சுபக்கம் - காப்பு ஒரு கோட்டன், இருசெவியன், மும்மதத்தன்
நால்வாய், ஐங்கரத்தன், ஆறு
தருகோட்டுஅம் பிறைஇதழித் தாழ்சடையான்
தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகு ஓட்டு அன்பொடும் வணங்கி, ஓவாதே
இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகுஓட்டும்; அயன்திருமால் செல்வமும் ஒன்றே
என்னச் செய்யும், தேவே.
பாயிரம் - மங்கல வாழ்த்து
2. அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருள் ஆய், வேறு ஆம்
குறியது உடைத்தாய், வேத ஆகமங்களின் குறி இறந்து, அங்கு
அறிவினில் அருளால் மன்னி, அம்மையோடு அப்பன் ஆகி,
செறிவு ஒழியாது நின்ற சிவன் அடி சென்னி வைப்பாம்.
ஆறு வகைப்பட்ட ஒவ்வொரு சமயமும் சிந்தித்துத் தெளிந்த பொருளாகவும், அவற்றின் வேறாகவும், வேதங்களிலும் ஆகமங்களிலும் விரித்துரைக்கின்ற பொருளுக்கு அப்பாற்பட்டதாகவும், நம்முடைய அறிவில் தனது பேரருளால் நிறைந்து உயிர்த் தொகுதிகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் விளங்கி எங்கும் நிறைந்திருக்கின்ற சிவபெருமானுடைய திருவடிகளை நம் தலை மீது சூடி வணங்குவோமாக.
சமயங்கள் பற்பல. அவற்றைப் புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்று நான்கு வகையாக வகுத்துக் கூறுவர். ஒவ்வொரு வகையிலும் ஆறு சமயங்கள் உள்ளன என்றும் கொள்ளுவர். இவருள் ஒவ்வொருவரும் முதற்கடவுள் என்று கொள்கின்ற பரம்பொருள். அதன் இயல்பு, வீடு பேறு பற்றிய கோட்பாடுகள் தம்முள் மாறுபட்டவனாக இருக்கும். ஆயினும் சைவசித்தாந்தப்படி எடுத்துரைக்கப்படுகின்ற சிவபெருமானே முதற்பெரும் கடவுளாவான். எந்தச் சமயத்தின் நெறி நின்று எந்தப் பெயரைக் கூறி எவர் வழிபட்டாலும் அந்த வழிபாடு சிவபெருமானுக்கே உரியது என்பதை அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் என்ற சொற்றொடரால் விளக்கினார். எல்லாச் சமயத்தினரும் தத்தம் கடவுளின் சிறப்பைக் கூற இக்கருத்தையே பயன்படுத்துவர். எனவே வேற்றுச் சமயத்தவரும் மறுக்காத வண்ணம் மாதவச் சிவஞான முனிவர் இச்சொற்றொடருக்குத் தமது பொழிப்புரையால் உரை கண்டிருக்கிறார். அறுசுவைச் சமயத்து அவ்வவர் ஓர்க்கும் பொருளாய் என்று அமைத்து அவர் உரை வரைகிறார். ஓர்க்கும் என்பது ஆராய்ந்து அறிகின்ற என்ற பொருளைத் தரும். ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப், பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (குறள் 3 5 7) என்பதைக் காண்க.
அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து (7- 55- 9) என்ற சுந்தரர் தேவாரம் இங்கே நினையத்தக்கது.
3. என்னைஇப் பவத்தில் சேராவகை எடுத்து, என் சித்தத்தே
தன்னைவைத்து, அருளினாலே தாள்இணை தலைமேல் சூட்டும்
மின் அமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ்- மெய்கண்டான் நூல்
சென்னியில் கொண்டு, சைவத் திறத்தினைத் தெரிக்கல் உற்றாம்.
எண்ணற்ற பிறப்புகளாகிய, எல்லையும் ஆழமும் காணமுடியாத பிறவிக்கடலிலே விழுந்து தடுமாறும் என்னை அதிலிருந்து தன்னுடைய அருட்கையால் எடுத்து என் அறிவில் தனது திருவருள் விளங்குமாறு திருவுளம் கொண்டு தன் அருளால் தனது திருவடிகளை என் தலைமேல் சூட்டியவரும், மின்னலொடு கூடிய மேகங்கள் சூழ்ந்த சோலைகளுடைய திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளி விளங்குபவரும் ஆகிய மெய்கண்டார் அருளிய திருநூலைத் தலைமையாகக் கொண்டு சைவசித்தாந்தத்தின் மெய்ப்பொருள் உண்மையை யாம் விளக்கத் தொடங்குவோம்.
பவம்- பிறவி, பிறவியைப் பெருங்கடலாகக் கூறுவது பெரியோர் மரபு (குறள் 10) எடுத்து என்ற சொல்லாலே பிறவிக் கடலில் இருந்து தமது அருட்கையினால் எடுத்து என்ற பொருளை ஆசிரியர் குறிப்பால் பெற வைத்தார்.
மெய்கண்ட தேவ நாயனாரால் அருளப்பட்ட நூல் சிவஞான போதம் என்ற பெயருடன் விளங்குகிறது. ஆசிரியர் அப்பெயரை இங்குக் குறிக்கவில்லை என்பதும் மெய்கண்டான் நூல் என்று மட்டிலுமே குறித்தார் என்பதும் நினையத்தக்கன.
சென்னியில் கொண்டு என்பதற்கு சிவஞான முனிவர் சிரத்தானமாகக் கொண்டு என்று உரை வகுத்தார். அதாவது தலை மேல் தாங்கி என்று கொள்ளாமல் அந்த நூலையே தலைமை நூலாகக் கொண்டு என்று பொருள் காணவேண்டும் என்பது முனிவர் கருத்து.
4. பண்டை நல் தவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன்- மார்க்கர்
கண்டநூல் ஓதி வீடு காதலிப் பவர்கட்கு ஈசன்-
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகலல் உற்றாம்.
