Tuesday 22 August 2017

சதுரகிரி யாத்திரை ! - 5


வானந்தன் கீழாக வுயர்சதுர கிரிதனிலே வணிகனான வானந்த சுந்தரற்குச் சங்கரனா வவன் மனைவி ஆண்டாளுக்குக்கானந்த ருத்துளவ நாரணனாக் காட்சி தருங் கடவுளானார் தானந்த விடத்திரட்டை யிலிங்கமென நின்றநிலைசாற்றலுற்றாம்
துரகிரியின் மேலே, சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கத்தை தரிசிக்கச் செல்லும் வழியில் நாம் சந்திக்கும் ஒரு சந்நிதி- இரட்டை லிங்கம் சந்நிதி. கோயில் என்று சொல்லக் கூடிய எந்த அமைப்பும் இரட்டை லிங்கத்துக்குக் கிடையாது. ஒரு மண்டபம் போன்ற அமைப்பில் மிகவும் சிறிய சந்நிதி. அதனுள் அருகருகே சின்னதாக இரண்டு லிங்கங்கள். ஆவுடையாரெல் லாம் கிடையாது. அம்மிக் குழவி போன்ற பாணங்களே லிங்கங்கள். இதன் எதிரே- ஓரடி இடை வெளியில் இரண்டு நந்திகள்.
சுயம்புவான இந்த இரட்டை லிங்கங்களுக்கு வழிபாடுகள் மற்றும் பூஜைகளை சித்த புருஷர்களுள் ஒருவரான ராம தேவர் ஆதி காலத்தில் செய்து வந்தார். இதற்காக சந்நிதியின் அருகே ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்தார் இவர். தற்போதும், இரட்டை லிங்கம் சந்நிதிக்கு எதிரே காணப்படும் உயர்ந்த மலையில்தான், ‘ராமதேவர் குகை’ இருக்கிறது. தவம் செய்வதற்கும் நிஷ்டையில் இருப்பதற்கும் இந்த குகைக்கு வந்து செல்வாராம் ராமதேவர். இந்த குகைக்குச் செல்வது ரிஸ்க் ஆன ஒரு பயணம். தோதான ஆட்களது உதவி மற்றும் தகுந்த வழி காட்டுதல் களுடன்தான் இந்த குகைக்குச் சென்று திரும்ப முடியும்.
இரட்டை லிங்கம் சந்நிதிக்கு எதிரே- சற்றுத் தள்ளி ஒரு மேடு இருக்கிறது. இதை ‘சமாதி’ என்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் வரை இந்த ரெட்டை லிங்கங்களுக்கு அருகிலேயே தங்கி, பூஜை செய்து வந்த துறவி ஒருவர், திடீரென மரணமடைந்து விட்டார். ‘கடைசிக் காலத்தில் தன் உடல் இந்த ரெட்டை லிங்கங்களுக்கு அருகேயே புதைக்கப்பட வேண்டும்’ என்று அவர் விரும்பியதால், அவரது உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் முறையான பூசாரி என்று எவரும் இங்கு இருப்பதில்லையாம். அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் பூசாரி என்கிற ஒருவர் இங்கே இருப்பார். மற்ற நாட்களில் இங்கு பக்தர்களே பூக்கள் அணிவித்து, கற்பூரம் காட்டி வழிபடுகிறார்கள். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது. இந்த இரட்டை லிங்கங்களை தொழுதால், எண்ணியது நிறைவேறும்.
சித்தர் ராமதேவர், இந்த இரட்டை லிங்கங் களை வழிபட்டார் என்றாலும், இவை இங்கே குடி கொண்டமைக்குக் காரணம் யார்? சித்தர்களா... மன்னர்களா... துறவிகளா..?
இவர்களில் எவருமே இல்லை என்பதே உண்மை! தன் உண்மையான பக்தர்களை ஆட்கொண்டு அருள இறைவனே இங்கே குடி கொண்டான். அந்த பக்தர்களது சுவாரஸ்யமான கதை வருமாறு:

ஆனந்தசுந்தரன், ஆண்டாள் என்கிற இறை தம்பதிக்கு அருள் புரியத்தான் ரெட்டை லிங்கங்கள் இங்கே குடிகொண்டன. பக்தியில் சிறந்து விளங்கிய இந்தத் தம்பதிக்குக் காட்சி தந்து, சுயம்புவாக அமர்ந்தவை இந்த ரெட்டை லிங்கங்கள். இதில் ஒரு லிங்கம் சிவ அம்சமாகவும், இன்னொரு லிங்கம் விஷ்ணு அம்சமாகவும் அந்தத் தம்பதிக்குக் காட்சி தந்தன என்றால், நம்புவதற்குச் சிரமமாகத்தான் இருக்கும். கதையைத் தெரிந்து கொண்டால், எல்லாமே புரியும்!
முன் காலத்தில் கோபாலபுரம் எனும் ஒரு பட்டணம் மிகுந்த செல்வ வளத்துடன் திகழ்ந்தது. அறிவில் சிறந்தோரும், செல்வத்தில் செழித்தோரும் அங்கு வசித்து வந்தனர். அறிவும் செல்வமும் சேர்ந்தே காணப்பட்டதால், அங்கே இறை பக்தியும் எல்லோரிடமும் மிகுந்திருந்தது. கோபாலபுரத்தில் வசித்த ஆனந்தசுந்தரன், வணிகத்தில் ஈடுபட்டிருந் தான். வசதிகளும் வாய்ப்புகளும் நிறைந்த ஒரு வியாபாரியாகத் திகழ்ந்தான். பொருள் ஈட்டுவதில் மட்டுமல்ல... அருள் ஈட்டுவதிலும் அக்கறை செலுத்தியவன் இவன். ஆகமம், வேதம், புராணம், சாஸ்திரம் போன்ற அனைத்தையும் திறம்படக் கற்று, சிவபெருமானையே முதன்மை தெய்வமாக வழிபட்டு வந்தான். அதாவது, சிவபெருமானைத் தவிர, வேறு தெய்வங்கள் இந்த உலகத்தில் இல்லை என்கிற கொள்கை உடைய சிவபக்தன்!
இவன் மனைவி ஆண்டாள், கணவரைப் போலவே சிறந்த பக்தை. எனினும் ஒரு வித்தியாசம்... இவள் தீவிர விஷ்ணு பக்தை! பாற்கடல் வாசனான பரந்தா மனைத் தவிர, வேறு எந்த வடிவத்தையும் தெய்வம் என்று ஏற்க மாட்டாள். சிவபெருமானின் வடிவத்தை லிங்கத் திருமேனி சொரூபத்தில் எங்கு கண்டாலும், ஏதோ காணக் கூடாததைக் கண்டு விட்ட மாதிரி முகத்தைச் சரக்கெனத் திருப்பிக் கொள்வாள். இவளைப் பொறுத்தவரை இந்த உலகத்துக்கே விஷ்ணுதான் ஒரே தெய்வம்!
ஒரே வீட்டில், மகேசனுக்கும் மாலவனுக்கும் தனித் தனியே கணவனும் மனைவியும் பூஜைகளை நித்தமும் நிகழ்த்திக் கொண்டிருந்தனர். ஆன்மிகம் குறித்த விவாதங்களை ஒருவர் எழுப்ப... மற்றவர் அதற்குப் பதிலுரை தருவார். ‘சிவமே பரம்பொருள்’ என ஆனந்தசுந்தரன் வாதிடுவான்; ‘விஷ்ணுவே பரம்பொருள்’ என ஆண்டாள் வாதிடுவாள். இது குறித்த விவாதத்துக்கு எப்போதுமே ஒரு தீர்வு வந்ததில்லை.
அவரவருடைய பூஜைகள் முடிந்த பின், ஒரு நாள் இவர்கள் இருவரிடையே ஆரம்பித்த இத்தகைய விவாதம் முற்றுப் பெறாமல் நீடித்தது. மகேசனா? மாலவனா? இருவரில் யார் உயர்ந்தவர்? விடைதான் இருவருக்கும் கிடைத்த பாடில்லை. இதற்கு ஒரே வழி- தவம் புரிந்து உண்மையை அறிவோம் என்று இருவரும் முடிவெடுத்தனர்.
இருவருமே மலைப் பிரதேசம் சென்று தனிமையில் தவமியற்ற விரும்பினர். ‘எங்கு செல்லலாம்?’ என்று இருவரும் யோசித்தபோது, தங்களது பட்டணத்துக்கு அருகில் உள்ள சதுரகிரி நினைவுக்கு வந்தது. ஒரு நாளில் புறப்பட்டனர்.
சித்த புருஷர்களும் மகா யோகிகளும் தவச் சாலைகள் அமைத்து நிஷ்டையில் திளைக்கும் சதுரகிரியை அடைந்தவர்கள், அங்கு தவத்துக்கு ஏற்ற இடத்தைத் தேடினர். அப்போது ராமதேவரது வனம் அவர்களுக்கு பசுமையாகத் தெரிந்தது. வண்ணப் பூக்கள் வசீகரமாகப் பூத்துக் குலுங்கும், தெள்ளிய நீரோடையுடன் கூடிய அந்த இடமே தங்களது தவத்துக்கு ஏற்றது என்று முடிவு செய்து, அங்கேயே அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டனர். சிவனின் சிந்தனையில் கண்கள் செருகி இருக்க... கயிலைவாசனின் திருக்கோலத்தில் மனம் லயித்திருக்க... ‘ஓம் நமசிவாய’ என்னும் திருமந்திரத்தை இடைவிடாமல் ஜபித்தான் ஆனந்த சுந்தரன். சங்கு- சக்ரதாரியான திருமாலையே நினைந்து, ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை ஆண்டாள் உச்சரிக்கத் தொடங்கினாள். சிவநாமமும், திருமால் நாமமும் அந்தப் பிரதேசம் எங்கும் பட்டு எதிரொலித்தன.
நாட்கள் நகர்ந்தன. தம்பதியின் தவத்தைக் கண்டு உளம் மகிழ்ந்த ஈசன், இருவருக்கும் காட்சி தந்து, அவர்களின் பேதத்தைக் களைந்து, சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். அண்ணலின் நாடகம் அரங்கேறியது.
இருவரும் தவம் இருந்த வேளையில் அவர்களின் எதிரே, கண்ணைக் கூசச் செய்யும் அளவுக்கு ஒரு பிரகாசம் திடீரெனத் தோன்றியது. ஜோதி சொரூபமாக ரிஷப வாகனத்தில் தன் தேவியுடன் தோன்றினார் கயிலைவாசன். ஆனந்த சுந்தரனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு தீர்க்கமாகப் பார்த்தான். என்றென்றும் - எந்நேரமும் அவன் துதிக்கும் அந்த ஈசன், அவன் கண் முன்னே புன்னகை தவழ அருள் பாலித்துக் கொண்டிருந்தார். விழுந்து வணங்கினான். போற்றிப் புகழ்ந்தான். ஈசனின் ஜடாமுடியில் கங்கையையும், பிறை நிலவையும் தரிசித்தான். நெற்றியிலும் திருமேனியிலும் திருநீற்றைக் கண்டு பரவசப்பட்டான். செவிகளில் ஆபரணங்களாக அரவங்கள் அசைந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிசயித்தான். மான் - மழு ஆயுதங்கள்... புலித்தோலால் ஆன ஆடை... மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆனந்தசுந்தரன் திக்கு முக்காடிப் போனான். ஆனால், தவறியும் ஈஸ்வரன் இருக்கும் பக்கம் தன் பார்வையைத் திருப்பவில்லை ஆண்டாள். அவள் வேறு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘‘அடியே ஆண்டாள்... உலக மகா சக்தியான ஆண்டவனே இங்கே எழுந்தருளி இருக்க... வேறு எந்த சக்தியை எதிர்பார்த்து நீ ஏங்கிக் கொண்டிருக்கிறாய்? பார்த்தாயா என் சர்வேஸ்வரனை... இப்போது ஒப்புக் கொள்கிறாயா, உலகம் முழுவதையும் காப்பவன், நித்தமும் நான் வணங் கும் இந்த பரமேஸ்வரனே என்று! தேவியுடன் தரிசனம் தந்து இங்கே நம் முன் எழுந்தருளி இருக்கும் இந்த இமய வாசனைப் போற்றி வணங்கு. அவன் திருவடிகளைப் பற்றிக் கொள். சிவனை தவிர, வேறு தெய்வம் இல்லை என்று இப்போதாவது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உனது மாற்று எண்ணங்களை மாற்றிக் கொள்!’’ என்று ஆண்டாளை நோக்கி, சிலிர்ப்பு மேலிடச் சொன்னான் ஆனந்தசுந்தரன்.
தேவியும் தேவனும் புன்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நடத்தும் நாடகம் என்ன என்று அவர்களைத் தவிர வேறு யார்தான் அறிவார்?
ஆனந்தசுந்தரனை பார்த்து ஈசன் கேட்டான்: ‘‘பக்தா... எதற்காக நீ தவம் செய்து கொண்டிருந்தாய்? உனக்கு என்ன வேண்டும், கேள்!’’
‘‘மகேஸ்வரா...’’ என்று ஆரம்பித்து, தனக்கும் மனைவிக்கும் இது நாள் வரை இருந்த சிவ- விஷ்ணு பக்தி பற்றியும், உண்மைப் பொருளை அறியவே இருவரும் இங்கே வந்து தவம் இருக்கும் விஷயத்தையும் சொன்ன ஆனந்தசுந்தரன், ‘‘தங்களின் தரிசனம் தவிர வேறு எதுவும் எனக்கு ஆனந்தத்தைத் தராது!’’ என்றான் குரலில் உற்சாகத்துடன்.
புன்னகைத்த ஈஸ்வரன், ஆண்டாள் பக்கம் திரும்பினார். ‘‘குழந்தாய்... எதை வேண்டி நீ இங்கே தவம் புரிந்தாய்?’’ என்றார்.
ஆண்டாளின் முகம் சிடுசிடுப்பாக இருந்தது. பாம்பு களை மாலையாக அணிந்த அந்தப் பரமேஸ்வரனைப் பார்க்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. ‘‘நான் உம்மைப் பார்க்க விருப்பப்படவில்லை. பரந்தாமனான ஸ்ரீமந் நாராயணனை தரிசிக்கவே இங்கே தவம் செய்தேன். அவரைத் தவிர, வேறு எந்தத் தெய்வத்தையும் பார்க்க விருப்பமில்லை எனக்கு!’’ என்றாள் சுரத்து இல்லாமல். அடுத்த கணம் அங்கே நிகழ்ந்தது என்ன?

No comments:

Post a Comment