Wednesday, 16 August 2017

நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்


லையை தரிசிப்பதும் மலையிலேயே வாசம் செய்வதும் தனி சுகம். இங்கே... மனசுக்கு நிம்மதியும் மூச்சுக்கு சுத்தமான காற்றும் கிடைப்பது நிச்சயம். எந்த இரைச்சலும் காதுகளை இம்சிக்காது. இதனால்தான், ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைப்பகுதியை ஞானிகளும், தபஸ்விகளும், சித்தர்களும் தேர்ந்தெடுத்தனர். அங்கேயே குடில் அமைத்து, அல்லது குகையையே குடிலாக்கி கடும் தவத்தில் ஈடுபட்டனர்.
சுகபிரம்ம முனிவரும் அப்படியரு மலையைத் தேர்ந்தெடுத்தார். அந்த மலை, சிவசொரூபமாகவே காட்சி தந்ததை கண்டு சிலிர்த்தார். மலையின் உச்சியில், சிவனாரை எண்ணி கடும் தவத்தில் மூழ்கினார். முன்னதாக, விஷ வண்டுகளோ பூச்சிகளோ தாக்காமல் இருப்பதற்கு, தான் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றி அரண் அமைக்கவும் அந்த இடத்தைத் தண்ணீரால் சுத்தம் செய்யவும் எண்ணினார். மலை முழுவதும் சுற்றி வந்தும்கூட தண்ணீர் கிடைக்கவே இல்லை. 'தவம் செய்தால் வரம் தருவாய்; ஆனால் தவம் செய்வதற்கே வரம் பெற்றிருக்க வேண்டும் போல! கருணை காட்ட மாட்டாயா கயிலாசநாதா?!' என மனம் உருகிப் பிரார்த்தித்தார்.
'அவனருளாலே அவன் தாள் வணங்கி...' என்று சும்மாவா சொன்னார்கள்?! அங்கே... தரையில் இருந்து தண்ணீர் மெள்ள ஊற்றெடுத்தது. அந்த நீரை எடுத்து, முகம், கை-கால் அலம்பிக் கொண்டார்; கண்களில் ஒற்றிக்கொண்டார்; தலையில் தெளித்துக் கொண்டார்; கொஞ்சம் அள்ளியெடுத்துப் பருகினார். சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து, அதனை அபிஷேகித்தார். பிறகு, தண்ணீரைக்கொண்டு தரையில் சதுரம் வரைந்தார். அந்தக் கட்டத்துக்குள் அமர்ந்து, தலைக்கு மேலே கரம் குவித்து, ஈசனை வணங்கிவிட்டு, தவத்தில் மூழ்கினார்.
இதில் மகிழ்ந்த சிவபெருமான், சுகபிரம்ம முனிவருக்கு தம்பதி சமேதராகக் காட்சி தந்தார். 'இங்கே ஜலம் இல்லாது போயிருப்பின், தவம் செய்வது தடைப்பட்டிருக்கும். தவம் செய்யாமல் இறை தரிசனம் கிடைத் திருக்குமா? நிச்சயம் கிடைத்திருக்காது. உமது கருணையே கருணை' என்று பலவாறு துதித்து, தனது மனக்குறையை தீர்த்து வைத்த சிவபெருமானை வணங்கித் தொழுதார் சுகபிரம்மர்.
காலங்கள் ஓடின! பரந்துவிரிந்த சோழ தேசம் நடுநாடு கடந்தும் விரிந்திருந்தது. சோழ மன்னன் ஒருவன் இந்த வழியே வந்தபோது, மலையைக் கண்டான்; மலையின் மீதேறி உச்சிக்குச் சென்றான். அங்கே முனிவர்கள் பலர் சிவபூஜையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டான்; அவர்களை வணங்கினான். இந்த மலையின் மாண்பு குறித்தும், சுகபிரம்மருக்கு ஈசன் காட்சி தந்தது குறித்தும் முனிவர்கள் மன்னனுக்கு விவரித்தனர். அத்துடன் சுனைநீரின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.
இதில் சிலிர்த்த சோழ மன்னன், மலையடிவாரத்தில் கோயில் எழுப்பினால், ஊர்மக்கள் வணங்கி வழிபட வசதியாக இருக்கும் என எண்ணம் கொண்டான். அப்படியே கோயில் எழுப்பியவன், ஸ்வாமிக்கு தீர்க்காஜலேஸ்வரர் எனும் திருநாமமும் சூட்டி மகிழ்ந்தான். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபாலாம்பிகை.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும், ஆரணி மற்றும் வந்தவாசியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், சேத்பட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது நெடுங்குணம். ஊரின் மெயின் சாலையிலேயே அமைந்துள்ளது ஸ்ரீதீர்க்கா ஜலேஸ்வரர் திருக்கோயில்.
கிழக்குப் பார்த்த திருக்கோயில்; மலையில் வற்றாத சுனை நீர் உள்ளது போல, ஆலயத்திலும் வற்றாத கிணறு உள்ளது. இதிலிருந்து தீர்த்தம் எடுத்து, தினந்தோறும் ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகிக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்கமூர்த்தத்தை வில்வம் சார்த்தி வழிபட... தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இங்கே, அழகு கொஞ்சும் ஸ்ரீசுப்ரமணியரின் விக்கிரகத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம்.
ஆலயத்தின் இன்னொரு சிறப்பு... ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி. செவ்வாய் தோஷம் உள்ளவர் கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப் பவர்கள் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து தீபமேற்றி வணங்கி வழிபட... தோஷங்கள் விலகும்; கல்வி- கேள்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை!
கோயிலில், சுகபிரம்ம முனிவருக்கும் சந்நிதி உள்ளது. வியாழக்கிழமை அன்று ஸ்ரீசுக பிரம்மரையும் ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபட்டால், ஞானம் கிடைக்கும்.
அம்பாள் ஸ்ரீபாலாம்பிகை, கருணையே உருவானவள். இந்த தேவிக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால், குழந்தைகள் நோயின்றி ஆரோக்கியமாக வளர்வர் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பெண்கள்.
இந்த ஆலயத்தில் பங்குனித் திருவிழா விமரிசை யாக நடைபெறும். ஆடிக்கிருத்திகையில் தெப்பத் திருவிழாவும் திருக்கல்யாண வைபவமும் சிறப்புற நடைபெறுகின்றன. கோயிலுக்கு அருகில் உள்ள பூமாள்செட்டிக்குளத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழாவைக் காண வந்தவாசி, ஆரணி, சேத்பட் முதலான ஊர்களில் இருந்து பக்தர்கள் திரளெனக் கலந்துகொள்வார்கள்.
நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரரை கண் ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்; தீராத பிரச்னைகளையும் தீர்த்தருள்வார், ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர்!

No comments:

Post a Comment