முன்னைப் பிறவிகளில் ஈட்டிய தவத்தினால் இந்தப் பிறவியில் பக்குவம் பெற்ற மெய்ஞ்ஞானிகளாகத் தோன்றிய அருளாளர்களுக்கு இறைவன் தானாகவே எழுந்தருளி வந்து வீடுபேற்றை அருளுவான். ஆகையினால் அவர்கள் நூல்களைப் பயின்றும் ஆராய்ந்தும் அறிய வேண்டிய தேவை இல்லை. எனவே இந்த நூல் அவர்களுக்காக எழுதப்படவில்லை. நன்னெறியிலே ஒழுகியவர்கள் உயிர்கள் உய்வடைவதன் பொருட்டு எழுதியருளிய நூல்களைப் பயின்று வீடு பேறு அடைதல் வேண்டும் என வேட்கை உடையவர்களுக்காக இந்நூலைக் கூறல் உற்றாம். மூன்று வகைப்பட்டது ஆருயிர்த் தொகுதி என்று சைவசித்தாந்தம் கொள்ளுகிறது. அவர்கள் முறையே விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் எனப்படுவர். இவர்களுக்கு இறைவன் குருவுமாகத் தோன்றி அருள்பாலிக்கும் போது தன்மை, முன்னிலை, படர்க்கை என்று மூவிடங்களிலும் நின்று ஞானத்தை வழங்குவான். இந்தப் பாடலிலும் மாந்தர்கள் மூன்று வகையாகக் குறிக்கப்பட்டனர். ஆயினும் மேலே கூறப்பட்ட வகையிலிருந்து இந்தப் பகுப்பு சற்றே வேறுபட்டது. பாடலில் இரண்டு வகையினரைப் பற்றி ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது வகையைக் குறிப்பால் பெற வைத்தார். இப்பகுப்பின்படி உயிர்கள் சாமுசித்தர், வைநயிகர், பிராகிருதர் என மூவகைப்படும். சாமுசித்தர் என்பவர் முந்திய பிறவிகளிலே ஈட்டிய நற்றவத்தினால் மீண்டும் உலகில் தோன்றி இந்தப் பிறவியில்வீடு பேறு அடையும் மேலான தகுதி வாய்ந்தவர்கள். அவர்களை இறைவனே முன் வந்து ஆட்கொள்ளுவான். எனவே அவர்கட்கு நூலின் துணை தேவை இல்லை. வைநயிகர் என்பவர் விநயம் உடையவர்கள் எனப்படுவர். அவர்களே அருளாளர்களின் நூலைத் துணைக்கொண்டு நிலைத்தன இவை, நிலையாதன இவை என்று உணர்ந்து பொய்தீர் ஒழுக்க நெறி நின்று வீடு அடைவதற்கு உரியவர்கள். இறைவன் திருவடிகளைச் சார்வதற்கு உரிய நெறி இது என்று காட்டும் இந்நூல் அவர்கள் பொருட்டே ஆசிரியரால் உரைக்கப்பட்டது. மூன்றாவது வகையினராகிய பிராகிருதர் பற்றி ஆசிரியர் கூறாது விடுத்தார். அவர்கள் உலக இன்பங்களை விரும்பி உழல்பவர் ஆவர். எனவே அவர்களுக்கு ஞான நூல்களால் பயன் ஏதும் இல்லை.
அவையடக்கம் 5. மறையினால், அயனால், மாலால், மனத்தினால், வாக்கால், மற்றும்
குறைவுஇலா அளவி னாலும் கூறஒணாது ஆகி நின்ற
இறைவனார் கமல பாதம் இன்று யான் இயம்பும் ஆசை
நிறையினார் குணத்தோர்க்கு எல்லாம் நகையினை நிறுத்தம் அன்றே.
மறைகளாலும், அயனாலும், திருமாலாலும், மனத்தினாலும், வாக்கினாலும் குறைவுபாடில்லா அளவைகளினாலும் இத்தகையது என்று அறிவதற்கு அரியதாக விளங்குகின்ற இறைவனது தாமரை மலர் போன்ற பாதங்களை இந்நூலினிடத்து எடுத்துரைக்கப் புகுந்த எனது ஆவல் சான்றாண்மை நிறைந்த பெரியோர்க்கு எல்லாம் நகைப்பினை விளைவிக்கும் அன்றே.
நான்மறைகளும் சிவபெருமானுடைய இயல்பினை எடுத்துரைக்க வல்லன அல்ல. எனவே அவை இதுவன்று இதுவன்று என்றே கூறுவனவாகும் என்பர். இங்கு மறையினால் என்றது பாச அறிவால் அறியப்படாமையைக் குறித்தது. அயனும் திருமாலும் தேடி அறியாத இயல்பினை உடையவன் இறைவன் என்பது அவன் பசு ஞானத்தால் அறியப்படாதவன் என்பதைக் குறித்தது. சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாதவன் என்பதும் பாசஞானத்துக்கும் பசுஞானத்துக்கும் எட்டாதவன் என்பதைக் குறிக்கும்.
குறைவற்ற அளவைகள் என்பது இறைவன் சிற்றறிவாகிய உயிர்களால் அளவை இலக்கணத்தின் துணை கொண்டு அறியப்படாதவன் என்பதைக் குறித்தது.
சிவஞான முனிவர் இங்கே கூறப்பட்டவற்றுள் புராணங்களையும் இதிகாசங்களையும் மிருதிகளையும், மீமாம்சை, தருக்கம் முதலியவற்றையும் அடக்கிக் காட்டுவார். இவ்வாறு நூலாசிரியர் அவை அடக்கம் கூறினார்.
ஆசங்கை நீக்கல்
6. அருளினால் ஆக மத்தே அறியலாம்- அளவி னாலும்
தெருளலாம் - சிவனை, ஞானச் செய்தியால், சிந்தை யுள்ளே
மருள் எலாம் நீங்கக் கண்டு, வாழலாம்; பிறவி மாயா
இருள் எலாம் இரிக்கல் ஆகும்; அடியரோடு இருக்க லாமே.
இத்தனை அரியவனாகிய இறைவனது இயல்பு அறிவதற்கு அருமையானதே. ஆயினும் ஒப்பற்ற சிவபரம் பொருளைப் பற்றிய அறிவினை அப்பெருமான் அருளிச் செய்த ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்த சிவஞானிகளின் அருள் உபதேசத்தால் கேட்டு அறியலாம். அவ்வாறு கேட்டதை அளவைகளின் துணைக்கொண்டு சிந்தித்தும் அறியலாம். சிந்தித்தவற்றை சிவஞானத்தின் துணை கொண்டு மாசறத் தெளியலாம். இவ்வாறு ஒழுகுவதனால் மாயாத பிறவிக்குக் கார பாசத்தளையை நீக்கலாம். சிவனடியாரோடு கூடி நிட்டை மேற்கொண்டு சிவானந்தம் கைவரப் பெற்று இருக்கலாம்.
அவையடக்கச் செய்யுளில் சிவபெருமான் அறிதற்கு அரியவன் என்பதனை ஆசிரியர் எடுத்துரைத்தார். அதனைக் கற்பவர்களுக்கு இறைவன் ஒரு வகையாலும் அறியப்படாத தன்மை உடையவனோ என்ற ஐயம் தோன்றும். சைவசித்தாந்தத்தின் கருத்துப்படி சிவபெருமான் பாசஞான, பசுஞானங்களால் அறியப்படாதவன். ஆயினும் பதிஞானத்தில் அறியப்படுவன் என்பதை இப்பாடலில் கூறி ஐயத்தைத் தெளிவிக்கிறார் ஆசிரியர் அருள் நந்திசிவம். இக்கருத்தின் விரிவு இந்நூலின் ஆறாம் நூற்பாவில் ஆசிரியரால் கூறப்படும்.
இறைவனை அறிவதற்கு நான்கு படிநிலைகள் கூறப்படும். அவை கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பன. இவை நான்கும் ஆராய்ச்சி அநுபூதி என்ற இரண்டுள் அடங்கும். கேட்டலும் சிந்தித்தலும் ஆராய்ச்சி எனவும், தெளிதலும், நிட்டை கூடலும் அனுபூதி எனவும் பெருமக்களால் உணர்த்தப்படுகின்றன.
அளவை இலக்கணம்
7. அளவை காண்டல், கருதல், உரை, அபாவம், பொருள், ஒப்பு ஆறு என்பர்;
அளவை மேலும் ஒழிபு, உண்மை, ஐதி கத்தோடு, இயல்பு என நான்கு
அளவை காண்பர்; அவையிற்றின் மேலும் அறைவர்; அவை எல்லாம்
அளவை காண்டல், கருதல், உரை என்ற இம்மூன்றில் அடங்கிடுமே.
அளவை என்பது காண்டல் அளவை, கருதல் அளவை உரை அளவை, இன்மை அளவை, பொருள் அளவை, உவமை அளவை, என்று ஆறு வகைப்படும் என்பர். சிலர் இவற்றுக்கு மேலும் ஒழிபு அளவை, உண்மை அளவை, ஐதிக அளவை, இயல்பு அளவை, என்ற நான்கனையும் கூட்டி அளவைகள் பத்து வகைப்படும் என்று கூறுவர். வேறுசிலர் இப்பத்துக்கு மேலும் அளவைகள் உண்டு எனக் கொள்வர். இவ்வாறு அளவைகளைப் பலவகைப்படுத்திக் கூறினாலும் அவை யாவும் காண்டல் அளவை, கருதல் அளவை, உரை அளவை எனும் மூன்றனுள் அடங்கும்.
அளவை என்பது வடமொழியில் பிரமாணம் என்ற சொல்லால் குறிப்பிடப்படும். பிரமா என்ற சொல் அறிவு என்ற பொருளைத் தரும். எதன் வழியாக அறிவு பெறப்படுகிறதோ அது பிரமாணம் ஆகும். அளவையை அறிவு அளவை என்றும் வழங்குவர். ஆங்கிலத்தில் இது எபிஸ்டமாலஜி எனப்படும்.
உலகத்துப் பொருள்களை எண்ணல் அளவை, நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை போன்றவற்றால் அளந்து காண்பது போல மெய்ப்பொருள் இயலில் கூறப்படும் கருத்துக்களை அளந்து அறிவதற்கு அளவை இயல் பயன்படுகிறது. அளவையில் குறை இருந்தால் அளக்கப்படும் பொருளினைப் பற்றிய அறிவும் குறையுடையதாய் முடியும். அதனால் தான் அளவை இயல் இன்றியமையாததாகக் காணப்படுகிறது. இது முதல் பதினான்கு பாடல்கள் அளவை இலக்கணம் பற்றிக் கூறுகின்றன.
காண்டல் அளவை என்பது காட்சி என்றும், பிரத்தியட்சப் பிரமாணம் என்றும் வழங்கும். ஒரு பொருளைக் கண் முதலிய ஐம் பொறிகளாலும் நேர் முகமாக அறிதல் காண்டல் அளவை ஆகும்.
கருதல் அளவை என்பது அனுமானப் பிரமாணம் எனவும் கூறப்படும். ஒரு பொருளை நேர்முகமாகக் காண முடியாத போதும், அதனை ஒருபோதும் விட்டு நீங்காத தன்மை உடைய மற்றொரு பொருளைக் கண்டு முதலில் கூறப்பட்ட பொருள் உள்ளது என்று கருதி அறிதல் கருதல் அளவை ஆகும். எடுத்துக்காட்டாக தீயோடு விட்டு நீங்காத தன்மையை உடையது புகை. விட்டு நீங்காத் தன்மையை அவிநா பாவம் என்ற சொல்லால் குறிப்பர். தொலைவில் ஓரிடத்தில் புகை எழுவதைக் கண்டு நெருப்பு கண்ணுக்குப் புலனாகாத போதும் அங்கே நெருப்பு உள்ளது. என்று அறிந்து கொள்வது கருதல் அளவையின் பாற்படும்.
உரைஅளவை ஆகமப் பிரமாணம் என்றும், சத்தப் பிரமாணம் என்றும், ஆப்தவாக்கியம் என்றும் வழங்கப்படும். கண்டும் கருதியும் அறிய முடியாத பொருள்களைப் பற்றி நூல்களின் வாயிலாக அறிதல் உரை அளவை ஆகும். இங்கு நூல்கள் எனப்பட்டன. இறைவனால் அருளப்பட்டனவும், இறைவனின் மெய்யடியார்களால் அருளப்பட்டனவுமாகிய மெய்ந்நூல்களையே குறிக்கும்.
இன்மை என்பது உண்டு என்னும் அறிவுக்கு எதிராக உணரப்படுவதாகும். இதனை அபாவம் என்றும் வழங்குவர். எடுத்துக் காட்டாக முயலுக்குக் கொம்பு இல்லை என்பது இன்மை அளவையால் அறியப்படுவதாகும்.
பொருள் என்று ஆசிரியர் குறிப்பிட்ட அளவை வடமொழியில் அருத்தாபத்தி என்று வழங்கும். இங்ஙனம் அன்று எனில் இது கூடாது என்று உய்த்து அறிவது அளவையால் பெறப்படும். எடுத்துக் காட்டாக ஒருவர் உண்ணா நோன்பு இருப்பதாகச் சொல்லுகிறார். என்று வைத்துக் கொள்வோம். பகற்பொழுது முழுவதும் அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்கிறது. அவர்கள் முன்னிலையில் அவர் எதையுமே உண்ணவில்லை பத்துப் பதினைந்து நாள் கழிந்த பிறகு அவர் மேனி வாடாமல் இருப்பாரானால் யாருமே அறியாமல் இரவில் அவர் உண்ணுகிறார் என்பதனை உய்த்து அறியலாம். இதனைப் பகல் உண்ணான் பருத்திருப்பான் என்ற சொற்களால் கூறுவர். இதுவே அருத்தாபத்தி அளவையாகும்.
செய்யுளில் ஒப்பு என்ற சொல்லால் குறிக்கப்படுவது உவமை அளவை என்றும் கூறப்படும். காட்டுப் பசுவை அறியாத ஒருவன் அது எவ்வாறு இருக்கும் என்று கேட்டால் வீட்டுப் பசுவை ஒத்து இருக்கும் என்று விளக்குவது இந்த அளவைக்கு எடுத்துக் காட்டு.
சிறப்பித்துச் சொல்லப்படுகிற மேற்கூறிய ஆறு அளவைகளையும் தவிர மேலும் நான்கு அளவைகள் கொள்ளப்படும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவற்றுள் முதலாவது ஒழிபு அளவை. இதற்கு பாரிசேட அளவை என்றும் பெயர் வழங்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மகாபாரதக் கதையிலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுவர். அக்காலத்தில் ஆயிரம் யானை வலிமை உடையோர்கள் நால்வர் இருந்தனர். அவர்கள் சல்லியன், சராசந்தன், கீசகன், பீமசேனன் என்பவர்கள். விராட நாட்டில் கீசகன் இனந்தெரியாத ஒருவனால் மற்போரில் கொல்லப்பட்டான். அந்நாட்டில் சல்லியனும், சராசந்தனும் இல்லை. எனவே கீசகனைக் கொன்றவன் அஞ்ஞாதவாசத்தில் இருந்தவனாகிய பீமனாகத்தான் இருத்தல் வேண்டும் என்று உய்ந்து அறியப்படும்.
உண்மை என்பது சம்பவ அளவை என்று வடமொழியில் கூறப்படும். என்னிடம் ஆயிரம் பொற்காசுகள் உள்ளன என்று நான் கூறும்போது என்னிடம் நூறு பொற்காசுகள் உண்டு என்பது சொல்லாமலே பெறப்படும். ஏனெனில் நூறு, ஆயிரத்துள் அடங்கும் என்பது உலகறிந்த உண்மை.
ஐதிகம் என்பது வழிவழியாக வழங்கி வரும் வழக்கமாகும். இம்மரத்தில் பேய் ஒன்று குடி இருக்கிறது எனும் போது தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்டு வந்த ஒரு செய்தியை அது உணர்த்துகிறது.
இயல்பு என்பது சுபாவ அளவை என்று கூறப்படும். சொற்களுக்கு நேரடியாகப் பொருள் கொள்ளுவது இந்த அளவையினுள் அடங்கும். மரம் என்ற தமிழ்ச் சொல் இயல்பாக நின்று மரம் என்ற பொருளை உணர்த்தும் என்று அறிவது இந்த அளவையுள் அடங்கும்.
மா மரத்தைக் காட்டல் என்ற பாடம் பிழையானது என்றும் மரம் மரத்தைக் காட்டல் என்பது சரியான பாடம் என்றும் பெரும் புலவர் க. வச்சிரவேல் முதலியார் அவர்களும் மகா வித்துவான் சி. அருணை வடிவேல் முதலியார் அவர்களும் கொள்ளுகின்றனர்.
இவ்வாறு பத்து அளவைகள் கூறப்படினும் அவை யாவும் காட்சி, கருதல், உரை எனும் மூன்றனுள் அடங்கும். இன்மையும், இயல்பும் காட்சி அளவையில் அடங்குவன. பொருள், ஒழிப்பு, உண்மை என்ற நான்கு அளவைகளும் கருதல் அளவையில் அடங்குவன. ஐதிகம் என்பது உரை அளவையில் அடங்கும்.
8. மாசுஅறு காட்சி, ஐயம் திரிவு இன்றி, விகற்பம் முன்னா
ஆசுஅற அறிவது ஆகும்; அனுமானம் அவினாபாவம்
பேசுறும் ஏதுக் கொண்டு, மறைபொருள் பெறுவது ஆகும்;
காசு அறும் உரை இம்மானத்து அடங்கிடாப் பொருளைக் காட்டும்.
குற்றமற்ற காண்டல் அளவை என்பது முதலில் நிருவிகற்பமாய் அறியப்பட்டு, அதன் பின்னர் ஐயம், திரிபு ஆகியன இல்லாமல் எதனையும் தெளிவுறக் கண்டு அறிவதாகும். அனுமான அளவையானது கண்ணுக்கு நேரே புலப்படாமல் மறைந்திருக்கும் ஒரு பொருளை அதனை விட்டு நீங்கா இயல்பினைக் காரணமாகக் கொண்டு உய்த்து அறிவதாகும். இவ்விரண்டு அளவைகளிலும் அடங்காத பிற பொருள்களைத் தெளிவுற உணர்த்துவது உரை அளவை ஆகும்.
காட்சி அளவை கண்ணுக்கு நேரே புலப்படும் பொருள்களை அறிகின்ற ஆற்றல். இது முதலில் பொதுவாக ஒரு பொருள் எதிரே தோன்றுகிறது என்ற அளவிலேயே நிகழும். இவ்வாறு நிகழ்வதை நிருவிகற்பக் காட்சி என்பர். அதாவது வேறுபாடுகள் ஏதுமற்ற பொதுக் காட்சி இதுவாகும். விகற்பம்- வேறுபாடு. இப்பாடலில் ஆசிரியர் விகற்பம்முன்னா என்று கூறியதனை நிருவிகற்பக் காட்சியை முன்னதாகக் கொண்டு என்று பொருள் காண வேண்டும். நிருவிகற்பம் என்றது தலைக்குறையாக விகற்பம் என்று இங்குக் குறிக்கப்பட்டது. அதனை அடுத்து நிகழ்வது சவிகற்பக் காட்சி எனப்படும். வேற்றுமையோடு பொருந்திய காட்சியறிவு சவிகற்பம் எனப்படும். ஒரு பொருளை இது இன்னது என்ற தெளிவுற அறிவதாகும். இவ்வாறு அறியும் போது இது யாதோ என்ற ஐயமும், ஒன்றை மற்றொன்றாக அறிகின்ற திரிபும் இல்லாது இருத்தலே ஆசிரியரால் மாசு அறு காட்சி எனப்பட்டது.
கருதல் அளவை என்பது மறைந்திருக்கும் ஒரு பொருளின் விட்டு நீங்காத இயல்பினைக் கொண்டு அதன் இருப்பை அறிவதாகும். ஓர் அறைக்குள் நுழைந்தவுடன் மல்லிகைப்பூவின் மணத்தை நுகர்கிறோம். மலர் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் அங்கே மல்லிகை மலர் உண்டு என்று அறிவது இந்த அளவையுள் அடங்கும். அவிநாபாவம்- வீட்டுநீங்காத் தன்மை. அதனைக் காரணமாகக் கொண்டே அனுமானம் நிகழும். வழக்கமாகக் கூறப்படும் எடுத்துக்காட்டு புகை உள்ள இடத்தில் நெருப்பு உண்டு என்று அறிதலாகும்.
மேற்கூறிய இரண்டு அளவைகளுக்கும் அடங்காத பொருள்களைப் பற்றி அருளாளர்களும் சான்றோர்களும் மொழிந்த நூலைக் கொண்டு அறிவது உரை அளவை ஆகும். விண்ணுலகம் பாதாள உலகம் முதலியவற்றின் இருப்பினை இந்த அளவையின் அடிப்படையிலே அறிகிறோம்.
9. கண்ட பொருளை இரட்டுறவே கருதல் ஐயம்; திரியவே
கொண்டல் திரிவு ஆம்; பெயர், சாதி, குணமே, கன்மம், பொருள் என ஐந்து
உண்டு அவ்விகற்ப உணர்வினுக்கு; பொருளின் உண்மை மாத்திரத்தின்
விண்டல் இல்லா அறிவு ஆகும்- விகற்பம் இல்லாக் காட்சியே.
