Wednesday, 16 August 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 1

                                               
                                            வெள்ளெருக்கு மகிமை !

யற்கையை வழிபடத் துவங்கிய ஆதிகாலத்தில், இறைவனின் திருவுருவாக எண்ணி, நேசமுடனும் பக்தியுடனும் மனிதர்கள் அதிகம் வழிபட்டது மரங்களைத்தான். இந்த மரங்களுக்கும் சமயங்களுக்குமான தொடர்பை, பல்வேறு சமய இலக்கிய நூல்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன.
கிளைகளாய் கிளைத்த பல கொப்பெலாம் சதுர்வேதம் கிளைகளீன்ற களையெல்லாம் சிவலிங்கம் கனியெல்லாம் சிவலிங்கம்கனிகளீன்ற சுளையெல்லாம் சிவலிங்கம்...
- என்று போற்றுகிறது குற்றாலக் குறவஞ்சி!
விதை முதல் இலைகள் வரை அனைத்தையும் உயிரினத்துக்குச் சமர்ப்பிக்கும் விருட்சங்களை, தெய்வமாகக் கருதி மனிதன் வழிபட்டதில் வியப்பில்லைதான். கால ஓட்டத்தில்... இறைவனைக் குடியிருத்தி ஆலயங்கள் எழுந்தபோது, இந்த தெய்வ விருட்சங்கள், ஸ்தல விருட்சங்களாயின! ஆன்மிகச் சிறப்பு மட்டுமா? மருத்துவ மகத்துவமும் நிறைந்தவை ஸ்தல விருட்சங்கள். இதுபற்றியும் இந்த விருட்சங்களால் புகழ் பெற்ற தலங்கள் குறித்தும் இந்தத் தொடரில் விரிவாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம். முதல் தரிசனம்... சூரியனார் கோயில்!
வெள்ளை எருக்கன் செடி(ஸ்ரீசிவசூரியப்பெருமான் திருக்கோயில்)
லகின் மிகத் தொன்மையான நூல்களில் ஒன்றான ரிக் வேதத்திலும் சூரிய வழிபாடு பற்றிய குறிப்புகள் உண்டு. தமிழில் தொல்காப்பியமும், சிலப்பதிகாரத்திலும் சூரியவழிபாடு மற்றும் சூரிய வணக்கம் குறித்த குறிப்புகள் உண்டு. இதன் மூலம் சூரியவழிபாட்டின் தொன்மையையும் மகிமையையும் தெளிவுற அறியலாம். சங்க காலத்தில் பூம்புகாரில் இருந்த 'உச்சிக்கிழான் கோட்டம்' என்ற சூரியக் கோயில், கடல் சீற்றத்தால் அழிந்துவிட்டபோதிலும்... தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயில் மிகப் பொலிவுடன் திகழ்கிறது!
தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது சூரியனார் கோயில். கும்பகோணத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரம். இதைக் கட்டுவித்து (1079-1120), அதற்குரிய நிவந்தங்களையும் அளித்தவன் முதலாம் குலோத்துங்க சோழன். 1988-ல் திருவாவடுதுறை ஆதீனத்தின் பேராதரவினால் இந்தக் கோயிலின் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு, மகாகும்பாபிஷேகம் செய்யப்பெற்றது.
சுதைச் சிற்பங்கள் நிறைந்த... சுமார் 50 அடி உயர ராஜகோபுரம் கம்பீரம்! கோயிலுக்குள் ஸ்ரீஉஷாதேவி- சாயாதேவி சமேதராக திருமணக் கோலத்தில் திகழ, இவரது சந்நிதிக்கு எதிரிலேயே குருபகவான் தரிசனம். குருவின் பார்வையில், தம்பதி சமேதராக சூரியபகவான் காட்சி தருவதால், திருமண யோகம் அருளும் அற்புதத் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். அதுமட்டுமா? சகல சனி தோஷங்களும் இன்னும்பிற நவக்கிரக தோஷங்களுக்கு ஆளானவர்களும்... இந்தத் தலத்துக்கு வந்து, சுமார் 78 நாட்கள் தங்கியிருந்து, நவதீர்த்தங்களில் நீராடி, விரதமிருந்து வழிபட்டால், களத்திர தோஷம், விவாகப் பிரதிபந்த தோஷம், புத்திர தோஷம், புத்திரப் பிரதிபந்த தோஷம், உத்தியோகப் பிரதிபந்த தோஷம் உட்பட சகல தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம் என்கிறார்கள். சூரிய தசை- சூரிய புத்தி நடப்பவர்களும்... ஞாயிறுதோறும் இங்கு வந்து வழிபட்டுப் பலனடையலாம். இத்தகு மகிமைகள் நிறைந்த சூரியனார் கோயிலின் இன்னொரு சிறப்பு... ஸ்தல விருட்சமான வெள்ளெருக்கன்!
சிவனாரை பூஜிக்க உகந்த பூக்களில், வெள்ளை எருக்கன் பூவுக்கு முக்கிய இடம் உண்டு. விசேஷ மருத்துவ குணம் நிறைந்த வெள்ளெருக்கன் பூ, புராண- இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. 'வெள்ளெருக்கன் சடை முடியான், வெற்பெடுத்த திருமேனி...' என்று சிவனாரின் சடைமுடியில் சூடப்பட்ட வெள்ளெருக்கன் பூக்கள் குறித்து ராமாயணத்தில் போற்றுகிறார் கம்பர். சங்க இலக்கியம் இதை, 'எருக்கு' எனக் குறிப்பிடுகிறது. புறநானூறில், 'எருக்கம்புதர்ச்செடி' என விவரிக்கிறார் கபிலர். 'குறுமுகிழ் எருக்கங் கண்ணி' என நற்றிணையும், 'குவிமுகிழ் எருக்கங் கண்ணியும்...' என்று குறுந் தொகைப் பாடலும் எருக்கனின் சிறப்பைப் போற்றுகின்றன.
