மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் இறுதியில் வைத்து எண்ணப்படுவது சங்கற்ப நிராகரணம். ஆசிரியர் உமாபதி சிவம் அருளிச் செய்த எட்டு நூல்களுள் இதுவும் ஒன்று என்பர். சங்கற்பம் என்பது கொள்கை விளக்கம். நிராகரணம் என்பது கொள்கை மறுப்பு. இந்நூலுள் ஒன்பது மதங்களின் கொள்கைகள் அவ்வச் சமயத்தாரால் கூறப்பட்டு அதற்கு அடுத்த படியில் உள்ள சமயத்தாரால் முறையே மறுக்கப்படுகின்றன. இறுதியில் சைவ வாதி நிராகரணத்துடன் நூல் நிறைவு பெறுகிறது.
சிவஞான சித்தியாரின் பரபக்கம் பதினான்கு புறச் சமயங்களை மறுத்து எழுதப் பெற்று அதனைத் தொடர்ந்து வரும் சுபக்கம் சைவ சித்தாந்தக் கொள்கையின் உண்மையைத் தெளிவுற விளக்கிக் காட்டுகிறது. சங்கற்ப நிராகரணத்துள் முதலில் கூறப்பட்டுள்ள மாயாவாதியின் கருத்து ஒன்றே புறச் சமயத்தைச் சார்ந்ததாகும். மற்றைய எட்டு மதங்களும் அகச் சமயங்களும் அவற்றின் உட் பிரிவுகளும் ஆகும். பாயிரத்துள் வருகின்ற ஏழஞ்சு இரு நூறு எடுத்த ஆயிரம் வாழும் நற் சகனம் மருவா நிற்ப என்ற பகுதி இந்நூல் எழுதப் பெற்ற காலம் சக ஆண்டு 1235 என்று தெளிவு படுத்துகிறது. அதிலிருந்து இந்நூலின் அரங்கேற்றம் கி.பி 1313 என்பது புலனாகிறது. இந்தச் செய்தியின் அடிப்படையிலேயே மெய்கண்ட சாத்திரங்களின் காலமும் கணிக்கப்படுகிறது.
இந்நூல் அமைப்பு முறை மிகவும் பாராட்டுதற்குரியது. முதலில் கூறப்பட்ட மதக் கொள்கையில் ஏற்புடையவற்றை ஏற்றுக் கொண்டு ஏற்கத் தகாதனவற்றை மறுத்து அதனை அடுத்த மேற்படியில் உள்ள மதத்தினர் தம் கருத்தை எடுத்துரைப்பதாக அமைந்து இறுதியில் சைவ சித்தாந்தத்தின் செம்பொருளை சிவப்பிரகாசச் செழுந்தமிழ் உண்மையை, அருளுடன் ஆய்ந்து கொள்ளத், திருவருள் வினவல் திருந்திடும் அன்றே என்று நிறைவு செய்கிறார் ஆசிரியர்.
காப்பு
திருந்திய அருந்தவம் பொருந்து பல் முனிவர்
கமையாக் காதல் அமையாது பழிச்சும்
நிகரில் செக்கர்ப் புகர் முகத்து எழுந்த
புனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டுத்
தழைசெவி மழைமதப் புழைநெடுந் தடக்கை
வாள்தரும் மும்மை நாட்டம் நால்வாய்ப்
பாசம் அங்குசம் தேசுறும் எயிறுஒண்
கனியிவை தாங்கும் புனித நாற்கரத்து
அங்கதம் கடகம் பொங்கிழை யாரம்
நிறைமணிச் சுடிகைக் கறையணல் கண்செவி
கொண்டதிண் பெரும் பண்டிக் குறுந்தாள்
களிறுதன இருகழல் கருதா
வெளிறுஉறு துயரம் வீட்டினம் பெரிதே.
செப்பமாகிய அருந்தவம் புரிந்த பல முனிவர்கள், நிரம்பாத அன்புடன் ஒழியாது வழிபடும் ஒப்பற்ற செவ்வானம் போன்ற புள்ளியையுடைய திருமுகத்தில் பிள்ளை வெண்பிறை போல ஒற்றைக் கொம்பும் தழைந்த காதுகளிரண்டும் பொழிகின்ற மும்மதமும், உள்துளை உடைய நீண்ட துதிக்கையும், ஒளி பொருந்திய முக்கண்ணும், தொங்குகிற திருவாயும், ஒரு கையில் பாசமும், ஒரு கையில் அங்குசமும், மற்றொரு கையில் ஒடித்தெடுத்த கொம்பும், இன்னொரு கையில் கனியும் தாங்கிய திருக்கரங்களையும் அணி தரித்த தோளும் கடகமும் முத்து மாலையும் அணிந்த திருத்தோள்களும் மணியுடைய பாம்பினைத் திருஅரையில் கச்சாகக் கட்டிய திருவயிற்றையும் குறிய திருவடிகளையும் உடைய ஓங்கார வடிவமாகிய யானைமுகத்து வினாயகப் பெருமானது இரு திருவடி மலர்களையும் நினைந்து வணங்கி அறியாமையினால் உண்டாகிய துன்பத்தை அறவே ஒழித்தனம்.
