Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.13

251. சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால் அசத்து அஞ்ஞானம்
ஒத்துறா; குற்றம் எல்லாம் உற்றிடும் உயிரின் கண்ணே
சத்து உளபோதே வேறாம் சதசத்தும் அசத்தும் எல்லாம்
வைத்திடும் அநாதியாக; வாரிநீர் லவணம் போலும்

தூய்மையான உண்மை ஞானமே தனது திருமேனியாக உடைய ஒளிப்பிழம்பாகிய சிவபெருமானை அசத்தாகிய பாசம் பற்றாது. உயிர் களிடத்தேயே ஆணவம் முதலிய குற்றங்கள் அனைத்தும் உற்றிடும். சத்து, சதசத்து, அசத்து என்ற முப்பொருள்களும் எப்பொழுதும் உள்ளனவேயாம். கடல் என்னும் இடமும் கடல் நீரும் ஆகிய இரண்டனுள் உப்பு கடலின் இடத்தைப் பற்றாமல் நீரைப் பற்றிக் கொள்வதைப் போலப் பாசமும் இறைவனைப் பற்றாமல் உயிர்களையே பற்றும்.

இறைவன் அறிவே வடிவானவன். எனவே அவனிடத்துத் தளைகளாகிய குற்றங்கள் சாரமாட்டா. உயிரோ அறிவுடையது. ஆயினும் அதன் அறிவு சிற்றிவாகும். எனவே பாசமாகிய குற்றங்கள் உயிரைப் பற்றுமேயன்றி இறைவனைப் பற்றா. கடலில் நிறைந்திருக்கும் நீரில் மட்டுமே உப்பின் உவர்த்தன்மை ஏறும். கடலாகிய வெளியிடத்து உப்பின் உவர்தன்மை படியாது. இறைவன் கடல்போன்றவன். உயிர்கள் கடல் நீர் போன்றவை. உயிர்களைப் பற்றுகின்ற பாசங்கள் உப்புப் போன்றவை. இறைவனை அதிசூக்கும சித்து என்றும் உயிரைத் தூல சித்து என்றும் குறிப்பிடுவர்.

முதல் நூலாகிய சிவஞான போதத்தில் ஏழாம் நூற்பாவில் மூன்றாவது அதிகரணத்தில் மூன்றாவது எடுத்துக்காட்டு வெண்பாவாக அமைந்துள்ள மெய்ஞ்ஞானம் தன்னில் என்று தொடங்கும் பாடலை இங்கு நினைவு கூர்க.

252. அறிவிக்க அறிதலானும் அழிவின்றி நிற்றலானும்
குறிபெற்ற சித்தும் சத்தும் கூறுவது உயிருக்கு ஈசன்
நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்பன் அன்றே
பிறவிப்பன் மலங்கள் எல்லாம் பின் உயிர்க்கு அருளினாலே

உயிர் அறிவித்தால் அறியும் இயல்பு உடையது. தானாக அறியும் இயல்பு அற்றது. அறிவிக்க அறிந்த பின் மீண்டும் பிறப்பு இன்றி நிற்கின்ற இயல்புடையது. ஆதலாலே உயிர் அழிவற்ற பொருளுமாகும் எனவே உயிர் தூல சித்து என்றும் தூல சத்து என்றும் கூறப்படும். இறைவனோ தானாகவே யாவற்றையும் எப்போதும் அறிகின்ற அறிவினை உடையவன். அவனே தன் பேரருளால் உயிர்களைப் பற்றிக் கொண்டே மலங்களை நீக்கி உயிரின் அறிவையும் விளக்குபவன் எனவே சிவபிரானை நித்தமுத்த அதி சூக்கும சித்தாகவும் சத்தாகவும் விளங்குபவன் என்று அறிக.

என்றும் கட்டுக்கு உட்படாத சிவபெருமானை நித்த முத்த சுத்த என்றும், அறிவே வடிவாம் நிற்றலால் சித்து என்றும் ஆசிரியர் கூறினார்.

எட்டாம் நூற்பா

253. மன்னவன் தன் மகன்வேட ரிடத்தே தங்கி
வளர்ந்து அவனை அறியாது மயங்கி நிற்ப
பின் அவனும் என் மகன் நீ என்று அவரின் பிரித்துப்
பெருமையொடும் தான் ஆக்கிப் பேணு மாபோல்
துன்னியஜம் புலவேடர் சுழலில் பட்டுத்
துணைவனையும் அறியாது துயர் உறும் தொல் உயிரை
மன்னும் அருள் குரு ஆகி வந்து அவரின் நீக்கி
மலம் அகற்றி தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்.

அரசிளங்குமரன் ஒருவன் அறிவறியாப் பருவத்தில் வேடர்கள் கூட்டத்தில் அகப்பட்டான். தான் அரச குமாரன் என்பதை அறியாது வேடர்களுள் ஒருவனாய் வளர்ந்து வந்தான். அந்நிலையில் அவன் தான் யார் என்பதையும் தன் தந்தை யார் என்பதையும் அறியாது மயங்கி வாழ்ந்தான். உரிய பருவம் வந்த பின்னர் அரசன் நீ என் மகன் என்று அறிவுறுத்தி வேடர்களை விட்டுப் பிரித்து ஓர் இளவரசனுக்குரிய பெருமைகளை எல்லாம் அவனுக்கு வழங்கி அவனைத் தன்னைப் போலவே பேணினான். அது போலவே தன் நிலையிலிருந்து பிறழ்ந்து ஐம்பொறிகள் என்னும் வேடர்களின் சுழலில் பட்டுத் தன்னையும் அறியாது தன் தலைவனையும் அறியாது நெடுங் காலமாகத் துயரத்தில் அழுந்தி வருந்தும் உயிரை அதனுடைய பக்குவத்தை அறிந்து இறைவனே குரு வடிவமும் கொண்டு எழுந்தருளி வந்து அவ் வேடரின் கூட்டத்திலிருந்தும் நீக்கி மலமாகிய மாசினை அகற்றி உயிரையும் தன் வண்ணமாக்கித் தன்னுடைய மலர்போன்ற திருவடியின் கீழ் வைத்துப் பெருவாழ்வினை அளிப்பான்.

