Friday, 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞானபோதம் பகுதி- 5

ஐந்தாம் நூற்பா

ஆன்மா ஆணவமலம் காரணமாக மாயா கருவிகளோடு கூடி அஞ்சவத்தைப்படுவதாயிற்று என முந்திய நூற்பாவிற் கூறினார். அவ்வாறு அஞ்சவத்தைப்படுகின்ற ஆன்மாக்களிடத்தில் சகல நிலையில் இறைவன் செய்கின்ற உதவியை இந் நூற்பாவிற் கூறுகின்றார்.

நூற்பா

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்தறிந்து அறியா; ஆங்கு அவை போலத்
தாம் தம் உணர்வின் தமி யருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே.

இந்த நூற்பா எதனைக் கூற எழுந்தது என்பதனைக் கருத்துரையுட் கூறுகின்றார் ஆசிரியர்.

ஆசிரியர் கூறும் கருத்துரை:

என்பது சூத்திரம். என் நூதலிற்றோ எனின், இவ்வான்மாக்களிடத்துத் தமது முதல் உபகாரம் உணர்த்துதல் நுதலிற்று.

கருத்துரையின் பொருள்

கருவிகளோடு கூடி அஞ்சவத்தைப்படுகின்ற இவ்வான்மாக்களிடத்தில் முதல்வனாகிய இறைவனது உதவி நிகழும் முறைமையை உணர்த்துதல் இந்நூற்பாவின் கருத்து. முதல்-முதல்வன்.

விளக்கம்:

கேவல நிலையில், விறகினுள் மறைந்து கிடக்கும் நெருப்புப் போல ஆணவ மலத்துள் மறைந்து அறிவும் செயலும் இன்றிக் கிடந்த உயிர்களுக்கு இறைவன் உடம்பையும், கருவிகளையும், உலகையும் நுகர்ச்சிப் பொருள்களையும் உண்டாக்கிக் கொடுக்க, அவற்றால் அவ்வுயிர்கள் அறிவும் செயலும் விளங்கி வாழும் சகல நிலையை அடைந்தன என்பதைப் பார்த்தோம்.

தனு, கரண, புவன, போகங்களாகிய அவற்றைப் படைத்துக் கொடுத்ததோடு இறைவனது பணி முடிந்து விட்டது என்றோ, அவற்றைக் கொண்டு உயிர்கள் தாமாகவே அறிந்து செயற்படும் என்றோ கருதிவிடல் ஆகாது. அவற்றைப் பெற்றுவிட்ட சகல நிலையிலும் ஆன்மாக்களுக்கு இறைவனது உதவி இன்றியமையாதது என்பதை இந்நூற்பா வலியுறுத்துகிறது.

நூற்பாவின் பொருள்:

மூன்று, நான்கு ஆகிய முன் நூற்பாக்களில் உயிர் பற்றிய செய்தி சொல்லப்பட்டது.

அவ்வுயிரினாலே செலுத்தப்பட்டு, மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகள் தத்தமக்கு உரிய ஊறு, சுவை முதலிய புலன்களை அளந்து அறிகின்றன. அவ்வாறு புலன்களை அறியினும் அவை தம்மை அறியமாட்டா. அஃதாவது, கண் யான் உருவத்தை அறிகிறேன் என அறியாது. செவி யான் ஓசையை அறிகிறேன் என அறியாது. இவ்வாறே பிற பொறிகளும் தம்மை அறியமாட்டா. தம்மை அறியாததோடு, தம்மைச் செலுத்தி நிற்கும் உயிரையும் அறியமாட்டா.

அந்த ஐம்பொறிகளைப் போல, உயிர்களும் தம் அறிவிற்கு ஒப்பற்ற துணையாக விளங்கும் இறைவனது பேரறிவாகிய திருவருளால் செலுத்தப்பட்டே அறிந்து வருகின்றன. ஆயினும் அவ்வாறு அறிந்து வரும் தம்மையும், தம்மைச் செலுத்தி வரும் அத்திருவருளையும் அறியாது நிற்கும்.

உயிர்கள் முதல்வனது திருவருளால் உணர்தல், காந்தத்தின் முன்னிலையில் இரும்பு செயற்படுதல் போன்றதாகும்.

பதவுரை

விளம்பிய உள்ளத்து - முந்திய இரண்டு நூற்பாக்களில் எடுத்துச் சொல்லப்பட்ட ஆன்மாவினால் செலுத்தப்பட்டு

மெய் வாய் கண் - மெய் முதலாக உள்ள ஐம்பொறிகள் மூக்கு (செவி)

அளந்து அறிந்து - பரிசம் முதலிய தம்தம் புலன்களை இஃது இன்னது என அறுதியிட்டு நன்றாக அறிந்தும்

அறியா - அவை தம்மை அறியமாட்டா; தம்மைச் செலுத்தி நிற்கும் ஆன்மாவையும் அறிய மாட்டா.

ஆங்கவை போல - அந்த ஐம்பொறிகள் போலவே

தாம் - ஆன்மாக்களும்

தம் உணர்வின் தமி அருள் - தம் அறிவிற்கு ஒப்பற்ற துணையாகிய முதல்வனது திருவருளால் செலுத்தப்பட்டு வினைப்பயன்களை அறிந்து நுகர்ந்து வரும். அவ்வாறு திருவருளால்செயற்படினும் அவ்வான்மாக்கள் தம்மையும் அறியா; தம்மைச் செலுத்தும் அத்திருவருளையும் அறியமாட்டா.

அவை - அவ்வான்மாக்கள் முதல்வனது திருவருளால் உணர்தல்.

காந்தம் கண்ட பசாசத்து - காந்தக் கல்லின் முன்னுள்ள இரும்பு செயற்படுதல் போன்றதாகும்.

சிறப்புரை:

நான்கு பொறிகளைச் சொன்னதனால், விடுபட்ட ஐந்தாவது பொறியாகிய செவி என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உவமையாகிய ஐம்பொறிகளுக்குச் சொல்லிய அளந்தறிந்து அறியா என்பது தாம் எனப்பட்ட பொருளுக்கும் சென்று இயையும். அஃதாவது, அத் தொடர் தாம் தம் உணர்வின் தமி அருளால் அளந்தறிந்து அறியா எனப் பின்னேயும் சென்று இயைந்து நிற்கும்.

