Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.12

226. ஐந்துசாக்கிரத்தின் நான்கு கனவினில், சுழுனை மூன்று
வந்திடும் துரியம் தன்னில் இரண்டு ஒன்று துரியா தீதம்,
தந்திடும் சாக்கிராதி அவத்தைகள் தானம் தோறும்
உந்திடும், கரணம் தன்னில் செயல்தொறும்; உணர்ந்து கொள்ளே.

நனவு நிலையில் சிவதத்துவம் முதல் சுத்தவித்தை ஈறாக ஐந்து தத்துவங்களும் கலை முதலியவற்றைச் செலுத்தும். கனவில் சிவதத்துவம் தொடங்கி மகேசுவரன் ஈறான நான்கும், உறக்க நிலையில் சதாசிவம் ஈறான மூன்றும் பேருறக்க நிலையில் சிவமும் சத்தியும் என இரண்டும் உயிர்ப்படங்கலில் சிவதத்துவம் ஒன்றே தனித்தும் செயற்படுத்தி வரும் என்பதை ஒவ்வொரு செயலிலும் நுண்ணுணர்வால் உணர்ந்து கொள்க.

இச் செய்யுள் பிறிதோர் அவத்தைக்கு ஓதியது போலும் என மலையாமைப் பொருட்டுக் கரணந் தன்னின் செயல்தோறும் கண்டு கொள்ளென மேற் கூறியதனை ஈண்டு மறித்துணர்வு நிகழக் கூறினார் என்பது சிவஞான முனிவர் தரும் உரைக் குறிப்பு.

227. கேவல சகல சுத்தம் என்று மூன்று அவத்தை ஆன்மா
மேவுவன் கேவலம்தன் உண்மை மெய் பொறிகள் எல்லாம்
காவலன் கொடுத்த போது சகலனாம்; மலங்கள் எல்லாம்
ஓவினபோது, சுத்தம் உடையன், உற்பவம் துடைத்தே,

உயிர் மேற் கூறிய ஐந்து நிலை வேறுபாடுகள் எய்துவதற்குக் காரணமாக அமைந்தவை மூன்று என்று கூறப்படும். அவை கேவலம் சகலம் சுத்தம் என்று பெயர் பெறும். கேவலம் என்பது உயிர் எந்தக் கருவிகளோடும் பொருந்தாமல் தனித்து நின்று ஆணவ மலத்தால் பிணிக்கப்பட்டு இருக்கின்ற நிலையாகும். அதன் பின்னர் உயிரின் வினைக்கு ஏற்ற உடல் கருவிகளை இறைவன் கூட்டுவிக்க நிகழும் நிலை சகலம் எனப்படும். அதன் பிறகு உயிர் ஐந்து மலங்களையும் விட்டு நீங்கிப் பிறவியையும் ஒழித்து இறைவனோடு கூடி விளங்கும் நிலை சுத்தம் எனப்படும்.

இதற்கு முன் கூறிய பாடல்களில் உயிர் அடையும் நிலை வேறுபாடுகள் நனவு முதலிய ஐந்து. அவை காரிய அவத்தைகள் எனப்படும். அவத்தை- அவஸ்தை- நிலை, இவற்றுக்குக் காரணமாக விளங்குபவை ஆகையினால் கேவலம் சகலம் சுத்தம் என்ற மூன்றும் காரண அவத்தைகள் என்று பெயர் பெறும். கேவலம் என்ற சொல் தனிமை என்ற பொருளைத்தரும். தோற்றமில் காலத்தில் உயிர் உடல் முதலிய கருவிகள் இல்லாமல் முற்றிலும் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு இருக்கின்ற நிலையைக் கேவலம் என்பர். இது தமிழின் தன் உண்மை என்று ஆசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டது. இதனை அடுத்த நிலை சகலம் எனப்படும். இந்நிலையில் உயிரின் வினைக்கு ஏற்ற உடல் கருவிகளை இறைவன் அதற்குக் கூட்ட, அதன் அறிவு விழைவு ஆற்றல்கள் ஓரளவு விளங்கும். அதன் பின்னர் உயிர் பக்குவம் பெற்று ஐந்து மலங்களிலிருந்தும் நீங்கிப் பிறவியை அழித்துத் தூய்மை எய்திய நிலை சுத்தம் எனப்படும்.

காவலன்- இறவைன். ஓவினபோது- ஒழிந்த போது. உற்பவம்- பிறப்பு.

228. அறிவு இலன்; அமூர்த்தன், நித்தன், அராகாதி குணங்களோடும்
செறிவு இலன், கலாதியோடும் சேர்வு இலன் செயல்கள் இல்லான்
குறிஇலன், கருத்தா அல்லன், போகத்தில் கொள்கை இல்லான்
பிறிவு இலன், மலத்தினோடும் வியாபிகே வலத்தில் ஆன்மா.

தன்னுண்மை எனப்பட்ட கேவல நிலையில் உயிர் ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டிருப்பதால் அறிவற்று இருக்கும். அந்நிலையில் அதற்கு வடிவம் கிடையாது. ஆயினும் உயிர் நித்தப் பொருளே. இந்நிலையில் உயிருக்குக் கலை முதலிய அறிவுகள் சேர்தல் இல்லை. புத்தி குணங்கள் எட்டினோடும் உயிர் செறிவதில்லை. உயிருக்குச் செயலும் இல்லை, விழைவு இல்லை. நுகர்ச்சியில் நோக்கம் இல்லை. ஆணவ மலத்தோடு முற்றிலும் உயிர் கூடி நிற்கும்.

