Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞானபோதம் பகுதி- 9

ஒன்பதாம் நூற்பா

முந்திய நூற்பாவின் இறுதியில் அருளைச் சேர்தல், சிவத்தைச் சேர்தல் என்ற இருநிலைகளைக் குறிப்பிட்டோம்.

அருட்கண்

சிவம் ஞாயிறு போன்றது. அருள் ஞாயிற்றின் ஒளி போன்றது. ஞாயிற்றைக் காணுதற்குத் துணை செய்வது அதன் ஒளியேயாகும். அதுபோலச் சிவத்தைக் காணுதற்குத் துணை செய்வது அதன் அருளொளியாகும்.

சிவத்தைக் காணுதற்குக் கருவியாதல் பற்றி அருளைக் கண் என்று குறிப்பிடுவதுண்டு.
அவனருளே கண்ணாகக் காணினல்லால்
அருட் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே
என வருவனவற்றில் இவ்வழக்கினைக் காணலாம்,

அருள் தன்னைக் காட்டுதல்:

ஞாயிற்றின் ஒளி மாந்தருக்கு உலகப் பொருள்களைக் காட்டி அனுபவிக்கச் செய்கிறது. அவ்வாறு பிற பொருள்களைக் காட்டுகின்ற அவ்வொளிதானே தன்னை நோக்குவார்க்குத் தன்னையும் காட்டி நிற்கும். அதுபோலத் திருவருள் உலகத்தை நோக்குகின்ற உயிருக்கு அதனை அறிவிக்கும். அவ்வருளே தன்னை நோக்குகின்ற உயிருக்குத் தன்னையும் காட்டி நிற்கும்.

அருள் வழியாகச் சிவத்தைக் காணல்: மாந்தர் உலகப் பொருள்களை நோக்கி நிற்கின்ற காலத்தில் அவற்றைக் காட்டுகின்ற சூரியவொளியை நோக்குவதில்லை. சூரிய ஒளியைப் பற்ற வேண்மாயின் உலகப் பொருளை நோக்கி நிற்கின்ற நிலையை விடுதல் வேண்டும். அதுபோல, வீடு வாசல் சொத்து சுகம் என வரும் உலகப் பொருள்களை அவாவி நிற்கின்ற காலத்தில் யாரும் திருவருள் ஒளியை நாடுவதில்லை. திருவருளைப் பற்ற வேண்டுமாயின் உலகத்தை நோக்கி நிற்கின்ற நாட்டத்தை விடுதல் வேண்டும்.

உயிர் உலகப் பற்றை விடுத்து அருளைப் பற்றி நின்று அதன் வழியாகச் சிவத்தைக் கண்டு இன்புறும்.

நிலை வேறுபாடுகள்: ஞானாசிரியரின் உபதேசத்தைப் பெறுதல் முதற்கொண்டு சிவத்தை அணைந்து இன்புறுதல் ஆகிய முடிநிலை வரை பல நிலை வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு குறிக்கலாம். பொருள் இயல்பை உணர்தல், பாசப்பற்றை விடுதல், திருவருளைப் பற்றுதல், தான் வேறாய் நில்லாமல் அத்திருவருளில் ஒன்றுதல், பின் சிவத்தில் ஒன்றுதல் என அந்நிலை வேறுபாடுகள் அமைகின்றன. முன்னே கூறிய கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல், என்பவற்றுள் இந் நிலைவேறுபாடுகள் அடங்கி நிற்றலைக் காணலாம். அஃது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

பற்றார்: கேட்டலினால் முப்பொருளியல்பையும் உள்ளவாறு உணர்தல் உண்டாகும். இவ்வாறு மெய்யுணர்வு உண்டாகவே, இதுகாறும் பொருளியல்பை மயங்கி உணரும்படியாகச் செய்த ஆணவமலமும், அதன் வழியாக வந்த கன்ம மலமும். அதற்குச் சார்பாய் நின்ற மாயா மலமும் ஆகிய மும்மலங்களும் நீங்கும். இவ்வாறு உலகத்தைப் பொருளாகக் கருதும் பாசநிலை நீங்கவே, உயிர் உலகத்தை நோக்குதலை விடுத்துத் தன்னை விட்டு நீங்காத திருவருளை உணர்ந்து பற்றுகிற நிலை உண்டாகும்.

திருவருளைப் பற்றிய பின்னரும் உயிரறிவு உலக இன்பத்தை மீண்டும் நோக்குதல் கூடும். இது பல பிறவிகளில் மீட்டும் மீட்டும் அனுபவித்து வந்த பழைய பயிற்சியினால் வருவது. உலகியலிலும் நில்லாமல், திருவருளிலேயும் உறைத்து நில்லாமல் அங்கும் இங்குமாக அலமரும் நிலை இது எனலாம். இவ்வாறு அலமருவோரை திருவருள் ஒன்றையே பற்றும் நிலைமையைப் பெறாத அவரைப் பற்றார் என்ற சொல்லால் குறிப்பிடலாம்.

உற்றார்: இவ் ஊசலாட்டம் ஒழிதற்குச் சிந்தித்தல் என்ற படிநிலை உதவும். உலக இன்பத்தின் சிறுமையையும் திருவருள் நிலைமையையும் பலகாலும் சிந்திக்கச் சிந்திக்க உலகப் பற்று முற்றிலும் ஒழியும். திருவருளில் உறுதியாக நிற்கும் நிலை உண்டாகும். யான் எனது அற்றுத் திருவருளில் அடங்கி நிற்றலாகிய இதுவே தெளிதல் என்ற படி நிலையாகும். தாம் வேறு நில்லாது திருவருளிலே பொருந்தி ஒன்றி நிற்பவராகிய அவரை உற்றார் என்ற சொல்லால் குறிப்பிடலாம்.

பெற்றார்: அதன் மேல் அத்திருவருள் வழியாகச் சிவத்தைக் கண்டு அச் சிவத்தினது இன்பத்தைத் தம்முடையதாகப் பெற்று அதனுள் அழுந்தி நிற்றலாகிய முடி நிலைப்பயன் வாய்க்கும். இதுவே நிட்டை கூடல் என்ற மேம்பட்ட நிலையாகும். இந்நிலையிற் சென்றோரைப் பெற்றார் என்ற சொல்லால் குறிப்பிடலாம். அதிதீவிரத்தில் அதிதீவிரம் என்னும் மிகு சத்தி நிபாதம் உடைய உத்தம மாணாக்கர் குருவின் உபதேசத்தைக் கேட்டபொழுதே சிந்தித்தலும் தெளிதலும் விரைய நிகழ்ந்து, வேறு முயற்சி வேண்டாமலே நிட்டை கூடுதலை எய்தி விடுவர். அஃதாவது பற்றார் என்ற நிலையையும், உற்றார் என்ற நிலையையும் விரைவாய்க் கடந்து, பெற்றார் என்னும் முடி நிலையைப் பெற்றுவிடுவர். உணர்த்த, விட்டு, அன்னியமின்மையின் அரன்கழல் செலுமே என்று எட்டாம் நூற்பா கூறியது அவர்களை நோக்கியே யாம்.

சாதகர்: இனி அத்தகு மிகு பக்குவ நிலையை எட்டாத ஏனையோருக்குக் கேட்டலின் பின் சிந்தித்தலும் தெளிதலும் முறையே மெல்ல நிகழ்ந்து பின்னரே நிட்டை கைகூடுவதாகும். அஃதாவது, முதலில் பற்றார் என்ற நிலையினராய் இருந்து, பல சாதனைகளை மேற்கொண்டு, உற்றார் என்ற நிலைக்கண் சென்று, பின்னரே பெற்றார் ஆவர். அத்தகு சாதகரை நோக்கியே ஒன்பது, பத்து, பதினோராம் நூற்பாக்கள் அமைந்துள்ளன. ஒன்பதாம் நூற்பா பற்றார் நிலை பற்றியது; சிந்திக்கும் முறையைக் கூறுவது. பத்தாம் நூற்பா உற்றார் நிலை பற்றி எழுந்தது. தெளியும் முறையைத் தெரிவிப்பது. பதினோராம் நூற்பா பெற்றார் நிலை பற்றி அமைந்தது. நிட்டை கூடும் முறையை உணர்த்துவது. இவற்றைக் கருத்திற் கொண்டு இவ்வொன்பதாம் நூற்பாவினுட் புகுவோம்.

நூற்பா

ஊனக் கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண்ணிழ லாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே

இந்நூற்பா எதனைக் கூற எழுந்தது என்பதனைக் கருத்துரையுட் கூறுகின்றார் ஆசிரியர்.
ஆசிரியர் கூறும் கருத்துரை
என்பது சூத்திரம் என் நுதலிற்றோ எனின், ஆன்ம சுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
கருத்துரையின் பொருள்
உயிர் தூய்மை அடைவதற்கு பாசத்தினின்றும் நீங்குவதற்கு-செய்ய வேண்டுவனவற்றை உணர்த்துவது இந்நூற்பாவின் கருத்தாகும்.

கருத்துரை விளக்கம் பாசத்தோடு கூடியிருத்தலே உயிருக்கு மாசு ஆகும். எனவே உயிருக்குத் தூய்மையாவது பாசத்தின் நீங்குதலேயாம் என்பது விளங்கும். பாசத்தின் நீங்குதலாவது பாசப் பொருள்களைத் தன்னின் வேறாகக் காணுதலேயாகும்.

கருத்துரை பற்றி எழும் வினா
ஞானாசிரியரின் உபதேசத்தைக் கேட்டபொழுது ஐம்பொறி முதலிய கருவிகளும் உலகப் பொருள்களும் ஆகிய பாசப் பொருள்கள் யாவும் தனக்கு வேறானவை என்ற உண்மை சாதகனிடத்தில் முதலில் பொதுவாய் நிகழும். இஃது எட்டாம் நூற்பாவில் கூறப்பட்டது. பின்னர் அவ்வுபதேசத்தைப் பல வகையில் சிந்திக்கும் பொழுது அவ்வுண்மை ஐயமாய் நிகழும். இதுவே இந்நூற்பாவில் கூறப்படுகிறது. பின்னர் அவ்வுபதேசத்தைத் தெளியும் பொழுது அவ்வுண்மை விளக்கமாய் நிகழும். இது பத்தாம் நூற்பாவில் கூறப்படுகிறது.

எனவே பாசங்கள் தன்னின் வேறானவை என்பதைத் தெளியக் கண்டு நீங்குதலாகிய ஆன்ம சுத்தியின் முடிநிலை அடுத்து வரும் பத்தாம் நூற்பாவில்தான் உள்ளது என்பது விளங்கும். அவ்வாறிருக்க, அதனை அந்நூற்பாவின் கருத்தாகக் கூறாது இந்நூற்பாவின் கருத்தாகக் கூறியது ஏன் என்னும் வினா எழுகிறது. அதற்கான விடையைக் காண்போம்.

விடை: ஆன்ம சுத்தி திருவருட் காட்சியோடு இயைபுடையது. ஒளி வருதலும் இருள் நீங்கி விடிதலும் ஒரு காலத்தில் உடன் நிகழ்தல் போல, திருவருட்காட்சி நிகழும்போது ஆன்ம சுத்தியும் உடன் நிகழ்வதாகும். அவை உடன் நிகழ்தலை பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி என இவ்வொன்பதாம் நூற்பா குறிப்பிடுகிறது.

எனவே அவ்வுடனிகழ்ச்சியை உணர்த்தக் கருதியே ஆசிரியர் திருவருளைத் தரிசிக்கும் முறையைக் கூறும் இந்நூற்பாவுக்கு ஆன்ம சுத்தி பண்ணுமாறு உணர்த்துவது எனக் கருத்துரை கூறினாராயிற்று. ஆன்ம சுத்தி பாச நீக்கமே யாதலின், ஆன்ம சுத்தி முற்றுப் பெறுவதாகிய பத்தாம் நூற்பாவுக்குக் கருத்துரை கூறும்போது இந்நூற்பா பாச நீக்கம் உணர்த்துவது எனக்குறிப்பிட்டார்.

எனவே ஒன்பதும் பத்தும் ஆகிய இவ்விரு நூற்பாக்களும் ஒரு பொருளையே இரு பகுதிப்படுத்துக் கூறுகின்றன என்பதை அறியலாம்.

நூற்பாவின் பொருள்: முதல்வன், குறை அறிவாகிய பசு ஞானத்தாலும் பாச ஞானத்தாலும் உணரப்படாதவன். அவனை அவனது அறிவாகிய பதி ஞானத்தையே கண்ணாகக் கொண்டு சாதகன் தனது அறிவினுள்ளே ஆராய்ந்து உணர்வானாக.

அப் பதிஞானத்தை எவ்வாறு பெறுவது எனில், மாயையின் காரியங்களாகிய பாசப் பொருள்கள் அனைத்தும் நிலைத்துள்ளவை போலத் தோன்றினாலும் மிக விரைவில் கானல் நீர் போல நில்லாது நீங்கிப் போவன என்னும் உண்மையைச் சிந்தித்து உணர்ந்து; அவற்றின் மேல் பற்றுச் செய்யாது விட்டொழித்தால், அப்பொழுது அந்தப் பதி ஞானமாகிய திருவருள் பிறவியாகிய கோடை வெயிலைத் தணிக்கின்ற குளிர்ந்த நிழலாய் உயிரறிவில் வெளிப்படும்.

அந்தப் பதி ஞானத்தால் முதற் பொருளாகிய சிவத்தைத் தனது அறிவினுள்ளே காணலாம். அவ்வாறு கண்ட காட்சி இடையே மறைந்து. முன்பு பன்னெடுங்காலமாகப் பழகி வந்த பழக்கத்தால் பாசப் பொருள்களை நோக்க நேரிடலாம். அந்நிலையில் அத்திருவருட் காட்சி நீங்காது நிலை பெறுதற் பொருட்டுத் திருவைந்தெழுத்து அதற்கேற்ற முறையில் வைத்துக் கணிக்கப்படும்.

பதவுரை

ஊனக் கண் -குறையுடைய உயிரறிவாலும்(பசு ஞானத்தாலும்)
பாசம் -பாசமாகிய கருவிகளால் உண்டாகும் அறிவாலும்(பாச ஞானத்தாலும்)
உணராப் பதியை - உணர முடியாத முதல்வனை
ஞானக்கண்ணினில்- அவனது அறிவு எனப்படும் பதி ஞானத்தையே கண்ணாகக் கொண்டு
சிந்தை -உனது அறிவினுள்ளே
நாடி -ஆராய்ந்து உணர்வாயாக
(அவ்வாறு பதிஞானத்தாற் காணின், அவன் உன் அறிவினுள்ளே காட்சிப் படுவான். அங்ஙனம் பதியை அறிவதற்கு அப்பதிஞானம் எவ்வாறு கிடைக்கும் எனில்)
பாசம் -தனு, கரணம், புவனம், போகம் ஆகிய பாசக் கூட்டம் அனைத்தும்
உராத் துனைத் தேர்த்து என - நிலையில்லாது விரைவில் நீங்கக் கூடிய கானல் நீரைப் போன்றவை எனத் தெளிந்து
ஒருவ -அவற்றின்மீது வைத்த பற்றை நீக்கினால்
பதி தண்ணிழலாம் -அந்தப் பதிஞானம் பிறவி வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும் நிழலாய் உன் அறிவின்கண் வெளிப்பட்டுத் தோன்றும்.


அஞ்செழுத்து-(அங்ஙனம் தோன்றிய அஃது உன் அறிவின் கண் நீங்காது நிலைபெறுதற்குத்) திருவைந்தெழுத்து
விதி எண்ணும் -விதிப்படி உச்சரிக்கப்படும்

சிறப்புரை :

ஊனம்-குறை; கண்-அறிவு.
குறைபாடு உடைய அறிவு என்றது பசு ஞானத்தை ஆகும்.
பாசம் என்பது ஆகுபெயராய்ப் பாச ஞானத்தைக் குறித்தது.
பதியாகிய சிவம் பாச ஞான, பசு ஞானங்களால் உணரப்படாது எனவும், பதி ஞானம் ஒன்றாலே உணரப்படும் எனவும் ஆறாம் நூற்பாவில் பார்த்தோம். அக்கருத்தே இங்கு வலியுறுத்தப்பட்டது.
நாடி என்பது இகர ஈற்று முன்னிலை ஏவல் வினைமுற்று. நாடுக, ஆராய்க என்பது பொருள்.
சிந்தை என்பது இங்கு ஆன்ம அறிவைக் குறித்து நின்றது.
தண்ணிழலாம் பதி என்பதில் உள்ள பதி என்ற சொல் ஆகு பெயராய்ப் பதி ஞானத்தை உணர்த்தியது.
எண்ணும் என்பது செயப்பாடு வினையாய் நின்றது. எண்ணப்படும் என்பது அதன் பொருள். எண்ணப்படுதலாவது, பல முறையும் சிந்தனையில் வைத்துக் கணிக்கப்படுதல்.

உராத் தேர்: கானல் நீருக்குப் பேய்த் தேர் என்ற ஒரு பெயர் உண்டு. அது பற்றியே கானலை உராத் துனைத் தேர் என்றார் ஆசிரியர். துனை-விரைவு. கானல் நீர் விரைவில் மறைவதாகலின் விரைந்து செல்லும் தேர் என்பதுபடத் துனைத் தேர் என்றார். அத்தேருக்கு உரா என்ற மற்றோர் அடைமொழியும் சேர்த்துள்ளார். ஊரா என்பதே உரா எனக் குறைந்து நிற்கிறது. எனவே அத்தேர் ஊராத் தேர் ஆகும். மற்றைய தேர்களெல்லாம் பாகர் செலுத்த அரசர் முதலியோர் ஊர்ந்து செல்லக் கூடியவை. அவ்வாறு ஊர்ந்து செல்லாத தேர் அல்லவா இது! ஏனைய தேர்களினின்றும் இதனை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே ஊராத் தேர் எனக் குறித்தாராயிற்று.

உராத் தேர் என்றதில் ஒரு நயம்

கானல் நீர் ஆகிய ஊராத் தேரை உராத் தேர் எனக் குறுக்கி ஏன் சொல்ல வேண்டும்? அதில் ஒரு நயமான குறிப்பு உள்ளது. ஊராத் தேர் என்றால் அச்சொல் நீண்டு ஒலிக்கிறது. ஆனால் கானல் நீர் நீண்ட காலத்திற்கு நிற்பதில்லை அல்லவா? குறுகிய காலத்தில் மறைந்து போகின்ற அதன் தன்மையைக் குறிக்கும் வகையில் அச் சொல்லையும் குறுகச் செய்து, குறைந்து ஒலிக்கும் படியாக உராத் துனைத் தேர் என அமைத்துள்ள நயத்தை நாம் எண்ணி மகிழலாம்.

இந் நூற்பாவின் பொருளை மூன்று கூறுகளாக அமைத்து விளக்குகிறார். அக் கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு.

கூறு பொருள் முதற் கூறு பதி ஞானம் ஆகிய சாதனம்
இரண்டாம் கூறு பதி ஞானத்தைப் பெறும் முறை
மூன்றாம் கூறு திருவைந்தெழுத்து ஆகிய சாதனம்

முதற் கூறு

இறைவன் பாச ஞானத்திற்கும் பசு ஞானத்திற்கும் அப்பாற் பட்டவனாய் இருப்பவன். ஆயினும் அவன் ஒரு வகையில் உணரப்படுபவன் என்று ஆறாம் நூற்பாவில் கூறினார் ஆசிரியர். கோசரமாய் உள்ளவன்-உணரப்படுபவன் என்று பொது வகையாற் கூறினாரேயன்றி, இன்ன வகையால் அவனை உணரலாம் என்று அங்கே சிறப்பாக எடுத்துக் கூறவில்லை. (உரைப் போக்கில் நாம் அவற்றை யெல்லாம் எடுத்துக் கூறியுள்ளோம் என்பது வேறு) அவ்விடத்தில் கூறாமற் சென்ற அக் கருத்தை இவ்விடத்தில் எடுத்துக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர்.

மேற்கோள்

ஈண்டு அம்முதலை ஞானக் கண்ணாலே காண்க-என்றது

மேற்கோளின் பொருள்

அம்முதல்வனைப் பதிஞானம் ஆகிய கண்ணாலே சாதகன் காண்க என்பது பொருள்.

அம்முதல்வன் பதிஞானமாகிய தன்னறிவால் உணரப்படுவான் எனச் சிறப்பு வகையால் கூறினாராயிற்று.

ஏது

அவன் வாக்கு மனாதீத கோசரமாய் நிற்றலான்

ஏது விளக்கம்

ஆறாய் நூற்பா இரண்டாம் கூறின் மேற்கோளில் வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாய் உள்ள சிவம் எனக் கூறியுள்ளது நினைவிருக்கலாம். அம்மேற்கோள் பகுதியையே இங்கு ஏதுவாக அமைத்துள்ளார்.

முதல்வன் வாக்கு எனப்பட்ட பாசஞானத்திற்கும், மனம் எனப்பட்ட பசு ஞானத்திற்கும் அதீதமாய்-அப்பாற்பட்டவனாய் இருப்பவன். அதே சமயத்தில் அவன் கோசரமாயும் உள்ளவன். அஃதாவது அறியவும் படுகின்றான் என்றால், எவ்வறிவினால் அவன் அறியப்படுகின்றான் என்னும் வினா எழும். வாக்கு மனாதீதம் என்றதனால் பாச ஞானம் பசு ஞானம் ஆகிய அந்த இரு ஞானங்களையும் எடுத்தோதி விலக்கினமையால், எஞ்சிய பதி ஞானத்தாலேயே அவன் அறியப்படுவான் என்பது சொல்லாமலே விளங்கும் அன்றோ? இதனால், அம்முதலை ஞானக்கண்ணாலே காண்க, என்ற மேற்கோள் நிறுவப்பட்டமை காணலாம்.

அருத்தா பத்தி :

இவ்விடத்தில் அருத்தாபத்தி என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஓர் எடுத்துக்காட்டின் மூலம் அதனை விளக்குவோம். ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். பகல் நேரத்தில் பச்சைத் தண்ணீரையும் அவர் பருகுவதில்லை. ஒரு வாரம் ஓடியது. ஆனாலு<ம் அவர் உடம்பில் வாட்டமோ மெலிவோ சிறிதும் காணப்படவில்லை. இஃது எதைக் காட்டுகிறது? அவர் இரவில் மறைந்து உண்ணுகிறார் என்பதைத்தானே காட்டுகிறது. உண்ணுதல் இல்லையாயின் உடல் மெலியாதிருத்தல் கூடாது ஆதலின் அவர் மறைந்து உண்ணுகிறார் என்று துணிவது அருத்தாபத்தியாகும்.

இவ்வாறு இன்றி இஃது இயலாது என்பதன் அடிப்படையில் ஒன்றைத் துணிதலே அருத்தாபத்தியாகும் என விளக்கம் கொடுக்கலாம். இவ்விடத்தில் இஃது எவ்வாறு பொருந்தி வருகிறது என்பதைப் பார்ப்போம்.

இருப்பவை இரண்டு ஞானங்களேயாகும். ஒன்று, இறைவனது அறிவாகிய பதிஞானம், மற்றொன்று உயிரினது அறிவாகிய ஆன்ம ஞானம். ஆன்ம ஞானமே பாசமாகிய கருவிகளின் வழியாக விளங்கும்போது பாசஞானம் எனப்படுகிறது. கருவிகளின் நீங்கித் தனது வியாபகத்தை உணர்ந்து செருக்கும்போது பசு ஞானம் எனப்படுகின்றது. ஆகவே பாச ஞானம் பசு ஞானம் இரண்டும் ஆன்ம ஞானமே என்பது தெளிவு. இதனால் பதி ஞானம், ஆன்ம ஞானம் என இரண்டு அறிவுகளே உள்ளன என்பது விளங்கும்.

இறைவன் உயிரறிவாகிய ஆன்ம ஞானத்தால் அறியப்படாதவன் என்பது உறுதியாயிற்று. ஆயினும் அவன் அறியப்படுவனாய் உள்ளான். ஆகவே அவன் அறியப்படுதல் பதிஞானத்தாலேயாம் என்று துணியலாம். பகல் உண்ணான் ஆயினும் பருத்திருத்தலைக் கொண்டு, வேறு வகையில் இரவில் உண்ணுகிறான் என்று துணிதல் போல, இறைவன் ஆன்ம ஞானத்தால் அறியப்படான். ஆயினும் அறியப்படுபவனாய் உள்ளான் என்பதைக் கொண்டு அவன் வேறு வகையில் பதி ஞானத்தால் அறியப்படுபவன் எனத் துணிகிறோம். அருத்தாபத்தியால் இம் முடிவுக்கு வருகிறோம்.

இனி, எடுத்துக்காட்டுச் செய்யுட்களை நோக்குவோம்.

எடுத்துக்காட்டு 1 ஆன்ம ஞானத்தாலே முதல்வன் அறியப்படான் என்பதை வலியுறுத்துதற்கு முதல் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

வெண்பா 54. நாடியோ என்போ நரம்பு சீக் கோழையோ
தேடி எனையறியேன் தேர்ந்த வகை-நாடி அரன்
தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்
என்நாம் என அறிவார் இன்று.

இதன் பொருள்

தமது இயல்பை ஆராயப் புகுவோர் நாடி, எலும்பு, நரம்பு முதலிய கருவிகளில் எது நாம்? என ஒவ்வொன்றாக ஆராயும்பொழுது அவற்றுள் ஒன்றையும் நாம் எனக் காணாமையால் என்னையே யான் அறியமுடியவில்லையே என்னும் திகைப்பு உண்டாகும்.

அந்நிலையில் நாடி முதலியவற்றுள் எது நாம் என்று ஆராய்ந்த இந்த ஆராய்ச்சியறிவு எவ்வாறு உண்டாயிற்று? என்று ஆழ்ந்து சிந்தித்தால் நம்முடைய அறிவுக்கு அறிவாய் உள்ள வேறோர் பேரறிவே இந்த ஆராய்ச்சியறிவைத் தந்தது என்று உணர்வர். அம்முறையில் அந்தப் பேரறிவாகிய பதி ஞானத்தை உணர்ந்து அப்பதி ஞானத்தாலே பதியாகிய இறைவனையும் உணர்வர். அதன் பின்பே பதியில் வியாப்பியமாய் உள்ள தமது இயல்பையும் உள்ளவாறு உணர்வர். இவ்வாறு தமது உண்மையியல்பை உணராராயின் வேறு எங்ஙனம் உணர்தல் இயலும்? இயலாது என்பதாம்.

பதவுரை

நாடியோ என்போ, நரம்பு, சீ, கோழையோ -(தமது இயல்பை ஆராயப்புகுவோர்)
நாடி, எலும்பு, நரம்பு, சீ, கோழை முதலியனவாய் உள்ள பொருள்களுள் எது நான்? என

தேடி -தம்மைத்தாம் தேடி நின்று(அவற்றுள் ஒரு பொருளையும் நான் எனக் கொள்ளுதல் கூடாமையால்)
எனை அறியேன் -என்னையே நான் அறிய முடியவில்லையே எனத் திகைத்து நிற்கும்பொழுது
தேர்ந்த வகை நாடி -நான் யார்? என்ற இந்த ஆராய்ச்சி அறிவும், நான் நாடி முதலிய பொருள்களுள் எதுவும் அன்று என்னும் இத்துணிவு உணர்வும் நமக்கு உண்டானது எவ்வாறு? என்ற சிந்தனை எழும். அவ்வாறு ஆழ்ந்து சிந்தித்தால், நம் உடம்பில் உள்ள கருவிகளால் நான் யார்? எனத் தன்னை அறியும் ஆராய்ச்சியறிவு உண்டாகியிருக்க முடியாது. இந்த ஆராய்ச்சி அறிவைத் தந்தது வேறோர் பேரறிவேயாகும். அதுவே நம் அறிவுக்கு அறிவாய் உள் நின்று இத்தகைய சிந்தனையை உண்டாக்கியிருக்க வேண்டும் என்பது புலனாகும். அப்பேரறிவே முதல்வனது அறிவாகிய பதி ஞானம் ஆகும் என்று இம்முறையில் பதிஞானத்தை உணர்ந்து
அரன் தன்னாலே -அந்தப் பதிஞானத்தினாலே
தன்னையும் கண்டு -முன்னர்ப் பதியாகிய இறைவனைக் கண்டு
தமைக் காணார் -பின்னர் அப்பதியில் அடங்கியுள்ள தம்மையும் காண்பர். அம்முறையில் தம்மைக் காணாதவர்
இன்று நாம் என் என அறிவார்? -தமது உண்மை இயல்பை வேறு எங்ஙனம் உணர்தல் இயலும்?

விளக்கம்

நாடி என்பு முதலியவற்றுள் நான் யார்? என ஆராயும் ஆராய்ச்சியறிவு நாடி முதலிய அக்கருவிகளால் உண்டாதல் இயலாது. ஆகவே அவ்வறிவைத் தந்தது முதல்வனது அறிவே என்பதை ஆன்மா சிந்தித்து உணரும். அவ்வாறு உணர்ந்த முதல்வனது அறிவையே கண்ணாகக் கொண்டு முதல்வனையும் உணர்ந்து, அவனிடத்தில் வியாப்பியமாய் உள்ள தனது இயல்பையும் உயிர் உணரும்.

எனவே, ஆன்மா தன்னை அறிதலே தலைவனை அறிந்த பின்னர் என்றால் அப்படிப்பட்ட தனது ஞானத்தைக் கொண்டு முதல்வனை அறிதல் என்பது எங்ஙனம் இயலும் எனக் கூறினாராயிற்று.

இரண்டாம் அடியின் இறுதியில் உள்ள அரன் என்பது அரனது ஞானத்தைக் குறித்தது.

தன்னை என்றது இறைவனை.

எடுத்துக்காட்டு 2

இறைவனைச் சிவஞானத்தாலன்றிப் பசு ஞானத்தால் அறிதல் இயலாது என்பதை மீண்டும் வற்புறுத்துவாராய் இரண்டாம் எடுத்துக் காட்டுக் கூறுகின்றார்.

வெண்பா 55. காட்டிய கண்ணே தனைக் காணா கண்ணுக்குக்
காட்டாய உள்ளத்தைக் கண்காணா காட்டிய
உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான் உள்ளத்திற் காண்

இதன் பொருள்

புறத்தில் உள்ள பொருள்களைக் காண்கின்ற கண் தன்னையும் அறிவதில்லை. தன்னைச் செலுத்தி நிற்கும் உயிரையும் அறிவதில்லை. அதுபோல முதல்வனால் செலுத்தப்பட்டுப் பலவற்றையும் ஆராய்கின்ற உயிரும் தன்னையும் தன்னைச் செலு<த்தி நிற்கும் முதல்வனையும் அறியமாட்டாது.

முதல்வன் உயிரினது ஆராய்ச்சி அறிவிற்குள் அறிவிக்கும் அறிவாய் மறைந்து நிற்கும் கள்வன் ஆகையால் அவனை உனது அறிவினுள்ளே சிவஞானமாகிய கண்ணால் நாடிக் காண்பாயாக.

பதவுரை

காட்டிய கண் -உயிரால் காட்டப்பட்டுக் கண்டு வருகின்ற கண்
தனைக் காணா -பிறபொருளைக் காணுமேயன்றித் தன்னைக் காண மாட்டாது
கண்ணுக்குக் காட்டு ஆய -கண்ணாகிய தனக்கு உருவத்தைக் காண்பித்து நிற்பதாகிய
உள்ளத்தை -உயிரையும்
கண்காணா -அக்கண் காணமாட்டாது
(அதுபோல)
காட்டிய உள்ளம் -இறைவனால் அறிவிக்கப்பட்டு அறிவதாகிய உயிரும்
தனைக்காணா -பிற பொருள்களை அறியுமேயன்றித் தன்னை அறியமாட்டாது. (தனக்கு அறிவித்து நிற்கும் இறைவனையும் அறியமாட்டாது)
தான் -இறைவன்
உள்ளத்தின் -உயிரினது
கண் -அறிவினுள்
ஆய -(மறைந்து)நிற்பவனாகிய
கள்வன் -கள்வன்(ஆகையால்)
உள்ளத்தில் -உன் அறிவினுள்ளே
காண் -(அவனை அவனது அறிவாலே) காண்பாயாக.

விளக்கம் முன் இரண்டடியில் உவமையும், பின் இரண்டடிகளில் பொருளும் நிற்கின்றன.

உயிர் தன்னறிவினால் தனக்கு வேறாய் உள்ள பாசப் பொருள்களையே அறியும்; தன்னின் வேறாகாது ஒன்றாய் உள்ள இறைவனை அறிதல் இயலாது. தனது அறிவுக்கு அறிவாய் உள்ள இறைவனைச் சிவஞானம் கண்ணாக நோக்கினால் அறிய இயலும் என்பது கூறப்பட்டது.

கள்வன்:

தோன்றாது நிற்றல் பற்றி இறைவனைக் கள்வன் என்றார். புறத்தே தேடிக் காண்பார்க்கு அவன் கள்வனாய் மறைந்து நிற்பான். ஆயின் அகத்தே சிவஞானத்தால் காண வல்லார்க்கு அவன் கள்ளம் நீங்கி வெளிப்பட்டு நிற்பான்.

இவ்வாறு பதியை அறிவதற்குப் பதி ஞானம் ஒன்றே சாதனம் என்பது இம் முதற் கூறில் இவ்விரண்டு எடுத்துக்காட்டுக்களாலும் இனிது விளங்க உணர்த்தப்பட்டது.

இரண்டாம் கூறு

பதி ஞானத்தை அறியாத நிலை:

பதி ஞானத்தாலேயே பதியைக் காணல் இயலும் எனப் பார்த்தோம். அவ்வாறாயின் அப் பதிஞானத்தை எங்கே எப்படித் தேடிப் பெறுவது என்னும் வினா எழுகிறது.

சூரியனது புறவொளி எங்கும் பரவி நிற்றல் போல இறைவனது பேரறிவாகிய பதிஞானம் அகவொளியாய் எங்கும் நிறைந்து நிற்கிறது. எல்லா ஆன்மாக்களோடும் என்றும் பிரிப்பின்றி நிற்கிறது.

பகலவனது ஒளியில் நின்றாலும் அதனை அறியமாட்டாத கூகையினது கண் போல, பதிஞானமாகிய பேரறிவோடு கூடியிருந்தும் உயிரறிவு அதனை அறியாது நிற்கும்.

வழித் துணைவன்:

ஒரு வழிப்போக்கன் தனி வழியே நடந்து போகிறான். அடர்ந்த காட்டுப் பகுதி அது. எங்கும் அச்சம் தரும் சூழ்நிலை. அவன் நடுங்கிக் கொண்டே செல்கிறான். ஆனால் அவனுக்குப் பின்னேயே ஒருவன் அவனக்குக் காவலாகத் தொடர்ந்து வருகிறான்.

தன் பின்னே வருகின்ற அத்துணைவனை அவ்வழிப்போக்கன் அறிய வில்லை. திரும்பிப் பார்த்தால் அல்லவா உண்மை தெரியும். தனக்குத் துணை உண்டு; அஞ்சவேண்டுவதில்லை என்ற தெளிவு உண்டாகும். அவனோ திரும்பியே பாராமல் துன்புற்று நடக்கின்றான்.

திருவருள் துணை

உயிர்களாகிய நம் நிலையும் அவ்வழிப் போக்கனது நிலை போன்றதேயாகும். நாம் பிறவியாகிய கடத்தற்கரிய காட்டு வழியிலே நடந்து கொண்டிருக்கிறோம். திருவருளாகிய வழித்துணை நம்மோடு தொடர்ந்து வருவதை அறியாதவராக இருக்கிறோம். அடுத்து என்ன வருமோ, என்ன நிகழுமோ என்ற கவலையோடு வாழ்வுப் பாதையில் இயங்குகிறோம்.

நம் அறிவு புறத்தே செல்கிறதே தவிர உள்முகமாகத் திரும்பி நோக்குவதில்லை. அகத்தே நோக்கினால் அன்றோ அன்று தொட்டு நம்மோடு உடனாக வரும் அருந்துணையாகிய அருள் ஞானத்தை-பதி ஞானத்தை அறிந்து கொள்ள இயலும்.

உலகச் சார்பு மறைத்தல் :

இமைப்பொழுதும் நீங்காத இறைஞானத்தை-சிவஞானத்தை உணர முடியாத படி அசத்தாகிய உலகச் சார்பு நம்மறிவை மறைத்துக் கொண்டிருக்கிறது. மண்ணும் பொன்னும், ஆடையும் அணியும் உணவும் சுவையும், சொத்தும் சுகமும், உறவும் சுற்றமும் என்னும் இவைகளே உலகச் சார்பாய் அமைந்து நம்மறிவைப் பற்றி நிற்கின்றன.

அவற்றையே நாமாகவும் நம்முடையதாகவும் எண்ணி அவற்றில் நம்மறிவு அழுந்தி நிற்கிறது. நம்மறிவு ஒன்றில் அழுந்துங்கால் மற்றொன்றை அறியாது அன்றோ? நம்மறிவு உலகச் சார்பில் அழுந்தி நிற்பதால் திருவருட் சார்பை உணர்வதில்லை. இதற்கு இரண்டு உவமைகள் கூறலாம்.

பளிங்கும் பல வன்னங்களும் :

1. பளிங்கின் மீது படிந்த வேற்று நிறங்கள் பளிங்கினிடத்தில் இயல்பாக உள்ள ஒளியைத் தோன்ற விடாமல் மறைத்து நிற்கின்றன. அவ்வேற்று நிறங்களைப் போன்றவை அசத்தாகிய உலகப் பொருள்கள்மீது நாம் கொண்டுள்ள பற்றுக்கள். அப்பற்றுக்கள் நம் அறிவினுள் இயல்பாகக் கலந்து நிற்கும் அருள் ஒளியை-பதி ஞானத்தை மறைத்து நிற்கின்றன.

பளிங்கில் பதிந்த வேற்று நிறங்களை விலக்கினால் அதனிடத்தில் உள்ள ஒளி விளங்கித் தோன்றும். அது போல, உலகப் பொருள்கள் நாமல்ல, நம்முடையனவும் அல்ல என்று கண்டு அவற்றின்மீது வைத்த பற்றை நீக்கினால் நம்மறிவில் இது காறும் புலப்படாதிருந்த பதிஞானம் இனிது விளங்கித் தோன்றும்.

சுவரும் சித்திரமும்:

2. ஒரு சுவர்மீது வேலைப்பாடு மிக்க சித்திரங்கள் தீட்டப் பட்டுள்ளன. அவை காண்பவர் கண்ணைக் கவர்ந்து இழுக்கின்றன. காண்பவரெல்லாம் அச்சித்திர வேலைப்பாட்டில் மயங்கி நின்றனரேயன்றி அவருள் ஒருவரேனும் அச்சித்திரங்களுக்குப் பின்னே உள்ள சுவரின் நிலையை எண்ணிப் பார்க்கவில்லை. அவ்வாறு எண்ணாதபடி அச்சித்திரங்கள் சுவரின் வடிவை மறைத்துத் தம்மையே நோக்கும்படி செய்கின்றன.

வந்தவரெல்லாம் சித்திர வனப்பில் அழுந்திச் சுவரின் நிலையை மறந்தாற்போல, ஆன்மாக்களாகிய நாமும் உலக வாழ்வில் அழுந்தி அதற்கு ஆதாரமாய் உள்ள திருவருள் நிலையை மறந்து நிற்கின்றோம். சித்திரங்களை நீக்கிப் பார்த்தால் சுவரின் வடிவம் புலப்படும். அதுபோல இச்சைகளை உவர்ந்து நீக்கினால் திருவருள் நிலை இனிது புலப்படும்.

அசத்தாகிய சார்புகளை நீக்கினால் ஆன்ம அறிவில் பதிஞானம் விளங்கித் தோன்றும் என்பதை இதுகாறும் விளக்கினோம். அக்கருத்தினை ஆசிரியர் சொற்சுருக்கம் அமையப் பின்வருமாறு அமைத்துக் காட்டுகிறார்.

மேற்கோள்

இனி அசத்தாய் உள்ள வன்ன பேதங்களை அசத்து என்று காண உளதாய் நிற்பது ஞான சொரூபம் என்று உணரற் பாற்று

மேற்கோளின் பொருள்

நிலையுடைய பதி ஞானத்தைக் காட்டாது மறைத்து நிற்கின்ற நிலையில்லாத பாசப் பொருள்களை இவை நிலையாய் நிற்பன அல்ல என்று சிந்தித்து உணர்ந்து அவற்றின் மேல் வைத்த பற்றினை நீக்கினால் பதிஞானம் விளங்கித் தோன்றும் என்பதாம்.

மேற்கோள் விளக்கம்

வன்னம் என்பதற்கு நிறம் என்பது பொருள். எனவே. வன்ன பேதங்கள் என்றால், பளிங்கில் பதிந்த பல நிறங்கள் என்றும் பொருள் கொள்ளலாம். சுவரில் எழுதிய சித்திரங்கள் என்றும் கொள்ளலாம்.

வேற்று நிறங்கள் பளிங்கின் ஒளியை மறைத்து நிற்றல் போலவும், வேறாகிய ஓவியங்கள் சுவரின் வடிவை மறைத்து நிற்றல் போலவும் உயிருக்கு வேறாய் உள்ள மாயா காரியப் பொருள்களின் மீது கொண்ட பற்றுக்கள் மறைப்பதால் உயிருக்கு உயிராய் உள்ளிருந்து ஓங்கும் பதி ஞானமாகிய திருவருள் புலப்படுவதில்லை.

தம்மையே நோக்கும் படியாக மயக்குகிற அம் மாயா காரியப் பொருள்கள் சத்து அல்ல. சத்துக்கு வேறான அசத்துக்களே என்பதைச் சிந்தித்து அறிந்தால் அவற்றின் மீது எழும் வேட்கை நீங்கும். அது நீங்கவே, சிவஞானம் இனிது விளங்கும் என்பதாம்.

கக்கிய சோறு:

உலகப் பொருள்களை அசத்தாகக் காணுதல் எவ்வாறு எனில், அவை உயிருக்கு உண்மையான சார்புகள் அல்ல என்று ஆசிரியர் அறிவுறுத்திய உபதேச மொழியை உறுதியாகப் பற்றி நின்று உலகமும் அதில் உள்ள நுகர்ச்சிப் பொருள்களும் என்றும் நிலைத்து நிற்பன அல்ல; அவையெல்லாம் முடிவில் மாயையில் ஒடுங்கி இல்லாமற் போவன என்பதைச் சிந்தித்துணர்ந்து அவ்வுணர்வில் நிலைத்து நிற்றல் வேண்டும்.

மேலும், உலகப் பொருள்கள் முன்னே பலகாலும் நுகர்ந்து நுகர்ந்து அலுத்து விட்ட சிற்றின்பத்தையே மீள மீளத் தருதலின் அவற்றைக் கக்கிய சோறு போலக் கண்டு அருவருத்து விடல் வேண்டும்.

உதவாத உடம்பின் நிழல்

ஒருவர் வெயிலில் வெதும்பி வருகிறார். வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்கு நிழலைத் தேடுகிறார். அவரது உடல் நிழலே இருக்கிறதே. அதில் சிறிது ஒதுங்கி நின்று இளைப்பாற முடியுமா? அவரது நிழலாக இருந்தும் அவருக்குப் பயன்பட வில்லையே. வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல் போல், ஒருவர் ஓடியாடித் தேடி வைத்த பொருளும் சமயத்தில் அவருக்கு உதவுதல் இல்லை.

எவரும் துணையாகார்

மனைவி, மக்கள், உடன்பிறந்தார் என்பவரெல்லாம் தம் தலைவரால் தங்களுக்குக் கிடைக்கும் பொருள் எவ்வளவு என்றே நோக்கி நிற்பர். அவர்களின் பொருட்டு அப்பொருளை மிக ஈட்டுதல் ஒன்றையே செய்து வாழ்நாளைப் போக்கி இறுதியில் எம்மைக் காக்க எம்முடன் வருக என்று அழைத்தால் அவர்கள் துணையாக உடன் வருவரோ?

உண்மையான செல்வம்

ஆதலால் சிற்றம்பலம் மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வமே நிலையுடைய செல்வம். பிற செல்வங்கள் நிலையுடையன அல்ல. உதவுவனவும் அல்ல

ஒண்குருவின் உபதேச மொழியில் ஊன்றி நின்று இவ்வாறு சிந்திக்கச் சிந்திக்கவே, உலகப் பொருள்களின் மீது செல்லுகிற நோக்கம் ஒழிவதாகும்.

அசத்து என்று காணுதல்

அசத்தாகிய உலகப் பொருள்களை நீங்குதல் என்றால் கண்களை இறுக மூடிக் கொண்டு அவற்றைப் பாராமல் இருத்தல் என்பதா? அல்லது காடு, மலை குகைகளில் ஓடி ஒளிதல் என்பதா? கண்களை மூடிக் கொண்டாலும், கண்காணா இடத்திற்குச் சென்று ஓடி ஒளிந்தாலும் அப்பொருள்கள் கருத்தை விட்டு அகலாவிடின் என் செய்வது? அது, நீங்கிய நிலை ஆகாது.

சடமாகிய உலகப் பொருள்கள் தனக்கு வேறானவை என்று தன் அறிவில் தெளியக் காணுதலே அவற்றை நீக்குதலாகும். இக்கருத்தை உணர்த்தவே மேற்கோளில் அசத்து என்று நீங்க என்று கூறாமல் அசத்து என்று காண எனக் கூறினார் ஆசிரியர்.

எனவே, உலகத்திடையே வாழ்ந்தாலும், காட்சிப்படும் உலகப் பொருள்களைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிந்தாலும் அவற்றின் வயப்படாமல், அவற்றில் அழுந்தி நில்லாமல், அவை தன்னுடையனவல்ல என்பதைத் தெளிந்து, வேறாகக் கண்டு அவற்றின் மேல் பற்றுச் செய்யாது நிற்கும் நிலை வருமானால் அதுவே நீங்கிய நிலையாகும்.

பதி ஞானம் புதிதாய் வந்தது அன்று;

இனி உளதாய் நிற்பது ஞான சொரூபம் என்கிறார் ஆசிரியர். பிறவிக் குருடன் ஒருவன் மருத்துவ உதவியினால் கண் பெறுவானாயின் அவனுக்குச் சூரியவொளி புதியது போலத் தோன்றும். ஆயின். அவ்வொளி புதிதாய் வந்ததன்று. முன்னரும் அவ்வொளியில் தான் அவன் நின்றான். இப்பொழுதும் அதே ஒளியில்தான் நிற்கிறான். இது காறும் அதனை அறியாதிருந்த அவன் இப்பொழுது முதன்முதலாக அறிய வரும்பொழுது அது புதியதுபோலத் தோன்றுகிறது. அவ்வளவே.

அதுபோலப் பாசப் பொருளோடு கூடிப் பாசமாய் நின்ற உயிர் தன் அறிவில் என்றும் நீங்காது நிற்பதாகிய பதி ஞானத்தை உணராதிருந்தது. பின் ஆசிரியரின் அருளுரையைக் கேட்டுச் சிந்தித்து, அச் சிந்தனையால் பாசப் பொருள்களை வேறாகக் கண்டு நீங்கிப் பதி ஞானத்தை உணர்ந்தபோது அந்த ஞானம் முன் அறிந்திராத ஒன்று ஆதலால் அவ்வுயிருக்குப் புதியது போலத் தோன்றும். ஆனால் அது புதிதாய் வந்தது அன்று. முன்பே இருந்ததாகும். இக்கருத்தை உணர்த்தவே உளதாய் நிற்பது ஞான சொரூபம் என்றார் ஆசிரியர்.

இவ்விரண்டாம் கூறில், மேற்கோள் ஒன்றே உள்ளது. ஏதுவை வேறாக வைத்துக் கூறவில்லை என்பது அறிதற்குரியது.

இனி, எடுத்துக்காட்டுச் செய்யுட்களை நோக்குவோம்.

எடுத்துக்காட்டு 1

அசத்தை அசத்து என்று கண்டு நீங்கிய ஒருவரது உணர்வில் பதி ஞானம் விளங்கித் தோன்றும் முறையை இங்கு உணர்த்துகிறார்.

வெண்பா

56. நிற் குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ
வானே முதல் களையின் வந்து

இதன்பொருள்

இறைவன் சத்துவம் முதலிய முக்குணங்களும் இல்லாதவன்; மல கன்மங்களைக் கடந்தவன். நிலைத்த இன்பப்பொருளாய் உள்ளவன். ஆன்மாவிற்கும் அப்பால் உள்ளவன். இத்தன்மைகளால் அவன் தனக்கு உவமையில்லாதவன். அத்தகைய தனிப் பொருளாகிய முதல்வன் ஆகாயம் முதலிய பூதங்களால் ஆகிய உலகமும் உலகப் பொருள்களும் ஆகியவற்றை அசத்து என்று கண்டு நீக்கிய பொழுது அவ்வான்மாவின் அறிவிற்குள் அறிவாய் விளங்கித் தோன்றுவான்.

பதவுரை

நிற்குணனாய் -மாயையின் குணங்களாகிய சத்துவம், இராசதம், தாமசம் ஆகிய முக்குணங்களும் இல்லாதவனாய்(எனவே பிரகிருதி மாயையைக் கடந்து நிற்பவனாய்)
நின் மலனாய் -அசுத்த மாயையில் உள்ளவர்க்கு உரிய ஆணவம் கன்மம் என்னும் மலங்கள் இல்லாதவனாய் (எனவே அசுத்த மாயையைக் கடந்து நிற்பனவாய்)
நித்தியானந்தனாய் -நிலையாத இன்பத்தைத் தரும் சுத்த மாயை போலாது நிலைத்த இன்ப வடிவினனாய் (எனவே சுத்த மாயையைக் கடந்தவனாய்)
தன் பரமாய் -உயிரையும் கடந்து அதற்கும் மேலானவனாய்
நின்ற தனி முதல்வன் -இவ்வாறு நிற்கின்ற ஒப்பற்ற தனிப் பொருளாகிய முதல்வன்
வானே முதல் களையின் -வான் முதலிய பூதங்களால் ஆன உலகமும், உலகப் பொருள்களும் ஆகியவற்றை அசத்து என்று கண்டு நீக்கியபொழுது
அளவு இறந்து -முதலில் சுட்டறிவுக்கு உட்படாமையால்
அற்புதம் போல் வந்து -வெறும் சூனியம் போலத் தோன்றி
(பின்னர்)
ஆனா அறிவாய் -உயிரினது வியாபகமான அறிவினுள்ளே நீங்காத அறிவாய்
தோன்றானோ -விளங்கமாட்டானோ?(விளங்கியே நிற்பான்.)

(முதல்வன் விளங்கித் தோன்றுவான் என்று கூறப்பட்டாலும், அவனது அறிவாகிய பதிஞானம் முதலில் விளங்கித் தோன்றும் என்பதே கருத்தாகும்)

விளக்கம்

வேறுபட்ட இயல்பினன்

ஏனைய அசத்துப் பொருள்கள் சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குண வடிவாய் நின்று அளவிட்டு அறியப்படுவன. ஆணவம், கன்மம் என்பவற்றோடு பொருந்தியிருப்பன; நிலையற்ற இன்பத்தையே தருவன. இறைவன் இப்படிப்பட்ட அசத்துப் பொருள்கள் போலன்றி வேறுபட்ட இயல்பு உடையவன் என்பதையே முதலிரண்டடிகளில் உணர்த்தினார் ஆசிரியர்.

சிவஞானம் பொருளால் சிவத்தின் வேறாகாது அதன் குணமே ஆகலான் அவ்வொற்றுமை கருதி, சிவஞானம் தோன்றும் என்று கூறுவதற்குப் பதிலாக முதல்வன் தோன்றுவான் என்றார். அங்ஙனம் கூறினாரேனும், சிவஞானம் தோன்றும் என்பதே கருத்தாகும்.

அற்புதம்

சிவஞானம் என்றும் எங்கும் இல்லாததொரு புதுமையுடையதாய், சுட்டறிவிற்கு அடங்காத வியாபகமாய்த் தோன்றுதலின் அற்புதம் போல் என்றார்.

பொருந்தாவுரை

நிர்க்குணன் என்பதற்கு இறைவன் யாதொரு குணத்தையும் உடையவனல்லன் என்று பொருள் கூறினால் அது சைவ சித்தாந்தத்திற்கு மாறாய் முடியும்; மாயாவாத உரையாய் அமையும், எவ்வாறெனில்,

மாயாவாதத்தில் பிரமம் அறிவு மாத்திரமாய் இருப்பது; அஃது அறிவை உடைய பொருளன்று. அஃதாவது குணமேயன்றிக் குணத்தையுடைய பொருள் அன்று எனப்படுகிறது. இந்நிலையைச் சைவ சித்தாந்தம் ஏற்பதில்லை. அறிவு என்பது குணம், குணம் ஒரு பொருளைச் சார்ந்து நிற்குமேயன்றித் தனித்து நில்லாது. ஆகவே பிரமம் வெறும் அறிவு மாத்திரையாய் நிற்பது என்பதைச் சித்தாந்தம் உடன்படுவதில்லை.

சைவ சித்தாந்தத்தின்படி, குணம் இல்லாமல் பொருள் என்பது இல்லை. எப்பொருளுக்கும் இது பொருந்துவதாகும். குணத்தை உடைய பொருள் குணி எனப்படும். குணியும் குணமும் என்றும் சேர்ந்தேயிருக்கும். இதற்கு இணங்கச் சித்தாந்தத்தில் இறை, அறிவாகிய குணத்தை உடைய குணிப் பொருள் என்றே கொள்ளப்படுகிறது. இதனால் நிர்க்குணன் என்பதற்குக் குணம் இல்லாதவன் என்று பொருள் கூறுதல் பொருந்தாது என்பது விளங்கும். வேறு எவ்வகையில் பொருள் கூறுவது என்ற வினா எழுகிறது. அதற்குப் பின் வருமாறு விடை கூறலாம்.

உயிரும் முக்குணங்களும்

உயிர்கள் சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய முக்குணங்களை எய்தி, அவற்றால் இன்ப துன்ப மயக்கங்களை அடைகின்றன. இம் முக்குணங்கள் உயிரின் குணங்கள் அல்ல; சடமாகிய மாயையின் குணங்கள் ஆகும். மாயையினின்றும் தோன்றிய உடம்பும் ஐம்பொறி மனம் முதலிய கருவிகளும், உலகப் பொருள்களும் ஆகிய யாவும் முக்குண மயமாய் இருப்பவை.

சார்ந்ததன் வண்ணமாதல் உயிரியல்பு என்பது நாமறிந்தது. உயிர் மாயையின் காரியங்களாகிய உடம்பையும், கருவிகளையும் பிறவற்றையும் சார்ந்து அது அதுவே தான் என நிற்பதனால் அம் மாயையின் குணங்களாகிய சத்துவம். இராசதம், தாமதம் ஆகியவற்றையும் தன் குணங்களாகவே கொண்டு நிற்பதாகிறது. இக்குணங்கள் உயிருக்குச் செயற்கையேயன்றி இயற்கையல்ல. இச்செயற்கைக் குணங்களை எய்தி அவற்றால் முன்னே சொல்லியபடி இன்ப துன்ப மயக்கங்களை அடைந்து உழல்கிறது.

நிர்க்குணன் என்பதன் பொருள்

இறைவன் இத்தகைய நிலைபேறில்லாத, மாயையின் குணங்கள் இல்லாதவன் என்பது பற்றியே நிர்க்குணன் எனப்படுகின்றான். ஆயினும் அவன் நிலை பெற்ற அருட்குணங்களை எண் குணங்களை உடையவன் ஆவான்.

எடுத்துக்காட்டு 2

57. சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்து என்னச்
சட்ட இனி உளது சத்தே காண் சுட்டி
உணர்ந்த நீ சத்து அல்லை உண்மையைத் தைவம்
புணர்ந்ததனால் பொய் விட்டுப் போம்.

இதன் பொருள்

சுட்டி உணரப்படுகின்ற உலகப் பொருள்களை இது அசத்து இது அசத்து என ஒவ்வொன்றாகச் சுட்டி அறிந்து கழித்துக்கொண்டு சென்றால் முடிவில் நிலையுடையதாய் விளங்கி நிற்பது சத்தாகிய முதற் பொருளே யாகும்.

அசத்தை யெல்லாம் நீக்கிய பொழுது உயிராகிய என்னையே யான் காண்பேன். ஆதலால் யானே அச்சத்து ஆவேன் என்று நீ கூறுவாயாயின், அங்ஙனம் அன்று. இது அசத்து, இது அசத்து என ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து கழித்துக் கொண்டு வந்தாய்; அஃதாவது சுட்டறிவோடு இயைந்து நின்றாய். ஆயின் சுட்டறிவோடு சிறிதும் இயைபில்லாதது சத்தாகும். அதனால் நீ சத்து ஆகாய்.

அங்ஙனமாயின் அசத்தை நீக்கிய பின்பும் எனக்குச் சுட்டுணர்வு நீங்குதல் இல்லையோ எனின், அசத்தை அசத்து என்று கண்ட அளவில் நில்லாது அதனின் நீங்கிச் சத்தின் வசப்பட்டு அதனைக் கூடினாயாயின் செயற்கையாகிய சுட்டுணர்வு உன்னை விட்டு நீங்கும்.

பதவுரை

சுட்டி உணர்வதனை -சுட்டறிவினால் உணரப்படுகின்ற பொருளை
சுட்டி அசத்து என்ன -அவ்வாறு சுட்டி அறிந்து இது அசத்து, இது அசத்து என ஒவ்வொன்றாக அனைத்தையும் நீக்கிச் சென்ற இடத்து
இனி சட்ட உளது சத்தே -முடிவில் நிலையுடையதாய்ப் புலனாவது சத்தேயாம்; பிறிதொன்றில்லை.
காண் -அதனை நீ அறிவாயாக

(அசத்தையெல்லாம் நீக்கியவிடத்து என்னையே யான் காண்பேன்; யான் அசத்து அல்லேன்; ஆகவே யானே அச்சத்து ஆவேன். என்று நீ கூறுதல் தகாது. ஏனெனில்)

சுட்டி உணர்ந்த நீ சத்து அல்லை -அசத்தையெல்லாம் உனது சுட்டறிவால் சுட்டியறிந்து கழித்து வந்தாய். எனவே நீ சுட்டறிவோடு இயைபு உடையவன் ஆவாய். ஆனால் சுட்டறிவோடு சிறிதும் இயைபு இல்லாதது சத்தாகும். அதனால் நீ சத்து ஆகாய்.

(அங்ஙனமாயின், அசத்தை நீக்கிய பின்னரும் எனக்குச் சுட்டுணர்வு நீங்குதல் இல்லையோ எனின்)

உண்மையைத் தைவம் புணர்ந்து -அசத்தை அறிந்து அதன் வசப்பட்டு நிற்றலை விட்டுச் சத்தை அறிந்து சத்தின் வழிபட்டுச் சத்திற்கு அடிமையாய் அதனைச் சார்ந்து நின்றால்

அதனால் பொய் விட்டுப்போம் -அச்சார்பினால் செயற்கையாகிய சுட்டுணர்வு உன்னை விட்டு நீங்கி விடும்.

விளக்கம்:

உண்மை-சத்து; முதற்பொருள். தைவம்-தேவனது உடைமை

எனவே, உண்மையைத் தைவம் புணர்தல் என்பதன் பொருள், சத்தாகிய முதற்பொருளின் வசப்பட்டு அதற்கு அடிமையாய் நிற்றல் என்பதாகும்.

எடுத்துக்காட்டு 3

முந்திய எடுத்துக்காட்டில் முதற் பொருளுக்கு அடிமையாய் நிற்றல் என்பதனைக் குறிப்பிட்டோம். அதன் பொருள், தியானத்தில் ஈடுபட்டு அம்முதற்பொருளோடு ஒன்றுதல் என்பதாம். அத் தியானம் சிவோகம் பாவனை எனப்படும். சிவோகம் பாவனை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

சிவோகம் பாவனை

உயிருணர்வு ஒரு பொருளைப் பற்றும் போது அப்பொருளுக்கு வேறாய் நில்லாது அதனிடத்தில் அழுந்தி அதன் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்கும். இவ்வியல்பைச் சார்ந்ததன் வண்ணமாதல், அது அதுவாதல் என்றெல்லாம் குறிப்பிடுவர்.

உயிர் பாசத்தோடு கூடியபோது பாசமாய் நிற்றல் இவ்வியல்பினாலேயாம். உயிர் பாசமாய் நிற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். வாழ்வுக்காகப் பணம் என்று இல்லாமல் பணத்திற்காகவே வாழ்வோர் பலர் உண்டு. அவர்கள் பகலும் இரவும் பணம் பணம் என்றே அலைவார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் என்னென்ன வழிகளில் பொருளை ஈட்டலாம் என்பதாகவே இருக்கும். அவர்கள் பேச்செல்லாம் பொருளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். அவர்கள் செயலெல்லாம் பொருள் மேற் செல்வதாகவே இருக்கும், சுருங்கக் கூறினால், அவர்களின் உணர்வு அப்பொருட் செல்வத்தோடு ஒன்றிவிட்டது எனலாம். அதனால் தான் வேறு, அப்பொருட்செல்வம் வேறு என்றில்லாமல் அதுவே தானாக வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் தம் வீட்டில் மறைத்து வைத்திருந்த மிகப் பெரிய தொகைகளவு போய் விட்டது என்று கேள்விப்பட்டவுடனே மயக்கம் போட்டு விழுவார்கள். ஏன், மாண்டு போனவர்களும் உண்டு. இந்நிலை எதனால் ஏற்பட்டது? பணமே தான் என்று அதனோடு ஒற்றுமைப்பட்டு நின்றதனாலேயே ஏற்பட்டது. பணம் என்பது பாசப் பொருள் தானே. அப் பாசத்தோடு கூடியபோது உயிர் அதுவாகவே நிற்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஏனைய பாசப் பொருள்களோடும் உயிர் இவ்வாறே ஒற்றுமைப்பட்டு நிற்கிறது.

உயிர் பாசப் பொருளோடு எவ்வாறு ஒற்றுமைப்பட்டு நிற்கிறதோ அவ்வாறே பதியாகிய சிவத்தோடும் கூடி ஒற்றுமைப்பட்டு நிற்றல் இயலு<ம்.

உயிர் பலப்பல பிறவிகளில் பாசப் பொருள்களோடு கூடியிருந்த பழக்கத்தினால் அவற்றோடு ஒற்றுமைப்படுதல் அதற்கு எளிதாகிறது. ஆயின், சிவ முதற் பொருளோடு, மெய்யுணர்வு பெற்ற இப்பொழுதுதானே, பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் பாசத்தோடு கூடியிருந்த அந்தப் பழக்கம் தவிர்ந்ததனால் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கத்தை விடாமல், சில சாதனைகளை மேற்கொண்டு சிவத்தோடு இடைவிடாது ஒற்றுமைப்பட்டு நிற்கக்கூடிய நிலையைப் பெறலாம்.

சிவமும் உயிரும் பொருளால் இரண்டாயினும் இரண்டு என்னும் தன்மையின்றி ஒற்றுமைப்பட்டு நிற்பவை. சிவம் வியாபகமாய் மேம்பட்டு நிற்க, உயிர் அதில் வியாப்பியமாய் அடங்கிப் பிரிப்பின்றி இயைந்து நிற்பது. இவ்வாறு இருவரும் பிரிந்து நில்லாது ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற நிலையை உயிர் இடைவிடாது உணர்ந்து சிவன் நான் எனப் பாவித்தல் வேண்டும். அவ்வாறு பன்னாள் பாவனையால் உணர்ந்து நிற்பின் பின்பு உண்மையிலேயே சிவமாம் தன்மை உண்டாவதாகும். அப்பாவனையையே சிவோகம் பாவனை எனச் சிவாகமங்கள் கூறுகின்றன. சிவோகம்-சிவ, அகம்-சிவன் நான்(ஆனேன்)

உலக நெறியில் காதல் வாழ்வில் தலைவன் தலைவியர் இருவராம் நிலைமையின்றி ஒற்றுமைப்பட்டு நிற்பர். திருக்கோவையாரில் வரும் தலைமகன் தான் வேறு அவள் வேறாய் நில்லாது, தானே அவளாம் தன்மை பெற்று நிற்றலை நான் இவளாம் பகுதிப் பொற்பு எனக் குறிப்பிடுகிறான். மெய்ந்நெறியில் கூறப்படும் சிவோகம் பாவனையும் இவ்வியல்பினதேயாகும்.

உன்னைப் போல் என்னைப் பாவிக்க மாட்டேன்(7:54:5) என்று சுந்தரர் சொல்வதும், யாதொன்று பாவிக்க நான் அது வாதலால் உன்னை நானென்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் (எங்கும் நிறைகின்ற, 3) என்று தாயுமானவர் கூறுவதும் இப்பாவனையேயாம்.

சிவோகம் பாவனையால் மல வாசனை நீங்குதல்

உயிர் சிவோகம் பாவனையில் உறைத்து நின்று, பிற உணர்வுகள் தோன்றாதபடி திருவருள் உணர்வு ஒன்றையே பற்றி நிற்குமாயின் மல வாசனை அடியோடு நீங்குவதாகும். இதனை ஓர் உவமை மூலம் விளக்கலாம்.

