் என்ற வியாபாரி வசித்து வந்தான். இறை பக்தி அதிகம் கொண்டவன். ‘பலரும் வந்து வணங்கிச் செல்லும் வகையில் எனது கிராமத்தில் ஒரு சிவாலயம் இல்லையே?’ என்ற ஏக்கம் வாமதேவனுக்கு இருந்து வந்தது. அந்த ஏக்கம் நிறைவேறுவதற்கும் ஒரு வேளை வந்தது.
வியாபாரத்தின் மூலம், தான் சேர்த்த பொருளை வைத்துக் கிராமத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டும் பணியைத் துவக்க முடிவெடுத்தான் வாமதேவன். தேர்ந்த ஸ்தபதிகளை வரவழைத்தான். கோயில் கட்டும் பணிகளும் ஒரு சுப தினத்தில் துவங்கின. வேலைகள் துரித கதியில் நடந்தது கண்டு ஆனந்தப்பட்டான் வாமதேவன்.
ஆனால், ஒரு கட்டத்தில் பணிகள் ஸ்தம்பித்து நின்றன. காரணம், வாமதேவனிடம் இருந்த பொருள் மொத்தமும் அதுவரை நடந்த கட்டு மானப் பணிகளுக்காகச் செலவாகிப் போயிருந்ததுதான். இதற்கு மேல் கோயில் வேலைகளைத் தொடர வேண்டுமானால், பொருள் தேவை என்ற நிலைமை.
வாமதேவன் கவலை அடைந்தான். தனது கிராமத்துக்கு அருகில் இருக்கும் சில மன்னர்களிடம் போய், தான் கட்டி வரும் கோயில் பற்றிச் சொல்லி, தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளப் பொருளுதவி கேட்டான். ‘தனி ஒருவனை நம்பிப் பொருள் உதவுவதா?’ என்று வாமதேவனின் நாணயத்தின் மேல் சந்தேகப்பட்ட மன்னர்கள் பலரும் அவனை வெறுங் கையோடு திருப்பி அனுப்பினர். 
 
ஒரு நாள் அவன் சோகத்துடன் வந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பட்டார் ஒரு துறவி. பக்தி மணம் கமழும் அந்தத் துறவியின் தேஜஸைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனான் வாமதேவன். அவர் பாதம் பணிந்து நமஸ்கரித்து எழுந்தான். ‘தனது குறைகள் முழுவதையும் இவரிடம் சொன்னால் தேவலை...’ என்று தீர்மானித்து, எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னான்.
‘‘கவலைப்படாதே வாமதேவா... கோயில் கட்டுவது என்பது குடிமக்களால் ஆகக் கூடிய செயல் அல்ல. இது மன்னர்களுக்கும், மகத்தான செல்வ வசதி படைத்தவர்களுக்கும் மட்டுமே கைகூடக் கூடிய புனிதமான ஒரு பணி. உனது கையிருப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து விட்டது. நீயே இப்போது கையேந்தி நிற்கிறாய். உனது எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆத்மார்த்தமான பக்தியுடன் நீ கோயில் கட்டி வருவது உண்மையானால், அந்தப் பணி செவ்வனே முடிய ஒரே ஒரு வழி உண்டு...’’ என்று புருவங்களை உயர்த்திச் சொன்ன அந்தத் துறவி சற்று நிறுத்தினார்.
வாமதேவன் முகம் பிரகாசம் அடைந்தது. ‘‘இறைவனுக்கான இந்த ஆலயத்தைக் கட்டி முடித்துப் பார்க்க என் மனம் விழைகிறது. எப்பாடு பட்டாவது ஆலயம் எழும்புவதை என் ஆயுட்காலத்துக்குள் நான் பார்த்து விட வேண்டும்... சொல்லுங்கள். தாங்கள் சொல்லும் வழியின்படி நடக்கிறேன்!’’ என்று கண்களில் நீரோடு சொன்னான்.
‘‘வாமதேவா... உனது பக்தியைப் பாராட்டுகிறேன். உன்னால் இந்தக் காரியம் நல்ல விதமாக முடியும். சொல்கிறேன். உபாயத்தைக் கேள். சதுரகிரியை நோக்கி உனது பயணத்தை உடனே துவக்கு. அங்கே காலாங்கி முனிவர் என்ற சித்தர் இருக்கிறார். மிகப் பெரும் தவசீலர். அங்கே அவரை வணங்கி, உனது விருப்பத்தைச் சொல். எல்லாம் சுபமாக நிறைவேறும்!’’ என்றார்.
துறவியின் இந்த பதிலைக் கேட்ட வாமதேவன் பெரிதும் மகிழ்ந்தான். தொடர்ந்து கோயிலைக் கட்டி முடிக்க, புதிய வழி தெரிந்து விட்டதில் பூரிப்படைந்தான். துறவியை வணங்கி, மீண்டும் நமஸ்கரித்தான். ‘‘எனக்கு உத்தரவு கொடுத்து ஆசீர்வதியுங்கள் முனிவரே. நான் இப்போதே சதுரகிரி சென்று காலாங்கிநாதரைச் சந்திக்கிறேன்...’’ 
துறவியும் விடை கொடுக்க... வாமதேவன், சதுர கிரியை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினான். காடு, மலை எல்லாம் கடந்து சித்த புருஷர்கள் வாழும் உயர்ந்த மலையாம் சதுரகிரியை அடைந்தான். அங்கே காலாங்கி வனத்தில் ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்த காலாங்கிநாதரைச் சந்தித்தான். அவரைப் பணிந்து வணங்கினான். புன்னகையுடன் ஆசீர்வதித்தார் காலாங்கிநாதர். திருமூலரின் மாணாக் கராக இருந்த சித்த புருஷர் இவர்!
நெடுந்தொலைவில் இருந்து வந்தவன் என்பதால் வாமதேவனிடம் ஆற அமர அனைத்தையும் விசாரித் தார் காலாங்கிநாதர். கிராமத்தில் கோயில் அமைக்கத் தொடங்கியதில் இருந்து தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான் வாமதேவன். ‘இவனுக்கு உதவி செய்யலாம். தப்பில்லை!’ என்று தீர்மானித்த காலாங்கிநாதர் ஒரு கணம் சிந்தித்தார். ‘வந்திருக்கும் இவன் நிஜமாகவே நல்லவன்தானா? ஆலயத் திருப்பணி அது இது என்று சொல்லி சிலர் பணம் வாங்கி, தங்களது சுய தேவைகளுக்குப் பயன்படுத்தி வரும் காலத்தில், இவனுக்கு நாம் பொருளுதவி செய்ய நினைப்பது நியாயமா? இவனும் ஒருவேளை தவறான ஆசாமியாக இருந்து விட்டால்?’ என்று அந்தக் காலத்திலேயே சிந்தித்தார் காலாங்கிநாதர்.
தவிட்டையும் தங்கமாக மாற்றும் வல்லமை கொண்ட அந்த சித்த புருஷர், தயக்கத்துடன் நிற்பது வாமதேவனுக்குக் கலக்கத்தை உண்டு பண்ணியது!