முதல் அதிகரணம்

254. உரைதரும் இப்பசுவர்க்கம் உணரின் மூன்று ஆம்
உயரும் விஞ்ஞா னகலர், பிரளயாகலர் சகலர்
நிரையின்மலம் மலம்கன்மம் மலம் கன்மம் மாயை
நிற்கும் முதல் இருவர்க்கும் நிராதாரம் ஆகி
கரையில் அருட்பரன் துவிதா சத்திநிபா தத்தால்
கழிப்பன், மலம்; சகலர்க்குக் கன்ம ஒப்பில்
தரையில்ஆ சான்மூர்த்தி ஆதாரமாகித்
தரித்து ஒழிப்பன் மலம் சதுர்த்தா சத்தி நிபாதத்தால்

எண்ணற்ற உயிர்கள் மூன்று வகையாவன என்று கூறப்படும். விஞ்ஞான கலர். பிரளயா கலர், சகலர் என்பன அவை. விஞ்ஞான கலர் என்போர் ஆணவ மலர் மட்டிலுமே உடையவர்கள். பிரளயா கலர் என்போர் ஆணவம் கன்மம் ஆகிய இருமலம் உடையவர். சகலர் என்போர் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களும் உடையவர்கள். விஞ்ஞான கலர் பிரளயா கலர் ஆகிய இருவர்க்கும் இறைவன் தீவிரம், தீவிரதரம் எனும் இருவகை சத்திநி பாதத்தால் நிராதாரமாய் நின்று அருள் பாலிப்பான். மும்மலமுடைய சகலர்க்கும் இருவினை ஒப்பு எய்திய போது மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் ஆகிய நான்கு வகை சத்திநிபாதத்தால் குருவடிவை ஆதாரமாகக் கொண்டு எழுந்தருளி மலத்தை ஒழித்து அருள் பாலிப்பான்.

விஞ்ஞான கலர் ஆகிய ஒருமலம் உடையார்க்கு இறைவன் உள்நின்று உணர்த்துவான். இது தன்மையில் நின்று உணர்த்துவதாகும். பிரளயாகலர் ஆகிய இருமலம் உடையார்க்கு இறைவன் மானும், மழுவும், நான்கு தோளும், திருநீலகண்டமும், முக்கண்ணும் ஆகிய உறப்புக்களோடு முன் நின்று உணர்த்துவான். இது முன்னிலையில் நின்று உணர்த்துவதாகும. சகலராகிய மும்மலம் உடையார்க்கு மானுடச் சட்டை தாங்கிக் குருவடிவில் எழுந்தருளி வந்து உணர்த்துவான். இது படர்க்கையில் நின்று உணர்த்துவதாகும்.

முதல் இரு வகையினருக்கும் உணர்த்துவது நிராதாரம் எனப்படும். ஆதாரமற்றது என்று பொருள். அவ்வாறு உணர்த்தப்படும் உயிர்கள் இரு வகையான சத்திநிபாதம் உடையன எனப்படும். தீவிரம் தீவிரதரம் என்பன அவற்றின் பெயராகும். மூன்றவாது வகையான உயிர்களுக்கு ஓர் வடிவத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு இறைவன் உணர்த்துவான். அதனை ஆதாரம் என்று வழங்குவர். இவர்களுக்கு நிகழும் சத்திநிபாதம் நான்கு வகைப்படும். அவை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன. இவற்றுள் ஏதேனும் ஒன்றால் இவர்களுக்கு இறைவன் அருள்பாலிப்பான்.

நிராதாரம்-பற்றுக்கோடு இல்லாதது. துவிதா இரண்டு, கன்ம ஒப்பு-இருவினை ஒப்பு-நல்வினை தீவினை ஆகிய இரண்டிலும் ஒப்ப உவர்ப்பு உண்டாகிய நிலை. ஆதாரம்-பற்றுக்கோடு உடையது. சதுர்த்தா-நான்கு வகை.

255. பலவிதம்ஆ சான்பாச மோசனந்தான் பண்ணும்
படிநயனத்து அருள்பரிசம் வாசகம் மானதமும்
அலகுஇல்சாத் திரம்யோகம் அவுத்தி ராதி
அநேகம்உள அவற்றின் அவுத்திரி இரண்டு திறனாம்
இலகுஞா னம்கிரியை என; ஞானம் மனத்தால்
இயற்றுவது கிரியை; எழில் குண்டமண் டலம் ஆதி
நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதி; தான் இன்னும்
நிர்ப்பீசம் சபீசம்என இரண்டாகி நிகழும்

இறைவன் குரு வடிவாக எழுந்தருளி வந்து உயிரின் மலத்தை நீக்குகின்ற முறைகள் பலவாகும். அவற்றைத் தீக்கை என்பர். திருக் கண்ணால் நோக்கியும். திருக் கரத்தாலோ திருவடியாலோ தொட்டும், மொழியால் உணர்த்தியும், மனத்தினால் எண்ணியும், ஞான நூல்களைப் பயிற்றுவித்தும், யோக நிலையில் நிறுத்தியும், அழல் ஓம்பியும் இவ்வாறு பலவகையாகக் குருவடிவில் எழுந்தருளி வந்த இறைவன் தீக்கை செய்து அருளுவான். இவற்றுள் ஒளத்திரி என்று சொல்லப்பட்டது இரண்டு வகைப்படும். அவை ஞானவதி, கிரியாவதி என்பன. ஞான வதி என்பது மனத்தினாலேயே கற்பித்துக் கொண்டு அகத்தே ஆகுதி முதலியன செய்வதாகும். கிரியாவதி என்பது அகத்தேயன்றிப் புறத்தே ஓமகுண்டம், மண்டலம் முதலியவற்றை அமைத்துச் செய்வதாகும். இவையும் நீர்பீச தீக்கை எனவும், சபீசதீக்கை எனவும் இரண்டாகும்.

திரு நோக்கால் செய்யப்படும் தீக்கையை நயனதீக்கை என்றும் சட்சுதீக்கை என்றும் வழங்குவர். குரு வடிவாய் வந்த இறைவன் தனது திருக்கரத்தாலோ திருவடியாலோ மாணவரைத் தொட்டு வழங்கும் தீக்கையைப் பரிசதீக்கை என்பர். மாணவருக்குத் திருமொழியால் வழங்கப்படும் தீக்கை வாசக தீக்கை எனப்படும்.

ஒளத்திரி தீக்கை எனப்படுவது அழல் ஓம்பிச் செய்யப்படும் தீக்கையாகும். ஹூதம்-ஓமம். ஹூதத்தோடு கூடியது ஹெளத்திரி. ஒளத்திரி தீக்கையில் ஞானவதி என்பது மனத்தளவில் கற்பித்துச் செயயப்படுவது. கிரியாவதி என்பது புறத்தே ஓமகுண்டம் முதலியன அமைத்து இயற்றப்படுவது இவையும் இன்னும் இரு வகைப்படும் என்றும் கூறினார். அவற்றுள் நிர்ப்பீசம் என்பது பீசாக்கரம் இல்லாமல் மந்திரத்தை ஓதுவித்தல், சபீசம் என்பது மந்திரத்தோடு பீசாக்கரத்தையும் சேர்த்து ஓதுவிப்பது.

பீசம்-வித்து, நீர்ப்பீசம்-வித்து இல்லாதது சபீசம்-வித்து உள்ளது.

256. பாலரொடு வாலீசர், விருத்தர், பணி மொழியார்
பலபோகத் தவர் வியாதிப் பட்டவர்க்குப் பண்ணும்
சீலமது நீர்ப்பீசம் சமயா சாரம்
திகழ்சுத்தி, சமயிபுத்திரர்க்கு நித்தத்து
ஏலும்அதி காரத்தை இயற்றி, தானும்
எழில்நிரதி காரை என நின்று இரண்டாய் விளங்கும்
சாலநிகழ் தேகபா தத்தினோடு
சத்தியநிர் வாணம்என, சாற்றுங் காலே

சிறு வயது உடையவர்கள், இளைஞர்கள் மிகுந்த முதுமையடைந்தவர்கள், பெண்கள், பல நுகர்வுகளை விரும்புகிறவர்கள். நோயால் துன்புறுபவர்கள் ஆகிய இவர்களுக்கு நிர்பீசத் தீக்கையே வழங்கப்படும். ஏனெனில் வழுவின்றிச் செய்யக்கடவனவான சமய ஒழுக்கங்களை நிறைவேற்றும் ஆற்றல் அற்றவர்கள் இத்தகையோர். இத்தகைய தீக்கை பெற்றவர்கள் தாம் நாள் தோறும் செய்கின்ற வழிபாட்டினை மட்டும் செய்வதற்கு உரிமை உடையவர். இவர்களுக்கு நைமித்திகம். காமியம் என்னும் இரண்டனையும் செய்வதற்கு அதிகாரம் இல்லாமை யால் இத்தீக்கை நிராதிகார தீக்கை எனப்படும். தீக்கை வகைகள் சமயம், விசேடம், நிர்வாணம் என மூன்றாகும். நிருவாண தீக்கையும் சத்தியோ நிருவாணம், அசத்தியோ நிருவாணம் என்று இரு வகைப்படும்.

இறை வழிபாட்டில் மூன்று வகைக் கடமைகள் கூறப்படும். அவை நித்தியம், நைமித்திகம், காமியம் என்று பெயர் பெறும். நிராதிகார தீக்கை பெற்றவர்கள் நாட்படி இயற்றும் கடனைச் செய்வதற்கு உரியவர்கள். நைமித்திகம் என்பது நிமித்தத்தின் பொருட்டுச் செய்யப்படுவது என்று பொருள் தரும். சிறப்பான நாட்களிலும் விழாக்காலம் முதலியவற்றிலும் செய்யப் பெறுகின்ற கிரியைகள் நைமித்திகம் எனப்படும். காமியம் என்பது செல்வப்பேறு மக்கட் பேறு முதலிய பயன்களைக் கருதிச் செய்யப்படும் கிரியைகளாகும்.

நிருவான தீக்கை என்பது மலப் பிணிப்பிலிருந்து முற்றிலும் விடுபடுவதற்காக ஆசிரியரால் வழங்கப்படும் தீக்கை. அது சத்தியோ நிருவாணம். அசத்தியோ நிருவாணம் என்று இருவகையாகும். சத்தியோ நிருவாண தீக்கை பெற்றவர்கள் அதனைப் பெற்ற அளவிலே வீடு பேறு அடைவார்கள் என்பர். அசத்தியோ நிருவாண தீக்கை பெற்றவர்கள் மலப் பிணிப்பிலிருந்து நீங்கினாலும் இவ்வுடலோடு வாழ்கின்ற காலம் வரை சமய ஒழுக்கங்களைப் பேணி உரியகாலம் சென்றதும் வீடு பேற்றினை அடைவார்கள்.

சமயி-சமயதீக்கை பெற்றவன். புத்திரன்-சமயம் விசேடம் ஆகிய தீக்கைகளைப் பெற்றவன். தேக பாதம்-உடலின் இறுதி.

257. ஓதிஉணர்ந்து ஒழுக்கநெறி இழுக்கா நல்ல
உத்தமர்க்குச் செய்வதுஉயர் பீசம்; இவர் தம்மை
நீதியினால் நித்திய, நை மித்திக காமியத்தின்
நிறுத்தி நிரம்பு அதிகாரம் நிகழ்த்துவதும் செய்து,
சாதகா சாரியரும் ஆக்கி வீடு
தருவிக்கும்; உலோகசிவ தருமிணி என்று இரண்டாம்;
ஆதலினால் அதிகாரை யாம்; சமய, விசேட,
நிருவாணம், அபிடேகம் இவற்று அடங்கும் அன்றே.

சிவாகமங்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், ஆகமங்கள் விதித்த ஒழுக்க நெறியிலிருந்து பிறழாது வாழும் உயர்ந்தோர்க்கு வழங்கப்படுவது சபீசதீக்கை எனப்படும். இதனைப் பெற்றவர்கள் நித்தியம், நைமித்திகம், காமியம் ஆகிய மூன்று வகைக் கடமையும் ஆற்றுவதற்கு உரிமை உடையவராவர். இத்தீக்கை பெற்றவர்கள் சாதகரும் ஆசாரியரும் என்று இரண்டு வகைப்படுவர். இதுவும் உலோக தருமிணி என்றும், சிவதருமிணி என்றும் இரண்டு வகைப்படும். சமயம் விசேடம். நிருவாணம், அபிடேகம் ஆகிய நான்கு வகைப்பட்ட தீக்கைகளும் நிர்பீசம், சபீசம் என்ற இரண்டு வகையுள் அடங்கும்.

சாதகர் என்பவர் சமய ஒழுக்கத்தினால் வீடு பேற்றை அடைவதற்கு உரியவர்கள் ஆவர். ஆசாரியர் என்பவர் தாமும் வீடுபேறு அடைந்து தம் மாணவரையும் வீடு பேறு அடைவிக்கும் உரிமை உடையவர்.

உலோக தருமிணி என்பது உலகியல் வாழ்வில் ஈடுபட்ட நல்லோருக்குத் தலையை மழித்தல் இன்றிச் செய்யப் பெறுவது ஆகும். இதற்கு பவுதீக தீக்கை என்று பெயர். சிவதருமிணி என்பது துறவற நெறி நின்று வீடுபேறு அடைவதற்குத் தலையை மழித்துச் செய்யப்படும். இது நைட்டிக தீக்கை என்றும் பெயர் பெறும்.

258. அழிவிலாக் கிரியையினால் ஆதல் சத்தி மத்தான்
ஆதல், அத்து வாசுத்தி பண்ணி, மலம் அகற்றி,
ஒழிவிலாச் சிவம்பிரகா சித்தற்கு ஞானம்
உதிப்பித்து உற் பவம்துடைப்பன், அரன், ஒரு மூவர்க்கும்;
வழுவிலா வழி ஆறாம், மந்திரங்கள், பதங்கள்
வன்னங்கள், புவனங்கள், தத்துவங்கள், கலைகள்,
கழிவிலாது உரைத்தமுறை ஒன்றின் ஒன்று வியாத்தி;
கருதுகலை சத்தியின்கண்; சத்திசிவன் கண்ணாம்.

