Monday 30 October 2017

ஐப்பசி அன்னாபிஷேகம் திருமந்திரம் சொல்லும் தத்துவம்!

ன்னம் - வேதங்களாலும் உபநிடதங்களாலும் புகழப் படுவது.  பட்டினத்தாா் ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்’ எனப் பாடுகிறாா். 


அன்னத்தைப் பற்றிச் சொல்லாத நூல்களே இல்லை எனும் அளவுக்குப் பெருமை மிகுந்தது அன்னம்.

வேதத்தின் வழியில்...

‘ச்சே! என்ன இது சாப்பாடு... மனுஷன் சாப்பிடுவானா’ என்றெல்லாம் எந்த உணவையும் நிந்திக்கக் கூடாது. அதேபோல் அன்னத்தை வீணாக்குவதும் கூடாது என்கிறது வேதம்.
சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப் படங்களில் உணவுள்ள தட்டில் அப்படியே கைகழுவுவது போன்ற காட்சிகளையும் சாப்பாட்டுத் தட்டைக் கோபத் தில் விசிறியடிப்பது போன்ற காட்சிகளையும் பார்த் திருப்போம். நிஜத்தில் இப்படி யெல்லாம் செய்யவே கூடாது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அம்பர பம்பரமாக ஓடி உழைப்ப தெல்லாம் வயிற்றுக்கான உணவுக்காகவே.

ஆகவே, நாம் அன்னத்தை - உணவை வீணாக்காமல், நிந்தனை செய்யாமல் இருப்ப துடன் இந்த நல்ல வழக்கத்தை நம்முடைய குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும்.

வேதத்தின் இந்தக் கட்டளை களை நாம் கடைப்பிடிக்கும் போது, ஈஸ்வரனின் மூச்சுக் காற்றான வேதம் நம்மைக் காப்பாற்றும். உண்ணும் உணவில் சகல ஜீவராசிகளுக் கும் பங்கு உண்டு.அன்னம் என்ற சொல்லுக்கு - உட்கொள் ளப்படுவது; உட்கொள்வது என்பது பொருள். அந்த உணவு அனைவருக்கும் உரியது. தனக்கென்று மட்டுமே சமைப்பவனைவிட்டு அன்ன லட்சுமி மெள்ள மெள்ள விலகிவிடுவாள் என்கின்றன ஞான நூல்கள்.
அதேபோல், பித்ருக்களின் ஆசியைப் பெறுவதற்கான சிராத்தத்தின்போதும், ‘அன்ன சூக்தம்' சொல்லும்படி பணிக் கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே அன்னத்தின் மகிமையை நாம் அறிந்துகொள்ளலாம்.

வள்ளுவரின் வழியில்...

அன்னத்தை வீணாக்கக் கூடாது என்பதற்கு திருவள்ளு வரை விடவா வேறு சிறந்த உதாரணம் வேண்டும்?!

திருவள்ளுவா் தினந் தோறும் தான் உணவு உண்ணும்போது, ஓா் ஊசியும் சிறு கிண்ணத்தில் நீரும் வைத்துக்கொண்டு உட்காருவாா்.
உணவு பாிமாறப்படும் போது, ஒரு பருக்கைக் கீழே சிந்தினாலும், உடனே அதை ஊசியால் குத்தி எடுத்து,  கிண்ணத்திலுள்ள நீாில் கழுவி மறுபடியும் உணவில் சோ்த்துக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு.

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாதபடி, தான் வாழும் நாள் வரையில் ஒரு பருக்கை கூட கீழே சிந்தாமல், பொறுப் போடு பாிமாறுவாராம் அவரின் மனைவி வாசுகி.

சோற்றால் அடிச்ச சுவர்!

நம் உடம்புக்கே ‘சோற்றால் அடிச்ச சுவா்’ என்றொரு பெயர் உண்டு. யாராவது கொஞ்சம் இளைத்திருந்தால்கூட,

‘என்னப்பா டயட்டா? பார்த்து... சுவரை வெச்சுதான் சித்திரம் வரைய முடியும்’ என்பார்கள் பெரியோர்கள். அந்த அளவுக்கு முக்கியமானது அன்னம்.

காப்பியங்களிலும் அன்னத் தின் மகிமைகள் சொல்லப் பட்டுள்ளன. ஐம்பெருங் காப்பியங்களில் இரண்டா வதும் மதுரை கூலவாணிகன் சாத்தனாா் என்பவரால் எழுதப்பட்டது மான அற்புத நூல் மணிமேகலை. அதில், தெய்வத்தால் அருளப்பட்ட  அமுதசுரபியைக் கொண்டு அனைவருக்கும் அன்னமளித்து ‘உண்டி கொடுத்தோா் உயிா் கொடுத்தோரே’ என்பதை விளக்கும் முகமாகத் திகழ்ந்த மணிமேகலையின் வரலாறு மிக அற்புதமாக விவரிக்கப் பட்டிருக்கும்.
ஆக, அன்னம் எனும் மகத்து வத்தை மகேஸ்வர வடிவமாகவே போற்ற வேண்டும்.

மும்மூர்த்தியரின் அம்சம்
அன்னத்தை மும்மூா்த்தி களின் ஸ்வரூபமாகச் சொல்வாா்கள்.

பிரம்மதேவன், மகா விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்தி களுக்கும் அன்னத்துக்கும் அப்படியென்ன தொடர்பு?

பிரம்மா - படைக்கும் கடவுள். அன்னமும் படைக்கும் கடவுள் தான். அன்னத்தின் மூலமாகத் தந்தையிடம் குடிகொண்ட நாம், தாயிடம் பாிமாறப்பட்டுப் பத்து மாதங்களில் குழந்தையாக வெளிப்படுகிறோம்.

விஷ்ணு - காக்கும் கடவுள். அன்னமும் காக்கும் கடவுள் தான். நம்மைக் கட்டிக்காப்பது அன்னம்தானே?

ருத்திரன் - சங்காரமூா்த்தி. அன்னமும் சங்காரமூா்த்தி தான். இறைவனிடம் வரம் பெற்றவா்கள் அதை முறை தவறி உபயோகப்படுத்தும்போது, அவா்கள் பெற்ற வரமே அவா்களை அழித்துவிடும். அன்னமும் இதேபோல்தான்.

‘கிடைக்கிறதே என்று அள்ளிக்கொட்டி வயிற்றில் அடைக்கக் கூடாது’ என்கிறாா் திருவள்ளுவா்.
‘அற்றால் அளவறிந்து 
          உண்க அஃதுடம்பு 
பெற்றான் நெடிதுய்க்குமாறு’ 


என்று குறள் காட்டும் வழியில் உண்ண வேண்டும்.

முன்பு உண்ட உணவு ஜீரணமாகிவிட்டால், பின்பு உண்பவை சொிமானம் ஆகும் நிலையறிந்து உண்ண வேண்டும். நோயின்றி நீ்ண்ட காலம் வாழ இதுவே வழி என்பதே இதுவே இந்தக் குறளின் கருத்து.

அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் விஷம் என்பது போல், அளவுக்கு மீறிய உணவு உடம்பை அழிக்கும். இந்த முறைப்படிப் பாா்த்தால், அன்னம் - ருத்திரன் என்பது புலனாகும். இவ்வாறு எல்லா விதங்களிலும் உயிா்நாடியாக விளங்கும் அன்னத்தைச் சிவன் கோயில்களில் ‘அன்னா பிஷேக'மாகச் செய்கிறோம்.

அது ஏன்?

 சந்திரன் அருள்பெற்ற திருக்கதை...

சிவாலயங்களில் ஐப்பசி பௌா்ணமியன்று அன்னா பிஷேகம் நடைபெறும்.
தட்ச சாபத்தின் மூலம் தினம் ஒரு கலையாகத் தேய்ந்து வந்த சந்திரன், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சிவன ருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாகப் பெற்ற திருநாள் - ஐப்பசி பௌா்ணமி.

நாமும் சந்திரனின் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் ஐப்பசி பௌா்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடுகிறோம்.

சந்திரன் மனோகாரகன். சிவனருளால் சந்திர பலம் கைகூடும்போது, மனமது செம்மையாகும். மனம் செம்மை பெற்றால், அதன் கட்டளையின் கீழ் நடக்கும் செயல்கள் அனைத்தும் சிறக்கும்தானே?

இதையே விஞ்ஞான ரீதியாகவும் பாா்க்கலாம்.
நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தன்முழு ஔியையும் பூமியில் வீசும் திருநாள் - ஐப்பசி பௌா்ணமி. அன்று அந்த ஔியாற்றலை நாம் பரிபூரணமாகப்  பெறுவதற்கா கவே, அன்னாபிஷேகம் நடை பெறுகிறது.

சந்திரன் சிவனை வழிபட்டுத் சாபம் தீா்ந்த நாள் என்பதோடு, மற்றொரு காரணமும் உண்டு. திருமூலாிடம் போனால் இதற்குத் தெளிவு கிடைக்கும். வாருங்கள் போகலாம்.

திருமந்திரம் சொல்லும் விளக்கம்

ஆகாயமே சிவலிங்கம்; பூமியே சக்தி - ஆவுடையாா்.

அந்த ஆகாயலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்காகக் கடல்நீரை மோந்து சென்று மழையாக அபிஷேகிக்கின்றன மேகங்கள். இவ்வாறு அபிஷேகம் ஆன சிவலிங்கத்துக்கு, நட்சத் திரங்கள் மலா் மாலைகளாக இருக்கின்றன. திசைகளே அந்தச் சிவலிங்கத்துக்கு ஆடையாக இருக்கின்றன.
இதுவே சிவலிங்கத்தின் உண்மையான விளக்கம். இதைச் சொல்லும் திருமூலாின் திருமந்திரப் பாடல்:
தரையுற்ற சக்தி தனி லிங்கம் 
              விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடு மாலை
கரை அற்ற நந்திக்குக் கலை 
                     திக்குமாமே
இப்போது புாிகிறதல்லவா ?

மனிதா்களான நாம் உட்பட மற்ற ஜீவராசிகள் அனைத்தும் ஆகாசலிங்கம் எனும் அந்த ஒற்றைக் கூரையின் கீழ்தான் இருக்கிறோம். அனைவருக்கும் உணவு தேவை. அனைத்து ஜீவராசிகளும் அதைப் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே, ஆகாசலிங்கமாகத் திகழ்ந்து நம்மை அரவணைக்கும் சிவ லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறோம்.
கோடி லிங்கங்களைத் தரிசித்த புண்ணியம்!

மற்றொரு விசேஷமும் உண்டு. ஒற்றைச் சாதத்தை எடுத்துப் பாா்த்தால் தொியும். சிவலிங்கத்தைப் போலவே அதுவும் ஆதி அந்தம் இல்லாத தாகவே இருக்கும். எங்கு தொடக்கம் எங்கு முடிவு என்பது தொியாது. ஆகவே, அன்னாபிஷேகத்தன்று அன்னாபிஷேகத் திருக்கோலத் தில் அருளும் சிவனாரைத் தரிசித்தால், கோடிக்கணக்கான சிவலிங்கங்களைத் தாிசித்த பெரும் புண்ணியம் கிடைக்கும்.

அதுமட்டுமா?