தவசிப் பாறை 

சதுரகிரிக்கும் மேலே சுமார் இரண்டு மணி நேரம் நடந்தால் இந்தப் பாறையை அடையலாம். இந்தப் பாதை சற்று கடினமானது. சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயிலில் இருந்து பார்த்தால், இந்தத் தவசிப் பாறை சின்னதாகத் தெரியும். அதுபோல் தவசிப் பாறையில் இருந்து பார்த்தால் இந்த இரண்டு கோயில்கள் இருக்கும் பகுதிகள் புள்ளியாகத் தெரியும். தவசியில் இருந்து கீழே இறங்கினால், அந்தப் பாதை சுந்தர மகாலிங்கம் கோயிலில் முடியும்!
தவசிப் பாறைக்குச் சற்றுக் கீழே ஒரு பாறை இருக்கிறது. ‘ஏ.ஸி.பாறை’ என்கிறார்கள். அபாயமான இறக்கத்தில் இறங்கினால் ஏ.ஸி. பாறை! இங்கே அமர்வதும் வெகு அபாயம். சில தப்படிகள் எட்டிப் பார்த்தால் அதலபாதாளம். இங்கே அமர்ந்தால் ஏ.ஸி-யைப் போல் சில்லென்ற குளிர் காற்று நம்மைத் தாக்குகிறது. அதனால் இந்தப் பெயர் வந்ததாம்.
தவசிப் பாறைக்கு மேலே ஒரு பாயிண்ட் உள்ளது. இங்கே ஏறி நிற்க முடியும். இதுவும் அபாயமானதுதான். இருந்தாலும், இங்கே நின்று இயற்கையின் கொடையை ரசிப்பது, கொள்ளை அழகு. இங்கே சதுர வடிவில் ஒன்பது பெரிய பாறைகள் காணப்படுகின்றன. இதை நவக்கிரகக் கற்கள் என்கிறார்கள். இங்கே வீசும் பேய்க் காற்றையும் மீறி, பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வணங்குகிறார்கள்.
தவசி குகையில் சித்தர்கள் இன்றைக்கும் சூட்சுமமாக வந்து போகிறார்களாம். தவழ்ந்துதான் இந்தக் குகையின் உள்ளே போக முடியும். பத்தடி தூரத்துக்குத் தவழ்ந்து போனால், அடுத்த ஐந்தடி தூரத்துக்கு உட்கார்ந்த நிலையில் செல்ல வேண்டும். இதைத் தாண்டினால், நின்ற நிலையில் கொஞ்சம் நடக்கலாம். பத்துப் பேர் உட்காரும் அளவுக்கு உள்ளே வசதியான இடம் இருக்கிறது. உள்ளே கரடிகள் வந்து போனாலும், பக்தர்கள் ரிஸ்க் எடுத்து, உள்ளே போய் வெற்றி வீரராகத் திரும்புவது ஆபத்தான ஒன்றுதான்! இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமனான ஆசாமிகள் ஆகியோர் உள்ளே செல்ல இயலாது. வெளியே இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்!
(அதிசயங்கள் தொடரும்)

No comments:

Post a Comment