எதிரே தோன்றுகிற ஒரு பொருளை இது இன்னது எனத் தெளிவுபட உணராமல் பொதுவாக ஒரு பொருள் உள்ளது என்று காணும் காட்சியை நிருவிகற்பக் காட்சி என்பர். இதுவே முதலில் நிகழ்வது. அதன் பின்னர் அப்பொருளின் பெயர், இனம், பண்பு, தொழில் பொருள் என்ற ஐந்து வகை இயல்புகளும் வேறுபடுத்தித் தெளிவுறக் காண்பது சவிகற்பக் காட்சி எனப்படும். அப்பொருளைக் காணும் போது இதுவோ அதுவோ என்று ஐயத்தோடு காண்பது ஐயக்காட்சி எனப்படும். ஒன்றை மற்றொன்றாகக் காண்பது திரிவுக்காட்சி எனப்படும். விகற்பம்- வேறுபாடு. நிருவிகற்பம்- வேறுபாடு அற்றது. சவிகற்பம்- வேறுபாட்டுடன் கூடியது. எதிரே ஒரு மரம் தோன்றுகிறது. அதனைப் பொதுவாக அறிதல் நிருவிகற்பக் காட்சி. எதிரே தெரிவது ஒரு மரம் (பெயர்) அது மாமரம் (இனம்). இம்மரம் இன்னின்ன பண்புகள் உடையது (பண்பு) இது இப்போது பூத்துக் காய்த்து விளங்குகிறது (தொழில்). இம் மரத்தில் நல்ல கனிகளும் பழுத்துள்ளன. எனவே இது தேமாமரம் (பொருள்) இவ்வாறு அறிவதே சவிகற்பக் காட்சி.
10. காண்டல் வாயில், மனம், தன்வே தனையோடு, யோகக் காட்சி என
ஈண்டு நான்காம்; அனுமானம் தனக்கும் பிறர்க்கும் என்று இரண்டாம்;
மாண்ட உரைதந் திரமந்திரத்தோடு உபதே சச்சொல் என மூன்றாம்;
பூண்ட அளவைக்கு எதிர்புலன் தன் இயல்பு, பொது என்று இரண்டாமே.
காட்சி அளவையை நான்கு வகைகளாகப் பிரிப்பர். அவை முறையே வாயிற் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி என்பனவாகும். கருதல் அளவையும் தன் பொருட்டு என்றும், பிறர் பொருட்டு என்றும் இரண்டாகக் கொள்ளப்படும. மான்புடைய உரை அளவை மூன்றாகக் கூறப்படும். அவை தந்திரம், மந்திரம், உபதேசம் என்பனவாகும். இங்கே கூறப்பட்ட அளவைகளால் அறியப்படும் பொருள்களின் இயல்பு இரண்டாகக் கொள்ளப் பெறும். அவை முறையே தன்னியல்பு எனப்படும் சிறப்பியல்பும், பொது இயல்பும் என்று இரு வகைப்படும்.
இதனை அடுத்து வருகிற இரண்டு பாடல்களால் இங்கே விளக்கப்பட்ட நான்கு வகைக் காட்சிகளும், தன்னியல்பு பொது இயல்பு என்பனவும் ஆசிரியரால் விளக்கப்படுகின்றன.
11. அன்னிய சாதி யும்தன் சாதியும் அகன்று நிற்றல்,
தன்இயல்பு அன்னியத்தைத் தவிர்ந்துதன் சாதிக்கு ஒத்தல்
துன்னிய பொது, இயற்கை; சொன்ன இவ்விரண்டி னுள்ளே
மன்னிய பொருள்கள் யாவும் அடங்கிடும், மானம் உற்றால்.
சிறப்பு இயல்பு எனப்படுவது வேற்று இனப் பொருள்களின் தன்மையையும் தன் இனப் பொருள்களின் தன்மையையும் விட்டு நீங்கித் தனக்கே உரிய இயல்புகளோடு விளங்குவது ஆகும். பொது இயல்பு எனப்படுவது வேற்று இனப் பொருள்களின் இயல்பில் இருந்து நீங்கியும் அதே நேரத்தில் தன் இனப் பொருள்களின் இயல்புகளோடு ஒத்தும் விளங்குவதாகும். இவ்விரண்டு இயல்புகளுள்ளே காட்சி முதலிய அளவைகளின் துணை கொண்டு அறியப்படும் பொருள்கள் யாவும் அடங்கும்.
விலங்கினங்களுக்குள்ளே பசு என்பது ஓர் இனம், எருமை குதிரை முதலியன விலங்குகளே ஆயினும் அவை வேற்று இனமாகும். இத்தகைய இனப்பாகுபாடு பார்த்த அளவிலேயே புலப்படுவது ஆகும். இதனையே பாடலில் அன்னிய சாதியைத் தவிர்த்து தன் சாதிக்கு ஒத்தல் என்று ஆசிரியர் குறிப்பிட்டார்.
நம் வீட்டுப் பசு கருப்பு நிறத்தையும் குட்டைக் கொம்புகளையும் உடையதாகவும் திமில் இல்லாததாகவும் இருக்கிறது. எனவே இந்தப் பசு, பொதுவாக எல்லாப் பசுக்களுக்கும் உரிய இயல்புகளோடு விளங்கினும் தனக்கு எனச் சில அடையாளங்களை உடையது ஆகிறது. இதுவே தன்னியல்பு என்று கூறப்படும் சிறப்பு இயல்பு ஆகும்.
12. உயிரின் ஓடுஉணர்வு- வாயில் ஒளிஉரு ஆதி பற்றிச்
செயிர்உரு விகற்பம் இன்றித் தெரிவது இந் திரியக் காட்சி;
அயர்வுஇல் இந்திரிய ஞானம், ஐம்புலன் சார்ந்து, உயிர்க்கண்,
மயர்வுஅற, வந்த ஞானம் மானதக் காண்டேல் ஆமே.
உயிரின் அறிவு தொழிற்படும்போது அது பொருள்களை நோக்கிச் செல்லுகிறது. அப்போது அவ்வறிவு கண் முதலிய ஐம் பொறிகளையும், அப்பொறிகளுக்குத் துணையாக உடன் நிற்கும் தீ முதலிய ஐம்பூதங்களையும் அப்பூதங்களுக்கு முதற்காரணமாய் விளங்கும் உருவம் முதலிய ஐந்து தன் மாத்திரைகளையும் பொருந்தி நின்றே அறியும். ஐயம், திரிபு என்ற குற்றங்கள் இன்றி ஒரு பொருளை அதனுடைய பெயர், இனம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் பொதுமையாக அறிகின்ற அறிவு இந்திரியக் காட்சி எனப்படும். இது பொறி வழி அறியும் அறிவு எனப்படும். இவ்வாறு முதலில் எழுந்த அறிவு ஐம்புலன்களோடு பொருந்தி அறிந்த பின்னர் மீண்டும் மறக்கப்படாது சித்தத்தில் நிலை பெற்றுப் பெயர் இனம் முதலிய வேறுபாடுகளுடன் புத்தி தத்துவத்தின் தொழிற்பாட்டால் இன்னது எனத் தெளிவாக அறிகின்ற அறிவு மானதக் காட்சி எனப்படும்.
உயிரின் ஓடுஉணர்வு என்ற சொற்கள் அளவை பற்றிக் கூறப்படுகின்ற கருத்துக்கள் அனைத்திலும் கூட்டி உரைக்கப்படும் என்று மாதவச் சிவஞான முனிவர் உரை வரைகிறார்.
முதலில் கூறப்பட்ட இந்திரியக்காட்சி என்பது வாயிற்காட்சி எனவும் நிருவிகற்பக்காட்சி எனவும் கூறப்படும். மானதம் என்பது மனத்தின் தொழிற்பாட்டை முதலில் கொண்டு நிகழ்வது. ஆதலால் அது மனத்தின் வழி வந்த அறிவு ஆகும். ஒளி- நெருப்பு. உருஆதி- உருவம் முதலிய தன் மாத்திரைகள். செயிர்- குற்றம். அயர்வு இல்- மறத்தல் இன்றி. மயர்வு- மயக்கம்.
13. அருந்துஇன்பத் துன்பம் உள்ளத்து அறிவினுக்கு அராகம் ஆதி
தரும் தன்வே தனையாம் காட்சி; சமாதியால் மலங்கள் வாட்டிப்,
பொருந்திய தேச கால இயல்புஅகல் பொருள்கள் எல்லாம்,
இருந்து, உணர்கின்ற ஞானம் யோகநல் காண்டல் ஆமே.
தன் வேதனைக் காட்சி எனப்படுவது உயிர் அராகம் முதலிய ஐந்து தத்துவங்களாலும் செலுத்தப்பட்டு நுகர்கின்ற இன்பதுன்பங்களை இத்தகையது என்று அறிவதாகும். எட்டுவகை உறுப்புகளைக் கொண்ட யோகப் பயிற்சியினால் மலங்களைக் கெடுத்து இருந்த இடத்தில் இருந்தவாறே தேச கால இயல்புகளின் எல்லைக் கடந்து எவ்விடத்தும் எக்காலத்தும் உள்ள பொருள்களை உள்ளவாறே அறிகின்ற அறிவு யோகக் காட்சி எனப்படும்.
அராகம் ஆதி- அராகம் முதலியன. அராகம் முதலிய தத்துவங்களாவன காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்பனவாகும். இவை வித்தியாதத்துவங்களுள் அடங்கும். உயிர் இவ்வைந்து தத்துவங்களோடு பொருந்தும் போதே அதற்கு இன்ப துன்ப உணர்வுகள் தோன்றும் என்பர். சத்துவகுணம் பொருந்தும் போது இன்பமும், தாமதகுணம் பொருந்தும் போது துன்பமும் விளையும். வேதனை என்ற சொல் இக்காலத்தில் துன்பத்தை மட்டும் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் அது நுகர்வு என்றே பொருள்படும். உயிரின் இன்ப துன்ப உணர்வுகளைத் தன் வேதனைக் காட்சி என்பர். வடமொழியில் இது ஸ்வவேதனா பிரத்யட்சம் என்று வழங்கும்.
யோகக் காட்சி எனப்படுவது இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி, என்ற எட்டு உறுப்புகளைக் கொண்ட யோக நெறியிலே நின்று அதனால் உயிரைக் கட்டியிருக்கும் மும்மலங்களையும் ஆற்றல் இழக்கச் செய்யும் யோகியரின் காட்சித்திறமாகும். அவர்கள் ஓரிடத்தில் ஒரு காலத்தில் இருந்த படியே இருந்து, விண்ணுலகம் மண்ணுலகம் கீழ் உலகம் ஆகிய மூன்று இடங்களிலும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் ஆகிய முக்காலத்தும் நிகழ்வனவற்றை உள்ளவாறே காண்பர்.
14. பக்கம் முன்றின், மூன்று ஏது உடைய பொருளைப் பார்த்து உணரத்
தக்க ஞானம் தன் பொருட்டாம்; பிறர்தம் பொருட்டாம் அனுமானம்,
தொக்க இவற்றால் பிறர்தெளியச் சொல்லல் ஆகும்; அச்சொல்லும்
மிக்க அன்னு வயத்தினொடு வெதிரே கச்சொல் என இரண்டாம்.
பக்கம் என்பது மூன்று வகைப்படும். அவை முறையே பக்கம், சபக்கம், விபக்கம் என்பன. ஏது என்பதும் மூன்று வகைப்படும். அவை இயல்பு, காரியம், அநுபலத்தி எனப்படும். ஏதேனும் ஓர் ஏதுவை வைத்து விட்டுநீங்காத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளைக் கருதி அறிவது தன் பொருட்டு அனுமானம் எனப்படும். இவ்வாறே பக்கத்தோடு பொருந்திய மூன்று ஏதுக்களைக் கொண்டு தான் கருதி அறிந்ததை மற்றையோர் அறிய அறிவிக்கும் அளவை பிறர் பொருட்டு அனுமானம் எனப்படும். இவ்வாறு பிறருக்கு அறிவிப்பதும் உடன்பாட்டு வகை என்றும், எதிர்மறை வகை என்றும் இரண்டாகும்.
பக்கம் என்பது வடமொழியில் பட்சம் எனப்படும். அந்நுவயம் என்பது உடன்பாட்டு முறையையும், வெதிரேகம் என்பது எதிர்மறையையும் குறிப்பனவாகும். இங்குக் கூறப்பட்ட பக்கம், ஏது என்பன இதனை அடுத்து வரும் இரண்டு பாடல்களாலும் விளக்கப்படுகின்றன.
15. மூன்று பக்கம்; பக்கம், நிகர் பக்கம், நிகரில் பக்கம் எனத்
தோன்றும்; பக்கம் துணிபொருளுக்கு இடம் ஆம்; உவமை நிகர்பக்கம்;
ஆன்றபொருள் சென்று அடையாத இடம்ஆம், நிகரில்பக்கம் முதல்
ஏன்ற இரண்டும் பொருள் உண்மைக்கு இடமாம், ஒன்று பொருள் இன்றாம்.
முற் கூறப்பட்ட பக்கம் என்பது பக்கம், சபக்கம், விபக்கம் என மூன்றாகும். இவற்றுள் பக்கமாவது கருதி உணரப்படும் பொருள் உள்ள இடமாம். சபக்கம் என்பது கருதி உணரும் பொருளுக்குச் சான்றாக எடுத்துக் காட்டப்படும் பொருள் உள்ள இடமாகும். விபக்கம் என்பது அப்பொருள் பொருந்தாத எதிர்மறையான இடமாகும். இவை மூன்றனுள் முதலில் கூறப்பட்ட பக்கம், சபக்கம் என்பன பொருள் உண்டு என்று அறிவதற்கு இடமாகும். முன்றாவதாகிய விபக்கம் அப்பொருள் இல்லை என்று அறிவதற்கு உரிய இடமாகும்.
கருதல் அளவையில் ஐந்து உறுப்புகள் உள்ளதாக வைத்துக் காணுதல் வேண்டும். அதனைக் கீழ்காணுமாறு கொள்ளுதல் வேண்டும். 1. இம்மலையில் தீ உண்டு - மேற்கொள்
2. புகை உடைமையால் - காரணம்
3. எங்கே புகை உண்டோ அங்கே தீ உண்டு: அடுக்களையைப் போல - எடுத்துக்காட்டு
4. இங்கே புகை உண்டு (ஆதலால்) - பொருத்திப் பார்த்தால்
5. இங்கே தீ உண்டு - முடிப்புரை.