காரண அவத்தை எனப்பட்ட மூன்று நிலைகளிலும் நிற்கும் உயிரின் இயல்பை ஆசிரியர் கூறத் தொடங்கினார். இந்தப் பாடலில் உயிரின் தன்னுண்மை எனப்படும் கேவல நிலையைப் பற்றித் தொகுத்துரைத்தார்.

229. உருவினைக் கொண்டு போக, போக்கியத்து உன்னல், செப்பல்
வருசெயல் மருவி, சத்தம் ஆதியாம் விடயம் தன்னில்
புரிவதும் செய்து, இங்கு எல்லா யோனியும் புக்கு உழன்று
திரிதரும் சகலமான அவத்தையில் சீவன் சென்றே.

கட்டுநிலை எனப்படும் சகலநிலையில் உயிர் உடம்போடு சேர்ந்து அதனைப் பற்றி நிற்கும். எனவே அதற்குக் கருவிகளும் உளவாகும். நுகர்வதற்குரிய பொருள்களை மனம் மொழி மெய்களால் நினைந்தும் பேசியும் இயற்றியும் வரும். ஓசை முதலிய பொருள்களை ஐம்பொறிகளாலும் நுகரும். எண்பத்து நான்கு நூறாயிரம் வகையான பிறவி வகைகளைத் தன் வினைக்கு ஏற்ப மாறி மாறிப் பிறப்புட்படும்.

சகல அவத்தையில் உயிரின் இயல்பு இப்பாடலில் கூறப்பட்டது.

230. இருவினைச் செயல்கள் ஒப்பில் ஈசன் தன் சத்தி தோய
குரு அருள் பெற்று, ஞான யோகத்தைக் குறுகி, முன்னைத்
திரிமலம் அறுத்துப் பண்டைச் சிற்றறிவு ஒழிந்து, ஞானம்
பெருகி, நாயகன் தன் பாதம் பெறுவது சுத்தமாமே.

உயிர் இருவினை ஒப்பு அடைந்த போது அதனிடத்து அருட் சத்தி பதியும். அதனால் அருட் குருவின் திருநோக்கம் பெற்று யோகம் ஞானங்களை அடைந்து தொன்மையாக உள்ள மும்மலங்களிலிருந்தும் நீங்கும். அதனால் தன்னுடைய சிற்றறிவினை ஒழித்து மெய்ஞ்ஞானம் பெறுவதற்குரிய வாய்ப்பினை உயிர் பெறும். பெருகிய ஞானத்தால் சிவ பெருமான் திருவடியைப் பெறுவது உயிரின் சுத்த நிலை ஆகும்.

ஐந்தாவது நூற்பா 231. பொறி, புலன் கரணம் எல்லாம் புருடனால், அறிந்தான் மாவை
அறிதரா அவையே போல, ஆன்மாக்கள் அனைத்தும் எங்கும்
செறிதரும் சிவன்தனாலே அறிந்திடும்; சிவனைக்காணா
அறிதரும் சிவனே எல்லாம் அறிந்து அறிவித்தும் நிற்பன்.

ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் உட்கருவிகளும் உயிரின் துணை கொண்டே தாம் தாம் அறிவனவற்றை இது இன்னது என்று அளவிட்டு அறிந்து வரும். ஆயினும் அவை யாவும் தம்மைச் செலுத்துகின்ற உயிரை அறியமாட்டா. அவற்றைப் போலவே உயிரும் உலகத்துப் பொருள்களை அறிந்தும் நுகர்ந்தும் வருகின்ற போதும், எல்லாவிடத்திலும் செறிந்து நிற்கின்ற சிவபிரானுடைய திருவருளினாலே அறிந்து வருகின்றது. ஆயினும் அது தன்னைச் செலுத்தி நிற்கும் இறைவனை அறியாது. மெய்யறிவைத் தரவல்ல சிவபிரானே முழுவதையும் அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் உடன் நிற்பான்.

இரண்டாம் அதிகரணம் 232. இறைவனே அறிவிப்பானேல், ஈண்டு அறிவு எவர்க்கும் ஒக்கும்,
குறைவு அதிகங்கள் தத்தம் கன்மமேல் கோமான் வேண்டா;
முறைதரு செயற்குப் பாரும் முளரிகட்கு இரவியும் போல்
அறைதரு தத்தம் கன்மத்து அளவனுக்கு அளிப்பன் ஆதி.

இறைவனே உயிர்களுக்கு அறிவிப்பான் என்று கொண்டால் உயிர்களின் அறிவுத்திறன் கூடியும் குறைந்தும் இருத்தல் கூடாது. எல்லார்க்கும் ஒத்த அறிவே நிகழ்தல் வேண்டும் என்று சிலர் தடை எழுப்புவர். அவ்வாறு அறிவில் ஏற்றத் தாழ்வுகள் அமைவதற்குக் காரணம் உயிர்களின் வினைப்பயன்களே என்று விடை கூறினால், அவ்வாறாயின் வினையே போதுமானது. இறைவன் ஒருவன் வேண்டும் என்று கொள்ளுதல் மிகையன்றோ? என்று மேலும் தடை எழுப்புவர். தாமரை மொட்டு மலர்வதற்குக் கதிரவனின் ஒளி தேவைப்படுவது போலவும், பயிரை விளைவிப்பதற்கு உழுதல், உரமிடல், விதைத்தல் நீர் பாய்ச்சுதல், களை கட்டுதல் ஆகிய செயல்களின் பயனைத் தருவதற்கு அச்செயல்களே அன்றி விளை நிலமும் காரணமாவதுபோலவும் வினைப் பயன்களை உயிர்களுக்கு ஊட்டுவதற்கு இறைவன் ஒருவன் வேண்டும். அவனே வினைப் பயன்களை அளவறிந்து உயிர்களுக்குத் தருவான்.

233. அறிந்திடும் ஆன்மா- ஒன்றை ஒன்றினால் அறிதலானும்,
அறிந்தவை மறத்தலானும் அறிவிக்க அறிதலானும்
அறிந்திடும் தன்னையும்தான் அறியாமையானும் தானே
அறிந்திடும் அறிவன் அன்றாம்; அறிவிக்க அறிவன் அன்றே.

அறியும் இயல்புடைய இவ்வுயிர் ஒவ்வொரு பொறியின் துணையுடனேயே ஒவ்வொரு பொருளை அறியும். அறிந்த பொருளை மறந்தும் போகும். உயிர் தானாக அறியாது. அறிவித்த போதே அறியும் இயல்புடையது. அறிகின்ற உயிர் தன்னைத் தானே அறியாது. எனவே தானே அறியும் இயல்புடைய முதல்வன் அறிவிக்கவே உயிர்கள் அறிந்து வருகின்றன. இந்தப் பாடலில் ஆசிரியர்சாங்கியர்களின் கொள்கையை மறுத்துக் கூறினார்.

234. கருவியால், பொருளால், காட்டால், காலத்தால், கருமம் தன்னால்,
உருவினால், அளவால், நூலால், ஒருவரால் உணர்த்தலானும்
அருவனாய், உண்மை தன்னில் அறியாது நிற்ற லானும்
ஒருவனே, எல்லாம் தானும் உணர்த்துவன், அருளினாலே,

கட்டுநிலையில் உள்ள உயிர்களுக்கு அறிவு நிகழும் முறைமை எவ்வாறு என்பது இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.

உயிர்கள் ஐம்பொறி முதலிய கருவிகளாலும், புலன்களாலும், தமக்குக் காட்டாக விளங்குகின்ற கலை முதலியவற்றினாலும், கால தத்துவத்தினாலும், வினைப்பயனை வரையறுத்துத் தருகின்ற நியதி தத்துவத்தாலும், உருவத்தினாலும், அளவைகளினாலும், நூல்களுக்கு அடிப்படையாக விளங்குகின்ற நால்வகை வாக்குகளாலும், ஒருவரால் உணர்த்தப்படுவதாலும் அறிவு விளக்கம் பெறுகின்றன. இங்கே கூறப்பட்ட இந்த எட்டுத் துணைகளும், உணர்த்தும் அறிவுடைப் பொருளும் இல்லை எனில் தன் உண்மை என்னும் கேவல நிலையில் உயிர் அருவமாய் அறியாது நிற்கும். எனவே யாவற்றையும் ஒருங்கே அறிய வல்ல இறைவனே இவை அனைத்தையும் தன் பேரருளாலே உயிருடன் கூட்டி உயிருக்கு அறிவிப்பான்.

காட்டால் என்ற சொல்லுக்குக் காண்பதற்குத் துணை செய்கின்ற கதிரவன், திங்கள் போன்ற பொருள்கள் என்று உரை கண்டனர் சில ஆசிரியர்கள். அவ்வாறே நூல் என்பதற்கு சாத்திரங்களால் என்றும் பொருள் கொண்டனர். இங்கே இவ்விரு சொற்க்களுக்கும் சிவஞான முனிவரை அடியொற்றிப் பொருள் கொள்ளப்பட்டது.

235. கருவியும், பொருளும், காட்டும், காலமும், கருமம் தானும்,
உருவமும், அளவும் நூலும் ஒருவரும் உணர்த்தல் இன்றி
அருவனாய் உலகம் எல்லாம் அறிந்து அவை ஆக்கி வேறாய்,
ஒருவனே உயிர்கட்கு எல்லாம் உயிருமாய், உணர்த்தி நிற்பன்,

இறைவன் ஒருவனே முற்கூறப்பட்ட கருவி முதலியவற்றோடு கூடாமலும், மற்றொருவர் உணர்த்தல் இன்றித் தானே யாவற்றையும் அறிந்தும், உயிர்கள் கேவல நிலையில் நிற்கும் போதும் நுண்ணிய ஐந்தொழில் இயற்றியும், பின்னர் படைத்தல் முதலிய தூல ஐந்தொழில் செய்தும், உயிர்க்கு உயிராக நின்று உயிர்களுக்கு அறிவிக்கும் பொழுது மிக நுண்ணிய ஐந்தொழில் இயற்றியும் உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்பான்.

இறைவன் இயற்றும் ஐந்தொழில்களும் மூன்று வகைப்படுத்திக் கூறப்படும். அவை மிக நுண்ணிய ஐந்தொழில் (அதிசூக்கும ஐந்தொழில்) நுண்ணிய ஐந்தொழில் (சூக்கும ஐந்தொழில்) தூல ஐந்தொழில் என்பன ஆகும். இவற்றின் விரிவு எல்லாம் சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் நூற்பாவுக்கு மாதவச் சிவஞான முனிவர் வகுத்த பேருரையிலே காணலாம்.

236. இறைவன் தன் சந்தி திக்கண் உலகின் தன் சேட்டை என்னும்
மறைகளும் மறந்தாய்; மாயை மருவிடான், சிவன் அவன் கண்
உறைதராது அசேதனத்தால்; உருவுடை உயிர் கட்கு எல்லாம்
நிறைபரன் சந்நிதிக்கண் நீடு உணர்வு, உதிக்கும் அன்றே,

இறைவன் முன்னிலையிலே உலகம் செயற்படும் என்று மறைகள்- எல்லாம்முழங்கவும் அதனை நீ மறந்தாய். சிவபெருமான் எல்லா இடங்களிலும் நிறைந்து உறைகின்றவன். ஆதலால் அவன் மாயையைப் பொருந்துவதில்லை. அறிவற்றதாகிய மாயை பேரறிவாளனாகிய இறைவனைப் பொருந்துவதில்லை. மாயையின் காரியங்களாகிய உடல் கருவிகளைப் பொருந்திய உயிர்களுக்கு எங்கும் நிறைந்த சிவபெருமானின் திருமுன்பு தத்தம் வினைக்கேற்ற அறிவு விளையும். வினை நீங்கிய காலத்து மெய்யுணர்வும் உதிக்கும்.

சேட்டை- செயற்பாடு. சிவஞான போதம் ஐந்தாம் நூற்பாவில் இரண்டாவது எடுத்துக்காட்டு வெண்பாவில் மன்னு சிவன் சன்னிதியில் மற்று உலகம் சேட்டித்தது. என்னும் மறையின் இயல் மறந்தாய் என்று கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது.

237. உலகமே உருவமாக யோனிகள் உறுப்பதாக,
இலகுபேர் இச்சா ஞானக் கிரியை உட்கரணமாக,
அலகுஇலா உயிர்ப் புலன்கட்கு அறிவினை ஆக்கி ஐந்து
நலம் மிகுதொழில்களோடும் நாடகம் நடிப்பன் நாதன்.

இப்பேருலகில் இருநூற்று இருபத்து நான்கு புவனங்கள் உள்ளன. இறைவன் அவற்றை திருமேனியாகவும், அவற்றில் உள்ள எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களை உறுப்புகளாகவும், விளங்குகின்ற அறிவு விழைவு ஆற்றல்களை உட்கரணமாகவும் கொண்டு எண்ணற்ற உயிர்களிடத்தில் அவற்றின் அறிவுக்கு அறிவாய் நின்று உணர்த்துவதாகிய அதி நுண்ணிய ஐந்தொழில்களையும் இயற்றி உலக நாடகத்தை நடத்தி அருளுவான்.

இறைவன் ஐந்தொழில்களை உயிர்கள் போலக் கரணத்தால் அன்றித் திருஉள்ளக் குறிப்பினாலே செய்தருளுவான் என்பதை நாடகம் நடிப்பான் நாதன் என்ற சொற்களால் உணர்த்தினார்.

238. தெரிந்து கொண்டு ஒரோஒன்றாகச் சென்று ஐந்து புலனும் பற்றிப்
புரிந்திடும் உணர்வினோடும் போகமும் கொடுத்து யோனி
திரிந்திடும் மதுவும் செய்து செய்தி கண்டு உயிர்கட்கு எல்லாம்
விரிந்திடும் அறிவும் காட்டி வீட்டையும் அளிப்பன்- மேலோன்

அத்தகைய இறைவன் உயிர்களுக்கு ஐம்பொறிகளின் வழியாக ஒவ்வொரு புலனினும் பற்றுகிற அறிவினைச் சேர்த்து அருளுவான். இதனால் உயிர் வரையறைக்கு உட்பட்ட அறிவோடு உலகியல் இன்பங்களில் ஈடுபடும். பின்னர் இறைவன் உயிர்களின் வினைகளுக்கு ஏற்பப் பல்வேறு பிறவிகளில் செலுத்துவான். இதனாலே உயிர்களின் அறிவு முதிர்ந்து பக்குவம் பெறும். அந்நிலையில் இறைவன் உயிருக்கு வியாபாக அறிவை நிகழ்வித்து வீடு பேற்றையும் தந்தருளுவான். மேலோன்- இறைவன்.

239. அருளது, சத்தி ஆகும், அரன்தனக்கு; அருளை இன்றித்
தெருள்சிவம் இல்லை; அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை;
மருளினை அருளினால் வாட்டி மன் உயிர்க்கு அளிப்பன்- கண்கட்கு
இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல - ஈசன்

சென்ற பாடலில் கூறியவாறு போகமும் கொடுத்து விரிந்திடும் அறிவும் காட்டி உயிர்களுக்கு வீட்டின்பம் அளிப்பதாகிய அருள் இறைவனின் சத்தியாகும். அது அவனது இயற்கைக் குணம் எனப்படும். இறைவன் குணி எனப்படுவான். அருள் இல்லாமல் சிவம் இல்லை . சிவம் இல்லாமல் அருட்சத்தி பிரிந்து நிற்பதும் இல்லை. உலகத்து இருளைத் தனது கதிர்க் கைகளால் ஓட்டிக் கண்களுக்கு ஒளி தருகின்ற கதிரவனைப் போல நிலை பெற்ற உயிர்களுக்கு இறைவவன் வீடு பேற்றை வழங்கி அருளுவான்.

