Thursday, 3 August 2017

மன்மதனை சிவபெருமான் எரித்த ஊர்!

 
கா மம் என்பதற்கு விருப்பம், ஆசை, பற்று என்ற பொருட்கள் உண்டு. உயிர்கள் ஒன்று, மற்றொன்றை விரும்புவதால் அடைய முயற்சிக்கின்றன. அதுவே பல செயல்களுக்குக் காரணமாகி உலகத்தை இயங்கச் செய்கிறது.
ஆசை நிறைவேறி, இன்பம் நிறைவேறாவிட்டால் துன்பமும் சோர்வும் உண்டாகின்றன. தகுதியற்ற ஆசையால் கொலை, களவு போன்றன நிகழ்கின்றன. எனவே பகவான் புத்தர், ‘ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்றார்.
இந்து மதத்தில் ஆசையைத் தூண்டு பவனாக மன்மதன் குறிக்கப்படுகிறான். மன்மதன் என்பதற்கு மனதில் ஆசை களை ஏற்படுத்தி வளர்ப்பவன் என்று பொருள். எனவே, மன்மதன் உலக வளர்ச்சிக்கு இன்றியமையாதவன். ஆதி யில் பரம்பொருளின் எண்ணப்படி தோற்றுவிக்கப்பட்டவர் காமேஸ்வரன். அவர், தன்னிலிருந்து ஒரு சக்தியை உருவாக் கியதே காமேஸ்வரி. இந்த இருவரின் ஒருமித்த சிந்தனையில் தோன்றியவன் மன்மதன்.
உலகத் தோற்றத்தைக் கூறும் ரிக் வேதப் பாடலில் காமன் பற்றிய குறிப்பு உள்ளது. முதலில் தோன்றிய தெய்வமாக அதர்வண வேதத்தில் காமன் போற்றப்படுகிறான். மன் மதன், அவனுடைய மனைவியான ரதிதேவி ஆகியோர் உலக சிருஷ்டியின் பொருட்டு உயிர்கள் அனைத்தையும் காம வசப்படுத்துகின்றனர்.
கரும்பு வில் ஏந்திக் காட்சி தருகிறான் மன்மதன். வண்டுக் கூட்டம் அதன் நாண். தென்றல், மன்மதனுக்குத் தேர். மீன் கொடி பறக்கும் அவனது தேரை, கிளிகள் இழுக்கின்றன. தாழை மலரின் மடல்களை வாளாயுதமாகக் கொண்ட மன்மதனுக்கு உரிய பருவம்: வசந்த காலம் (இளவேனில்). இதனால் இவனை வசந்தன் என்பதும் உண்டு.
தாமரை, அசோக புஷ்பம், மாம்பூ, மல்லிகை, நீலத் தாமரை எனும் ஐவகை மலர் அம்புகளை மன்மதன் உயிர்கள் மீது எய்து, காம நோயை ஏற்படுத்துகிறான். இதனால் மானிடர்கள் மட்டுமின்றி, தேவர்களும் காதல் வயப்படுகின்றனர்.
ஒரு முறை சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது, மன்மதன் அவர் மேல் மலரம்புகள் தொடுத்தான். தியானம் கலைந்த பெருமான் கடும் கோபம் கொண்டார். அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய அக்னி, மன்மதனை தகித்துச் சாம்பலாக்கியது. இதுவே ‘காம தகனம்’ எனப்படுகிறது. காமனை அழித்ததால், ‘காமகோபன்’, ‘காமனைக் காய்ந்த கண்ணுதற்கடவுள்’ என்று ஈசன் அழைக்கப்படுகிறார்.
தமிழ் மறைகளில் ஒன்றான திருமுறைகளில் காம தகனம் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. திரு ஞானசம்பந்தர் தமது கருப்பறியலூர் பதிகத்தில்,
விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன் 
பண்ணவரும் மென்மொழியாளை அணைவிப்பான் 
எண்ணி வரு காமன் 
என்று குறிப்பிடுகிறார்.
பொருள்: மலைமகளான பார்வதியின் தோள் சேரவே சிவபெருமான் மீது காமதேவன் மலர்க்கணைகள் தொடுத்தான்.
மோகம் கொள்ளும் அம்பை தன் மீது காமன் எய்ததால், அவனை நெற்றிக்கண்ணின் அக்னியால் பெருமான் எரித்து அழித்தார் என்பதை,
கண்ணிறைந்த விழியின் அழலால் வருகாமன் உயிர் வீட்டி என்றும் குறிப்பிடுகிறார்.
மன்மதன் சாம்பலானதால் துடித்தாள் ரதிதேவி. அவள், சிவபெருமானை வணங்கி தன் கணவனை உயிர்ப்பிக்க மன்றாடினாள். அதனால் மன்மதன் உயிர்ப்பிக்கப்பட்டான். எனினும், அவன் உருவம் அற்றவனாக இருந்தான். இதனால் அவனுக்கு ‘அநங்கன்’ (அங்கமற்றவன், உருவிலி என்று பொருள்) என்று பெயர் வந்தது. இப்போது மன்மத னால் இன்பம் துய்க்க முடியாததால், அவனுக்கு உருவம் அளிக்குமாறு சிவபெருமானிடம் ரதிதேவி வேண்டினாள்.
அதற்குச் செவிசாய்த்த ஈசன், கண்ணபிரானுக்கு மகனாகப் பிறக்கும் வரத்தை அவனுக்கு அருளினார். அப்படிப் பிறந்தவன்தான் பிரத்யும்னன். ரதிதேவி, மாயாவதி எனும் பெயரில் பிறந்து, மன்மதனான பிரத்யும்னனை மணந்தாள். தென்னாட் டுப் புராணங்கள் மன்மதனுக்கு ரதிதேவி மட்டுமே மனைவி என்று சொல்கின்றன. ஆனால், வடநாட்டுப் புராணங்கள் ‘ப்ரத்ரதி’ எனும் மற்றொரு மனைவியும் இருப்பதாகக் கூறுகின்றன.
அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான கொருக்கை, மன்மதனை இறைவன் அழித்த தலமாகும். இது மயிலாடு துறை- மணல்மேடு சாலையில் உள்ள ‘கொண்டல்’ எனும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இங்குள்ள சிவமூர்த்தம் காமதகன மூர்த்தி என்று அழைக்கப்பட்டாலும் ரதிதேவிக்கு அருள் செய்து, மன்மதனை எழுப்பி அவர்களுக்கு அருள் புரிந்த கோலத்தில் காட்சி தருகிறது.
இங்கு ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று காம தகனமும், ரதிதேவிக்கு அருள் புரியும் வைபவமும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தக் கோயிலுக்குத் தென்மேற்கில் விபூதிக் குட்டை என்ற இடம் உள்ளது. இங்குதான் மன்மதன் சாம்பலாக்கப்பட்டான் என்று கருதப்படுகிறது. இந்த இடத்தைத் தோண்டினால் விபூதி போன்ற மண் கிடைக்கிறது. பக்தர்கள் இதை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.
காமதகனபுரம், ரதிஅனுக்கிரகபுரம் என்று புராணங்களால் அழைக்கப்படும் இந்தத் திருத்தலத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களின் பெயர்களும் புராணத் தொடர்புடையனவாக உள்ளன. சிவபெருமான் மீது காமக்கணை எய்யுமாறு தேவர்கள் மன்மதனிடம் விண்ணப்பித்த இடம் தேவனூர். அதை ஏற்று அவன் கங்கணம் (உறுதி) செய்து கொண்ட இடம் கங்கணம்புதூர். வலக் காலை முன் ஊன்றி, இடக் காலை வளைத்து மன்மதன் சிவனாரைக் குறி பார்த்த இடம் கால்வளைமேடு. வில்லை வளைத்த இடம் வில்லியநல்லூர். பஞ்சபாணங்களை எய்த இடம் ஐவாணநல்லூர். இறைவன், காமனை வென்றபின் வெற்றிக் கூத்தாடிய இடம் கூத்தன் வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்றன.
இங்கு மூலவரான வீரட் டேசுவர மூர்த்தி சதுர வடிவ ஆவுடையாருடன் திகழ் கிறார்.
உற்று நோக்கினால் மன்மதன் எய்த ஐவகை மலர்கள், இவர் மேனியில் பதிந்திருக்கும் தழும்பைக் காணலாம். தாமரை மலரது தழும்பு மற்றவற்றைவிடத் தெளிவாகத் தெரிகிறது.
கருவறையின் வடக்குச் சுவரில் காமன் தேரேறி வருதல், மலர் பாணம் தொடுத்தல், இறைவன் யோகத்தில் இருத்தல், மன்மதனை விழியால் எரித்தல் ஆகிய காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.
ஊரின் மையத்தில் மாசி மாதத்தில் கரும்பை நட்டு வைத்து, தர்ப்பை மற்றும் மலர்மாலைகளால் அலங்கரிக்கின்றனர். இது மன்மதனாக பாவித்துப் பூஜிக்கப்படுகிறது. மாசி மகத்துக்கு முன், ரதிதேவி- மன்மதன் திருமணம் சிறப்பாக நடத்தப்படுகிறது. மாசி மகத்தன்று, காமதகன நாடகம் அல்லது வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
அடுத்து காமதகன ஐதீக வைபவமாக அங்கு நட்டு வைத்திருக்கும் கரும்பைத் தீயிலிட்டுக் கொளுத்துவர். பிறகு ஒரு நல்ல நாளில் மன்மதனை எழுப்பும் ஐதீகம் நடைபெறும். காமன் இல்லாவிட்டால், உயிர்ப் பெருக்கம் நடைபெறாது. எனவே, மன்மதன் உயிர்ப்பிக் கப்படுகிறான் என்பதுடன் விழா முடிவடையும்.
வட நாட்டில் இதையே ஹோலிப் பண்டிகையாக, வண்ணப்பொடியை ஒருவர் மீது ஒருவர் தூவி கோலாகலத்துடன் கொண் டாடி மகிழ்கிறார்கள்.

No comments:

Post a Comment