போருக்குப் புறப்படும் மன்னர்கள், ஆலயத்துக்கு வந்து ஸ்வாமியை தரிசிப்பதுடன், ஸ்தல விருட்சத்தில் இருந்து எருக்க இலை ஒன்றைப் பறித்து, கிரீடத்தின் ஓரத்தில் செருகிக்கொண்டு செல்வார்களாம்; வெற்றியுடன் திரும்புவார்களாம்! 'அக்னி புராணம்' இதுகுறித்து விரிவாக விளக்குகிறது. 'நாரதபுராண'த்தில், சிவனாருக்கு எருக்கம்பால் நைவேத்தியம் செய்யப்படுவது குறித்தும், சிவபூஜையில் எருக்கன் பூக்கள் முக்கியத்துவம் பெறுவது குறித்தும் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவலை, 'சிவமஞ்சரி' என்ற நூலிலும் காணலாம். இத்தகு மகத்துவங்கள் நிறைந்த எருக்கம் பூவை ஸ்தல விருட்சமாகக் கொண்ட சூரியனார் கோயிலை தரிசிப்பது விசேஷம் என்பர்.
ஆலயத்தில், கிழக்கு நோக்கி சிம்ம ராசியின் மீது ஆட்சி செய்கிறார் சூரியபகவான். எனவே, சிம்ம ராசிக்காரர்களது நோய் மற்றும் வினைகளை, வெள்ளெருக்கன் தீர்த்து வைப்பதாகச் சொல்வர். சூரியன் வெப்பமானவன். எருக்கம் பூவும் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியதுதான். காய் போல் இருக்கும் சிறிய எருக்கம்பூக்களை விரலால் அழுத்தினால் உடைந்துவிடும். உள்ளே விதை இருக்கும். இந்த தாவரத்தின் இலைகள், பூக்கள், தண்டு, வேர் என அனைத்து பாகங்களிலும் பால் இருக்குமாம். இந்தப் பால் தோல் வியாதியைப் போக்கவல்லது. பற்களின் கறைகளை அகற்றும் வல்லமை கொண்ட இந்தப் பூ, நம் மனதின் கறைகளையும் அகற்றி, நமக்குள் தெளிவைத் தரவல்லது! மலேரியா குளிர் ஜுரம் போன்றவற்றுக்கு அருமருந்து... வெள்ளெருக்கம் பூவின் மொட்டுகள்!
திருஎருக்கத்தம் புலியூர் மற்றும் திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய கோயில்களிலும் வெள்ளெருக்கன் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில், திருஎருக்கத்தம்புலியூர் இறைவனுக்கு வெள்ளெருக்கம் பூ மாலை சார்த்தி சிறப்பு பூஜை நடைபெறும். திருக்கானாட்டுமுள்ளூரில் வெள்ளெருக்குடன் அத்தியும் ஸ்தல விருட்சமாக இருப்பது விசேஷம்! வெள்ளெருக்கு வேரில் விநாயகர் செய்து வழிபட சகல பாவங்களும் விலகும்; சந்தோஷம் பிறக்கும் என்பார்கள்!
மருத்துவ மகத்துவம் கொண்ட தாவரங்கள், இறைவன் குடியிருக்கும் ஆலயத்தின் விருட்சமாக கொலுவிருக்கும் போது, அதன் சாந்நித்தியம் பன்மடங்கு உயர்ந்திருக்கும் என்கின்றனர் முன்னோர். எனவே, தலங்களுடன் ஸ்தல விருட்சங்களையும் தரிசிப்பது சிறப்பு. நாமும் தொடர்ந்து தரிசிப்போம்!
நவக்கிரக தோஜங்கள் விலகும்!
''சூரியனுக்கு 'அர்க்கன்' என்றும் பெயர் உண்டு. இவருக்கு உகந்த நிறம்- சிவப்பு. பிடித்த வஸ்திரம்- சிவப்பு ஆடை. எனவேதான் இவருக்கு செந்நிற மலர்களும் செவ்வாடையும் அணிவித்து வழிபடுவார்கள். இவருக்கு உகந்த சமித்து வெள்ளெருக்கு.
முன்பொரு காலத்தில் எருக்க வனமாக இருந்த இடம் இது. பிரம்மனின் சாபத்தால் நவக்கிரகங்களை தொழுநோய் பற்றிக்கொண்டது. அவர்களிடம் அகத்தியர், தயிர் அன்னத்தை எருக்க இலையில் வைத்துச் சாப்பிடுமாறு கூறினார். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, 'இது தேவ ரகசியம். எருக்க இலையின் சாரத்தில் ஒரு அணுப் பிரமாண அளவு தயிரன்னத்தில் கலக்கும். தொடர்ந்து 78 நாட்கள், இதேபோல் சாப்பிட்டு வந்தால் தொழுநோய் பூரண குணமாகும்' என்று அருளினார். அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது எருக்கன் இலை! ரத சப்தமி (தை மாதம்) நாளில், ஏழு எருக்க இலைகள், எள், அட்சதை ஆகியவற்றைத் தலையில் வைத்து நீர்நிலைகளில் ஸ்நானம் செய்தால், நவக்கிரக தோஷம் விலகும்; எருக்கஞ் செடியைச் சுற்றி வலம் வந்தால், திருமணத் தடை நீங்கும்; குழந்தை பிறக்காதவர்களுக்கு குழந்தை பிறக்கும்'' 
'ஆலய விருட்சங்கள்... ஆத்ம திருப்திக்காக!'