புற இருளைக் கதிரவனது கதிர்கள் நீக்குகின்றன. உயிர்களின் அறிவை மறைத்து நின்ற மல இருளை இறைவனது திருவருளாகிய ஒளியே நீக்கி அருளும்.

ஆறாம் நூற்பா 240. அறிவுறும் பொருளோ, ஈசன் அறிவுஉறா தவனோ? என்னின்
அறிபொருள் அசித்து அசத்தாம் அறியாதது இன்றாம்; எங்கும்
செறிசிவம் இரண்டும் இன்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்;
நெறிதரு சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாவே.

சிவபெருமான் உயிர்களால் அறியப்படுகின்ற இயல்புடையவனோ அன்றி ஒரு வகையாலும் அறியப்படாதவனோ என்று வினாக்கள் எழும். உயிர்களின் அறிவால் அறியப்படுகின்ற பொருள்கள் யாவும் அறிவற்றனவாயும். அழிந்து போகும் இயல்பு உடையனவாயும் உள்ளனவே ஆகும். ஒரு வகையாலும் அறியப்படாத பொருள் என்பது இல் பொருளாகும். எங்கும் செறிந்து நிற்கும் சிவபெருமான் இவ்விரண்டு தன்மையும் இலாதவன் ஆவான். அவன் முற்றறிவினனாயும் அழிவற்றவனாயும், அவன் அருளாலேயே அறியப்படும் தன்மை உடையவனாயும் விளங்குகிறான். அவன் திருமுன்பு அழியும் தன்மை உடைய பாசஞானம் சிறிதும் நில்லாது.

முதலதிகரணம் 241. ஆவதாய் அழிவது ஆகி வருதலால்- அறிவு தானும்-
தாவலால் உலகு போகம் தனுகர ணாதி ஆகி
மேவலால் மலங்கள் ஆகி விரவலால் வேறும் ஆகி
ஓவலால் அசத்தாம்- சுட்டி உணர்பொருள் ஆன எல்லாம்,

உயிர்களின் சுட்டறிவு தோன்றியும் அழிந்தும் வருவதாகும். ஒன்றைப் பற்றி அதன் பின்னர் அதனை விட்டு மற்றொன்றைப் பற்றுகின்ற இயல்புடையது. உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் என இவ்வாறு பல்வேறு வகைப்படுவது அவ்வறிவு. மலத்தோடு விரவி வருவது. வேறுபட்டு அழிகின்ற இயல்பு உடையது. எனவே இந்த அறிவினால் சுட்டி அறியப்பட்ட பொருள் யாவையும் அழியும் இயல்பு உடையன ஆகும்.

242. மண்தனில் வாழ்வும் வானத்து அரசு அயன் மாலார் வாழ்வும்
எண்தரு பூத பேத யோனிகள் யாவும் எல்லாம்
கண்ட இந் திரமா சாலம் கனாக் கழு திரதம் காட்டி
உண்டு போல் இன்றாம் பண்பில் உலகினை அசத்தும் என்பர்

இவ்வுலகத்தில் வாய்க்கப் பெற்ற பெரு வாழ்வும், விண்ணுலகத்து அரசனாகிய இந்திரன் பிரமன் திருமால் முதலிய பதங்களைப் பொருந்திய வாழ்வும். எண்பத்து நான்கு நூறாயிரம் பிறப்பு வகைகள் யாவும் கண் முன்னே நிகழ்கின்ற இந்திரசாலம் போலவும் கானல் நீர் போலவும் மறைந்து ஒழிவன. ஆதலால் உள்ளது போலக் காட்டி இல்லாது போகும் பண்பினை உடைய இவ்வுலகினை அசத்தும் ஆகும் என்று கூறுவர் மேலோர்

இந்திரசாலம் தோன்றும் பொழுதே இல்லாது போவதற்கும், கனவு முடிவுறுதல் இன்றி இடையே இல்லாது போவதற்கும், கானல் நீர் சூரியனை மேகம்மறைக்கும் போது இல்லாது போவதால் காரணம் காட்டி அழிவனவற்றுக்கும் உவமைகள் ஆயின.

சிவஞானபோதம் ஆறாம் நூற்பாவில் முதல் எடுத்துக்காட்டு வெண்பாவில் நீரில் எழுத்தும் நிகழ் கனவும் பேய்த் தேரும் என்று முதல் நூல் ஆசிரியர் காட்டிய உவமைகளும் அதற்கான பேருரையும் இங்கே ஒப்பு நோக்கத் தக்கன.

கழுது-பேய், இரதம்-தேர், பேய்த் தேராகிய கானல் நீர் அசத்தும் என்பர் என்ற சொல்லில் உள்ள உம்மை பொருள் தன்மையால் சத்து என்பதுபட நின்ற எதிர்மறை என்று சிவஞானமுனிவர் உரைத்தார். சற்காரியவாதத்தை உடன்படுகின்ற சைவசித்தாந்தத்தில் அசத்து என ஒன்று இன்மையால் அறிவினால் அறிந்த பொருள் அசத்து ஆவது எவ்வாறு என்பதை விளக்க உவமை கூறி அசத்தும் ஆம் என்றார்.

இரண்டாம் அதிகரணம் 243. உணராத பொருள் சத்து என்னின் ஒரு பயன் இல்லை; தானும்
புணராது நாமும் சென்று பொருந்துவது இன்றாம் என்றும்
தணவாத கருமம் ஒன்றும் தருவதும் இல்லை. வானத்து
இணர் ஆர்பூந் தொடையும் ஆமைக்கு எழுமயிர்க் கயிறும் போலும்

அறியப்பட்ட பொருள்கள் எல்லாம் அசத்துமாம் எனப்பட்டன. எனவே இறைவன் எனும் உள் பொருள் ஒரு வகையாலும் அறியப்படாத பொருளே என்று சிலர் கொள்ளுவர். அவ்வாறு கொள்ளுவதனால் அத்தகைய பொருளால் வருகின்ற ஒரு பயனும் இல்லை. உணரப்படாத பொருள் நம்மை வந்து பொருந்துதலும் இல்லை. நாமும் அதனைச் சென்று பொருந்துவதில்லை. அத்தகைய பொருளால் எந்தச் செயலும் நிகழ்வதில்லை. எனவே ஒரு வகையாலும் அறியப்படாத பொருள் என்பது ஆகாயப் பூமாலை போலவும் ஆமை மயிர்க் கயிறு போலவும் இல் பொருளேயாகும். வானத்து இணர் ஆர் பூந்தொடை-ஆகாயப் பூவினால் தொடுக்கப்பட்ட மாலை. யாமை-ஆமை. தணவாத-நீங்காத

மூன்றாம் அதிகரணம்

244. தத்துவம் சத்துஅ சத்துச் சதசத்தும் அன்று என்றால் என்?
உய்த்து உணர்ந்து உண்டோ இன்றோ? என்றவர்க்கு உண்டு என்று ஓதில்
வைத்திடும் சத்தே ஆகும். மனத்தொடு வாக்கு இறந்த
சித்திரு அது அசித்தாம் மனத்தினால் தேர்வது எல்லாம்

பரம்பொருள் என்பது உள் பொருளும் அன்று; இல்பொருளும் அன்று. இந்த இரண்டும் ஆவதும் அன்று. எனவே அதனைச் சொல்லொணாதது என்று கூறினால் என்ன என்று சிலர் வினா எழுப்புவர். அத்தகைய சொல்லொணாப் பொருள் உண்டோ இல்லையோ என்று வினவியவர்களுக்கு இல்லை என்று விடையிறுத்தால், உணராத பொருளுக்குக் கூறப்பட்ட குற்றம் நேரும் என்று கருதி உண்டு என்றே விடை இருத்தல் வேண்டும். அவ்வாறு விடையிறுப்பது பரம்பொருளை உள்பொருள் எனக் குறிக்குமே தவிர சொல்லொணாதது என்று குறியாது. உள் பொருளாயின் அறியப்படுதல் வேண்டும். அறியப்படுவதாயின் சுட்டுணர்வினால் அறிந்த எல்லாம் சடமுமாய் அழிவெய்தும் ஆதலால் அப்பரம் பொருளை உயிரின் சுட்டுணர்வைக் கடந்து நின்ற அறிவுடைப் பொருளே என்று கூறுதல் வேண்டும். சிவஞான சித்தியார் பகுதி-4

245. அறிபொருள் அசித்தாய் வேறாம்; அறிவுறாப் பொருள் சத்து என்னின்
அறிபவன் அறியானாகில் அது இன்று பயனும் இல்லை
அறிபவன் அருளினாலே அநந்நிய மாகக் காண்பன்
அறிபொருள் அறிவாய் வேறாய் அறிவு அருள் உருவாய் நிற்கும்

உயிரால் அறியப்பட்ட பொருள் சடமும் ஆகி அழிதலும் கூடும். உயிரால் அறியப்படாத பொருளே சத்துப் பொருள் என்னின். அறிகின்றவனாகிய உயிரால் அது அறியத் தக்கது ஆக வேண்டும். அவ்வாறு இல்லையேல் அத்தகைய பொருளும் இல்லை. அதனால் பெறப்படும் பயனும் இல்லை என்று முடியும் என்று இங்கு தடை எழுதல் கூடும். அத்தடைக்கு உரிய விடை பாடலின் பிற்பகுதியிலே தரப்படுகிறது. அறிபவனாகிய உயிர் திருவருளின் துணை கொண்டு அச்சிவப் பொருளை அதனோடு ஒற்றித்து நின்று அறிவான். அப்பரம் பொருள் அவ்வறிவேயாயும் வேறாயும் உடனாயும் நிற்கும் இயல்பு உடையது.

சிவப் பொருளை எவ்வாறு அறிவது? என்ற வினாவிற்கு ஒழிபு அளவையின் அடிப்படையில் ஆசிரியர் இங்கு விடை கூறினார். அநந்நியம்- வேற்றுமையின்மை

இந்த இரண்டு பாடல்களாலும் மாயாவாதிகளின் கொள்கை எடுத்துக் கூறி மறுக்கப்பட்டது.

246. பாவிப்ப தென்னின் பாவம் பாவகம் கடக்கின் பாவம்
பாவிக்கும் அதுநான் என்னின் பாவகம் பாவம் கெட்டுப்
பாவிப்பது என்னின் பாவம் பாவனை இறந்து நின்று
பாவிக்கப் படுவதாகும் பரம்பரன் அருளினாலே

சிவப்பொருள் பாவனையால் அறியக் கூடாததோ என்ற வினாவிற்கு ஆசிரியர் இப்பாடலில் விடை கூறுகிறார்.

பாவனை என்பது மனம் முதலிய கருவிகளோடு கூடி நின்று செய்யும் பாவனை என்னில் அவ்வாறு அறியப்படும் பொருள் சுட்டறிவுக்கு எட்டும் பொருள். ஆகையால் அது அழியும் பொருளாகும். எனவே அப்பாவனை பயனற்றது. மனம் முதலிய கருவிகளை விட்டு நீங்கிச் செய்யப்படும் பாவனை என்று கூறினால் கருவிகளை விட்டு நீங்கிய உயிர் கேவல நிலையில் அமிழும் ஆதலால் அதுவும் பயனற்றதாகும். இவ்விரண்டு தன்மையும் இன்றிப் பாவிப்பது என்று கூறினால் அது சொல்லொணாதது எனப்பட்டுப் பாழாய் முடியும். இதனின் வேறாகப் பாவனைக்கு எட்டாத பொருளை எட்டியதாக வைத்து நான் பாவிக்கிறேன் என்று சொன்னால் அதனாலும் பயன் இல்லை. எனவே இவை யாவற்றுக்கும் வேறாக இறைவன் திருவருளிலே வேற்றுமையறப் பொருந்தி நின்று அறிதலே உண்மைப் பாவகம் ஆகும்.

யோகமதத்தினர் யோகபாவனையின் வழியாகவே இறைவனைக் காணுதல் கூடும் என்பர். இப்பாடலில் அவர்கள் கருத்து மறுக்கப்பட்டது. முதல் நூலில் ஆறாம் நூற்பாவில் இரண்டாம் அதிகரணத்தின் மூன்றாவது எடுத்துக்காட்டு வெண்பாவில் மெய்கண்ட தேவநாயனார் அருளிய பாவகமேல் தான் அசத்தாம் என்று தொடங்கும் பாடலின் கருத்து இங்கு விளக்கப்பட்டது.

247. அந்நியம் இலாமையானும் அறிவினுள் நிற்றலானும்
உன்னிய எல்லாம் உள் நின்று உணர்த்துவன் ஆதலானும்
என்னது யான் என்று ஓதும் இரும்செருக்கு அறுத்தலானும்
தன் அறிவு அதனால் காணும் தகைமையன் அல்லன்; ஈசன் .

சிவபெருமான் உயிருடன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்பவன் ஆதலாலும் உயிரின் குற்றமாகிய யான் எனது என்னும் செருக்கை அறுப்பவன் ஆதலாலும் அந்நிலையில் அறிவானும் அறியப்படு பொருளும் அறிவும் எனப் பகுத்துக் காண இயலாது ஆகையாலும் உயிரின் அறிவால் அப்பெருமான் அறியப்படுவான் அல்லன்.

அன்னியமிலாமை என்பதனால் இறைவன் ஒன்றாய் நிற்றலையும், அறிவினுள் நிற்றல் என்பதனால் வேறாய் நிற்றலையும், உள்நின்று உணர்த்துவன் என்பதனால் உடனாய் நிற்றலையும் ஆசிரியர் குறிப்பிட்டார். தன்னறிவு என்ற சொல் உயிரின் அறிவு என்ற பொருளைத் தந்தது.

248. ஒன்றெனும் அதனால் ஒன்றென்றும் உரைப்பதுண்டு ஆகையாலே
நின்றனன் வேறாய்; தன்னின் நீங்கிடா நிலைமையாலே
பின்றிய உணர்வுக்கு எட்டாப் பெருமையன்! அறிவின் உள்ளே
என்றும் நின்றிடுத லாலே இவன் அவன் என்னலாமே

இறைவனும் உயிரும் ஒன்று என்று கூறும் பொழுது அவ்வாறு ஒன்று என்று கூறும் உயிர் இறைவனுக்கு வேறாய் உளது என்பது பெறப்படும். எனவே இறைவன் உயிரிலிருந்து வேறுபட்டவன் என்பதும் புலனாகும். இறைவன் உயிரோடு பிரிப்பின்றி உடனாய் நிற்பவன் ஆதலால் அவனை வேறு என்று பகுத்தறியும் உணர்வுக்கு எட்டாத பெருமையை உடையவன் ஆவன். உயிர் அறிவின் உள்ளே நின்று உயிரை இயக்கி வருவதால் உயிரே இறைவன் என்னும்படி ஒன்றாகி நிற்பவனும் ஆவான். தன்னில்-உயிரில். இவன்- உயிர். அவன்-இறைவன்.

ஏழாவது நூற்பா

249. அனைத்தும் சத்து என்னின் ஒன்றை அறிந்திடாது அசத்தால் என்னின்
முனைத்திடாது அசத்து சத்தின் முன் இருள் இரவி முன்போல்
நினைப்பது இங்கு அசத்தே என்னின் சத்தின்முன் நிலாமையானும்
தனைக்கொடு ஒன்று உணர்தலானும் தான் அசத்து உணராது அன்றே.

முந்திய சூத்திரத்தில் சத்துப் பொருளும் அசத்துப் பொருளும் வரையறை செய்து கூறப்பட்டன. இவற்றுள் சத்தாகிய சிவமே யாவற்றையும் அறியும் இயல்புடையது என்பர் சிலர். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாகிய சிவம் யாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்குமேயன்றி அவற்றைப் பகுத்து அறிவது இல்லை. சத்தாகிய சிவம் உயிரின் பொருட்டு அசத்து எனப்படும் கருவி கரணங்களை இடமாகக் கொண்டு அறியும் என்பர் சிலர். கதிரவன் முன்இருள் போல சத்தின் முன்னிலையில் அசத்து முனைத்து நில்லாது. எனவே அதுவும் பொருந்தாது. ஆன்மாவின் முன்னிலையில் அசத்தாகிய கருவியே அறியும் என்பர். வேறு சிலர். கருவிகளினால் உயிரே அறிவதனாலும் கருவிகளுக்கு அறிவு இன்மையினாலும் அழியம் பொருள் அழியாப் பொருளை அறியும் என்பதும் பொருந்தாது.

முதல் நூலில் இந்த நூற்பா மூன்று அதிகரணங்களைக் கொண்டதாக மெய்கண்ட தேவ நாயனாரால் வகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இந்நூலில் இப் பாடலில் முதல் இரண்டு அதிகரணங்களையும் வினா எழுப்பி அவற்றுக்கு விடை தந்து நிறைவு செய்கிறார் அருள் நந்தி சிவம். முதல் வினா: சத்துப் பொருளாகிய சிவமே அசத்துப் பொருளாகிய பாசங்கள் அனைத்தையும் அறியும் என்று கொண்டால் என்ன? என்பது இது சிவாத்துவித சைவர் எழுப்பும் வினா. அதற்கு விடை: சிவம் வியாபகப் பொருள் ஆதலால் யாவற்றையும் ஒருங்கே அறியுமே அன்றி எதனையும் பிரித்து அறிவது அன்று. மேலும் கதிரவன் முன் இருள் போல சத்துப் பொருளின் முன்னிலையில் அசத்துப் பொருள் முனைத்து நில்லாது என்பதாகும்.

இரண்டாவது வினா: ஆன்மாவின் முன்னிலையில் அசத்தாகிய கருவியே சிவகரணமாக நின்று சத்தாகிய சிவத்தை அறியும் என்றால் என்ன? என்பது இந்த வினா சிவசங்கிராந்த வாதிகள் எழுப்புவது. கருவிகள் தமக்கென்று அறிவு இல்லாமல் ஆன்மா அறிவதற்குக் கருவியாய் நிற்கும் என்பதாலும், சத்தின் முன்னர் அசத்து முனைத்து நில்லாது என்று கூறப்பட்டதனாலும் இக்கருத்துப் பொருந்தாது என்பது ஆசிரியர் தருகின்ற விடை.

சத்துப் பொருளும் அசத்துப் பொருளும் ஆகிய இரண்டும் அறியா என்று கழிக்கப்பட்டதனால் இவை இரண்டிலும் வேறாய் நின்ற சதசத்தாகிய உயிரே அறியும் தன்மை உடையது என்பது ஒழிபு அளவையின் அடிப்படையில் பெறப்படும்.

மூன்றாம் அதிகரணம்

250. சத்து அசத்து அறிவது ஆன்மா; தான் சத்தும் அசத்தும் அன்று
நித்தனாய்ச் சதசத்தாகி நின்றிடும்; இரண்டன் பாலும்
ஒத்துஉடன் உதித்து நில்லாது; உதியாதும் நின்றிடாது
வைத்திடும் தோற்றம் நாற்றம் மனினில் வருதல் போலும்.

அழிவற்ற பொருளாகிய இறைவனையும் அழிவுடைய பொருளாகிய பாசங்களையும் அறியவல்லது ஆன்மாவேயாகும். ஆன்மா சத்து அசத்து என்கிற இரண்டினுக்கும் வேறாய் நிற்பதாகும். எனவே அது சத்தும் அன்று அசத்தும் அன்று. ஆன்மா என்றும் உள்ள பொருளாயும் சதசத்தாகியும் நிற்கும். சத்து அசத்து ஆகிய இரண்டின் பகுதியிலும் விளங்கித் தோன்றியும், விளங்கித் தோன்றாமலும் மலரின் மணம்போல அது அதனிடத்து அடங்கி விளங்குவதாகும்.

மலரின் மணம் மலரினும் அடங்கித் தோன்றுவது போல சத்தோடும் அசத்தோடும் சேர்ந்து அவற்றுள் அடங்கி உயிர் நின்றிடும் என்று உவமை கூறினார். திருவாசகம் அதிசயப்பத்தில் உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரும் நாற்றம் போல் என்று மாணிக்கவாசகர் அருளியது இங்கு நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment