Tuesday 22 August 2017

செவ்வரளிச் செடியில் தோன்றிய சிதம்பரேஸ்வரர்


விருதுநகர் மாவட்டம், சாத்தூரின் தென்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீசிதம்பரேஸ்வரர்-ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் திருக்கோயில். பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில், இந்தப் பகுதியை ஆட்சி செய்துவந்த குறுநில மன்னர் ஒருவர் இறைபக்தி மிகுந்தவராகத் திகழ்ந்தார். அனுதினமும் அவரது வழிபாட்டுக்கு, அரண்மனைக்கு அருகில் உள்ள நந்தவனத்தில் இருந்து மலர்கள் கொண்டுவரப்படும்.
இந்த நிலையில் வான் பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது அந்தப் பகுதியில். நந்தவனத்திலும் ஒரேயொரு செவ்வரளிச் செடியைத் தவிர, மற்றச் செடிகள் யாவும் வெயிலின் உக்கிரத்தால் கருகிவிட்டன. எனவே, அந்த அரளிச்செடியின் பூக்கள் மட்டுமே அரண்மனை பூஜைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஒருநாள், பூஜை முடிந்ததும் அர்ச்சனை செய்த பூக்களில் ஒன்றை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு இறைவனை மனதார வணங்கினார் மன்னர். அப்போது, அந்தப் பூவில் மறைந்திருந்த எறும்பு ஒன்று மன்னரின் இமையைக் கடித்துவிட்டது.

வலியால் துடிதுடித்த மன்னர், அந்த எறும்புக்கு அடைக்கலம் கொடுத்த செவ்வரளிச் செடியை வெட்டியெறியும்படி உத்தரவு பிறப்பித்தார். பணியாளர்களும் மன்னரின் ஆணையை நிறைவேற்ற முனைந்தனர். ஆனால், அவர்கள் செவ்வரளிச் செடியை வெட்டியதும் அதிலிருந்து ரத்தம் பீறிட்டது.
இதைக்கண்டு அதிர்ந்துபோன பணியாளர்கள் மன்னரிடம் தகவல் சொல்ல, அவர் பதறினார். ‘இது இறை செயலே’ என்று உணர்ந்தவர், ‘பூஜைக்குப் பூ தரும் செடியை வெட்டச் சொன்னது தவறுதான்’ என்று இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு வேண்டினார். அப்போது, தில்லையம்பல நடராஜராகத் தோன்றிய சிவனார், அந்த இடத்தில் தனக்கோர் ஆலயம் அமைக்கும்படி அருளினார். மன்னவனும் அங்கே ஆலயம் எழுப்பினார். தில்லையம்பல நடராஜராகத் தோன்றியதால், மூலவருக்கு அருள்மிகு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் என்றும், செவ்வரளிச் செடியின் மூலம் தன்னை வெளிப் படுத்தியதால், சுயம்புமூர்த்தி என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன என்கிறார்கள், ஊர்ப் பெரியவர்கள்.

சுமார் 900 ஆண்டுகள் பழைமையான இவ்வாலயத்தை நிர்மாணித்த குறுநில மன்னரின் பெயர் தெரியவில்லை. எனினும், பிற்காலத்தில், இவ்வாலயத்துக்கு, பாண்டிய மன்னர்கள் பலரும் திருப்பணி செய்திருக் கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. அதற்கு அத்தாட்சியாக ஆலயத் தூண்களில் மீன் சின்னங்களைக் காண முடிகிறது.
தற்போது, இந்து அறநிலைய ஆட்சித்துறையின் மேற்பார்வையில் இருக்கும் இந்த ஆலயத்தில், கிழக்கு நோக்கி அருள்கிறாள், அன்னை ஸ்ரீசிவகாமசுந்தரி. ஸ்தல விருட்சம் வில்வ மரம். இந்த ஆலயத்தில் சேக்கிழார், அறுபத்து மூவர், நால்வர் பெருமக்கள் ஆகியோரையும், சரஸ்வதி, துர்கை, மகாலட்சுமி ஆகிய முப்பெருந்தேவியரையும் தரிசிக்கலாம். மேலும், கோயிலின் கன்னி மூலையில் பிள்ளையாரும், அருகிலேயே சுவாமி ஐயப்பனும், வாயு மூலையில் தேவியருடன் சுப்ரமணியரும், ஈசான்ய மூலையில் பைரவரும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். 

பிராகார வலம் வரும்போது, தட்சிணாமூர்த்தி மற்றும் சனீஸ்வரரை தனிச்சந்நிதிகளில் தரிசிக்கலாம். சிவனார் சந்நிதிக்கு எதிரில் வலப்புறம் சூரியனும், இடப்புறம் சந்திரனும் அமைந்துள்ளனர். இக்கோயிலின் சண்டிகேஸ்வரர், மேடைமீது தெற்கு நோக்கியபடி அமர்ந்திருப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள். 

கோயில் கொடிமரத்தின் அடிப்பாகம் தாமரை வடிவில் அமைந்திருப்பதும், தூண்களில் வாழைப்பூ மற்றும் சிம்ம முக வடிவங்கள் அமைந்திருப்பதும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
நவராத்திரி, பெரிய கார்த்திகை, வைகாசி விசாகம்,  மாசி மாதம் மகா சிவராத்திரி ஆகிய வைபவங்கள் இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் கலந்துகொண்டு இறையனாரைத் வழிபட்டுவந்தால், நம் சிந்தை மகிழ வரம் தருவார் சிதம்பரேஸ்வரர்.

மேலும், நாள்தோறும் இரவு 8 மணிக்கு இந்தக் கோயிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசித்து வழிபடுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள். இந்த வைபவத்தைத் தரிசித்து வழிபட்டு வந்தால், குழந்தை வரம், கல்யாணப்பேறு, குடும்ப ஒற்றுமை, மனச்சாந்தி ஆகியவை கிடைக்கும் என்பது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கை. 


உங்கள் கவனத்துக்கு...

ஸ்வாமி: 
ஸ்ரீசிதம்பரேஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமசுந்தரி

தலவிருட்சம்: வில்வ மரம்

பிரார்த்தனைச் சிறப்பு: இந்தக் கோயிலின் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், கல்யாண வரமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 முதல் 11 மணி வரை; மாலை 5 முதல் 8 மணி வரை. விசேஷ தினங்களில் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?: 
விருதுநகர் மற்றும் கோவில்பட்டி ஆகிய நகரங்களில் இருந்து சாத்தூருக்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன. சாத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் கோயிலுக்குச் செல்லலாம்.

No comments:

Post a Comment