Tuesday 22 August 2017

இனிப்பும் கசக்கும்!


றுசுவைகளில் ஒன்று இனிப்பு. மனதுக்கு மட்டுமல்லாமல், உடலுக்கும் உடனடி உற்சாகம் தரும் என்பதால், மனிதர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. சுபநிகழ்ச்சி, மகிழ்ச்சி என எல்லாவற்றிலும் முதலில் பகிரப்படுவது இனிப்பு. இந்தப் பகிர்தல் சிலருக்குப் பழக்கமாக மாறியிருக்கலாம். ஆக, இனிப்பை விரும்பிச் சாப்பிடுவதன்மூலம் இது அடிக்‌ஷனா அல்லது ஈர்ப்பா எனச் சிலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உண்மையில், இது ஆரோக்கியமானதா? சுகர் பற்றி ஒரு ஸ்வீட் அலசல்...
இனிப்பு அடிமையாக்குமா? 

இனிப்பு மகிழ்ச்சியைத் தருவதாகப் பலர் கூறுகிறார்கள். இனிப்புக்கு அடிமையாவதற்கு மிக முக்கியக் காரணம் செரட்டோனின் (Serotonin) மற்றும் எண்டார்ஃபின் (Endorphin) ஹார்மோன்கள் சுரப்பதுதான்.
செரடோனின் ஹார்மோன் நம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவக்கூடியது. அதாவது தூக்கம், நினைவாற்றல், சிந்தனை மற்றும் செரிமானம் போன்ற செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணைபுரிகிறது. எண்டார்ஃபின் ஹார்மோன் மனமாற்றத்துக்கு உதவுகிறது. கவலைகளைக் குறைத்து மனமகிழ்ச்சியை உண்டாக்குவதோடு, மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பே இனிப்புச் சுவையின்மீது ஒருவித ஈர்ப்பை உண்டாக்குகிறது. 

அதீத இனிப்பால் நோய் வருமா?

இனிப்பை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் டைப்-2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் அதிலும் குழந்தைப்பருவத்திலேயே உடல் பருமன் அதிகரிப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்... 

 இனிப்பு அதிகம் உண்பதால் எந்தெந்த நோயாளிகளுக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம். 

* இதய நோய் - நடக்கும்போது, படி ஏறியபின் மூச்சுவாங்குதல். 

* உடல் பருமன் - குறட்டை, அசதி, நாளடைவில் மூட்டுவலி, முதுகுவலி. 

* சர்க்கரை நோய் - அதீத பசி, அதீத தாகம், அதீத சிறுநீர்ப் போக்கு, உடல் அசதி, மயக்கம். 

* உயர் ரத்த அழுத்தம் - உடல் அசதி, படபடப்பு, மயக்கம்.

நோய் ஏற்படக் காரணம்... 

உணவுகள் அனைத்திலுமே இனிப்புச் சுவை உள்ளது. இனிப்பில் உள்ள சுக்ரோஸ் உடனடி எனர்ஜியைத் தரும். இதனால் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை உணவாக உட்்கொள்வது குறைந்துபோவதால் நோய் உண்டாகக் காரணமாக அமைகிறது. குறைவான உடல் உழைப்பு உள்ளபோது இனிப்பு உட்கொள்வது, ஒரே வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது மற்றும் தாமதமாக உணவைச் சாப்பிடுவது போன்றவையும் நோய் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. 

தடுக்க... தவிர்க்க... 

* உடலுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். 

* எந்தச் சுவையையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

* உணவுக் கட்டுப்பாடு முக்கியம். 

* பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* சரிவிகித உணவு சாப்பிடவேண்டும்.
* தினசரி உடற்பயிற்சி நல்லது. இல்லையேல் குறைந்தபட்சம் வாரத்துக்கு ஐந்து நாள்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். 

தாமதமாக உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். இது அதீத பசியை ஏற்படுத்தும். 

திடீரென நிறுத்தினால்... 

திடீரென இனிப்பை நிறுத்தினாலும்  சில பாதிப்புகள் ஏற்படும். 

* உடல் எனர்ஜி குறையும். 

* முடிவு எடுக்கும் தன்மையில் குறைபாடு உண்டாகும். 

* தலைவலி 

அதீத பசி
மனச்சோர்வு 

* ஞாபகசக்தி குறைவு 

சிறிது சிறிதாக நிறுத்தலாம். இனிப்பு என்றால் சர்க்கரைதான் சாப்பிடவேண்டும் என்பது இல்லை. கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை அளவுடன் சாப்பிடலாம். 

No comments:

Post a Comment