Saturday, 5 August 2017

திருமறை அருளிய பொள்ளாப் பிள்ளையார்!






''கொழுக்கட்டைன்னா எனக்குப் பிடிக்கும்னு தெரியுந்தானேப்பா? இன்னிக்காவது எடுத்துட்டு வந்தியாப்பா?''- ஏக்கத்துடன் கேட்டான் சிறுவன் நம்பி. கோயிலில் கைங்கர்யம் செய்து வரும் அனந்தேசர்- கல்யாணி தம்பதியின் மகன்.
நைவேத்தியத்துக்கு கொழுக்கட்டை செய்து தருவாள் கல்யாணி. அதை எடுத்துச் சென்று பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகித்து விட்டு, வெறும் பாத்திரத்துடன் வீடு திரும்புவார் அனந்தேசர். ஆசை ஆசையாக ஓடி வந்து, அப்பாவின் கால்களைக் கட்டிக் கொண்டு, 'கொழுக்கட்டை எங்கேப்பா?' என்று நம்பி கேட்பான். இன்றும் அப்படித்தான்! அனந்தேசரும் தனது வழக்கமான பதிலைச் சொன்னார்... ''பிள்ளையார் சாப்பிட்டுட்டாருப்பா!''
ஒருநாள், வெளியூர் சென்றிருந்தார் அனந்தேசர். அம்மா கல்யாணி தயாரித்த நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டு, கோயிலுக்கு ஓடினான் நம்பி. மூச்சிரைக்க பிள்ளையார் சந்நிதிக்கு வந்தவன், விநாயகரை நீராட்டினான்; வஸ்திரம் அணிவித்தான்; நீரில் குழைத்து விபூதி இட்டு விட்டான்; சந்தனம் வைத்தான்; நடுவே குங்குமம் இட்டான்; விநாயகரின் சிரசில் பூக்களை வைத்தான். பக்தியுடன் பூஜை செய்தான்; நைவேத்தியத்தை படைத்தான்.
பிறகு, ''பிள்ளையாரே... கொழுக்கட்டை உமக்குத்தான்! சாப்பிடும்'' என்றான் பிள்ளையாரைப் பார்த்து!
கொழுக்கட்டை அப்படியே இருந்தது.
கெஞ்சினான்; புலம்பினான்; கதறினான்; கல்லில் தலையை முட்டிக் கொண்டு அழுதான். ஆனாலும் கொழுக்கட்டை அப்படியே இருந்தது. அழுதபடியே வீட்டுக்குக் கிளம்பினான். அப்போது, 'நம்பி பொறு' என்று ஒரு குரல்!
திரும்பி, சந்நிதியைப் பார்த்தான். முகம் முழுவதும் பரவசமும் பிரகாசமுமாக மலர்ந்தான். அங்கே... கனத்த உடலும் பெருத்த தொந்தியுமாக, யானை முகமும் கருணைப் பார்வையுமாக, வெண் பட்டாடை மினுமினுக்க... தன் துதிக்கையை நீட்டி, கொழுக்கட்டையை எடுத்துச் சாப்பிட்டார் விநாயகப் பெருமான்.
ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தவன், ஓடிப்போய் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னான். 'என்னது... தும்பிக்கையை நீட்டி பிள்ளையார் சாப்பிட்டாரா?' - நம்பிக்கையே இல்லாமல் கேட்டாள். இந்த விஷயம் அப்பாவுக்கும் சொல்லப்பட்டது.
மறுநாள்... கொழுக்கட்டையுடன் விநாயகரிடம் சென்றான் நம்பி. பின்தொடர்ந்த தந்தை, ஒளிந்திருந்து கவனித்தார். நைவேத்தியம் செய்த கொழுக்கட்டையை எடுத்துச் சாப்பிட தும்பிக்கை நீண்டது. சிலிர்த்துப் போனார் அனந்தேசர். தனக்குக் கிடைக்காத பாக்கியம், தன் மகனுக்குக் கிடைத்ததை எண்ணி பூரித்தார். 'என்ன பாக்கியம் செய்தேன்' என்று நெகிழ்ந்து, விநாயகர் சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். பிள்ளையை அப்படியே அள்ளிக் கட்டிக் கொண்டார். பிறகு, கணபதியின் பேரருளால்... நம்பியாண்டார் நம்பி என அனைவராலும் போற்றப்பட்டார் நம்பி. இந்தச் சம்பவம் நிகழ்ந்த திருத்தலம் திருநாரையூர். இங்கு அருளும் விநாயகரின் திருநாமம் பொல்லாப் பிள்ளையார்!