கமையாநிரம்பாத, புகர்முகம்யானையின் முகத்தில் தோன்றும் வெண்புள்ளிகள் புகர் எனப்படும். மும்மை நாட்டம்மூன்று கண்கள். அவை கதிரவன், திங்கள், நெருப்பு, நால்வாய் தொங்குகின்ற வாய், சுடிகைநாகப் பாம்பின் தலையிலே விளங்குகின்ற மணி. பண்டிவயிறு. கருதாகருதி.
பாயிரம் பெரும்கடல் உதவும் கரும்கடு வாங்கிக்
கந்தரத்து அமைத்த அந்தம்இல் கடவுள்
பாலரை உணர்த்தும் மேலவர் போலக்
கேட்போர் அளவைக் கோட்படு பொருளால்
அருளிய கலைகள் அலகிலவால் அவை
பலபல சமயப் பான்மைத்து அன்றே
அஃதால் அந்நூல் தன்மை உன்னிய
மாந்தர் இதுவே பொருள்என்று அதன்நிலை
அறைதலின் வேற்றுஓர் பனுவல் ஏற்றோர்க்கு
இசையா மாறுபாடு கூறுவர் அதனால்
புறச்சம யங்கள் சிறப்பு இலஆகி
அருளில் மாந்தரை வெருள்உற மயக்கி
அலகைத் தேரின் நிலையில் தீரும்
ஈங்கு இவை நிற்க நீங்காச் சமயம்
மூவிரு தகுதி மேவிய தாமும்
ஒன்றோடுஒன்று சென்றுஉறும் நிலையில்
ஆறுமாறா வீறுடைத்து இவற்றுள்
எவ்வம் இல்லாச் சைவநற் சமயத்து
அலகில் ஆகமம் நிலவுதல் உள அவை
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம்
தனம்நிதி ஆடகம் தமனியம் என்றுஇப்
பலபெயர் பயப்பதோர் பொருளே போலப்
பதிபசு பாச விதிமுறை கிளக்கும்
வாய்ந்த நூல்கள் ஆய்ந்தனர் ஆகி
ஆசான் ஆகி வீசிய சமத்துடன்
ஏழ்அஞ்சு இருநூறு எடுத்த ஆயிரம்
வாழும்நல் சகனம் மருவா நிற்பப்
பொற்பொது மலிந்த அற்புதன் ஆனி
ஆறாம் விழலில் பொன்தேர் ஆலயத்து
ஏறா எண்மர் நிரையில் இருப்ப
மயங்கு வாத மாயா வாதி
முயங்கிட ஒருதலை முதுவெதிர் மணிசேர்
பெண்ணை சூழ்ந்த வெண்ணெய்அம் பதிதிகழ்
மெய்கண்டவன் அருள் கைகண் டவர்களில்
ஒருவர் ஒருதலை மருவி இருப்ப
வஞ்சப் பிறவிக்கு அஞ்சி வந்து ஒருவன்
எது இறை அருள்என இதுஎனும் மாயா
வாதியை அயலினர் மறுதலைத்து அருள்தர
மற்றவர் அயலினர் அவர்உரை மறுத்துச்
சொற்றர அயலரின் அவரும் தொலைவுற்று
இன்னே எழுவரும் முன்னே கழியுழி
ஆங்குஅயல் இருந்த அருளினர் அழகுஇது
நீங்கள் சங்கற்பம் நிராகரித் தமைஎன
மற்றவர் உரைத்த சொற்றரு பொருள்கொடு
வாதம் செற்பை விதண்டையும் ஏதுவும்
ஓது நால்வகை உவமையும் திகழ்தர
அருள்சேர் மாந்தர் வெருள் சேராமல்
தர்க்கமும் விடையமும் கற்க
நற்கவி மாந்தர் நகரநவிற் றுவனே.
பெருங்கடலிலே தோன்றிய கொடிய நஞ்சினை வாங்கித் தம் கழுத்திலே தரித்துக் கொண்ட அழிவற்ற தன்மையுடைய சிவபெருமான். தம் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டும் பெற்றோர்களைப் போல அவரவர் அறிவுக்குத் தகுந்தபடி அளித்தருளிய நூற்கள் கணக்கிலடங்காதன அவை கேட்பவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப அமைந்தன,. ஆதலால் தம்முள் வேறு பட்டுப் பலப்பல சமயங்களை உணர்த்துகின்ற நூற்களாக அமைந்தன. அந்தந்த நூல்களைக் கற்றறிந்த மாந்தர் அதுவே பொருள் என்று கொண்டு மற்றைய நூல்களை ஏற்பதற்கு இசையா து அவற்றைப் பொருந்தாதன என்று மறுப்பார்கள்.
ஒருவருக்கொருவர் மாறுபடச் சொல்வதனால் சிறப்பு அற்றனவாகிய புறச் சமயங்கள் திருவருளுக்கு ஆட்படாத மாந்தர்களை அச்சுறுத்தியும் மயக்கியும் கானல் நீர்போல் அவர்களை அலைக்கழிக்கும். இவை தவிர அகச்சமங்கள் எனப்படும் சைவம் பாசுபதம் மாவிரதம் காளாமுகம் வாமம் வைரவம் ஆகிய ஆறும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டும் தம்மில் தனித்தனி உயர்ந்தும் வழங்குகின்றன.
இவற்றுள் குற்றமற்ற சைவசமயத்தில் எண்ணிறந்த ஆகமங்கள் வழங்குகின்றன. அவை பலவாயினும் அவற்றுள் கூறப்படும் பொருள் முடிவு ஒன்றே. பொன் என்ற ஒரு பொருளைக் குறிப்பதற்கு கனகம், இரணியம், காஞ்சனம், ஈழம், தனம், நிதி, ஆடகம், தமனியம் என்று பல சொற்களைப் பயன்படுத்துவது போன்றது இது. எந்தப் பெயரில் ஆகமம் வழங்கினாலும் ஆகமங்கள் அனைத்தும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பையே உணர்த்தும், ஆகமங்களைக் கற்றுணர்ந்த பெரியோர்கள் பலர் ஆசிரியத் தன்மை பெற்று வீற்றிருந்தனர்.
தில்லைப் பதியில் பொன்னம்பலத்தில் திருக்கூத்து இயற்றும் அம்பலவாணப் பெருமானின் ஆனித் திருவிழாவில் ஆறாம் திருநாளில் சக ஆண்டு ஆயிரத்து இருநூற்று முப்பத்து ஐந்தில் திருத்தேர் மண்டபத்தில் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த ஆசிரியன்மார் எண்மார் வீற்றிருந்தனர்.
ஒரு புறம் முன்னோடு பின் முரணாகத் தன் தத்துவங்களைக் கூறும் மாயாவாதி ஒருவன் இருந்தனன் மற்றொரு புறம், முதிர்ந்த மூங்கில்கள் முத்துக்கள் சிதறப்பாய்கின்ற பெண்ணை ஆறு சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரிலே அவதரித்தருளிய மெய்கண்ட தேவ நாயனாரின் திருவருள் கைவரப் பெற்ற பெரியார் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் கொடிய பிறவிப் பிணிக்கு அஞ்சி நல்லாறு எது இறைவன் திருவருள் எத்தகையது என வினவ, முதலில் அங்கிருந்த மாயாவாதி தன் நூலின் வழி நின்று அதுவே பொருள் என்று எடுத்துரைத்தனன். அவன் அருகே இருந்த மற்றொரு சமயவாதி அவன் கொள்கையை மறுத்துத் தம் சமயக் கொள்கையை எடுத்துக் கூறி அதுவே பொருள் என்றார். மற்றொரு வராலே அவரும் மறுக்கப்பட்டார். இவ்வாறு ஒருவரை ஒருவர் மறுத்து எண்மரும் ஒதுக்கப்பட்டார்கள்.
மெய்கண்ட தேவரின் அருள் பெற்ற ஆசிரியர். நீங்கள் ஒருவரை ஒருவர் மறுத்த தன்மை நன்று. இனி நான் நீங்கள் கூறிய பொருள்களை வாதம் செற்பை விதண்டை ஏது நால்வகை உவமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் திருவருளுக்கு வழிகாட்டுவதாகவும் மலைவு என்னும் அச்சத்தைத் தீர்ப்பதாகவும், மாறுபட்ட பொருள்களையும் உண்மைப் பொருள்களையும் ஒருங்கே உணர்த்துவதாகவும் கவி வல்ல புலவர்கள் இவனும் ஓர் நூல் செய்தனனே என்று நகைக்கத் தக்கதாகவும் ஓர் நூல் இயற்ற முற்பட்டேன் என்று அருளினார்.
