கர்நாடக மாநிலம், சாமராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ளது மலய மாதேஸ்வரன் மலை (எம்.எம். ஹில்ஸ்). இங்கே, 156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஆலயத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீமாதேஸ்வரர். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள வீர சைவ மரபினருக்கு இவர்தான் குலதெய்வம்!
பெங்களூருவில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவிலும், மைசூரில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவிலும், கொள்ளேகாலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலும் உள்ள இந்தக் கோயில், மலையும் வனமுமாகத் திகழும் இடத்தில் அமைந்துள்ளது. யானைகள், காட்டெருமைகள், மான்கள், நரிகள், கரடிகள், சிறுத்தை மற்றும் புலிகள் ஆகிய விலங்குகள் இந்த வனத்தில் உள்ளனவாம்!
தமிழகத்தில் இருந்து சேலம், மேட்டூர், கொளத்தூர் வழியே சுமார் 4 மணி நேரம் பயணித்தால், ஸ்ரீமாதேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். கோயிலின் உண்டியல் வருமானம், வருடத்துக்கு சுமார் நாலரைக் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறது கர்நாடக அரசின் அறநிலையத்துறை.
ஒருகாலத்தில், இந்த மலை நடுமலை எனப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் இருந்து இங்கு வந்த ஸ்ரீமாதேஸ்வரர், மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தார். அதுமட்டுமின்றி, அதிசயங்கள் பலவற்றை அவர் நிகழ்த்தியதாகச் சொல்லிப் பூரிக்கின்றனர் மக்கள். காட்டுக்குள் இங்கும் அங்குமாகச் செல்வதற்கு, புலியையே வாகனமாகப் பயன்படுத்தினார் அவர் எனத் தெரிவிக்கிற பாடல்களும் உண்டு.
அற்புதமான ஆலயம்; அருமையான சந்நிதி. கருவறையில், ஸ்ரீமாதேஸ்வர மூர்த்தி லிங்க மூர்த்தமாக இருந்து, தவம் செய்துகொண்டிருக்கிறார் என்பது மக்களின் நம்பிக்கை.
மைசூர் மன்னராக இருந்த ஸ்ரீஜெய சாம்ராஜ ஒடையார் பகதூர் மகாசுவாமிகள், ஸ்ரீமாதேஸ்வரர் மீது கொண்ட அளவற்ற பக்தியால், மலையில் பக்தர்கள் தங்குவதற்குச் சத்திரம், நஞ்சன்கூடு எனும் இடத்தில் 15 ஏக்கர் நன்செய் நிலம், விலைமதிப்பற்ற தங்கம் மற்றும் வைர நகைகள் எனக் கோயிலுக்கு வாரி வழங்கியுள்ளார்.
''தமிழகத்துக்கு உட்பட்ட, கோயம்புத்தூர் மாவட்டத்தின் கீழ் இருந்த இடம் இது. 56-ஆம் வருடத்தில், கர்நாடக அரசின் கீழ் வந்தது. மகா சிவராத்திரி, யுகாதி, மகாளய அமாவாசை, தசரா, தீபாவளி, திருக்கார்த்திகை என விழாக்களுக்குக் குறையில்லாத திருக்கோயில்! இங்கே (100 ரூபாய் கட்டணம்), ரிஷபம், புலி மற்றும் ருத்திராட்ச வாகனங்களுடன் உத்ஸவர், கோயிலை வலம் வருவதைத் தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள். அதேபோல், 1501 ரூபாய் கட்டணம் செலுத்தினால், இரவு 7 மணிக்குக் கோயில் பிராகாரத்தில், தங்கத் தேர் வலம் வருவதைத் தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
மைசூர், கொள்ளேகால், சாம ராஜநகர், நஞ்சன்கூடு, குண்டல் பேட்டை ஆகிய இடங்களில் இருந்து பக்தர்கள் வருவதற்கு வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் 12 பேருந்துகள் இயங்குகின்றன. தவிர, அரசு சார்பில், மலையில் கெஸ்ட் ஹவுஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலில், மதியம் மற்றும் இரவில் அன்னதானம் நடைபெறுகிறது. பக்தர்களின் கோரிக்கைகளைத் தட்டாமல் நிறைவேற்றித் தந்தருள்கிறார் ஸ்ரீமாதேஸ்வரர்'' என்கிறார் கோயிலின் அர்ச்சகர் எம்.பிரசாத்.
அனுமலை, ஜெனுமலை, கனுமலை, பச்சை மலை, பவள மலை, பொன்னாச்சி மலை, கொங்கு மலை என ஏழுமலைகள் ஒன்று சேர்ந்ததே மலய மாதேஸ்வரன் மலை. இந்த மலையைச் சுற்றி, கிழக்குத் தொடர்ச்சி மலையில் 77 மலைகள் உள்ளனவாம்!
இந்த மலைகளில் வாழும் சோளிகர், ஜேனு குருபர், காடு குருபர், குருப கவுடா ஆகிய இனத்தவர்களின் குலதெய்வம், ஸ்ரீமாதேஸ்வரர்.
அவர்கள் மட்டுமின்றி, கோயிலுக்கு அருகில் தேவரஹள்ளி எனும் கிராமத் தில், 'தம்மடிகள்’ எனும் அர்ச்சகர் கள் வாழ்கின்றனர். இவர்கள் லிங்கதாரணம் கொண்டவர்கள்; அதாவது, லிங்கத்தைக் கழுத்தில் அணிந்திருப்பவர்கள். இவர்களின் குலதெய்வமும் ஸ்ரீமாதேஸ்வரர்தான்.
14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீமாதேஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீபசவேஸ் வரர் திருக்கோயில். இங்கே முன்மண்டபத்தில், ஸ்ரீவீர பத்ரர் விக்கிரகம் உள்ளது. கோயில் திருவிழாவின்போது, தீமிதி வைபவம் சிறப்புற நடைபெறுமாம்! வீரசைவர்கள் வணங்கும் முதல் க்ஷேத்திரம் என்றும் சிலர் சொல்வர்.
அதேபோல், சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது நாகலிங்க மலை. படமெடுத்த நாகம் போலவும், சிவலிங்கம் போலவு மாக இருக்கிற அமைப்பு பிரமிக்கத்தக்க ஒன்று. இங்கே, ஸ்ரீமாதேஸ்வரர் தவம் செய்த குகையும் உள்ளது (நாகலிங்கமலைக்குச் செல்ல சாலை வசதிகள் கிடையாது. ஆறு மலைகளைக் கடந்து, நடந்துதான் செல்ல வேண்டும்). லிங்கத்துக்கு அருகில் படமெடுத்த நாகம் போல் உள்ள பாறைக்குக் கீழே, கோயில் ஒன்று உள்ளது. நடுமலை எனப்படும் ஸ்ரீமாதேஸ்வரன் மலையையும் கோயிலையும் தரிசித்துவிட்டு, அதிகாலையில் கிளம்பினால், தேவரஹள்ளி எனும் கிராமம் வரை (சுமார் 2 கி.மீ. தொலைவு) நடப்பது சுலபம்; பிறகு கரடுமுரடான பாதையில் பயணிப்பது புதியதொரு அனுபவம்! தேவையான உணவு மற்றும் குடிநீருடன் பயணிப்பதே உத்தமம். தனித்தனியே செல்லும் பக்தர்கள்கூட, இந்தப் பாதையில் பாதுகாப்பு கருதி, ஒன்றுசேர்ந்து பயணிக்கின்றனர்.
மாதேஸ்வரன் மலையில் இருந்து இன்டிகநாத கிராமம் வரை, ஜீப் வசதியும் உண்டு. நாகலிங்கமலைக் கோயிலின் அர்ச்சகர், உணவு மற்றும் தங்குவதற்கு வசதிகள் செய்து தருவார். ஸ்ரீமாதேஸ்வரர் தவம் செய்த மலை இது. அவர் தவம் செய்யும் போது, அவருடைய வாகனமான புலி, அருகில் உள்ள குகையில் ஓய்வு எடுக்குமாம்! ஸ்ரீமாதேஸ்வரரின் திருவடிச் சுவடு, நாகலிங்கமலைப் பாறை ஒன்றில் இருப்பதைத் தரிசிக்க முடிகிறது.
மலய மாதேஸ்வரன் மலை மற்றும் நாகலிங்க மலை ஆகிய தலங்களுக்கு வந்து இறைவனை மனமுருக வேண்டினால், மலை போலான கவலைகளும் பிணிகளும் பனி போல் விலகிவிடும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.
கண்ணப்ப நாயனாரின் வாரிசுகள்தான் அர்ச்சகர்கள்!
''மாதேஸ்வரர் கோயில் சுவரில், சிவலிங்கத் திருமேனி மீது காலை வைத்து, வேடன் கண்ணப்பர், அம்பினால் தனது கண்ணைப் பெயர்த்தெடுக்கும் புடைப்புச் சிற்பத்தைப் பார்க்கலாம். அவரை கண்ணப்பநாயனார் எனப் போற்றுகின்றனர், அல்லவா! அவரின் வாரிசுகள் அதாவது வம்சாவளியினர், அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கின்றனர். அவர்களில் சுமார் 108 பேர் அர்ச்சகர்களாக இங்கே பணிபுரிகின்றனர். ஆமாம்... கண்ணப்பரின் வாரிசுகள்தான் இங்கே அர்ச்சகராகச் சேவையாற்ற முடியும்'' என்று சொல்லும் தலைமை குருக்கள் புட்டதேவர் சுவாமிஜிக்கு வயது 102.
''குருபர் எனும் மலை வாழ் இனத்தவரான ஜுஞ்சே கவுடா என்பவர் கட்டிய கோயில் இது. ஸ்ரீமாதேஸ்வரர் சுயம்பு மூர்த்தம்; சிராவணாசுரன் என்பவனை வதம் செய்வதற்காகத் தோன்றியவர் ஸ்ரீமாதேஸ்வரர் என்கின்றன புராணங்கள்.
இங்கேயுள்ள அந்தர கங்கையில் நீராடி, ஸ்ரீமாதேஸ்வரரை வழிபட்டால், சகல பாவங்களும் நீங்கும்; சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி'' .
|
No comments:
Post a Comment