‘சோறு’ என்ற சொல்லுக்கு ‘முக்தி’ என்பது பொருள். ‘சாதம்’ என்ற சொல்லுக்குப் ‘பிறப்பு’ என்பது பொருள். எனவே, ஐப்பசி அன்னாபிஷேகத் திருநாளன்று அன்னாபிஷேக சிவபெருமானைத் தரிசனம் செய்தால், உணவுப் பஞ்சம் இருக்காது என்பதுடன், முக்தி யும் கிடைக்கும்.
இதையே ‘சோறு கண்ட இடம் சொா்க்கம்’ என்று சூட்சுமமாகச் சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர்கள்.

திருக்கோயில்களில் அன்னா பிஷேகம் ஆன பிறகு அந்த அன்னத்தை அனைவருக்கும் வழங்குவாா்கள். அதில் கொஞ் சம் எடுத்து, நீா்நிலைகளில் இருக்கும் ஜீவராசிகளும் உணவுப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நீா்நிலைகளில் கரைக்கவும் செய்வார்கள். 
நாமும் அன்னாபிஷேக நாயகனைத் தரிசித்து வணங்கி ஆனந்த வாழ்வைப் பெறுவோம்.

எப்படி நடைபெறும் அன்னாபிஷேகம்?
-----------------------
பூசை. ச.அருணவசந்தன்

பிஷேகம் என்ற சொல், நடைமுறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அந்தச் சொல்லுக்கு உரிமைப்படுத்து தல்' என்றும் பொருள் கூறுவர்.

`அன்னாபிஷேகம்' என்பது இறைவனுக்கு வயலில் விளைந்த அரிசியைக் கொண்டு அமுதாக்கிக் காய்கறிகளைக் கொண்டு பதார்த்தங்கள் செய்து படைப்பதேயாகும்.
காலப்போக்கில் அது அபிஷேகம் என்ற சொல்லைக் கொண்டு இறைவன் திருமேனி யில் அதைச் சாற்றும் வழக்கம் வந்ததென்பர்.

அன்னாபிஷேக புண்ணிய தினத்தன்று, உச்சிக் காலத்தில் அக்னி திரட்டி (அக்னியை வளர்த்து) அடுப்பிலிட்டு அதை மூட்டுவர். உலை வைத்து தேவையான அளவு அரிசியை வடித்து அமுதாக்குவர்.

அதற்கேற்ப காய்கறிகளால் கூட்டு, துவையல், பொரியல், அவியல் முதலியவற்றை செய்வர். முறுக்கு, அதிரசம், தேன்குழல், சுகியன் முதலியவற் றைச் செய்துகொள்வர்.

மாலையில் இறைவனை அபிஷேகித்து ஒற்றாடை சார்த்தியபின் (நன்கு துடைத் தல்), அமுதை (அரிசிச்சோறு) இறைவன் திருமேனியை மூடும்படி சார்த்துவார்கள்.
அதன்மேல் அலங்காரமாக வடை, முறுக்கு, அதிரசம், அப்பம் ஆகியவற்றை அணிவிப்பார்கள்.

மேலும்  பாகற்காயை அப்படியே வேகவைத்து, புளி, காரமிட்டு கோத்து உருத்திராட்ச மாலை போல் அணிவிப்பர். நீண்ட புடலங்காயை அப்படியே அவித்து, பாம்பு போல் அணிவிப்பார்கள்.சுவாமிக்கு முன்புறம் வாழை இலைகளைப் பரப்பி பல வகையான அன்னங்கள், பணியாரங்கள், காய்கறிகள், கூட்டுகள், பழங்கள், பானங்கள், பாயசங்களை இட்டு நிவேதனம் செய்வர்.

பிறகு தீபாராதனை செய்யப் படும். அதன் பிறகு மிளகு நீர், தண்ணீர் ஆகியவை நிவேதித்துத் திரையிடப்படும். பின்னர் முகவாசம் எனப்படும் தாம்பூலம் நிவேதிப்பர். மீண்டும் தீபாராதனை செய்து அன்பர்களுக்குப் பிரசாதம் வழங்குகின்றனர்.

பிறகு, அந்த அலங்காரத்தைக் களைந்து, சிறிதளவு அன்னத்தை (சோற்றை) எடுத்து லிங்கம்போல் செய்து பூசிப்பார்கள். பின்னர், அதை தட்டில் வைத்துப் பரிசாரகன் தலையில் ஏந்தி வர, குடை, மேளதாளம் தீவட்டியுடன் சென்று ஊரின் குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் செழிக்கும் என்பது நம்பிக்கை.
அன்னாபிஷேக ஆலயங்கள்!

ர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயங்களில் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றாற் போல பெரியதாகையால், காலையிலேயே அன்னா பிஷேகம் தொடங்குகிறது.

சுமார் 100 மூட்டை அரிசி அபிஷேகத்துக்குத் தேவைப்படுமாம்.  பக்தர்கள் மூலம் காணிக்கையாகவும் அரிசி மூட்டைகள் கோயிலுக் குச் சமர்ப்பிக்கப்படுவதுண்டு.

அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்மூலம் சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக வந்துகொண்டிருக்கும்.

எம்பெருமானின் திருமேனி மீது சிறிது சிறிதாக அன்னம்

சாற்றப்படுகிறது. எம்பெருமா னின் திருமேனி முழுவதும் அன்னாபிஷேகம் ஆக, மாலை நேரம் ஆகும்.

பின்னர் பூஜைகள் முடிந்து அர்த்தசாமத்துக்குப் பின் அன்னம் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிதம்பரத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் அன்னா பிஷேகம் செய்யப்படுகிறது. இதில் காய்கறிகள், குழம்புகள் படைப்பதில்லை. அன்னத்தைச் சாற்றி வில்வம் அணிவித்து தீபாராதனை செய்கின்றனர்.
இந்தத் தலத்தை அப்பர் பெருமான்,  ‘அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்’ என்று சிறப்பித்துப் பாடினார்.

திருஆப்பனூர் என்ற திருத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு அன்னவிநோதர் என்ற பெயர் வழங்குகிறது. இங்கு  பெருமான் அன்பருக்காக மணலைச் சோறாக்கி அருள் புரிந்தாராம்.

யிர்கள் மகிழ்ச்சியுடன் வாழ அன்னம் வழியாக இருப்பதால், அதை அளிக்கும் பெருமானைச் சோற்றுத்துறையார் என்றும் அழைக்கின்றனர். 

திருவையாற்றுக்கு அருகில் திருச்சோற்றுத்துறை என்ற தலம் உள்ளது. இங்குள்ள இறைவர் தொலையாச்செல்வர்; அம்பிகை அன்னபூரணி.  இங்கு அருளாளன் என்பவனுக்குப் பெருமான் அட்சய பாத்திரம் தந்ததாகத் தலவரலாறு கூறுகிறது.

சுந்தரர் சிவனாரைப்  ‘பாடுவார் பசி தீர்ப்பார் பரவு வார் இடர் களைவார்’ என்று போற்றுகின்றார். கருகாவூர் பெருமானுக்குப் `பசி தீர்த்த நாயனார்' என்றே பெயர்.

ர்நாடக மாநிலத்தில், மைசூருக்கு அருகிலுள்ள திருத் தலம் நஞ்சன்கூடு. இந்தத் தலத்தில் அருளும் ஸ்வாமிக்கு அனுதினமும் அன்னாபி ஷேகம் நடைபெறுவது சிறப்பாகும்.

விருந்திட்ட ஈஸ்வரன்!

சென்னை - செங்கல்பட்டு மார்க்கத்தில் மறைமலை நகர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் இரண்டரை  கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கச்சூர்.

இங்கே ஊருக்கு நடுவில் விருந்திட்டநாதரும், அருகி லுள்ள மலைக்குமேல் மருந்தீஸ்வரரும் திருக்கோயில் கொண்டிருக்கிறார்கள். 

இங்கே, தம்மைத் தரிசிக்க வந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் பசியைத் தீர்க்கும் வகையில், இல்லம்தோறும் சென்று இரந்து விருந்து படைத்தவர் என்பதால் ஸ்வாமிக்கு விருந்திட்டநாதர் என்று திருநாமம். இந்த ஈஸ்வரனைப் பாடிய சுந்தரர், மலைக்குமேல் இருக்கும் மருந்தீஸ்வரரையும் ‘மாலை மதியே மலைமேல் மருந்தே’ எனப் பாடிப் பரவியுள்ளார்.
இந்தத் திருத்தலத்தில் மாசி மகத்துக்கு முன்பு வரும் ஞாயிற்றுக் கிழமையன்று, சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவன் விருந்திட்ட ஐதீக விழா நடைபெறுகிறது.

ஐப்பசி பரணி அன்னப்படையல்! 


பெருங்காவல் தெய்வமாக விளங்கும் பைரவருக்குப் பெரும்படையல் எனப்படும் அன்னபாவாடம் இடுவது சிறப்பு வழிபாடாகும்.

சித்திரை பரணியிலும், ஐப்பசி பரணியிலுமாக இரண்டு முறை பைரவருக்குப் படையலிட்டு வழிபடுகின்றனர்.

பைரவர் அநேக தருணங் களில் வெளிப்பட்டு அன்பர் களிடம் சென்று படையல் ஏற்கின்றார்.

எனினும், சிறுத் தொண்ட நாயனாரிடம் அவர் சென்று ஏற்ற படையலே புராணங்களில் தனிச் சிறப்புடன் போற்றப் படுகிறது.  அப்படி அவர் சென்ற நாள் சித்திரை பரணியாகும். அதையொட்டியும், போர் நட்சத்திரமான பரணியில் உக்கிர தெய்வங்களுக்கு பெரும் படையலிட்டு வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருப்பதாலும், பரணி நட்சத்திரம் பைரவர் வழிபாட்டுக்கு உரியதானது.

அன்னம் அருளும் திருப்பதிகம்!

அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம்பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே


தில்லையம்பலமாம் சிதம்பரம் இறைவனைச் சிறப் பித்து வேண்டி, திருநாவுக் கரசர் அருளிய அற்புத பதிகம் இது.

ஐந்தாம் திருமுறையில் முதலாவதான இந்தப் பதிகத் தைப் பாடி சிவனாரை அனுதினமும் பிரார்த்தித்து வழிபடுவதால் வீட்டில் பசிப் பிணியே இருக்காது. அது மட்டுமா? இந்தப் பதிகத்தைப் பாடுவதால் உண்ண உணவு மட்டுமின்றி பொன்னும் பொரு ளும் வாய்க்கும், இன்பங்கள் பெருகி வாழ்க்கைச் சிறக்கும் என்பது பெரியோர் வாக்கு.

Thursday 26 October 2017

திருச்சேறை சிவன்கோயில்

THIRUCHERAI_1
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் குடவாசலுக்கு சற்று முன்னதாக உள்ளது திருச்சேறை சிவன் கோயில்.
இரண்டு ஏக்கர் பரப்பில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை முதன்மை கோபுரத்துடன் உள்ளது இந்த கோபுரத்தின் முன்னர் மற்றொரு ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கட்டப்பட்டு வருகின்றது.

மனிதனுக்கு செம்மை தரும் நெறியை – முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும் தலமிது. திருச்சேறை பெருமானுக்கு “செந்நெறியப்பர்” என்ற பெயர் வழங்கப்படுவதும் சிறப்பானதாகும்.
இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.

இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இத்துர்க்கையை வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும்.
நவக்கிரகத்தை தரிசித்து, நடராஜபெருமான் சன்னதிக்கு அருகில் சென்றால் பைரவர் அருள்காட்சியளிக்கிறார். அப்பரால் பாடல் பெற்ற ஸ்தலம். மேலும், இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ள பைரவர் வேறு எங்கும் இல்லாதது தனி சிறப்பாகும்.

“விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே“

சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும் தேவாரப் பாடலாகும். பைரவருக்கு அஷ்டமியன்று வடைமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரக தோஷங்கள் நீங்குதல் ஆகியன கிட்டுகிறது என்கின்றனர்.
தக்கன் யாகத்தில், தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன் பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான். அவ்வாறு சூரியன் பூஜித்த ஸ்தலங்களுள் சாரபரமேஸ்வரர் ஸ்தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும்.

ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன. இந்த மூன்று நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் முழுவதும் காலையில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பால் இறைவி ஞானவல்லி அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் ஞானவல்லி அம்பாள்.

உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தெட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதி ஆகும்.
இவருக்கு அடுத்து பாலசுப்பிரமணியர் சன்னதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.

இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.(தற்போது பட்டு போய்விட்டது)
நன்றி : கடம்பூர் விஜயன்
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும் மோட்ச தீபம் - திருப்பூவணம்

tirupuvanam2
பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள் வரிசையில் 11-வது தலமாக விளங்குவது திருப்பூவணம். மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், தேவார மூவராலும் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பை கொண்டுள்ளது. 
இறைவன் பெயர்: புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்
இறைவி பெயர்: சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி
இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.
 
எப்படிப் போவது?
மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில், மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில் திருப்பூவணம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்பூவணம் செல்லலாம். திருப்பூவணம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்,
திருப்பூவணம் அஞ்சல்,
இராமநாதபுரம் மாவட்டம் – 623 611.
பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். தமிழ்நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப்பெற்றது என்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்துவந்த பொன்னையாளுக்குத் தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.
 
திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வருகை தந்தபோது, வைகை ஆற்றைக் கடந்துதான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்லவேண்டி இருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்குத் தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால், வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.
கோவில் அமைப்பு 
ஆலயம் கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் வைகை ஆற்றின் தென்கரையில் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய மூன்று நிலை கோபுரத்துடன் உள்ளது. இறைவன் கோவில் ஐந்து நிலை கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. சூரியன், பிரம்மா, நாரதர், மகாவிஷ்ணு, திருமகள், நளமகராஜா மற்றும் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களாலும் வழிபடப் பெற்ற சிறப்பை உடையது இத்தலம்.
மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். நமது முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) அமாவாசை நாட்களிலும், மஹாளய பட்சம் எனப்படும் 15 நாட்களிலும் திதி, தர்ப்பணம் ஆகியனவற்றை செய்து நீர்க்கடன் செய்வது மிகவும் முக்கியம். பித்ருக்கள் திருப்தி அடைந்தால்தான் நமது வாழ்வு வளமாக இருக்கும். முன்னோர் வழிபாடு, தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கவல்லது. தெரிந்தோ, தெரியாமலோ ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஏதேனும் பாவங்கள் செய்யாமல் இருக்கமாட்டர்கள். அவ்வாறு நமது பித்ருக்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிடைக்க, திருப்பூவணம் தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவது மிகவம் சிறந்தது. இதனால், நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒரு தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதில் சுவற்றின் உள்ளே சுற்றுப் பிராகாரங்களுடன் அமையப்பெற்றுள்ளன. கோவிலின் தலவிருட்சமாக பலா மரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகை நதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இக்கோயிலின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிர    காரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவகிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம், கல்லில் வடிவமைக்கப்படுள்ளது. இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் காணப்படுகிறது. அருகே பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தால் ஆன உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையில் இடம் பெற்றுள்ளனர்.
திருவிளையாடல் 
 
திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்துவந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி பூண்டவள். அவளுக்கு, பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அதற்குரிய நிதி வசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித்தருமாறு இறைவனை வேண்டிக்கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றிவைக்க திருவுளம் கொண்ட இறைவன், ஒரு சித்தராக அவள் முன் வந்தார். பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை ரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக்கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால், பூவணநாதரின் திருவுருவை பொன்னையாள் வடிக்கச் செய்தாள். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள், அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த உற்சவ திருவுருவ மூர்த்தத்தில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்தத் திருவிளையாடல் படலம், இத்தலத்துக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
நன்றி : என்.எஸ். நாராயணசாமி
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

தாமிரபரணி கரையோரம் "நவ கைலாய ஆலயங்கள்!'

v7
தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் நவ கைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை. பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார்.
பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார். அகத்தியரின் கூற்றுப்படியே அருள்தரும் நவகயிலாய கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் சிவபெருமானின் பேரருளால் உருப் பெற்றுள்ளன.
பாபநாசம்: முதல் கோயில் பாபநாசமாகும். இங்கு ஸ்ரீபாபநாச நாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் - உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது. திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணியின் முதல் தடுப்பணை அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராட வசதி பெற்ற திருத்தலம்.
சேரன்மகாதேவி: இரண்டாவதாக சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீஅம்மைநாதர் என்ற கைலாசநாதர் -ஆவுடைநாயகி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திரபகவான் அம்சம் கொண்ட தலம்.
கோடகநல்லூர்: மூன்றாவதாக கோடகநல்லூரில் உள்ள கைலாசநாதர்- சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் நடுக்கல்லூரியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. செவ்வாய்பகவான் அம்சம் கொண்ட தலம்.
குன்னத்தூர்: நான்காவதாக குன்னத்தூரில் உள்ள அருள்மிகு கோதை பரமேஸ்வரன் என்ற கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மேலத்திருவேங்கடநாதபுரம் அருகே உள்ளது. ராகுபகவான் அம்சம் கொண்ட தலம்.
முறப்பநாடு: ஐந்தாவதாக தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் -சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. குருபகவான் அம்சம் கொண்ட தலம்.
ஸ்ரீவைகுண்டம்: ஆறாவதாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சனிபகவான் அம்சம் கொண்ட தலம்.
தென்திருப்பேரை: ஏழாவதாக தென்திருப்பேரையில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மை திருக்கோயில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 38 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அருகே அமைந்துள்ளது. புதன்பகவான் அம்சம் கொண்ட தலம்.
ராஜபதி: எட்டாவதாக ராஜபதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தென்திருப்பேரையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது. கேது பகவான் அம்சம் கொண்ட தலம்.
சேர்ந்தபூமங்கலம்: ஒன்பதாவதாக சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்கிரன் பகவான் அம்சம் கொண்ட தலம்.
நவகைலாய கோயில்களில் பக்தர்கள் மிகவும் எளிமையாக வழிபட உதவும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. காலையில் புறப்படும் பயணிகள் அனைத்து ஆலயங்களிலும் தரிசனம் செய்துவிட்டு இரவில் திருநெல்வேலியை அடையலாம்.