இப்பாயிரம் ஆசிரியர் உமாபதி சிவத்தினால் இயற்றப் பெற்று நூல் முகத்து அமைக்கப்பட்டது இதில் காலம், களம், கேட்போர் ஆகிய பாயிரத்துக்கு விதிக்கப்பட்ட இலக்கணங்கள் பொருந்தி உள்ளமையைக் காணலாம் எல்லா அருள் நூல்களும் சமயங்களும் சிவபெருமானால் அருளப் பெற்றவை என்பது சைவ சித்தாந்தத்தின் கொள்கை, அருளியவன் இறைவனே யானால் அவற்றுக்குள்ளே கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தோன்றுவதேன் என்ற வினா எழுவது இயல்பு. அதற்கு ஆசிரியர் விடை கூறுகிறார். தந்தையும் தாயும் தங்கள் குழந்தைகளுக்கு அறிவு புகட்ட முற்படும்போது அக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி நிலைக்கு ஏற்பவே கற்பிப்பார்கள். எனவே கல்வி என்பது கற்றுக் கொடுப்பவரின் தகுதிக்கு ஏற்றதாக இல்லாமல் கற்றுக் கொள்பவர்களின் தகுதிக்கு ஏற்றதாகவே அமைய வேண்டும். அவ்வாறே இறைவனும் உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்பப்படிமுறையிலே அமைந்த சமயங்களையும், சமய நூல்களையும் அருளிச் செய்தான் என விளக்குகிறார். தர்க்கமிடும் தொன்னூல் பரசமயம் தோறும் அது அதுவே நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து எனக் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர முனிவரும், ஆறு சமயத்து அவரவரைத் தேற்றும் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றும் தகையன எனத் திரு இன்னம்பர்த் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசு நாயனாரும் அருளியுள்ளமை இங்கு நினையத் தக்கன.
இவற்றுள் புறச் சமயங்கள் கானல் நீர் போன்றவை என்று கூறி ஒதுக்கினார். அகச் சமயங்கள் ஆறனுள் சைவ சமயமே உயர்ந்தது. குற்றமற்றது எனக் கூறிய ஆசிரியர். அதிலும் பல ஆகமங்கள் உள்ளதற்கு விளக்கம் கூறுகிறார், பொன் ஒன்றே கனகம் இரணியம் முதலிய பெயர்களிட்டு வழங்கப்படுவது போல, ஆகமங்கள் பல ஆனாலும் அவை யாவும் பதி, பசு, பாசம், என்னும் முப்பொருள் உண்மையை உரைப்பதனால் ஒரே தன்மை வாய்ந்தனவே என்று அமைதி கூறினார்.
காலமும் களமும் கூறுவாராகி, தில்லையில் சகஆண்டு 1235 ல் ஆனித் திருவிழாவில் ஆறாம் திருநாளில் தேர் மண்டபத்தில் இந்நூல் தோன்றும் களம் அமைந்தது என்றார். மாயாவதி உட்பட எண்மரும் மெய்கண்ட சந்தானத்துள் வந்த அருளாசிரியர் ஒருவருமாக இந்த அவை அமைந்தது என்றார்.
வாழ்க்கையில் உண்மை உணர்ந்து உய்வு தேட விழைந்தான் ஒருவன் வினாவ ஒவ்வொருவராகத் தத்தம் சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தமையும் இறுதியில் மெய்கண்ட சந்தானத்து ஆசிரியர் சைவ சித்தாந்தத் தேனமுது புகட்டியமையையும் கூறினார். அடையடக்கமாகத் தாம் எழுதலுற்ற இந்நூல் நற்கவிப் புலவர்களுக்கு நகைப்பினை விளைவிக்கும் என்று குறிப்பிட்டார்.