மேற்கோள் என்பதனைப் பிரதிக்ஞை என்றும், காரணம் என்பதனை ஏது என்றும், எடுத்துக்காட்டு என்பதனை திருஷ்டாந்தம் என்றும், பொருந்திப் பார்த்தல் என்பதனை உபநயம் என்றும், முடிப்புரையை நிகமனம் என்றும் வடமொழியில் கூறுவர்.
பாடலில் சபக்கம், விபக்கம் என்ற வடசொற்களை நிகர் பக்கம், நிகரில் பக்கம் என்று ஆசிரியர் அருள் நந்திசிவம் ஆண்டிருப்பதைக் காண்க.
மேலே காட்டப்பட்ட எடுத்துக்காட்டில் மேற்கோள் அல்லது துணிபொருள் தீ. அது இருக்கும் இடமாகிய மலை பக்கம் எனப்படும் அடுக்களை சபக்கம் ஆகும். இதனை எதிர்மறையாகக் காணும்போது பொய்கையில் தீ இல்லை என்று கூறப்படும். இவ்வாறு துணிபொருள் இல்லாத இடம் விபக்கம் ஆகும்.
16. ஏது மூன்று ஆம்; இயல்பு, காரியத்தோடு, அநுபலத்தி; இவை
ஓதின், இயல்பு மரம்மரத்தைக் காட்டல்; உறுகா ரியம்புகைதன்
ஆதியாய அனல்காட்டல் ஆகும்; அநுபலத்தியது
சீதமின்மை பனியின்மை காட்டல் போலும், செப்பிடினே.
ஏது என்று மேலே (பதினாலாம் பாடலில்) கூறப்பட்டதும் மூன்று வகைப்படும். அவை இயல்பு, அனுபலத்தி என்பன. இவற்றுள் இயல்பு என்பது ஒரு பொருளை சுட்டிக்காட்டி இது இன்னது என்பதாகும். காரியம் என்பது புகையைக் கண்டவிடத்து அதற்குக் காரணமாக உள்ள நெருப்பு உண்டு என்று காட்டுதலாகும். அனுபலத்தி என்பது ஒன்று இன்மையை வைத்து மற்றொன்றின் இன்மையை உணர்வதாகும்.
இயல்பு எனப்பட்டது, ஒரு சொல் தன் ஆற்றலால் இயல்பாகவே பொருளை உணர்த்துதல் ஆகும்.
காரிய ஏது என்பது புகை என்னும் காரியம் தனக்குக் காரணமான நெருப்பின் இருப்பை உணர்த்துவது ஆகும். அநுபலத்தி (அநுபலப்தி) என்பது இல்லை என்னும் உணர்விற்குப் புலனாவது. உபலத்தி- விளங்குதல், அனுபலத்தி- விளங்காமை. இதற்கு எடுத்துக்காட்டாக இப்போது குளிர் இல்லை பனி இன்மையால் என்பது கூறப்படும் இதனை மாற்றி இப்போது பனி இல்லை குளிர் இன்மையால் என்றும் கூறப்படும். காரியத்தின் இன்மையைக் கொண்டு காரணத்தின் இன்மையையும், காரணத்தின் இன்மையைக் கொண்டு காரியத்தின் இன்மையையும் உணர்தல் அநுபலத்தியில் அடங்கும்.
17. புகையால் அனல் உண்டு, அடுக்களைபோல் என்னப் புகறல், அந்நுவயம்;
வகையாம் அனல்இ லாஇடத்துப் புகைஇன்று ஆகும் மலரினொடு
முகைஆர் நீரிற் போல்என்று மொழிதல் வெதிரே கச்சொல்; இவை
தொகைஆர் உறுப்புஐந் தொடும்கூடச் சொல்லு வாரும்உளர், துணிந்தே
மேலே பதினான்காவது பாடலில் கூறப்பட்ட அந்நுவயம் என்பது உடன்பாட்டு முறையாகும். இங்கே புகை இருப்பதால் நெருப்பு உண்டு, அடுக்களையைப் போல என்று விளக்குவது இந்த வகையைச் சாரும். இதற்கு மாறாக நெருப்பு இல்லாத இடத்தில் புகையும் இல்லாது இருக்கும். மலரும் அரும்பும் நிறைந்த தாமரைப் பொய்கையைப் போல என்று எதிர்மறையாகக் கூறுவது வெதிரேகம் எனப்படும். இவை இரண்டும் ஐந்து உறுப்புகளை உடையனவாக வரையறுத்துக் கூறப்படும்.
இப்பாடலில் கூறப்பபட்ட உடன்பாடு (அந்நுவயம்) வெதிரேகம் (எதிர்மறை) என்ற இரண்டில் உடன்பாட்டுக்கு உரிய ஐந்து உறுப்புகளும் பதினைந்தாம் பாடலின் விளக்கத்தில் காட்டப்பட்டன.
வெதிரேகம் என்பதற்கு உரிய ஐந்து உறுப்புக்களும் பின்வருமாறு அமையும்.
1. இம்மலை தீயுடையது - மேற்கொள்
2. புகைஉடைமையால் - காரணம்
3. எங்கே தீ இல்லையோ அங்கே புகை இல்லை; பொய்கை போல - எடுத்துக்காட்டு
4. இம்மலை புகையின்மையை உடையதன்று - பொருத்திப் பார்த்தல் ஆதலால்
5. இம்மலை தீயுடையதே - முடிப்புரை
18. போது நாற்றத் தால்அறிதல், பூர்வக் காட்சி அனுமானம்;
ஓதும் உரையால் அறிவின் அளவு உணர்தல், கருதல் அனுமானம்;
நீதியால் முன் கன்மபலம் நிகழ்வது இப்போது இச்செய்தி
ஆதி யாக வரும்பயன் என்று அறிதல், உரையால் அனுமானம்.
கருதல் அளவை எனப்படும் அனுமானமும் மூன்று வகைப்படும். முன்பே மல்லிகை மலரின் மணத்தினை அறிந்தவன் ஒருவன் ஓர் அறைக்குள்ளே நுழைந்த போது அங்கு மல்லிகையின் நறுமணம் வீசுவதை முகர்ந்து பூவைக் கண்ணால் காணாத போதும் இங்கே மல்லிகை மலர் உண்டு என உணர்தல் பூர்வக் காட்சி அனுமானம் எனப்படும். ஒருவன் பேசுவதைக் கேட்டு அவன் சொற்களின் ஆழத்தையும் நுட்பத்தையும் கொண்டு இவன் அறிவால் மிக்கவன்; கல்வியால் நிறைந்தவன் என்று உய்த்து உணர்வது கருதல் அனுமானம் எனப்படும். இந்தப் பிறவியில் முறையாக வந்து பொருந்துகின்ற இன்ப துன்பங்கள் முந்திய பிறவியில் செய்த நல்வினை தீவினைகளின் பயன் என்று அருள் நூல்கள் உரைப்பதைக் கொண்டு, இப்பிறவியில் செய்யும் நல்வினை தீவினைகள் இனி வரும் பிறவியில் இன்பமும் துன்பமுமாக நம்மை வந்தடையும் என்று உய்த்து உணரும் அறிவுரை அளவையால் வரும் அனுமானம் ஆகும்.
பூர்வம் என்பது முந்தியது என்று பொருள் தரும். முன்பே அறிந்திருந்த அறிவின் துணை கொண்டு இப்போது உய்த்து உணர்வதால் இது பூர்வக்காட்சி அனுமானம் எனப்பட்டது.
ஒருவன் வாயிற் பிறக்கும் சொற்களைக் கொண்டே அவனது அறிவின் ஆழத்தையும் குடிப் பெருமையையும் அறியலாம் என்பதனை நிலத்திற் கிடந்தமை கால் காட்டும் காட்டும், குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல் (குறள் 959) என்ற திருக்குறளும் வலியுறுத்தும்.
அருள் நூல்களாகிய ஆகமங்கள் முதலியன கூறுவனவற்றை அடிப்படையாகக் கொண்டு அவை கூறாது விடுத்தனவற்றையும் உய்த்து உணர்வது உரையால் அனுமானம்.
19. அநாதியே அமலன் ஆய அறிவின்நூல் ஆக மம்தான்
பின்ஆதிமா றுஇன்றிப் பேணல் தந்திரம்; மந்தி ரங்கள்,
மனாதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை, ஆகும்;
தன் ஆதிஈறு இலாதான் தன்மை உணர்த்துதல், உபதே சம்தான்.
தோற்றமில் காலந் தொட்டே பாசத் தளைக்கு உட்படாத முழுமையான அறிவுடைய இறைவன் தன் பெருங்கருணையால் அருளிச் செய்த நூல்கள் வேத ஆகமங்கள் ஆகும். இவையே உரை அளவை என்று மேலோரால் கொள்ளப்படுகின்றன. ஆகமங்கள் மூன்று கலைகளை உடையனவாக விளங்குகின்றன. அவை முறையே தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை என்பன. இவற்றுள் தந்திர கலை என்பது கன்மகாண்டம் எனப்படும் கிரியை முறைகளைப் பற்றித் தெரிவிப்பதாகும். மந்திர கலை என்பது உபாசனா காண்டத்தின் அடிப்படையில் மனம் முதலிய அந்தக் கரணங்களைத் தம் போக்கில் செல்ல விடாது தடுத்து நிறுத்தித் தான் வழிபடும் தெய்வத்தை மனம் ஒன்றி வழிபடும் முறைமையைத் தெரிவிப்பது ஆகும். உபதேச கலை என்பது ஞான காண்டத்தின் அடிப்படையில், பிறப்பும் இறப்பும் அற்ற இறைவனிவன் இலக்கணங்களையும் அவனுக்கு வேறான பசுபாசங்களின் இயல்புகளையும் இறைவன் திருவடியைச் சார்ந்தே பசுக்கள் பாசத்தை நீக்க வல்லன என்பதையும் தானே ஓதி உணர்வதையும் பிறர்க்கு உணர்த்தும் முறைமையினையும் தெரிவிப்பதும் ஆகும்.
தந்திரம் என்பது நூல் என்ற பொருளைத் தருவது. மந்திரம் என்பது தன்னை நினைக்கிறவனைக் காப்பாற்றுவது என்ற பொருளைத் தரும். உபதேசம் என்பது அறிவிப்பது என்ற பொருளைத் தருவது. ஆசிரியர் இங்கே ஆகமத்தைப் பற்றி மட்டிலுமே கூறியுள்ளார். எனினும் இந்நூலில் 267ம் பாடலில் வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள் என்று கூறியிருப்பதனால் இங்கு ஆகமங்களுடன் வேதங்களையும் சேர்த்துக் கூறுதல் ஆசிரியரின் கருத்து என்பதை உணரலாம். அறிவின் என்ற சொல் இயல்பாகவே முற்றுணர்வுடைய இறைவனைக் குறித்தது.
20. ஈண்டு பக்கப் போலி நான்கு; ஏவிப் போலி ஒரு மூன்றாய்,
வேண்டும் எழுமூன்று ஆகும்; விளங்கு உவமைப் போலி ஈரொன்பான்
காண்டும்; தோல்வித் தானம் இரண்டு, இருபத்து இரண்டாம்; கருதில், இவை
யாண்டும் ஒழிவர்; அவை எல்லாம் அளக்கில் அறுபத்து ஐந்தாகும்.
கருதல் அளவையில் உறுப்புகளாக விளங்குகின்ற பக்கம், ஏது, உவமை என்ற மூன்றிலும் பிழை நேருமானால் அவை போலி எனப்படும். அவற்றின் வகைகளையும் பிறரோடு வாதிடும் போது தோல்விக்கு இடமான தோல்வித் தானத்தின் வகைகளையும் இந்தப் பாடலில் பட்டியல் இட்டுக் காட்டுகிறார். பக்கப் போலி என்பது நான்கு வகைப்படும். ஏதுப்போலி மூன்று வகைப்பட்டு விரித்துச் சொல்லுங்கால் இருபத்து ஒன்று ஆகும். உவமை பற்றிய போலி இரண்டு வகைப்பட்டு, விரித்துக் கூறும் போது பதினெட்டு ஆகும். தருக்கமிடும் போது பேசத் தெரியாமை காரணமாக மயங்கப் பேசுவதும், பேசாது இருத்தலும் என்ற இரண்டும் தோல்வித்தானம் எனப்படும். இவற்றை விரித்து உரைக்கும் போது அது இருபத்திரண்டு ஆகும். ஆகவே இவை யாவும் கூட்டிப் போலிகள் அறுபத்து ஐந்து எனப்படும்.
வடமொழியில் மேலே கூறப்பட்ட போலிகள் மூன்றும் பட்சா பாசம், ஹேத்துவாபாசம், திருஷ்டாந்தாபாசம் என்று வழங்கும். தோல்வித்தானம் என்பது நிக்ரகஸ்தானம் என்று வழங்கும். ஆபாசம் என்பது போலி என்ற பொருளைத் தருவது.
அளவை இயலில் பிழைகள் நேர்ந்தால் அளந்து அறிவதிலும் பிழைகள் நேரிடும். ஆதலால் அவற்றை அறிந்து நீக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பதை வலியுறுத்த ஆசிரியர் இப்பாடலை இங்கே அமைத்தார்.
இத்தகைய பிழைகளைப் பற்றிய விரிவான செய்திகள் சிவஞான சித்தியாருக்கு சிவாக்கிர யோகிகள் இயற்றிய உரையில் விரித்துக் கூறப் பட்டுள்ளன. (திருவாடுதுறை ஆதினப்பதிப்பு 1965) அவ்வாறே துத்துக்குடி திரு பொ. முத்தையா பிள்ளை அவர்கள் சிவஞான சித்தியாருக்கு எழுதிய பொழிப்புரையில் இவை விளக்கமாகச் சொல்லப்பட்டன. (முதற்பதிப்பு 1914)).
No comments:
Post a Comment