என்னது... பொல்லாத பிள்ளையாரா?
கல்லில் பொளியப்படாத சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியவர் என்பதால் பொளியாத பிள்ளையார் என்பதே இவர் திருநாமம். பொளியாத பிள்ளையார், பொள்ளாப் பிள்ளையார் ஆனார்; பின்னர் பொல்லாப் பிள்ளையார் என்று மருவியதாம். வலம்புரி விநாயகரான பொள்ளாப் பிள்ளையார், நம் கஷ்டங்கள் அனைத்தையும் களைந்து அருள்பாலிக்கிறார்.
அற்புதமான திருத்தலம்! ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசௌந்தரேஸ்வரர் அருள்பாலிக்கும் அழகு ததும்பும் கோயில்; காவிரியின் வடகரையில் உள்ள 33-வது சைவ ஆலயம்; இங்கு அருள்பாலிக்கும் சிவனாரை தரிசித்த ஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும் அப்பர் பெருமான் இரண்டு பதிகங்களும் பாடிப் பரவியுள்ளனர்.
சரி... அதென்ன திருநாரையூர்?
தவமும் கோபமும் கைவரப் பெற்ற துர்வாச முனிவர், ஆழ்ந்த தவத்தில் இருந்தார்! அப்போது... வானில் பறந்து சென்றனர் கந்தர்வர்கள். இவர்களில் தேவதச்சன் என்பவன், பழங்களை சாப்பிட்டு விட்டு, கொட்டைகளைக் கீழே போட... அது துர்வாச முனிவரின் மீதா விழ வேண்டும்? கலைந்தது தவம்; எழுந்தது கோபம்! பறந்து செல்லும் கந்தர்வனையும் தலையில் விழுந்த பழக் கொட்டையையும் பார்த்தவர்... 'பறவை போல் பழக் கொட்டையை உதிர்த்த நீ, நாரையாகக் கடவது' என சபித்தார்!
அந்த நிமிடமே, தேவதச்சன் நாரைப் பறவையானான்! கதறித் துடித்த நாரை, சாப விமோசனம் கேட்க... 'இங்கே உள்ள சிவனாருக்கு, கங்கை நீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்தால், விமோசனம் உண்டு' என அருளினார் துர்வாசர்!
இதையடுத்து, கங்கை நீரை எடுத்து வந்து, சிவனாரை பூஜித்து வந்தது நாரை! பக்தர்களை சோதிப்பதில் சூரராயிற்றே ஈசன்?! நாரை, ஒரு முறை காசியில் இருந்து கங்கை நீரை எடுத்து வரும் போது... வழியில் பெரு மழை! காற்றும் கை கோர்க்க, புயலானது. பறக்க முடியாமல் தவித்தபடி பறந்தது நாரை. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாகக் காற்றில் பறந்து விழுந்தது (அப்படி சிறகு விழுந்த இடம்... சிறகிழந்தநல்லூர் என வழங்கப்படுகிறது. திருநாரையூரில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர்). ஒருகட்டத்தில் இறக்கைகள் இரண்டையும் இழந்த நாரை, தவழ்ந்தபடியே வந்து, சிவனாருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்ய... நாரைக்கும் மோட்சம் கொடுத்து அருளினாராம் சிவபெருமான்! இதனால் இந்த ஊர், திருநாரையூர் என வழங்கப்படுகிறது.
இப்படி... நம்பிக்கு அருளிய பொள்ளாப் பிள்ளையாரும் நாரைக்கு மோட்சம் தந்த சிவனாரும் அருள்பாலிக்கும் ஒப்பற்ற தலம் இது! அதுமட்டுமா? நாமெல்லாம் பாடிப் பரவசப்படும் தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்களைக் காட்டி அருளியவரே விநாயகப் பெருமான்தான்! இவற்றை செவ்வனே தொகுத்துத் தந்தவர்... நம்பியாண்டார் நம்பி.
தேசங்கள் பலவற்றை வென்றெடுத்த ராஜராஜ சோழனின் மனதுள் நெடுங்காலமாகவே கவலை ஒன்று... 'சைவத் திருமுறைகளைத் தேடிக் கண்டெடுத்து, அவற்றைத் தொகுத்து வெளியிட வேண்டும்' என்பது! எங்கே தேடியும் கிடைக்கவில்லை திருமுறை. அப்போதுதான், நம்பியாண்டார் நம்பியின் சிறப்புகளை அறிந்தான் மன்னன். அவருக்கும் பொள்ளாப் பிள்ளையாருக்குமான நெருக்கத்தைக் கேட்டு பூரித்தவன், உடனே திருநாரையூருக்குப் புறப்பட்டு வந்தான். முதலில்... நம்பியாண்டார் நம்பியை வணங்கி, தனது விருப்பத்தை எடுத்துரைத்தான். பிறகு, நம்பியாண்டார் நம்பியும் ராஜராஜசோழனும் பொள்ளாப் பிள்ளையாரிடம் சென்றனர். கொண்டு வந்திருந்த நைவேத்தியங்களை ஏற்றார் விநாயகர். திருமுறை தேடி மன்னர் வந்திருக்கும் விவரம் சொன்ன நம்பி, 'திருமுறை இருக்கும் இடத்தைக் காட்டி அருள்வாய்' என வேண்டினார். அப்போது... 'தில்லை நடராஜர் தலத்தின் தென்மேற்கு மண்டபத்தில், கை இலச்சினை (முத்திரை) கொண்ட அடையாளத்துடன் சுவடிகள் இருக்கும்' என அருளினார் விநாயகப் பெருமான்!
நெக்குருகிப் போனான் மன்னன்! நம்பியையும் உடன் அழைத்துக் கொண்டு தில்லைக்கு விரைந்தான். அங்கே உள்ள அந்தணர்களிடம் விவரம் சொல்ல, அவர்களின் விருப்பப்படி சைவ மூவருக்கு விக்கிரகங்களை ஸ்தாபித்து வணங்கினான் ராஜராஜன். அடுத்து, விநாயகர் அருளிச் சொன்ன இடத்தில்... புற்றால் மூடியிருந்த ஓலைகளைக் கண்டு கண்ணீர் பெருக்கெடுக்க இறைவனைத் தொழுதான் (சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயத்தில் 'ஸ்ரீதிருமுறை காட்டிய விநாயகர்' சந்நிதி அமைந்துள்ளது). திருமுறை அடங்கிய ஓலைகளை அப்படியே எடுத்து, நம்பியாண்டார் நம்பியிடம் அளித்து, திருமுறையை தொகுத்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தான் ராஜராஜன்.
தேவார- திருவாசகங்களைத் தொகுத்து முடித்தார் நம்பி. ஆனாலும் பண் வேண்டுமே... அதாவது ராகம் தேவையே... என வருந்திய நம்பியும் மன்னனும் திருஎருக்கத்தம்புலியூருக்குச் சென்று ஸ்ரீநீலகண்டேஸ்வரரை வணங்கி வேண்டினர்.
மைந்தன் பிள்ளையார் திருமுறைகளைக் கண்டெடுக்க அருளினார். அதுபோல், திருமுறை களுக்கு பண் அமைக்க அருளினார் சிவனார். 'திருநீலகண்ட யாழ்ப்பாணன் வம்சத்தைச் சேர்ந்த பெண், பண் அமைத்துத் தருவாள்' என சிவபெருமான் அருள... அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு, தில்லைக்கு வந்தனர்.
கனகசபையில் அனைவரும் கூடியிருக்க... தேவாரப் பதிகங்களுக்கு பண்ணிசைத்தார் அந்தப் பெண்! மொத்தக் கூட்டமும் வியந்தது. பின்னே... திருமுறைகளுக்கு பண் அமைத்தவள், பிறவியிலிருந்தே பேச முடியாதவள் ஆயிற்றே?! பதினோரு திருமுறைகளை நமக்கு அருளிய நம்பியாண்டார் நம்பி, அனைவராலும் போற்றப்பட்டார். திருமுறை கண்ட சோழன் எனும் சிறப்புப் பெயரைப் பெற்றான் ராஜராஜ சோழன்.
