Saturday, 19 August 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 4

சிவப் பேறு அருளும் சிவ வடிவங்களுள் சதாசிவ மூர்த்தமும் ஒன்று. சிவ ஆகமத்தை உபதேசிக்கும் பொருட்டு, பெருமான் ஐந்து முகங்களுடன் சதாசிவனாகக் காட்சியளிக்கிறார்.
கிழக்கு நோக்கிய திருமுகம்- தத்புருஷம். இது ஈஸ்வரனுக்கு உரியது. தெற்கு நோக்கியது- அகோர முகம்; ருத்ரனுக்கு உரியது. மேற்கு நோக்கியது- சத்யோ ஜாதம்; பிரம்மனுக்கு உரியது. வடக்கு நோக்கியது- வாமதேவ முகம்; விஷ்ணுவுக்கு உரியது. சதாசிவனின் உச்சியில் விளங்கும் முகம்- ஈசானம்.
இவற்றுள் தத்புருஷம், அகோரம், சத்யோ ஜாதம், வாம தேவம் ஆகிய ஒவ்வொன்றுக்கும் 5 ஆகமங்கள் வீதம், 20 ஆகமங்களும், உச்சியில் உள்ள ஈசான முகத்தால் 8 ஆகமங்களுமாக மொத்தம் 28 ஆகமங்களை சிவபெருமான் உபதேசித்தார் என்பர்.
‘சிவபெருமான், உயிர் வர்க்கங்களை ஈடேற்றும் பொருட்டு ஐந்து தொழில்களைப் புரிகிறார். ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் ஐந்து மந்திரங்களைக் கொண்டது சிவபிரானின் உடல்’ என்று மிருகேந்திர ஆகமம் கூறுகிறது.
இப்படி மந்திரங்களால் ஆன, சிவபெருமானின் அருவுருவ- ஞான மயமான திருவடிவம்- எல்லாவற்றிலும் மேலானதாகவும் உயரிய தத்துவங்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது. ‘சாதாரண மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வடிவம் கொண்ட இந்த மந்திர உடலில் ஐந்து வித சக்திகள் உள்ளன. அவற்றின் மூலமே படைத்தல் (சிருஷ்டி), காத்தல் (ஸ்திதி), அழித்தல் (சம்ஹாரம்), மறைத்தல் (திரோதானம்), அருளல் (அனுக்ரஹம்) ஆகிய ஐந்தொழில்களை புரிகிறார் சிவபெருமான்!’ என்று சைவ ஆகமங்கள் விளக்குகின்றன.
சதாசிவ மூர்த்தி- ஐந்து முகங்கள், பத்து திருக்கரங்கள், பதினைந்து கண்கள் கொண்டு தாமரைப் பீடத்தில் நிற்கும் திருமேனியர் என்று திருமூலர் போற்றுகிறார்.
கூடிய பாதம் இரண்டும் படிமிசை 
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும் 
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து 
நாடும் சதாசிவ நல்ஒளி முத்தே - திருமந்திரம்
அதாவது, ‘வலக் கரங்களில் முறையே சூலம், பரசு (கோடரி), கட்கம் (வாள்), வஜ்ரம் மற்றும் அபய முத்திரையு டனும் இடக் கரங்களில் முறையே நாகம் (பாம்பு), பாசம் (கயிறு), அங்குசம், கண்டம் (மணி) மற்றும் அக்னி (தீ) ஆகியவற்றுடனும் காட்சியளிக்கும் சதாசிவ மூர்த்தி, என் சிந்தையில் புகுந்து நிறைந்து நிற்கிறார்’ என்று திருமூலர் பாடுகிறார்.
சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுக்கும் அற்புதமான தத்துவத்தை நம் முன்னோர் காட்டியுள்ளனர். அனைத்துக்கும் மேலான பண்புடன் உலகுக்கெல்லாம் ஈசனாக இருந்து, தற்பரத்தை அருளுவதால், ஈசான மூர்த்தி எனப் பெயர் பெறுகிறார். தத்புருஷம் என்பது ஆன்மாக்களிடத்தில் இறைவன் மறை பொருளாயிருந்து அறிவை விளக்கி அருளுவதாகும். ஞான வடிவாயுள்ள இறைவன், அஞ்ஞானத்தைப் போக்கி மேலான சிவஞானத்தை அளிப்பதால், அவரை அகோர மூர்த்தி (கோரமற்றவர்; அழகானவர்) என்பர். அறம், பொருள், இன்பம்- ஆகிய மூன்று பேறுகளை ஆன்மாக்களின் பொருட்டு அருளுவதால், வாமதேவர் என்று பெயர். தெரியக் கூடிய (ஸ்தூலம்) மற்றும் மறைந்துள்ள (சூட்சுமம்) உடல்களைத் தம் நினைத்த மாத்திரத்தில் ஆன்மாக்களுக்கு படைப்பதால் சத்யோஜாதர் எனப்படுகிறார்.
இந்த சதாசிவ வடிவம்- ஒரு முகம், இரண்டு முகம், ஐந்து முகம், 25 முகங்கள் எனப் பல கோலங்கொண்ட வடிவங்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோயில்களில் பெரும்பாலும் சுதை வடிவில் (சுண்ணாம்பு, சிமெண்ட் கலவையில்) மட்டுமே சதாசிவ மூர்த்தி அமைந்துள்ளதைக் காணலாம்.
 மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மேலைக் கோபுரத்தின் முதல் நிலை- மேற்புறத்தில் வலப் பக்கம் சதாசிவ வடிவம் உள்ளது. மேலும், இங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கிழக்குப் பகுதியின் முதல் நிலையிலும், 2-ஆம் கோபுர வடப் பக்கம் கீழ் வரிசையிலும், சந்நிதி நுழை வாயிலில் உள்ள துவாரபாலகர்களுக்குப் பின்புறத்திலும் இந்த வடிவைக் காணலாம்.
 திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மேலைக் கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் சதாசிவரை தரிசிக்கலாம்.
 தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், 2-ஆம் கோபுரத்தில் சதாசிவ திருவடிவம் உள்ளது.
 எலிபெண்டா குகையில் ஐந்து முகங்கள், பத்து திருக்கரங்களுடன் நிற்கும் நிலையில் சதாசிவ மூர்த்தியின் வடிவம் காணப்படுகிறது.
 தஞ்சாவூர் ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயிலில் உள்ள அருங்காட்சியகத்தில்- பக்கத்துக்கு ஒன்றாக நான்கு திருமுகங்களுடன் உச்சியில் ஈசான முகம் சேர்த்து ஐந்து திருமுகங்கள் மற்றும் பத்து திருக்கரங்களுடன் வீராசன கோலத்தில் திகழும் சதாசிவ வடிவைக் காணலாம்.
 சென்னை அருங்காட் சியகத்தில் சதாசிவ மூர்த்தியின் செப்புத் திருமேனி உள்ளது.
 சதாசிவ மூர்த்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட ராஜராஜ சோழன், தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் விமானத்தின் பல நிலைகளிலும் சதாசிவ மூர்த்தி சிலைகளை அமைத்து மகிழ்ந்தான்.
மேலும், சதாசிவத் தத்துவத்தை விளக்கும் ‘பஞ்ச தேக மூர்த்தி’ என்ற பஞ்சலோகத் திருமேனியையும் இந்தக் கோயிலில் அமைத்து வழிபட்டான். இதன் வடிவமைப்பு, அளவு, எடை, ஆபரணங்கள் ஆகிய செய்திகளைக் கூறும் கல்வெட்டையும் இங்கு பொறித்து வைத்துள்ளான். ஆனால், தற்போது இந்த வடிவம் இங்கு இல்லை.
சதாசிவத்தின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து மகேசர் தோன்றுகிறார். இவரே படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகியவற்றை நேரடியாக இயற்றுகிறார். உருவத் திருமேனியுடன் காட்சியளிக்கும் இந்த மகேச மூர்த்தி அடியவர்களைக் காக்கவும், அரக்கர்களைத் தண்டிக்கவும், பல வடிவங்களில் வெளிப்பட்டு, பல அருளாடல்கள் புரிகிறார்.
நின்ற கோலம், அமர்ந்த கோலம், கூத்தாடல், வாகனங்களில் ஏறி வருதல், உக்கிரமாக (கோபமாக) இருத்தல், சாந்தமாக (அமைதியாக) இருத்தல் என்றவாறு இவரின் தோற்றப் பொலிவு பலவாறாக அமைகிறது.

No comments:

Post a Comment