Friday, 18 August 2017

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 2.2

திருநடனம் செய்யும் இடம்
31. எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் சிட்டன்
சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சாலே
அவாயம் அற நின்று ஆடு வான்

பதவுரை
புதல்வா நன்மாணாக்கனே,
எட்டும் இரண்டும் உருவான ய என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிற
லிங்கத்தே உயிராகிய ஆதாரத்தில்
நட்டம் சிவபிரான் செய்கின்ற திருக்கூத்தினை
நவிலக் கேள் யாம் சொல்லக் கேள்.
சிட்டன் மேலோனாகிய சிவபிரான்
சிவாயநம என்னும் சிவாயநம என்கிற
திருஎழுத்து அஞ்சால் திருவைந்தெழுத்துக்களையே திருமேனியாகக் கொண்டு
அவாயம் அற உயிர்களின் பிறவித் துன்பம் நீங்கும் படியாக
நின்று ஆடுவான் ஆடல் புரிவான் என அறிவாயாக.

பொழிப்புரை
ஆசிரியர் திருக்கூத்தின் இயல்பைக் கூறத் தொடங்குகிறார். நன் மாணாக்கனே, ய என்னும் எழுத்தால் குறிக்கப்படுவது உயிர். அந்த உயிராகிய ஆதாரத்தில் சிவபிரான் செய்கின்ற திரு நடனத்தின் இயல்பைக் கூறுகின்றோம். கேள். அம் முதல்வன் திருவைந்தெழுத்தையே திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி நின்று ஆடுவான் என அறிவாயாக.

விளக்கம்
இறைவன் ஆடும் இடம்
இறைவன் எங்கும் நிறைந்தவன், உருவம் இல்லாதவன். அவன் நடனம் செய்கிறான் என்றால் அதற்கு ஓர் இடம் வேண்டும் அல்லவா? அவனுக்கு உருவம் வேண்டும் அல்லவா? அவன் ஆடல் புரிவதற்குக் கொள்ளும் இடம் எது? உருவம் எது? என்ற வினாக்களுக்கு இச்செய்யுளில் விடை கூறுகிறார் ஆசிரியர். எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே என்றதனால் அவன் ஆடும் இடம் இன்னது என்பதைப் புலப்படுத்தினார். லிங்கம் என்பதற்கு அடையாளம் அல்லது குறி என்பது நேர் பொருள். இங்கு அச் சொல் ஆதாரம் அல்லது இடம் என்ற பொருளில் வந்தது. எட்டும் இரண்டும் உருவான இடமே அவன் ஆடல் புரியும் இடமாகும். இவ்வாறு மறைபொருளாக வைத்து உணர்த்தினார் ஆசிரியர். எட்டும் இரண்டும் என்பது நம்நாட்டில் வழங்கி வரும் ஒரு பழைய வழக்கு.

பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோ டிரண்டும் அறியேனையே
என்று திருவாசகத்தில் வந்துள்ளது.
எட்டும் இரண்டும் என்பதற்குச் சைவ சித்தாந்தத்தில் சொல்லப்படும் பொருளைக் காண்போம். எட்டும் இரண்டும் கூடியது பத்து. பத்து என்னும் எண்ணைக் குறிக்கும் எழுத்து ய என்பது. திருவைந்தெழுத்தில் ய என்னும் எழுத்து உயிரைக் குறிக்கும். ஆகவே, எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே என்பது, பத்தின் அறிகுறியான ய என்னும் எழுத்தால் குறிக்கப்படும் ஆன்மாவாகிய இடத்தில் எனப் பொருள்படுவதாயிற்று. உடம்பெங்கும் உயிர் இருப்பினும் இரண்டு இடங்களை உயிர் சிறப்பாகப் பற்றி நிற்கும். அவ்விடங்களாவன இதயம், புருவநடு என்பன. உயிர் சிறப்பாகப் பொருந்தி நிற்கும் இந்த இரண்டு இடங்களிலும் இறைவனது நடனம் நடைபெறுகிறது. உயிரின் அறிவு நிலைத்து நிற்கும் இதயத்திலும், விளக்கம் பெற்றுத் திகழும் புருவ நடுவிலும் அவ்வறிவை இடமாகக் கொண்டு, உயிரை நிலைப்பித்தும் அறிவித்தும் இறைவன் நடம் புரிகின்றான் என்பது ஈண்டு அறியத்தக்கது. ஆடுதற்குக் கொள்ளும் உருவம்

இறைவன் ஆடும் இடம் ஆன்ம அறிவு என்று பார்த்தோம். இனி, ஆடுதற்குக் கொள்ளும் உருவம் எது என்பாராய், சிவாயநம என்னும் திருவெழுத்து அஞ்சாலே என்கிறார் ஆசிரியர். எனவே திருவைந்தெழுத்தைத் திருமேனியாகக் கொண்டு இறைவன் நடனம் புரிகிறான் என்பது விளங்கும். ஆன்மாவின் அறிவு தொழிற்படுதற்கு இன்றியமையாத் துணையாய் இருப்பது நாதம் ஆகும். நாதத்தில் தோன்றுவன மந்திரங்கள். அம்மந்திரங்களை இறைவன் தனக்கு வடிவமாகக் கொள்வான். அம்மந்திரங்களுள் சிறந்தது திருவைந்தெழுத்தே யாகலின் அதனையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு சிவபிரான் ஆன்ம அறிவினிடத்து விளங்குகிறான்.
சிட்டன்
சிட்டன் என்பதற்கு உயர்ந்தோன் என்பது பொருள். அஃது இங்குச் சிவபிரானைக் குறித்து நின்றது. திருவாசகத்தில்,
சிட்டனே சிவலோகனே சிறு
நாயினும் கடையாய வெங்
கட்டனேனையும், ஆட்கொள்வான் வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே

என்ற பாடலில் சிட்டன் என்ற சொல் சிவபெருமானைக் குறிப்பதாய் வந்துள்ளமை காணலாம். திருநாவுக்கரசர் அச்சொல்லை ஒரு பாடலில் நான்கு அடியிலும் அமைத்துப் பாடியுள்ளார்.

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்
சிட்டர்பால் அணுகான் செறுகாலனே

என்பது அப்பாடல். அச்சொல் முதலடியில் முனிவரையும், இரண்டாமடியில் தில்லை வாழ் அந்தணரையும், மூன்றாமடியில் நடராசப் பெருமானையும், நான்காமடியில் அடியாரையும் குறிப்பதாம்.

அஞ்செழுத்து உரு
32. ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம் கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம் வாமுடியப் பார்.
பதவுரை
ஐயனே நன்மாணாக்கனே,
நல் அம்பலத்தான் உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கும் அம்பலவாணன்
ஆடும் படி கேள் திருக்கூத்து இயற்றும் முறையைக் கேள்.
நாடும் ஆன்பர்கள் விரும்பும்
திருவடியில் நகரம் திருவடி நகாரமாயிருக்கும்.
உதரம் திருவயிறு
கூடும் மகரம் பொருந்திய மகாரமாகும்.
வளர் தோள் உயர்ந்த திருத்தோள்
சிகரம் சிகாரமாகும்.

பகரும் முகம் வா வேதங்களையும் ஆகமங்களையும் அருளிய திருமுகம் வா ஆகும்.
முடி ய திரு முடி ய ஆகும்.
பார் இவ்வாறு பஞ்சாக்கரம் அவனுக்குத் திருமேனியாய் அமையும் முறையை உணர்வாயாக.
பொழிப்புரை
நன் மாணாக்கனே, கூத்தப் பெருமான் ஆடும் முறையைக் கேள். அன்பர்கள் நாடும் திருவடி ந காரம் ஆகும். வயிறு ம காரம் ஆகும். தோள்கள் சி காரம் ஆகும். முகம் வா ஆகும். திருமுடி ய ஆகும்.

விளக்கம்
திருவைந்தெழுத்தால் அமைந்த திருமேனி
இறைவன் நடனம் புரிதற்கு இடம் ஆன்மா என்றும், அவனுக்குத் திருமேனி பஞ்சாக்கரம் என்றும் முன்னே கூறப்பட்டது. ஆன்மாக்களைப் பெத்தான்மாக்கள் என்றும், முத்தான்மாக்கள் என்றும் இருவகைப்படுத்தலாம். பாசத்தில் உள்ளவை பெத்தான்மாக்கள். பாசத்தினின்றும் நீங்கியவை முத்தான்மாக்கள். அவ்விருவகை ஆன்மாக்களுக்கும் இறைவன் செய்பவை இரு வகையான ஐந்தொழில்களாகும். எனவே அவ்விருவகையான ஐந்தொழில்களை உணர்த்தும் இருவகை நடனங்களை இறைவன் புரிகின்றான் என்பது விளங்கும். அதற்கேற்பப் பஞ்சாக்கரம் அவனுக்குத் திருமேனியாய் அமையும் பொழுது இருவகையாகவே அமையும். அந்த இருவகையினையும் இச்செய்யுளாலும், அடுத்து உள்ள செய்யுளாலும் உணர்த்துகிறார் ஆசிரியர். இச்செய்யுள் நகாரம் முதலாக அமையும் தூல பஞ்சாக்கர வடிவத்தை உணர்த்தியது. இவ்வாறு கண்டு வணங்குவார்க்கு உலகப் பயனே விளைவதாகும்.

அஞ்செழுத்து உரு
33. சேர்க்கும் துடிசிகரம் சிற்கனவா வீசுகரம்
ஆர்க்கும்யகரம் அபயகரம் பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரம்அது தான்.

பதவுரை
பார்க்கில் ஆராய்ந்தால்
இறைக்கு கூத்தப் பெருமானுக்கு
சேர்க்கும் துடி ஏந்திய உடுக்கையை உடைய திருக்கரம்
சிகரம் சிகாரம் ஆகும்.
வீசு கரம் வீசிய திருக்கரம்
சித் கன வா ஞான உருவான வா ஆகும்
அபய கரம் அஞ்சற்க என்று காட்டும் திருக்கரம்
ஆர்க்கும் யகரம் யகாரம் ஆகும்
அங்கி நெருப்பு ஏந்திய திருக்கரம்
நகரம் நகாரம் ஆகும்.
அடிக்கீழ் முயலகனார் முயலகனைக் கீழே அழுத்தும் திருவடி
தங்கும் மகரம் மகாரம் ஆகும்.
பொழிப்புரை

உடுக்கையை ஏந்திய திருக்கை சிகாரம். வீசிய திருக்கை ஞான உருவாகிய வா ஆகும். அஞ்சற்க என்று காட்டும் அபயத்திருக்கை யகாரம். நெருப்பு ஏந்திய திருக்கை நகாரம். முயலகனைக் கீழே அழுத்தும் திருவடி மகாரம் ஆகும்.

விளக்கம்
கூத்தப் பிரானது திருவுருவத்தில் உடுக்கை, வீச்சு, அமைப்பு, நெருப்பு என்னும் இவைகளையுடைய நான்கு கைகளையும், ஊன்றிய திருவடியையும் முறையே சி, வா, ய, ந, ம என்னும் எழுத்துக்களாகக் கண்டு துதித்து வணங்குக என்பது கூறப்பட்டது.

இச்செய்யுள் சிகாரம். முதலாக அமையும் சூக்கும பஞ்சாக்கர வடிவத்தை விளக்கிற்று.

34. ஓங்காரமே நல் திருவாசி உற்றுஅதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் ஆங்காரம்
அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல்இது
பெற்றார் பிறப்பு அற்றார் பின்

பதவுரை
நல் திருவாசி இறைவனது திருவுருவைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டமான திருவாசி
ஓங்காரம் ஓங்காரமாகும்.
நிறை சுடர் அத்திருவாசியில் அமைந்துள்ள நிறைந்த சுடர்கள்
அதனில் உற்று ஓங்காரத்தில் தோன்றி
நீங்கா எழுத்து ஆம் அதினின்று நீங்காமல் உள்ள முதல் எழுத்துக்கள் ஆகும்.
அணி அம்பலத்தான் அழகிய சிற்றம்பலம் உடையானது
ஆடல் இது ஆடலின் இவ்வியல்பை
ஆங்காரம் அற்றார் அறிவர் யான் எனது என்னும் செருக்கு நீங்கப் பெற்றவரே அறிவர்.
பெற்றார் இதனையறிந்து வழிபடும் பேறு பெற்றார்
பின் பிறப்பு இனிப் பிறப்பை
அற்றார் அறுத்துக் கொண்டவராவார்.

பொழிப்புரை
ஓம் என்னும் பிரணவமே அவனைச் சூழ்ந்துள்ள திருவாசியாகும். அப்பிரணவத்தில் தோன்றிய அக்கரங்கள் ஐம்பத்தொன்றும் திருவாசியில் விளங்கும் சுடர்களாகும். முதல் ஒலியாகிய ஓங்காரமாம் திருவாசியுள், அவ்வோங்காரத்தின் உள்ளொளியாய் விளங்கி நிற்பவன் கூத்தப் பெருமான். அவனது கூத்தின் இயல்பை யான் எனது என்னும் செருக்கு அற்றவரே அறிவர். அவ்வாறு அறிந்து வழிபடும் பேறு பெற்றவர் பின் பிறவாத நிலையைப் பெற்றவர் ஆவர்.

விளக்கம்
ஓங்காரமும் இறைவன் திருவுருவும்
உலகம் பொருளுலகம் எனவும், சொல்லுலகம் எனவும் இரு வகையாய் அமைந்துள்ளது. பொருள் வடிவாய் உள்ளவை (புவனம், தத்துவம், கலை) பொருளுலகம் ஆகும். ஒலிவடிவாய் வழங்கும் பலவகை மொழிகள் சொல்லுலகம் ஆகும். சொல்லுலகம் எழுத்து, சொல், சொற்றொடர் என மூன்று நிலைமையை உடையது. எழுத்து வடமொழி பற்றி ஐம்பத்தொன்று எனக் கொள்ளப்படும். ஐம்பத்து மூன்று என்று கூறும் வழக்கும் உள்ளது. இவ்வெழுத்துக்களுள் அனைத்து மொழிகளின் எழுத்துக்களும் அடங்கும் என்னும் கருத்தினால் இவற்றை மாதிருகாக்கரங்கள் (தாய் எழுத்துக்கள்) என்று குறிப்பிடுவர். சொல்லுலகம் ஆகிய அனைத்து மொழிகளுக்கும் மூலமாய் இருப்பது நாதம் ஆகும். நாதம் ஓம் என்னும் குறியீட்டால் குறிக்கப்படும். அதனால், அது ஓங்காரம் எனப்படும். இன்னும், ஓங்காரம் ஐந்து கூறுகளை உடையதாகச் சொல்லப்படும். அவை அ, உ, ம், விந்து, நாதம் என்பன. இவற்றுள் முதலில் உள்ள மூன்றும் நம் செவியால் உணரப்படும் அகரம் முதலியன அல்ல. ஆயினும் அகரம் முதலியவற்றோடு ஒத்த தன்மை உடைமையால் அவையும் அகரம் முதலியனவாகவே ஒப்புமை பற்றிக் கூறப்படுகின்றன. ஓங்காரத்தின் கூறுகளாகிய அகரம் முதலிய ஐந்தும் பஞ்சாக்கரம் என்று சொல்லப்படும். ஆயினும் அவை திருவைந்தெழுத்தாகிய பஞ்சாக்கரம் போன்றவை அல்ல. ஆதலால் இவை சூக்கும பஞ்சாக்கரம் என்றே குறிக்கப்படும். இறைவன் அகர, உகர, மகர, நாத, விந்துக்களாய் நின்று, அந்தக் கரணங்களை இயக்கிப் பொருளுணர்வைத் தருகின்றான் என்பது பற்றி,

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா
என்று அருளிச் செய்தார் மாணிக்கவாசகர்.
பொருளுலகம் அனைத்திற்கும் முதல்வன் ஆகிய கடவுளே சொல்லுலகத்திற்கும் முதல்வன் ஆதலின் ஓங்காரத்தால் குறிக்கப்படுபவன் அவனே என்று நூல்கள் கூறும். ஓங்காரமே அவனது திருவுருவைச் சூழ்ந்துள்ள ஒளிவட்டமாகிய திருவாசி என்பதும், அத்திருவாசியில் அமைந்துள்ள 51 அல்லது 53 என்னும் எண்ணிக்கையுள்ள சுடர்கள், மாதிருகாக்கரங்கள் என மேலே குறிப்பிட்ட முதல் எழுத்துக்கள் என்பதும் உண்மை விளக்கத்தால் நாமறிந்த செய்திகள். நாம் கோயிலுக்குச் செல்லுகிறோம். கோயில் எத்தனைப் பெரியதாக இருந்தாலும், மூலவர் இருக்கும் கருவறை சிறியதாகத்தான் இருக்கும். ஏன் இப்படி இருளடைந்த குகை போன்ற இடத்தில் மூலமூர்த்தியை வைத்திருக்கிறார்கள்? என்று சிலர் நினைக்கலாம். நம் முன்னோர்கள் தெரியாமல் அப்படிச் செய்யவில்லை. ஒரு கருத்தோடுதான் அவ்வாறு அமைத்தார்கள். கோயிலிலுள்ள மூலஸ்தானம் நம் இதயத்தைப் போன்றது. இதயம் போன்ற சன்னல் இல்லாத இடத்தில் ஆண்டவனை வைத்தார்கள். கோயிலுக்குப் போய்க் கர்ப்பக் கிருகத்தில் இருக்கும் ஆண்டவன் முன் நின்று பார்த்தால் இருட்டில் தெரியாது. கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். பூசை செய்கிறவர் தீபாராதனை காட்டும் பொழுது மிக விளக்கமாகத் தெரியும். தீபாராதனை காட்டும் போது தீபத்தால் ஓங்கார எழுத்தை எழுதுவது போலக் கையைச் சுற்றிக் காட்டுவார். இந்த ஓங்கார ஒளி வட்டத்திற்குள் நாம் இறைவனது உருவத்தைக் காண வேண்டும். அப்படிக் காணுகிற திருவுருவை மனத்தில் நிலை நிறுத்தப் பழகுதல் வேண்டும்.

அம்பலத்தான் ஆடலை அறிந்து வழிபடும் பேறு பெற்றவர் :
கூத்தப் பெருமானின் எடுத்த பொற்பாதத்தில் தம் அன்பை வைத்தவர் நிலத்தின் மேல் நெடுங்கிடையாய் விழுவர், பின்பு திருக்கூத்தினைக் காணவேண்டி எழுவர். தம்மையே தாம் மறந்து விடுவர். தற்பெருமை என்பது அவர்களுக்கு எங்கேயிருக்கும்? அஃது அறவே கெட்டொழியும்.

கையும் தலைமிசை புனைஅஞ் சலியன;
கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன; கரணங் களும்உடன்
உருகும் பரிவின; பேறெய்தும்
மெய்யும் தரை மிசை விழும்; முன்பெழு தரும்
மின் தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடும் அவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால் (பெரியபுராணம்)

திருக்கூத்தை அன்போடு தரிசிப்பவர் நிலை இது.

பிறவியறுதலை எண்ணாதவர் அதனைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாதவர் திருக்கூத்தினைப் புறத்தே மட்டும் ஒருகாற் கண்டு ஒழிவர். பிறவியறுதலை வேண்டும் ஞானியர் அதனை எப்பொழுதும் உள்ளத்தே கண்டு கொண்டிருப்பர்.

ஊன நடனம்
தூல ஐந்தொழில்
இறைவன் செய்யும் ஐந்தொழில்களைப் பற்றி முன்னே விரிவாக அறிந்தோம் (செய்யுள் 8) படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் உலகத்தின் மேல் நிகழ்வன என்றும், மறைத்தலும் அருளலும் ஆகிய இரண்டும் உயிரிடத்தில் நிகழ்வன என்றும் அறிந்தோம். அவை தூல ஐந்தொழில் எனப்படும். இது தவிர, சூக்கும ஐந்தொழில், அதிசூக்கும ஐந்தொழில் என இரண்டு சொல்லப் பெறும்.

சூக்கும ஐந்தொழில்
நமக்கு உறக்கம் என்பது ஒடுக்க நிலையாகும். உறக்கத்திலும் இறைவனது செயல் நம்மிடத்தில் நிகழ்கிறது. உறங்கச் செல்லும் போது ஒரு சிக்கலை நினைத்துக் கொண்டு அதை எப்படித் தீர்ப்பது என்று கவலையோடு நம்மையறியாமல் கண்ணயர்ந்து தூங்கி விடுவோம். மறுநாள் விடிந்து கண்விழித்த போது அச்சிக்கலை இப்படித்தான் தீர்க்க வேண்டும் என்ற தெளிவு நமக்கு ஏற்பட்டு விடுகிறது. இத் தெளிவு எப்படி உண்டாயிற்று? இதற்கு நம்மால் விளக்கம் சொல்ல முடியாவிடினும் உறக்க நிலையில் இறைவன் நுட்பமாக நமக்குச் செய்த உதவியே அது எனலாம். இவ்வாறு இறைவன் செய்வது சூக்கும ஐந்தொழில் எனப்படும். இனி, மற்றொரு ஒடுக்க நிலையும் உண்டு. முற்றழிப்புக் காலத்தில் இறைவன் எல்லாவற்றையும் ஒடுக்கித் தான் தனியனாய் நிற்கிற நிலை அது. அவ்வாறு ஒடுக்கி நிற்கும் முதல்வன் உலகத்தை மீளத் தோற்றுவித்தற் பொருட்டு அதற்கு ஆவனவற்றைச் செய்வான். அந்நிலையில் அவன் செய்வனவும் சூக்கும ஐந்தொழில் எனப்படும். அத்தொழில்கள் இப்படிப்பட்டவை எனத் தனித் தனியாக வகுத்துக் காட்டுதல் அரிதாகும்.

அதிசூக்கும ஐந்தொழில்
இனி, அதிசூக்கும ஐந்தொழிலை நோக்குவோம். உயிரானது புருவ நடுவில் நின்று, கருவிகளோடு கூடிப் பொருள்களை அறிந்து வருவதாகிய விழிப்பு நிலையில் இறைவன் உயிர்க்குயிராய் உள்நின்று இடைவிடாது உணர்த்தி வருகிறான். அவ்வாறு உணர்த்தவில்லையாயின் உயிர்க்கு அறிவு நிகழாது. இறைவன் உயிர்க்கு உணர்த்தும் முறைமையே அதி சூக்கும ஐந்தொழில் எனப்படுகிறது. இத்தொழில்களையும் தனித்தனியாக விளங்கிக் கொள்ளுதல் அரிதாகும்.

ஊன நடனம் பெயர் விளக்கம்
தூலம், சூக்குமம், அதிசூக்குமம் ஆகிய இம் மூவகை ஐந்தொழில்களும் ஊன நடனம் என ஒன்றாய் வைத்துச் சொல்லப்படும். இத்தொழில்களால் உயிர்க்கு உண்டாவது உலக நுகர்ச்சியும், சிற்றறிவும் ஆகும். இவற்றால் உயிர் உலக வாழ்விற் கட்டுண்டு நிற்கிறது. இது பற்றியே இறைவனது செயல் ஊன நடனம் எனப்பட்டது. ஞான நடனம் என மற்றொன்று இருத்தலால், ஊன நடனமாகிய இதில் உள்ள ஊனம் என்பது ஞானம் இல்லாமையைக் குறித்தது. ஊன நடனத்தை உணர்த்துவது இச்செய்யுள்.

35. தோற்றம் தடிஅதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு

பதவுரை
துடி அதனில் உடுக்கையை இயக்கும் திருக்கையில்
தோற்றம் படைத்தல் தொழிலையும்,
அமைப்பில் அமைத்த திருக்கையில்
தோயும் திதி ஆன்மாப் பொருந்தும் காத்தல் தொழிலையும்,
சாற்றியிடும் சொல்லப்பட்ட
அங்கியில் நெருப்பு ஏந்திய திருக்கையில்
சங்காரம் அழித்தல் தொழிலையும்
ஊற்றமா உறுதியாக
ஊன்று முயலகன் மீது ஊன்றிய
மலர்ப் பதத்தில் மலர் போன்ற திருவடியில்
உற்ற பொருந்திய
திரோதம் மறைத்தல் தொழிலையும்
நான்ற தூக்கிய
மலர்ப் பதத்தே மலர் போன்ற திருவடியில்
முத்தி பிறவியினின்றும் எடுத்துப் பேரின்பத்தில் வைப்பதாகிய அருளுதல் தொழிலையும்,
நாடு கண்டுகொள்
பொழிப்புரை
உடுக்கையால் ஒலியை உண்டாக்குதல் படைத்தல் தொழிலையும், அபயத் திருக்கரம் காத்தல் தொழிலையும், நெருப்பை ஏந்தியிருத்தல் அழித்தல் தொழிலையும், உறுதியாக முயலகன் மேல் ஒரு காலை ஊன்றியிருத்தல் மறைத்தல் தொழிலையும், மற்றொரு காலை உயரத் தூக்கியிருத்தல் அருளல் தொழிலையும் உணர்த்தும். இவ்வாறாகக் கூத்தப் பெருமானது திருவுருவில் தோன்றும் குறிப்பை அறிந்து கொள்.
விளக்கம்
இறைவனது நடனத்தில் ஐந்தொழில்களும் விளங்குதல் :
சிவபெருமானது நடனம் ஐந்தொழிற்கும் தானே முதல்வன் என்பதை உணர்த்தும். அந் நடனத்தில் ஐந்தொழிலும் விளங்குவதை இச் செய்யுள் அழகிய முறையில் விளக்குகின்றது. எண்ணிறந்த உயிர்களுக்கு அவ்வவற்றிற்கு ஏற்ற உடம்பைக் கொடுத்து உலகத்தில் இயங்கச் செய்வதே படைத்தல். தமருகத்தை அசைத்து நாதத்தை உண்டாக்கும் கை உலகத்தைத் தோற்றுவித்தலைக் குறிக்கும். இங்ஙனம் படைத்தது மட்டுமின்றி அவைகளைக் காக்கவும் செய்கின்றான். தாயின் வயிற்றில் உள்ள மகவுக்கு அவளறியாதபடி உணவு ஊட்டிக் காக்கின்ற இறைவனது கருணையை என்னென்பது! கூத்தப் பெருமானது வடிவத்தில் அபயம் தரும் கை காத்தலைக் குறிக்கும். இவ்வாறு காத்தலைப் புரிகின்ற இறைவன் அவைகளை அழித்தும் விடுகின்றானே. அழித்தல் என்பது அச்சமும் வருத்தமும் தரும் செயல் அல்லவா? அதனைச் செய்வது எதற்கு? என்று வினவலாம். உண்மையில் அழித்தல் என்பது உயிர்களின் நன்மையின் பொருட்டே செய்யப்படுகிறது என்பதை உணர்தல் வேண்டும். உடம்போடு கூடிய உயிர்கள் அவ்வுடம்பினால் வரும் அளவற்ற துன்பங்களை அனுபவித்துப் பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டுச் சுழன்று பெரிதும் இளைப்பினை அடையும். அவ்விளைப்பு நீங்குதற் பொருட்டே உயிர்களை உடம்பினின்றும் பிரித்துச் சிறிது காலம் ஓய்வு கொள்ளும்படி செய்கின்றான். எனவே அழித்தல் என்பதும் உயிர்களின் நன்மை கருதியே செய்யப்படுவதாகும். இறைவனது நடனக் கோலத்தில் தீ யேந்திய கை அழித்தலைக் காட்டும்.

இனி, மறைத்தல் என்பது இறைவன் உயிர்களுக்குத் தன்னைக் காட்டாது உலகத்தையே காட்டி உலக போகத்தை நுகரச் செய்தல். உயிர் தன்னையறியும் பக்குவத்தை வருவித்தற் பொருட்டே இது செய்யப்படுகிறது. திருக்கூத்தில் முயலகனை மிதித்துள்ள திருவடி மறைத்தலைத் தெரிவிக்கும். அருளல் என்பது பாசங்களையெல்லாம் நீக்கி உயிர்களுக்குப் பேரின்பத்தை வழங்குதல். கூத்தப்பிரானது தூக்கிய திருவடி, பிறவியினின்றும் எடுத்துத் தன் திருவடி நிழலில் வைத்து அருளுதலை உணர்த்துவதாகும்.

இனி, ஞான நடனம்
முதல்வன் உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான். அவற்றுள் பிறப்பைத் தருவது ஊன நடனம் ஆயிற்று. வீட்டைத் தருவது ஞான நடனம் ஆகும். ஊன நடனத்தின் பயனாக உயிர் உண்மையை உணரும். தத்துவங்கள் அனைத்தையும் தான் அல்ல என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணரும்; பின்பு, தான் சித்தப் பொருளாயினும் தானே அறியும் சூக்கும சித்து அன்று, அறிவித்தால் அறியும் தூல சித்து எனத் தனது உண்மையை உணரும். அதனால், தானே அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் நிற்கும் சூக்கும சித்து தலைவனாகிய சிவன் என அறியும். இவ்வறிவு நூலறிவாய் அபர ஞானமாய் நில்லாது, அதனை அனுபவமாக பர ஞானமாகப் பெறும். இதுவே பக்குவம் முதிர்ந்த நிலையாகும். தன்னையும் தலைவனையும் உணர்ந்த நிலையாகும். தலைவனை உணர்ந்தவர் அவனே தமது வாழ் முதல் எனக் கொள்வர். தம் வழியில் நில்லாது அவன் வழியில் நிற்பர். முதல்வன் அவரை மும்மலம் நீக்கி அருள் நிலையில் வைத்துப் பேரின்பத்தை நுகரச் செய்வன் இவ்வுதவியும் ஐவகைத் தொழில்களாக வைத்துச் கூறப்படும். இது ஞான நடனம் எனப் பெயர் பெறுகிறது. இதனை உணர்த்துகிறது இச்செய்யுள்.

No comments:

Post a Comment