Saturday 24 June 2017

அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு - திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவண்ணாமலை

மூலவர்: தாளபுரீஸ்வரர் (அகத்தியர் வழிபட்டது - சுயம்பு.), கிருபாநாதேசுவரர் (புலஸ்தியர் வழிபட்டது).

உற்சவர்:சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார்: அமிர்தவல்லி (அகத்தியர் வழிபட்டது.), கிருபாநாயகி (புலஸ்தியர் வழிபட்டது).

தல விருட்சம்: பனை மரம்

தீர்த்தம்:ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம், ஊற்று தீர்த்தம்

ஆகமம்/பூஜை:சிவாகமம்

பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்:வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு

ஊர்:திருப்பனங்காடு

பாடியவர்கள்:சுந்தரர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலையைப் பஞ்சிச் சீறடியாளைப் பாகம்வைத்து உகந்தானை மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்ச்தது எங்கள் பிரானை நினையாதார் நினைவென்னே. - சுந்தரர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 9வது தலம். 🌱

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 மாசியில் தாளபுரீஸ்வரருக்கு 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்.

🅱 தல சிறப்பு:🅱

🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள்.

🎭 கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப் பட்டிருக்கிறது.

🎭 சூரியனின் உடலில் நந்தி போன்றும், சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும், யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பதும் இக்கோயிலில் வித்தியாசமாக இருக்கிறது.

🎭 சுந்தரரிடம் இறைவன், 'நான் பனங்காட்டிற்கும் வன்பாக்கத்துக்குமாய் இருப்பவன்', என்றருளியமையாலும், புறவார் பனங்காட்டூரினின்றும் வேறுபாடறியவும் இத்தலத்தை 'வன்பார்த்தான் பனங்காட்டூர் ' என்று சுந்தர் பாடியுள்ளார். பனைமரக்காடாக இருந்தமையால் 'பனங்காடு' (தாலவனம்) என்று பெயர் பெற்றது.

🎭 வன்பாக்கம் என்னும் ஊர் - இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ளது. அதுவே இன்று வெண்பாக்கம், வெம்பாக்கம் என்று வழங்குகின்றது. (இது பாடல் பெற்ற தலமன்று. திருப்பனங்காடு தான் பாடல் பெற்றது.)

🎭 இத்தலத்தில் கண்வ முனிவர் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

🎭 (ஊருக்குப் சற்றுத் தொலைவில் 'ஊற்று தீர்த்தம்' உள்ளது; சுந்தரருக்கு இறைவன் (கட்டமுது) உணவளித்த வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. இது செவி வழிச் செய்தியே. பெரியபுராணத்தில் இல்லை. இறைவன் அப்போது தன் பாதத்தால் கிளறி உண்டாக்கிய தீர்த்தமே 'ஊற்று தீர்த்தம்' (ஊற்றங்குழி) என்று பெயர் பெற்றதென்று சொல்லப்படுகிறது.)

🎭 இக்கோயிலில் முதலில் அகத்தியர் வழிபட்ட மூர்த்தியைத் தரிசிக்க வேண்டும்.

🎭 "சடாகங்கை" கரையில் கங்காதேவி சிலை உள்ளது; மாசிமகத்தில் தீர்த்தவாரியும், தெப்பமும் இதில் சிறப்பு.

🎭 இக்கோயிலில் இரண்டு சுவாமி (கொடிமரம், பலபீடம், நந்தியுடன்) சந்நிதிகளும், இரண்டு அம்பாள் சந்நிதிகளும் உள்ளன.

🎭 முருகப்பெருமான் தரிசனம் - வள்ளி தெய்வானையுடன் கூடி, மயிலின் முகம் திசை மாறி உள்ளது.

🎭 தாளபுரீஸ்வரர் சந்நிதியின் சண்டேசுவரர் இல்லை; அடுத்துள்ள சந்நிதியில் மட்டுமே (தனி விமானத்துடன்) உள்ளார்.

🎭 கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது.

🎭 மாசிமகத்தில் தாளபுரீஸ்வரருக்கும், கார்த்திகை சோமவாரத்தில் கிருபாநாதேசுவரருக்கும் விசேஷம்.

🎭 கோயிலுள் பக்கத்திற்கு ஒன்றாக இருபுறமும் இரு பனைமரங்கள் உள்ளன; ஒரு மரத்தின் விதையிலிருந்து முளைத்தபோதிலும் இவ்விரண்டினுள் ஒன்று ஆண் பனையாகவும், மற்றொன்று பெண் பனையாகவும் உள்ளது.

🎭 இக்கோயிலின் உள் மண்டபத்தில் கல் தூண்களில் மிக அரிய சிற்பகங்கள் உள்ளன.

🎭 கோயிலுக்கு வெளியில் கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 241 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடை திறப்பு:🅱

🗝 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.🗝

🦆 பூசைக்காலங்கள்:🦆

காலை சந்தி-காலை 8 மணி; உச்சிகாலம் 11-12, சாயங்காலபூசை - மாலை 5 மணி.

🅱 பொது தகவல்:🅱

🦋 பிரகாரத்தில் நடராஜர், திருப்பதி வெங்கடாஜலபதி, மீனாட்சி சொக்கநாதர், மகாலிங்கம் ஆகியோரும் இருக்கின்றனர்.

🦋 விஜயநகர மன்னர்கள், முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து 22 கல்வெட்டுக்கள் அரசால் படியெடுக்கப்பட்டுள்ளன.

🦋 கல்வெட்டில் இறைவன் 'திருப்பனங்காடுடைய நாயனார் ' என்றும்; ஊர்ப்பெயர் 'காலியூர்க் கோட்டத்து கழுமலநாட்டுத் திருப்பனங்காடு' என்றும் குறிக்கப்படுகிறது.

🦋 அகத்தியர் பூசித்தபோது, கோட்டை முனீஸ்வரர் பனைக் கனிகளை உதிரச் செய்ய, அகத்தியர் அதையும் இறைவனுக்கு படைத்தமையால், இன்றும் பனைக்கனி, (பனம்பழம்) கிடைக்குங் காலங்களில் சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

🦋 வடலூர் வள்ளற்பெருமானின் வாக்கிலும், பட்டினத்தடிகளின் திருவேகம்பர் திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱

🌹 குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். மேலும், சுவாமியை வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும், கண் தொடர்பான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

🌹 தலவிருட்சத்தை  சுற்றி வந்து சிவனை வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🅱 தலபெருமை:🅱

🔥 இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது.

🔥 அகத்தியருடன் வந்த அவரது சிஷ்யர் புலத்தியர், தாளபுரீஸ்வரருக்கு அருகிலேயே, மற்றோர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவர், "கிருபாபுரீஸ்வரராக' சதுர பீடத்தில் அருளுகிறார்.

🔥 தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் இருவரும் ஒரே சிவனாகவே வழிபடப்படுகின்றனர்.

🔥 இவர்களில் அகத்தியர் வழிபட்ட தாளபுரீஸ்வரர் பிரதானமான மூலவராக இருக்கிறார்.

🔥 கிருபாபுரீஸ்வரருக்கு நேரே பிரதான வாயில் இருக்கிறது.

🔥 இருவரும் தனித்தனியே கஜபிருஷ்ட விமானத்தின் கீழே இருக்கின்றனர்.

🔥 தாளபுரீஸ்வரரின் கருவறைச் சுவரில் லிங்கோத்பவர், துர்க்கை அம்மனும், கிருபாபுரீஸ்வரர் கருவறையின் பின்புறம் மகாவிஷ்ணு, இடது புறத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். ஒரு பள்ளியறை மட்டும் இருக்கிறது.

🔥 இருவருக்கும் அம்பாள்கள் தனித்தனி சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அடுத்தடுத்து இருக்கின்றனர்.

🔥 இதில் பிரதான அம்பாள் அமிர்த வல்லி உயரமாகவும், கிருபாபுரியம்பாள் சற்று உயரம் குறைந்தவளாகவும் இருக்கின்றனர்.

🔥 கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி தன் இடக்காலை மடக்கி வைத்தபடி வித்தியாசமாக காட்சி தருகிறார். இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது.

🔥 பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் விநாயகருக்கு இடப்புறத்தில் நாகதேவதையும், வலப்புறத்தில் மடியில் அம்பாளை வைத்தபடி மற்றோர் விநாயகரும் இருக்கின்றனர்.

🔥 கோயிலுக்கு வெளியே வன்னி மரத்தின் அடியில் சனீஸ்வரர் இருக்கிறார். இவரை வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

🔥 இவருக்கு அருகிலேயே வேம்பு மரத்தின் கீழ் தவம் செய்த யோகனந்த முனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

🔥 சிவன் கோயிலுக்குள் செல்லும் முன்பு முதலில் இவரை வணங்கி விட்டுத் தான் செல்கிறார்கள்.

🔥 சிவதல யாத்திரை வந்த சுந்தரர் காஞ்சிபுரத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது நண்பகல் பொழுதாகி விடவே சுந்தரரும், அவருடன் வந்தவர்களும் பசியால் களைப்படைந்தனர்.

🔥 சிவன் ஒரு முதியவர் வடிவில் சென்று வழியில் ஓரிடத்தில் அவரை மறைத்து பசியாற உணவு கொடுத்தார். அவரிடம் சுந்தரர், உண்ண உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீர் தரவேண்டாமா ? என்றார். அம்முதியவர் "உங்களுக்கு நீர் கிடைக்கும்' என்று சொல்லிவிட்டு சற்று நகர்ந்தார். அவர் நின்றிருந்த இடத்தில் நீர் ஊற்றாக பொங்கியது.

🔥 வியந்த சுந்தரர் முதியவரிடம், தாங்கள் யார் ? என்றார். அதற்கு முதியவர், "உன் திருமணத்தில் வம்பு செய்த நான் பனங்காட்டில் குடியிருப்பவன்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

🔥 தனக்கு உணவு படைத்து பசியை போக்கியது சிவன் என அறிந்த சுந்தரர் மகிழ்ச்சி கொண்டார். அவ்விடத்தில் நந்தியின் கால் தடம் மட்டும் தெரிந்தது. அதனை பின்தொடர்ந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்து சிவனை வணங்கி "வம்பு செய்பவன், கள்ளன்' என்று அவரை உரிமையுடன் திட்டி பதிகம் பாடினார்.

🔥 சுந்தரருக்காக சிவன் பாதத்திற்கு அடியில் உருவான தீர்த்தம் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது.

🔥 எப்போதும் நீர் வற்றாத இந்த தீர்த்தத்தை *"சுந்தரர் தீர்த்தம்'* என்கின்றனர்.

🔥 மாசி மாத பிரம்மோற்ஸவத்தின் போது இத்தீர்த்தத்தில் கட்டமுது படைக்கும் விழா நடக்கிறது.

🔥 இத்தலத்தின் தல விநாயகர் பெரிய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

🔥 மூலவரின் விமானம் கஜபிருஷ்டம்.

🔥 இக்கோயிலில் மூன்று நிலை ராஜ கோபுரம் உள்ளது.

🔥 புலத்திய முனி வழிபட்ட இறைவன் கிருபா நாதேஸ்வரர். புலத்தியர் யார் ?

👉🏽 நமது புராணங்களில் உயர்வான இடத்தைப் பெறுகிற மாமுனிவர்களில் புலத்தியரும் ஒருவர். பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் ஒருவரான புலஸ்தியர் (இதுவே தமிழில் புலத்தியர் ஆனது), பிரஜாபதிகளுள் ஒருவர்; சப்தரிஷிகளில் ஒருவர் (சித்திரை-வைகாசி மாதங்களில் வடக்கு வானத்தின் கீழ்ப்பகுதியில் சப்தரிஷி மண்டலத்தைத் தேடுவோமே... அதில் புலத்தியரும் இருக்கிறார்).

⚜ புலத்தியரின் பெருமைகள் ஏராளம். தாமே கிருஷ்ணராக அவதாரம் எடுப்பதற்கு முன்னர், தமது பரமபத லோகத்தில் இருந்து விரஜா நதியை யமுனையாகவும், கோவர்த்தன மலையை கிரிராஜனாகவும், பூலோகத்துக்கு பரம்பொருள் அனுப்பி வைத்தார். சால்மலி பகுதியில் (மேற்குக் கடற்கரையைத் தாண்டி), ஒரு தீவில், துரோணர் எனும் மலையரசனின் மகனாகத் தோன்றி இருந்தது கோவர்த்தனம். மிக உயரமாகவும் அகலமாகவும் இருந்த கோவர்த்தனத்தின் அழகைச் சொற்களால் வர்ணிக்க முடியாது.

⚜ இதன் அழகையும் பெருமையையும் கேள்விப்பட்ட புலத்தியர், காசியில், தான் நடத்தும் யாக பூஜையில், கோவர்த்தனத்தின் புனிதமும் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். துரோணரிடம் அனுமதி கேட்டார். தந்தை அனுமதி கொடுத்த பின்னரும், மகன் கட்டளைகள் போட்டான். முனிவர் தமது உள்ளங்கையில் தன்னைக் கொண்டு போக வேண்டும் என்றும், எங்காவது கீழே வைத்தால் அப்படியே தங்கிவிடுவதாகவும் கோவர்த்தனம் கட்டளை இட்டது.

