Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞானபோதம் பகுதி- 11

பதினோராம் நூற்பா

முன் நூற்பா பாச நீக்கமாய் அமைய, இந்நூற்பா சிவப்பேறு உணர்த்துவதாய் அமைகிறது. பாசம் உயிருக்குத் துன்பந் தருவது ஆதலின் பாச நீக்கம் என்பது துன்பறு நிலையாயிற்று. சிவம் இன்பப் பொருள் ஆதலின் சிவப்பேறு என்பது இன்புறு நிலையாயிற்று. எனவே மாசு நீங்கித் தூய்மைபெற்ற உயிர் இறையின்பத்தில் திளைக்கும் நிலையைக் கூறுவது இந்நூற்பா என அறியலாம்.

அருள் நிலையில் இன்பம் விளையாமை:

உலகத்தை அறிவதற்கு ஐம்பொறி முதலியவை கருவியாதல் போல முதல்வனை அறிவதற்குத் திருவருளே கருவியாய் அமையும் என்பது நாம் அறிந்தது. கருவிகளோடு கூடி நின்ற அளவிலே உயிருக்கு இன்பம் உண்டாவதில்லை. அக்கருவிகளோடு கூடி உலகப் பொருளையறிந்து அதில் அழுந்தும் போதே உலக இன்பம் உண்டாகும். அது போல உயிரும் திருவருளும் ஒன்றுபட்டுக் கூடி நின்ற அளவில் இன்ப நிலை விளையாது. திருவருள் வழியாகச் சிவத்தையறிந்து அதனிடத்தில் அழுந்தும் போதே பேரின்பம் விளைவதாகும்.

ஆனந்த நிலை திருவருளில் அழுந்தி நிற்கும் நிலை அருள்நிலை எனப்படும், திருவருள் வழியாகச் சிவத்தில் அழுந்தி நிற்கும் நிலை ஆனந்த நிலை எனப்படும். இதனால் அருள்நிலைக்கு அப்பால் உள்ளது ஆனந்த நிலை என்பது புலனாகும். கண் சூரியனது ஒளியைப் பொருந்துவது போன்றது அருள் நிலை. அவ்வொளியைப் பொருந்திய கண் அதன் வழியாக நோக்கிச் சூரியனைக் கண்டு அதில் அழுந்துவதைப் போன்றது ஆனந்த நிலை.

ஆன்மா சிவத்தில் அழுந்துதலாகிய ஆனந்த நிலையே முத்தியாகும். இந்நிலையை உடம்பு உள்ள காலத்தில் அடைவதே நிட்டை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையையே இந்நூற்பா எடுத்துக்கொண்டு விளக்குகிறது. முத்தியாகிய இன்புறு நிலையில் உயிர் எவ்வாறு இருக்கும் என்பதை நோக்குவோம். உயிர் எந்த நிலையிலும் தனித்து இருத்தல் இல்லை என்பதும், யாதாயினும் ஒன்றைச் சார்ந்தே இருக்கும் என்பதும், சார்ந்த பொருளின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு தான் என்பது வேறு தோன்றாமல் நிற்கும் என்பதும் நாம் முன்பே அறிந்தவை. இதுபற்றியே உயிரியல்புக்குப் பளிங்கு உவமையாகச் சொல்லப்படும்.

உயிர் சிவமாய் நிற்றல்: இவ்வியல்பினால் முத்திநிலையில் சிவத்தைச் சார்ந்த உயிர் தான் என்பது சிறிதும் தோன்றாமல் சிவமாகவே நிற்கும். மாணிக்கத்தைச் சார்ந்த பளிங்கு அம்மாணிக்கமாகவே நிற்றல் போன்றது இது. பளிங்கு மாணிக்கமே ஆகிவிடவில்லை. ஆயின் மாணிக்கத்தின் தன்மையைத் தன் தன்மையாகக் கொண்டு காட்டுகிறது. அதுபோல முத்தியில் உயிர் சிவமேயாகி விடவில்லை. ஆயின் சிவத்தின் தன்மையைத் தன் தன்மையாகப் பெற்று நிற்கும். சிவத்தினது தன்மையாவது எண் குணங்களாகும். அவ்வெண் குணங்களும் தன்னிடத்து விளங்கப்பெற்று, பளிங்கு மாணிக்கமே எனும்படி விளங்கினாற்போல, உயிர் சிவமே எனும்படி நிற்கும்.

முத்தி நிலைக்கு உவமைகள்: முத்தி நிலைக்குச் சகல நிலையை உவமை காட்டினார் மெய்கண்டார். சகல நிலையில் உயிரே தோன்றச் சிவம் தோன்றாது நின்றாற்போல முத்திக் காலத்தில் சிவமே தோன்ற உயிர் தோன்றாது நிற்கும் என்றார்.

இவ்வாறு மெய்கண்டார் சகல நிலை பற்றி முத்தி நிலையை விளக்க, அதனை அடியொற்றிப் பின் வந்தோர் கேவல நிலையை உவமை காட்டி முத்தி நிலையை விளக்கினர்; கேவல நிலையில் ஆணவ மலமே தோன்ற உயிர் அதில் அழுந்தித் தான் என வேறு தோன்றாது நின்றாற்போல முத்தியில் சிவமே விளங்கித் தோன்ற, உயிர் அதில் அழுந்தித் தான் என வேறு தோன்றாது நிற்கும் என்றனர்.

முத்திக் காலத்தில், உயிருக்குத் தன்னைப் பற்றிய உணர்வு தோன்றாது பேரின்பம் ஒன்றே தோன்ற அதில் மூழ்கி விடுதலால் சிவம் ஆகிய ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும்.

இதனால், முத்தியில் இன்பத்தைத் துய்க்கின்ற உயிரும் அதற்கு அவ்வின்பத்தைக் கொடுக்கின்ற சிவமும் ஆகிய இரு முதல்களும் கேடின்றி உள்ளன என்பதும், ஆயினும் அந்நிலையில் உயிர் வேறு தோன்றாது நிற்கச் சிவம் ஒன்றுமே விளங்கி நிற்கும் என்பதும் அறியப்படும்.

அபேத வாதம்: இதற்கு மாறாக உயிரும் சிவமும் இருமுதல்கள் அல்ல என அபேத வாதம் கூறுவர் ஒரு சாரார். அதனை உணர்த்தப் பின்வரும் நிகழ்ச்சியைச் சொல்லிக் காட்டுவர். ஒரு சமயம் பத்துப் பேர் ஓர் ஆற்றைக் கடந்தனர். அக்கரையை அடைந்ததும் அவர்களுக்குத் தலைவனாய் உள்ளவன் அனைவரும் வந்தனரா என்பதை அறிய அவர்களை எண்ணிப் பார்த்தான்; எண்ணுங்கால் தன்னையும் சேர்த்து எண்ண மறந்துவிட்டான்; தன்னை நீக்கி எண்ணியதால் ஒருவன் குறைய, அந்தப் பத்தாமவன் எங்கே என்று அலைந்து தேடிக் காணாது அவலமுற்றான். அந்த வழியாக வந்த ஒருவர் என்ன நடந்தது என வினவினார். பத்தாவது ஆளை ஆறு அடித்துக் கொண்டு போய் விட்டது என்று அழுது புலம்பினான் அத்தலைவன். அவர் மறுபடியும் எண்ணிப் பார்க்குமாறு கூறினார். அவன் தன்னைச் சேர்ந்தவர்களை வரிசையாக எண்ணி ஒன்பது என்று முடித்தான். உடனே வந்தவர் அத்தலைவனைச் சுட்டிக்காட்டி நீயே பத்தாமவன் என்று உணர்த்தினார். இவ்வாறு தேடியவனே தேடப்பட்டவன் ஆயினான். அதுபோல ஆன்மா தானே பிரமம் என்பதை அறியாது பிரம்மத்தை எங்கெல்லாமோ தேடுகிறது. கடைசியில் தேடியதானே அந்தப் பிரமம் என அறிகிறது என்பர் அபேதவாதிகள்.

அபேத வாதம் பொருந்தாமை: உயிரும் சிவமும் ஒன்று என்னும் இக்கொள்கையைச் சைவ சித்தாந்தம் ஏற்பதில்லை. எத்துணையும் அரிய சிவமும், எத்துணையும் எளிய உயிரும் பொருளால் ஒன்றாகுமோ? உயிர் பாசத்துட்பட்டுப் பிணிப்புண்டு நிற்பது. சிவம் அப்பிணிப்பின்றித் தனியே நிற்பது. இவ்விரண்டும் பொருளால் ஒன்று எனல் எவ்வாறு பொருந்தும்?

முதல்வன் ஆண்டானும், உயிர்கள் அவனுக்கு ஆட்பட்டு ஒழுகுதற்குரிய அடிமையும் என நிற்கும் உயர்வு தாழ்வுடைய வேறு வேறு முதல்களே என்பதனைத் திருமுறையாசிரியர்கள் எங்கணும் எடுத்துக் கூறி வலியுறுத்தியுள்ளனர்

இறைவன் தான் எனை ஏன்று கொளுங் கொலே (3: 45: 3)
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
எனை ஆண்டு கொண்டிரங்கி ஏன்று கொண்டாய் (6: 95: 8)
கடையவ னேனைக் கருணையினாற் கலந்து ஆண்டு கொண்ட விடையவனே (திருவாசகம், நீத்தல் விண்ணப்பம், 1)

என்றாற் போல வரும் திரு மொழிகளைக் காணலாம். மேலும், உயிரும் சிவமும் ஒன்றே என்னில் முத்தியில் பெறுவானும் பேறும் இல்லாமற் போகும். இல்லாமற் போதற்கோ இத்தனை சாதனைகள்! ஆதலால் முத்தியில் இன்பத்தைத் துய்க்கின்ற உயிரும், இன்பத்தைத் தருகின்ற சிவமும் ஆகிய இரு முதல்களும் உள்ளன என்பதே பொருந்துவதாகும்.

பேத வாதம் பொருந்தாமை:

இனி முத்தியில் உயிரும் சிவமும் ஆகிய இரண்டும் உள்ளன என்பதை உடன்பட்டு, அவை இருளும் ஒளியும் போல இரு வேறு தன்மைப்பட்ட பொருளாய் நிற்கும் எனப் பேத வாதம் கூறுவர் பிறிதொரு சாரார். உயிரும் சிவமும் தம்முள் இயைபில்லாத- வேற்றியல்புடைய இருபொருளாயின், அவை எக்காலத்தும் ஒன்றுதல் இயலாது. ஒன்றாதபோது உயிருக்குப் பேரின்பம் எங்ஙனம் விளையும்? ஆதலால் அந்நிலையும் பொருந்தாது.

எனவே, அபேத வாதம் கூறுவது போல முத்தியில் உயிரும் சிவமும் ஒன்றாம் என்றலும் ஆகாது; பேத வாதம் கூறுவது போல அவை இரண்டாம் என்றலும் ஆகாது. அவ்விரண்டு நிலையும் அல்லாத நிலையே சித்தாந்தம் கூறும் முத்தி நிலையாகும். அஃது எவ்வாறு என்பதை விளக்குவோம்.

உயிரும் சிவமும் நிற்கும் முறைமை:

முத்தியில் உயிரும் சிவமும் ஆகிய இரு முதல்களும் உண்மையில் உள்ளன. ஆயின் பிரிந்து வேறு நில்லாது ஒரு பொருள் போல நிற்கும். கலப்பினால் ஒன்றாய் நிற்கும். அக்கலப்பே அத்துவிதம் என்று சொல்லப்படும். அந்நிலையில் உயிர் தான் என வேறு தோன்றாது நிற்கச் சிவமாகிய ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும்.

உப்பும் நீரும்:

இவ்வாறு உயிர் சிவத்தோடு ஒன்றாய் நிற்றலுக்கு உவமையாக உப்பானது நீரில் கலந்து அந்நீரோடு ஒன்றாய் நிற்றலைக் காட்டுதல் மிகப் பொருத்தமாகும். அவ்வுவமையையும் பொருளையும் பின்வருமாறு பொருத்திக் காட்டலாம்.

1. உப்பும் நீரும் தம்முள் இயைந்து ஒன்றாதற்குரிய இரு பொருள்கள். அவை போல உயிரும் சிவமும் உள்ளன.

2. நீரைச் சேர்ந்த உப்பு தான் கெடாது தனது கடினத் தன்மை மட்டும் நீங்கி அந்நீரோடு ஒன்றாகிறது. அதுபோல தான் கெடாது தன்னைப் பற்றியுள்ள ஆணவ மலம் மட்டுமே கெட அதனால் வியாபக அறிவைப் பெற்றுச் சிவத்தோடு ஒன்றாய் நிற்கும்.

3. நீரில் கலந்த உப்புக் கண்ணுக்குப் புலனாகாது நீராகிய ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும். அதுபோல உயிர் சிவத்தில் அழுந்தி வேறு காணப்படாது நிற்கச் சிவம் ஒன்றுமே உள்ளது போலத் தோன்றும்.

4. உப்பும் நீரும் இயைந்துள்ள நிலையில் அதனை ஒன்று என்பதா? இரண்டு என்பதா? ஒன்று என்றும் கூறமுடியாது. இரண்டு என்றும் கூறமுடியாது அதுபோல உயிரும் சிவமும் இயைந்த அத்துவித முத்திநிலை ஒன்றென்றோ, இரண்டென்றோ கூறலாகாத நிலையாம் என்பதை உணரலாம்.

இங்கே, இப்பொழுதே :

உடம்போடு கூடியுள்ளபோதே இவ்வாறு சிவத்தோடு ஒன்றி அதில் அழுந்தி நிற்கும் நிட்டை நிலையைப் பெறலாம். பெற்றுப் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கலாம். எனவே, முத்தியென்பது இங்கேயே, இப்பொழுதே பெறுதற்குரியது என்பது விளங்கும்.

இறைவனது தன்மை:

இன்பம் தரும் பொருளினது தன்மையை உணர்தலே இன்பமாகும். உலகப் பொருளினது தன்மையை நாம் அளந்து வரையறுத்து உணர்கிறோம். அதனால் உலகப் பொருளினால் வரும் இன்பதும் வரையறையப்படுதல் உடையதாய் விளங்குகிறது. சிவத்தினது தன்மை அத்தகையதன்று. அஃது உயிரறிவினால் அளந்தறியப்படுவதன்று. அது பற்றியே,

நின்னளந் தறிதல் மன்னுயிர்க்கு அருமையின்

எனத் திருமுருகாற்றுப் படை கூறிற்று.

இறையின்பம்:

கடலில் குளிப்போர் கைவீசிப் பாய்கிறார்கள்; நெடுக நீந்துகிறார்கள்; மூழ்கி எழுகிறார்கள். அலை மீது மிதக்கிறார்கள். எல்லாம் செய்தாலும் கடலை அவர்களால் அளக்க முடிகிறதா? கையளவு இடத்தில் நிற்கும் அவர்களது நிலை எங்கே! கண்ணுக்கெட்டாமல் கங்கு கரையற்றதாய் விரிந்து பரந்து கிடக்கும் கடலின் அகற்சி எங்கே! அக் கடற்பரப்பை அவர்களால் அளந்தறிய முடியாது. அதுபோலவே இறைவனது தன்மையை உயிர்கள் முழுதுமாக உணர்தல் என்பது என்றும் ஆகாத செயல்.

இறைவனது இயல்பு வரையறைப்படாமல் நிற்பது; அறியுந்தோறும் மேலும் மேலும் புதிது புதிதாய் வெளிப்பட்டு நிற்பது. இறைவனது நிலை முழுவதும் உயிரறிவில் ஒருங்கே அடங்குவதன்று. ஆதலின் அவ்வியல்பை உயிர் உணருந்தோறும் இன்பம் புதிது புதிதாய்ப் பெருகி வரையறைப் படாமல் வளர்ந்து செல்கிறது.

இவ்வாறு பொங்கிப் பெருகும் அவ் வின்பநிலையைப் புலப்படுத்துதல் அருமை என்பது தோன்ற

பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே (திருவாசகம், பிரார்த்தனைப் பத்து 6)

என ஏழு அடைமொழிகளை அமைத்துக் கூறினார் வாதவூரடிகள்.

இதனால், உயிர் சிவத்தில் அழுந்தி அதன் இயல்பை உணருந்தோறும் சிவபோகம் வரம்பின்றிப் புதிது புதிதாய் விளைந்து உயிர்க்கு இன்பம் செய்யும் என்பது இனிது விளங்கும்.

இன்பத்திற்குக் காரணம் அன்பு:

உயிரறிவு ஒரு பொருளின் குணத்தில் செறிதலே-அழுந்துதலே இன்பம் எனக் கண்டோம். அழுந்துதல் எப்பொழுது உண்டாகும்? ஒரு பொருளிடத்து அன்பு ஏற்படும் பொழுதே அதனிடத்து அழுந்தும் நிலை உண்டாகும். மாறாக அன்பு இல்லையேல் அப்பொருளிடத்து அழுந்துதல் இல்லை. அழுந்துதல் இல்லையேல் இன்பம் இல்லை. எனவே இன்பத்திற்குக் காரணம் அன்பே என்பது புலனாகும். இவ்வுண்மையைச் சிற்றின்பத்தில் வைத்து விளங்கிக் கொள்ளலாம்,

தலைவனும் தலைவியும் செம்புலப் பெயல் நீர் போல அன்பினால் நெஞ்சம் கலந்து நிற்பர்; ஒருவர் குணத்தில் ஒருவர் அழுந்தித் தாம் வேறு நில்லாது அவளே நான் என்று அவனும் அவனே நான் என்று அவளும் தம்மில் செறிந்து நின்று இன்புறுவர். இக் காம இன்பத்திற்கு அன்பே காரணம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அன்பும் சிவமும்: அது போல மெய்ந்நெறியில் சிவ பெருமானையே நினைந்து நினைந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகும் அன்பே பேரின்பத்திற்கு வழியாகும். அன்பினில் விளைந்த ஆரமுதே (பிடித்த பத்து, 8) என்றார் மணிவாசகர், சிவபிரானிடத்தில் வைக்கும் அன்பின் விளைவே ஆனந்தம் என்பதை இங்ஙனம் குறித்தார். சிவபிரானிடத்தில் பேரன்பு உள்ளவரே பேரின்பத்தைப் பெறுவர் என்னும் கருத்தில்,

ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை (திருமந்திரம், முதல் தந்திரம்)

என்றார் திருமூலரும்

எனவே, இறைவனிடத்தில் வைக்கும் ஆராத அன்பே உயிரை அவனிடத்தில் அழுந்தச் செய்யும் எனவே, அதனால் விளைவதே இன்புறுநிலை எனவும் அறியலாம்

பேரன்பைப் பெருக்குதல்:

இறைவன்பால் அன்பு எப்பொழுது மீதூரும்? எத்துணையும் அரிய முதல்வன் எத்துணையும் எளிய நமக்கு அருள் செய்து வரும் திறத்தினை எண்ணுந்தோறும் அவனிடத்து அன்பு பெருகும். கேவல நிலையில் ஒரு சிறிதும் அறிய மாட்டாது அறியாமையில் அழுந்திக்கிடந்த நமக்கு உடம்பு முதலியவற்றைக் கொடுத்து அறியும்படி செய்தவன் அவனல்லவா? உயிர்களாகிய நம்மைப் பல்வேறு உடம்பாகிய பாவையிற் புகுத்தி வினையாகிய கயிற்றினால் உலகமாகிய அரங்கிடையே சுழலச் செய்தவனும் அவனல்லவா?

