Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞானபோதம் பகுதி- 10

பத்தாம் நூற்பா

உடம்பும் உலகுமாய் அமைந்த தத்துவங்களை அசத்து என்று கண்டு அவற்றினின்றும் நீங்கும் முறையினை முந்திய நூற்பாவில் கண்டோம். அவ்வாறு தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து நீங்குதலையே,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (341)

என்னும் திருக்குறள் குறிப்பிடுகிறது.

திருவருள் நாட்டம்: சுவரில் தீட்டிய ஓவியங்களை நோக்கியபோது அவை காண்பவரை மகிழ்விக்கும். மனத்தில் பற்றினை உண்டாக்கும். அவ்வோவியங்களை நோக்காது அவற்றிற்கு ஆதாரமாய் உள்ள சுவரினையே நோக்கினால் அவ்வோவியத் தோற்றம் புலனாகாமையால் இருந்தும் இல்லையாகும்; அவற்றினால் வரும் மகிழ்ச்சியும் பற்றுதலும் இல்லையாகும். அதுபோல, உலகப் பொருள்களைத் தனித்தனியே நோக்குவார்க்கு அவை சிற்றின்பத்தையும் பற்றினையும் உண்டாக்கும். ஓவியங்களுக்கெல்லாம் சுவர் தாரகமாதல் போல உலகிற்கெல்லாம் தாரகம் திருவருளே என்பதை உணர்ந்து அத்திருவருள் ஒன்றையே நோக்குவார்க்கு உலகப் பற்று ஒழியும். சிவம் ஒன்றுமே மெய் என்பது விளங்கும். இதனை,

திருவருள் நாட்டம் கருணையிற் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை
ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்ப மெல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே (திருக்கழுமல மும்மணிக்கோவை 10)

என வரும் பட்டினத்து அடிகள் திருவாக்கிற் காணலாம்.

தத்துவங்களே தனக்கு நிலைக்களமாக நின்ற ஆன்மா, சிந்தனையால் அவற்றை வேறாகக் கண்டு நீங்கிய பின்னர்ச் சிவனது அருளே அதற்கு நிலைக்களமாகும்.

தெளிவுணர்வு: சிறு மகவின் கையில் பொற்கிண்ணத்தை அளித்தால் அக்குழந்தை அதன் அருமையை உணராமல் வீசி எறிதலும் கூடும். அதுபோலத் திருவருளைப் பெற்ற பின்னர் அதனை நெகிழ விடுதலும் கூடும். அவ்வாறின்றித் தெளிவுணர்வால் அதனை இறுகப் பற்றுதல் வேண்டும். தெளிவுணர்வாவது தத்துவங்களைத் தனக்கு வேறாகவும், சிவத்தைத் தனக்கு உயிராகவும் தெளிந்து நிற்றல். இவ்வுணர்வு ஐயமாய் நிற்பின் இங்குமங்குமாகிய ஊசலாட்டமே உளதாகும். சிந்தனையால் அவ்வூசலாட்டம் நீங்கித் தெளிவுணர்வு பெற்ற நிலையையே பத்தாம் நூற்பா கூறுகிறது. தெளிவு இல்லையென்றால் மெய்ப்பொருளுணர்வால் பயனில்லை என்பார் வள்ளுவர். தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்(249) என்பது அவர் கூற்று.

சிவயோகம்: திருவருளைத் தெளிய உணர்ந்த உயிர் தான் வேறு நில்லாமல் அதனோடு ஒன்றி நிற்கும். உயிரினது அறிவு சிவனது அறிவாகிய திருவருளினுள்ளே பொருந்தித் தான் என்பதொருமுதல் தோன்றாதபடி நிற்கும். அந்நிலையே சிவயோகம் எனப்படும். முந்திய நூற்பாவில் குறித்த சிவோகம் பாவனையின் முதிர்ச்சியே இச்சிவயோகம் என்பது. இது ஞானத்தில் யோகம் எனவும்படும். இது கைவரப் பெற்ற நிலையே சுத்த துரியம் ஆகும். இந்நிலையையே இந்நூற்பா எடுத்து விளக்குகிறது.

நூற்பா

அவனே தானே ஆகிய அந்நெறி
ஏக னாகி இறைபணி நிற்க;
மலம் மாயை தன்னொடு வல்வினை இன்றே.

ஆசிரியர் கூறும் கருத்துரை: என்பது சூத்திரம். என நுதலிற்றோ எனின் பாசட்சயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

கருத்துரை விளக்கம்: முந்திய நூற்பா சாதனத்தில் நிற்கும் முறையைக் கூறியது. அச்சாதனத்தால் அடையும் பயன் இரண்டு. அவை பாசநீக்கம், சிவப்பேறு என்பன. அவற்றுள் முதலாவதாகிய பாச நீக்கத்தை உணர்த்துகிறது இந்நூற்பா, பாச நீக்கமாவது, மலங்களின் வாசனை அறுதலேயாகும்.

நூற்பாவின் பொருள்: முதல்வன் பெத்தகாலத்தில் உயிரோடு உடனாய் நின்றும் தான் வேறு காணப்படாமல் உயிர் ஒன்றே உள்ளது என்னும்படி அதனோடு ஒன்றுபட்டு நிற்கின்றான். அம்முறைபோல, இம் முத்தி காலத்தில் உயிர் முதல்வனோடு ஒன்றுபட்டுத் தான் வேறு காணப்படாமல் முதல்வன் ஒருவனே உள்ளான் என்று சொல்லும்படி அவனுள் அடங்கி நிற்றல் வேண்டும். அவ்வாறு அடங்கிச் சாதகன் இறைவனது பணியில் நிற்பானாக, அவ்வாறு நிற்பின் ஆணவம் மாயை எனபவற்றுடன் வலிய கன்மமும் பற்றறக் கழியும்.

பதவுரை:

அவனே -முதல்வனாகிய அவன்
தானே ஆகிய அந்நெறி -முன்பு பெத்த காலத்தில் உயிரோடு உடனாய் நின்றும் அவ்வுண்மை தோன்றாது. உயிர் ஒன்றே உள்ளது என்னும்படி, உயிரோடு ஒன்றாகி நின்ற முறைமை போல
ஏகன் ஆகி (நிற்க) -இம் முத்திக் காலத்தில் உயிர் அம்முதல்வனோடு உடனாய் இருந்தும் தான் காணப்படாமல், முதல்வன் ஒருவனே உள்ளான் என்னும்படி அவனுள் அடங்கி ஒன்றாகி நிற்றல் வேண்டும்.
இறை பணி நிற்க -பின்பு அவ்வுயிர் அவனது பணியிலே நிற்றல் வேண்டும். (அவ்வாறு நிற்குமாயின்)
மலம் மாயையொடு வல்வினை இன்றே- ஆணவம், மாயை ஆகிய இவற்றோடு, வலிய வினையும் இல்லையாய் ஒழியும்.

விளக்கம்: முந்திய ஒன்பதாம் நூற்பாவிலிருந்து மலவாசனையே சொல்லப் பட்டுவருகிறது. ஆதலால் இந்நூற்பாவில் மலம் என்றும், மாயை என்றும், கன்மம் என்றும் வருவனவெல்லாம் அவற்றின் வாசனையே என்று கொள்ள வேண்டும்.

கூறுகள்: இந்நூற்பாவின் பொருளை இரண்டு கூறுகளாக அமைத்துக் கொண்டு விளக்குகிறார். அக்கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு:

கூறு பொருள் முதற்கூறு -ஏகனாகி நிற்றல்
இரண்டாம் கூறு -அருள்வழி நிற்றல்
முதல்கூறு

ஈண்டுப் பரமேசுரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான்
அவனிடத்து ஏகனாகி நிற்க-என்றது

மேற்கோளின் பொருள்

முதல்வன் தான் வேறு நில்லாது ஆன்மாவோடு ஒன்றாய்க் கலந்து அதுவாகவே நிற்கின்றான். அது பெத்த நிலையில் ஆகும். அத்தன்மை போல முத்தி நிலையில் ஆன்மாத் தான் வேறு நில்லாது அவனிடத்தே அடங்கி ஒன்றாய் நிற்க என்பதாம். முதல்வனோடு ஒன்றாய் நிற்க வேண்டுவது எதற்கு என்னும் வினாவுக்கு விடையாக ஏதுக் கூறிகின்றார். ஏது

அவ்வாறு நிற்கவே, யான் எனது என்னும் செருக்கு அற்று
அவனது சீபாதத்தை அணையும் ஆகலான்

ஏது விளக்கம்

திரிபுடி ஞானம்: உயிரறிவு அறியப்படும் பொருளுக்கு வேறாய் நிற்பின் நுகர்ச்சியாகிய அனுபவம் நிகழாது. ஒன்றை அறியுமிடத்து யான் இதனை அறிகின்றேன் என்னும் உணர்வு நிகழுமாயின் அவ்விடத்தில் யான் என்பதனால் அறிபவன் தன்னை உணர்கின்றான்; அறிகின்றேன் என்பதனால் தன் அறிவின் செயற்பாட்டை உணர்கின்றான். இதனை என்பதனால் அறியப்படும் பொருளைத் தனக்கு வேறாக உணர்கின்றான். இவ்வாறு தன்னையும், தனது அறிவையும், அறியப்படும் பொருளையும் பகுத்தறிந்து நிற்றலைத் திரிபுடி ஞானம் என்பர். அறிபவனாகிய ஆன்மா ஞாதிரு என்றும், அவனது அறிவு ஞானம் என்றும், அறியப்படும் பொருள் ஞேயம் என்றும் கூறப்படும். இம்மூன்றையும் அறிந்து நிற்றலாகிய திரிபுடி ஞானம் உள்ளதாயின் முழு இன்ப அனுபவம் நிகழாது என்பது விளங்கும்.

மூன்றாய தன்மை தோன்றாத இன்பம்:

தன்னையும், தனது அறிவையும், அறியப்படும் பொருளையும் பகுத்து உணரும்படி நில்லாமல் அறியப்படும் பொருளில் அழுந்தித் தன்னையும் தனது அறிவையும் மறந்து அப்பொருளோடு ஒன்றுபட்டு நிற்கும்போதே இன்ப நுகர்ச்சி உளதாகும். இவ்வுண்மை உலக இன்பத்திற்கும் பொருந்தும்; பேரின்ப நுகர்ச்சிக்கும் பொருந்தும். உலக நெறியாகிய காதலின்பத்தில் வைத்து இதனை உணர்ந்து கொள்ளலாம், துய்ப்பவனது உணர்வு துய்க்கப்படும் பொருளின் வேறாய் நின்றபோது இன்ப நுகர்ச்சி உண்டாதல் இல்லை. அவனது உணர்வு அப்பொருளின் வேறாகாது அதனுள் மூழ்கி ஒடுங்கி அதுவாகிய போதே அந்நுகர்ச்சி உளதாகும் என்னும் உண்மையைத் திருக்கோவையாரில் வரும் தலைமகனது கூற்றில் வைத்து அறியலாம். அவன் தான் வேறு அவள் வேறாய் நில்லாது, தானே அவளாம் தன்மை பெற்று நின்றதைப் குறிப்பிடுகிறான். இவள் அமுது நான் சுவை என்று சொல்லும்படி நின்றதாகக் கூறுகிறான்.

இதனைக் கொண்டு பேரின்ப நுகர்ச்சியும் இத்தகையதே என்பதை எளிதில் உணரலாம். சிவானந்த அனுபவமும் உயிரினது உணர்வு சிவத்தின் வேறாய் நில்லாது அதன் கண் அழுந்தி ஒடுங்கிய போதே உளதாகும். எனவே உயிர் சிவானந்தத்தைத் துய்க்க வேண்டின் தன்னையும் தனது அறிவையும் மறந்து, தான் என்னும் நினைப்பின்றிச் சிவ முதற் பொருளில் அழுந்திச் சிவம் ஒன்றையே அறிந்து நிற்றல் வேண்டும்.

மலவாசனையின் செயல்: அவ்வாறு முதற்பொருளோடு ஒன்றுபட்டு நிற்க வொட்டாது செய்வது ஆணவ மலமாகும். ஆணவ மலத்தின் சத்தி பெத்த காலத்தில் வலுவாய் நின்று ஆன்மாவையும் அதன் அறிவையும் சிவத்தினின்றும் வேறாகப் பிரித்து அதனைத் தனித்து நிற்கும் பொருளாக உணரும்படி செய்கிறது. முத்தி காலத்தில் அதன் சத்தி மடங்கி நின்றாலும் வாசனை அளவில் நின்று திரிபுடி ஞானத்தை நீங்காது நிற்கச் செய்கிறது.

ஏகனாகி நிற்றலின் இன்றியமையாமை: மல வாசனை உள்ள வரையில் இத் திரிபுடி ஞானமும் இருக்கவே செய்யும். திரிபுடி ஞானம் உள்ள வரையில் இறைவனோடு ஒன்றுபட முடியாது. அவ்வாறு ஒன்றுபடாத நிலையில் சிவானந்தத்தை எய்துதலும் இயலாது. ஆகவே, யான் என்று தன்னையும் எனது என்று தனது அறிவையும், அறியப்படும் பொருளாகிய முதல்வனையும் பகுத்துக் காணுகின்ற மயக்கவுணர்வுக்குக் காரணமாகிய ஆணவ மலவாசனை நீங்குவதற்கு ஆன்மா முதல்வனோடு ஏகனாகி நிற்றல் இன்றியமையாத தாகின்றது.

யான் எனது என்னும் செருக்கு-விளக்கம்: ஏதுவில் உள்ள யான் என்து என்னும் செருக்கு என்பதற்கு மூன்று விதமாகப் பொருள் கூற இடமுண்டு.

1. தானல்லாத உடம்பைத் தான் என்றும், தனதல்லாத பொருள்களைத் தனது என்றும் எண்ணுதலை யான் எனது என்னும் செருக்கு என்று கூறுவது பொதுவான பொருள்.

2. ஞான நெறியில் உயிர் சிற்றறிவு நீங்கித் தனது வியாபக அறிவைத் தலைப்பட்ட அளவில் யானே முதல்வன் என மயங்கி உணரும். அவ்வுணர்வு யான் என்னும் செருக்கு ஆகும். பின், தான் முதல்வன் ஆகாமையை உணர்ந்த உயிர் அம்முதல்வனைப் போலத் தன்னால் எச்செயலும் செய்தல் கூடும் என்று உணரும். முதல்வனது செயலைத் தனது செயலாகக் கருதும் அவ்வுணர்வு எனது என்னும் செருக்கு ஆகும். இவ்வாறு கொள்ளுவது முன்னையதினும் நுட்பமான பொருள்.

3. இனி இவ்வுரையில் கூறியது மேலும் ஒரு நுணுக்கமான பொருளாகும். யான் என்பது ஞாதிரு எனப்படும் அறிபவனை உணர்த்தும். எனது என்பது அறிபவனது குணமாகிய ஞானமும், அந்த ஞானத்தினால் அறியப்படும் பொருளாகிய ஞேயமும் ஆகிய இரண்டையும் உணர்த்தும். ஆகவே யான் எனது என்பது அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் எனப் பகுத்து உணரும் உணர்வைக் குறித்தது என்று கொள்ளப்பட்டது. அவ்வாறு பகுத்து உணரும் மயக்கவுணர்வுக்குக் காரணமாய் நிற்பதாகிய ஆணவ மலவாசனை செருக்கு எனப்பட்டது.

எடுத்துக்காட்டு

பெத்த நிலையில் உள்ளவர் உடம்பையும், மனம் முதலிய கருவிகளையும் யான் என்று எண்ணுகின்றனர். இவ்வுலகில் ஈட்டப்படும் செல்வம் முதலியவற்றை எனது எனது என்று எண்ணுகின்றனர். அவ்வாறு எண்ணுவதை மயக்க வுணர்வு என்று கூறுதல் பொருந்தும். ஆனால் முத்தி நிலையில் யான் சிவனை உணர்கிறேன் என்று ஒருவர் கூறுவராயின் அதனையும் மயக்கவுணர்வே என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும்? என்னும் ஐயம் எழலாம். அதனை இங்கு நீக்குகின்றார்.

வெண்பா

62. நான் அவன் என்று எண்ணினர்க்கு நாடும் உளம் உண்டாதல்
தான் என ஒன்று இன்றியே தான் அதுவாய்- நான் என ஒன்று
இல்லென்று தானே எனும் அவரைத் தன் அடி வைத்து
இல்லென்று தானாம் இறை.

இதன் பொருள்:

சிவனை மறந்து நானே எல்லாவற்றையும் செய்கின்றேன் என எண்ணுகின்ற வரிடத்தில் நான் என்னும் தற்போதம் உள்ளது என்பது வெளிப்படை.

அவர்போல் இல்லாமல் எந்தச் செயலிலும் நானும் சிவனும் இயைந்தே இருக்கின்றோம் என்று எண்ணுகின்றவரிடத்திலும் நான் என்னும் தற்போதம் உள்ளதேயாம். ஆதலால் நானும் அவனும் என்று உணர்கின்றவரிடத்திலும் சிவன் புலப்படாமல் அந்த உயிராகியே இருப்பான்.

இனி, நான் என ஒரு முதல் இல்லை, எல்லாம் அவனே எனத் தற்போதம் இழந்து நிற்பவரை அவ்வுயிர் வேறாய் இல்லை என்று சொல்லும்படி தனது திருவருள் வியாபகத்துள் அடக்கித் தானேயாய் மேம்பட்டு நிற்பான்.

பதவுரை

நான் அவன் என்று எண்ணினர்க்கும் -எந்த ஒன்றை அறியினும், செய்யினும் நானும் சிவனும் இயைந்து நின்றே அறிகிறோம்; செய்கிறோம் எனத் தன்னையும் இறைவனையும் வேறாக உணர்கின்றவர்கட்கும்
நாடும் உளம் உண்டு -(சிவனை உணராமல் நானே அறிகிறேன் செய்கிறேன் எனத் தன்னையே உணர்கின்றவர்கட்கு உள்ளது போலத்)தற்போதமே உளதாகும்.
ஆதல் -ஆதலால்
இறை -முதல்வன்
தான் என ஒன்று இன்றியே -அவரிடத்தில் தான் என்று ஒரு முதல் தோன்றாமலே
தான் அதுவாய் -தான் அந்தத் தற்போதமேயாய் மறைந்து நின்று

(இனி) நான் என் ஒன்று இல் என்று - நான் என ஒரு முதல் இல்லை என்றும்,
தானே எனும் அவரை -எல்லாம் அவனே என்றும் இவ்வாறு தன்னை உணராமல் தற்போதம் இழந்து இறைவனையே உணர்ந்து நிற்பவரை
இல் என்று -அவ்வுயிர் வேறாய் இல்லை என்று சொல்லும் படி
தன் அடிவைத்து -தனது அருள் நிறைவில் அவரை அடக்கிக் கொண்டு
தான் ஆம் -தானேயாய் விளங்குவான்.

விளக்கம் ஒருவன் இருளில் நிற்கின்றான்; பொருள்களைக் காணமாட்டாது வருந்துகிறான். அந்நிலையில் ஒளி தோன்றி எப்பொருளையும் அவன் காணுமாறு அவற்றை அவனுக்குக் காட்டுகிறது. ஆயின் அவன் அவ்வொளியினாலேயே தான் கண்டதாக எண்ணுவதில்லை. தானே கண்டு விட்டதாகக் கருதுகிறான். அவ்வாறு அவன் உணர்வது மயக்கவுணர்வு அல்லது திரிபுணர்வு ஆகும்.

அதுபோல உயிர் மலத்துள் மறைந்து தனது அறிவு செயல்களை இழந்து நிற்கிறது. அவ்வுயிருக்குத் திருவருளே என்றும் உடனிருந்து அறிவித்தும் செய்வித்தும் வருகிறது. ஆயினும் அதனை உணராமல் அவ்வுயிர் தானே அறிந்தும் செய்தும் வருவதாகக் கருதுகிறது. பெத்த நிலையில் யானே உலகத்தை அறிகிறேன் என்று எண்ணுகிறது. முத்தி நிலையில் யான் சிவத்தை உணர்கிறேன் என்று எண்ணுகிறது. பெத்த நிலையில் அவ்வாறு எண்ணுவது ஆணவ மலத்தினால் ஆகும். முத்தி நிலையில் அவ்வாறு எண்ணுவது ஆணவ மல வாசனையினால் ஆகும்.

உயிரறிவும் சிவனறிவும்:

உயிர் எந்நிலையிலும் தனித்த நின்று அறிவதில்லை. எந்த நிலையிலாயினும் உயிர் தன்னைத் தனியாக அறிவதாக உணருமாயின் அவ்வுணர்வு மயக்கவுணர்வேயாகும்.

ஒன்றை அறியுங்காலத்தில் உயிரறிவும், சிவனது அறிவும் கலந்து நின்றே அறியும். அங்ஙனம் கலந்து நிற்பினும் அறிவிக்கும் அறிவாகிய சிவனது அறிவு தன் தன்மை திரியாது தானேயாய் நிற்கும். அதுபற்றியே அது சுதந்திர அறிவு எனப்படுகிறது. ஆயின் அறியும் அறிவாகிய உயிரறிவு அவ்வாறு தனித்து நிற்றலின்றிச் சிவனது அறிவோடு கூடி அதுவேயாகி அதனுள் அடங்கியே நிற்கும்.

பகுத்து உணர்தல்: இவ்வுண்மையை உணராமல் உயிர் சிவஞானத்தை மறந்து யானே அறிகின்றேன் எனத் தன்னையும் தனது அறிவையும் சிவஞானத்தின் வேறாகப் பகுத்து உணரும். சிறிதாயினும் தனித்து நிற்றலின்றிச் சிவஞானத்துள் அடங்கி நின்றே அறிவதாகிய உயிர் அதனை மறந்து தற்போதத்தால் தான் மட்டுமே தனித்து நின்று அறிவதாக உணர்வது மயக்க வுணர்வாகும்.

இனி சிவஞானத்தை நினைந்து நானும் அவனுமாய் நின்று அறிகிறோம் என்று உணரும் போதும் தன்னையும் சிவனையும் வேறாக அறிந்து நிற்கின்ற மயக்கவுணர்வு உளதாதல் வெளிப்படை இந்நிலையிலும் தற்போதம் இருக்கவே செய்கிறது. ஏகனாகி நிற்றல்: இனி, தனது அறிவு சிறிதும் தோன்றாமல் சிவஞானமே உள்ளது என்னும்படி அதனோடு ஒன்றுபட்டு அதுவேயாகி அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்னும் வேறுபாடு தோன்றாமல், அறியப்படும் பொருளாகிய சிவஞானத்தில் திருவருளில் அழுந்தி நிற்கும் நிலையே ஏகனாகி நிற்கும் நிலையாகும்; மலவாசனை அற்ற நிலையாகும். ஆன்மா இறைவனோடு ஏகனாகி அவன் ஒருவனையே உணர்ந்து நின்றால் தான் ஆணவமலம் தனது வாசனையும் இன்றிப் பற்றறக் கழியும் என்பது இம்முதற் கூறில் வலியுறுத்தப்பட்டது. இறைவனோடு ஏகனாதல் என்று கூறப்படினும் அதன் கருத்து அவனது அருளோடு ஒன்றாதல் என்பதேயாம்.

இரண்டாம் கூறு: முதல் கூறில், மலவாசனை நீங்குதற்பொருட்டு ஆன்மா தான் என வேறு நில்லாது தன்னையிழந்து முதல்வனோடு ஒன்றுபட்டு நிற்றல் வேண்டும் என்றார். வழிப்போக்கன் ஒருவன் நிழலையுடைய தூய இடத்தைக் கண்டால் அதனைச் சென்றடைந்து அந்நிழலை விட்டு அகலாது அடங்கி நின்று இன்புறுவான். அதுபோல ஆன்மா முதல்வனை உணர்ந்து தான் என வேறு நில்லாது அவனிடத்தில் அடங்கி நிற்றல் வேண்டும். வழிப்போக்கன் நிழலைவிட்டு நீங்கினால் வெயில் அவனை வருத்தும். அதுபோல ஆன்மா முதல்வனை விட்டு நீங்கித் தன்னை வேறாக உணர்ந்து நின்றால் மலவாசனை வந்து தாக்கும்.

பின் நிற்றல்: இருளில் இயங்குவோர் தமக்கு உதவியாகத் தீப்பந்தத்தைப் பிடித்து வருகிறவன் முன்னே செல்லத் தாம் பின்னே நடப்பர். இத்துணைப் பெரியவனாகிய நான் அவனுக்குப் பின்னே செல்வதா? என்று யாரும் நினையார். அவ்வாறு நினைந்து முன்னே நடக்க முற்பட்டால் இருளே அவர்க்கு உளதாகும். அதுபோலப் பாசப் பற்றாகிய இருளை விலக்கி ஞானநெறியிற் செல்லும் உயிர்களுக்கு உதவியாக இறைவன் தனது திருவருள் ஒளியை வழங்கி வருகின்றான். தன்முனைப்போடு அவ்வொளிக்கு முன்னே செல்ல முற்பட்டால் மல இருளே அவரைச் சூழும். ஆதலால் உயிர் முதல்வனுக்குப் பின் நிற்றலே முறையாகும்.

முதல்வனுக்குப் பின் நிற்றலாவது எச்செயலைச் செய்யினும் தன்முனைப்பால் யான் செய்கின்றேன் எனக் கருதிச் செய்யாது அவன் செய்விக்கின்றான்; செய்கின்றேன் ஆதலால் இச்செயலின் பயனாக வரும் நன்மை, தீமை, இன்பம், துன்பம், புகழ், இகழ் ஆகியவற்றுள் எதுவும் என்னுடையதன்று; எல்லாம் அவனுடையதே என இவ்வாறு உணர்ந்து நிற்றலேயாகும்.

திருவருட்செயலாக உணர்தல்:

அனைத்தையும் திருவருட் செயலாக உணர்ந்தவர் ஆண்டவனிடத்தில் எதனையும் வேண்டார். நம்மிடத்தில் முதல்வனது திருவருட்செயல் இல்லையாயின் அன்றோ அவனிடத்தில் இந் நன்மைகளைத் தருக; இத்தீங்குகளை நீக்குக என நாம் வேண்ட வேண்டும். அவ்வாறின்றி அளப்பரிய அருளுடையவ னாகிய அவன் நம்மோடு எவ்விடத்தும் எக்காலத்தும் நீங்காது உடனாய் நிற்றலின் நாம் அவன்பால் ஒன்றை வேண்டுவது எதற்கு?

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டி னல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே (திருவாசகம், குழைத்த பத்து 6)

என்பது அவ்வாறு நின்று அருளிய திருமொழியாகும்.

முதல்வனது திருவருளில் சிறிதும் நீங்காது நிற்கும் பெரியோர் வீடு பேற்றினையும் அவனிடம் வேண்டார் என்பதனை,

கண்ணார் நுதலாய் கழலிணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணாது இரவும் பகலும் நான்
அவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா, எண்ணக் கடவேனா
அடிமை சாலஅழகுடைத்தே (குழைத்த பத்து 9)

என்றாற்போல வரும் திருமொழிகளால் உணரலாம்.

இவ்வாறு முதல்வனுக்குப்பின் நிற்றலையே அருள் வழியில் நிற்றலையே இந்நூற்பாவில் இறைபணி நிற்றல் எனக் குறித்தார் ஆசிரியர். அதனை இவ்விரண்டாம் கூறில் விளக்கிச் சொல்லுகின்றார்.

மேற்கோள்

இனி, இறைபணி வழுவாது நிற்க என்றது.

மேற்கோளின் பொருள்

இறைபணியில் சலியாது நிற்க என்பது இம்மேற்கோளின் பொருளாகும்.

இவ்விடத்தில் ஓர் வினா எழும். ஆன்மா இறைவனோடு ஏகனாகி நின்றாலே போதும். அதற்குமேல் இறைபணியில் நிற்க வேண்டுவது எதற்கு? என்பதே அவ்வினா. அதற்குரிய விடையை ஏதுவில் அமைத்துள்ளார் ஆசிரியர்.

ஏது

அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யானாகவே அஞ்ஞான
கன்மம் பிரவேசியா ஆகலான்

ஏதுவின் பொருள்

அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமையாகிய அதுவே இறைபணி நிற்றல் என முதலில் விளக்கம் தந்தார். அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமையாவது, எதனைச் செய்தாலும் அவனது அருளை மறந்து தானே செய்வதாகக் கருதாமல் அவனது அருள் செய்விக்கவே நான் செய்கின்றேன் என்னும் உணர்வோடு செய்தல்.

ஆன்மா எந்த நிலையிலும் இவ்வுணர்வினின்றும் நீங்காமல் எச்செயலும் என்னதன்று, நின் செயலே எனவும். உனக்கு எப்படிக் கருத்தோ அப்படியே செய்தருளுவாய் எனவும் அருள் வழியில் நிற்பின் மாயா மலத்தின் வாசனையும் கன்ம மலத்தின் வாசனையும் தாக்கா என்று கூறினார். அஃது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

ஏது விளக்கம்

கன்மம் சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்னும் மூன்று நிலைகளைப் பெறும். இதுபற்றி இரண்டாம் நூற்பா இரண்டாம் கூறில் கூறியது நினைவிருக்கலாம். பழ வினைகளின் தொகுதி சஞ்சிதம் எனவும், இப்பிறப்பில் வந்து பயன் கொடுக்கும் வினைகள் பிராரத்தம் எனவும், அவற்றை நுகருங்கால் செய்யும் புது வினைகள் ஆகாமியம் எனவும் சொல்லப்படும்.

வினைப்பயன் வரும் வாயில்கள்:

இப்பிறப்பில் பிராரத்த வினை நன்மையும் தீமையும் ஆகிய பயன்களைத் தானே நேர் நின்று தருவதில்லை. சிலவற்றை வாயிலாகக் கொண்டே பயன் தரும். ஓர் எடுத்துக்காட்டினைக் காண்போம். ஒருவருக்குச் சீட்டுக் குலுக்கலில் பெருந்தொகை பரிசாகக் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு மனக் கவலையின்றி வாழலாம் என்று அவர் எண்ணுகிறார். ஆனால் அதைக் கொண்டே அவருக்கு மனக்கவலையை உண்டாக்குகிறது பிராரத்த வினை. அவரது மனைவி தன் கழுத்துக்கு வயிர மாலை வேண்டும் என்று கேட்டு அவரை வாட்டியெடுக்கிறாள். அவரது மகனோ தான் தொழில் தொடங்குவதற்குப் பெரும் பணம் தரவேண்டும் என்று விடாப்பிடியாகக் கேட்கிறான். அவரோ மறுக்கிறார். அவனை வெறுக்கிறார். மனைவியைப் பழிக்கிறார். மனம் சலிக்கிறார். இவ்வாறு அப்பணத்தையும் அவரது மனைவியையும், மகனையும் வாயிலாகக் கொண்டு அவருக்குத் துன்பத்தைத் தருகிறது பிராரத்த வினை.

அவ்வினை ஒருவருக்குப் பயன் தரும் காலத்தில் பிறரை மட்டுமே வாயிலாகக் கொள்ளும் என்பதில்லை. அவரையே வாயிலாகக் கொள்ளுதலும் உண்டு. ஒருவர் சர்க்கரை நோயினால் தொல்லைப்படுகிறார். அவரது வினை அவரது உடம்பையே வாயிலாகக் கொண்டு அந்நோயை வருவித்து அவருக்கு இடர் விளைக்கின்றது.

உலகினர் உணர்வதில்லை:

இங்ஙனம் பிராரத்த வினை பயன் தரும்பொழுது அவ்வின்ப துன்பங்களை முன்பு நாம் செய்த வினையின் பயன்களே இவை என்று உலகினர் உணர்வதில்லை. மனைவியும் மக்களும் மற்றுமுள்ளோரும் அவ்வினைப் பயன் வருவதற்கு வழியாக அமைகின்றனரேயன்றி அவர்களே அவற்றைச் செய்தவர் அல்லர் என்றும் உணர்வதில்லை. அப்பயன்கள் அப்பொழுதுதான் புதியனவாக வருகின்றன என்று தவறாக எண்ணுகின்றனர். அந்நன்மை தீமைகளுக்குப் பிறரே காரணம் என்று கருதி அவர்மீது விருப்பு வெறுப்புக் கொள்கின்றனர். நட்போ பகையோ பாராட்டுகின்றனர். இவ்வறியாமையை என்னென்பது!

சிறுவன் ஒருவன் வீதியிற் செல்லுகின்ற நாய்மீது விளையாட்டாகக் கல்லை எறிகிறான். அக்கல் அந்நாயைத் தாக்கித் துன்பத்தைத் தருகிறது. அது வெகுண்டு திரும்புகிறது. தன்னை நேரே தாக்கிய கல்லின்மீது அல்லவா அது தன் சினத்தைக் காட்ட வேண்டும்? அவ்வாறு அது செய்வதில்லை. தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு அக்கல் வெறும் வாயில் மட்டுமே என்பதை உணரும் திறன் அதற்கு உண்டு போலும். அதனால் அக்கல்லை நோக்கிச் செல்லாமல், எறிந்தவனையே மூலகாரணம் எனக் கண்டு அவன்மீது பாய்கிறது. அவ்விலங்கிற்கு உள்ள அறிதிறன் மக்களுக்கு இல்லையே. தமக்கு வருகின்ற துன்பத்திற்குக் காரணம் தாமே என்பதையும், பிறரெல்லாம் அத்துன்பம் வருவதற்கு வாயிலாய் நிற்பவரேயன்றி அவரே அவற்றிற்குக் காரணர் அல்லர் என்பதையும் அறியாதவராய் அவர்கள்மீது அல்லவா பாய்கின்றனர்!

அறியாமையினால் ஆகாமியம் தோன்றுதல்:

இவ்வாறு அறியாமையினால் ஒரு வினையை அனுபவிக்கும்போதே மேலும் வினையைச் செய்கின்றனர். பிராரத்த வினை நுகர்ச்சியில் ஆகாமிய வினை தோன்றுகிறது. படை வீரர் அணிவகுத்து நடக்கும்போது ஓர் அடியைத் தொடர்ந்து மற்றோர் அடி பிறழாமல் இடைவிடாது தொடரும். அதுபோலப் பிராரத்த வினையைத் தொடர்ந்து ஆகாமிய வினை இவ்வகையில் வருதலால், வினையானது தொடர்ச்சியாய் இடையறவின்றிச் செல்கிறது.

கள்ளத் தலைவர்:

உயிர்கள் வினைக்கு ஏற்ப உடம்பைப் பெறுதலும், அதனைக் கொண்டு வினையை ஈட்டுதலும் நுகர்தலும் ஆகியனவெல்லாம் முதல்வனாலே நிகழ்வனவாகும். உடம்பு தோற்பாவை போன்றது. வினை அப்பாவையைப் பிணித்த கயிறு போன்றது. முதல்வன் பின்னிருந்து அக்கயிற்றைப் பற்றி நின்று இயக்குபவனைப் போன்றவன். அவனே கூட்டுவதும் கூட்டிப் பிரிப்பதும் காட்டுவதும், காட்டி மறைப்பதும் ஆகிய செயல்களையெல்லாம் முன் அமைத்த ஏட்டின் படி செய்கின்றான் என்பதை அறியாத மாந்தரே யாதொரு செயலுக்கும் தம்மையே தலைவராகக் கொண்டு செருக்கித் திரிவர். இறைவனது தலைமையைத் தமதாகக் கொள்ளுகின்ற அவரைக் கள்ளத் தலைவர் அழைப்பதே சாலப் பொருந்தும்!

திருவருளை நோக்கி அமைதல்:

காரணம் இன்றிக் காரியம் நிகழாது. சும்மா தனு வருமோ? சும்மா பிணி வருமோ? சும்மா வருமோ சுக துக்கம்? ஆதலால் நமக்கு வருகின்ற இன்ப துன்பங்களாகிய வேறுபாடுகளுக்கும் பிறவற்றிற்கும் காரணம் நாமேயன்றிப் பிறரல்லர் என்பதை உணர்தல் வேண்டும். உணர்ந்து, அவை பற்றிப் பிறரை நோவாது நாம் செய்த வினையை நாம்தானே அனுபவிக்க வேண்டும் என்று எந்த விருப்பும் இன்றி, வெறுப்பும் இன்றி, முதல்வனது திருவருளை நோக்கி அமைதல் வேண்டும்.

உடல் ஊழாய்க் கழிதல்:

திருவருளில் நீங்காது நிற்கும். பெரியோர் இவ்வாறு உணர்ந்து விருப்பு வெறுப்பின்றி அருள் வழியில் அமைந்து நடப்பர் ஆதலின் பிராரத்த வினை அவரைத் தாக்குவதில்லை. பிராரத்த வினை தாக்குதலாவது இன்ப துன்பங்களில் உயிருணர்வை அழுந்தச் செய்தல். நான் என்னும் முனைப்போடு விருப்பும் வெறுப்பும் கொண்டு நுகரும்போதே அவற்றில் அழுந்தும் நிலை உண்டாகும். அவ்வாறின்றி அருள்வழி நிற்போர் தம்மையிழந்து எப்பொழுதும் திருவருளில் அழுந்தி நிற்பர் ஆதலின் அவர் இன்ப துன்பங்களை நுகர்ந்தாலும் அவற்றில் அழுந்தி நில்லார்.

உயிருணர்வு ஒரு நேரத்தில் ஒன்றில்தான் அழுந்தி நிற்றல் இயலும். ஒன்றில் அழுந்துங்கால் மற்றொன்றில் அழுந்துதல் இயலாது. ஆகவே திருவருளில் அழுந்தி நிற்கும் அவர்கள் வினைப் பயன்களில் அழுந்தி நில்லாமை பெறப்படும். இவ்வாறு உடம்பு உள்ளவரையில் வருவனவாகிய பிராரத்த வினைப்பயன்களை அழுந்தாதே நுகர்ந்து கழிப்பர். அவை உயிரைத் தாக்காது உடல் அளவாய்க் கழியும்.

உடலளவாய்க் கழிதலாவது, உடலின்கண் நோய், புண் முதலியவற்றைத் தோற்றுவித்து நீங்குதல். அவர்கள் உடலின் தொடர்பை விட்டொழித்தவர்கள் ஆதலின் தம் உடலுக்கு வரும் நோய் முதலியவற்றைத் தம்மின் வேறாகக் கண்டு நிற்பர். அதனால் அவை அவரைச் சிறிதும் பாதிக்கமாட்டா. இதனையே உடல் ஊழாய்க் கழிதல் என்று நூல்கள் குறிப்பிடும்.

கன்ம மலம் நீங்கும் முறை:

ஆன்மா இவ்வாறு அருள் வழியில் நிற்பதனால் இப்பிறப்பிற்கென்று முகந்து வந்த பிராரத்த வினை தாக்காமல் நீங்கும். பிராரத்தத்தை அவற்றில் அழுந்தாது விருப்பு வெறுப்பின்றி நுகர்வதனால் புதியனவாகிய ஆகாமிய வினைகள் ஏறமாட்டா. இதனால் அருள் வழியில் நிற்பார்க்குக் கன்மமலம் நீங்கும் என்பது பெறப்படும்.

மாயா மலம் நீங்கும் முறை:

பிராரத்த வினைக்குச் சார்பாய் நிற்பது மாயா காரியமாகிய உலகியல் ஆகும். பிராரத்த வினையே மாயா காரியமாகிய உலகப் பொருள்களை-வீடு, வாசல், நில புலம், நிதியம் முதலியவற்றைக் கூட்டுவித்து உயிரை அவற்றோடு பிணித்து வைக்கும். திருவருளில் அழுந்தி நிற்போர் எந்த நிலையிலும் திருவருள் உணர்வினின்றும் நீங்காமல் நிற்பதனால் பிராரத்த வினை தாக்காது ஒழியவே, அவரது உணர்வில் உலகியல் தோன்றாது. இதனால் அருள்வழி நிற்போர்க்கு மாயா மலம் நீங்கும் என்பது பெறப்படும்.

ஏதுவில் அஞ்ஞான கன்மம் பிரவேசியா என்றார். அஞ்ஞானமும் கன்மமும் என இரண்டாகக் கொள்ளுதல் வேண்டும். அஞ்ஞானம் மாயையைக் குறிக்கும். உடம்பு நிற்கும் வரையில் அவ்வாசனா மலங்கள் அதனோடு ஒட்டியே நிற்கும் ஆதலின் அவை அறும் என்று கூறாது பிரவேசியா என்றார்.

இறைபணி நிற்றலின் இன்றியமையாமை:

இதுகாறும் கூறியவற்றால், கன்ம மல வாசனையும் அது காரணமாக வரும் மாயாமல வாசனையும் ஆகிய இவையெல்லாம் நிகழாமைப் பொருட்டு ஞான நிலையில் நிற்பவன் அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாதிருத்தல் இன்றியமையாதது என்பது நன்கு விளங்கும்.

இனி எடுத்துக்காட்டுச் செய்யுட்களை நோக்குவோம்.

எடுத்துக்காட்டு 1

63. நாம் அல்ல இந்திரியம்; நம் வழியின் அல்ல; வழி
நாம் அல்ல; நாமும் அரன் உடைமை-ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை;
முற்செய்வினை யும்தருவான் முன்.

இதன் பொருள்:

செவி முதலிய பொறிகள் நமது அறிவு விளங்குதற்குத் துணை செய்கின்ற கருவிகளேயாகும். அவை மாயையின் காரியங்களேயன்றி நாம் ஆவன அல்ல மேலும் அவை செயற்படுதலும் இறைவனது விருப்பத்தின் படியன்றி நம் விருப்பத்தின்படி அல்ல. வினைகள் வருவதற்குவாயிலாய் உள்ள நுகர்ச்சிப் பொருள்களும் அங்ஙனமே மாயையின் காரியங்களேயன்றி நாம் ஆவன அல்ல; நம் இச்சைப்படி செயற்படுவனவும் அல்ல.

மேற் கூறியவற்றைக் கொண்டு வினைகளை ஈட்டியும் நுகர்ந்தும் வருகின்ற நாமும் முதல்வனது வழியில் நிற்றற்குரிய பொருளாவோம். தனித்து நிற்கும் உரிமை சிறிதும் நமக்கில்லை.

இவ்வாறு தமது தன்மையையும் பாசங்களின் இயல்பையும் உள்ளவாறு உணர்ந்து, தாம் செய்வனவற்றை யெல்லாம் முதல்வன் செயலாகவே கொண்டு, அவனது அருள்வழி அடங்கி நிற்பார்க்கு அவர் எந்த உடம்பில் நின்று எந்த வினையைச் செய்தாலும் அவை ஆகாமியம் ஆதல் இல்லை.

பிராரத்த வினையும் அவர்க்கு உரிய நுகர்ச்சியாய் உயிரைச் சென்று தாக்காது; அதனை ஊட்டுவிப்பவனாகிய இறைவனது முன்னிலையில் உடல் ஊழாய் வந்து நிற்கும்.

பதவுரை

இந்திரியம் நாம் அல்ல - நமது அறிவு விளங்குதற்குத் துணை செய்கின்ற ஐம்பொறிகள் முதலியவை நமக்குக் கருவிகளேயன்றி அவையே நாம் அல்ல.
நம் வழியில் அல்ல -அவை செயற்படுவதும் நம் விருப்பத்தின் படியல்ல. (இறைவன் விரும்பிய படியேயாம்)
வழி நாம் அல்ல(நம் வழியின் அல்ல) -ஐம்பொறிகளால் பற்றப்படும் நுகர்ச்சிப் பொருள்களும் நம்மால் நுகரப்படுவனவேயன்றி அவை நாம் ஆகா. அவை நமக்கு வந்து வாய்ப்பதும் நம் விருப்பத்தின்படியல்ல. இறைவன் விருப்பப்படியே யாம்.
நாமும் அரன் உடைமை - மேற்கூறியவற்றைக் கொண்டு வினைகளை ஈட்டியும் நுகர்ந்தும் வருகின்ற நமது அறிவும் செயலும் இறைவன் செலுத்தினால் அன்றித் தாமாகச் செயற்படுவன அல்ல ஆகையால் நமக்கென்று என்ன சுதந்திரம் இருக்கிறது? நாம் முதல்வனது வழியில் நிற்றற்குரிய அடிமையாவோம்.
ஆம் என்னில் -என்று இவ்வாறு சிந்தித்து உணர்ந்து எல்லாவற்றையும் முதல்வன் செயலாகவே கண்டு கொண்டு நிற்பாராயின்
இறை பணியார்க்கு -அத்தகைய இறை பணியில் நிற்பார்க்கு
எத்தனுவில் நின்றும் வினையில்லை - அவர் எந்த உடம்பில் நின்று எந்த வினையைச் செய்யினும் ஆகாமிய வினை உண்டாதல் இல்லை.
முன் செய் வினையும் -ஆகாமிய வினையைத் தோற்றுவித்தே வருவதாகிய பிராரத்த வினையும்(உயிருக்கு உரிய நுகர்ச்சியாய்ச் சென்று தாக்காது) தருவான் முன் -அதனை ஊட்டுவிக்கின்ற இறைவன் முன்னிலையில் உடல் அளவாய்க் கழியும்.

விளக்கம்

கருவிகள் நம் வழியில் நில்லா:

கருவிகள் நம் வழியில் நிற்பன அல்ல என்பதை அன்றாடம் நிகழும் நிகழ்ச்சியைக் கொண்டே அறியலாம்.

சிறந்த பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை அமர்ந்து விரும்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். சிறிது நேரத்தில் நம்மையறியாமலே தூக்கம் வந்து கண்ணைச் சுழற்றுகிறது. இமைகள் மூடுகின்றன. விழிகளைத் திறக்க எவ்வளவோ பாடுபடுகிறோம். என்னவெல்லாமோ செய்து பார்க்கிறோம். முடியவில்லை. நம் விருப்பத்தையும் மீறி, நம் வசத்தில் நில்லாமல் கண், செவி முதலிய கருவிகள் செயற்படாமற் போகின்றன என்பதைத்தானே இது காட்டுகிறது. புறக் கருவிகளாகிய இவையே நம் வசத்தில் இல்லாத பொழுது மனம் முதலிய அகக்கருவிகள் எப்படி நம் வசத்தில் அடங்கி நிற்கும்? ஆகவே கருவிகள் செயற்படுவது இறைவனது விருப்பத்தின் படியேயன்றி, நாம் விரும்பியபடியன்று என்பது விளங்கும்.

நாமும் அரனுடைமை:

எல்லாவுயிர்களும் எல்லாப் பொருள்களும் இறைவனுக்கு உடைமைகளாகும். உடைமைப் பொருளிலே இருவகையுண்டு. சிலகாலம் மட்டும் ஒருவருக்கு உடைமைப் பொருளாயிருப்பவை அவ்வாறின்றி என்றுமே உடைமைப் பொருளாயிருப்பவை என்பன அவ்விருவகை.

ஒற்றி வைத்த பொருள் சில காலம் மட்டும் ஒருவரிடம் இருக்கும். பின்னர் மீட்கப்பட்டு அவரிடமிருந்து நீங்கி விடும். இறைவனுக்கு உடைமையாக இருக்கின்ற உயிர்களின் நிலை ஒற்றி வைத்த பொருளின் நிலை போன்றதன்று. அவை என்றுமே அவனுக்கு உடைமைப் பொருள்களாய் இருப்பவை இக்கருத்தினை

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி யாட்பட்டேன்

என வரும் சுந்தரர் திருமொழியால் பெறலாம்.

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை யெல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்டபோதே கொண்டிலையோ (குழைத்த பத்து-1)

எனவரும் திருவாசகப் பகுதி, ஞானியர் உடல் பொருள் ஆவி மூன்றையும் இறைவன் பால் ஆக்குவிப்பவர் என்பதைத் தெளிவுறுத்தும்.

இறைபணியார்க்கு இல்லை வினா:

இறைபணியில் நின்றார் எவ்வினையைச் செய்தாலும் அது தவமாகவே முடியும்; ஆகாமியமாய் முடிதல் இல்லை என்பதைச் சண்டேசுரர் வரலாறு உணர்த்தும்.

விசார சருமர், அதுதான் அவரது இயற்பெயர், சிவ வழிபாடு செய்தபோது தாமாய் நில்லாமல், தம்முணர்வு சிவவுணர்வினுள் மூழ்கி ஒடுங்கி நிற்கத் தம்மையும் உலகையும் மறந்து சிவனோடு ஏகனாகி நின்றார் ஆதலின் அந்நிலையில் அவர் செய்தனவெல்லாம் அவர் செயலாகாது சிவன் செயலேயாயின.

அவரது தந்தை வெகுண்டு முதுகில் அடிக்கவும் அவர் அதனைச் சிறிதும் உணராராய் சிவவழிபாட்டில் சலியாது நின்றார். அதனால் தந்தை மேலும் சினந்து திருமஞ்சனத்திற்கு வைத்திருந்த குடப்பாலைக் காலால் இடறிச் சிந்தினான். இவ்வாறு வழிபாட்டிற்கு இடையூறு நேர்ந்தபோதே அவருக்குச் சிறிது உலகவுணர்வு உண்டாயிற்று. அருகில் கிடந்த கோலை எடுத்து எறிந்து தந்தையின் கால்களைத் துணித்தார்.

அச்செயலை அவராய் நின்று செய்யாமல் அருளாய் நின்றே செய்தனராதலின் பாதகமாய் முடியாது தவமாய் முடிந்தது. அதனால் சண்டேசுர பதவியைப் பெற்றுச் சண்டேசுவர நாயனார் ஆயினார்.

இவ்வரலாற்றை மாணிக்கவாசகர் திருவாசகத்துள் குறிப்பிட்டு, பாதகம்தானே சிறந்த நன்மையைப் பெறுதற்கு வழியாயிற்று என்றார் (திருத்தோணோக்கம், 7) மேலும், அவ்வாறு செய்விக்கும் இறைவனை சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் என்று வியந்து பாடினார் (திருத்தோணோக்கம், 6)

சேக்கிழார் சண்டேசுர நாயனார் வரலாற்றைக் கூறி முடிக்குமிடத்தில் இறுதிச் செய்யுளில் இத்திருவாசகக் குறிப்பைக் கருத்திற் கொண்டே,

இந்த நிலைமை அறிந்தாரார்? ஈறி லாதார் தமக்கன்பு
தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றுங்கால்

என்றார்.

மேற்கூறிய வரலாறும், அதனடியாக எழுந்த அனுபவ மொழிகளும் இறை பணியார்க்கு இல்லை வினை என்பதை உறுதிப்படுத்துவனவாகும்.

முற்செய் வினை:

சஞ்சித வினை உள்ள வரையில் ஞானம் விளங்காது ஆதலால் ஞானாசிரியர் முதலில் சஞ்சிதத்தைச் சுட்டெரித்த பின்னரே ஞானத்தை உணர்த்தினார். ஆகவே சஞ்சித வினை வறுத்த வித்துப்போல முன்னரே கெட்டொழிந்தமையின், இங்கு முற்செய் வினை என்றது இப்பிறப்பிற்கென்று எடுத்து வந்த பிராரத்த வினையையே குறித்தது. முற்செய் வினையும் தருவான் முன் கழியும் என ஒரு சொல் வருவித்துக் கொள்ள வேண்டும்.

இறைபணியில் நிற்பவர்க்குப் பிராரத்த வினையும் ஆகாமிய வினையும் இல்லாதொழியும் என்பது கூறப்பட்டது. இச்செய்யுள் இறைபணியில் நிற்பவர் நிலையை இனிதாய் விளக்கும் அழகிய சொல்லோவியமாய்த் திகழ்கிறது.

எடுத்துக்காட்டு 2

64. சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்தும் சலம் இலனாய்-சார்ந்தடியார்
தாம் தானாச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல்
ஆய்ந்து ஆர் முன் செய்வினையும் ஆங்கு

இதன் பொருள்:

இறைவன் தன்னைச் சார்ந்து தன் அருளின் வழி நிற்பவரைத் தன்னைப் போலச் செய்வான். அஃதாவது வினையைச் செய்தும் அவ்வினையினால் பற்றப்படாது நிற்கும்படி செய்வான். ஏனையோர் செய்யும் வினையை அவர்க்குத் தப்பாமல் ஊட்டுவான்.

செய்தவரை இப்பிறப்பில் நுணுகி வந்து பொருந்துவதாகிய பிராரத்த வினையும் அவ்வாறே தன் அருள் வழியில் நிற்பவரைத் தாக்காமல் நீங்கும்படி செய்வான். ஏனையோர்க்கு அவரது பிராரத்த வினை விடாமல் தன் பயனை ஊட்டியே நீங்கும்படி செய்வான்.

இங்ஙனம் இறைவன் இருவகையாகப் பயன் தருதலைக் குற்றமாகக் கருதுதல் அறியாமையாகும். தம்மிடம் புகலாக அடைந்தவரை அவர்க்குவரும் தீமையைப் போக்கிப் பாதுகாத்தல் தலைவருக்கே உரிய இயல்பான பெருங்குணம் அன்றோ? அம்முறையில் இறைவனும் தன்னைச் சார்ந்த அடியவரை அவரது பிராரத்த வினை தாக்காதவாறு காக்கின்றான். தன்னை அடையாது விலகி நிற்பவருக்கும் அதே பயனைக் கருதல் வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி முறையாகும்? ஆகவே இறைவனது செயல் நடுவு நிலைமை உடையதேயாம்.

பதவுரை

சார்ந்தாரைக் காத்தல் -அடைக்கலம் என்று தம்மை வந்து

தலைவர் கடன் ஆதல் -அடைந்தாரை அவர்க்கு வரும் துன்பங்களைப் போக்கிப் பாதுகாத்தலே தலைவராய் உள்ளார்க்குக் கடமையாகும்.
(அங்ஙனம் வந்து அடையாதாரையும் அதுபோலவே காத்தல் வேண்டும் என்று கூறுவது முறைமை ஆகாது.) ஆதலின்
சார்ந்தாரைக் காத்தும் சலம் இலன் -இறைவன் தன்னை அடைந்தாரையே பாதுகாப்பான். அங்ஙனம் அவரை மட்டுமே காக்கினும் அவன் வஞ்சனை இல்லாதவனே ஆவான்.
ஆய் -அங்ஙனம் வஞ்சனை இல்லாதவனாகி
சார்ந்த அடியார் -தன்னை அடைந்த அடியவர்களை
தாம் தானாச் செய்து -தன்னைப் போல ஆகும்படி செய்து
(அஃதாவது, வினையைச் செய்தும், அதனால் பற்றப்படாமல் நிற்கும்படி செய்து)
பிறர் தங்கள் வினை -ஏனையோர்க்கு அவர்கள் செய்த வினையின் பயனை
தான் கொடுத்தல் -அவர்கள் நுகரும்படி கொடுத்தலால்
ஆய்ந்து -நுணுகி வந்து
ஆர் -பொருந்துவதாகிய
முன்செய்வினையும் -பிராரத்த வினையும் ஆங்கு -அவ்வாறே இரு நிலைமையை உடையன வாகின்றன.

(அஃதாவது, இறைபணியில் நிற்கும் அடியவரைச் சாராமல் நீங்குதலும், ஏனையோரைச் சார்ந்து தன் பயனை அவர்கள் நுகரும்படி செய்தே நீங்குதலும் ஆகிய இரு நிலைமையை உடையனவாம்)

விளக்கம்

சார்ந்தாரைக் காத்தல்:

எந்தவொரு பொருளும் தன்னை அடைந்தவர்க்குத் தன் பயனைத் தருமேயன்றி, அடையாது விலகி நின்றவர்க்குத் தன் பயனைத் தருதல் இல்லை என்பது உலகறிந்த உண்மை.

மழையில் நனைந்தும் குளிரில் நடுங்கியும் வருகின்றவன் தீயை அணுகினால் குளிர் நடுக்கம் நீங்கி இன்புறுவான். அத்தீயை அணுகாமலே தொலைவில் நின்றுகொண்டு எனது நடுக்கத்தை நீக்காதது இத் தீயின் குற்றம் என்று கூறுதல் பேதைமையன்றோ?

வெயிலில் உடல் வெந்து நடை மெலிந்து வருகின்றவன் அருகில் உள்ள நிழலையடைந்தால் வெப்பம் நீங்கி இன்புறலாம். அதனைச் செய்யாது, நிழலுக்கு வெளியே விலகி நின்றால் அவ்வின்பத்தை நிழல் எப்படித் தரும்?

அத்தீயும் நிழலும் போல இறைவன் தன்னை நண்ணியவர்க்கு வினைத் துன்பத்தை நீக்கியும், நண்ணாதவர்க்கு அதனைக் கூட்டியும் நிற்பான்.

இவ்வாறு இறைவன் அவ்வவ்வுயிர்களின் நிலைக்கு ஏற்பப் பயன் தருதல் குற்றம் ஆகாது என்பது கூறப்பட்டது.

எடுத்துக்காட்டு 3

இறை பணியில் நிற்கும் சிவஞானிகளுக்கும் பிராரத்த வினையின் தாக்குதல் உண்டு. அது வாசனை அளவேயாகும். அதுபற்றி ஆகாமிய வினை தோன்றக்கூடும். அவர் சிவத்தையே விடாது உணர்ந்து நிற்பர் ஆதலின் அம்மெய்யுணர்வு ஆகாமியத்தை ஓட்டி விடும் என்னும் கருத்தை இங்குக் கூறுகின்றார்.

வெண்பா

65. இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால்
முன் செய் வினை மாயை மூண்டிடினும்-பின் செய் வினை
மாயை யுடன் நில்லாது; மற்றவன்தான் மெய்ப் பொருளே
ஆய அத னால் உணரும் அச்சு.

இதன் பொருள்:

பெருங்காயம் (இங்கு) வைத்திருந்த பாத்திரத்திலிருந்து அதனை எடுத்துவிட்ட பிறகும் அப்பாத்திரத்தில் அதன் வாசனை சிறிதளவு இருக்கும். அதுபோலச் சிவஞானியிடத்தில் மல வாசனை இருத்தல் உண்டு. அது காரணமாக அவரிடத்தில் ஓரொரு கால் யான் எனது என்னும் தற்போதம் எழும். அது காரணமாகப் பிராரத்த வினையும் அதற்கு வாயிலாகிய உடம்பும் கருவிகளும் உலகப் பொருள்களும் ஆகிய மாயா காரியங்களும் மெல்ல வாசனையளவாய்த் தாக்கும். அங்ஙனம் தாக்கிய நிலையில் சோர்வு பற்றிச் செய்யப்படும் ஆகாமிய வினை முன்பு போல அடுத்த பிறப்பிற்கு ஏதுவாய் வலப்பெற்று நில்லாமல் விரைவில் கெட்டொழியும். அஃது எங்ஙனமெனில்,

வண்டியின் சக்கரத்தை வேறு வழியிற் செல்லவிடாது தன்னிடத்திலேயே சுழலும்படி செய்கின்ற அச்சினைப் போலச் சிவன் தன்னைச் சார்ந்தவரைத் தன்னை விட்டு நீங்க விடாமல் அணைத்து நிற்பான். அவரும் சிவோகம் பாவனையால் சிவமேயாய் நின்று சிவத்தையே விடாது உணர்ந்து நிற்பர். அதனால், ஒளி இருளை ஓட்டுவது போல அச்சிவவுணர்வு ஆகாமிய வினையை நிலைபெறாது ஓடும்படி செய்துவிடும்.

பதவுரை

இங்கு உளி -பெருங்காயத்தினின்றும்
வாங்கும் கலம் போல -அதன் மணத்தை வாங்கிக் கொண்ட பாத்திரத்தில் அக்காயம் தீர்ந்த பின்னரும் அதன் மணம் மெல்ல வீசுதல் போல

ஞானிபால் -மெய்யுணர்வைப் பெற்று நிற்பவனிடத்தில்(ஆணவ மலம் இல்லையாயினும் அதன் வாசனை இருத்தல் காரணமாக)

முன் செய்வினை -பிராரத்த கன்மமும்
மாயை -அது வருவதற்கு வாயிலாக உள்ள தனு கரணம் முதலிய மாயேயங்களும்
மூண்டிடினும் -மெல்ல வாசனை மாத்திரமாய்த் தாக்கிய போதிலும்
பின் செய்வினை -அங்ஙனம் தாக்கிய நிலையில் செய்யப்படுகின்ற ஆகாமிய வினை(முன்பு போல அடுத்த பிறப்பிற்கு வித்தாய் வலுப்பெற்று நில்லாமல்)

மாயையுடன் நில்லாது -உடம்பு அழியுங்காலத்தில் அதனுடன் அழிந்து விடும்.

அவன்தான் -இறைபணியில் நிற்கும் அம் மெய்யுணர்வுடையோன்

மெய்ப் பொருளே ஆய அதனால் -(முன்பு போலக் கருவிகரணங்களாய் நில்லாது) மெய்ப் பொருளோடு ஒன்றி அம் மெய்ப் பொருளேயாய் நிற்றலால்

அச்சு உணரும் -தனக்கு அச்சுப் போல நின்று தன்னைப் பிறழ விடாது காக்கும் அம்மெய்ப் பொருளாகிய சிவத்தையே உணர்ந்து நிற்பான்.

விளக்கம்

மல வாசனையை நீக்கும் பதிகம்:

திருநாவுக்கரசரின் அருள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியொன்றை நோக்குவோம்

அவர் திருப்புகலூரில் தங்கி உழவாரத் திருப்பணி செய்து வந்தபோது அவரது பற்றற்ற நிலையை உலகுக்குக் காட்டக் கருதிய இறைவன் பரல் கற்களோடு சேர்ந்து பொன்னும் நவமணியும் பொலிந்திலங்கச் செய்தான். நாவுக்கரசரது உணர்வில் அப்பொன்னும் மணியும் எவ்வித வேறுபாட்டினையும் உண்டாக்கவில்லை. ஒளிவீசும் நவமணிகளும் உருள்கின்ற பரல் கற்களும் அவருக்கு ஒன்றாகவே தோன்றின. உழவாரப் படையால் அவற்றையெடுத்து அருகிலுள்ள குளத்திலே எறிந்தார்.

ஓடும் பொன்னும், கல்லும் மணியும் ஆகியவற்றில் வேறுபாடு காணாதிருந்த அந்நல்லோர் முன் இறைவன் திருவருளால் அரம்பையர் எதிர் தோன்றி ஆடுதலும் பாடுதலும் செய்து மயக்குவாராயினர். அதுபற்றித் தமது நிலையில் திரியாது திருவருளில் உறைத்து நின்ற நமது நாயனார் அந்த அர மங்கையரைப் பார்த்துத் திருவாரூர் அம்மானுக்கு ஆளானேன். நீங்கள் வீணே அலைத்தல் வேண்டா என்று கூறி பொய்ம் மாயப் பெருங்கடலில் என்று தொடங்கும் திருத்தாண்டகத்தை அருளிச் செய்தார்.

சிவஞானிகளுக்கு மல வாசனை தாக்குமிடத்து அதனின் நீங்குதற் பொருட்டுத் தோன்றிய அருமைத் திருப்பதிகம் இது என்பர் அறிந்தோர்.

திருநாடுக்கரசர் நிலை:

தன்னிடத்தில் பொருந்திய சக்கரங்களை வேறு வழியில் செல்லவிடாத அச்சுப்போலத் தன்னைச் சார்ந்தவரைப் பிறழ விடாது காக்கும் மெய்ப் பொருளாகிய சிவத்தையே விடாது உணர்ந்து நின்ற நமது நாயனாரின் நிலையை,

இத்தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா அன்புருகும்
மெய்த்தன்மை உணர்வுடைய விழுத்தவத்து மேலோர்தம்
சித்த நிலை திரியாது செய்பணியின் தலை நின்றார்

என வரும் பெரிய புராணச் செய்யுள் உள்ளவாறு எடுத்துக்காட்டுகிறது அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா என்பது அவர் இறைவனிடத்து ஏகனாகி நின்ற நிலையையும், சித்த நிலை திரியாது செய்பணியின் தலை நின்றார் என்பது அவர் இறைபணியில் நின்ற திறித்தினையும் உணர்த்துவனவாகும். காண்பவற்றை யெல்லாம் சிவமாகக் காண்பதன்றிப் பிறவாகக் கண்டு விருப்பு வெறுப்புக் கொள்ளுதலும் இன்ப துன்பம் உறுதலும் இல்லாதிருத்தல் ஆகிய சிவயோக நிலையில் நின்றவர் ஆதலின் அவரை விழுத்தவத்து மேலோர் எனச் சிறப்பித்தார் சேக்கிழார்.

எடுத்துக்காட்டு 4

வாசனை மாத்திரமாய்ப் பிராரத்தம் வரும் பொழுதும் சிவஞானிகள் சலியாது நிற்பர் என்பதனை உவமைகளில் வைத்து இங்கு விளக்கிக் காட்டுகிறார்.

வெண்பா

66. நண்ணனல் வேவாத நற்றவர் தம்மினும்
பண்ணமர மாச் செலுத்தும் பாகரினும்-எண்ணி
அரன்அடி ஓர்பவர் ஐம்புலனிற் சென்றும்
அவர்திறன் நீங்கார் அதற்கு

இதன் பொருள்:

நெருப்புச் சுடாதவாறு மந்திரத்தால் அதனைக் கட்டுப்படுத்தும் வல்லமை அக்கினித் தம்பனம் எனப்படும். அக்கினித் தம்பனம் வல்லவர் நெருப்பின் நடுவிலே நின்றாலும் வெப்பத்தால் தாக்கப்பட்டது இனிதேயிருப்பர்.

பயிற்சி மிக்க குதிரை வீரர் பாய்ந்து செல்லும்படியாகக் குதிரையை விரையச் செலுத்தினாலும் அதன் வேகத்தால் நிலை கலங்காது இருப்பர்.

அவர்களைப் போலச் சிவஞானிகள் ஐம்பொறிகள் செயற்படினும் அதனால் தம் திறம் கெடாது அவற்றினை அடக்கி மேம்பட்டு நிற்பர்; முதல்வன் திருவடியாகிய அச்சினை விடாது உணர்ந்து நிற்பர். ஓரொருகால் ஐம்புலன்களில் சென்றாராயினும் தமது ஞான நிலையினின்றும் வழுவார்.

பதவுரை

நண்அனல் -நெருப்பின் நடுவில்(நின்றாலும்)
வேவாத -தம் திறன் கெட்டு வெந்து போகாது இனிதிருக்கும்
நற்றவர் தம்மினும் -அக்கினித் தம்பனம் வல்லார் போலவும்,
பண் அமர -ஓடுதல் வகையெல்லாம் பொருந்தும் படியாக
மாச் செலுத்தும் - குதிரையை விரையச் செலுத்தினாலும் அதன் வேகத்திற்பட்டு விழாது தம் திறன் கெடாது நிற்கும்
பாகரினும் -பாகர் போலவும்
எண்ணி அரன்அடி ஓர்பவர் - முதல்வன் திருவடியை இடைவிடாது உணரும் மெய்யுணர்வினர்
ஐம்புலனில் சென்றும் -பிராரத்த வினை காரணமாக ஐம்புல நுகர்ச்சியில் சென்றாராயினும்
அதற்கு -அதனால் (அந்நுகர்ச்சியால்)
அவர் திறன் நீங்கார் -தம் திறன் கெடாதே நிற்பார்(தமது ஞான நிலையினின்றும் சிறிதும் வழுவார்)

எடுத்துக்காட்டு 5

சத்தைச் சார்ந்து சத்தாயும், அசத்தைச் சார்ந்து அசத்தாயும் நிற்றலே உயிரியல்பு. ஞானிக்கும் இது பொருந்தும் ஆகையால் அவர் அசத்தாகிய புலன்களிற் சென்றாராயின் அவற்றில் தொடக்குண்டு நில்லாது தம் திறனே உடையவராதல் எங்ஙனம்? என்னும் ஐயம் எழலாம். அதனை இங்கு நீக்குகின்றார்.

வெண்பா

67. சதசத்தாம் மெய்கண்டான் சத்தருளிற் காணின்
இதமித்தல் பாசத்தில் இன்றிக்-கதம் மிக்கு
எரிகதிரின் முன்இருள்போல் ஏலா அசத்தின்
அருகு அணையார்; சத்து அணைவார் ஆங்கு.

இதன்பொருள்:

சத்தோடு கூடியபோது சத்தாயும், அசத்தோடு கூடியபோது அசத்தாயும் நிற்றலே தன் இயல்பு என்பதை உணர்ந்த ஞானி அருளே கண்ணாகச் சத்தாகிய சிவத்தைக் கண்டவன் ஆதலால் பின் எதனை நோக்கினும் அவ்வருட் கண்ணாலேயே நோக்குவான்.

அசத்தாகிய உலகம் சத்தாகிய சிவன் முன் வேறாய் விளங்கி நில்லாது. கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பின் முன் இருள் வேறாய் நிற்க மாட்டாதது போன்றது இது. ஆகையால் ஞானியிடத்தில் சத்தாகிய சிவம் பிரகாசித்த பின் அவன் முன்னும் அசத்தாகிய உலகம் எரிமுன் இருள்போல முனைத்துத் தோன்றாது என்பதே உண்மை. ஆகையால் வாசனை மாத்திரத்தால் ஐம்புலன்களில் செல்கின்ற அவன் முன்பு போல அவற்றில் பற்றுக் கொண்டு நிற்பானல்லன்.

இதனால், அருள் வழியாகச் சத்தாகிய சிவனை அடைந்தோர் யாவரும் அசத்தில் செல்லார் என்பதும், சென்றாலும் அதனிடத்தில் நில்லார் என்பதும், சத்தினிடத்திலேயே நிலைபெற்று நிற்பார் என்பதும் நன்கு விளங்கும்.

பதவுரை

சதசத்து ஆம் மெய்கண்டான் -சார்ந்ததன் வண்ணம் ஆதலே தனது இயல்பு என்பதை உணர்ந்த மெய்யுணர்வினன்
சத்து அருளின் காணின் -மெய்ப்பொருளாகிய சிவத்தை அதன் அருளாலே கண்டானாயின்(அதனையே விரும்புவான் அன்றி)
பாசத்தில் இதமித்தல் இன்றி -பொய்ப் பொருளாகிய புலன்களை விரும்புதல் செய்யான் ஆதலால்
சத்து அணைவார் -மெய்ப் பொருளாகிய முதல்வனை அணைந்து நிற்பவர்
கதம் மிக்கு எரிகதிரின் முன் இருள்போல் -சீற்றம் மிகுந்து எரிகின்ற தீச்சுடரின் முன் இருள் அவ்வொளியை அடர்க்க மாட்டாதது போல்
ஏலா அசத்தின் -இறையுணர்வை அடர்க்கமாட்டாத அசத்தாகிய அப்புலன்களின்
அருகு அணையார் -பக்கம் செல்லார்.

(அம்மெய்ப்பொருளிடத்திலேயே நிற்பர் என்பதாம்)

இவ்வாறு இந்நூற்பாவில், ஏகனாகி இறைபணி நிற்பின் ஆன்மா மலம் மாயை கன்மங்களின் வாசனையும் இன்றி அவற்றைப் பற்றறத் துடைத்துத் தூய்மையைப் பெறும் என்பது விளக்கிக் கூறப்பட்டது. இந்நூற்பாவின் பொருளைப் பின்வருமாறு சுருக்கமாக அமைத்துக் கொள்ளலாம்.

நிலை விளக்கம் பயன் 1. ஏகனாதல் நான் என்பதனை இழந்து முதற்பொருளோடு ஒன்றுபடுதல் ஆணவ மலம் நீங்குதல்

2. இறைபணி நிற்றல் எச்செயல் செய்யவரினும் திருவருளை மறவாது செய்தல் மாயையும் கன்மமும் நீங்குதல்

பத்தாம் நூற்பா முடிந்தது.

No comments:

Post a Comment