Tuesday 22 August 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! -5

                          மகேசமூர்த்தி
கேச மூர்த்தி- ஒரு முகம், மூன்று கண்கள், ஜடா மகுடம், நான்கு திருக்கரங்கள் ஆகியவற்றுடன் பத்மாசனத்தின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரின் இரு பின் கரங்களில் மானும் மழுவும் உள்ளன. ஏனைய இரு கரங்களும் அபய- வரதமாக உள்ளன. இந்த மகேச மூர்த்தியின் அருளாடல்கள் இருபத்தைந்து தோற்றங்களில் திகழ்கின்றன. இவை மகேச்வர வடிவங்கள்.
சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுக்கும் பொருந்துமாறு இந்த மூர்த்தங்களைக் கீழ்க்கண்ட வாறு வகைப்படுத்துவர்.
ஈசான மூர்த்தி: 1. சோமாஸ்கந்தர், 2. நடராஜர், 3. ரிஷபாரூடர், 4. கல்யாண சுந்தரர், 5. சந்திரசேகரர்.
தத்புருஷ மூர்த்தி: 6. பிட்சாடனர், 7. காமதகனர், 8. காலசம்ஹாரர், 9. ஜலந்தரவதர், 10. திரிபுராந்தகர்.
அகோர மூர்த்தி: 11. கஜசம்ஹாரர், 12. வீரபத்ரர், 13. தட்சிணாமூர்த்தி, 14. கிராத மூர்த்தி, 15. நீலகண்டர்.
வாமதேவ மூர்த்தி: 16. கங்காளர், 17. சக்ரதானர், 18. கஜ முக அனுக்ரஹர், 19. சண்டேச அனுக்ரஹர், 20. ஏக பாதர்.
சத்யோஜாத மூர்த்தி: 21. லிங்கோத்பவர், 22. சுகாசனர், 23. உமா மகேச்வரர், 24. சங்கர நாராயணர், 25. அர்த்த நாரீச்வரர்
உயிர்களாகிய நாம் உய்யும் பொருட்டு, பல்வேறு வடிவங்களைத் தாங்கி இறைவன் ஆட்கொள்கிறார். அங்ஙனம் ஆட்கொள்ளும் வடிவங்கள், நமது தகுதிக்கு ஏற்ப மூன்று வகைப்படுகின்றன. அவை: போக வடிவம் (இன்பம்), யோக வடிவம் (சாந்தம்), வேக வடிவம் (கோபம்) என்பன.
மனைவி- மக்களோடும் மாடு- கன்றோடும் வீடு- வாசலோடும் வாழ விரும்பும் நமக்காக, நமது வாழ்வு சிறக்க- கல்யாண சுந்தரர், சோமாஸ்கந்தர், உமா மகேச்வரர், ரிஷபாரூடர், சந்திரசேகரர் முதலான போகத் திருமேனி தாங்கி வந்து அருள் புரிகிறார் சிவபிரான்.
நாம், மனம் ஒன்றி உயர்ந்த ஞான வாழ்வு வாழ - தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியாக, சுகாச னராக, லிங்கோத்பவராக, யோகத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார்.
நமது தீமைகளை அகற்றி ஆட்கொள்ள- காலனைக் கடிந்த மூர்த்தியாக, யானையை உரித்த மூர்த்தியாக, வீரபத்ரராக, காமனை எரித்த கண்ணுதற் கடவுளாக திருவுருவம் தாங்கி, வேகத் திருமேனி வடிவம் எடுக்கிறார் சிவபெருமான்.
இந்த மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கி ஆடல் வல்லானாக ஆடி நின்று, உலகம் அனைத்தையும் ஆட்டுவிக்கிறார் ஈசன்.
வானாகி, மண்ணாகி, வளியாகி (காற்றாகி), ஒளியாகி (தீயாகி), ஊனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காண்பரிய பேரொளிப் பிழம்பானவன் சிவபிரான். இவரை நின்ற- இருந்த- கிடந்த ஆகிய கோலங்களில் சிற்ப நூல், ஆகமங்கள், சைவ சித்தாந்த தத்துவ நூல், இலக்கியங்கள் ஆகியவற்றின் வாயிலாகப் படைத்து வழிபட்டு உய்ந்தனர் பெரியோர்.
இந்த மகேச்வர வடிவங்கள் இருபத்தைந்தும், சைவத் திருமுறை களிலும், தோத்திரங்களிலும், சாத்திரங்களிலும் பலவாறு போற்றப்படுகின்றன. இந்த வடிவங்கள் அனைத்தையும் ஆலயங்களில் ஒருசேரக் காண முடியாவிட்டாலும் ஒரு சில வடிவங்கள் தனிச் சிறப்புடைய தலங்களில் உள்ளன. இந்த மூர்த்தங்களை வடிவமைத்த சிற்பிகளை, கைகூப்பி தொழக் கடமைப்பட்டுள்ளோம்.
இறைவன் திருவுருவம் எப்படி இருக்கும்?
இந்த வினாவுக்கு விடை கண்ட பெருமை, நம் முன்னோரைச் சாரும். இறைவன் இப்படிப்பட்டவன், இந்த நிறத்தவன் என்று எழுதிக் காட்ட முடியாத பரம்பொருளை நமக்கு அடையாளம் காட்டியுள்ளனர். தாம் கண்டதுடன் நமக்கும் காட்டிச் சென்றுள்ள நம் அருளாளர்களையும், அவர் தம் நெறி நின்று அவற்றைக் கற்சிலையாகவும், பஞ்ச லோகப் படிமங்களாகவும் வடிவமைத்து, நிலையாக நாம் வழிபட்டு உய்ய வகை செய்த சிற்பிகளின் பெருமைக்கு உலகில் இணை ஏது?
இறைவனைக் காணத் துடிக்கிறார்கள் அடியார்கள். இறைவனை எப்படிக் காண்பது என்ற ஏக்கம் ஒரு புறம். அவன் எந்த வடிவத்தை உடையவன் என்று எவரேனும் கேட்டால் எப்படி விடையளிப்பது?
ஆம்! காணும் பொருளனைத்தும் அவனாகவே இருக்கும்போது, அவனுக்கென்று ஒரு திருவுருவம், தனி வடிவம் காட்டுவது கடினம்தானே!
எனவே, அடியார்க்கு எளியனாம் இறைவனின் அருட் கோலங்களைக் கோயில்களில் வடிவமைத் துள்ள சிற்பிகள், அருளாளர்களது சொற்கோயிலைக் கற்கோயிலாக்கி விட்டார்கள். எப்படியெல்லாம் இறைவன் நம் முன்னோருக்கு எளிமையாகக் காட்சி தந்து அருள் புரிந்தான் என்பதை நமது திருக்கோயில் சிற்பங்களும், சிலைகளும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு விளக்குகின்றன. இனி அதன் சிறப்புகளைப் பார்ப்போம்.

No comments:

Post a Comment