ஆட்டுவிக்கின்ற அவனை நாம் அறியாவண்ணம் நம்மை உலகப் பொருள்களை நோக்கி ஒடும்படியாகச் செய்தவனும் அவனல்லவா? வெளியே ஓடி ஓடிப் பயன் காணாது உவர்ப்பு எய்திய நிலையில் நம்மை உள்முகமாக நோக்கச் செய்து தன்னை உணரும்படி செய்தவனும் அவனல்லவா? பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாகிய தேனை வழங்கியவனும் அவனல்லவா?

இவ்வாறு பெத்தத்தில் உயிர்க்குயிராய் நின்று உலக போகத்தை நுகர்வித்து வளர்த்த அவனது கைம்மாறு கருதாத பேருதவியையும், இம் முத்திக் காலத்திலும் உடனாயிருந்து செய்து வரும் பேருதவியையும் நினையுந் தொறும் நினையுந் தொறும் அருளாளருக்கு அவனிடத்து இடையறாப் பேரன்பு மேன்மே<லும் மீதூர்ந்து விளையும்; காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் நிலை உண்டாகும்.

நிட்டை: இவ்வாறு உருகிப் பெருகும் அன்பினால் சிவத்தின்கண் அழுந்தி நிற்கும் நிலையே நிட்டை என நூல்களில் கூறப்படும். இதனையே இந்நூற்பா அயரா அன்பின் அரன் கழல் செலுமே எனக் குறிக்கின்றது. இதுகாறும் கூறிய விளக்கத்தைக் கருத்திற் கொண்டு நோக்கினால் இந்நூற்பாவின் பொருள்நிலை இனிது புலப்படும்.

நூற்பா

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே

ஆசிரியர் கூறும் கருத்துரை

என்பது சூத்திரம். என நுதலிற்றோ எனின், பரமேசுரனது
சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று கருத்துரை விளக்கம்

ஆன்ம லாபம்

பாசப் பற்றினின்றும் நீங்கித் துன்பமற்று இருத்தலே முடிவான முத்திநிலை. அதற்குமேல் பெற வேண்டுவது ஒன்றுமில்லை என்று கூறும் சமயங்கள் உள்ளன.

சைவ சித்தாந்தம் அக்கொள்கையை ஏற்பதில்லை. துன்பத்தினின்று விடுபடுதல் மட்டும் போதாது. இன்பத்தைத் துய்த்தலும் வேண்டும். அறிவின் பயன் ஒன்றை அறிந்து நுகர்தலேயாகும். முத்தியில் உயிரின் குணமாகிய அறிவு இருந்தும் நுகர்ச்சி இல்லையேல் அவ்வறிவினால் என்ன பயன்? அவ்வறிவு இருந்தும் இல்லையேயாம். அந்நிலை பொருந்தாது. ஆதலால் பாச நீக்கமாகிய துன்புறு நிலைக்குப் பின்னர் சிவப் பேறாகிய இன்புறு நிலையும் உண்டு என்பதே சைவ சித்தாந்தத்தின் துணிபு ஆகும்.

பாச நீக்கமும் சிவப்பேறும் ஆகிய இவ்விரண்டுமே ஆன்மா அடைதற்குரிய முடிநிலைப் பயன்களாம். அவை ஆன்ம லாபம் எனப்படும். அவற்றுள் பாச நீக்கம் முன் நூற்பாவில் கூறப்பட்டமையால் இந்நூற்பா சிவப்பேற்றினைக் கூறுவதாக அமைகிறது.

சீபாதங்களை அணைதல்: இறைவனது திருவருள் வியாபகத்துள் உயிர் வேறு தோன்றாது அடங்கி நிற்றலைத் திருவடிக் கீழ் இருத்தல் என்றும், அதன்கண் அழுந்தி நின்று நுகரும் இன்பத்தைத் திருவடி இன்பம் என்றும் நூல்கள் கூறும்.

அது பற்றியே இன்புறு நிலையைக் கூறும் இந்நூற்பாவுக்கு பரமேசுரனது சீ பாதங்களை(திருவடிகளை) அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று எனக் கருத்துரைத்தார் ஆசிரியர். அணைதலாவது அறிதலே யாகும், எனவே சிவனை அழுந்தியறிதலாகிய சிவானுபவமே இங்குச் சீ பாதங்களை அணைதல் எனக் குறிப்பிடப்பட்டது. பொழுது புலர்கின்ற விடியலில் கீழ்வானில் செவ்வொளி மெல்ல எழுந்து படரும். சூரியன் எழுவதற்கு முன் அதன் செவ்வொளி தோன்றுதலை அருணோதயம் என்பர். அவ்வருணோதயம் போல, ஏகனாகி இறைபணி நிற்கும் அருள் நிலையில் இன்பத்தின் தோற்றம் உண்டாகும். அதனை சுகப்பிரபை என்பர். பிரபை என்பதற்கு ஒளி என்பது பொருள். இவ்வாறு சுகவொளி தோன்றுமேயன்றிப் பேரின்பம் அருள் நிலையில் விளையாது. அருளின் வழியே சிவத்தையணைந்து அதில் அழுந்தித் தன்னையிழந்து தான் அதுவாய் நிற்கும் அதீத நிலையிலேயே ஆன்மாவை விழுங்கிக் கொள்ளும் வெள்ளமாகிய பேரின்பம் விளையும். அந்த ஆனந்த நிலையே இங்கு சீ பாதங்களை அணைதல் எனச் சொல்லப்பட்டது.

நூற்பாவின் பொருள்

ஆன்ம அறிவு, காணும் தன்மையுடைய கண்ணுக்கு அதனோடு தானும் உடன் இயைந்து நின்று உருவங்களை அது காணும்படி அவற்றைக் காட்டித் தானும் காண்கின்றது. அது போல இறைவன் அறியும் இயல்புடைய ஆன்மாவுக்கு அதனோடு உடன் இயைந்து நின்று அது பொருள்களை அறியும்படி அறிவித்து அவற்றைத் தானும் அறிந்து வருகின்றான். இவ்வுதவியை இறைவன் எவ்வுயிர்க்கும் கைம்மாறு கருதாது செய்கின்றான்; எவ்விடத்தும் எப்பொழுதும் செய்து வருகின்றான்; பெத்தம் முத்தி ஆகிய இரு நிலைகளிலும் இடைவிடாது செய்து வருகின்றான். அவ்வாறு செய்து வருகின்ற அவனது அளப்பரிய கருணையைத் தினைத்துணைப் பொழுதும் மறத்தலின்றி உணர உணர, ஆன்மாவுக்கு இறைவன் மேல் அன்பு மீதூரும். அவ்வன்பு மேலீட்டால் அவனிடத்தில் அழுந்தி அவனைப் புல்லிப் புணர்ந்து பேரின்பத்தை எய்தும்.

பதவுரை: காணும் கண்ணுக்கு -உருவத்தைத் தானே காணமாட்டாது, ஆன்மா உடனிருந்து காட்டிய போதே கண் காணவல்லதாகும் அத்தகைய கண்ணுக்கு
காட்டி(காணும்) உளம் போல் -உருவத்தைக் காட்டிய ஆன்மா அவ்வுருவத்தைக் கண் சென்று காணும் பொழுது தானும் உடன் சென்று காணும். இவ்வாறு ஆன்மா கண்ணுக்குக் காட்டுதலோடு தானும் உடன் சென்று காணுதல் போல
உள்ளத்தை -இறைவன் அறிவிக்கவே எந்த ஒன்றையும் அறிவதாகிய ஆன்மாவுக்கு
காண - பொருள்களை அஃது அறியும்படி
காட்டிக் காண்டலின் - இறைவன் முன்னர் அதற்கு அறிவிப்பதோடு, அஃது பொருள்களை அறியுமிடத்தில் தானும் உடன் நின்று அறிந்து வருதலால்
அயரா அன்பின் - இறைவன் இவ்வாறு எக்காலத்தும் ஒழிவின்றிச் செய்து வரும் பேருதவியை ஆன்மா இம்முத்திக் காலத்தில் சிறிதும் மறவாமல் அறிந்து நிற்கும். அவ்வறிவினால் இறைவன் மீது எல்லையற்ற அன்பு விளையும் அவ்வாறு விளைந்த அன்பினால்
அரன் கழல் செலும் - அவ்வான்மா சிவானந்த அனுபவத்தைப் பெறும்.

சிறப்புரை:

உள்ளம் என்பதற்கு ஆன்மா என்று பொருள்.

நூற்பாவில் காட்டும் உளம் போல் என்று உள்ளது. அதனைக் காட்டிக் காணும் உளம் போல் என அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறே கண்டு காட்டலின் என்பதைக் காட்டிக் காண்டலின் என மாற்றி வைத்து உரைத்தல் வேண்டும்.

உள்ளத்தை என்றது உருபு மயக்கம். நான்காம் வேற்றுமைக்குப் பதிலாக இரண்டாம் வேற்றுமை உருபு உள்ளது. எனவே, உள்ளத்திற்கு எனப் பொருள் உரைக்கப்பட்டது.