'நம்பிக்கையுடன் என்னைச் சரணடைந் தால், கேட்டது கிடைக்கும்' என்று அருளிய பொள்ளாப் பிள்ளையார் சந்நிதி அமைந்துள்ள திருத்தலம் திருநாரையூர்.
கிழக்கு நோக்கிய ஆலயம்; ஐந்து நிலை ராஜகோபுரம் இருந்ததாம்! ஆனால் இப்போது இல்லை. இடிந்து விழுந்து விட்டதாகச் சொல்கின்றனர். பலிபீடம், நந்தி உண்டு; ஆனால் கொடிமரம் இல்லை. இதையடுத்து மூன்றடுக்கு கோபுரம்! இதனை கடந்த 84-ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது அமைத்தனராம்!
ஸ்ரீமெய்கண்டதேவர், அப்பர், சம்பந்தர், திருமூலர், உமாபதி சிவாச்சார்யர், சந்தானக் குரவர்கள், சேக்கிழார் பெருமான், ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீபக முனிவர், ஸ்ரீநாராயண முனிவர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் தரிசனம் தருகின்றனர். ஸ்ரீதிரிபுரசுந்தரி ஸ்ரீசௌந்தரேஸ்வரர் பொள்ளாப் பிள்ளையார் ஆகியோரும் தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கின்றனர்.
ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளியேதான் சிலை உள்ளது. ஆனால், இந்தத் தலத்தில் ஆலயத்தின் உள்ளே பொள்ளாப் பிள்ளையார் சந்நிதிக்கு அருகில் கம்பீரத்துடன் காட்சி தருகிறார் ராஜராஜ சோழன்.
கடந்த 23 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. திருப்பணிகள் துவங்கப்பட்டு, பணிகள் மெள்ள நடந்தேறி வருகின்றன. வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி கும்பாபிஷேக வைபவம் நடைபெறுகிறது. இதையடுத்து பணிகளைத் தொடர முடிவு செய்துள்ளனர் ஸ்ரீநம்பியாண்டார் நம்பி நற்பணி மன்றத்தினர்.
கோயிலுக்கு எதிரே நம்பி வாழ்ந்த இடத்தில், அவருக்கு தனிச் சந்நிதி அமைத்து வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீநம்பியாண்டார் நம்பி முக்தி அடைந்த, வைகாசி புனர்பூச நாளில் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தற்போது நம்பியாண்டார் நம்பி சந்நிதி, கருங்கல் திருப்பணிக்கு நிதி வசதியில்லாமல், பணிகள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறதாம்.
நாமும், ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெறுவோம்; திருப்பணிக்கு உதவுவோம்.
எங்கே இருக்கிறது?
டலூர் மாவட்டம் சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாரையூர் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து சுமார் அரை பர்லாங் தூரம் நடந்தால், பிரமாண்டமான ஆலயத்தை அடையலாம். கோயிலின் ஸ்தல விருட்சம் - புன்னைமரம். தீர்த்தம் - காருண்ய தீர்த்தம், சடாயு தீர்த்தம்.
அப்பர் பெருமான், திருஞானசம்பந்தர் மற்றும் காஞ்சிபுரம் சிதம்பர சுவாமிகள் முதலானோர் வழிபட்ட தலம் இது.
வடலூர் வள்ளலார் இந்தத் தலத்தை வணங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பாடியுள்ளாராம்!
சைவர்களின் தமிழ் வேதமான தேவாரத்தை தொகுத்தருளிய ஸ்ரீநம்பியாண்டார் நம்பி அவதரித்த தலம் திருநாரையூர். நாலாயிர திவ்விய பிரபந்தத்தை மீட்டெடுத்து, தொகுத்தருளிய ஸ்ரீநாதமுனிகள் அவதரித்த காட்டுமன்னார்கோவில் (வீரநாராயணபுரம்), திருநாரையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

No comments:

Post a Comment