Tuesday 22 August 2017

அரிதினும் அரிதான பஞ்சநதனக் கல்!



டவுள் திருவுருவங்களைச் செதுக்குவதற்கு, ஆலிங்கநதனம், பஞ்சநதனம், சிங்கநதனம், யானைநதனம், யாழி நதனம் என்று ஐந்து வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் `பஞ்ச நதனம்' என்ற பாறை தெய்விக வல்லமை மிக்கது என்பது சிற்பக்கலை வல்லுநர்களது கருத்து. 

* நவரத்தின மோதிரம் எப்படி தனது ஒளியால் நமது கவனத்தை ஈர்க்குமோ, அதைப்போன்று பஞ்சநதனக் கல்லும் சக்தி வாய்ந்த கதிர்களைப் பரவச்செய்து நமக்குள் ஆற்றலை நிரப்புகிறது. இத்தகைய பஞ்சநதனக் கல்லாலான ஊட்டத்தூர் நடராஜர் சிலை, ஆசிய கண்டத்தின் ஆன்மிக அதிசயம். 

* பஞ்சநதனக் கல் என்பது, பார்ப்பதற்கு வழக்கமான கருங்கல்லைப் போன்ற தோற்றம் கொண்டதுதான். எனினும் சில தருணங்களில் கருநீலமாகவும், கரும்பச்சை வண்ணத்திலும்கூட காட்சியளிக்கும். `பல கோடி சூரியன்களின் சக்தியை உள்ளடக்கியது இந்தக் கல்' என்பது சித்தர்கள் வாக்கு. 
  
அது எப்படி என்று கேட்கத் தோன்றும். கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணிய அணுவுக்குள், எவ்வளவு மகத்தான அணுசக்தி புதைந்திருக்கிறது! அண்டத்தையே அழிக்க வல்ல ஆற்றல், ஓர் அணுவுக்குள் இருக்கிறது என்பதையே நாம் அரை நூற்றாண்டுக்கு முன்புதானே அறிந்தோம்? அதே போலத்தான், பஞ்சநதனப் பாறையின் சக்தியும்! 

* இந்த வகைப் பாறைகள் அரிதினும் அரிதானவை. பத்து லட்சம் கோடி பாறைகள் உருவாகும்போது, அவற்றுள் ஒன்றே ஒன்றுதான் பஞ்சநதனப் பாறையாக மாறும் வாய்ப்பு உண்டு  என்றும் சித்தர்கள் விளக்கியுள்ளார்கள்.

* சூரியனிலிருந்து பூமிக்கு வரும் கிரணங்களில் பலவகை உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒருவித ஆற்றலுடன் திகழும்.  பூமியில் வாழும் உயிர்கள் அந்தக் கதிர்களை கிரகித்து, தமக்குத் தேவையான சக்தியை அதிலிருந்து பெற்று உயிர் வாழ்கின்றன. அவ்வகையில், சூரியனிலிருந்து வெளிப்படும் `சிற்சபேச' கதிர்களை தனக்குள் ஈர்க்கிறது பஞ்சநதனப் பாறை. பக்தியில் மூழ்கித் திளைத்து பரமாத்மாவைத் தரிசிப்பவருக்கு, இதை உணர முடியும். 

* பஞ்சநதனப் பாறைகளால் பஞ்ச ஸ்வரங்களையும் உருவாக்க முடியும். இந்தப் பாறையைத் தட்டினால், இசையின் அடிநாதமான சப்த ஸ்வரங்களில் ஐந்து ஸ்வரங்களை கேட்க முடியும். 

* பஞ்சநதனப் பாறையின் இன்னோர் அபூர்வமான சிறப்பு, மனிதக் கரங்களால் இதைச் செதுக்கி சிலைகள் செய்ய முடியாது. சித்தர்களின் ஆன்மிகச் சக்தியால், பஞ்சநதனப் பாறைகளில் இறைவனின் உருவங்கள் தானாகவே உருவாகும் என்று சொல்லப்படுகிறது. 

அவ்வகையில் ஊட்டத்தூரில் அருள்பாலிக்கும் ஆடல் வல்லானின் விக்கிரகம், உளி இல்லாமல் செதுக்கப்பட்டது என்கிறார்கள். இதைப்போல பல கோயில்களில் அருள்பாலிக்கும் நந்தி உருவங்கள், தெய்விக சக்தியால் உருவாக்கப் பட்டிருக்கின்றன என்றாலும், பஞ்சநதனக் கல்லில் உருவான மூர்த்தி ஊட்டத்தூர் நடராஜர் மட்டுமே எனலாம்.

* `நவ லிங்க பூஜை' எனப்படும் ஒன்பதுவிதமான பூஜைகளை நிறைவுசெய்த பின்னரே, பாறையில் பஞ்சநதன நடராஜர் உருவம் தோன்றும் என்றும், அதன் பிறகுதான் மானிடர்கள் தரிசனம் செய்ய முடியும் என்றும் கூறுவர். ஆகவேதான், பஞ்சநதனப் பாறையும் அதில் உருவான நடராஜ மூர்த்தியின் தரிசனமும் சாந்நித்தியம் மிகுந்ததாகச் சொல்லப்படுகிறது.

இவ்வளவு மகத்துவங்கள் மிகுந்த ஊட்டத்தூர் ஆடல்வல்லானை, வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து, நமது பிரார்த்தனைகளையும் கோரிக்கை களையும் அவரின் திருவடியில் சமர்ப்பித்தால், அவை அத்தனையும் நிச்சயம் நிறைவேறும்.

No comments:

Post a Comment