அயராமை -மறவாமை;
அதற்குச் செயப்படு பொருளாகிய அவ்வுதவியை என்பதை வருவித்துக் கொள்ள வேண்டும்.
அயரா அன்பு என்பதற்கு அயராமையான் உண்டாகிய அன்பு என்பது பொருள்.
அயராமை காரணம்; அதனால் நிகழும் காரியம் அன்பு.
அன்பின் அரன் கழல் செலும் என்னும் போது அன்பு காரணம்; அரன்கழல் செல்லுதல் ஆகிய சிவானந்த நுகர்ச்சி காரியம்.

இவ்வாறு அயராமை, அன்பு, செலவு என்னும் இம்மூன்று நிகழ்ச்சிகளும் காரணகாரியத் தொடர்ச்சியாய் இறைவனாகிய ஒரு பொருள் மேல் நிகழ்ந்தமை காணலாம்.

இறைவன் உயிருக்குக் காட்டியும், கண்டும் செய்து வரும் உதவி பெத்தம், முத்தி ஆகிய இரு காலங்களிலும் நிகழ்வது, காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே என்னும் அப்பர் சுவாமிகள் திருமொழி பெத்தம் முத்தி என்னும் இரு நிலைக்கும் பொருந்துவதாகும். பெத்த நிலையில் உயிருக்கு அவன் காட்டுவது உலகத்தை, முத்தி நிலையில் காட்டுவது தன்னையேயாம்.

விளக்கம்: முதல்வன் உயிர்களோடு என்றும் பிரிப்பின்றி இயைந்து நிற்கின்றான். பிரிந்து நில்லாத அவ்வுறவே அத்துவிதம் என்று சொல்லப்படுகிறது. முதல்வன் உயிர்களோடு அத்துவிதமாய் நின்று அவை பொருள்களை அறிந்து நுகரும்படியாகச் செய்கின்றான். அவ்வாறு செய்யும் அவனது செயலைக் காட்டும் உதவி எனவும், காணும் உதவி எனவும் இரு வகையாக வைத்து விளக்குவர்.

காட்டும் உதவி: உயிரினது அறியுந் தன்மை கண்ணொளி காணும் தன்மையைப் போன்றது. கண்ணொளி தானே தனியே சென்று பொருள்களைக் காணமாட்டாது. தனியே சென்று காணவல்லதாயின் இருளில் இருக்கும் பொழுதும் அது பொருளைக் காணுதல் வேண்டும். அஃது இயலாமையால் கண்ணொளி தானே காண மாட்டாது என்பது விளங்கும். அக்கண்ணொளி காண வேண்டுமாயின் விளக்கொளி முதலிய ஏதேனும் ஓர் ஒளியின் துணை அதற்கு வேண்டும். வேறோர் ஒளியோடு கூடிய போதே கண்ணொளி விளங்கிப் பொருள்களைக் காணும் நிலைமையைப் பெறும்.

கண்ணுக்குக் கூறியது உயிருக்கும் பொருந்தும்; உயிரினது அறிவும் கண்ணொளி போல ஒரு துணையைப் பெற்றே அறியவல்லதாகும் அதனாலேயே இறைவன் உயிரோடு இயைந்து நின்று அதன் அறிவை விளக்கி வருதல் இன்றியமையாததாகின்றது. விளக்கொளி கண்ணொளியோடு கலந்து இருளை நீக்கி அதனை விளங்கச் செய்து உருவத்தைக் காணும் தகுதியைப் பெறச்செய்கிறது. அதுபோல முதல்வனது அறிவு உயிரறிவில் கலந்து நின்று அறியாமையை நீக்கி அதனை விளக்கி யாதொன்றையும் அறியும் தகுதியை அடையச் செய்கிறது. இவ்வாறு உயிரறிவை விளக்கிப் பொருளை அறியும் நிலைமையை உண்டாக்குதலே காட்டும் உதவி எனப்படுகிறது. இனிக் காணும் உதவி என்பதைக் காண்போம்.

காணும் உதவி: விளக்கொளியால் கண்ணொளி விளங்கிப் பொருளைக் காணும் தகுதியைப் பெற்றதாயினும் அப்பொழுதும் கண்ணொளி தான் மட்டும் சென்று பொருளைப் பற்ற மாட்டாதாகும், ஒரு நிகழ்ச்சியைக் காட்டி இதனை விளக்கலாம். ஒரு பொருளை எடுப்பதற்காக இருட்டறையில் நுழைகிறோம், பொருள் இருக்குமிடம் தெரியவில்லை. விளக்கை ஏற்றுகிறோம். விளக்கொளி நம் கண்ணிற் கலந்து காணும் தகுதியை உண்டாக்குகிறது. விளக்கொளியால் காணும் நிலைமையைப் பெற்றதாயினும் நம் கண் அப்பொருளைக் காணமாட்டாது நிற்கிறது. ஏன் எனில் அப்பொருள் விளக்கொளிபடாத ஒரு மூலையில் இருண்ட பகுதியில் இருக்கிறது. இதனால் ஓர் உண்மை விளங்கும். விளக்கொளி கண்ணொளியில் மட்டும் பொருந்தினால் போதாது. கண்ணாற் காணப்படும் பொருளிலும் அவ்வொளி சென்று பொருந்துதல் வேண்டும் என்பதே அவ்வுண்மை. வேறு வகையிற் கூறினால், விளக்கொளி கண்ணொளியை விளக்கியதோடு நில்லாமல் அக்கண்ணொளியோடு உடன் சென்று பொருளையும் பற்ற வேண்டும். அஃதாவது விளக்கொளி பொருளிலும் பொருந்த வேண்டும். அப்பொழுது தான் கண்ணொளி பொருளைக் காணவல்லதாகும். அவ்வாறு விளக்கொளி கண்ணொளியோடு உடன் சென்று பொருளிற் பொருந்தாவிடின், காணும் தகுதியைப் பெற்றும் கண்ணொளி பொருளைக் காணாதே நிற்கும்.

அதுபோல இறைவன் ஆன்மாவின் அறிவை விளக்கி அறியும் நிலைமையை உண்டாக்குதலாகிய காட்டும் உதவியை மட்டும் செய்தால் போதாது. அவ்வறிவு சென்று பொருளை அறிதற்கு இறைவன் தானும் உடன் நின்று அப்பொருளை அறிதல் வேண்டும். இவ்வாறு ஆன்ம அறிவு பொருள்களை அறியும்படி இறைவனும் அதனோடு உடன் நின்று அவற்றை அறிதலே காணும் உதவி எனப்படுகிறது. நூற்பாவின் முற்பகுதி, இறைவன் ஆன்மாவுடன் அத்துவிதமாய் இயைந்து நின்று காட்டும் உதவி மட்டுமின்றிக் காணும் உதவியையும் செய்து வருகின்றான் என்பதைக் கூறுகிறது.

காட்டும் உதவியைக் கண்ணொளியும் விளக்கொளியும் ஆகிய உவமையைக் கொண்டு விளக்கினோம். பின் அவ்வுவமையையே தொடர்ச்சியாகக் கொண்டு காணும் உதவியை விளக்கினோம். நூற்பாவில் ஆசிரியர் மேற்கொண்ட உவமை சிறிது வேறானது. அவ்வுவமை கண்ணொளியும் உயிரறிவும் என்பது.

கண்ணொளியும் உயிரறிவும்: கண் விளக்கொளி முதலியவற்றால் இருள் நீங்கி விளக்கம் பெற்றுப் பொருளைக் காணும் நிலைமையை அடைந்த போதிலும் உள்நிற்பதாகிய உயிரினது அறிவு அக்கண்ணொளியோடு கூடி உடன் சென்று தானும் கண்டாலன்றிக் கண் பொருளைக் காணமாட்டாது. எனவே ஒரு பொருளைக் கண் காணுகிறது என்று சொன்னால் உயிரறிவு கண்ணொளியோடு உடன் நின்று காணுகிறது என்பதே பொருளாகும்.

இறைவன் கண்ணொளியிற் கலந்த விளக்கொளி போல உயிர்களது அறிவிற் கலந்து அவ்வறிவில் உள்ள அறியாமையை நீக்கி அதனை விளக்கி அறியுந்தன்மையை உண்டாக்குகிறான்,. அவ்வுதவி மட்டுமே உயிர்களுக்குப் போதியதாகாது. பின் உயிர்கள் பொருள்களை அறியுங்காலத்தில், கண்ணொளியில் உயிரறிவு போலத் தானும் உடன் நின்று அறிகின்றான். அவ்வாறு இறைவன் அறிந்தாலே உயிர்கள் அறியும். காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் என ஆசிரியர் குறித்த உவமையின் விளக்கம் இதுவாகும்.

காட்டும் உளம் போல் என்றே கூறினாராயினும் காட்டும் உதவியை உடன் சேர்த்துக் காணும் உதவியைச் சிறப்பாகக் கூறுதலே ஆசிரியர் கருத்தாதலின் அதற்கேற்ப, காட்டிக் காணும் உளம் போல் என உவமையை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அது போலப் பின்னேயும் உள்ளத்தைக் கண்டு காட்டலின் என்று இருப்பதை உள்ளத்திற்குக் காட்டிக் காண்டலின் என மாற்றி வைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

இதனால், இறைவன் உயிர்களோடு அத்துவிதமாய் இயைந்து நின்று அவ்வுயிர்களின் பொருட்டாகக் காட்டியும் கண்டும் வருவான் என்பதும், அவ்வாறு செய்யான் எனில் உயிர்களுக்கு யாதோர் அறிவும் செயலும் நிகழா என்பதும், அவ்வுயிர்கள் எவ்விடத்தும் எப்பொழுதும் அவனையின்றிச் சிறிதும் அமையா என்பதும் நன்கு விளங்கும்.

