Friday, 18 August 2017

திண்டுக்கல்: ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் - ஸ்ரீபத்மகிரீஸ்வரர்


சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்கு, சிவனாரைச் சரணடைவதே உத்தமம் எனும் முடிவுக்கு வந்த ஸ்ரீபிரம்மன், புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றுக்குச் சென்று நீராடினார்; தலங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்தார்.
அப்படி வரும் வழியில், தாமரை பூத்த தடாகம் ஒன்றைக் கண்டார் ஸ்ரீபிரம்மன். அங்கே நீராடிவிட்டு, சிவனார் குறித்து தவம் இருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், தாமரைத் தடாகத்தில் இருந்து வெளிப்பட்டு, ஸ்ரீபிரம்மனுக்குக் காட்சி தந்தருளினார். இதனால் அவருக்கு ஸ்ரீபத்மகிரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது; மேலும் அங்கேயுள்ள மலை, ஸ்ரீபத்மகிரி என அழைக்கப்பட்டது.
இன்னொரு சம்பவம்... தேவர்களுக்கு துன்பம் விளைவித்த அனலாசுரனை அழித்த தேவி, அதே உக்கிரத்துடன் இருந்தாள். பிறகு, அவளின் கோபத்தைத் தணித்தார் சிவனார். இதையடுத்து, ஸ்ரீஅபிராமியம்மையாக அங்கேயே கோயில் கொண்டாள் தேவி.
இத்தனைப் பெருமைகள் கொண்ட ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீபத்மகிரீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது. ஒருகாலத்தில், அருகில் உள்ள மலையில் குடியிருந்தாராம் சிவனார். பிறகு, ஊரின் மையப்பகுதியில் கோயில் அமைத்து, சிவப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினர், ஊர் மக்கள். இங்கே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீபத்மகிரீஸ்வரர் மற்றும் ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீஅபிராமியம்மை என இரண்டு ஸ்வாமிகள்; இரண்டு தேவியர்! ஆனால், அபிராமியம்மன் கோயில் என்றுதான், உள்ளூர் அன்பர்கள் அழைக்கின்றனர்.
அற்புதமான ஆலயத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கும்  ஸ்ரீஆஞ்சநேயருக்கும் திருச்சந்நிதிகள் அமைந்துள்ளன. பரிவார தெய்வங்களுடன் அறுபத்து மூவரும் காட்சி தரும் ஒப்பற்ற திருத்தலம் இது. அதுமட்டுமா?! தனது பதவியை இழந்து தவித்த வருண பகவான், இங்கேயுள்ள பத்ம தீர்த்தத்தில் நீராடி, பத்மகிரியை வலம் வந்து, ஸ்ரீபத்மகிரீஸ்வரரை வணங்கி, இழந்த பதவியை மீண்டும் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம். ஆகவே, பௌர்ணமிதோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து, கிரிவலம் சென்று சிவனாரைத் தரிசித்துப் பலன் பெற்றுச் செல்கின்றனர்.
மேலும் கும்ப நதியில் நீராடினால் சகல பாவங்களும் விலகும்; சந்தானவர்த்தினியில் நீராடி, சிவ தரிசனம் செய்தால், சந்தான பாக்கியம் விரைவில் கிட்டும் என்பது ஐதீகம்!  
புராண- புராதனப் பெருமைகள் கொண்ட இந்தத் தலத்தில், மாசி மாதத்தின் மகாசிவராத்திரி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து, இரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு, ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும், ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீபத்மகிரீஸ்வரரையும் வணங்குவார்கள். இதனால், வருடம் முழுவதும் இறைவனைத் தரிசித்த பலன் கிடைக்கும்; இழந்த பதவி மற்றும் செல்வத்தைப் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  
திண்டுக்கல் நகரில் உள்ள இந்தக் கோயிலுக்கு, மகாசிவராத்திரி நன்னாளில் வந்து, இரண்டு ஸ்வாமிகள் மற்றும் இரண்டு அம்பிகையரைத் தரிசியுங்கள். வாழ்வில், சந்தோஷமும் நிம்மதியும் இரட்டிப்பாகும் என்பது உறுதி!

No comments:

Post a Comment