சிவபெருமான் குருவடிவாக எழுந்தருளி வந்து மேலே கூறப்பட்ட கிரியாவதி முறைமையிலாவது அல்லது ஞானவதியிலாவது ஆறுவகை வழிகளையும் தூய்மை செய்து உயிர்களைப் பற்றி இருந்த மலப்பிணிப்பை நீக்கி அருளுவான். அத்தகைய உயிர்களிடத்திலே எங்கும் நிறைந்திருக்கும் சிவப் பொருள் ஒளி மயமாக விளங்கும்படி உதிக்கச் செய்வான். அதனால் அவ்வுயிர்களின் பிறவித் துன்பத்தினைத் துடைப்பான். இவ்வாறு செய்வது மேலே கூறப்பட்ட இரண்டு கிரியாவதி தீக்கைகளுக்கும் ஞானவதி தீக்கைக்கும் பொருந்தும். அத்துவாக்கள் என்று கூறப்பட்ட வழிகள் ஆறு ஆகும். அவை மந்திரம். பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை ஆகியனவாகும். இவை ஆறும் முறையே ஒன்றில் ஒன்று அடங்கும். கலை எனப்பட்ட இறுதியாகச் சொல்லப்பட்ட வழி சிவசத்தியில் அடங்கும். சத்தி சிவத்தில் அடங்கும்.

சத்திமத்-ஞானவதி. அத்துவாக்கள்-வழிகள்; வியாத்தி-ஒன்றில் நிறைந்து இருப்பது. ஒரு மூவர் என்பதற்கு உத்தமத்தில் உத்தமர். உத்தமத்தில் மத்திமர், உத்தமத்தில் அதமர் என்று சிவஞான முனிவர் உரை எழுதினார். அதே பகுதிக்கு கிரியா தீட்சாதிகாரிக்கும் ஞான தீட்சாதிகாரிக்கும் சாம்பவ தீட்சாதிகாரிக்கும் ஆகிய மூவரும் என்று சிவாக்கிர யோகிகள் உரை வரைந்தார்.

259. மந்திரங்கள் முதல் ஐந்தும் கலைஐந்தின் வியாத்தி
மருவுமந் திரம் இரண்டு பதங்கள் நால் ஏழ்
அந்தநிலை எழுத்து ஒன்று; புவனம் நூற்றெட்டு
அவனிதத் துவம் ஒன்று; நிவர்த்தி அயன் தெய்வம்,
வந்திடும்மந் திரம்இரண்டு; பதங்கள் மூவேழ்
வன்னங்கள் நாலாறு, புரம் ஐம்பத் தாறு
தத்திடும்தத் துவங்கள்இரு பத்து மூன்று
தரும்பிரதிட்டாகலை, மால் அதிதெய்வம் தானாம்.

மந்திரங்கள் இரண்டும், பதங்கள் இருபத்து எட்டும், இறுதி எழுத்து ஒன்றும், நூற்றெட்டு புவனங்களும், நிலமாகிய தத்துவமும் நிவர்த்தி கலையில் அடங்கும் என்பர். இதற்கு அதிதெய்வம் பிரமன். மந்திரங்கள் இரண்டும், பதங்கள் இருபத்தொன்றும், இருபத்து நான்கு எழுத்துக்களும், புவனங்கள் ஐம்பத்து ஆறும் இருபத்து மூன்று தத்துவங்களும் ஆகிய இவை பிரதிட்டா கலையில் அடங்கும். இதற்கு அதிதெய்வம் திருமால் என்பர்.

260. வித்தையின் மந் திரம்இரண்டு, பதம்நால் ஐந்து
விரவும் எழுத்து ஏழு புரம் இருபத்துஏழு
தத்துவமும் ஓர்ஏழு தங்கும், அதிதெய்வம்
தாவுஇல் உருத்திரன் ஆகும்; சாந்தி தன்னில்
வைத்தனமந் திரம்இரண்டு, பதங்கள்பதி னொன்று
வன்னம்ஒரு மூன்று, புரம் பதினெட்டு, ஆகும்
உத்தமமாம் தத்துவமும் ஒரு மூன்று ஆகும்
உணரில், அதி தேவதையும் உணர் ஈசன் ஆமே.

மந்திரங்கள் இரண்டும், பதங்கள் இருபதும், எழுத்துக்கள் ஏழும், புவனங்கள் இருபத்து ஏழும், வித்தியா தத்துவங்கள் ஏழும் ஆகிய இவை வித்தியாகலையில் அடங்கும். இதற்கு அதிதெய்வம் உருத்திரன் என்பர். மந்திரங்கள் இரண்டும், பதங்கள் பதினொன்றும், எழுத்துக்கள் மூன்றும், புவனங்கள் பதினெட்டும் தத்துவங்கள் மூன்றுமாகிய இவை சாந்தி கலையில் அடங்கும். இதற்கு அதிதெய்வம் மகேசுரர் என்பர்.

261. சாந்தியா தீதகலை தன்னின் மந் திரங்கள்
தாம் மூன்று பதம் ஒன்று அக்கரங்கள் பதி னாறு
வாய்ந்தபுரம் மூவைந்து தத்துவங்கள் இரண்டு
மருவும்; அதி தேவதையும் மன்னுசதா சிவர் ஆம்
ஏய்ந்தமுறை மந்திரங்கள் பதினொன்று பதங்கள்
எண்பத்தொன்று அக்கரங்கள் ஐம்பத்தொன்று ஆகும்
ஆய்ந்தபுரம் இருநூற்றோடு இருபத்து நாலாம்
அறிதருதத் துவம்முப்பத் தாறு; கலை ஐந்தே

மந்திரங்கள் மூன்றும், பதம் ஒன்றும், எழுத்துக்கள் பதினாறும், புவனங்கள் பதினைந்தும், தத்துவங்கள் இரண்டுமாகிய இவை சாந்தியதீத கலையில் அடங்கும். இதற்கு அதி தெய்வம் சதாசிவர் என்பர். இம் முறையில் மந்திரங்கள் சத்தியோ சாதம் முதல் பதினொன்று ஆகும். பதங்கள் எண்பத்து ஒன்று ஆகும். எழுத்துக்கள் ஐம்பத்தொன்று ஆகும். புவனங்கள் இருநூற்று இருபத்து நான்கு. தத்துவங்கள் முப்பத்தாறு ஆகும். கலைகள் ஐந்து ஆகும். இவ்வாறு கூறிய வரிசை முறை ஒடுக்கமுறை எனப்படும்.

262. மூன்றுதிறத்து அணுக்கள் செயும் கன்மங் கட்கு
முன்னிலையாம் மூவீரண்டாம் அத்து வாவின்
ஆன்றமுறை அவை அருத்தி அறுத்து மலம் முதிர்வித்து
அரும்பருவம் அடைதலுமே ஆசா னாகித்
தோன்றி நுக ராதவகை முன்செய் கன்மத்
துகள் அறுத்து அங்கு அத்துவாத்துடக்கு அறவே சோதித்து
ஏன்றஉடல் கன்மம் அனுபவத்தினால் அறுத்து இங்கு
இனிச் செய்கன்மம், மூலமலம் ஞானத்தால் இடிப்பன்.

உயிர்கள் மனம், மொழி, மெய் எனும் மூன்று திறத்தாலும் ஈட்டிய வினையின் பயன்களை அவற்றுக்கு முன்னிலையாய் விளக்குகின்ற ஆறு அத்துவாக்களின் வழியாக இறைவன் உயிர்களுக்கு ஊட்டியும், உயிர்களை நுகர்வித்தும் கழித்தருளுவான். ஆணவ மலத்தையும் முதிர்வித்து அதன் வலிமை கெடுமாறு செய்வான். இந்நிலையில் உயிர்கள் பக்குவம் பெறும். அப்போது இறைவனே குருவடிவம் தாங்கி எழுந்தருளி வந்து தீக்கையினால் அத்துவ சோதனை செய்து தூய்மையாக்கி அவற்றின் பழவினையை அழிப்பான். நுகர்வினையை உயிர்களின் உடலூழாய்க் கழியுமாறு அருளுவான். மேலும் வினைஏறாதபடி அருளி மூலமலமாகிய ஆணவ மலத்தை ஒளிமுன் இருள் போல ஞானத்தினால் ஒழித்தருளுவான்.

இரண்டாம் அதிகரணம்

263. புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
புகல்மிருதி வழிஉழன்றும் புகலும் ஆச் சிரம
அறத்துறைகள் அவை அடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
சிரப் பொருளை மிகத் தெளிந்தும் சென்றால் சைவத்
திறத்தடைவர்; இதில்சரியை கிரியா யோகம்
செலுத்தியபின் ஞானத்தால் சிவன் அடியைச் சேர்வர்.

இவ்வுலகத்து மாந்தர் பல பிறப்புகள் எடுத்த பிறகே உண்மை ஞானம் கைவரப் பெற்று வீடுபேற்றை அடைவர். அது படிப்படியே நிகழும். புறச் சமய நெறியிலே நின்று ஒழுகியும், அதன் பிறகு அகச் சமயத்திலே புகுந்தும். அதன் பின்னர் மிருதி நூல் ஒழுக்கங்களைக் கைகொண்டும், மாணவ நிலை. இல்லற நிலை மனைவியோடு காட்டில் சென்று வாழும் நிலை துறவற நிலை ஆகியவற்றில் படிப்படியே பயின்றும், அரிய தவங்களை ஆற்றியும், அரிய கலைகளைக் கற்றும், நான்மறைகளைப் படித்தும், சிறப்பான புராணங்களை உணர்ந்தும், மறைமுடிவு எனக் கூறப்பட்ட உபநிடதங்களைக் கற்றும், தெளிந்தும் படிப்படியாக முன்னேறிச் சென்றவர்கள் சைவசித்தாந்தச் செம்மை நெறியில் வந்து அடைவார்கள். சைவ சித்தாந்தத்தில் விதிக்கப்பட்ட சீலம், நோன்பு, செறிவு என்னும் மூன்று ஒழுக்கங்களையும் முறைப்படி நிறைவேற்றிய பிறகு மெய்யறிவு எனப்படும் ஞானத்தை அடைந்த பின் சிவபெருமானின் திருவடி நிழலை எய்துவதாகிய வீடுபேற்றினைப் பெறுவர்.

புகல் மிருதி-ஸ்மிருதி நூல்கள், ஆச்சிரமங்கள்-பிரமச்சரியம், இல்லறம் வானப் பிரத்தம், துறவறம் என நான்கு. ஆரணங்கள்-மறை நூல்கள், சிறப்புடைய புராணங்கள் என்று ஆசிரியர் கூறியதனால் சிறப்பிலாத புராணங்களும் உண்டு என்பது உய்த்து உணரப்படும். வேத சிரப்பொருள் வேதத்தின் நான்காவது பாதமாகிய உபநிடதங்கள். இவை ஞானபாதப் பொருளை உணர்த்துவன.

264. இம்மையே ஈரெட்டு ஆண்டு எய்தி எழில் ஆரும்
ஏந்திழைஆர் முத்தி என்றும் இரும்சுவர்க்க முத்தி
அம்மையே என்றும் முத்தி ஐந்து கந்தம்
அறக்கெடுகை என்றும் அட்ட குணம் முத்தி என்றும்
மெய்மையே பாடாணம் போல்கை முத்தி என்றும்
விவேகமுத்தி என்றும் தன் மெய்வடிவாம் சிவத்தைச்
செம்மையே பெறுகைமுத்தி என்றும் செப்புவர்கள்
சிவன் அடியைச் சேரும்முத்தி செப்புவது இங்குயாமே.

மேலே கூறப்பட்ட புறச்சமயங்களிலும் அகச் சமயங்களிலும் வீடு பேறு என்பது பல்வேறு வகையாகக் கூறப்படுகிறது. இம்மையிலே பதினாறு வயது நிரம்பிய எழில் மிக்க மங்கையரோடு கூடி இன்புறுவதே வீடு பேறு என்பர் ஒரு சாரார். துறக்கத்தில் சென்று வானவராக இன்பம் துய்த்தலே வீடு பேறு என்பர் மற்றொரு சாரார். ஐந்து கந்தங்களும் அறவே கெடுவது வீடுபேறு என்பர் வேறொரு சாரார். மற்றும் சிலர் எல்லையற்ற அறிவு முதலிய எட்டு குணங்களையும் அடைவதே வீடுபேறு என்பர். வேறு சிலர் உயிர் உண்மையாகக் கல்லைப் போல் கிடத்தல் வீடு பேறு என்பர். வேறும் சிலர் தத்துவங்களை வகுத்து உணரும் விவேகமே வீடுபேறு என்பர், மற்றும் சிலர் பிரமப் பொருளை உள்ளவாறு உணர்தலே வீடுபேறு என்பர். சிலர் சிவவடிவம் முதலிய பதமுத்திகளையே வீடுபேறு என்பார். இங்கு யாம் கூறுகின்ற சித்தாந்த வீடு பேறு என்பது உயிர் நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகிச் சிவபிரான் திருவடியை அணைந்து எல்லையற்ற இன்பத்தில் திளைத்திருத்தலாகும்.

மகளிரோடு கூடி வாழ்தல் வீடு பேறு என்பவர்கள் உலகாயதர். துறக்கம் புகுதல் வீடு பேறு என்பவர்கள் மீமாஞ்சகர். கந்தகங்கள் ஐந்தும் அறக்கெடுவது வீடுபேறு என்று கொள்பவர்கள் பவுத்தரில் சவுத்தி ராந்திகர். எட்டுக் குணங்களைப் பெறுவது வீடுபேறு என்பவர் ஆருகதர். கல்லைப் போல் கிடப்பது வீடுபேறு எனக் கொள்பவர் வைசேடிகர். உயிரைப் பிரித்துக் காணும் அறிவே வீடுபேறு என்று கொள்பவர் சாங்கியர். மாயை பிரமங்களை உண்மையாக அறிவது வீடுபேறு என்பது மாயா வாதிகள் கொள்கை. சிவ வடிவு பெறுதல் முத்தி என்பது சிவசமவாதியர் கொள்கை.

265. ஓதுசம யங்கள் பொருள் உணரும் நூல்கள்
ஒன்றோடுஒன்று ஒவ்வாமல் உளபலவும் இவற்றுள்
யாதுசம யம் பொருள்நூல் யாது இங்கு? என்னின்
இதுஆகும் அது அல்லது எனும்பிணக்கது இன்றி
நீதியினான் இவை எல்லாம் ஓரிடத்தே காண
நின்றதுயா தொரு சமயம்? அதுசமயம் பொருள்நூல்
ஆதலினான் இவைஎல்லாம் அருமறை ஆ கமத்தே
அடங்கியிடும் இவை இரண்டும் அரன் அடிக்கீழ் அடங்கும்,

உலகத்தில் கணக்கற்ற சமயங்கள் உள்ளன. அவ்வச் சமயத்தில் கூறப்படும் பொருள்களும் அவற்றை விளக்கும் நூல்களும் பற்பல உள்ளன. இவை தமக்குள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் பிணங்குவனவாகும். இவற்றுள்ளே எந்தச் சமயம் முதன்மையானது? அச்சமயத்தின் பொருள்களை உணர்த்தும் நூல் எது? என்ற வினாக்கள் எழுவது இயல்பே இருக்கருத்துப் பொருந்தும், அது பொருந்தாது என்று பிணங்குவது இல்லாமல் முறையாக இவை அனைத்தும் எச்சமயத்தில் காணப்படுமோ அதுவே முதன்மையான சமயம் என்று கொள்ளல் தகும். அச்சமயத்தின் பொருள்களைத் தெளிவுற உணர்த்தும் நூலே மெய்ம்மையான நூலாகும். எனவே எல்லாச் சமயங்களும் அருமறைகளிலும் ஆகமங்களிலும் அடங்கும். மறைகளும், ஆகமங்களும் சிவபிரானின் இரண்டு திருவடிகளிலும் அடங்கும்.

உலகத்தில் சமயங்கள் பல்வகைப்படுவன. அச்சமயங்கள் எல்லாம் உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்பப் படிமுறையாக இறைவனால் செய்யப்பட்டன என்பது சைவசித்தாந்தத்தின் கொள்கை. எனவே ஒவ்வொரு சமயத்தில் நின்றும் ஒழுகியும் பக்குவப்பட்ட உயிர் சமயப் பிணக்குகளைக் கடந்த சித்தாந்தச் செந்நெறியை வந்து அடையும். அதன் பின்னர் ஞானத்தினால் வீடுபேற்றை அடையும். இக் கருத்து ஆசிரியரால் 263- வது பாடலில் தெளிவுற விளக்கப்பட்டது.

266. அருமறைஆ கமம்முதனூல் அனைத்தும் உரைக்கையினான்
அளப்பு அரிதாம் அப்பொருளை அரன் அருளால் அணுக்கள்
தருவர்கள் பின் தனித்தனியே தாம் அறிந்த அளவில்
தர்க்க மொடுஉத் தரங்களினால் சமயம் சா தித்து
மிருதிபுரா ணம்கலைகள் மற்றும் எல்லாம்
மெய்ந்நூலின் வழி புடையாம் அங்கம்வே தாங்கம்
சுருதிசிவா கமம்ஒழியச் சொல்லுவது ஒன்றுஇல்லை
சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே.

நான் மறைகளும் சிவாகமங்களும் அளவிடுவதற்கு அரிய உயர்ந்த பொருளை எடுத்துரைப்பதனால் அவை முதல் நூல்கள் எனப்படும். இம் முதல் நூல்கள் உயிர்கள் உய்வு பெறும் பொருட்டுச் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டவை. உயிர்களின் படி முறை வளர்ச்சியைக் கருதி இறைவன் இவற்றுள் எல்லாப் பொருளையும் செறிவித்து அருளினான். ஆயினும் பிற்காலத்தில் தோன்றிய சமயத் தலைவர்கள் அந்நூல்களின் கொள்கைகளைத் தாம் அறிந்த அளவில் எடுத்துக் கொண்டு வினாக்களை எழுப்பி விடைகளையும் தந்தார்கள். இவையே பிற்காலத்தில் வெவ்வேறு சமயங்களாக வளர்ந்தன. மிருதிகள் புராணங்கள் கலைகள் ஆகிய எல்லா நூல்களும் நான்மறைகள் சிவாகமங்கள் ஆகியவற்றின் வழிநூல்களாகும். இந்த வழிநூல்களை விரித்துரைக்கின்ற அங்கங்கள் புடை நூல்கள் எனப்படும். நான் மறைகளிலும் சிவாகமங்களிலும் கூறப்படாத பொருள் ஒன்றுமில்லை. இதற்கு மாறாக வேறுநூல் உண்டு என்று கொள்ளுவார்க்கு விடை கூறித் தெளிவித்தல் இயலாது.

அணுக்கள்-உயிர்கள். தருக்கமொடு உத்தரங்கள்-பிறர் கருத்தும் அதற்குத் தான் கூறும் விடையும்.

267. வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள்
வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள்
ஆதி நூல் அநாதி அமலன் தருநூல் இரண்டும்
ஆரணநூல் பொதுசைவம் அரும்சிறப்பு நூலாம்
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது நீள்மறையின் ஒழிபொருள்வே தாந்தத்
தீதுஇல்பொருள் கொண்டு உரைக்கும் நூல்சைவம்; பிறநூல்
திகழ்பூர்வம், சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்.

உலகத்தில் உயர்ந்த நூல்கள் எனக் கூறப்படுவன மறைகளும் சிவாகமங்களுமாகிய இரண்டேதாம். இவற்றின் வேறாக எழுந்த நூல்கள் எல்லாம் இவற்றின் கருத்துக்களை விரித்துரைக்கும் நூல்களே ஆகும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினை உடையவனும் இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனுமாகிய சிவபெருமானால் அருளப் பட்டவை இவை இரண்டும் ஆகும். இவ்விரு நூல்களும் முதல் நூல்களேயாம். இவை முறையே உலகத்தவர்க்கும் சத்திநிபாதம் எய்தியவர்க்கும் என இறைவனால் அருளப்பட்டன. இவற்றுள் மறைகள் பொது என்றும் சிவாகமங்கள் சிறப்பு என்றும் கூறப்படும். விரிந்த வேதத்துள் கூறப்பட்டவற்றைத் தவிர எஞ்சி நின்ற பொருள்களையும். வேத முடிபாகிய உபநிடதங்களின் சாரமாகிய குற்றமற்ற பொருள்களையும் தனித்து எடுத்துக் கொண்டு இனிதே விளக்குவது சிவாகமம். எனவே பிற நூல்கள் எல்லாம் பூர்வ பக்கம் எனவும் சிவாகமங்கள் சித்தாந்தம் என்றும் கொள்ளப்படும்.

நான்மறைகள் உலக வழக்குப் பற்றிக் கூறுவனவாகும். சிவாகமங்கள் சித்தாந்த மெய்ந்நெறியை விளக்குவனவாகும். எனவே இவை பொதுவும் சிறப்புமாகும். பூர்வ பக்கம்-பிறர் கொள்கை.

268. சித்தாந்தத் தே, சிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்தி
கெனனம்ஒன்றி லே சீவன் முத்த ராக
வைத்து ஆண்டு மலம்கழுவி ஞான வாரி
மடுத்துஆனந் தம் பொழிந்து வரும்பிறப்பை அறுத்து
முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும் உலகர்எல்லாம் மூர்க்கர் ஆகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர்; இது என்ன பிராந்தி?

சிவபிரான் தனது பேரருளால் உயிர்களுக்கு ஒரு பிறப்பிலேயே தன் திருக் கடைக்கண்சாத்தி, ஞானக் கடலில் மூழ்குவித்து, சிவப் பேரின்பத்தை மிகுவித்து, அவர்களின் மும்மல அழுக்கை நீக்கி, சீவன் முத்தராகச் செய்து, இனிமேல் அவர்களுக்கு வரும் பிறவியை அறுத்து, முத்தி முடிபாகிய தன் திருவடி மலர்களின் கீழ் வைப்பான் என்று சைவ சித்தாந்தத்தை நன்கு உணர்ந்த அருளாளர்கள் எடுத்துரைக்கின்றார்கள். அவ்வாறு இருந்தும் உலகத்தில் பலர் கொண்டதை விடாத தன்மையராகிப் பெரும் பித்துப் பிடித்து வேறு சமயங்களைப் பற்றி நின்று பலவாறு பிதற்றி அத்தீவினையால் பெருங்குழியில் விழுந்து துன்புறுகின்றனரே. இதுவென்ன மயக்கம்?

திருக்கடைக்கண் என்று ஆசிரியர் கூறியதைக் கொண்டு தீக்கை முறைகள் யாவற்றையும் கொள்க. சீவன் முத்தர் இவ்வுலக வாழ்க்கையிலிருந்தே வீடுபேற்றை அடைந்தோர். முத்தி+ அந்தம்-முத்தாந்தம். பித்து+ அந்தம்-பித்தாந்தம். பிராந்தி-மயக்கம்.

269. இறைவன்ஆ வான்; ஞானம் எல்லாம் எல்லா
முதன்மை அனுக்கிரகம்எல்லாம் இயல்புடையான் இயம்பும்
மறைகள்ஆ கமங்களினால் அறிவெல்லாம் தோற்றும்
மரபின் வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கும்
முறைமையினால் இன்பத்துன் பம்கொடுத்தலாலே
முதன்மையெலாம் அறிந்தும் முயங்கு இரண்டு போகத்
திறமதனால் வினை அறுக்கும் செய்தியாலே
சேரும் அனுக்கிரகம் எலாம்; காணுதும்நாம் சிவற்கே.

மற்று யாரும் தன்னை ஒப்பார் இல்லாத சிவபெருமான் ஒருவனே முற்றறிவையும் வரம்பிலா ஆற்றலையும் பேரருளையும் தனக்கு இயல்பாக உடையவன். நான்மறைகளையும் சிவபெருமானே அருளிச் செய்தான். அதனால் அவனுடைய முற்றறிவு விளங்கும். மறைகளிலும், ஆகமங்களிலும் அவனால் வகுத்துரைக்கப்பட்ட வழிகளில் ஒழுகுபவர்களுக்கும் ஒழுகாதவர்க்கும் முறையே இன்பங்களையும் துன்பங்களையும் சிவபெருமான் வழங்குவான். இதிலிருந்து அவனுடைய வரம்பிலாத ஆற்றல் புலப்படும். உயிர்களின் வினைக்கு ஏற்ப இன்பத் துன்பங்களை ஊட்டி அவற்றின் வினைச் சுமையை நீக்குவதனால் சிவபெருமானின் பேரருள் தெளியப்படும்.

இந்த இரண்டு பாடல்களாலும் சைவ சித்தாந்தச் செந்நெறியின் சிறப்பு ஆசிரியரால் கூறப்பட்டது.

270. சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க் கம்என்றும் சங்கரனை அடையும்
நன்மார்க்கம் நால் அவைதாம் ஞானம் யோகம்
நல்கிரியா சரியைஎன நவிற்றுவதும் செய்வர்
சன்மார்க்க முத்திகள்சா லோக்கிய சா மீப்பிய
சாரூப்பிய சாயுச்சியம் என்றுசதுர் விதமாம்
முன்மார்க்க ஞானத்தால் எய்தும் முத்தி

முடிவு என்பர்; மூன்றினுக்கும் முத்திபதம் என்பர் சிவபெருமானை அடையும் நெறிகள் நான்கு என்பர். அவை தொண்டு நெறி(தாதமார்க்கம்) மகன்மை நெறி (சற்புத்திரமார்க்கம்) தோழமை நெறி (சகமார்க்கம்) நன்நெறி(சன்மார்க்கம்) என்று பெயர் பெறும். இவற்றையே சீலம்(சரியை) நோன்பு(கிரியை) செறிவு(யோகம்), அறிவு(ஞானம்) என்றும் வழங்குவர். இங்குக் கூறப்பட்ட நால்வகை நெறிகளிலும் நிற்பவர்களுக்கு முறையே எய்துகின்ற பயன்கள் இறைவனோடு ஓர் உலகத்தில் இருத்தல் (சாலோகம்) இறைவனுக்கு அருகிருத்தல்(சாமீபம்) நெற்றியில் கண்ணரும், நாற்பெரும் தோளரும், நீறணிமேனியரும் ஆக அவன் வடிவத்தைப் பெறுதல் (சாரூபம்) இறைவனோடு இரண்டறக் கலத்தல்(சாயுச்சியம்) என்பனவாகும். இவற்றுள் முதலில் கூறப்பட்ட மூன்றும் பதமுத்திகள் எனப்படும். நான்காவதாகக் கூறப்பட்டது பரமுத்தியாகும். சதுர்-விதம்-நான்கு வகை. தாதன்-அடியவன்.

271. தாதமார்க் கம் சாற்றில், சங்கரன்தன் கோயில்
தலம் அலகுஇட்டு, இலகுதிரு மெழுக்கும் சாத்தி
போதுகளும் கொய்து பூந் தார்மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடி
தீதுஇல் திரு விளக்குஇட்டு, திருநந்த வனமும்
செய்து திருவேடங்கண்டால் அடியேன் செய்வது
யாது? பணியீர்! என்று பணிந்து, அவர்தம் பணியும்

இயற்றுவது; இச்சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர். சிவபெருமானுடைய திருக்கோயிலைத் திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும், மொட்டறா மலர் பறித்து இறைவனுக்கெனத் தாரும் மாலையும் கண்ணியும் தொடுத்தும், இறைவன் பெருமைகளைப் புகழ்ந்து பாடியும், இருளகற்றும் திருவிளக்கு ஏற்றியும், திருநந்தவனங்களை அமைத்துக் காத்தும், திருவேடம் கொண்ட அடியார்களைக் கண்டால் தங்களுக்கு நான் செய்யும் பணயாது என்று கேட்டு அவர்கள் இடும் பணியை உவந்து இயற்றியும் வருவது தாதமார்க்கம் ஆகும், இதுவே சரியை நெறி, இந்நெறியில் ஒழுகுவோர் ஈசன் உலகத்தில் இருப்பர்.

272. புத்திரமார்க் கம்புகலின், புதியவிரைப் போது
புகைஒளிமஞ் சனம் அமுது முதல்கொண்டு ஐந்து
சுத்திசெய்துஆ சனம், மூர்த்தி மூர்த்தி மானாம்
சோதியையும் பாவித்துஆ வாகித்து சுத்த
பத்தியினால் அருச்சித்து பரவிப் போற்றிப்
பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி
நித்தலும் இக் கிரியையினை இயற்று வோர்கள்
நின்மலன்தன் அருகிருப்பர், நினையுங் காலே.

புதிய மனம் உள்ள மலர்கள், நறும்புகை, திருவிளக்கு, திருமஞ்சனப் பொருள்கள், திருஅமுது ஆகிய வழிபாட்டுக்கு உரிய பொருள்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு ஐந்து வகைத் தூய்மைகளையும் செய்து இருக்கை இட்டு, திருமேனியை எழுந்தருளச் செய்து திருமேனியை உடையானாகிய பேரொளி வடிவாகிய இறைவனைப் பாவித்து அதில் எழுந்தருளச் செய்து தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று, அழல் ஓம்பி நாள்தோறும் வழிபடுவது மகன்மை நெறி எனப்படும். இதனை வழுவாது இயற்றி வருபவர்கள் சிவபெருமானின் அருகில் இருக்கும் பேற்றினைப் பெறுவார்கள். இந்நெறி கிரியை நெறி எனப்படும்.

ஐந்துவகைத் தூய்மைகள் பஞ்ச சுத்தி எனப்படும். அவை பூத தூய்மை, இடத்தூய்மை, பொருள் தூய்மை, மந்திரத் தூய்மை, லிங்கத் தூய்மை என்பன. ஆவாகித்தல்-எழுந்தருளுவித்தல்

273. சகமார்க்கம் புலன் ஒடுக்கித் தடுத்துவளி இரண்டும்
சலிப்பு அற்று முச்சதுர முதல் ஆதாரங்கள்
அகமார்க்கம் அறிந்து அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அங்கு
அணைந்துபோய் மேல்ஏறி அலர்மதிமண் டலத்தின்
முகமார்க்க அமுதுஉடலம் முட்டத் தேக்கி
முழுச் சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள்
உகமார்க்க அட்டாங்க யோக முற்றும்
உழத்தல், உழந் தவர்சிவன் தன் உருவத்தைப் பெறுவர்.

ஐம்புலன்களையும் ஒடுக்கி உள் மூச்சு, வெளிமூச்சு இரண்டனையும் அடக்கி உயிர்க் காற்றைக் கட்டுப் படுத்தி, முக்கோணம் சதுரம் முதலிய வடிவினைக் கொண்ட ஆறு ஆதாரங்களையும் உணர்ந்து அந்தந்த ஆதாரத்தில் அதனதற்குரிய அதி தெய்வங்களை வழிபட்டு மேலேறிச் சென்று பிரமரந்திர தானத்தில் சென்றெய்தி அதில் உள்ள தாமரை மொட்டை மலர்வித்து அங்குள்ள திங்கள் மண்டலத்தினை இளகச் செய்து அதன் அமுதத்தை உடல் முழுவதும் தேக்கிப் பேரொளி வடிவாகிய இறைவனை இடையீடின்றி நினைந்திருப்பது தோழமை நெறியாகும். இதில் நிற்போர் எட்டு உறுப்புக்கள் கொண்ட யோக நெறியை மேற்கொண்டு ஒழுகுவோராவர். இவர்கள் சிவபெருமானின் உருவத்தைப் பெறுவர். இது யோக நெறி எனப்படும்.

அட்டாங்க யோகத்தில் சிவயோகமே சைவ சித்தாந்தத்தில் வலியுறுத்தப்படும், மற்றைய யோகங்கள் மீண்டும் பிறப்பினை நோக்கி உயிரை இட்டுச் செல்லும் என்பர்.

274. சன்மார்க்கம் சகலகலை புராணம் வேதம்
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
பன்மார்க்கப் பொருள் பலவும் கீழாக மேலாம்
பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம்
பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
பெருமைஉடையோர் சிவனைப் பெறுவர் காணே.

எல்லாம் கலை ஞானங்களையும், புராணங்களையும், சாத்திரங்களையும் புறச்சமய நூல்களையும் நுணுகி ஆராய்ந்து பொய்யைப் பொய் என்று தள்ளி இறை உயிர்தளை என்ற முப்பொருள்களின் உண்மையை உணர்ந்து சிவபெருமானை அடைவதற்குரிய மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, அறிவு அறிபவன் அறியப்படும் பொருள் என்ற வேறுபாடு இல்லாமல் சிவபெருமானோடு இரண்டறக் கலந்து நிற்பதுவே நன்னெறி எனப்படும். இந்த நெறியில் நிற்கும் பெருமை உடையவர்கள் சிவனை அடைவார்கள். இது ஞான நெறி எனப்படும்.

இதுவரை சிவபெருமானை அடைவதற்குரிய நான்கு நெறிகளும் ஆசிரியரால் நான்கு தனித்தனிப் பாடல்களில் எடுத்துரைக்கப்பட்டன. இந் நெறிகளில் நின்று சிவனருளைப் பெற்றவர்கள் முறையே அப்பரடிகள், திருஞான சம்பந்த நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மணிவாசப் பெருமான் என்று பெரியோர் கூறுவர்.

275. ஞானநூல் தனைஓதல் ஓதுவித்தல்
நல்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன் அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
ஊனம்இலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம்
ஒன்றுக்கு ஒன்று உயரும்; இவை ஊட்டுவது போகம்
ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
அருச்சிப்பர் வீடுஎய்த அறிந்தோர் எல்லாம்.

சிவஞானப் பொருளை விளக்குகின்ற நூல்களைத் தான் ஓதுதலும் பிறர்க்கு ஓதுவித்தலும், நலம் தரும் அந்நூற் பொருள்களை நன்கு உணர்ந்து பிறர்க்கு உரைத்தலும், தான் அதனை ஆசிரியர் பால் கேட்டலும் குறைவிலாத அப்பொருளைத் சிந்தித்தலும் ஆகிய இவை ஐந்தும் சிவபெருமான் திருவடியை அடைவிக்கும் அழகிய ஞான வேள்வி என்று போற்றப்படும். குறைவிலாத கன்மவேள்வி, தவவேள்வி, சிவவேள்வி, தியான வேள்வி, என்ற நான்கும் நூல்களால் கூறப்படுவனவாகும். இவை ஒன்றுக்கொன்று உயர்ந்ததாகக் கூறப்படும். ஆயினும் இவை நான்கானும் பெறுகின்ற பயன் இன்ப நுகர்வே ஆகும். எனவே வீடுபேற்றை அடைய விரும்பும் பெரியோரெல்லாம் மேம்பட்ட ஞான வேள்வியினாலே சிவபெருமானை வழிபடுவர்.

No comments:

Post a Comment