காணும் உதவியின் இன்றியமையாமை:

இவ்வத்துவித நிலையும் காட்டும் உதவியும் இரண்டு, ஐந்தாம் நூற்பாக்களில் உணர்த்தப்பட்டன. இந்த நூற்பாவிலே தான் இறைவன் உயிர்க்குயிராய் உடனிருந்து உயிர் அறியும் பொருட்டுத் தானும் அறிதலாகிய காணும் உதவி சிறந்தெடுத்துக் கூறப்பட்டுள்ளது என்பது அறிதற்குரியது.

இறைவனது காணும் உதவியின் இன்றியமையாமையினை,

தொண்டனேன் நினையுமா நினையே விரும்புமா விரும்பே நுகருமா நுகரே

என்றாற் போலத் திருவிசைப்பாவில் முதற்பதிகத்தின் பாடல் தோறும் வந்துள்ள தொடர்கள் பலவும் வலியுறுத்தி நிற்கும். நான் நினைத்தற்பொருட்டு நீயும் நினைப்பாயாக, நான் விரும்புதற்பொருட்டு நீயும் விரும்புவாயாக, நான் நுகர்தற் பொருட்டு நீயும் நுகர்வாயாக என்பன இத்தொடர்களின் பொருளாகும்.

இவ்வாறு உயிர்களின் அறிவும், இச்சையும், செயலும் ஆகிய எல்லாம் இறைவன் வழிப்பட்டனவாய் இருக்கவும் உயிர்கள் அவனது உதவியை ஒரு சிறிதும் உணராமல் பொழுது போக்கிப் புறக்கணிக்கும் போக்கினை என்னவென்பது! அவனது கைம்மாறு கருதாத கருணையை உள்ளவாறு உணர்ந்தால் ஊற்று மணல் போல் உள்ளம் நெக்கு நெக்கு உருகாதோ? கண்ணீர் அருவி பாயாதோ? அழுது காமுற்று அரற்றும் நிலை வாராதோ?

மறவா நிலையும் இன்புறு நிலையும்:

முதல்வன் பெத்தம், முத்தி ஆகிய இருநிலையிலும் இடையறாது செய்து வரும் இவ்வுதவியைப் பெருமக்கள் மறவாது அறிந்து நிற்பர். அறியுந்தோறும் அறியுந்தோறும் அவனையே பற்றி நிற்கும் அன்பு மே<லும் மே<லும் மிகும். அவ்வன்பினால் பிறிதொரு பொருளிற் செல்லாது அவனிடத்திலேயே அழுந்தி நிற்பர். இவ்வாறு ஆன்மாவின் அறிவு, இச்சை, செயல் மூன்றும் முதல்வன் ஒருவனையே பற்றி நின்று பிறிதொன்றிற் செல்லாது அவனிடத்திலேயே அழுந்துதல் நிட்டை நிலையாகும். இந்நிலையையே அயரா அன்பின் அரன் கழல் செலு<மே எனக் குறித்தார் ஆசிரியர்.

அயராமை- மறவாமை; எனவே அயரா அன்பு என்பதற்கு இறைவனது உதவியை மறவாமையால் தோன்றுகின்ற அன்பு என்பது பொருள். அரன் கழல் செல்லுதல் என்பது சிவமாகிய ஒரு பொருளையே பற்றாகப் பற்றி அதன்கண் அழுந்தி நிற்றலைக் குறிக்கும்,

1. அயராமை(மறவாதிருத்தல்) -அறிவு
2. அன்பு செய்தல் -இச்சை
3. அரன் கழல் செல்லுதல் -செயல்

இவ்வாறு முத்தி நிலையில் ஆன்மாவின் அறிவும், விழைவும், செயலும் ஆகிய மூன்றும் சிவமாகிய ஒருபொருளிடத்திலேயே நிகழும் என்பதும், அந்நிலையில் மிக்கெழும் சிவானந்தம் அவ்வான்மாவைத் தன்னுட்படுத்தி விடும் என்பதும், அச்சிவானந்த நுகர்ச்சியில் அழுந்திய ஆன்மா தன்னை மறந்து திளைத்திருக்கும் என்பதும், இதுவே துரியா தீதம் என்னும் இன்புறு நிலையாகும் என்பதும் இந்நூற்பாவின் பிற்பகுதியில் உணர்த்தப்பட்ட செய்திகளாகும்.

கூறுகள்

இந்நூற்பாவின் பொருளை இரண்டு கூறுகளாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர். அக்கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு:

கூறு பொருள்
முதற் கூறு -முதல்வன் செய்யும் உதவி
இரண்டாம் கூறு - இன்புறு நிலை

முதற் கூறு

உயிர்கள் அறிவன எல்லாவற்றையும் அவற்றின் அறிவில் தங்கி நின்று முதல்வனும் அறிந்து வருகின்றான் என்பதை மேற்கோளாக அமைத்து அதனை ஏதுக்காட்டி நிறுவுகிறார் ஆசிரியர்.

மேற்கோள்

ஈண்டு அவனும் அவற்றது விடயங்களை உணரும்- என்றது

மேற்கோளின் பொருள்

முதல்வனும் உயிர்களால் உணரப்படும் பொருள்களை அவ்வுயிர்களோடு உடன்நின்று உணர்வான்.

மேற்கோள் விளக்கம்

இறைவனுக்கு நுகர்ச்சியில்லை:

இதனால், முத்தியில் உயிர் சிவானந்தத்தை உணர்ந்து அதில் அழுந்துதலும் முதல்வனது உதவியை இன்றி அமையாது என்பதும், அவ்வுயிரின் பொருட்டு அவ்ஆனந்தத்தையும் முதல்வன் உடன்நின்று அறிவான் என்பதும் விளங்கும்.

அவ்வாறாயின் இறைவனும் அவ்இன்பத்தை நுகர்வானோ என வினவலாம். முன்பு இல்லாது பின்பு பெற்ற பொழுதே நுகர்ச்சி என்பது உண்டாகும். ஆதலால், இன்பத்தைத் தன்னிடம் கொண்டிராத உயிரே இறைவனைச் சார்ந்து அவனது இன்பத்தைப் புதிதாகப் பெற்று நுகரும். இறைவன் இன்ப வடிவமாக என்றும் இருத்தலால் அவன் அதனைப் புதிதாகப் பெற்று நுகர்தல் இல்லை என்பதே அதற்கு விடையாகும்.

முத்திநிலையில் உயிருக்கேயன்றி, இறைவனுக்கு இன்ப நுகர்ச்சி இல்லை என்பதை அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்ற தொன்று என்பால் (கோயில் திருப்பதிகம், 10) எனவரும் திருவாசகப் பகுதியால் அறியலாம்.

ஏது

இவ்வான்மாக்கள் அவனையன்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான்

ஏது விளக்கம்

இதனை இரு தொடர்களாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

1. இவ்வான்மாக்கள் அவனையின்றி அமையா
2. அவனையின்றி ஒன்றையும் விடயியா

என அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

உயிர் முதல்வனையின்றி அமைய மாட்டாது என்றதன் கருத்து. உயிரினது அறிவு தன்னிடத்தில் முதல்வனது அறிவு கலந்து நின்று விளக்கம் செய்தாலன்றிப் பொருளையறியும் தகுதியைப் பெறமாட்டாது என்பதாகும். உயிர் முதல்வனையின்றி ஒன்றையும் உணர மாட்டாது என்றதன் கருத்து, உயிரறிவு முதல்வனது அறிவால் விளக்கம் பெற்ற பின்னும் அம்முதல்வன் தன்னோடு உடன் நின்று பொருளை அறிந்தாலன்றித் தான் மட்டும் தனியே நின்று எப்பொருளையும் அறியமாட்டாது என்பதாகும். இதனால், முதல்வனது துணையில்லாமல் உயிருக்கு எவ்வறிவும் நிகழாது என்பது விளங்கும். உயிரறிவு பொருளையறியும் தகுதியைப் பெறுதல் முதல்வனது காட்டும் உதவியினால் ஆம்; பின் பொருளையறிதலும் அவனது காணும் உதவியினால் ஆம். இவ்வாறு இவ்விருவகை உதவிகளும் இன்றியமையாது வேண்டப்படும் என்பதை இவ்வேதுவில் உணர்த்தினார் ஆசிரியர். அது பற்றியே, முதல்வன் உயிரின் அறிவை விளக்குதலாய காட்டும் உதவியை மட்டும் செய்தால் போதாது. அவ்வறிவோடு தானும் உடன்சென்று அறிதலாகிய காணும் உதவியையும் செய்தல் வேண்டும் என்பாராய், அவனும் அவற்றது விடயத்தை உணரும் என மேற்கோள் கொண்டார்.

இனி எடுத்துக்காட்டுச் செய்யுட்களை நோக்குவோம்.

எடுத்துக்காட்டு 1

உயிர்கள் அறிவனவற்றையெல்லாம் முதல்வனும் உடன் நின்று அறிவான் எனில் அவனும் உயிர்களைப் போல விகாரம் அடைவானோ? என்னும் ஐயம் எழும். அதனை இங்கு நீக்குகின்றார்.