வாணியம்பாடி என்றதும் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பவரும், கிட்னி சிகிச்சை நிபுணருமான 'காசினிக் கீரை' புகழ் டாக்டர் அக்பர்கவுசர் நினைவுக்கு வருவார். இவரது அடுத்தகட்ட பரிணாமம்... நோய்களை குணப்படுத்தும் இந்துக் கோயில்களின் ஸ்தல விருட்சங்கள் குறித்த ஆய்வு!
வாணியம்பாடி, கணவாய்புதூர் காசினி தோட்டத்தின் அருகில் உள்ள, அழகிய ஆரோக்கிய விநாயகர் ஆலயத்தில் டாக்டர் அக்பர்கவுசரைச் சந்தித்தோம் (இந்தக் கோயிலைக் கட்டியது மட்டுமின்றி, சென்னை -மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிவாச்சார்யர்களைக் கொண்டு, கடந்த 18-8-2002 அன்று கும்பாபிஷேகம் செய்தவரும் இவர்தான்!).
''நோய்களை குணமாக்கும் அரிய வகை மரம் - செடிகளை ஸ்தல விருட்சமாக வைத்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டபோது, வியப்பும் பிரமிப்பும் அதிகரித்தது. இந்த மரங்கள் அழிந்துவிடக்கூடாது; அடுத்தடுத்த தலைமுறைக்கும் இதன் மகத்துவம் போய்ச்சேரவேண்டும் எனும் எண்ணம் மேலோங்கியது. உலகில் இந்த விருட்சமானது அழிந்து போனாலும், கோயிலுக்குள் உள்ள ஒரேயரு மரத்தில் இருந்தேனும் விதைகள் பரவி, பன்மடங்காகப் பெருகும் என சிந்தித்துள்ளனர் ஆன்றோர்!
ஆனால், ஸ்தல விருட்சங்களின் பெருமையை உணர வில்லை நாம்! இன்னும் சில தலங்களில் விருட்சங்களே இல்லை. புராண- புராதனப் பெருமை கொண்ட சிதம்பரம் தலத்தின் விருட்சம் - தில்லை. தொழுநோய்க்கு மருந்தாக உள்ள இந்த 'தில்லை' எனும் விருட்சம், தில்லையில் இல்லை என்பது வேதனை!
எனவே, அழிந்துவரும் அரிய வகை மரம், செடி-கொடிகளைப் பிற நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் நான் செல்லும்போதெல்லாம் வாங்கிவந்து 108 ஏக்கர் பரப்பளவில், 'மொகல் தோட்டம்' என பெயரிட்டு வளர்த்து வருகிறேன். இங்கேயுள்ள எந்தத் தாவரமும் விற்பனைக்கு அல்ல; இது ஆத்ம திருப்திக்காக! அவ்வளவுதான்...'' என்கிறார்.
ஆயிரக்கணக்கில் அரிய வகைத் தாவரங்கள்! இதனைப் பராமரிக்க 100-க்கு மேற்பட்ட பணியாளர்கள். நவக்கிரகம், ராசி மற்றும் நட்சத்திரத்துக்கு உரிய விருட்சங்கள் என பிரிவு பிரிவாக, விருட்சத்தின் பெயர், எந்த ஸ்தலம், இதன் தாவரப் பெயர், மருத்துவ குணங்கள் என அழகுற பட்டியலிட்டு வைத்துள்ளார் அக்பர்கவுசர்.
ஸ்தல விருட்சங்கள் குறித்த தனது ஆய்வுக் கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார். அத்துடன், அவர் தந்த எண்ணற்ற தகவல்களும் பிரமிக்க வைத்தன. மிக அரிதானதும் அற்புதமானதுமான இந்தத் தகவல்களுடன், விருட்சங்களால் சிறப்புப் பெற்ற ஆலயங்களின் பெருமைகளையும் இணைத்துத் தரும் முயற்சி இது!

                                                                           
 நன்றி :


- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment