Friday, 18 August 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 3

முக லிங்கம்
இரண்டு முகங்கள் (துவி முகம்) கொண்ட லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு (தத்புருஷம்) நோக்கியும், மற்றொரு முகம் மேற்கு (சத்யோஜாதம்) நோக்கியும் இருக்கும். மந்திரலிங்கம் எனப்படும் இவற்றை வீர சைவர்கள் (லிங்காயத்தார்கள்) வழிபடுகின்றனர். இந்த லிங்கத்தின் மீது இரண்டு முக ருத்ராட்சம் அணிவித்து, இருவாட்சி மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்வர். தியாகிகளும் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கத்தை வழிபடுவர்.


கிழக்கு (தத்புருஷம்), தெற்கு (அகோரம்), வடக்கு (வாம தேவம்) ஆகிய மூன்று திசை நோக்கிய முகங்களைக் கொண்டது திரிமுக லிங்கம் அல்லது மும்முக லிங்கம். இதில் கிழக்கு முகம் ஆண்மையுடன் கம்பீரமாகவும், தெற்கு முகம் கோபத்துடனும், வடக்கு முகம் பெண்மையின் சாயலில் புன்சிரிப்புடனும் விளங்கும். படைத்தல்- காத்தல்- அழித்தல் ஆகிய முத்தொழில்கள் புரியும் பிரம்மா- விஷ்ணு- ருத்ரன் ஆகியோரைத் தன்னுள்ளே கொண்ட இதை திரிமூர்த்தி லிங்கம் என்றும் அழைப்பர். திண்டிவனம் அருகில் உள்ள திருவக்கரை சந்திர மௌலீச்வரர் மூன்று முகங்கள் கொண்டவர். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான த்ரியம்பகேச்வரரும் மூன்று முகங்களுடன் காட்சியளிக்கிறார். ஈரோடு மகிமாலீச்வரர் கோயிலில் மும்முக லிங்கம் உள்ளது. எலிபெண்டா குகையில் மூன்று முகங்கள் கொண்ட திரிமூர்த்தி பெரிய வடிவம் உள்ளது. மும்முக லிங்கத்துக்கு மும்முக ருத்ராட்சம் அணிவித்து மூன்று தள வில்வத்தால் பூஜை செய்தால் அளவற்ற செல்வத்தை அடையலாம்.

துர்முக லிங்கம் எனும் நான்கு முக லிங்கம், கிழக்கு- தெற்கு- மேற்கு- வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இதை வேத லிங்கமாக (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) நான்கு வேதங்களாகக் கூறுவர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நடராஜர் சந்நிதி அருகில் நான்கு முக லிங்கம் உள்ளது. திருவதிகை (பண்ருட்டி அருகில்) வீரட்டானேஸ்வரர் கோயிலில் தென்மேற்கு மூலையில் சதுர்முக லிங்கம் உள்ளது. திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும், காளஹஸ்தி கோயிலுக்கு அருகில் உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்க சந்நிதிகள் உள்ளன. நேபாளம், பசுபதிநாதர் கோயிலில் சதுர்முக லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் மார்பு வரை இரண்டு கரங்களுடன் அமைந்துள்ளது. நான்கு முகம் கொண்ட லிங்கத்துக்குக் கோயிலின் நான்கு புறமும் வாசல் அமைக்க வேண்டும் என்பதால், இங்கு நாற்புறமும் வாயில் அமைத்துள்ளனர். சதுர்முக லிங்கத்துக்கு நான்கு முக ருத்ராட்ச மாலை அணிவித்து, நான்கு வகையான வில்வங்களால் வழிபாடு செய்வோர், பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்குகளும் புகழும் பேரறிஞராகத் திகழ்வர்.

