சிவாலயங்களில் திருவிழாக் காலத்தில் ‘பஞ்ச மூர்த்தி’ புறப்பாடு என்பது விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பிகை, சண்டேசர் ஆகிய உற்சவ மூர்த்திகள் எழுந்தருள்வதைக் குறிக்கும். இவற்றில் தத்துவச் சிறப்பும், தனித்தன்மையும் வாய்ந்தது சோமாஸ்கந்த வடிவம். உற்சவ காலத்தில் பல வித வாகனங்களிலும், தேரிலும் பெரும்பாலும் எழுந்தருளும் திருமேனி சோமாஸ்கந்த வடிவமே. ஸ+ உமா+ ஸ்கந்தர்= அதாவது உமை மற்றும் கந்தனுடன் விளங்கும் சிவபிரான் என்பது இதன் பொருள். இறைவன், இல்லறத்தானாக- இனிய கணவனாக- பாசமுள்ள தந்தையாக தனயனுடன் காட்சியளிக்கும் இந்த கருணை வடிவம், தரிசித்து மகிழ வேண்டியது. கடவுள் தன்மை என்பது, சத்து- சித்து- ஆனந்தம் என்கிற மூன்று பெரும் பண்பும், கூறும் உடையது. சத்து= உள்ளது- உண்மை; சித்து= அறிவு; ஆனந்தம்= இன்பம்.
சச்சிதானந்தம் என்பதை சத்து- இறைவன்; சித்து- இறைவி; ஆனந்தம்- முருகன் எனலாம். இந்த மூன்று இயல்புகளின் அழகிய வடிவே சோமாஸ்கந்தம் என்று தத்துவ நூல்கள் விளக்குகின்றன.
உலகத்தில் எல்லாவற்றுக்கும் மேலானதாகத் திகழ்வது உண்மை. உண்மை எதுவோ, அதுவே நன்மையாகும். உண்மையும் நன்மையும் சேர்ந்தால் அங்கே அழகு இருக்கும். இந்த மூன்றிலும் அடங்காத உயர்ந்த பண்பு நலன் வேறெதுவும் உலகில் இல்லை. இதில் உண்மை- சிவம்; நன்மை- சக்தி; அழகு- முருகன் என்று கொள்ளுதல் பொருத்தம்.
இங்கே மற்றொன்றும் விளங்குகிறது. கடவுள்- எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு அனைத்தையும் கடந்த மேலான நிலையில் விளங்குபவர். இதைக் கடந்த நிலை என்பர். அவரே எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் கலந்திருக்கிறார். இதனை ‘அந்தர்யாமித்வ’ நிலை எனலாம். வழிபடும் அன்பர்களுக்கு பல்வேறு வடிவங்களில் அவரே காட்சி தந்து உள்ளத்தைக் கவர்கிறார். இதை, கவர்ந்த நிலை எனலாம். எனவே, கடந்த நிலை- சிவம்; கலந்த நிலை- சக்தி; கவர்ந்த நிலை- முருகன் என்று கூறுவதும் பொருத்தமே!
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ‘போற்றித் திருவகவல்’ எனும் பகுதியில் ‘அருமையில் எளிய அழகே போற்றி’ என்று பாடுகிறார். இதை கடவுளின் இலக்கணம் கூறும் சிறந்த வரியாகக் கூறலாம். அன்பர் அல்லாதாருக்கு அருமை உடையவராக, அவர்கள் உணர முடியாத நிலையில் கடவுள் விளங்குகிறார். அன்பர்களுக்கோ, அவர்கள் விரும்பிய முறையில் எளிமையாக வந்து இன்னருள் புரிகிறார். அவரது வடிவும், செயலும் அழகுடன் விளங்குகிறது. இங்கே அருமை- சிவம்; எளிமை- சக்தி; அழகு- முருகன் என்ற மூன்று இலக்கண வடிவாக இதைக் குறிப்பிடுதல் மிகவும் பொருத்தமே.
நமது பாரத நாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமமாகும் இடம் திரிவேணி சங்கமம் எனும் பிரயாகை. இங்கு நீராடுவது புனிதச் செயலாகக் கருதப்படுகிறது. திருவாரூரில் புகழ்பெற்ற கமலைத் தியாகேசர் என்னும் சோமாஸ்கந்தரைப் பார்க்கும்போது, குமரகுருபர சுவாமிகளுக்கு திரி வேணி சங்கமம் நினைவுக்கு வருகிறது. சிவபெருமான் உடல் முழுவதும் வெண்ணீறணிந்து திகழ்வது- வெண்மை நிற கங்கை போலவும், உமாதேவி தன் நீல நிறத்தால் யமுனை போலவும், சிவந்த நிறமுள்ள கந்தன் சரஸ்வதி நதியைப் போலவும் காட்சியளிக்கின்றனராம். இந்தக் கருத்தை, ‘திரு வாரூர் நான்மணி மாலை’ நூலில் ஆரூர்த் தியாகேசருக்குப் புது விளக்கமாக தருகிறார் குமர குருபர சுவாமிகள்.
சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்தின் வலப் பக்கத்தில் தனிச் சந்நிதியில் சோமாஸ்கந்த வடிவம் காணப்படும். இங்கு சிவபிரான் அமர்ந்த கோலத்தில் இடக் காலை மடித்து வைத்து, வலக் காலைத் தொங்கவிட்ட நிலையில் விளங்குவார். இவர் புலித்தோலும் பட்டாடையும் அணிந்திருப்பார். இவரின் கரங்கள் நான்கு. பின் வலக் கரத்தில் மழுவும், பின் இடக் கரத்தில் மானும் இருக்கும். முன் வலக் கரம் அபய முத்திரையும், முன் இடக் கரம் வரத முத்திரை அல்லது சிம்மஹரண முத்திரையுடன் திகழும். ஜடாமகுடமும், சர்ப்ப (பாம்பு) கங்கணங் களும் காதில் குண்டலங்களும் மற்றும் பல அணிகலன்களுடனும் திகழ்கிறார். சிவ பிரானுக்கு இடப் பக்கம் உமாதேவி, இடக் காலைத் தொங்கவிட்ட நிலையில், வலக் காலை மடித்து அமர்ந்திருப்பார். அம்பிகையின் வலக் கரம் தாமரையுடனும், இடக் கரம் சிம்மஹரண முத்திரையுடனோ அல்லது ஆசனத்தில் வைத்த நிலையிலோ அமைந்திருக்கும் சிவபிரானுக்கும், உமைக்கும் நடுவே கந்தன் சிறுகுழந்தையாக, நடன மாடிய நிலையிலோ அல்லது உமை மடி மீது அமர்ந்தோ காட்சி அளிப்பான். ஒன்று அல்லது இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தியிருப்பான். தேவியின் வலக் கரத்தில் நீலோத்பல மலரும், இடக் கரம் வரத முத்திரையுடனும் காணப்படுவது உண்டு. கந்தன் நடனமாடும் கோலத்தில் இருப்பின், அவன் இடக் கரம் பழத்தையும், வலக் கரம் சூசி முத்திரையிலும் (ஆள் காட்டி விரலைக் காட்டியபடி) இருக்கும். இவை, சோமாஸ்கந்த வடிவம் பற்றி சிற்ப, ஆகம நூல்கள் தெரிவிக்கும் தகவல்கள்.
தமிழ்நாட்டின் தனிச் சிறப்பு வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்த மூர்த்தி. நமது நாட்டில் வேறெங்கும் இந்த வடிவம் காணப்படுவதில்லை. சிவன்- சக்தி- முருகன் ஆகிய வழிபாட்டை ஒருங்கிணைத்துப் பல்லவர் காலத்தில் பிரபலமான வடிவம் இது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருமறைக்காடு (வேதாரண்யம்), புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) ஆகிய தலங்களில் கருவறையில் சிவலிங்கத்துக்குப் பின்புறம், கருவறைச் சுவரில் இந்தத் திருவுருவை அமைத்தார்கள். திருப்பைஞ்ஞிலி குடைவரைக் கோயிலில் சிவபிரானுக்கு வலப் பக்கம் அம்பிகை அமர்ந்த வடிவில் சோமாஸ்கந்த வடிவம் காணப்படுகிறது. கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோவில் அருகில் அமைந்துள்ள ராம நதீச்சரம் கோயில் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் அம்பிகையின் கரத்தில் ரிஷபம் காணப்படுவது புதுமை.
திருக்கருகாவூர் (தஞ்சை மாவட்டம்), திருக்கள்ளில் (காஞ்சிபுரம் மாவட்டம்) ஆகிய தலங்களில் சிவ பிரான், முருகன், அம்பிகை ஆகியோரது சந்நிதிகள் சோமாஸ்கந்த வடிவில் அமைந்துள்ளன. சப்தவிடங் கத் தலங்களில் சோமாஸ்கந்த பெருமானைத் தியாகராஜராகப் போற்றி வழிபடுவது மரபு. சாலுவன் குப்பம், பனமலைத்தாளபுரீசர் கோயில் சிற்பங்களில் சோமாஸ்கந்தருடன் பிரம்மாவும், திருமாலும் புடை சூழ விளங்குகின்றனர். காஞ்சிபுரம் ஏகாம்பரேசர் கோயிலும், குமர கோட்டமும், காமாட்சியம்மன் கோயிலும் அமைந்துள்ள பாங்கு, சோமாஸ்கந்த வடி வத்துக்கு மற்றோர் எடுத்துக்காட்டு.
|
Wednesday, 23 August 2017
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 6
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment