மதுரை மண்ணில் ஆவணி மூலத் திருவிழா என்றால், வெகுப் பிரசித்தம். தென்னாடுடையான், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலைக் கொண்டாடும் இந்த விழாவை, 'பிட்டுத் திருவிழா’ என்றே அழைக்கிறார்கள் பக்தர்கள்.
மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆண்ட காலம். ஒருநாள் வைகையில் வெள்ளப்பெருக்கெடுத்தது. ஆற்றின் கரையை உயர்த்தாவிட்டால் வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் இருந்தது. எனவே, வைகையின் கரைகளை உயர்த்தும் பணியை முடுக்கிவிட்டான் பாண்டியன். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் இந்தப் பணியில் பங்கேற்கவேண்டும் என்றும் முரசறைந்து அறிவிக்கச் செய்தான்.
மதுரையின் தென்கிழக்கு திக்கில், வந்தியம்மை என்ற மூதாட்டி வாழ்ந்துவந்தாள். கூன் விழுந்த அந்தப் பாட்டி, பிட்டு செய்து விற்று வாழ்க்கையைக் கடத்தினாள். மன்னனின் ஆணைப்படி அவள் வீட்டில் இருந்து செல்ல ஆளில்லை. தனக்கு உரிய பணியை செய்துமுடிக்க யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தாள்; எவரும் சம்மதிக்கவில்லை. இதனால் அரச தண்டனைக்கு ஆளாக நேருமே என்று பயந்தவள், மதுரை ஸ்ரீசொக்கநாதரை மனமுருகப் பிரார்த்தித்தாள்.
சிவனாரின் அருளாடல் ஆரம்பமானது. ஒரு கூலிக்காரன் போன்று உருவம் ஏற்று, 'கூலி கொடுத்து வேலை வாங்குவோர் யாரும் உண்டோ’ என்று கூவியபடி வீதிகளில் வலம் வந்தார். அவரின் கூவல் வந்தியம்மையின் செவியிலும் விழுந்தது.
கூலியாளை அழைத்து, தனக்கு உரிய பங்காக கரை உயர்த்தும் பணிக்குச் செல்லும்படி கேட்டுக்கொண்டாள். கூலியாக பிட்டு தருவதாக ஒப்பந்தம் ஆனது. அதன்படி, முன்னதாகவே கூலியைப் பெற்றுக்கொண்டு... அதாவது பாட்டியிடம் பிட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பணிக்குக் கிளம்பினார் கூலியாள்.
வைகைக் கரையை அடைந்தார். எல்லோரும் கரை உயர்த்தும் பணியில் தீவிரமாக இருந்தனர். இவரும் வந்தியம்மைக்கு பதிலாக தாம் வந்திருப்பதாக காவலர்களிடம் தெரிவித்துவிட்டு வேலையில் கலந்துகொண்டார். ஆனால் சற்று நேரத்தில் எல்லாம், சோர்வு அடைந்தவராக அருகிலிருந்த மரத்தடிக்குச் சென்று, உறங்க ஆரம்பித்தார். இந்த நிலையில் பணிகளை மேற்பார்வையிட வந்தான் மன்னன். இருபுறமும் கரை கனஜோராக உயர்ந்துகொண்டிருக்க, வந்தியம்மையின் பகுதியில் மட்டும் வேலை நடக்காததைக் கண்டு துணுக்குற்றான். காவலர்களை அழைத்து விசாரித்தான். வந்தியம்மையின் வேலையாள் மரத்தடியில் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டவன் மிகவும் கோபம் கொண்டான். அவரை எழுப்பும்படி வீரர்களுக்கு ஆணையிட்டான். வீரர்கள், அவரை எழுப்ப முயன்றனர். ஆனால், சிவனார் சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை. மன்னனின் கோபம் அதிகமானது. பிரம்பு ஒன்றை எடுத்து, அந்தக் கூலியாளின் முதுகில் அடித்தான்.
அவ்வளவுதான்... அந்தப் பிரம்படி, சிவனாரைத் தவிர எல்லோரது முதுகிலும் விழுந்தது. மன்னன் முதுகிலும் பிரம்படி! அதிர்ந்துபோனான் பாண்டியன். அப்போது எதுவுமே தெரியாதது போல் எழுந்தார் கூலியாளாக வந்த சிவனார். மன்னவன் எதுவும் புரியாது அவரைப் பார்க்க, அவரோ தன் கையால் மண் எடுத்துப் போய் வைகைக் கரையில் போட்டார். வெள்ளப் பெருக்கு நின்றது. மறுகணம் தமது சுயரூபத்துடன் காட்சி கொடுத்த இறைவன், ''நான் வந்தியம்மைக்கு உதவ வந்து பிட்டுக்கு மண் சுமந்தேன்' என்று கூறி மறைந்தார்.
இந்த உலகில் உள்ள அனைத்தும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்த சிவனார் நிகழ்த்திய இந்தத் திருவிளையாடலைச் சிறப்பிக்கும் திருவிழாவே மதுரை ஆவணி மூலத் திருவிழா!
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திர திருநாளில், மதுரை- பிட்டுத்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீபிட்டுசொக்கநாதர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெறுகிறது இந்த விழா. மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். இங்கே வந்தியம்மைக்கும் தனிச் சந்நிதி உண்டு. ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசங்கரநாராயணர், இரட்டை வாகன பைரவர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.
வருடம்தோறும் பிட்டுத்திருவிழா அன்று காலை சுமார் 6 மணிக்கு மதுரை ஸ்ரீசுந்தரேஸ்வரர், ஸ்ரீபிரியாவிடை நாயகி, ஸ்ரீமீனாட்சியம்மன் ஆகியோர் பிட்டுத் தோப்புக்கு எழுந்தருள்வார்கள். இந்த வைபவத்தைக் காண ஸ்ரீதெய் வானை சமேதராக திருப்பரங்குன்றம் முருகப்பெருமானும், திருவாதவூர் மாணிக்கவாசகரும் இங்கு வருவது விசேஷ அம்சம். மாலை 4 மணிக்கு, பிட்டுசொக்கநாதர் கோயிலில், பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நிகழும். அப்போது பாண்டிய மன்னன், சொக்கநாதர், வந்தியம்மை போன்று வேடமிட்டு வந்து அந்தத் திருவிளையாடலை நினைவூட்டுவார்கள் பக்தர்கள். இந்த ஒருநாள் மட்டும் மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில் நடைகள் சாத்தப்படும்.
இந்த அருள் வைபவத்தைத் தரிசித்து, ஸ்ரீபிட்டு சொக்க நாதரை வழிபட்டுச் சென்றால், நமக்கும் துணையாக வந்திருந்து துன்பங்களை களைந்து இன்னருள் புரிவார் அந்த ஈசன்!
No comments:
Post a Comment