⚜ இதற்கு ஒப்புக் கொண்ட புலத்தியர், கோவர்த்தனத்தைக் கையில் தாங்கிப் புறப்பட்டார். விரஜா... அதாவது யமுனை பகுதியைக் கடக்கும்போது, அங்கேயே தங்கி கிருஷ்ண சேவையில் ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்ட கோவர்த்தனம், உள்ளங் கையில் இருந்தபடியே எடை கூடத் தொடங்கியது. கனம் தாங்காமல் புலஸ்தியர் மலையைக் கீழே வைக்க, அசையாமல் அங்கேயே அமர்ந்து கொண்டது கோவர்த்தனம். வந்தது புலத்தியருக்குக் கோபம்... 'இங்கேயே இருந்து கொள்; ஆனால், உனது உயரமும் பருமனும் உனக்குக் கிடைக்காது. குட்டையாகத்தான் இருப்பாய்!' என்று சாபம் கொடுத்தார். இப்போது கோவர்த்தனகிரி (கிருஷ்ணர் தூக்கிய போதும் கூட), தனது அசல் அளவுகளில், பாதியளவு தான் உள்ளதாம். எல்லாம் புலத்தியர் மகிமை!

⚜ நைனிதால் பகுதியில் உள்ள 'திரி ரிஷி' என்ற ஏரியானது அங்கு அமைவதற்கும் புலத்தியரே காரணம் ஆவார்.

⚜ இத்தகைய மகிமையெல்லாம் சரி; இவையாவும் வடநாட்டில் தாமே, தென்னாட்டில் எங்கே புலத்தியர் என்கிறீர்களா? பொறுங்கள். புலத்தியர் வருகிறார்.

⚜ புலத்தியர், ராவணனின் தாத்தா. புலத்தியருக்கு  பிறந்தவர் தான் விஸ்ரவா.

⚜ விஸ்ரவாவுக்கு, இத்விதா எனும் முனி குமாரத்தி மூலமாகப் பிறந்த மகன் குபேரன்; கேகசி எனும் மற்றொரு மனைவி மூலமாகப் பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன் ஆகியோர்.

⚜ அகத்தியர், பனங்காட்டுடையாரை வழிபட இந்த இடத்துக்கு வந்தார். அங்கே சுயம்பு லிங்கமாக சுவாமி எழுந்தருளியிருப்பதை அகத்தியர் புலத்தியருக்கு    தெரிவித்திருந்தார். தானும் அந்தச் சுயம்புவை வழிபடலாம் என்று வந்தார். சுற்றிச் சுற்றித் தேட... ம்ஹும். சிவலிங்கத் திருமேனி எங்கேயும், தென்படவே இல்லை. தவித்துப் போன புலத்தியர், *'அவன் அருளாலேயே அவன் தாள்'* வணங்க முடியும் என்பதை உணர்ந்து, தானே ஒரு லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவ்வாறு அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவரே கிருபாநாதேஸ்வரர்.

⚜ புலத்தியர் இங்கு வழிபட்டது பற்றியதான இந்தச் செவிவழிக் கதை, கிருபாநாயகியான அம்பிகை தாம் முதலில் மனமிரங்கி, தாளபுரீஸ் வரரைப் புலத்தியருக்குக் காட்சி கொடுக்கும்படி சொன்னதாகவும் தெரிவிக்கிறது. அருள் காட்டியதால், கிருபாநாதேஸ்வரர் மற்றும் கிருபாநாயகி.

⚜அருள்மிகு கிருபாநாதேஸ்வரர்   சந்நிதி அமைப்பு, தாலபுரீஸ்வரர் சந்நிதி அமைப்பு போன்றே உள்ளது.

⚜ துவாரவாயிலில் ஒரு சிறப்பு. துவார பாலகர்கள் இருக்கிறார்கள்; பின்னே, சுவரில் அவர்களின் வண்ண ஓவியங்களும் உள்ளன. பழைய ஆவணங்களில், ஓவியங்கள் மட்டுமே உள்ளனவாகக் குறிப்புகள் உள்ளன.

🐲 கோவில் அமைப்பு: 🐲

🍄 கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது.

🍄 முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில்.

🍄 இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி.

🍄 வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது.

🍄 உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாலபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு எதிரில் தான் உள் மதிலில் நாம் பார்த்த சாளரம் இருக்கிறது.

🍄 இரண்டு மூலவர் சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன் விளங்குகின்றன. இரண்டு மூலவர்கள் இவ்வாலயத்தில் இருப்பதைப் போலவே இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.

🍄 இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

🍄 தாளபுரீஸ்வரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை.

🍄 அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன.

🍄 கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார்.

🍄 கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.

🍄 அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.