கடுநஞ்சு அலகைத்தேர்பேய்த்தேர், கானல் நீர், கனகம் முதலிய எட்டுப் பெயர்களும் பொன்னின் வகைகளைக் குறித்தன. முதுவெதிர்மணி முதிர்ந்த மூங்கிலில் விளைந்த முத்து, சங்கற்பம்கொள்கையை எடுத்துரைப்பது. நராகரித்தமை மறுத்தமை வாதம் தருக்க முறையில் வினாவி விளங்குவது. செற்பம் பிறர் கொள்கையை மறுத்துத் தன் கொள்கையை நிலை நாட்டுவது. விதண்டை கன் கொள்கையைக் சொல்லாமல் பிறர் கொள்கையை மறுப்பது, ஏதுஇயல்பு, காரியம் அனுபலப்தி என மூன்று (சிவஞான சித்தியார் சுபக்கம் 16) உவமை நான்கு வகைப்படும் வினை, பயன், மெய், உரு என்பன அவை(தொல் உவமை இயல்)
நூல்
மாயாவதி சங்கற்பம்
நவிற்றிய நிரையில் அவித்தையினோன் உரை
நித்தன் அறிவன் சுத்தன் அகண்டிதன்
நிருவிகற்பன் நிர்த்தத்துவன் நிரஞ்சனன்
சொல்வகை எவையும் தொடராத் தூய்மணி
வரம்பு இல் வேதச் சிரம்தரு பரம் பொருள்
சத்தாய் எவையும் தானாய் அவித்தை
தொத்தாது உயர்ந்த தொல்சுடர் மூவர்
இன்ன தன்மையன் ஏகன் அநேகன்
கன்னல் பெரும் சுவை தன்னில் பிறவாப்
பெற்றயின் இருந்து பொற்பணி இயல்பினில்
வான்வளி அனல்நீர் மண்மருந்து அன்ன
மானதாது ஆறுஐங் கோசத்
தொகுதி யாக்கைப் பகுதியது ஒருபுடை
சுத்தி வெள்ளி ஒத்தென மித்தையில்
தான்எனல் ஆகும் தன்மைத்து உலூதையில்
சில்நூல் தகையின் வேற்றுமை மரீஇயது
என்னப் பன்மையது எனில்இலை பழம்பூத்
தோல்நார் வயிரம் தருத்தரும் தொன்மையில்
வான்நாரம் திரை நுரைதரு வாய்மையில்
கூடும் அசித்தைச் சித்து உதவாது எனில்
நெல்பதர் பலாலத்தில் பரம் தரும் இது
தன்இயல்பு என்றும் விளையாட்டு என்றும்
முன்உள மறைகள் யொழிதலின ஒருநூல்
பன்மணி நிலையும் பசுப்பால் எனவும்
பலஅகல் நீரில் அலர்கதிர் எனவும்
கூவல்ஆழி குளம்சிறு குழிகால்
வாவி யாவையும் வருபுனல் எனவும்
அவ்அவற்று அடங்கி ஆடியுள் நிழல்எனத்
தோன்றி யாக்கைநல் காந்தத்து இரும்பும்
கனவில் தீங்கும் கங்குலில் கயிறும்
புனலில் தோன்றும் பேய்த்தேர்ச் செய்தியும்
அன்னதும் பின்னர் நன்னிறப் பளிங்கு எனப்
பதினாற் கரணத்து ஒரு மூன்று அவத்தை
நாளும் நாளும் நயந்து உறும் இருபயன்
தன்னில் சாராத் தொன்மைத் தன்மை
தற்பண நிழல்கண் குற்றிபாய்ந்து அற்றே
இவ்வியல் பந்தப் பவ்வம் அது அகல
விண் முதல் தந்த கொண்மூப் படலத்து
இருள் அற உதித்த கால்தக விவேகம்
தன்னில் தோன்றிச் சாதகம் அனைத்தையும்
மன் அகப் பிரிப்பும் மடிஇழை வாங்கலும்
போல ஞாலம் பொய் அறக் கழீஇத்
தானே தானாய்த் தன்னில் தன்னைத்
தானே கண்டு தன்நலம் உற்று
வசையில் தத்துவ மசிபதத் தெளிவால்
அகமே பிரமம் ஆயினன் என அறிந்து
அசலன் ஆகி நற்சலசல மதியெனத் கண்டிடும் உடலம் விண்டுஅகல் கடத்து
மங்குல் அதுஉடைதர எங்குமாம் தகைத்தே
இவ்வகை உணர்ந்து செய்தொழில் அறாத
மடவோர் தாமும் கடனா இயற்றும்
கன்ம காண்டத் தொன்மைப் புரிவால்
தோற்றிய வித்தை மேற்கடை அரணியில்
எழுந்துஎரி அவற்றை விழுங்கியது என்னத்
தன் ஒழிந்து உள்ள தானாய் ஒழியும்
அந்நிலை அன்றி அழிவறு முத்தி
ஏயாது என்றுதன் இயல்பை
மாயா வாதி வகுத்து உரைத்தனனே
முன் கூறப்பட்ட கொள்கையும் மறுப்பும் என்ற வரிசையில் முதலாவதாக மாயா வாதி தன் கருத்தை எடுத்துரைத்தான். அவித்தை என்று ஒன்றை ஏற்றுக் கொண்ட எமது கொள்கை இது. பிரமப் பொருள் நித்தமானது. அறிவே வடிவானது. தூய்மையானது பகுக்கப்படாதது. மாறுபாடற்றது. தத்துவங்களைக் கடந்தது. ஒளி வடிவானது. சொல்லால் உரைக்க முடியாத தூய மணி போன்றது. வரம்பற்ற வேதங்களின் முடிவிலே விளங்குகின்ற பரம்பொருள் என்றும் உள்ள பொருள். உலகத்தில் உள்ள எப்பொருளும் தானாக விளங்குவது. அவித்தை என்னும் அறியாமையால் பற்றப்படாது உயர்ந்த தொன்மையான ஒளி. என்றும் இளமையோடிருப்பது. இத்தகைய தன்மை உடைய ஒரே பரம் பொருளே பல்வேறு உயிர்களாகக் காட்சி அளிக்கிறது. அப்படிக் காட்சி யளிக்கும் காலத்துக் கரும்பின் இனிப்புச் சுவையைக் கரும்பே அறியாதது போலத் தனது இயல்பைத் தானே அறியாதிருக்கும். பொன் ஒன்றே பல்வேறு வகைப்பட்ட அணிகலன்களாகி, வெவ்வேறு பெயரால் அழைக்கப்படுவது போல அப்பரம்பொருளே வானம், காற்றும், தீ, நீர், மண், மருந்து உணவு இவற்றாலான தாதுக்கள் ஆறு ஆகவும், ஐந்து கோசங்கள் கொண்ட உடம்பாகவும், காட்சியளிக்கும், சிப்பி மயக்க அறிவினால் வெள்ளி போன்று தோன்றுவதைப் போல பரம்பொருள் உலகப் பொருள்களாய்த் தோன்றும், அப்படியாயின் இரண்டும் வேறு வேறாகப் புலப்படுவது எதனால் எனக் கேட்பின் சிலந்திப் பூச்சியின் உடலின் தோன்றும் மெல்லிய இழை. அப்பூச்சியிலிருந்து வேறு பட்டுத் தோன்றுவதைப் போன்றது இது. சிலந்திப் பூச்சிலிருந்து தோன்றும் நூல் ஒரே தன்மையாக இருக்க உலகத்துப் பொருட்கள் பல வேறு வடிவாகக் காட்சி தருவானேன் என வினவில் ஒருமரத்தில் இலை, பழம், பூ, மரத்தின் தோடு, நார், மரத் தண்டின் நடுவிலிருக்கும் வைரம் இவற்றைப் போலவும், நீர் நிலையில் அலை, திரை. நீர்த் துளி, நீர்க் குமிழி ஆகியவை தோன்றி ஒடுங்குவதைப் போலவும் உலகத்துப் பொருள்களும் பல வகைப் பட்டுத் தோன்றி அழியும் என்று கூறப்படும்.
மேற் கூறப்பட்டவை எல்லாம் அறிவற்ற பொருள்களிலிருந்து தோன்றிய அறிவற்ற பொருள்கள், அறிவுடைப் பொருளான பரம் பொருளிலிருந்து அறிவற்ற பொருட்கள் எவ்வாறு தோன்றும் என்ற வினாவிற்கு உண்ணத் தகுந்த நெல் பயனற்ற பதரையும், வைக்கோலையும் தருவது போல அறிவுடைய பிரமப் பொருள் அறிவற்ற உலகாய் வேறு பட்டு நிற்கும் என்று விடை தருவர்.
மாறுதலற்ற பிரமம் இவ்வாறு மாறுபாடுகளைக் கொள்வானேன்? எனின் அது பிரமத்தின் இயல்பு என்றும் அது பிரமத்தின் விளையாட்டு என்றும் கூறுவர். இவ்வாறு கூறுவதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் தொன்மையான வேதங்கள் அவ்வாறு சொல்கின்றன என்பர். உலகத்துப் பொருள்கள் பல்வேறுவகையாக வரையறைக்கு உட்பட்டு இருப்பது போலப் பிரமப் பொருளும் வரையறைக்கு உட்படுமோ என்ற கேள்விக்கு, பல நிறம் கொண்ட மணிகள் ஒரே நூலில் கோக்கப்பட்டிருந்தால் அம்மணிகளின் வழியாகக் காணப்படும் நூலின் நிறம் வேறு படினும் உண்மையில் நூலின் நிறம் வேறுபாடு அடைவதில்லை. பலவேறு நிறங்களுடைய பசுக்களில் சுரந்த பால் ஒரு தன்மையாகவே இருக்கிறது நீர் நிரம்பிய பல கலங்களிலும் எதிரொளிக்கும் ஞாயிற்றின் நிழல், பாத்திரத்திற்கு ஏற்ப வேறுபடுவதில்லை. ஒன்றாகவே இருக்கும். கடல், குளம், கிணறு, பள்ளங்கள், வாய்க்கால் இவை எல்லாம் வெவ்வேறு வகைப்பட்டு இருந்தாலும் அவற்றில் உள்ள தண்ணீர் ஒரே தன்மையாக இருக்கும் என்பர்.பிரமப் பொருளே இவ்வாறு பல வகை உயிர்களிடத்தும் தோன்றுமாயின் அது கட்டுக்குட்பட்டதாகாதோ என்ற கேள்விக்கு கண்ணாடியில் தோன்றும் நிழல் அதில் தோய்வு அறத் தோன்றி நின்று விலகுவது போல, பிரமமும் உடலில் தோன்றுமேனும் அதிலே தோய்வு அற்று இருக்கும் என்பர் உடலிலே தோயாத நிலையில் உடல் எவ்வாறு செயல்படுகிறது எனக் கேட்பின் காந்தம் தோய்வு அற்று நிற்கின்ற நிலையில் இரும்பு செயல்படுவது போல என விடை தருவர்.
உடலில் நிற்கும் அறிவு இன்பத் துன்பவங்களுக்கு ஆட்படுவானேன் என்றால், கனவிலே கண்ட நிகழ்ச்சியினால் விளைந்த அச்சம் விழிப்பு வந்தவுடனே நீங்குவதைப் போலவும், இரவில் வளைந்து கிடக்கும் கயிற்றினைக் கண்டு பாம்பு என அஞ்சி விடிந்த பிறகு அது கயிறே எனத் தெளிவது போலவும், நீர் வேட்கை கொண்ட ஒருவன் தூரத்தே தெரிகின்ற கானல் நீரைத் தண்ணீர் என நினைந்து அருகில் வந்து காணும் போது உண்மை தெளிவது போலவும், பிரமப் பொருள் உடம்போடு கூடி நின்று இன்பத் துன்பங்களை நுகர்ந்து வந்தாலும் நல்லாசிரியனிடத்து வேதாந்தப் பயிற்சி பெற்று உண்மையை உணரும்போது இத் தோற்றரவுகள் எல்லாம் மாறி உண்மையை அறிவான் என்பர்.
உடலோடு கூடிய உயிர் பதினான்கு கரணங்களைக் கொண்டும், மூன்று அவத்தைகளுக்குட்பட்டும், நாள்தோறும் இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் அனுபவித்தும் வருவது எவ்வாறு எனின், உண்மையில் இந்த மாற்றங்கள் எல்லாம் சீவான்மாவைத் தாக்குவதில்லை. ஒருவனது நிழல் கண்ணாடியில் தோன்றும் போது நிழலைக் கோல் கொண்டு தாக்கினால் அவனுக்கு எந்தத் துன்பமும் விளையாது. அது போலவே பரமான்மாவுக்கும் மாற்றம் இல்லை என்பர்.
இத்தகைய இயல்புடைய மாயா வாதைகள் எவ்வாறு நீங்கள் எனில், வான் ஆகிய முதற் காரணத்தில் தோன்றிய மேகக் கூட்டம் அதிலேயே தோன்றிய காற்று வீசும் போது விலகி ஞாயிற்றின் ஒளி விளங்குவது போல அதிலிருந்தே விவேகம் வெளிப்பட்டுத் தன் இயல்பான ஞானம் விளக்கத் தோன்றும். புல் வேய்ந்த குடிசை பிரிக்கப்பட்டுக் கழிகளும் அகற்றப் பட்டால் குடிசை என்று ஒரு பொருள் இல்லாது போவது போலவும் ஊடும் பாவுமாய்ச் சேர்ந்திருக்கிற நூல் இழைகள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டால் துணி என்ற பொருள் இல்லாது போவது போலவும் ஒவ்வொரு தத்துவமாக இது நானன்று இது நானன்று என்று கழிக்குமிடத்துச் சீவான்மா என ஒரு பொருளே இல்லாது போகும்.
தாமே பிரமம் என்பதை மீண்டும் உணர்ந்து, தானாகித் தன்னிலே தன்னைக் கண்டு தன் இன்பத்தைத் தானே நுகர்ந்து வரும். இந்த நிலை எய்தும்போது வேதத்துள் கூறப்பட்ட மகா வாக்கியம் எனப்படும் தத்துவம் அசி என்ற சொற்றொடரின் பொருள் தெளிவாகும். அந்தத் தெளிவால் அகம் பிரமம் என்ற அறிவு உண்டாகும். அப்போது நிலவு அசைவற்று இருந்தும் நீரில் தோன்றும் நிலவின் நிழல் அசைவது போலவே அதுவரை தான் நுகர்ந்த துன்பங்கள் உடலைப் பற்றினவே தவிர, சீவான்மாவைப் பற்றியன அல்ல என்று உணரும். இதுவே சீவன் முத்தி எனப்படும். குடம் உடைந்த போது அக்குடத்தினுள் இருந்த ஆகாயம் வெளில் உள்ள பேராகாயத்தோடு மாறுபாடில்லாமல் கலந்தது போல, உடலை விட்டு நீங்கிய சீவான்மா பரமான்மாவோடு இரண்டறக் கலக்கும்.
இவ் உண்மைகளை உணர்ந்து வேதத்தின் முற்பகுதியில் கூறப்பட்ட கரும காண்டத்தில் விதிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் அறிவற்றவர்களும் விடாது செய்துவரின் அவர்களுக்கு அறிவு உதிக்கும். அந்த அறிவு வினைப் பயன்கள் முழுவதையும் அழித்து விடும். எவ்வாறு எனில் அரணிக் கட்டையில் தீக்கடை கோலைச் செருகி முறுக வாங்கிக் கடையும் போது தீப் பொறிகள் பிறக்கும். அப் பொறிகள் உடனே அழிக்கப்படாவிடில் அரணிக் கட்டையும் கடைகோலும் ஒருங்கே எரிந்து சாம்பலாகிப் போவது போலக் கருமங்களும் அழிந்து போகும். இதுவே பர முத்தி என்பதல்லது. உயிர் நிலை பேறு உடையதாக இருக்கும் வீடு பேறு என்பது பொருந்தாது என்று இவ்வாறு தன்னுடைய மதத்தின் கொள்கைகளை மாயாவாதி விரித்துக் கூறினான். எனவே இது மாயாவாதி சங்கற்பம் ஆயிற்று.
அகண்டிதம்கண்டிக்கப்படாதது, வரையறைக்கு உட்படாதது, தொத்தாதுபற்றாது. தாதுதாதுக்கள் ஆறு, அவை தோல், எலும்பு, நரம்பு, மச்சை, குருதி, சுக்கிலம், கோசம் உறை. கோசங்கள் ஐந்து அன்ன மயம், பிராண மயம், மனோ பயம், விஞ்ஞான மயம் ஆனந்த மயம் என்பன. சுத்திசிப்பி, உலூதைசிலந்திப் பூச்சி, நாரம் தண்ணீர். பலாலம் வைக்கோல், கூவல் கிணறு. ஆடிகண்ணாடி, பதினாற் கரணம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அறிவுக் கருவிகள் ஐந்தும், வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என்னும் தொழிற் கருவிகள் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் அகக்கருவிகள் நான்கும் ஆகிய பதினான்கு மூன்று அவத்தைஇங்கு நனவு கனவு உறக்கம் என்ற மூன்று நிலைகளைக் குறித்தது தற்பணம்கண்ணாடி. குற்றிகட்டை, சாதகம் மறைக்கும் தத்துவங்கள். தத்துவம் அசிபதம்மகா வாக்கியங்களுள் ஒன்று. தத்+துவம்+அசி அது நீ ஆகிறாய் என்று பொருள்படும். அகம் பிரமாஸ்மி என்ற மகாவாக்கியத்தை உணர்த்துவது அகம்+ பிரமம்+அஸ்மி. நான் பிரமம் ஆகின்றேன் என்று பொருள் தரும். அசலன்அசைவற்றவன். நற்சலம் நல்ல நீர். சலமதிநீருள் தோன்றும் நிலவின் நிழல். அகல் கடத்துஅகன்ற குடத்தில், மங்குல்வான், வெளி, அரணிதீக்கடை கோல், ஞெலி கோல்.
No comments:
Post a Comment