ஐந்து முக லிங்கமாக காட்சி தருவது பஞ்சமுக லிங்கம். திசைகளுக்கு ஒன்றாக நான்கு முகங்களும், உச்சியில் ஈசானம் (வட கிழக்கு) திசைநோக்கி உள்ள அமைப்பு இது. விரிஞ்சிபுரம் மார்க்க சகாய ஈஸ்வரர் கோயில் வெளிப் பிராகாரத்தில் ஐந்துமுக லிங்கம் உள்ளது. தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி கோயில் அருங்காட்சி யகத்திலும் இந்த வடிவம் காணப்படுகிறது. திருச்சியில் திருவானைக்காவில் அருகே ‘பஞ்சமுகேஸ்வரர் கோயில்’ என்றே தனியாக உள்ளது. சஷ்டியப்த பூர்த்தியை இங்கு வைத்து செய்வது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
கயிலை மலையில் பஞ்சமுக லிங்கம் உள்ளதாக சிவ ரகசியம் நூல் குறிப்பிடுகிறது. அதன் ஐந்து முகங்களிலிருந்து, ஐந்து கங்கைகள் பொங்கி வருவதாகவும் அது விவரிக்கிறது. வட இந்தியாவில் சில தலங்களில் பஞ்சமுக லிங்கம் காணப்படுகிறது. ஐந்து முக ருத்ராட்சத்தினால் மண்டபம் அமைத்து, பஞ்சகவ்யம் (பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் என்னும் ஐந்து பொருட்களால் ஆனது) அபிஷேகம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வத்தால் அர்ச்சனை செய்து, ஐந்து வித அன்னம், ஐந்து வித உபசாரங்கள் செய்து பஞ்சமுக லிங்கத்தை வழிபட்டால், உலகமே வசியமாகும் என்று சிவ மகா புராணம் குறிப்பிடுகிறது.

சிவ ஆகமங்கள் 28-ம் இந்த ஐந்து முகங்களிலிருந்து வெளிப்பட்டதால் இதை, ‘சிவாகம லிங்கம்’ என்றும் அழைப்பர். ஆனால் சிலர், நான்கு முக லிங்கத்தையே, ‘பஞ்சமுக லிங்கம்’ என்று அழைக்கின்றனர். லிங்கத்தின் வழுவழுப்பான மேற்பகுதியை ஐந்தாவது முகமாகக் கொள்கின்றனர்.
சிவபிரானின் கீழ் நோக்கிய முகம்- அதோமுகம்- ஆறாவது முகம் எனப்படுகிறது. ஐந்தாவது முகம் வானத்தை நோக்கியும், ஆறாவது முகம் பாதாளத்தை நோக்கியும் இருக்கும். அதோமுகம் எண்ணிலடங்கா ஆற்றல் உடையது. பக்தர்களின் கண்ணுக்குப் புலப்படாதது. சிவபிரானின் ஆறாவது முகத்துடன் சேர்த்து, அவற்றின் நெற்றிக் கண்ணில் விளைந்த நெருப்புப் பொறிகளில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான். பாற்கடல் கடைந்தபோது பொங்கி வந்த ஆலகால விஷத்தை உண்டது, அதோமுகமே. எனவே, அவர் கழுத்தான ஸ்ரீகண்டத்தை ஆறாவது முகமாக பாவித்து அர்ச்சனை செய்யும் வழக்கம் உள்ளது. ஆறுமுக லிங்கம் நடைமுறையில் எங்கும் அமைக்கப்பட்டு வழிபடப் படுவதாகத் தெரியவில்லை. முருகப்பெருமானே ஆறுமுக, சிவனாகக் காட்சியளிக்கிறார்.

திருவானைக்கா கோயிலில் தெற்குப் பிராகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகப் பெரு மானையும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானையும் அமைத்துள்ளனர். காஞ்சிபுரம் ஆதி பீட காமாட்சியம்மன் கோயில் முன் மண்டபத்தில் உள்ள லிங்கத்தில் பிடாரியின் உருவம் அமைக்கப்பட்டு, அதன் பெயர் ‘சக்தி லிங்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி சதாசிவ மூர்த்தியை தரிசிப்போம்.

No comments:

Post a Comment