பளிங்குத் தூண் காலை நேரத்தில் சூரியனது ஒளியைக் கிழக்குப் பக்கத்தில் மட்டும் கவர்ந்து நிற்கும். பிற பக்கத்தில் வேறு பொருள்களின் நிழலைத் தன்னிடத்தில் கொண்டு நிற்கும். மாலைப் போதிலு<ம் அவ்வாறே சூரியவொளியை மேற்குப் பக்கத்தே மட்டும் கவர்ந்து பிற பகுதிகளில் வேறு பொருள்களின் நிழலைக் கொண்டிருக்கும், உச்சி வேளையில்தான் அத்தூண் சூரியவொளியைத் தன்னிடத்தில் முழுதுமாகக் கவர்ந்து நிற்கும். பிற பொருள்களின் நிழல்களைச் சிறிதும் கவராது விடும்.

அப்பளிங்குத் தம்பம் ஒரு புடையில் மட்டும் சூரியவொளியைக் கவர்ந்து நின்றபோது ஏனைப் பக்கங்களில் வேற்றுப் பொருள்களின் நிழல்கள் அதனைச் சார்ந்து நின்றன. அதுபோல உயிர் பதி ஞானமாகிய திருவருளோடு முழுதுமாக ஒற்றுமைப்பட்டு நில்லாவிடில் பிற உலக உணர்வுகள் தலையெடுக்கக் கூடும்.

உச்சி வெயிலில் அப்பளிங்குத் தம்பம் சூரியவொளி ஒன்றையே முழுதுமாகக் கவர்ந்து நிற்கும்போது பிற பொருள்களின் நிழல்கள் அதனிடத்தில் இல்லையாகும். அதுபோல உயிர் சிவோகம் பாவனையால் திருவருள் ஒன்றையே பற்றி நிற்குமாயின் உலக உணர்வுகள் அதனைப் பற்ற மாட்டா, மல வாசனை பற்றறக் கழியும்.

சிவோகம் பாவனையாகிய தியானத்தில் பழகுவதே பசுத் தன்மை நீங்குவதற்கு வழி என இவ்வெடுத்துக் காட்டில் கூறுகிறார் ஆசிரியர்.

வெண்பா

58. கண்டதை அன்றன்று என விட்டுக் கண்டசத் தாய்
அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் பண்டு அணைந்த
ஊனத்தைத் தான் விடுமாறு உத்தமனின் ஒண் கருட
சானத்தில் தீர் விடம்போல் தான்

இதன்பொருள்

சுட்டறிவால் அறிந்த உலகப் பொருள்களை இது சத்து அன்று. இது சத்து அன்று என ஒவ்வொன்றாக நீக்கி, அங்ஙனம் அவற்றினின்றும் நீங்கிய தன்னறிவில் வியாபகமாய்த் தோன்றுகின்ற கடவுளை ஆராய்ந்து, சிவோகம்(சிவன் நான்) எனப் பாவித்து நின்றால், அந்தப் பாவனையில் விளங்கித் தோன்றுகின்ற முதல்வனது ஞானத்தினால் வாசனா மலத்தை நீக்கிக் கொள்ளலாம். இது மந்திரிகனது கருட பாவனையில் விளங்கித் தோன்றுகின்ற கருடனால் விடம் தீர்வது போன்றதாகும்.

பதவுரை

கண்டதை -சுட்டுணர்வினால் அறிந்த ஒவ்வொன்றையும்
அன்று அன்று என -இது சத்தன்று; இது சத்தன்று என
அசத்தாய்க் கண்டு -அசத்தாகக் கண்டு
விட்டு -நீக்கி
ஆன்மாவில் அண்டனை ஆய்ந்து -அங்ஙனம் அவற்றினின்றும் நீங்கிய தன்னறிவில் வெளிப்படும் முதல்வனை ஆராய்ந்து
உணர -சோகம்(அவன் நான்)எனப் பாவித்து நின்றால்
உத்தமனின் -அப்பாவனையில் விளங்கித் தோன்றுகின்ற அம் முதல்வனது அருளால்
பண்டு அணைந்த ஊனத்தை -அனாதியே பற்றி நின்ற மலத்தின் வாசனையை
தான் விடுமாறு -தான் விட்டு நீங்குவான். அதனை நீங்கும் முறை
ஒண் கருட சானத்தின் -ஒள்ளிய கருட பாவனையில் விளங்கித் தோன்றுகின்ற கருடனது ஆற்றலால்
தீர்விடம் போல் -அப்பாவகன் விடத்தைத் தீர்த்துக் கொள்வது போலும்.

விளக்கம்

கருட பாவனை

கருட பாவனையாவது யாது என்பதைப் பார்ப்போம். உலகப் பொருள் ஒவ்வொன்றுக்கும் மந்திரம் உண்டு. அம் மந்திரத்திற்கு உரிய அதி தெய்வம் உண்டு. கருட பாவனையில் கருடன் என்றது உலகத்திற் காணப்படும் கருடனை அன்று; கருட மந்திரத்திற்கு உரிய அதி தெய்வத்தையேயாம். மாந்திரிகன் அவ்வதி தெய்வத்தை நாள்தோறும் தியானித்துப் பழகுவானாயின் அம்மந்திரமே தானாய், அவனறிவு அம்மந்திரத்தின் வசமாய் உறைத்து நிற்கும். அம்மந்திரமாகவே நிற்கின்ற நிலையில் அவன் தன் மந்திரக் கண் கொண்டு நோக்கினால் பாம்பின் விடம் நீங்கிவிடும். கருடன் நான் என்று பாவிக்கும் இப்பாவனை கருடோகம் பாவனை எனப்படும். இது போன்றதே சிவன் நான் என்று பாவிப்பதாகிய சிவோகம் பாவனையும். கருடோகம் பாவனையால் விடம் தீர்வது போலச் சிவோகம் பாவனையால் மல வாசனை நீங்கும்.

ஞானாசிரியர் உபதேசிக்கக் கேட்டு அதன்படி சிவோகம் பாவனையில் பழகுவதே மல வாசனை நீங்குவதற்கு வழி என்பது கூறப்பட்டது.

செய்யுளின் இறுதியில் தியானம் என்ற சொல்லே சானம் எனத் திரிந்து நிற்கிறது.

மூன்றாம் கூறு:

உலகப் பொருள்களை உவர்த்து நீக்கித் திருவருளைப் பற்றி நின்று அத்திருவருளே கண்ணாகச் சிவத்தைக் காணும் நிலை வாய்த்த தாயினும் பழைய பயிற்சியினால் மீண்டும் உலகத்தை நோக்கும் விருப்பம் நிகழ்தல் கூடும். அந்நிலையை நீக்கிக் கொள்ளுதற்குத் திருவைந்தெழுத்தைச் சாதனமாகக் கொள்ளுதல் வேண்டும் எனக் கூறுகின்றார் ஆசிரியர். அப்பொருளை அறியுமுன்னர் திருவைந்தெழுத்தின் நிலையை முதலில் விளங்கிக் கொள்வோம்.

திருவைந்தெழுத்தின் நிலை:

சிவமூல மந்திரமாகத் திகழ்வது திருவைந்தெழுத்து. அஃது அனைத்து நூல்களின் முடிவாய் உள்ள மகா வாக்கியம் எனப்படும்.

சிவாய நம என்னும் திருவெழுத்து ஐந்தில் சிகாரம் பேரின்பப் பொருளாகிய சிவத்தைக் குறிக்கும். வா என்னும் எழுத்து சிவத்தின் ஞானமாகிய அருளைக் குறிக்கும். யகாரம் ஆன்மாவைக் குறிக்கும். நகாரம் திரோதான சக்தியையும் அதன் வழிபட்டனவாகிய மாயை, கன்மம், மாயேயம் என்பவற்றையும் குறிக்கும். மகாரம் மூல மலமாகிய ஆணவ மலத்தைக் குறிக்கும்.

நடுவில் உள்ள ய ஆகிய உயிர் பின்னுள்ள ம ஆகிய ஆணவ மலத்துட்பட்டு அறியாமையில் அழுந்தியும், ந ஆகிய இறைவனது திரோதான சத்தியால் செலுத்தப்பட்டு மாயை கன்மங்களைப் பொருந்தி உலக போகத்தில் அழுந்தியும் நிற்கும். எனவே, நம ஆகிய ஈரெழுத்துக்களும் முறையே சகல நிலையையும், கேவல நிலையையும் குறிக்கின்றன என்பது விளங்கும். உயிர் நம வில் அழுந்தியிருக்கும் நிலையே கட்டுநிலை.

ய ஆகிய உயிருக்கு முன்னுள்ள சி, வா என்பவை தந்தையும் தாயுமாய் உள்ள சிவமும் அதனைப் பிரியாத திருவருளும் உயிருணர்வில் உடனாகக் கலந்திருப்பதை உணர்த்தும். உயிர் தனக்கு முன்னாக உள்ள அம்மையப்பரைத் தன் அறிவின்கண் காண முற்படாமல் உலகத்தை மட்டுமே அறிந்து அனுபவித்து வருகிறது.

உயிர் நம வைவிடுத்து, வா ஆகிய திருவருளைச் சார்ந்து நிற்பதே சுத்த நிலையாகும். திருவருள் அவ்வுயிரைச் சிவத்திடம் சேர்ப்பிக்கும். சிவத்தில் அழுந்தி நிற்றலே இன்புறு நிலையாகும்.

நகாரம் முதலாக உள்ள நமசிவாய என்பது தூல பஞ்சாக்கரம் எனவும், சிகாரம் முதலாக உள்ள சிவாய நம என்பது சூக்கும பஞ்சாக்கரம் எனவும் கூறப்படும்.

நகாரம் முதலாக ஓதுவார்க்கு உலகப் பயன் கிடைக்கும் என்றும், உலகப் பயனில் நாட்டமின்றிப் பிறவி நீக்கத்தை வேண்டுவோர் சிகாரம் முதலாக ஓதுதல் வேண்டும் என்றும் நூல்கள் கூறும்.

இவ்விளக்கத்தைக் கருத்திற் கொண்டு இனி மேற்கோளை நோக்குவோம்.

மேற்கோள்

இனி, இவ்விடத்து சீபஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க என்றது

மேற்கோளின் விளக்கம்

சாதகன் அசத்தை அசத்து என்று கண்டு நீக்கி அதனால் ஞானக் கண்ணைப் பெற்று அந்த ஞானக் கண்ணினால் சிவத்தைக் கண்ட இவ்விடத்துத் திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்க என்றார் ஆசிரியர்.

முத்தி பஞ்சாக்கரம்:

நூற்பாவில் பாசம் ஒருவுதல் என்பதும், பதியை ஞானக் கண்ணினால் சிந்தையில் நாடுதல் என்பதும் கூறப்பட்டுள்ளன.

பாசம் ஒருவ என்றமையால் ஐந்தெழுத்தில் உள்ள பாச எழுத்துக்களாகிய நம என்பவற்றை நீக்கிவிட வேண்டும் என்பது விளங்கும்.

பதியை ஞானக் கண்ணினில் சிந்தையில் நாடுக என்றமையால் அப்பொருளைத் தரும் எழுத்துக்களாகிய சிவா ய என்னும் மூன்றுமே கொள்ளுதற்கு உரியன என்பது விளங்கும்.

எனவே, இவ்விடத்து ஓதுதற்கு உரியது சிவாய என்பதேயாகும். இதுவே முத்தி பஞ்சாக்கரம் எனப்படும். அதிசூக்கும பஞ்சாக்கரம் எனவும் படும். இதனையே மேற்கோளில் சீபஞ்சாக்கரம் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். அது குருமுகத்தால் அறியத்தக்கது. ஆதலால் விளக்கிக் கூறாமல் விதிப்படி என்றார்.

மல வாசனையால் உலகை நோக்க நேருமாயின் அதனை நீக்கிப் பதியை ஞானக் கண்ணால் கண்டு நிற்றலைச் சாதித்தற்கு உரியது அம்முறையில் அமைந்த முத்தி பஞ்சாக்கரமே என்பது விளங்கும்.

இரண்டு நோக்கங்கள்:

ஆன்மா ஞானநெறியிற் செல்லுங்கால் பல்வேறு நிலைகளில் ஆங்காங்கே திருவைந்தெழுத்தை ஓதுதல் சாதனமாய் அமைந்து அந்நிலைகளுக்கு ஏற்ற பயனைத் தந்து நிற்கும்.

திருவைந்தெழுத்தை ஓதுதல் இரண்டு நோக்கங்களுக்காக எனப் பொதுவாகக் கூறலாம்.

1. பதி ஞானத்தைப் பெறுவதற்கு முன்பு அதனைப் பெறும் நிலை கைகூடுதற் பொருட்டுத் திருவைந்தெழுத்தை ஓதுதல்.

2. பதி ஞானத்தைப் பெற்ற பின்பு மல வாசனை தாக்காது நீங்குதற் பொருட்டு முத்தி பஞ்சாக்கரமாக அதனை ஓதுதல்.

ஓதும் முறை:

மந்திரத்தை உச்சரிக்கும் முறை மானதம்(மவுனம்), மந்தம்(மெல்லச் சொல்லுதல்), உரை(உரக்கச் சொல்லுதல்) என மூன்று வகைப்படும். முத்தி பஞ்சாக்கரமாகிய மந்திரத்தை உச்சரிக்கும் முறை இம்மூன்றும் அன்று. சுத்தமானதம் எனப்படுகின்ற அறிவால் கணித்தலே இங்குக் குறிக்கப்பட்டதாகும்.

அறிவால் கணித்தலாவது, முன்பு கூறியபடி சிவோகம் பாவனையில் அழுந்தி நின்று, முத்தி பஞ்சாக்கரத்தால் நினைப்பிக்கப் படும் பொருளில் தன் அறிவை நிறுத்துதல். இது பற்றியே ஆசிரியர் உச்சரிக்க என்னாது எண்ணுக என்றார்.

இவ்வாறு அறிவால் கணித்தலே முத்தி பஞ்சாக்கரத்தை ஓதும் முறையாகும். சிவோகம் பாவனையாகிய தியானத்தில் உறைத்து நிற்றலே நிற்கும் முறையாகும்.

இம் முறையில் நின்று, முத்தி பஞ்சாக்கரத்தை இவ்வாறு ஓதும் முறையினால் தன்னில் சிவனைக் காணும் பேறு கைகூடும். மல வாசனையெல்லாம் நீங்கி ஆன்மா தூய்மையுறும்.

இனி ஏதுவைக் காண்போம்.

ஏது

இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்புதின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்கும் ஆகலின் அது நீக்குதற்கு எனக்கொள்க

ஏதுவின் பொருள்

வேப்ப மரத்தில் வாழ்ந்து கசப்பான அதன் காய். இலை முதலியவற்றையே தின்று பழகிப் போன புழு, அருகில் வளர்ந்திருந்த கரும்பின் மேல் தற்செயலாக விழுந்து அக்கரும்பின் தீஞ்சுவையை இனிது நுகர்ந்ததாயினும் முன்னைப் பழக்கம் காரணமாக முன்பு சுவைத்த அவ்வேம்பினையே மீண்டும் அவாவிச் செல்லுதல் உண்டு.

அதுபோல அசத்தாயுள்ள உலகப் பொருள்களை அசத்து என்று கண்டு கழித்த உயிர்களுக்கப் பதி ஞானம் விளங்கி அதனால் பதி காட்சிப்பட்ட போதிலும் முன்னைப் பழக்க வாசனையால் முன்பு அசத்து என்று நீக்கிய அப்பொருள்களின் மேல் அவ்வுயிர்களுக்கு விருப்பம் நிகழ்தல் கூடும்.

அவ்வாறு நிகழாமல் அப்பழக்க வாசனையை நீக்கிக் கொள்ளுதற்கு இங்குத் திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்க வேண்டுவது இன்றியமையாததாயிற்று.

ஏது விளக்கம்

நோக்கிற்றை நோக்குதல்- முன்பு நோக்கியிருந்து விட்டதனை அவாவுதல். நோக்குதலாவது, கண்ணால் நோக்காது கருத்தால் நோக்குதலாகும்,

பின்வரும் திருவாசகப் பாடலை இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே
நினைத் தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பி

பூவில் உள்ள தேன் ஒரு தினையளவாக இருப்பது. வண்டு அத்தேனைத் திரிந்து திரிந்து சிறிது சிறிதாகவே பருக வேண்டியுள்ளது. அத்தேனைப் போல் இல்லாமல் இடைவிடாது எண்ணும் பொழுதும், காணும்பொழுதும், பேசும் பொழுதும், எப்பொழுதும் இனிக்கின்ற பேரின்பத் தேனைப் பொழிவது பெருமானது திருநடனம்.

வண்டு பூவினில் தேனை நாடாது பெருமானது திருவடித்தாமரையில் சென்று ஊதினால் பெரும் பயன் எய்தும் என்பது கூறப்பட்டது. இதனுள் பூ என்றது உலகத்தைக் குறிக்கும். தினையளவு தேன் என்றது உலகத்தில் உள்ள சிற்றின்பத்தைக் குறிக்கும்.

திருவருள் பெற்ற பின்னரும் உயிரறிவு உலக இன்பங்களை வேம்பு தின்ற புழுப் போல நோக்குதல் கூடும். அந்நிலையில் அவையெல்லாம் சிறுமையுடையன வாதலைத் திருவருள் துணை கொண்டு ஊன்றி உணர்ந்து அப்பெருமானையே பற்றாகப் பற்றி அவ்வுலக நோக்கத்தை நீக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பது இத்திருவாசகப் பாடலின் உட்கிடையாகும்.

இனி எடுத்துக்காட்டுச் செய்யுட்களை நோக்வோம்.

எடுத்துக்காட்டு 1

மல வாசனை நீங்குதற்கு மந்திரம், பாவனை, கிரியை ஆகிய சாதனங்களை இங்குக் கூறுகின்றார். சாதகர்க்கு உரிய மந்திரம் திருவைந்தெழுத்தாகும். அவர்க்கு உரிய பாவனை சிவோகம் பாவனையாகும். அவர்க்கு உரிய கிரியை அக வழிபாடு ஆகும்.

வெண்பா

59. அஞ்செழுத்தால் உள்ளம் அரன்உடைமைகண்டு அரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில்-அஞ்செழுத்தால்
குண்டலியில் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு.

இதன் பொருள்

ஆன்மா சிவனுக்கு அடிமையாதலைத் திருவைந் தெழுத்தில் வைத்து உணர்தல் வேண்டும். பின், திருவைந்தெழுத்தையே மந்திரமாகக் கொண்டு அருச்சனை, ஓமம், தியானம் ஆகியவற்றைச் செய்தல் வேண்டும். அருச்சனையை இதயத்திலும், ஓமத்தை உந்தியிலும், தியானத்தைப் புருவ நடுவிலும் செய்தல் வேண்டும். செய்தால், அவைகளில் சிவன் விளங்கித் தோன்றுவான். தியானம் செய்பவன் அவனுக்கு அடிமையாகி விடுவான்.

பதவுரை

உள்ளம் அரன் உடைமை -ஆன்மா சிவனுக்கு அடிமை யாதலை
அஞ்செழுத்தால் கண்டு -அஞ்செழுத்தின் பொருளை ஆசிரியர் உணர்த்த அதனை உணரும் முறைமையால் உணர்ந்து
அரனை இதயத்தில் அஞ்செழுத்தால் அர்ச்சித்து -சிவனை இதய கமலத்தில் அவன் அஞ்செழுத்தாற் கொள்ளும் திருமேனியில் எட்டு வகை மலர்களைத் தூவி வழிபட்டு
குண்டலியில் அஞ்செழுத்தால் ஓமம் செய்து -குண்டலித் தானமாகிய உந்தியில் அஞ்செழுத்தால் அக்கினி காரியம் செய்து
கோதண்டம்(அஞ்செழுத்தால்) சானிக்கில் -புருவ நடுவில் சிவனை அஞ்செழுத்தாலே தியானித்தால்
அங்கு அண்டன் ஆம் -அத்தியானத்தில் அவன் விளங்கித் தோன்றுவான்
சேடன் ஆம் -தியானிப்பவன் அவனுக்கு அடிமையாய் விடுவான்.

விளக்கம்

அரன் உடைமை:

முத்தி பஞ்சாக்கரத்தில் சி ஆகிய சிவமும், வா ஆகிய அருளும் முன் நிற்க, ய ஆகிய உயிர் அவற்றின் பின் நிற்கிறது. முன் நிற்பது தலைமைப் பொருளும் பின் நிற்பது அடிமைப் பொருளும் ஆதலின் ஆன்மா சிவனுக்கு அடிமையாய் நிற்பது என்னும் உண்மையை இதனால் உணரலாம்.

ஞான பூசை:

இங்குக் கூறப்பட்டது அக வழிபாடு ஆகும். ஞானம் பெற்று உலகியலை உவர்த்து நீக்கி மெய்ப் பொருளைக் கண்டோர் அக்காட்சி நிலைத்து நிற்றற் பொருட்டுச் செய்யும் வழிபாடு ஆதலின் இது ஞானபூசை எனவும் பெயர் பெறும். ஞானபூசைக்குரிய மந்திரம் திருவைந்தெழுத்தேயாம். ஆகவே அருச்சனை, ஓமம், தியானம் மூன்றும் அம்மந்திரத்தினாலே செய்யப்படும்.

அருச்சனை

அருச்சனையாவது, நெஞ்சக் கமலத்தில் இறைவனை அவன் அஞ்செழுத்தாற் கொள்ளும் திருமேனியில் எட்டு மலர்களைத் தூவி வழிபடுதல். அகத்தே கொள்ளப்படும் அம்மலர்கள் கொல்லாமை, பொறியடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, வாய்மை, தவம், அன்பு எனபனவாம்.

ஓமம்:

ஓமத்திற்கு உரிய இடம் உந்தியாகும். அது குண்டலித்தானம் எனப்படும். அதில் செய்யப்படும் ஓமத்திற்கு உரிய நெற் புருவ நடுவில் உள்ள அமுதமேயாகும். அதனைச் சொரிந்து எழுப்பப்படும் நெருப்பு சிவனை உணரும் ஞானமேயாகும். இவ்வாறு அஞ்செழுத்தால் அவனுக்கு ஆகுதி பண்ணுதல் வேண்டும்.

தியானம்

இனி, புருவ நடுவில் செய்யப்படும் தியானத்தில் முத்தி பஞ்சாக்கரம் தத்துவமசி என்னும் உபநிடத மகா வாக்கியத்திற்கு நேரானதாகக் கொள்ளப்படும். தத்துவமசி என்பதன் பொருள் அது நீ ஆகின்றாய் என்பது. இதில் முதற்பொருள் அது எனப் பொதுவாக வைத்துக் கூறப்பட்டுள்ளது. இதனை முத்தி பஞ்சாக்கரம் சிவம் எனச் சிறப்பாக வைத்துக் கூறுகிறது. அவ்வளவே வேற்றுமை.

தத்(அது) என்னும் பதத்தின் பொருளே சிகாரத்தால் குறிக்கப்படுகிறது. துவம் (நீ) என்னும் பதத்தின் பொருளே யகாரத்தால் குறிக்கப்படுகிறது. அசி(ஆகின்றாய்) என்னும் இணைப்பு மொழியின் பொருளே வகாரத்தால் குறிக்கப்படுகின்றது.

இவ்வாறு முத்தி பஞ்சாக்கரத்தைக் கொண்டு செய்யும் தியானமே மேற்சொல்லிய சிவோகம் பாவனையாகும்.

இறைவன் விளங்கித் தோன்றுதல்:

எனவே நெஞ்சக் கமலத்தில் இறைவனை அஞ்செழுத்து உருவினனாகக் கண்டு அர்ச்சித்து, உந்தியிடத்தில் ஓமம் செய்து, புருவ நடுவில் சிவம் நான் எனத் தியானம் செய்தால் அத்தியானத்தில் இறைவன் விளங்கித் தோன்றுவான் என ஒருவாறு தொகுத்துக் கூறலாம்.

பாச ஞானம் நீங்கிப் பதி ஞானத்தைப் பெற்றுப் பதியைக் கண்டவர்க்கு ஓரொரு சமயத்தில் பாச ஞானம் தோன்ற, அதனால் உலகத்தை நோக்கும் நிலை தோன்றுமாயின் இறைவனை இங்ஙனம் ஒரு குறியில் வைத்துச் சிந்திக்கச் சிந்திக்க உலக நோக்கம் ஒழியும். நோக்கிற்றை நோக்குதற்குக் காரணமாகிய மல வாசனை நீங்கும்.

எடுத்துக்காட்டு 2 மேற்சொல்லிய மந்திரம், பாவனை, கிரியைகளாகிய சாதனையில் நின்ற போது சிவம் ஆன்மாவில் விளங்கி நிற்கும் முறையை உவமையில் வைத்து இங்கே விளக்கிக் காட்டுகிறார்.

வெண்பா

60. இந்துவில் பானுவில் இராகுவைக் கண்டாங்கு
சிந்தையிற் காணின் சிவன் கண்ணாம்-உந்தவே
காட்டாக்கில் தோன்றிக் கனல்சேர் இரும்பு என்ன
ஆள்தான் ஆம் ஓது அஞ் செழுத்து.

இதன்பொருள்:

வானத்தில் ஏனைய கோள்களெல்லாம் தனியே காணப்படுவன. ஆயின் இராகுவும் கேதுவும் ஆகிய கோள்களை அவ்வாறு தனியே வைத்துக் காணுதல் இயலாது. அவை காணாக் கோள்கள் எனப்படும். சந்திரனை மறைப்பது இராகு வாதலின் சந்திர கிரகணத்தில் மட்டும் அது காணப்படுவதாகும். சூரியனை மறைப்பது கேது வாதலின் சூரிய கிரகணத்தில் மட்டும் அது காணப்படுவதாகும். காணப்படாத இராகு கேதுக்களைக்கிரகணத்திற் கண்டாற் போல, உயிரறிவால் அறியப்படாத முதல்வனை நெஞ்சக் கமலத்தில் அஞ்செழுத்தால் அமையும் திருமேனியில் வைத்துக் காண்டல் கூடும். ஆகவே மேற்கூறிய சாதனையைச் செய்தால், விறகில் விளங்கி நில்லாத நெருப்பு கடைகோலை நட்டுக் கயிற்றினால் கடைந்தபோது அவ்விறகில் வெளிப்படுதல் போல, ஆன்மாவில் முன்பு விளங்கித் தோன்றாத முதல்வன் இப்பொழுது அறிவினுள் அறிவாய் விளங்கி நிற்பான். நெருப்பைச் சேர்ந்த இரும்பு, தான் நெருப்பின் வேறாய்-இரும்பாய் நிற்றல் இல்லை. வேறாய் நிற்றலை விட்டு, அந்நெருப்பில் அடங்கி நிற்கிறது. அதுபோல சிவக்காட்சியை எய்திய ஆன்மாதான் ஆன்மாவாய் வேறு நில்லாது சிவனுக்கு அடிமையாய் அவனிடத்து அடங்கி நிற்கும்.

ஆதலால் திருவைந்தெழுத்தை விதிப்படி ஓதுவாயாக.

பதவுரை

இராகுவை(கேதுவை) -பிற கோள்கள் போலக் காணப்படாத இராகு, கேது என்னும் கோள்களை
இந்துவில், பானுவில் கண்டாங்கு -அவற்றால் பற்றப்படும் சந்திரனிலும், சூரியனிலும், வைத்துக் கண்டாற் போ
சிந்தையில் காணின் -(தன் உணர்வால் அறியவாராத சிவனை) ஆன்மா தனது இதயத்தில் அஞ்செழுத்தால் அமையும் திருமேனியில் வைத்துக் கண்டால்
உந்தவே -தீக்கடை கோலை நாட்டிக் கயிற்றால் கடைய
காட்டாக்கின் -காட்டத்தினின்றும் (விறகினின்றும்) அக்கினி தோன்றுதல் போல
சிவன் தோன்றி -சிவன் அக்காட்சியில் தோன்றி
கண் ஆம் -அறிவினுள் அறிவாய் விளங்கி நிற்பான். (அப்பொழுது)
கனல் சேர் இரும்பு என்ன -நெருப்பைச் சேர்ந்த இரும்பு தான் வேறு நில்லாமல், தன் தன்மையை இழந்து, நெருப்பில் அடங்கி நிற்றல் போல
தான் ஆள் ஆம் -ஆன்மாவும் தான் ஆன்மாவாய் வேறு நில்லாது, தன் முதன்மையை விட்டுச் சிவனுக்கு அடிமையாகிவிடும்(ஆகையால்)
அஞ்செழுத்து ஓது -திருவைந்தெழுத்தை முறைப்படி ஓதுவாயாக.

விளக்கம்

இராகு, கேது இரண்டும் நிழலே யன்றித் தனித்த கிரகங்கள் அல்ல. அதுபற்றியே அவை சாயா கிரகங்கள் எனப்படும். சாயை-நிழல். அவற்றுள் ஒன்றைக் கூறவே மற்றொன்றும் பெறப்படும் என்னும் கருத்தால் இராகுவை மட்டும் கூறினார் ஆசிரியர்.

காட்டம்-விறகு, அக்கினி-நெருப்பு, காட்டாக்கினி என்பதே சிதைந்து காட்டாக்கி என நிற்கிறது.

மூன்று உவமைகள்:

கிரியை, மந்திரம், பாவனை ஆகிய மூன்றிற்கும் ஆசிரியர் மூன்று உவமைகளைக் கூறியுள்ளமை நோக்குதற்குரியது. அவற்றைப் பின்வருமாறு பொருத்திக் காட்டலாம்.

1. இராகு கேதுக்கள் சந்திர சூரிய கிரகணங்களில் காணப்படுதல், இறைவன் இதய கமலத்தில் ஒரு குறியின் கண் வைத்து வழிபடுதலாகிய கிரியையில் விளங்கித் தோன்றுதலுக்கு உவமையாயிற்று.

2. நெருப்பு விறகைக் கடைந்தபொழுது வெளிப்பட்டுத் தோன்றுதல், இறைவன் மந்திரத்தை விதிப்படி உச்சரித்த வழி விளங்கித் தோன்றுதலுக்கு உவமையாயிற்று.

3. நெருப்பைச் சேர்ந்த இரும்பு நெருப்பாய் நிற்றல், சிவோகம் பாவனையில் ஆன்மா சிவமாம் தன்மை எய்தி நிற்பதற்கு உவமையாயிற்று.

தேவாரத் திருமொழி:

முதல்வன் விறகில் நெருப்பைப் போல ஆன்மாவில் மறைந்திருப்பான் எனவும், கடைதலைச் செய்ய நெருப்பு வெளிப்படுதல் போலச் சாதகத்தைச் செய்ய ஆன்மாவில் விளங்கித் தோன்றுவான் எனவும் இங்குக் கூறிய கருத்து,

விறகில் தீயின்நன் பாலில்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே (5:90:10)

எனவரும் தேவாரத் திருமொழியில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

எடுத்துக்காட்டு 3

தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட இறைவனைச் சாதகன் தன் இதய கமலத்தில் கண்டு வழிபடுதல் கூடும் எனக் கூறுகின்றார்.

வெண்பா

61. மண்முதல் நாளம்; மலர் வித்தை கலாரூபம்
எண்ணிய ஈசர் சதாசிவமும்;-நண்ணில்
கலை உருவாம் நாதமாம் சத்தி அதன் கண்ணாம்
நிலை அதில் ஆம் அச் சிவன் தாள் நேர்.

இதன் பொருள்: அண்டத்தில் உள்ள முப்பத்தாறு தத்துவங்களும் பிண்டமாகிய உடம்பிலும் உள்ளனவாகும். அத்தத்துவங்கள் அனைத்தும் இதய கமல வடிவில் நிற்கும். அவ்இதய கமலத்தின் இயல்பைப் பின் வருமாறு அறியலாம்.

இதய கமலத்தின் இயல்பு: நிலம் முதலாக உள்ள ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் தண்டு வடிவமாய் இருக்கும். இத்தண்டு உந்தியினின்றும் மேலெழுந்து இதயம் வரையிற் செல்லும். வித்தியா தத்துவம் ஏழும் சிவ தத்துவத்தில் சுத்த வித்தை ஆகிய ஒன்றும் ஆகிய எட்டுத் தத்துவமும் அத்தண்டின்மேல் எட்டு இதழ்களையுடைய மலர் வடிவாய் இருக்கும். சுத்த வித்தைக்குமேல் உள்ள ஈசுவரம், சதாசிவம் என்னும் இரு தத்துவங்களும் அம்மலருக்கு உள்ளேயிருக்கும் கேசர வடிவாய் இருக்கும்.

அவற்றிற்கு மேலுள்ள சத்தி தத்துவம் கேசரங்களுக்கு நடுவிலே இருக்கும் பொகுட்டு வடிவாய் இருக்கும், அதற்கு மேலுள்ள சிவ தத்துவம் அந்தப் பொகுட்டிற்குள் அமைந்த விதைகளாய் இருக்கும். இதய கமலம் இவ்வாறு நிலம் முதல் நாதம் ஈறாய் உள்ள முப்பத்தாறு தத்துவ வடிவினதாய் இருக்கும். சிவனது சக்தி அந்தக் கமலம் ஆகிய இருக்கையின்மேல் சிவனது திருமேனியாய் விளங்கும். இம்முறையில் இறைவனை இதய கமலத்தில் கண்டு அஞ்செழுத்தால் வழிபடுதல் வேண்டும்.

பதவுரை

நண்ணில் -இதயத் தாமரையின் இயல்பை அறியப் புகின்
மண் முதல் நாளம் -முப்பத்தாறு தத்துவங்களுள், நிலம் முதலாக உள்ள ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் தண்டு வடிவாய் இருக்கும்.
(இத்தண்டு உந்தியினின்றும் தோன்றி, மேல் நோக்கி எட்டு விரற்கிடை அளவாய் நீண்டிருக்கும்)

வித்தை மலர் -வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவத்தில் கீழ் உள்ளதாகிய சுத்த வித்தையும் ஆகிய எட்டும் அத்தண்டின் மேல் எட்டின் இதழ்களாய் அமையும் மலர் வடிவாய் இருக்கும்.
எண்ணிய ஈசர் சதாசிவமும் கலாரூபம் -சுத்த வித்தைக்கு மேல் எண்ணப்பட்ட ஈசுரம், சாதாக்கியம் என்னும் இரண்டும் இதழ்களின் உள்ளே உள்ள அறுபத்து நான்கு கேசர வடிவாய் இருக்கும்.
சத்தி கலை உருவாம் -சத்தி தத்துவம் அக்கேசரங்களுக்கு நடுவில் உள்ள பொகுட்டு வடிவாய் இருக்கும்.
நாதம் அதன்கண் ஆம் -சிவதத்துவம் அப்பொகுட்டினுள் உள்ள விதைகளாய் இருக்கும்(எழுத்துக்கள் ஐம்பத்தொன்று ஆகலின், அவ்விதைகளின் எண்ணிக்கையும் ஐம்பத் தொன்றாகும்)
அச்சிவன் தாள் அதில் நிலையாம் -இம்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்கும் சிவனது சத்தி அத் தாமரை மலராகிய இருக்கையின் மேல் சிவனது திருமேனியாய் விளங்கும்.
நேர் -அத்திருமேனியை உடையவனாய்ச் சிவன் உனது வழிபாட்டினை ஏற்று அருள் புரிவான் என்று தெளிந்து அவனை அஞ்செழுத்தால் வழிபடுவாயாக.

இவ்வாறு இம்மூன்றாம் கூறில் ஆன்மா மல வாசனை நீங்கிச் சிவத்தை அணைதற்குத் திருவைந்தெழுத்து வழிபாடு இன்றியமையாதது என்பது வலியுறுத்தப் பட்டது.

அறிய வேண்டிய இரு கருத்துக்கள்

இந்நூற்பாவின் இறுதிப் பகுதியாகிய இவ்விடத்தில் சொல்ல வேண்டிய இரு கருத்துக்கள் உள்ளன. அவை பின்வருவன.

1. ஞானாசிரியரது உபதேசத்தைக் கேட்டலினால் மும்மலமும் நீங்கி விடும். நீங்கிய போதிலும் அவற்றின் வாசனை நீங்காதிருக்கும். எனவே, கேட்டலின் பின்னர் ஒன்பது முதலாக உள்ள நூற்பாக்களில் கூறப்படும் மலச்செய்திகள் எல்லாம் மலவாசனையால் நிகழ்வனவேயாம்.

இந்நூற்பாக்களில் மலம் பற்றி வரும் இடங்களிலெல்லாம் மலவாசனை என்றே கொள்ளுதல் வேண்டும். காட்டாகப் பத்தாம் நூற்பாவில் மலம் மாயை தன்னொடு வல்வினை என மும்மலங்களும் கூறப்பட்டுள்ள போதிலும் அவற்றின் வாசனை என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும், பன்னிரண்டாம் நூற்பாவில் அம் மலம் கழீஇ என மலம் என்றே கூறப்பட்டுள்ள போதிலும் மல வாசனையைக் கூறுதலே ஆசிரியருக்குக் கருத்தாகும்.

மலவாசனை சிந்தித்தல் முதலியவற்றால் தேய்ந்து தேய்ந்து வரும். நிட்டை கூடிய நிலையில் அம்மல வாசனை பெரிதும் மங்கிப் போய் மிக மெலிதாய் நிற்கும், உடம்பு நிற்கும் வரை அவ்வாசனையும் நிற்கும். ஆதலின் அது முறுகி எழாதவாறு வழிப்பாயிருந்து காத்தல் வேண்டும் என்பதனையே பன்னிரண்டாம் நூற்பாவில் கூறினார்.

2. தெளிதலாகிய நிலையில் நின்றவரை நிட்டை கூடுதலாகிய நிலையிற் செல்ல வொட்டாது மீள அவரைக் கீழ்நிலையிற் செலுத்துவது மல வாசனையாகும். அதனின் நீங்கி நிட்டை கூடுதற்கு வழியாக விதிக்கப்படுவனவே திருவைந்தெழுத்துக் கணிப்பும், சிவோகம் பாவனையும், அகப்பூசையும். ஆகவே அஞ்செழுத்தை உச்சரித்தலும் அதனோடு செய்வதற்குரிய வழிபாடுகளும் ஆகிய எல்லாம் நிட்டையின் பின்னர்க் கூறுதற்கு உரியனவாகும்.

திருவருட் பயன் என்னும் நூலில் நிட்டையாகிய இன்புறு நிலையைக் கூறி முடித்த பின்னே அஞ்செழுத்தருள் நிலை என்னும் அதிகாரத்தை வைத்துள்ளமை மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும்.

ஆகவே, ஆசிரியர் சிந்தித்தல் நிகழ்தலைக்கூறும் இவ்வொன்பதாம் நூற்பாவில்தானே மல வாசனையை நீக்கிக் கொள்ளுதற்கு உபாயமாகச் சிவோகம் பாவனை, அஞ்செழுத்து வழிபாடு முதலியவற்றை ஓர் இயைபு கருதிக் கூறினாராயினும் அவையெல்லாம் நிட்டையின் பின்னர்க் கொள்ளுதற்கு உரியன என்பது அறியத் தக்கது. மேற்கூறியவற்றைக் கருத்திற் கொண்டால் இந்நூற்பாவின் போக்கும், இனி வரும் நூற்பாக்களின் பொருளமைதியும் தெளிவாய் விளங்கும்.

ஒன்பதாம் நூற்பா முடிந்தது.

No comments:

Post a Comment