🍄  உயிருள்ள பனைமரங்களை வெட்டுபவர்கள் தண்டனைக்கும், தோஷத்திற்கும் உள்ளாவார்கள் என்று இத்தலத்திலுள்ள கலவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.

🍄 இரண்டு சுவாமி சந்நிதிகள் இருப்பதைப் போன்று இரண்டு அம்பிகைள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் இவ்வாலயத்தில் வீற்றிருக்கின்றனர். அம்பாள் சந்நிதிகளை வலமாக வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.

🍄 இக்கோயிலின் உள் மண்டபத்தில் கற்தூண்களில் மிக அரிய சிற்பங்கள் உள்ளன.

👉🏽 அவற்றுள் சில:

1) அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது.

2) உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள் மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது.

🅱 தல வரலாறு:🅱

⛱ அகத்தியர் தெற்கு நோக்கி வரும்போது இவ்விடத்தில் சிவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனவே, சிவனை மானசீகமாக எண்ணி வழிபட்டார். அப்போது, அருகிலுள்ள ஒரு வேம்பு மரத்தின் அடியில் தான் சுயம்பு லிங்கமாக இருப்பதாக சிவன் அசரீரியாக ஒலித்தார். அகத்தியர் அங்கு சென்று பார்த்தபோது, வேம்பு மரத்தின் அடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

⛱ அகத்தியரைக் கண்ட முனிவர் அவரிடம், வேம்பு மரத்தின் அடியில் இருந்த சுயம்பு லிங்கத்தை காண்பித்து விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார்.

⛱ அகத்தியர் லிங்கத்திற்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால், அங்கு தண்ணீர் இல்லை. அகத்தியரின் மனதை அறிந்த சிவன், தன் தலையில் இருந்து கங்கை நீரை இவ்விடத்தில் பாய விட்டார்.

⛱ அந்நீர் தீர்த்தமாக அருகில் தேங்கியது. (இந்த தீர்த்தம் ஜடாகங்கை தீர்த்தம் என்ற பெயரில் கோயிலுக்கு அருகில் இருக்கிறது). அதில் இருந்து நீரை எடுத்த அகத்தியர் சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினார்.

⛱ பின் சிவனுக்கு படைக்க பழங்கள் இல்லாததால், அருகில் பழம் இருக்கிறதா ? என்று தேடினார் அகத்தியர்.

⛱ சிவன், அருகில் இருந்த பனை மரத்தில் இருந்து கனிகளை உதிரச்செய்தார். அகத்தியர் அதனை சுவாமிக்கு படைத்து வணங்கினார்.

⛱ அகத்தியரின் பூஜையில் மகிழ்ந்த சிவன், அவருக்கு காட்சி தந்தருளினார். பனங்காட்டில் எழுந்தருளியவர் என்பதால் *"தாளபுரீஸ்வரர்'* (தாளம் என்றால் பனை என்றும் பொருள் உண்டு) என்று பெயர் பெற்றார்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:Ⓜ

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள்.

♻ கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.

♻ பட்டினத்தடிகளின் திருவேகம்பர் திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது.

"நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்

சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சை தொண்டர்

குலாவு திருப்பனங்காடு நன் மாகறல் கூற்றம் வந்தால்

அலாய் என்று அடியார்க்கு அருள்புரி ஏகம்பர் ஆலயமே."
(பட்டினத்தடிகள்)

♻  திருப்பனங்காடு, பனைமரத்தைத் தல மரமாகக் கொண்ட ஐந்து திருத் தலங்களில் ஒன்று. திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவத்திபுரம் (செய்யாறு), புறவார் பனங்காட்டூர், வன்பார்த்தன் பனங்காட்டூர் ஆகியவையே இந்த ஐந்து.

♻ அகத்தியர் வழிபட்ட இறைவன் தாளபுரீஸ்வரர். தாலம் என்பது பனைமரம். பனை மரத்தின் அடியில் எழுந்தருளியதால் இந்தப் பெயர். பனங்காட்டுநாதர், பனங்காட்டீசர் ஆகிய திருநாமங்களும் இவருக்கு உண்டு. திருப்பனங்காட்டு நாதர், ஆளுடையார் பனங்காடுடை நாயனார், திருப்பனங்காடுடை அன்புடைய நாயனார் என்றெல்லாம் இவருக்குக் கல் வெட்டுத் திருநாமங்களும் உள்ளன.

♻ சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

🅱  இருப்பிடம்:🅱

✈ காஞ்சிபுரத்தில் இருந்து ( 15 கி.மீ.) பேருந்து மூலமாக சென்று திருப்பனங்காடு நிறுத்ததில் இறங்கி அங்கிருந்து சுமார் 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.