வெண்பா

68. ஐந்தையும் ஒக்க உணராது அவற்றுணர்வது
ஐந்தும் போல் நின்றுணரும் ஆதலால்- ஐந்தினையும்
ஒன்றொன்றாப் பார்த்துணர் வது உள்ளமே; எவ்வுலகும்
ஒன்று ஒன்றாப் பார்க்கும் உணர்ந்து

இதன் பொருள்:

உயிர் சுவை ஒளி முதலிய ஐந்து புலன்களையும் ஒரு காலத்திலே ஒருங்கே உணரமாட்டாது ஒவ்வொன்றாகவே அறிந்து அனுபவிக்கும். அப்புலன்கள் ஒவ்வொன்றிலும் அது அதுவாய் அழுந்தி நின்று அவற்றை உணரும்.

அவ்வுயிர் போலச் சார்ந்ததன் வண்ணமாய்ப் பலதன்மைப் படுதல் இன்றி, என்றும் ஒரு தன்மையனாய் நிற்கும் முதல்வன் எல்லாப் புலன்களையும் ஒருங்கே பொதுவாக உணர்ந்து நிற்பான்; அவ்வவ்வுயிர் உணரும் புலனைத் தானும் உடனாய் நின்று சிறப்பாக உணர்வான்.

பதவுரை

ஐந்தையும் ஒக்க உணராது -(ஆன்மா) சுவை, ஒளி முதலிய ஐந்து புலன்களையும் ஒரு காலத்தில் ஒரு சேர உணரமாட்டாது
அவற்று -அவ்வைம் புலன்களுள்

உணர்வது -ஒரு புலனை மட்டும் உணருமிடத்து
ஐந்தும் போல் நின்று உணரும் -ஐம்பொறிகள் ஐம்புலன்களை அது அதுவாக அழுந்தி உணர்தல் போலவே உணரும்
ஆகலான் -ஆதலால்
ஒன்று ஒன்றாப் பார்த்து உணர்வது -இவ்வாறு புலன்களை ஒவ்வொன்றாகச் சுட்டி அறிந்து அனுபவிப்பது
உள்ளமே - ஆன்மாவேயாம்
ஒன்று -ஆன்மாவைப் போலச் சார்ந்ததன் வண்ணமாய்ப் பல தன்மைப்படுதல் இன்றி, என்றும் ஒரு தன்மைத்தாய் நிற்பதாகிய முதற்பொருள்
எவ்வுலகும் ஒன்றா உணர்ந்து -எல்லாப் புலன்களையும் பொதுவாக ஒருங்கே உணர்ந்து
பார்க்கும் -அவ்வுயிர்களோடு உடனாய் நின்று, அவ்வவ்வுயிர்களின் புலனைச் சிறப்பாகவும் அறியும்.


விளக்கம்

இறுதியடியில் உள்ள ஒன்று என்பது சிவமாகிய முதற்பொருளைக் குறிக்கும். என்றும் ஒரு தன்மைத்தாய் நிற்றல் பற்றிச் சிவத்தை ஒன்று என்றார். ஒன்றொன்றாகவே அறிதல், அது அதுவாய் அழுந்தி யறிதல் முதலிய தன்மைகள் சிவத்திற்கு இல்லாமையால் உயிர் போல வேறுபாடு எய்துதல் இல்லை என்பது கருத்து. எனவே உயிரும் சிவமும் உடனாய் நின்று ஒரு புலனை அறியுமிடத்து உயிர் அழுந்தி நின்று அறியும்; சிவம் அதனை அழுந்தாதே அறியும் என்பது விளங்கும்.

எடுத்துக்காட்டு 3

முதல்வன் சிவஞானிகளுக்கு வரும் இன்பம் துன்பம் இரண்டையும் சிவபோகமாக விளையச் செய்வான் என்பதை இங்கு உணர்த்துகிறார்.

வெண்பா

69. ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப்
போகமாய்த் தான் விளைந்த பொற்பினான்-ஏகமாய்
உள்ளத்தின் கண் ஆனான்; உள்குவார் உள்கிற்றை
உள்ளத்தாற் காணானோ உற்று

இதன் பொருள்:

சிவஞானியர் நான் என ஒன்று இல்லை எல்லாம் அவனே என முதல்வனோடு ஒன்றாய் நின்று பிராரத்த வினையினால் தமக்கு வரும் இன்ப துன்பங்களை அவனருளாகவே காண்பார்கள்.

முதல்வன் அவர்களுக்கு அங்ஙனம் வரும் இன்பம் துன்பம் இரண்டையும் சிவ போகமாகவே விளையச் செய்வான். அதனால் அவர்கள் அனுபவிக்கும் அனுபவம் உலக அனுபவம் ஆகாது சிவானுபவமே யாகும்.

முதல்வன் உயிரின்கண் நீங்காது நிற்பவன் ஆதலால் கருதுவார் கருதும் கருத்தினை அறிய மாட்டானோ? அறிந்து அதனை முடிப்பான்.

பதவுரை

ஒன்று -முதல்வனைச் சார்ந்து அவனைப் போலவே ஒரு தன்மைத்தாய் நிற்கும் உயிர்
ஏகமாய் நின்று -அம் முதல்வனோடு ஒன்றாகி நின்று
இணையடிகள் உணர -அவனது திருவடிகளை உணர்தலால்
தான் போகமாய் விளைந்த பொற்பினான் -முதல்வன் அவ்வுயிருக்குப் பேரின்பமாய் விளைவான்
(அப்பேரின்பம் எல்லையின்றிப் புதிது புதிதாய் விளைந்து கொண்டேயிருக்கும்)
ஏகமாய் -அவ்வுயிரினிடத்து முதல்வன் ஒன்றாகி
உள்ளத்தின் கண் -அதன் அறிவினின்றும்
ஆனான் -ஒரு போதும் நீங்காதிருப்பான் ஆதலால்
உள்குவார் உள்கிற்றை -கருவார் கருதியவற்றை
உள்ளத்தால் உற்று -அவரது அறிவோடு பொருந்தி நின்று
காணானோ -அறியமாட்டானோ?

விளக்கம் உலகினர் தன்முனைப்போடு பொருந்திப் பற்றோடு செய்யும் செயல்களுக்குப் பயன் உலகமாகும். சிவனை அணைந்தோர் முனைந்து செய்யாது தம்மைத் திருவருள் செலுத்திய வழியிலே சென்று பற்றின்றிச் செய்வர் ஆதலின் அவர் செயல்களுக்குப் பயன் சிவமேயாகும்.

உலகினர் உலகப் பொருள்களையே அவாவி நிற்றலின் அவர் செயல்களுக்கு உலக நுகர்ச்சியே பயனாயிற்று. அணைந்தோர் சிவம் ஒன்றையே வேண்டி நிற்றலின் அவருக்குச் சிவானந்தமே பயனாயிற்று,

இறைவன் உலகினர் கருத்தறிந்து அவர்க்கு இன்பமும் துன்பமும் ஆகிய உலக போகத்தை மாறி மாறி வரச் செய்வான். அணைந்தோர் கருத்தறிந்து அவர்க்கு என்றும் உள்ளதாகிய சிவபோகத்தை வழங்குவான்.

அணைந்தோர் நம்மைப் போலவே உண்டும் உடுத்தும் பிற செயல்களைச் செய்தும் வரினும் அவர்க்கு உலகம் நுகர்ச்சிப் பொருளாகாது சிவமே நுகர்ச்சிப் பொருளாகும் என்பது விளங்கும்.

அணைந்தோர்க்குக் கருவி கரணங்களெல்லாம் பேரின்பத்தை நுகர்கதற்குரிய கருவிகளாய் நிற்கும். இன்ப துன்பத்தை நுகருங்காலத்தில் அதனைத் தம் செயலாகவே பிறர் செயலாகவோ கருதாமல் முதல்வன் செயலாகவே கொண்டு நுகர்வதனால் அவர்க்குப் பேரின்பமே விளையும் என்பதை, காணும் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணும் அடியார்(பண்டாய நான்மறை, 6) என வரும் திருவாசகப் பகுதியால் உணரலாம்.

சுந்தர மூர்த்திகளுக்கு உலக இன்பமும், நீற்றறையில் வைக்கப் பெற்ற அப்பரடிகளுக்கு அத்துன்பமும் பேரின்பமாய் விளைந்தமை எண்ணுதற்குரியது.

இரண்டாம் கூறு

இறைவனிடத்துச் செய்யும் நிரம்பிர அன்பு அவனிடத்தே அழுந்தி இன்புற்றிருக்கும் நிலையைத் தரும் என்பதனை மேற்கோளும் ஏதுவும் அமைத்து விளக்குகிறார்.

மேற்கோள்

இனி, பத்தியினான் மறவாது ஏத்த அவனது சீபாதத்தை அணையும் என்றது

மேற்கோளின் பொருள்

கண்ணொளியில் ஆன்ம அறிவு போல இறைவன் உயிர்களோடு உடனாய் நின்று காட்டுதலும் காணுதலும் ஆகிய உதவிகளைச் செய்து வரும் கருணைத் திறத்தினை மறவாது அதனையே பற்றி நிற்கும் பத்தி மிகுதியினால் அவனை ஏத்தவே, அவனது திருவடியாகிய சிவானந்தத்தைப் பெறும்.

இங்கு ஓர் ஐயம் எழலாம். ஒரு பொருளை அறிந்தவுடனே அதன் மேல் இச்சை நிகழலாம். ஆனால் இச்சை நிகழ்ந்தவுடனே அதனைப் பெற்றுவிடுதல் என்பது உலகத்தில் இல்லை. அவ்வாறிருக்க பத்தி செய்த அளவிலே முதல்வனது சீபாதத்தை அணையும் என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்? என்பதே அவ் ஐயம். அதனைப் பின்வரும் ஏதுவினால் நீக்குகின்றார்.