இனி, இவ்வான்மாக்கள் திருவருளின் கண் பொருந்தி நிற்றற்கு மற்றுமோர் உவமை கூறுகின்றார். காந்தக் கல்லின் முன் பொருந்திய இரும்பு என்பது அவ்வுவமை. காந்தக் கல் போல நிற்பவன் இறைவன். அதன் ஈர்ப்பு ஆற்றல் போல இருப்பது இறைவனது அருளாகிய சத்தி. காந்தம் தன் ஆற்றலால் இரும்பை ஈர்த்துக் கொள்வது போல இறைவன் தனது சத்தியால் ஆன்மாக்களைச் செயல்படுத்தி நிற்கிறான். காந்தம் எவ்வித அசைவும் இன்றி இருத்தல்போல, இறைவன் ஆன்மாக்களைச் செயற்படுத்தினாலும் தான் யாதொரு மாற்றமும் எய்துதல் இல்லை என்பது இவ்வுவமையால் பெறப்பட்டது.

தமி என்பதற்குத் தலைமைப் பொருள் என்பது பொருள். இங்கு அச்சொல் ஒப்பற்ற துணையாகிய முதல்வனைக் குறித்தது. பசாசம்- இரும்பு.

பசாசம் என்ற பெயர்ச் சொல்லைப் பசாசத்து என வினைமுற்றதாக ஆக்கிவிட்டார் ஆசிரியர். முன்னைய நூற்பாவில் அவத்தை என்ற பெயர்ச்சொல் அவத்தைத்து என வினைமுற்றாய் ஆனமையைக் கண்டோம். அது போன்றதே இது.

அவை காந்தம் கண்ட பசாசத்து என்ற வாக்கியத்தில் பசாசத்து என்பது பயனிலை. அவை என்பது எழுவாய். இங்குப் பயனிலை ஒருமையிலும், எழுவாய் பன்மையிலுமாக அமைந்திருக்கிறது. இது வாக்கிய அமைப்புக்கு ஏலாது. ஆகவே, ஒருமை வினைமுற்றாகிய பயனிலைக்கு ஏற்ப எழுவாயையும் ஒருமையாக்குதல் வேண்டும். அது கருதியே, அவை என்ற எழுவாய்க்கு, அவை திருவருளால் உணர்தல் எனப் பொருள் கூறப்பட்டது. இப்பொழுது அவை என்பது எழுவாய் ஆகாமல், உணர்தல் என்பதே எழுவாய் ஆயிற்று. அஃது ஒருமைச் சொல்லாய் நின்று ஒருமை வினைமுற்றுக் கொண்டு முடிதல் காணலாம்.

விளக்கம்:

உயிர்கள் தாமாகச் செயற்படும் தன்மை உடையன அல்ல; முதல்வனது திருவருளாலேயே அவை செயற்படும். அவ்வாறு செயற்படும் காலத்தில் அவை தம்மையும் அறியா; தமக்கு உற்ற துணையாய் உடனிருந்து உணர்த்தி வரும் திருவருளையும் அறியா என்பது இந்நூற்பாவில் கூறப்பட்டது.

உயிர்கள் திருவருளை உணராமை:

வெந்நீரில் எங்கும் விரவி நிற்கின்ற வெம்மைபோல, இறைவனது அறிவாற்றலாகிய திருவருள் எல்லாவிடத்திலும் நிறைந்து நிற்கின்றது. எனவே அத்திருவருள் உயிர்களிடத்தும் உட்கலந்து விளங்குகிறது என்பது சொல்லாமலே விளங்கும். அவ்வாறு தம்மிடத்தில் தங்கி நின்று செலுத்துவதாகிய திருவருளை உயிர்கள் அறியாதிருக்கும் எனல் பொருந்துமோ? என ஐயுறலாம். பின்வரும் குறிப்பு அவ் ஐயத்தை நீக்குவதாகும்.

ஆணவமலம் உயிரறிவை மறைத்துக்கொண்டு நிற்பதால் உயிர் அகவுணர்வை இழந்து நிற்கிறது. அஃதாவது உள்முகமாக நோக்கித் தன்னையும், தன்னுள் கலந்து இருக்கும் திருவருளையும் உணரமாட்டாது நிற்கிறது. ஆணவ மலத்தை நீக்க வந்த மாயா கருவிகளாகிய ஐம்பொறி முதலியவற்றால் உயிருக்குப் புறவுணர்வு- அஃதாவது புறப்பொருள்களை அறிவதாகிய புலன் உணர்வு விளங்குமேயன்றி அகவுணர்வு உண்டாகாது. ஆதலால் சகல நிலையில் உயிர்கள் புறப் பொருள்களையே அறிந்து அவற்றையே பற்றி நின்று, அவற்றின் கண்ணே அழுந்தி நிற்குமேயன்றித் தம்மையோ தமக்குத் தோன்றாத் துணையாய் நின்று உதவும் திருவருளையோ அறியமாட்டாவாம்.

நிலத்தின் மேல் வாழ்வோராகிய மக்கள் தம்மைத் தாங்கி நிற்பது நிலம் என்பதனைச் சிறிதும் நினையாமல், தாமே தமக்கு ஆதாரம் எனக் கருதித் தருக்கி வாழ்வர். நிலத்தின் ஈர்ப்பு ஆற்றல் அல்லவா நம்மை நிற்க வைக்கிறது; நடக்க வைக்கிறது; இயங்க வைக்கிறது. ஆனால் நாம் அந்நிலையை எண்ணிந் பார்க்கிறோமா? இல்லையே. நான்யாரையும் நம்பியிருக்கவில்லை; என் சொந்தக் காலில் நிற்கிறேன் என்று தானே பலரும் சொல்லுகின்றனர்! என்ன அறியாமை இது! அக் காலுக்கு எக்காலும் ஆதாரமாய் நிற்பதும் நம்மை நிற்பிப்பதும் நிலத்தின் ஆற்றலேயன்றோ?

அது போலத் திருவருளால் எல்லாவற்றையும் பெற்று நின்றாலும் அவற்றைத் தந்தது திருவருள் என்பதைத் திணையளவும் உணராமல், பெற்றவற்றைப் பேணுவதிலேயே பொழுதைப் போக்குகின்றோம்; திருவருள் உதவியை மறந்து வாழ்கின்றோம். வல்வினைப் பட்டு ஆழ்கின்றோம். அவலக் கடலில் வீழ்கின்றோம். இதுவே நம் நிலை !

கூறுகள்:

இந் நூற்பாவின் பொருளை இரண்டு கூறுகளாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர். அக்கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு.

கூறு பொருள்
முதற் கூறு - ஐம்பொறிகள் ஆன்மாவால் உணரும்
இரண்டாம் கூறு - ஆன்மா திருவருளாலேயே உணர்வு நிகழப்பெறும்.

முதற் கூறு

இம் முதற் கூறில் ஐம்பொறிகள் ஆன்மாவால் உணரும் என்பதனை மேற்கோளாக நிறுத்தி, அதனை ஏதுக்கொண்டு நிறுவுகிறார் ஆசிரியர்.

மேற்கோள்

ஈண்டு ஐயுணர்வுகள் ஆன்மாவால் உணரும்- என்றது.

மேற்கோள் விளக்கம்

இங்கு ஐயுணர்வுகள் என்றது ஐம்பொறிகளைக் குறிக்கும். அவை தத்தம் புலன்களை அறிதல் ஆன்மாவாலே யாம். எனவே அவை தாமாக ஒன்றையும் அறியா என்பது பெறப்படும். இதனை நிறுவுதற்கு ஏதுக் கூறுகின்றார்.

ஏது

அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணின் அல்லது
அவை ஒன்றையும் விடயியா ஆகலான்.

ஏது விளக்கம்

இதன் பொருள் ஐம்பொறிகளோடு ஆன்மா ஒற்றித்து நின்றாலன்றி அவை ஒன்றையும் அறியமாட்டா என்பதாகும்.

இதனை நம் அனுபவத்தில் வைத்தே உணர்ந்து கொள்ளலாம். வீதியில் செல்லும் போது வேண்டிய நண்பர் ஒருவர் எதிரே வருகிறார். நம் கண்கள் நன்றாகத் திறந்துதான் இருக்கின்றன. ஆனாலும் நம் நினைவு வேறு எங்கோ இருப்பதனால் அவரைக் கண்டும் காணாமலே கடந்து செல்கிறோம். மறுநாள் அந்த நண்பர் நம் வீட்டிற்கு வந்து இதைச் சொல்லிக் காட்டும்போது நான் உண்மையிலே உங்களைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அப்படிப் போயிருப்பேனா? என்று அமைதி சொல்லுகிறோம். அவரைக் காணாதே சென்றது, அந் நேரத்தில் ஆன்மா கண்ணாகிய பொறியோடு ஒற்றித்து நில்லாமையால் நிகழ்ந்ததாகும். இவ்வனுபவமே ஐம்பொறிகள் ஆன்மாவால் உணரும் என்பதை நன்கு நிறுவும் என்பதாம்.

இதன் விளக்கமாகப் பின்வரும் எடுத்துக்காட்டினை அமைக்கின்றார்.

எடுத்துக் காட்டு

வெண்பா

30. ஐம்பொறியை ஆண்டுஅங்கு அரசாய் உளம்நிற்ப
ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம்;-ஐம்பொறியின்
காணாதேல் காணாது; காணும் உளம் காணாதேல்
காணாகண்; கேளா செவி.

இதன் பொருள்:

அரசன் அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து ஏவலரை அவரவர்க்குரிய பணியைச் செய்யுமாறு ஏவி நிற்றல் போல, ஆன்மா புருவ நடு ஆகிய இலாடத் தானத்தில் இருந்து ஐம்பொறிகளை அது அதற்குரிய புலன்களின் மேற் செல்லுமாறு ஏவி நிற்கும்.

அவ்வாறு ஏவப்பட்ட ஐம்பொறிகள் தத்தம் புலன்களை அறியுமேயன்றித் தம்மைச் செலுத்தி நிற்கும் ஆன்மாவை அறியாவாகும்.

ஆன்மாவும் ஐம்பொறிகளின் உதவியால் அறியுமேயன்றித் தாமாகப் புலன்களை அறிய மாட்டாது. ஐம்பொறிகளும் ஆன்மா ஒற்றித்துக் கண்டாலன்றித் தாமாகப் புலன்களை அறியமாட்டா.

எனவே, அரசனும் ஏவலரும் ஆகிய இருவரும் தம்முள் ஒருவரையின்றி ஒருவர் அமையாதவாறுபோல, ஆன்மாவும் கருவிகளும் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று இன்றியமையாதனவாய் உள்ளன என்பது கருத்து.

பதவுரை

உளம் - ஆன்மா

ஐம்பொறியை ஆண்டு - ஐம்பொறிகளை அவற்றிற்குரிய புலன்களின் மேற்செல்லுமாறு ஏவி

அங்கு - புருவ நடுவாகிய இலாடத்தானத்தில்

அரசாய் - அரசிருக்கை மண்டபத்தில் வீற்றிருந்து பணியாளரை அவரவருக்கு உரிய தொழிலில் ஏவிவிடும் அரசன் போல

நிற்ப - இருத்தலால்

ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம் - அவ்வாறு ஏவப்பட்ட அவ்வைம் பொறிகள் (தம்தம் புலன் அளவில் அறியுமேயன்றி) தம்மைச் செலுத்தி நிற்கும் ஆன்மாவை அறிவாயின.

(இஃது அரசனால் ஏவப்பட்டோர் அக் காரியத்தின் அளவில் செல்லுதலன்றி அதற்கு வேறான காரியத்திற் செல்லாமை போன்றதாகும்)

ஐம்பொறியிற் காணா தேல் - ஆன்மா ஐம்பொறி வழியாக உணரவில்லை யென்றால்

காணாது - ஒன்றையும் உணர மாட்டாது.

காணும் உளம் - உணரும் தன்மையுடைய ஆன்மா

காணாதேல் - கருவிகளோடு ஒற்றித்து நின்று உணரவில்லையாயின்

கண்காணா செவிகளோ - கண், செவி முதலிய கருவிகளும் யாதொன்றையும் உணரமாட்டா.

(இதனால், ஆன்மாவும் கருவிகளும் ஆகிய இரண்டும் ஒன்று மற்றொன்றை இன்றி அமையாமை கூறப்பட்டது.)

இரண்டாம் கூறு

நூற்பாவில் உள்ள தாம் தம் உணர்வின் தமியருள் என்னும் தொடருக்கு விளக்கமாக அமைவது இவ்விரண்டாம் கூறாகும். இப்பகுதியில் ஆன்மா திருவருள் உணர்த்த உணரும் என்னும் கருத்தினை மேற்கோளாக நிறுத்தி, அதனை ஏதுவினால் நிறுவுகிறார் ஆசிரியர்.

மேற்கோள்

இனி, இதுவும் தமது முதலாலே உணரும்- என்றது.

மேற்கோள் விளக்கம்

இதன் பொருள், இந்த ஆன்மாவும் தமது முதலாகிய திருவருளாலே உணரும் என்பதாம். ஐம்பொறிகள் தமக்கு ஒரு முதலை உடையவாதல் போலவே, ஆன்மாவும் தனக்கு ஒரு முதலை உடையது என்பது கருத்து.

இவ்விடத்தில் ஒரு தடை எழுதல் கூடும். அஃதாவது ஐம்பொறி முதலிய கருவிகள் சடம் ஆதலின் அவை தமது முதலாகிய ஆன்மாவால் உணரும் என்றது பொருந்தும். ஆனால் ஆன்மாவின் நிலை வேறு. அது சித்துப் பொருள். அவ்வாறிருக்க, சித்தாகிய ஆன்மாவும் சடமாகிய கருவிகளைப் போலத் தமது முதலாலே உணரும் என்றல் பொருந்தாது என்பதே அத் தடை. அத்தடைக்கு உரிய விடையைப் பின்வரும் ஏதுவில் அமைத்துள்ளார் ஆசிரியர்.

ஏது

இவ்வான்மாத் தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத்
தானும் தன்னை உணராது நிற்றலான்.

ஏது விளக்கம்

ஆன்மாவால் உணர்ந்து வரும் ஐம்பொறிகள் முதலிய கருவிகள் தம்மைத் தாம் அறியாது நிற்றல் போல, அக்கருவிகளைக் கொண்டு அறிந்து வருகின்ற ஆன்மாவும் தன்னைத் தான் அறியாது நிற்கின்றது.

ஆன்மா தன்னைத் தான் அறியும் வல்லமையுடையதாய் இருக்குமானால், மூன்றாம் நூற்பாவில் கூறியவாறு, ஆன்மா சூனியம் என்றும், தேகமே ஆன்மா என்றும், பிராண வாயுவே ஆன்மா என்றும் பிரமமே ஆன்மா என்றும் இவ்வாறு தம்முள் மாறுபட்டனவாகிய கருத்துக்கள் எழ வேண்டியதில்லையே. ஆன்மா தன்னை அறியாமையினால் அன்றோ இப்படிப்பட்ட வெவ்வேறான கருத்துக்களைக் கூறித் தம்முள் பிணங்குகின்ற நிலை ஏற்பட்டது. எனவே கருவிகளைப் போலவே ஆன்மாவும் தன்னைத் தான் உணராது நிற்கும் என்பதே உண்மையாகும்.

கருவிகள் சடமும், ஆன்மா சித்தும் என்ற தன்மையில் அவை தம்முள் ஒவ்வா ஆயினும், தம்மைத் தாம் அறியாது நிற்றலில் அவையிரண்டும் ஒத்த நிலையினவே என்பது விளங்கும். ஆதலால் ஆன்மாவும் கருவிகள் போல ஒரு முதலாலே உணரும் எனக் கொள்ளுதல் பொருந்துவதேயாம்.

ஏதுவில், ஆன்மா தன்னைத் தான் உணராது நிற்கும் என்பது மட்டுமே கூறப்பட்டது. தன்னை உணராமை கூறவே, தனது முதலாகிய திருவருளையும் அஃது உணராது நிற்கும் என்பதும் தானே பெறப்படும்.

ஓர் ஐயப்பாடு:

ஐம்பொறிகள் ஆன்மாவால் உணர்தல் போல, ஆன்மாக்கள் தமது முதலாலே உணரும் என அறிந்தோம். இது பற்றி ஓர் ஐயப்பாடு எழலாம். அஃதாவது ஐம்பொறிகள் உணர்தலால் வரும் பயனை அக்கருவிகள் அடைவதில்லை; அவற்றைச் செலுத்துகின்ற ஆன்மாவே அடைகின்றது. அதுபோல ஆன்மாக்கள் உணர்தலால் வரும் இன்ப துன்பமாகிய பயனும் அவற்றிற்கு ஆகாது அவற்றைச் செலுத்துகின்ற முதல்வனுக்கே ஆகும் எனக் கொள்ள நேரும். முதல்வன் இன்ப துன்பங்களை எய்துவான் எனக் கொள்ளின் நிருவிகாரி (மாறுதல் இல்லாதவன்) என அவனைக் கூறுதல் பொருந்தாமற் போகும்.

இவ்வாறு எழும் ஐயத்தைத் தெளிவித்தற் பொருட்டு முதல் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார் ஆசிரியர்.

எடுத்துக்காட்டு - 1

வெண்பா

31. மன்னுசிவன் சந்நிதியில் மற்று உலகம் சேட்டித்தது
என்னும் மறையின் இயல்மறந்தாய்;- சொன்ன சிவன்
கண்ணா உளம்வினையால் கண்டறிந்து நிற்கும்காண்;
எண்ணான் சிவன் அசத்தை இன்று.

இதன் பொருள்:

எண்ணற்ற உயிர்களுக்கு எண்ணற்ற வகையில் உணர்த்துதல் பற்றி இறைவன் திரிபு எய்துவானோ என ஐயுறும் மாணவனே,

என்றும் ஒரு தன்மையனாய் நிற்கின்ற இறைவனது முன்னிலையில்-நினைப்பு அளவில்-சித்தும் சடமும் ஆகிய இருவகை உலகங்கள் செயற்படுகின்றன எனக் கூறும் வேத மொழியை நீ மறந்தாய் (அம்மொழியை நினைவு கூர்ந்து, உலகத்தின் செயற்பாட்டால் இறைவன் யாதொரு மாறுதலும் அடையான் என்பதை உணர்வாயாக.)

நிருவிகாரி என வேதங்களில் சொல்லப்பட்ட இறைவன் உணர்த்துபவனாய் நிற்க, உயிர்கள் தத்தம் வினைக்கு ஏற்றபடி உணர்ந்து நிற்கும்.

இறைவன், உயிர்கள் உலகப் பொருள்களை உணர்ந்து நுகர்வதற்குத் துணையாய் நிற்பினும், அவன் அப்பொருள்களை அனுபவிக்க மாட்டான்.

பதவுரை

மன்னு சிவன் - என்றும் ஒரு தன்மையனாய் நிற்கின்ற இறைவனது

சந்நிதியில் - முன்னிலையில்

உலகம் - சித்தும், சடமும் ஆகிய இரு வகை உலகங்கள்

சேட்டித்தது - செயற்படுகின்றன

என்னும் - என்று கூறும்

மறையின் இயல் - வேத மொழியை

மறந்தாய் - (மாணவனே,) நீ மறந்தாய்.

(அம்மொழியை நினைந்து, எண்ணற்ற உயிர்களுக்கு எண்ணற்ற வகையில் உணர்த்துதலால் இறைவன் சிறிதும் திரிபு எய்தான் என்பதை உணர்வாயாக.)

சொன்ன சிவன் - வேதங்களில் நிருவிகாரி எனச் சொல்லப்பட்ட இறைவன்

கண்ணா - உணர்த்துபவனாய் நிற்க,

உளம் - உயிர்கள்

வினையால் - தம்தம் வினைக்கு ஏற்றபடி

கண்டறிந்து நிற்கும் - உணர்ந்து நிற்கும்

காண் - இதனை நீ அறிவாயாக

சிவன் அசத்தை எண்ணான் - இறைவன் அசத்தாகிய உலகப் பொருள்களை உயிர்கள் நுகர்வதற்குத் துணையாய் நிற்பினும், தான் அவற்றை அனுபவியான்.

இன்று - அசத்தாகிய உலகம் அவன்முன் வேறாய் விளங்கி நிற்றல் இல்லை ஆகலான்.

(இதுபற்றி ஏழாம் நூற்பாவிற் கூறப்படும்.)

விளக்கம்

அறிதலால் வரும் பயனை உயிரே அடைதல்:

ஐம்பொறி முதலிய கருவிகளும் புலன்களை அறிகின்றன. உயிரும் புலன்களை அறிகின்றது. ஆயினும் வேறுபாடு உண்டு. அக்கருவிகள் வேறு காரணம் இன்றி, உயிரால் செலுத்தப்படுதலாகிய அவ்வொன்றினாலே அறிகின்றன. ஆதலால், அறிதலின் பயனை அவை அடைவதில்லை. அதற்கு மாறாக உயிர் தன் வினை காரணமாகத் தன் பொருட்டாகவே அறிகின்றது. ஆதலால், அறிதலால் வரும் பயனை அவ்வுயிரே அடைதற்குரியதாகின்றது. அதனைச் செலுத்துகின்ற இறைவன் உலக அனுபவத்தை எய்துதல் இல்லை.

சிவன் என்னும் சொல்லின் பொருள்:

இச்செய்யுளில் சிவன் என்னும் சொல் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடத்தும் வந்துள்ளமை நோக்கத்தக்கது. சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம் உடையவன் என்பது பொருள். மங்கலமாவது நன்மை. எனவே, நன்மை எனப்படுவன யாவற்றையும் ஒருங்கே உடையவன் என்பது விளங்கும். சிவன் என்னும் பெயர் குறிக்கும் இப்பொருளைக் கருத்திற் கொண்டே நன்றுடையானை தீயதில்லானை எனக் கூறியருளினார் ஞானசம்பந்தர்.

அவனது முன்னிலையில் உலகம் செயற்பட, அவன் சிறிதும் மாற்றமின்றி ஒரு தன்மையனாய் நிற்கின்றான். இவ்வியத்தகு நிலையைக் கருதியே அவனைச் செம்பொருள் எனப் போற்றினர் பெரியோர். செம்மையாவது திரிபு இன்மை. இச் செம்மையாகிய நன்மையை உடையவன் என்ற பொருளில் மன்னுசிவன் என முதலிற் குறிப்பிட்டார் ஆசிரியர்.

அவன் முற்றறிவுடைய முதல்வன்; எண்ணற்ற உயிர்களிடத்தில் உள் நின்று அறிந்தும் அறிவித்தும் வருபவன்; உயிரறிவிற்குத் துணையாக-கண்ணாக-நிற்பவன் என்பதைக் கூறப் புகுந்த ஆசிரியர் அவ்விடத்திற்கு ஏற்ப இறைவனைப் பேரறிவாகிய நன்மையை உடையவன் என்னும் பொருள்படச் சிவன் என இடையில் குறிப்பிட்டார்.

உயிர்கள் உலகப் பொருள்களை அறிந்து அனுபவிப்பதற்கு இறைவன் துணையாய் நிற்பினும், அவன் அவ்வுயிர்கள் போல உலகப் பொருள்களை நுகர மாட்டான்; பாசப் பொருள்களில் தோய மாட்டான் என்ற கருத்தில் எண்ணான் சிவன் அசத்தை என்றார். இறுதியில் குறிப்பிட்ட சிவன் என்னும் சொல்லுக்கு இயல் பாகவே பாசத்தின் நீங்குதலாகிய தூயதன்மை என்னும் நன்மையை உடையவன் என்பது பொருளாகும்.

இனி, முதல்வனால் உணர்த்தப் பெறும் உயிர்கள் அவனோடு எவ்வாறு இயைந்து நிற்கும் என்னும் வினாவுக்கு விடையாக இரண்டாம் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக் காட்டு -2

வெண்பா

32. வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல- மெய்யவனில்
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனைக்
கண்டு உடனாய் மன்னுதலைக் காண்.

இதன் பொருள்:

கோள்மீன்கள் (கிரகங்கள்) சூரியனிடமிருந்தே ஒளியைப் பெறுகின்றன. அவை பகற் போதில் வேறாக விளங்கித் தோன்றாமல், சூரியனது ஒளியில் ஒடுங்கி உடனாய் நிற்கின்றன. அதுபோல, உயிர்கள் மெய்ப்பொருளாகிய இறைவனது துணையினால் அறிவு பெறுகின்றன; கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிந்து பொருள்களை நுகர்கின்றன. அவ்வாறு ஐம்புலன்களை நுகரும் உயிர்கள் அவனின் வேறாய் நீங்கி நில்லாமல், அவனது வியாபகத்துள் அடங்கி உடனாய் நிற்பனவாகும்.

பதவுரை

வெய்யோன் ஒளியில் - (பகலவனால் ஒளி பெற்று) அவனது ஒளியில்

ஒடுங்கி - அடங்கி

விளங்காது - அவனின் வேறாய் விளங்காமலும்

வெய்யோன் ஆகாத - அப்பகலவனேயாகி விடாமலும் நிற்கின்ற

மீன்போல - கோள் மீன்கள் போல

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனை - கண்டும், கேட்டும், சுவைத்தும், மோந்தும் தொட்டும் உணர்கின்ற ஐம்புலன்களை

மெய்யவனிற் கண்டு - (ஆன்மா) மெய்ப்பொருளாகிய முதல்வனால் உணர்ந்து

உடனாய் மன்னுதலை - அவனின் வேறாய் நில்லாமலும் அவனேயாகி விடாமலும் அவனது வியாபகத்துள் அடங்கி அவனோடு உடனாய் நிலைபெறுதலை

காண் - அறிவாயாக

விளக்கம்

உவமையைப் பொருளோடு பின்வருமாறு பொருத்திக் காணலாம்.

உவமை பொருள்
வெய்யோன் - இறைவன்
வெய்யோன் ஒளி - திருவருள் வியாபகம்
கோள்மீன் - உயிர்கள்
ஒளி பெறுதல் - அறிவு பெறுதல்
ஒடுங்கி நிற்றல் - அத்துவிதமாய் அடங்கி நிற்றல்

எடுத்துக்காட்டு - 3

இறைவன் உயிர்களுக்கு அறிவு விளங்குதற் பொருட்டு ஐம்பொறிகள், அந்தக்கரணங்கள் முதலியவற்றைக் கூட்டுவிக்கின்றான். உயிர் அக்கருவிகளோடு கூடிய அளவிலேயே அறிவு நிகழ்ந்து விடாது. இறைவனது திருவருள் உள்நின்று உணர்த்துதல் வேண்டும்.

இரும்பைத் தன் ஆற்றலால் ஈர்க்கின்ற காந்தம் எவ்வகை மாற்றமும் எய்தாமல் இருந்தபடியே இருப்பதைப் போலத் தன் திருவருளாகிய ஆற்றலால் உயிர்களுக்கு அறிவும் செயலும் நிகழ்விக்கின்ற இறைவன் அதனால் சிறிதும் மாறுதல் எய்தான்.

காந்தம் இரும்பை ஈர்ப்பதாயினும் அதனை ஈர்க்க வேண்டும் என்ற விருப்பம் அதற்கு இல்லை. ஆனால் இறைவனோ உயிர்களை உய்விக்க வேண்டும் என்னும் விருப்பினாலேயே எல்லாவற்றையும் செய்கின்றான். அவ் இரக்க குணமே அருள் என்பது.

அருள் எனினும், சத்தி எனினும் ஒன்றே. அச்சத்தியை ஆணை எனக் குறிப்பிட்டு, அதனோடு இறைவன் இயைந்து நிற்றலை இரண்டாம் நூற்பாவில் கூறினாராயினும் அச்சத்தி அருளாய் நிற்றலை அங்குக் கூறாமையால், அதனை ஐந்தாம் நூற்பாவாகிய இவ்விடத்தில் - இம்மூன்றாம் எடுத்துக்காட்டில் கூறுகின்றார்.

வெண்பா

33. அருள் உண்டாம் ஈசற்கு; அது சத்தி அன்றே;
அருளும் அவனன்றி இல்லை;- அருள் இன்று
அவன் அன்றே இல்லை; அருட் கண்ணார் கண்ணுக்கு
இரவி போல் நிற்கும் அரன் ஏய்ந்து.

இதன் பொருள்:

உயிர்களைப் பிணித்துள்ள பாசமாகிய கட்டினை நீக்கிப் பேரின்பத்தை வழங்குதல் வேண்டும் என்னும் இரக்கம் இறைவனுக்கு என்றும் உண்டு. அவ்இரக்கம் அவனது சத்தியேயாகும். அருளாகிய சத்தியும் அவன் இல்லாமல் தனியே இருத்தல் இல்லை. அவனும் அருள் இல்லாமல் தனியே இருத்தல் இல்லை. சூரியன் தன் ஒளியோடு வேற்றுமையின்றி இயைந்து நிற்றல் போல இறைவன் தனது அருளோடு தாதான்மியமாய் இயைந்து நிற்பான். ஞானக் கண்ணைப் பெற்றவர்களது அறிவிற்கு இது விளங்கும்.

பதவுரை

ஈசற்கு - இறைவனுக்கு

அருள் உண்டாம் - உயிர்களை உய்வித்தல் வேண்டும் என்னும் இரக்கம் இயல்பாக உள்ளதாம்.

அது சத்தி அன்றே - அவ் இரக்கம் அவனது சத்தியன்றி வேறன்று.

அன்றே - அநாதியே

அருளும் அவன் அன்றி இல்லை - அருளும் அவன் இல்லாமல் தனியே இருத்தல் இல்லை

அருள் இன்று அவன் இல்லை - அருள் இல்லாமல் அவனும் தனியேயிருத்தல் இல்லை.

அருட்கண்ணார் - ஞானக் கண்ணைப் பெற்றவர்களது

கண்ணுக்கு - அறிவிற்கு

அரன் - இறைவன்

இரவி போல் - ஞாயிறு தனது ஒளியோடு பிரிப்பின்றி இயைந்து நிற்றல் போல

ஏய்ந்து நிற்கும் - தன் அருளோடு வேற்றுமையின்றி இயைந்து நிற்பன்.

விளக்கம்

திரோதான சத்தி:

இவ்வெண்பாவில் அருள் என்றும், சத்தி என்றும் குறிக்கப்பட்ட இறைவனது ஆற்றல் மறைப்பாற்றல் ஆகும். இது வடமொழியில் திரோதான சத்தி என்று சொல்லப்படும். இந்தத் திரோதானசத்தி உயிர்க்குயிராய் உள் நின்று உணர்த்தி உயிர்களுக்குப் புறப்பொருள்களைக் காட்டித் தன்னைக் காணவொட்டாமற் செய்யும். மும்மலங்களையும் செயற்படுத்தி உயிர்களை உலக வாழ்வில் பிணிப்புண்டு நிற்கும்படி செய்யும். மலங்களின் வழியாக உயிர்களைச் செலுத்துதல் பற்றி இத்திரோதான சத்தியும் மலம் என்று கூறப்படுவதாயிற்று. இச்செய்திகள் இரண்டாம் நூற்பா இரண்டாம் கூறில் நெல்லிற்கு உமியும் என்னும் வெண்பாவின் விளக்கத்தில் முன்னமே கூறப்பட்டுள்ளன.

ஐந்து மலங்கள்:

ஆணவம், கன்மம், மாயை என மலங்கள் மூன்றாகச் சொல்லப் பெறும் என்பது தெரிந்ததே. மாயை ஒன்றேயாயினும் அதனைக் காரண நிலை, காரிய நிலை என இரண்டாக வைத்துக் கூறுவர். அவற்றுள் காரண மாயையே மும்மலங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுவது. காரண மாயை இறையருளால் தனு கரண புவன போகங்களாக விரிந்து காரியப்படும். அக் காரியங்களாகிய உடம்பும், கருவியும், உலகும், நுகர் பொருளும் ஆகிய இவற்றை, அஃதாவது மாயையின் காரிய நிலையை- மாயேயம் என்ற சொல்லாற் குறிப்பர். இம் மாயேயமும் தனியொரு மலமாகக் கொள்ளப்படும். அதனோடு திரோதான சத்தியையும் கூட்டி, ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என மலங்கள் ஐந்து என்பர்.

மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்தெனவே (நீத்தல் விண்ணப்பம். 29)

என வரும் திருவாசகப் பகுதியில் இவ்வழக்கினைக் காண்கிறோம். பின் வந்த சாத்திர நூல்களிலும் இக்கருத்து இடம் பெறுவதாயிற்று.

திரோதான சத்தி செய்யும் நன்மை:

முதல்வனது சத்தி மும்மலங்களையும் தத்தம் தொழிலினைச் செய்யுமாறு ஏவி, உயிர்களை உலக வாழ்வில் பிணித்து முதல்வனை உணரவெட்டாது செய்யும் எனில் அதனை அருள் என்றல் பொருந்துமோ எனில், அங்ஙனம் பாசத்தை ஏவுதல் ஆணவமலம் தேய்ந்து நீங்கும் நிலையை எய்துதற் பொருட்டே யாதலின், அது பற்றியே அத்தகு நன்மையைச் செய்யும் திரோதான சத்தி ஈண்டு அருள் எனப்பட்டது.

முதல்வனது சத்தி மறைப்பாற்றலாய் நின்று, உயிர்களது அறிவை ஒரு காலைக்கு ஒரு கால் ஆக்கமாகிய முறையில் வேறுபடுத்தி வளர்த்து வரும் என்பதனை,

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை (திருவெம்பாவை 14)

என்னும் திருவாசக அடி உணர்த்தி நிற்கிறது.

உணர்த்தும் முறைமை:

முதல்வன் திரோதான சத்தி யுடையவனாய் உயிர்களுக்கு உள் நின்று உணர்த்தி, உலக அறிவைத் தந்துநிற்றலாகிய இது உணர்த்தும் முறைமை என்று கூறப்படும். இவ்வாறு இறைவன் உணர்த்தும் முறைமையினை

நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய் (6:62: 2)

எனவும்,

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக் காலே (6: 95 : 3)

எனவும் குறித்தருளினார் அப்பர் பெருமான்,

சகல நிலையில் உயிர்களின் உணர்விற்கு முதலாய் நின்று இறைவன் செய்யும் இவ்வுதவி காட்டும் உபகாரம் எனப்படும். நூற்பாவின் கருத்துரையில் தமது முதல் உபகாரம் என்றது இக்காட்டும் உபகாரத்தையேயாம்.

இறைவனது பொதுவியல்பு:

இந்நூற்பா இறைவனது பொதுவியல்பு ஆகிய தடத்த லக்கணம் கூறுவதாகும். ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பினால் உண்டாகும் இயல்பு பொதுவியல்பு எனப்படும் என்று முந்திய நூற்பாவில் கூறியது நினைவிருக்கலாம்.

பாசமும் பசுவும் மற்றொன்றின் சார்பினால் தம் தன்மை மாறுபடுவன. ஆனால் பதி எப்பொருளின்சார்பினாலும் மாறுபடுதல் இன்றி, என்றும் ஒரு தன்மையதாய் நிற்கும்.

ஆதலால், பிறிதொன்றன் சார்பினால் தன் தன்மை மாறுபடுதல் இல்லாத பதிக்குச் சொல்லப்பெறும் பொது வியல்பாவது, உலகத்தை நோக்கி நிற்கும் நிலையில் எய்தும் இயல்பேயாகும். அஃதாவது, இறைவன் அருவம், அருவுருவம், உருவம் ஆகிய நிலைகளைக் கொள்ளதலும், ஐந்தொழில் செய்தலும் பொதுவியல்பாகும்.

தனது உண்மையியல்பாகிய சொரூப நிலையில் தனக்கென ஓர் உருவும், பெயரும், தொழிலும் இல்லாத இறைவன் உலகை நோக்கிய தடத்த நிலையில் உயிர்களின் பொருட்டுப் பலப்பல உருவும் பெயரும் தொழிலும் உடையவன் ஆகின்றான்.

தூல ஐந்தொழில்:

தடத்த நிலையில் இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன.

1. படைத்தல்

படைத்தல் தொழில் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். படைத்தல் என்பதன் பொருள், உயிர்களை உண்டாக்குதல் என்பது அன்று. உயிர்கள் ஒரு காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. அவை என்றும் இருப்பவை. இறைவன் உள்ள அன்றே அவையும் உள்ளன.

என்றும் உள்ள உயிர்களின் அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய உடம்பு, கருவிகள், உலகு, நுகர் பொருள்கள் ஆகியவற்றை மாயை என்னும் மூலப் பொருளிலிருந்து இறைவன் உண்டாக்கிக் கொடுக்கின்றான். சடமாகிய உடம்பு முதலியவற்றை உண்டாக்கிச் சித்தாகிய உயிரோடு பொருத்துதலே இறைவன் செய்யும் படைப்புத் தொழிலாகும்.

2. காத்தல்:

உயிர்கள் தத்தம் வினைப் பயன்களை நுகர்தல் வேண்டி, அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட உடம்பு முதலியவற்றைக் குறித்த கால அளவு வரை நிற்கும்படி செய்கின்றான். இதுவே காத்தல் தொழில் எனப்படுகிறது.

3. அழித்தல்

வினைப் பயன்களாகிய இன்பத்துன்பங்களை மீட்டும் மீட்டும் நுகர்ந்த உயிர்கள் அதனால் இளைப்பு எய்தி நிற்கும் அல்லவா? அவ் இளைப்பினை நீக்குதற் பொருட்டு, இறைவன் உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து நீக்கி மாயையில் அவற்றை ஒடுங்கும்படியாகச் செய்கின்றான். இதுவே அழித்தல் தொழில் எனப்படுகிறது.

மேற்கூறிய முத்தொழிலையும் சுருங்கக் கூறினால், மாயா காரியங்களைத் தோற்றுவித்தலே படைத்தல், அவற்றை நிலை நிறுத்துதலே காத்தல், அவற்றை ஒடுக்குதலே அழித்தல் எனலாம். இம் முத்தொழிலும் மாயையினிடத்தில் இறைவன் நிகழ்த்துவன என்பது சிறிது உற்று நோக்கினால் புலனாகும். எஞ்சியுள்ள மறைத்தலும், அருள<லும் ஆகிய இரு தொழில்களையும் உயிரிடத்தில் இறைவன் செய்கிறான்.

4. மறைத்தல்:

ஐம்பொறி முதலிய மாயா கருவிகளால் உயிருக்குச் சிற்றறிவாகிய புலன் உணர்வை விளைவிக்கின்றான் இறைவன். இப்புலன் உணர்வு உயிரை உலகப் பொருள்களோடு பிணித்து, அப்பொருள்களையே மேலும் மேலும் பெற்றுத் துய்க்கும்படியான நாட்டத்தைச் செய்கிறது; மேல் <உள்ள அருளையும், அதனையுடைய இறைவனையும் உணர வெட்டாது செய்கிறது. இவ்வாறு உயிருக்கு மாயை கன்மங்களைக் கூட்டிப் புலன் உணர்வை உண்டாக்கி உலக வாழ்வில் அழுந்தி நிற்கும்படியாகச் செய்கின்றான் இறைவன்.

இச்செயலால் உயிர்கள் இறைவனை நோக்காது, உலகையே நோக்கி நிற்கும். ஆதலின், இஃது ஒரு வகையில் மறைத்தலேயாயிற்று. மறைத்தல் தொழிலாகிய இதனை இறைவன் ஏன் செய்ய வேண்டும் என்னும் வினா எழும். உயிரறிவை மறைத்திருக்கும் ஆணவ மலத்தின் ஆற்றலை மெலிவடையச் செய்வதற்கே இத்தொழிலை இறைவன் செய்கிறான் என்பதே அதற்கு விடையாகும்.

பந்தத்தைச் செய்தலே மறைத்தல் எனச் சுருங்கச் சொல்லலாம். நுனித்து நோக்கினால். மறைத்தல் தொழிலே படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றாய் நிகழ்கிறது என்பது புலனாகும். எனவே படைத்தல் முதலிய மூன்றும் மறைத்தலில் அடங்குவனவாகும்.

5. அருளல்;

உயிரைப் பிறப்பு இறப்புக்களில் செலுத்தி உழலச் செய்தலாகிய மறைத்தல் தொழிலின் பயனாய் அதனைப் பிணித்திருக்கும் ஆணவ மலத்தின் சத்தி மெலிந்து, பிணிக்கு வன்மையிழந்து நிற்கும். அந்நிலையில் அவ்வுயிர் உலகை நோக்காது இறைவனை நோக்கி நிற்கும். அத்தகைய உயிரை ஆட்கொண்டு திருவடியாகிய பேரின்பத்தை அளித்தலே அருளல் எனப்படுகிறது. வீடு என்பதும் இதுவேயாம்.

பந்தமும் வீடும்:

முதல் மூன்று தொழில்களும் மறைத்தலில் அடங்கும் எனப் பார்த்தோம். மறைத்தல் பந்தமும், அருளல் வீடும் ஆதலின் இறைவன் செய்யும் ஐந்தொழில்களும் பந்தம், வீடு என இரண்டாய்ச் சொல்லப் பெறும்.

பந்தமும் வீடும் படைப்போன் காண்க (திருவண்டப்பகுதி, வரி 52)

பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு (திருப்பொற்சுண்ணம், 20) எனத் திருவாசகம் கூறுவது காணலாம்.

இதுகாறும் கூறிவந்த ஐந்து தொழில்களும் தூல ஐந்தொழில் எனப்படும். இது தவிர, சூக்கும ஐந்தொழில், அதி சூக்கும ஐந்தொழில் என இரண்டு சொல்லப்பெறும்.

சூக்கும ஐந்தொழில்:

முற்றழிப்புக் காலத்தில் எல்லாவற்றையும் ஒடுக்கி நிற்கும் முதல்வன் உலகத்தை மீளத் தோற்றுவித்தற் பொருட்டு அதற்கு ஆவனவற்றைச் செய்வன். அந்நிலையில் அவன் செய்வனவே சூக்கும ஐந்தொழில் எனப்படும். அவை நுனுகி உணர வல்லார்க்கே விளங்கக் கூடியன. அவற்றைத் தனித்தனியே எடுத்துக்காட்டி விளக்குதல் அரிதாகும்.

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே (சிவபுராணம்,வரி 89) என்னும் திருவாசக அடியில் சூக்கும ஐந்தொழில் சொல்லப் பட்டுள்ளது. நள்ளிருள் என்பது முற்றழிப்புக் காலத்தைக் குறிக்கும். இங்கு நடனம் என்றது சூக்கும ஐந்தொழிலேயாகும்.

அதி சூக்கும ஐந்தொழில்:

இனி அதி சூக்கும ஐந்தொழிலைப் பார்ப்போம். உயிரானது புருவ நடுவில் நின்று, கருவிகளோடு கூடிப் பொருள்களை அறிந்து வருவதாகிய விழிப்பு நிலையிலேயே ஐந்தவத்தைகளை அடையும் என்பதை முந்திய நூற்பாவிற்கண்டோம். அவ் ஐந்தவத்தைகளில் உயிருக்கு அறிவை நிகழ்விக்கும் இறைவனது செயல் அதிசூக்கும ஐந்தொழில் எனப்படும். இவ்வைந் தொழில் உயிர்களுக்கு உலக அறிவைத் தருவதாகும்.

இவ்வதி சூக்கும ஐந்தொழில் பர நடனம் எனப்படும். புருவ நடுவில் நிகழ்வதாகிய இந் நடனம் இல்லையேல் உயிர்களுக்கு அறிவு இல்லை; செயல் இல்லை. இறைவன் உயிர்க்குயிராய் உள்நின்று உணர்த்தும் முறைமையே அதிசூக்கும ஐந்தொழில் என்பது உணர்தற்குரியது.

மேற்கூறிய மூவகை ஐந்தொழிலும் இறைவனுக்குரிய தடத்த லக்கணம் ஆகும்.

இறைவன் உயிர்களோடு அத்துவிதமாய் இயைந்து நின்று, அவை பிறப்பு இறப்பிற் படும்படியாகச் செலுத்தி நிற்பான் எனக் கூறுவதாகிய இரண்டாம் நூற்பாவில் தூல ஐந்தொழிலும், சூக்கும ஐந்தொழிலும் கூறப்பட்டுள்ளமை புலனாகும். இறையருள் உள்நின்று உணர்த்தவே உயிர்கள் உணரும் எனக் கூறுவதாகிய இவ்வைந்தாம் நூற்பாவில் அதிசூக்கும ஐந்தொழில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

எனவே இரண்டாம் நூற்பாவும், ஐந்தாம் நூற்பாவும் இறைவனுக்குரிய தடத்த லக்கணம் கூறுவன என்பது அறியத்தகும்.

இறைவனது உண்மையியல்பாகிய சொரூப லக்கணம் அடுத்து வரும் ஆறாம் நூற்பாவில் கூறப்படும்.

ஐந்தாம் நூற்பா முடிந்தது

No comments:

Post a Comment