நன்றி :- கோ.முத்துக்குமார்
தொகுப்பு : சீதா பாரதிராஜா

திருமணப்பேற்றை அருளும் திருவேதிக்குடி!

v8
தேவாரப் பாடல்களுள் திருமணமாகாத கன்னியருக்கும் காளையருக்கும் விரைவில் திருமணபாக்கியம் நல்கும் திருத்தலமாகக் கூறப்படுவது காவிரியின் தென்கரைத் தலமான "திருவேதிக்குடி' மட்டுமே! இத்திருக்கோயில் கண்டியூருக்குத் தென்கிழக்கில் இரண்டு கி.மீ. தொலைவில் திருவையாறு திருத்தலத்திற்கு அருகிலேயே உள்ளது.
இது சப்த ஸ்தான தலங்களில் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் வேதபுரீஸ்வரர். இறைவி மங்கையர்க்கரசியம்மை. தலவிருட்சம் வில்வமரம். இங்குள்ள தீர்த்தம் வேத தீர்த்தம் அல்லது சுந்தர தீர்த்தம் எனப்படுகிறது.
இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறைவன் மீது திருஞானசம்பந்தர் பெருமான் ஒரு பதிகமும் திருநாவுக்கரசர் பெருமான் ஒரு பதிகமும் பாடிச் சிறப்பித்துள்ளனர்.
இத்தல இறைவன், வாழை மடுவில் தோன்றியதால் "வாழை மடு நாதர்' என்ற சிறப்புப் பெயரும் இவருக்கு உண்டு. வேதம் ஒலித்த வண்ணம் இருக்கும் திருத்தலம் இதுவாகும். அதனால் வேதம் கேட்பதில் விருப்பமுடன் பிள்ளையார் இங்கு ஒருபுறம் சாய்ந்த கோலத்தில் காணப்படுவதால் இவரை, "வேதப்பிள்ளையார்' என்றே அழைக்கிறார்கள்.
இக்கோயிலில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் வலப்புறத்தில் உமையம்மையும் இடப்புறத்தில் சிவனுமாக அற்புதக்கோலம் கொண்டுள்ளார்.
"திருமணமாகாத கன்னியர்களும் காளையர்களும் இங்குள்ள வேதிக்குடி இறைவன் அர்த்தநாரீஸ்வரனை தரிசித்து முறைப்படி வழிபாடு மேற்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடி வரும்' என்கிறார் திருஞானசம்பந்தர். இதையே, திருநாவுக்கரசர் பெருமானும் தமது தோவாரப்பதிகத்தில் "உமையொரு பாகனான அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வழிபட்டால் நம் விருப்பங்கள் பூர்த்தியாகும்' என்று கூறுகிறார்.
இங்கு வந்து அம்மையப்பனை தரிசனம் செய்யும் அன்பர்கள் வளமான வாழ்க்கையும் நற்பலன்களும் பெறுகின்றனர்.

நன்றி :- டி.எம். இரத்தினவேல்
தொகுப்பு : சீதா பாரதிராஜா

பூவனூர் புனிதன்!

v9
பூவனூர் இறைவனின் நாமத்தை நினைத்தவர்கள் வினைதீர்ந்து பாவங்கள் அழிந்து இந்திரனைவிட செல்வம் பெற்றவர்களாவார்கள். இந்தப் பூவனூர்ப் புண்ணியன் வெண்ணி ஆற்றின் தென்கரையில் இருக்கிறான். அவனைப் போற்றுவார்க்கு மறுபிறவி இல்லை. அவனை நாரணன் நான்முகன் இந்திரன் வாரணன் குமரன் ஆகியோர் வணங்குவார்கள் என்று அப்பர் பெருமானால் போற்றப்பட்ட தலம்.
இத்தலத்தில் இறைவன் சிவலிங்க வடிவில் காட்சி தரும் தலம். இறைவனுக்கு ஸ்ரீசதுரங்கவல்லப நாதர், ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர். புஷ்பவனநாதர் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. நந்திதேவர் மற்றும் அகத்தியர் முதலிய சித்தர்கள் பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். 1942 இல் இங்கு 48 நாள்கள் நடந்த அதிருத்ர மஹாயாகத்தில் காஞ்சி மஹாபெரியவர் பங்கேற்று தரிசித்திருக்கிறார்கள்.
எல்லா சிவத்தலங்களிலும் ஈசனுக்குத் துணையாக உமையம்மை சந்நிதி இருக்கும் ஆனால் பூவனூர் ஈசன் தலத்தில் மட்டும் வெளிப்பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். உட்பிரகாரத்தில் "புஷ்பவனநாதர்' என்றும் "சதுரங்கவல்லபநாதர்' என்றும் அழைக்கப்படும் மூலவர் சந்நிதி உள்ளது. அகன்ற திறந்த வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது. சிவனாரும் பார்வதிதேவியும் வேண்டி விரும்பித் தங்கி அருள்பாலிக்கும் தலம் இது என்கிறது ஸ்தல புராணம். சிவனாரே மானுட உருவில் வந்து, சதுரங்கம் விளையாடியதால் அவருக்கு ஸ்ரீசதுரங்கவல்லபநாதர் என்று திருநாமம் அமைந்தது. சப்த மாதர்களுள் ஒருத்தியான சாமுண்டீஸ்வரிக்கும் இங்கே தனிச்சந்நிதி உள்ளது. அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீகற்பகவல்லி. என்பதாகும்.
உலகம் அழிந்து புதியதாக உருவான போது தன் பரிவாரத்துடன் வந்த ஈசன் பாமணி ஆற்றங்கரையில் இருந்த, இந்த தலத்தினைச் சுற்றிலும் இயற்கையான மணம் வீசும் பூக்கள் பூத்து நறுமணம் கமழ்வதைக் கண்டார்கள். இயற்கையான இவ்விடத்தில் இறைவனை தேவர்களும் சிவகணங்களும் பூசிக்க விரும்பினர். அவர்கள் ஆசையை பூர்த்தி செய்ய விரும்பிய இறைவன் ஒரு பலா மரத்தடியில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியதோடு உடன் வந்த உமையவளும் கற்பகவல்லி என்ற பெயரோடு அங்கேயே ஈசனுடன் கோயில் கொண்டாள்.
பிரிதொரு நேரம் தென்பாண்டி நாட்டு அரசன் வசுசேனனுக்கும் மனைவி காந்திமதிக்கும் நெடுநாட்களாகக் குழந்தை இல்லை. சிவபெருமானை வழிபட்டான். அரசன் நீராடியபோது, இறைவன் திருவருளால் உமையம்மையே அவர்களுக்கு மகளாகப் பிறப்பதற்காக அங்கு சங்கு ரூபத்தில் தென்பட்டாள். அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஓர் அழகிய பெண் குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான். சப்த மாதர்களில் ஒருவளான சாமுண்டிதேவி அக்குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக வந்தாள். ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் மிகவும் திறமை பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். அரசன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டி, தகுந்த வரன் அமைய வேண்டும் என்ற நோக்கில் தன் மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று தீர்மானித்தான்.
பல அரசகுமாரர்கள் வந்து சதுரங்க ஆட்டத்தில் அவளிடம் தோற்றுப் போனார்கள். மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். இறைவன் மீது பாரத்தைப் போட்டு தலயாத்திரைக்கு மகளுடன் கிளம்பிச் சென்றான். பல சிவத்தலங்களை தரிசித்து முடிவாக திருப்பூவனூர் வந்து சேர்ந்தான். இறைவன் புஷ்பவனநாதரை வழிபட்டு தன் மனக்கவலையை இறைவனிடம் சொல்லிவிட்டு தன் இருப்பிடம் திரும்பினான். மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி வந்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து தன்னுடன் சதுரங்கம் ஆட அழைத்தார். அவளும் சம்மதிக்க சதுரங்க ஆட்டம் துவங்கியது. அதுவரை ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள், அன்று அந்த முதியவரிடம் தோற்றுப் போனாள். அரசன் "தம் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று மகிழ்ந்தாலும் மகளை ஒரு வயோதிகருக்கு தன் வாக்குப்படி மணமுடிக்க நேர்ந்ததே' என்று கவலைப்பட்டான். உள்ளம் உருகி சிவபெருமானை வேண்ட முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் நிற்கக் கண்டான். சதுரங்க ஆட்டத்தில் ராஜராஜேஸ்வரியை வென்று அவளுக்கு மாலையிட்டவர் புஷ்பவனநாதரே ஆவார்.
ஐந்து நிலை ராஜகோபுரமும் உயரமான மதிற்சுவரும் கருங்கல் மண்டபங்களும் பெரிய உள்-வெளிப் பிரகாரங்களும் கலைச்சிறப்புடைய விமானங்களும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். வெளிப் பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் தனித்தனியாக கோயில் கொண்டுள்ளனர். உட்பிரகாரத்தில் மூலவர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்துள்ளது.
இந்தத்தலத்தில் கோயில் கொண்டுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். எவ்வித விஷ நோயால் பாதிக்கப்பட்டவர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து இக்கோயில் தீர்த்தத்தில் நீராடி சாமுண்டீஸ்வரி அம்மன் சந்நிதியில் வேர்கட்டிக்கொண்டு விஷக்கடி நோய்களிலிருந்து விடுபடுகின்றனர். கருவறை கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
இத்தலம், மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் மன்னார்குடியில் வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் அனைத்து சந்நிதிகள் விமானங்கள் பரிவார ஆலயங்கள் ஆகிய அனைத்தும் பழுது நீக்கப்பட்டு, திருப்பணி வேலைகள் நிதிக்குழு ஆணைய நிதி மூலம் நடந்து வருகின்றன. எதிர்வரும் 8.6.2017 ஆம் தேதி அனைத்து விமானங்கள், சந்நிதிகள் மூர்த்திகள் ஆகியவற்றுக்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இப்புனித கைங்கரியத்தில் ஈடுபட்டு இறைவன் அருள்பெறலாம்.
தொடர்புக்கு: 98948 49381.
நன்றி :-  ஆர்.அனுராதா
தொகுப்புசீதா பாரதிராஜா

திருவிடைவாய் சிவன்கோயில்

THIRU_VIDAI_VAI_1
தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற தலங்கள் 274 என இதுவரை கணக்கிடப் பெற்றிருந்தது. கி.பி. 1917-ம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியில் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் மற்றொரு தலம் உள்ளதெனக் கண்டு பிடிக்கப்பட்டது. அத்தலம் தான் திருவிடைவாய்.
இறைவன் -  புண்ணியகோடிநாதர்
இறைவி - அபிராமியம்மை
இத்தலம் திருக்களர் மு.சுவாமிநாத உபாத்தியாயர் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 
இது இடவை என மருவியும் வழங்குகிறது. அப்பர் தேவாரத்தில் இடம்பெற்ற வைப்புத்தலமாகக் கருதப்பெற்று வந்த திருவிடைவாய், திருப்பதிகம் பெற்ற தலமாகவும் விளங்கத் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணாற்றங்கரையில் உள்ளது திருவிடைவாய் திருத்தலம். கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் வழியில் வெண்ணை வாயில் என வழங்கும் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாய் செல்லும் வழி என்னும் கைகாட்டி வழியே கிழக்கில் 1.5 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
கிழக்கு நோக்கிய அழகிய சிறிய திருக்கோயில். புதிய திருப்பணி. ஒரே பிரகாரம் மட்டும் உள்ளது. மூன்றடுக்கு கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கன்னி மூலையில் விநாயகர். வாயு மூலையில் முருகன், கஜலக்ஷ்மி சந்நிதிகள், கிழக்கே ஐயனார், நவக்கிரகங்கள், பைரவர், சந்திரசூரியர் உள்ளனர்.
தெற்கு பிராகாரத்தில் மண்டபச் சுவரில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட இத்தலத் திருப்பதிகக் கல்வெட்டைக் காணலாம். அடுத்து நர்த்தன விநாயகர், தட்சணாமூர்த்தி விளங்குகின்றனர். இலிங்கோத்பவர், பிர்மா துர்க்கை தனிக்கோயில், சண்டேசுரர் உள்ளனர். மகாமண்டபம் அம்பாள் கோயிலை இணைத்துள்ளது. நால்வர் சந்நிதியில் தலத் திருப்பதிகக் கல்வெட்டு உள்ளது. 
அம்பாள் தெற்கு நோக்கி உள்ளார். இறைவன் திருப்பெயர் அருள்மிகு புண்ணியகோடிநாதர். இடைவாய்நாதர் எனத் தமிழில் வழங்கப் பெறுகிறார். அம்பாள் திருப்பெயர் அருள்மிகு அபிராமியம்மை. தீர்த்தம் புண்ணியகோடி தீர்த்தம். தலமரம் வில்வம். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய க்ஷேத்திரக் கோவை வெண்பா ஒன்றும் இத்தலத்தில் உள்ளது சிறப்பு.
நன்றி :- கடம்பூர் விஜயன்
தொகுப்பு : சீதா பாரதிராஜா 

ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போன்ற தொல்லைகள் போக்கும் தலம் - திருப்புத்தூர்

DSCN7814
பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 6-வது தலமாக விளங்குவது திருப்புத்தூர். இது, புகழ்பெற்ற பைரவர் தலமும் ஆகும். 
    இறைவன் பெயர்: திருத்தளிநாதர்
    இறைவி பெயர்: சிவகாமி, சௌந்தர்ய நாயகி
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன.
எப்படிப் போவது?
இந்த சிவஸ்தலம், காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்குப் பேருந்து வசதிகள் உண்டு. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்குடி. 
ஆலய முகவரி
அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில்,
திருப்புத்தூர் அஞ்சல்,
சிவகங்கை மாவட்டம் – 623 211.
இந்த ஆலயம், காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு 
 
அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம், ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி, இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இத் தலம். அதனால்தான், திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. மேலும், வால்மீகி மகரிஷி இங்குவந்து புற்று வடிவில் தல விருட்சமான சரக்கொன்றை மரத்தின் அடியில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்தலத்துக்கு திருப்புத்தூர் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு பிராகாரங்களுடனும், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உள்ள இத்தலத்தில், இறைவன் சுயம்பு லிங்கமாக திருத்தளிநாதர் என்று பெயருடன் எழுந்தருளியுள்ளார், அம்பாள் தனி சந்நிதியில் சிவகாமியம்மை என்று பெயருடன் காட்சி தருகிறாள். இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில், பைரவர் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிராகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீ யோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார். உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகிறது. 
இங்குள்ள பைரவர், ஆதி பைரவர் என்றே அழைக்கப்படுகின்றார். 

பொதுவாக, பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால், இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகிறார். அதனால், யோக பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகிறது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். அதனால், அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப்பெற்று, அவருக்கு மிகவும் உகந்த சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. 

இவரது வழிபாட்டில் கலந்துகொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக்கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டுக்காக பூஜை மணி அடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர, அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்துவைப்பதும் உண்டு.
யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது, நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத் திருத்தலத்தில், சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கை. இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிருகு முனிவரின் மனைவியைக் கொன்றதால் மகாவிஷ்ணு சாபம் பெற்று, அச்சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. 

கோயிலுள் உள்ள நடராஐரின் உருவமும், சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கவை. இங்கு நடராஐர், கெளரி தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்கள், இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பம்சம். இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறாள். ஸ்ரீ விநாயகரும், வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால், யோகத்துக்கும் தவத்துக்கும் இது ஒரு அற்புதமான திருத்தலமாக விளங்குகிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் அமர்ந்த நிலையில் இருப்பதைப் பார்க்கலாம்.
திருப்புகழ் தலம்
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் 2-ம் பிராகாரத்தில், ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கோண்டு மயிலின் முன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
சிறப்புமிக்க இந்த பைரவர் ஆலயத்தை அவசியம் சென்று வழிபடுங்கள். வாழ்வில் எல்லா நலமும் பெறுவீர்கள்.

நன்றி :- என்.எஸ். நாராயணசாமி

தொகுப்பு : சீதா பாரதிராஜா