ஏது

அவன் அந்நியமின்றிச் செய்வோர் செய்திப் பயன் விளைத்து நிற்றலான்

ஏதுவின் பொருள்

முதல்வன் ஆன்மாவிற்கு வேறாய் எங்கேயோ இருப்பவன் இல்லை. அவன் ஆன்மாவிடத்திலேயே அத்துவிதமாய் நிற்கிறான். அதனால் அவரவர் அவ்வப்பொழுது செய்யும் செயல்களின் தன்மையை அவன் அவ்வப்பொழுதே அறிவான். அறிந்து அவ்வச் செயலுக்குத் தக்க பயனை அதனைச் செய்தோர்க்கு அளிப்பான்.

ஞானியர் அவனை இமைப்பொழுதும் மறவாத மிகுந்த பத்தியினால் ஏத்தி நிற்பர். முதல்வன் அவர்தம் பத்திமையும் பரிசும் பார்த்தருளி அதற்குரிய பயனை அப்பொழுதே அவருக்குத் தருவான். ஆதலால் பத்தியினால் மறவாது ஏத்திய உயிர் அப்பொழுதே அவனது சீபாதத்தை அணைதல் பொருந்துவதேயாம். இவ்வாறு கூறி மேற்கூறிய ஐயத்தை நீக்குகிறார். இனி எடுத்துக்காட்டு வெண்பாக்களை நோக்குவோம்.

எடுத்துக்காட்டு 1

வெண்பா

70. அருக்கன் நேர் நிற்பினும் அல் இருளே காணார்க்கு
இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன் அருட்கண்ணால்
பாசத்தை நீக்கும் பகல் அலர்த்தும் தாமரைபோல்
நேசத்தின் தன்னுணர்ந்தார் நேர்

இதன் பொருள்:

சூரியன் எல்லார் முன்பும் வேறுபாடின்றி ஒளியைப் பரப்பி நின்றாலும் காட்சியுடைய கண்ணுடையார் மட்டுமே அதனைக் காணல் இயலும். படலத்தால் மறைக்கப்பட்ட கண்ணுடையார்க்கு அது புலப்படுவதில்லை. எங்கும் இருளாகவே தோன்றும். அதுபோல முதல்வன் யாண்டும் நீக்கமற நிறைந்திருப்பினும் பெத்தர், முத்தர் ஆகிய எல்லோரிடத்திலும் ஒப்பக் கலந்து நிற்பினும்-தவமுதிர்ச்சியுடைய முத்தர்க்கே அவன் புலப்படுவான்; பாசப்பற்றில் அழுந்திய ஏனையோர்க்கு அவன் இல்பொருளே யாவான்.

மேலும், கதிரவன் தாமரை அரும்புகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் மலரச் செய்வதில்லை. அவற்றுள் பக்குவப்பட்டு மலரும் செவ்வியை எய்திய தாமரை மொட்டினை மட்டுமே தன் கதிர்களால் அதன் கட்டினை அவிழ்த்து மலரச் செய்யும் அதுபோலப் பக்குவம் எய்திப் பத்தியினால் தன்னை மறவாது உணர்வார்க்கு முதல்வன் அவரது பாசத்தை நீக்கி, பாசம் காரணமாக இருந்த ஏகதேச அறிவைத் தன் அருளால் விரிவடையச் செய்து வியாபக அறிவு விளங்கச் செய்வான்.

பதவுரை

அருக்கன் -சூரியன்
நேர் நிற்பினும் - எல்லார் முன்பும் வேறுபாடின்றி ஒளியைப் பரப்பி நின்றாலும்
காணார்க்கு -படலத்தால் மறைக்கப்பட்டுக் கண்ணொளியை இழந்தவர்க்கு
அல் இருளே - ஒளியாய்த் தோன்றாது இரவில் உள்ள இருளாகவே நிற்கும். (அது போல)
ஈசன் -இறைவன்
பாசத்தார்க்கு -பாசத்தால் மறைக்கப்பட்டு அறிவை இழந்தவர்க்கு
இருட்கண்ணே -புலப்படாமல் இருளில் உள்ள பொருளாகவே இருப்பான்.
பகல் அலர்த்தும் தாமரை போல் -குளத்தில் உள்ள தாமரை அரும்புகள் யாவும் குவிந்தேயிருப்பினும். அவற்றுள் பக்குவப்பட்ட சில அரும்புகளைச் சூரியன் தன் கதிர்களால் மலரச் செய்தல் போல
நேசத்தின் தன் உணர்ந்தார் நேர் -பக்குவம் எய்திப் பத்தியினால் தன்னை மறவாது அன்பு செய்வார்க்கு
அருட்கண்ணால் -இறைவன் தனது அருட்பார்வையால்
பாசத்தை நீக்கும் -அவரது பாசத்தை நீக்கி அறிவை மலரச் செய்வான்

எடுத்துக்காட்டு 2

வெண்பா

71. மன்னும் இருளை மதி துரந்த வாறு அன்பின்
மன்னும் அரனே மலம் துரந்து- தன்னின்
வலித்து இரும்பைக் காந்தம் வசம் செய்வான் செய்தல்
சலிப்பில் விகாரியலன் தான்.

இதன் பொருள்:

அன்று தொட்டே உயிரோடு அத்துவிதமாய் நிலைபெற்றுள்ள முதல்வன் அவ்வுயிரைத் தானாக்கிக் கொள்ளும் விருப்ப மிகுதியினால் அவ்வுயிரில் உள்ள ஆணவ மலத்தைச் சிறிதுசிறிதாகப் படிமுறையால் நீக்குகிறான். அவனது செயல், நிலைபெற்றுள்ள இருளை வளர்பிறைச் சந்திரன் நாள்தோறும் சிறிது சிறிதாகப் படிமுறையால் ஓட்டுதல் போன்றது.

காந்தம் இரும்பைத் தன்பால் ஈர்த்துக் தன்வசமாகவே இருக்கும்படி செய்யும். அதுபோல முதல்வன் உயிரைப் பற்றியிருந்த மலசத்தி நீங்கின அளவுக்குத் தனது சத்தியைச் சிறிது சிறிதாக உயிரில் பதிவித்து அவ்வுயிரைத் தன்பால் ஈர்த்துத் தன்வசப்படுத்திக் கொள்வான். அவ்வாறு செய்வதில் அவனுக்கு ஒருபோதும் சலிப்பு உண்டாதல் இல்லை. அங்ஙனம் சலியாது செய்தல் பற்றி அவன் மாற்றம் அடைகிறவனும் அல்லன்.

பதவுரை
மன்னும் அரனே - உயிரிடத்து அனாதியே நிலை பெற்றுள்ள இறைவன்
அன்பின் - அவ்வுயிரைத் தானாக்கிக் கொள்ளும் விருப்பமிகுதியால்
மன்னும் இருளை -வானத்தில் நிலைபெற்றுப் பரந்த இருளை
மதி - (அவ்விடத்தில் நிலைபெற்ற) வளர்பிறைச் சந்திரன்
துரந்தவாறு -நாள்தோறும் சிறிது சிறிதாகப் படிமுறையால் நீக்கும் முறைமை போல
மலம் துரந்து -உயிரின் கண் அனாதியே பற்றியுள்ள ஆணவ மலத்தைச் சிறிது சிறிதாகப் படி முறையால் நீக்கி
இரும்பைக் காந்தம் தன்னின் வலித்து- இரும்பைக் காந்தக்கல் தன்பால் ஈர்த்து
வசம் செய்வான்(போல) - தன் வசமாகச் செய்தல் போல
செய்தல் -உயிரை ஈர்த்துத் தன் வசமாகச் செய்தலில்
சலிப்பு இல் -அவனுக்கு ஒரு போதும் சலிப்பு உண்டாதல் இல்லை
தான் விகாரி அலன் - அவன் அங்ஙனம் சலியாது செய்தல் பற்றித் தன் தன்மையில் ஒரு போதும் வேறுபடான்.

எடுத்துக்காட்டு 3

முந்திய எடுத்துக்காட்டில் காந்தம் இரும்பை ஈர்த்துக்கொள்ளுதல் போல முதல்வன் உயிரைத் தன்வசமாகச் செய்வான் என்று கூறியதுகொண்டு, முத்தியில் சிவமும் ஆன்மாவும் காந்தமும் இரும்பும் போல வேறு புலப்பட்டு நிற்குமோ? என்னும் ஐயம் எழுதல் கூடும். அதனை நீக்கி, ஆன்மாத் தான் என்பது புலப்படாமல் சிவத்தோடு ஒன்றாய் நிற்கும் முறைமையை உணர்த்துதற்கு இவ்வெடுத்துக் காட்டினைக் கூறுகின்றார்.

வெண்பா

72. நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா
நசித்திலதேல் ஒன்றாவ தில்லை-நசித்து மலம்
அப்பு அணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாம்
கப்பு இன்றாம் ஈசன் கழல்

இதன் பொருள்

ஆன்மா சிவத்தோடு ஒன்றாகும் பொழுது தான் கெட்டு அதனோடு ஒன்றாகுமோ? கெடாது நின்றே ஒன்றாகுமோ? என்னும் வினா எழுகிறது. கெட்டு ஒன்றாகும் என்று கூறினால், ஆன்மாக் கெட்டொழிந்த பின் அது சிவத்தோடு ஒன்றாதல் எங்ஙனம் நிகழும்? ஆதலால் அது பொருந்தாது.

ஆன்மாக் கெடாது நின்றே ஒன்றாகும் என விடை கூறினால், கெடாது நிற்பின் அது சிவத்திற்கு வேறாய்த் தனித்து நிற்கிறது என்றாகும். அங்ஙனம் ஆன்மாவும் சிவமும் வேறு வேறாய் நிற்கும் நிலைமையில் அவை ஒன்றாதல் எங்ஙனம்? ஆதலால் அதுவும் பொருந்தாது.

இவ்விரண்டும் இல்லையாயின் வேறு எம் முறையில் ஒன்றாகும் எனில், நீரைச் சேர்ந்த உப்புத்தான் கெடாது தனது கடினத் தன்மை மட்டும் நீங்கி அந்நீரோடு ஒன்றாகிறது. அதுபோல ஆன்மாத் தான்கெடாது ஆணவ மலம் மட்டுமே கெட, அம்மலத்தால் சிவத்திற்கு வேறாய் நின்ற நிலை நீங்கிச் சிவத்தோடு ஒன்றாய் அணைந்து அதன் கண் அடங்கி நிற்கும். அங்ஙனம் அடங்கிய பின் அதற்குப் பிரிதல் இல்லை.

பதவுரை

நசித்து ஒன்றின் -(ஆன்மா முதல்வனோடு இரண்டறக் கலக்குமிடத்துத் தான் கெட்டு ஒன்றாகுமோ? கெடாதே ஒன்றாகுமோ? என வினவுவார்க்கு) கெட்டு ஒன்றாகும் எனக் கூறினால்
உள்ளம் நசித்தலால் ஒன்றா -ஆன்மாக் கெட்டொழிந்த பின் முதல்வனோடு ஒன்றுதல் நிகழாது.
(அவ்வாறாயின், ஆன்மாத் தான் கெடாது நின்றே முதல்வனோடு ஒன்றாகும் எனக் கூறலாம் எனின்)
நசித்திலதேல் ஒன்றாவது இல்லை -ஆன்மாக் கெடாது வேறு நிற்குமாயின் ஆன்மாவும் முதல்வனும் வேறு வேறாய் நிற்கும் நிலையில் அவை ஒன்றாக மாட்டா.
(இவ்விரண்டும் பொருந்தாவாயின் வேறு எவ்வகையில் ஒன்றாகும்? எனின்)
அப்பு அணைந்த உப்பின் - நீரைச் சேர்ந்த உப்புத் தனது கட்டித்தன்மை நீங்கி அந்நீரில் ஒன்றாய் விடுதல் போல
மலம் நசித்து -மலம் முழுதும் நீங்கப் பெற்று
உளம் -ஆன்மா
ஈசன் கழல் அணைந்து -(அம்மலத்தால் வேறாய் நின்ற நிலை நீங்கி) இறைவன் திருவடியை அடைந்து
சேடம் ஆம் -அவனுக்கு அடிமையாய் நிற்கும்
கப்பு இன்றாம் -அங்ஙனம் திருவடியில் அடங்கிய பின் அதற்குப் பிரிதல் என்பது இல்லை.

விளக்கம்:

இச்செய்யுள் சித்தாந்த முத்தி நிலையை எடுத்துக்காட்டி முடித்துக் கூறுகிறது.

முத்தியில் ஆணவ மலத்தின் நிலை:

முத்தியில் உயிர் சிவத்தோடு ஒன்றாய் நிற்கும் பொழுது அதனைப் பற்றி யிருந்த ஆணவ மலத்தின் நிலை என்ன?

ஆணவ மலம் கெடும் எனவும், நீங்கும் எனவும் நூல்கள் கூறும். கெடுதல் என்பதன் பொருள் அடியோடு இல்லா தொழிதல் அன்று. பதியையும் பசுவையும் போல ஆணவ மலமும் என்றும் உள்ள பொருளாகும். ஆதலால் அதற்கு அழிவு கூறுதல் பொருந்தாது.

ஆணவ மலம் வியாபகமாகிய உயிரை மறைத்து நிற்றலால் அதுவும் வியாபகப் பொருள் என்பது விளங்கும். வியாபகப் பொருளுக்கு ஓர் இடத்தை விட்டு நீங்கிப் பிறிதோர் இடத்தை அடைதல் என்பது இல்லை. ஆதலால் ஆணவ மலம் உயிரை விட்டு இடம் பெயர்ந்து நீங்கும் என்றலும் பொருந்தாது. ஆகவே கெடுதல், நீங்குதல் என்னும் சொல் வழக்கிற்கு அப்படியே நேரான பொருள் கொள்ளுதல் கூடாது. வேறு எவ்வகையில் பொருள் கூறுவது என்பதைப் பார்ப்போம்.

அக்கினித் தம்பனம் வல்லார் அனல் நடுவில் நின்றாலும் அஃது அவரைச் சுடாது. அப்பொழுது நெருப்பினது சுடும் சத்தி என்னவாயிற்று? அச்சத்தி இல்லாமற் கெட்டொழியவில்லை. இருந்தும் இல்லாததாய் அவரிடத்தில் செல்லமாட்டாமல் மடங்கி நிற்கிறது.

அதுபோல முத்திக்காலத்தில் ஆணவமலம் இருந்தும் அதன் சத்தி சிவமே எனும்படி ஒன்றாய் நிற்கும் உயிரிடத்துச் செல்ல மாட்டாமையால் அது தன் சத்தி மடங்கி இல்லாதது போல நிற்கும். இவ்வாறு மலசத்தி மடங்கி நிற்றலையே மலம் கெடுதல், மலம் நீங்குதல் என்றெல்லாம் கூறுவர். முத்தியிலும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களும் உள்ளன என்பதே சைவ சித்தாந்தத்தின் முடிபாகும்.

எடுத்துக்காட்டு 4

வெண்பா

73. பொன்வாள்முன் கொண்மூவில் புக்கொடுங்கிப் போயகலத்
தன்வாளே எங்குமாம் தன்மைபோல்-முன்வாள்
மலத்துள் மறைந்துஉள்ளம் மற்றுலகை உண்ணும்
மலத்துஇரித்துச் செல்லும் வரத்து

இதன் பொருள்:

காலைப்பொழுதில் சூரியன் மேகக் கூட்டத்துள் புகுந்து மறைந்து நிற்கிறது. அதன் ஒளி சிறிதும் புலப்படாமல் இருக்கிறது. அதுபோல ஆன்மா அநாதியில் ஆணவ மலத்துள் மறைந்து தனது இருப்புச் சிறிதும் தோன்றாமல் கிடக்கிறது. அந்நிலையில் அதன் அறிவு ஒரு சிறிதும் விளங்கவில்லை. அது கேவல நிலையாயிற்று.

அம்மேகக்கூட்டம் பின்பு சிறிதே நீங்குதலால் சூரியவொளி அவற்றிடையே ஒடுங்கித் தோன்றுகிறது. அதுபோலப் பின்பு மாயாகருவிகள் கூடிய நிலையில் ஆணவமலம் சத்தி சிறிது நீங்குகிறது. ஆன்ம அறிவு சிறிதாய் விளங்குகிறது. ஆன்மா உலக போகத்தை நுகர்கிறது. அது சகல நிலையாயிற்று.

பின்பு வீசிய பெருங்காற்றால் அம்மேகக் கூட்டம் முற்றிலும் நீங்கிப்போன பொழுது சூரியவொளி விரிந்து விண்ணில் விளங்கித் தோன்றுகிறது. அதுபோல முதல்வனது திருவருளால் ஆணவமலத்தின் சத்தி அடியோடு நீங்குகிறது. ஆன்ம அறிவு வியாபகமாய் விளங்குகிறது. ஆன்மா இறைவனது திருவடியையடைந்து பேரின்பத்தில் திளைக்கிறது. இதுவே சுத்த நிலையாகும்

பதவுரை

பொன் வாள் -பொன் போலும் ஒளியையுடைய சூரியன்
முன் -காலைப் பொழுதில்
கொண்மூவில் -மேகக் கூட்டத்துள்
புக்கு -புகுந்து மறைந்து நின்று
ஒடுங்கி -(பின் அம் மேகங்கள் சிறிது விலகிய பொழுது) தனது ஒளி சிறிதே விளங்கப் பெற்று
போய் அகல -அம் மேகக் கூட்டம் பெருங்காற்றால் முற்றிலும் நீங்கிப் போன பொழுது
எங்கும் தன் வாளே அம் தன்மைபோல்- தனது ஒளியே எங்கும் விளங்குமாறு நிற்கும் தன்மை போல
உள்ளம் -ஆன்மா
முன் -அநாதியில்
வாள் -தனது அறிவு
மலத்துள் மறைந்து -ஆணவ மலத்துள் மறைந்து கிடந்து
உலகை உண்ணும் -(பின்பு மாயா கருவிகளாகிய தனு, கரணங்களால் ஆணவமலம் சிறிது நீங்கிய நிலையில் அறிவு சிறிதே விளங்கப் பெற்று) உலகத்தை அறிந்து நுகரும்
மலத்து இரித்து - (முடிவில் முதல்வனது திருவருளால்) மும்மலங்களையும் முற்றிலுமாக நீக்கிக் கொண்டு(தனது அறிவு வியாபகமாய் விளங்கப் பெற்று)
வரத்துச் செல்லும் -அவனது திருவடிகளை அணைந்து நிற்கும்.
(வரம்-மேன்மை; அது மேலான நிலையாகிய பரமுத்தியைக் குறித்தது)

பதினோராம் நூற்பா முடிந்தது.

No comments:

Post a Comment