Tuesday, 22 August 2017

அசிடிட்டி தவிர்க்க 10 வழிகள்!


‘உணவுதான் மருந்தாகவும் நோயாகவும் இருக்கிறது’ என்பார்கள். அசிடிட்டிப் பிரச்னையைப் பொறுத்தவரை அது மிகச் சரி. காரமான, மசாலாப் பொருள்கள் பல கலந்த விதவிதமான ஹோட்டல் உணவுகள் அறிமுகமானதன் விளைவுகளில் ஒன்று அசிடிட்டி. ஆர்வத்தில் கண்டதையும் உண்டவர்களுக்கு ஒரு கட்டத்தில், உணவைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் எதுக்களிப்பு வந்து அவதிப்பட வேண்டுமே என்ற எண்ணத்தில் சாப்பிடாமலேயே காலத்தைக் கடத்துவார்கள். இது, பிரச்னையை மேலும் அதிகரிக்கவே செய்யும். சாப்பிட்டு முடித்தபிறகு, குமுறத் தயாராக இருக்கும் எரிமலை போல எரிச்சலை ஏற்படுத்தும் அசிடிட்டியை ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அசிடிட்டி ஏன் ஏற்படுகிறது? தவிர்க்க என்ன வழி?
அசிடிட்டி

நாம் உணவை விழுங்கும்போது, உணவுக் குழாயின் கடைசிப் பகுதியில் இருக்கும் வால்வு போன்ற அமைப்பு திறந்து உணவானது இரைப்பைக்குள் செல்ல அனுமதிக்கிறது. பின்னர், அது மேலே வராமல் இருக்க இறுக்கமடைகிறது. பல்வேறு பாதிப்புகள் காரணமாக இந்த வால்வு பாதிப்படையும்போது இரைப்பையில் உள்ள அமிலங்கள் உணவுக் குழாய்க்குள் வருகின்றன. எப்போதாவது எதுக்களித்தல் இருந்தால் பிரச்னை இல்லை. தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்போது, அது வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கிறது. இதையே நாம் ‘அசிடிட்டி’ என்கிறோம்.
ஏன் வருகிறது?

*
 கலப்பட உணவு, அசுத்தமான குடிநீர், மோசமான சுற்றுச்சூழலால் ஹைலிகோபேக்டெர் பைலோரி (Helicobacter Pylori) எனப்படும் பாக்டீரியா பரவுகிறது. இதுதான் சுமார் 70-80 சதவிகிதம் பேருக்கு அல்சர் வருவதற்குக் காரணம்.

*  காரமான உணவுகள், மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உண்பதால் அசிடிட்டி ஏற்படுகிறது.

*  காலை உணவைத் தவிர்ப்பது மற்றும் நேரம் தவறி உண்பது.

*  கோபம், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் பதற்றம்.

*  மனஅழுத்தம் மற்றும் கவலை.

*  சிகரெட், மது மற்றும் புகையிலைப் பழக்கம்.

*  வெறும் வயிற்றில் சூடான காபி, டீ மற்றும் கோலா வகை பானங்கள் பருகுவது.

*  நீண்ட நாள்களுக்கு வலி நிவாரண மருந்துகள் எடுப்பது.
பரிசோதனைகள்

எண்டோஸ்கோப்பி (Endoscopy) முறை    மூலம் அசிடிட்டி பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும். உடலின் பி.ஹெச் அளவைக் கண்காணிப்பது (pH Study) மூலமாகவும் இதைக் கண்டறியலாம்.
அசிடிட்டி தவிர்க்க 10 வழிகள்! 

*  காரம், இனிப்பு, கொழுப்பு, புளிப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும். 

*  காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. தினமும் சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.  விருந்தாக இருந்தாலும், இரவில் அளவாகச் சாப்பிட வேண்டும்.

*  சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது; உடற்பயிற்சியோ, குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலையோ செய்யக் கூடாது.

*  இறுக்கமாக உடை அணிதல் கூடாது. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். அசிடிட்டி ஏற்பட உடல் பருமன் மிக முக்கிய காரணங்களுள் ஒன்று.

*  மாதுளை, பப்பாளி, கொய்யா, அத்தி, நன்கு பழுக்காத வாழைப்பழம், வெள்ளரிக்காய், வெண்பூசணி, மணத்தக்காளிக் கீரை, முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை மற்றும் அகத்திக் கீரை  ஆகியவற்றை அதிகளவில் சாப்பிடலாம்.

*  இஞ்சி, புதினா போன்றவை அமிலம் அதிகம் சுரப்பதைத் தடுத்து நிறுத்தும். சாப்பாட்டுக்கு முன்னர் இஞ்சி டீ அருந்துவது, செரிமானத்துக்குத் தேவையான சுரப்பிகளைத் தூண்டும். பட்டை கலந்த டீயும் அருந்தலாம்.

*  முட்டைகோஸில் உள்ள குளுட்டமைன் (Glutamine) என்ற அமினோ அமிலம், செரிமானத்தைச் சீர்படுத்தும். எனவே, முட்டைகோஸ் சாறு எடுத்துப் பருகலாம்.
*  ஐந்தாறு துளசி இலைகளை தினமும் உண்பதன் மூலம், அமிலத்தன்மையால் ஏற்படும் அசௌகர்யத்தைக் குறைக்கலாம்.

*  மனஅழுத்தம், கோபம், உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க, தியானம் மற்றும் யோகா செய்ய வேண்டும்.

*  புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடவே கூடாது.

- ஜெ.நிவேதா

அறிகுறிகள்

வயிற்று எரிச்சல்

தொண்டை எரிச்சல்

எதுக்களிப்பு

வாந்தி

தொண்டைப் புண்

ஜீரணமின்மை

மலச்சிக்கல்

அசெளகரியமான உணர்வு

எவ்வளவு உணவு தேவை?

உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு, ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 கலோரி தேவை. உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1,500 முதல் 2,000 கலோரி போதும்.

காலை: எழுந்தவுடன் ஒரு கப் கிரீன் டீ, அல்லது வெந்நீர் இரண்டு டம்ளர் அல்லது தேன் கலந்த வெந்நீர் அருந்தலாம். நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணலாம்.

மதியம்: கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த சரிவிகித உணவு.

மாலை: வேகவைத்த கொண்டைக்கடலை, வேர்க்கடலை, காய்கறி சாலட் முதலியவை எடுத்துக்கொள்ளலாம்.

இரவு: 8 மணிக்குள்ளாக, எளிதில் செரிமானம் ஆகும், ஆவியில் வேகவைத்த உணவுகளைக் குறைந்த அளவில் உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment