Friday 18 August 2017

சிவமே குருவாய் அருளும் திருத்தலம்...

முன்னூரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் ஆலயம், எண்ணற்ற சிறப்புகளைக்கொண்டிருக்கும் ஆலயம் என்ற பெருமையைக் கொண்டது இந்த ஐயனின் ஆலயம்.

இங்கே ஐயன் ஆடவல்லீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டிருப்பதைப் பார்த்து, நடராஜப் பெருமான்தான் ஆடவல்லீஸ்வரர் என்று நினைத்து தரிசிக்கச் சென்ற நாம் வியந்துதான் போனோம்.  ஆம்,  இங்கே  ஐயன் ஆடவல்லீஸ்வரர் நடராஜப் பெருமானாக இல்லாமல், சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளி இருக்கிறார் என்பதுதான் நம் வியப்புக்குக் காரணம்.
சிவாலயங்களில் சிவபெருமான் பொதுவாக கிழக்கு நோக்கியே காட்சி தருவதையும், தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருவதையும் நாம் தரிசித்திருப்போம். ஆனால், தரிசிப்பவர்களின் வினைகளைக் களைந்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண அருளும் ஐயன் ஆடவல்லீஸ்வரர் இங்கே ஞான குருவாக தெற்கு நோக்கியும், தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கியும் காட்சி தருவதை தரிசித்த வேளையில் நாம் வியந்துதான் போனோம்.

தாமரை மலர்களால் எதிர்த்துவரும் பெரும் படைகளை அழித்து வெற்றிவாகை சூடமுடியுமா?

`முடியும்' என்று காட்டி முருகப்பெருமான் அருளாடல் நிகழ்த்திய தலமும் இதுதான். ஆம், கண்கொள்ளா பேரழகுடன் இங்கே நாம் தரிசிக்கும் முருகப்பெருமானின் அருளால், இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் நல்லியக்கோடன் எதிரிகளை வெற்றி கொண்ட வரலாறு நம்மையும் அந்த முருகப்பெருமானிடத்தே சரணடையச் செய்துவிடுகிறது.
அந்த வரலாறு...

தன் நாட்டைக் கைப்பற்ற சோழர்கள் முற்றுகையிடுவதாக ஒரு தகவல் கிடைத்தது மன்னன் நல்லியக்கோடனுக்கு. சோழர்களின் படை வலிமையை ஒப்பிடும்போது நல்லியக்கோடனின் படை வலிமை மிகக் குறைவு. ஆனாலும், நல்லியக்கோடன் சற்றும் கலங்கினானில்லை.  அனுதினமும் தான் வழிபடும் முன்னூர் (அக்காலத்தில் முன்னூற்று மங்கலம்) ஆடவல்லீஸ்வரர் கோயிலில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானை மனம்நெகிழ, கண்களில் கண்ணீர் கசிந்துருக பிரார்த்தித்தான். அன்று இரவு அவன் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘தாமரை மலர்களால் ஆயுதங்களை எடுத்து வந்து என் சந்நிதியில் வைத்து வழிபட்டு, தைரியமாகப் போர் செய். நான் வேல் படையாக இருந்து உன்னை வெற்றிபெறச் செய்வேன்’ என்று அருளினார். மன்னனும் அப்படியே செய்தான். மறுநாள் போர்க்களத்துக்குச் சென்றான். 
போர்க்களத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு தாமரைகள் மலர, அந்த கணத்தில் ஒரு விந்தை நிகழ்ந்தது. மலர்ந்த தாமரைக்குள் இருந்த வண்டுகள் பறந்து சென்று எதிரிப் படையினரின் யானைகளின் காதுகளில் புகுந்தன. வண்டின் குடைச்சல் தாங்காமல் மதம் பிடித்துவிட்ட யானைகள் பின்னால் திரும்பி தலைதெறிக்க ஓட, எதிரிப் படை வீரர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். நல்லியக்கோடன் எய்த அம்புகள் முருகப் பெருமானின் கை வேல்களாக மாறி எதிரிகளை அழித்தது.
இப்படி பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட ஐயனின் ஆலயத்தில், ஐயனே தென்முகக் கடவுளாக எழுந்தருளி இருப்பதன் பின்னணி, நமக்கு அரியதொரு தத்துவத்தை உணர்த்துகிறது. ‘ஒருவர் எத்தனைதான் உயர்ந்தவராக இருந்தாலும், அவர் தேவராக இருந்தாலும் கர்வம் மட்டும் இருக்கக் கூடாது’ என்பதுதான் அந்தத் தத்துவம். சராசரி மனிதர்களுக்கே கர்வம் கூடாது என்னும்போது, குருவாக அதிலும் தேவர்களுக்கெல்லாம் குருவாகத் திகழும் குரு பகவானுக்கு கர்வம் ஏற்படலாமா?

அப்படி ஒருமுறை தேவர்களின் குருவாகவும், நவகிரகங்களில் ஒருவராகவும் திகழும் குரு பகவானுக்கு கர்வம் ஏற்பட்டது. அடுத்த கணமே குரு பகவான் தன் தேஜஸை எல்லாம் இழந்து விட்டார். தன்னுடைய தேஜஸ் இழந்தது தெரியாமல் அவர் தேவசபைக்கு சென்றபோது, இந்திரன் உள்ளிட்ட எவருமே அவரை வரவேற்று உபசரிக்கவில்லை. அப்போதுதான், தான் கொண்ட கர்வம் தன்னுடைய தேஜஸை இழக்கச் செய்துவிட்டது என்பது குரு பகவானுக்குத் தெரிந்தது. தன்னுடைய ஞானமும் தன்னிடமிருந்து விலகிவிட்டதையும் தெரிந்துகொண்டார்.
கொண்ட கர்வத்துக்கு மனம் வருந்தி பிரம்மதேவரிடம் சென்று வேண்டினார். குருவின் நிலை கண்டு இரங்கிய பிரம்மதேவர், ‘`பூவுலகில் அமைந்திருக்கும் முன்னூற்று மங்கலம் என்னும் தலத்தில், அம்பிகையுடன் நடனம்புரிந்து ஆனந்த மயமாகத் திகழும் ஐயன் ஆடவல்லீஸ்வரரை தரிசித்து வழிபட்டால், நீ இழந்த தேஜஸும், ஞானமும் திரும்பப் பெறுவாய்’’ என்று கூறினார்.

பிரம்மதேவர் கூறியபடியே தற்போது முன்னூர் என்று அழைக்கப்படும் முன்னூற்று மங்கலத்துக்கு வந்த குரு பகவான், ஆடவல்லீஸ்வரரை வழிபட்டு, இழந்த தேஜஸையும், தொலைத்த ஞானத்தையும் திரும்பப் பெற்றார் என்கிறது தலபுராணம்.
அதுமட்டுமா, இந்தக் கலியுகத்தில் ஞானகுருமார் களாகத் திகழ்ந்து நமக்கு நல்வழிகாட்டிய மகான்கள் பலரும் சிறப்பித்த திருத்தலம் இது. ஆம்... காஞ்சி மகா பெரியவா, திருவலம் மௌன குரு சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் என  மகான்களும், அருளாளர்களும் இங்கு வந்து அருள்மிகு பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரரை வழிபட்டு ஆலயத்தின் பெருமையையும், தலத்தின் அருமையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.


எங்கே இருக்கிறது?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் சுமார் 19 கி.மீ தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். இந்த ஊரில் இருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவு பயணித்தால், முன்னூர் கிராமத்தையும் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம். திண்டிவனம் - முன்னூர் இடையே 22-ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயங்குகிறது. எனினும், பஸ் வசதி குறைவுதான். ஆலங்குப்பத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.

No comments:

Post a Comment