Wednesday 30 August 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 7

‘பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட மாலை நேர இயல்பை சோமாஸ்கந்த மூர்த்தம் விளக்குகிறது!’ என்ற அழகிய கருத்தை கச்சியப்ப சிவாச்சார்யர் கந்த புராணத்தில் பாடுகிறார். சமண- பௌத்த சமயங்களில், ‘துறவறமே பேரின்பம்’ என்ற கொள்கை செயல்பட்ட காலத்தில், இல்லற வாழ்வின் நலன்களை உணர்த்தி, பக்தி இயக்கத்தின் மூலம் குடும்ப வாழ்வின் நலத்தையும், சிறப்பையும் எடுத்துச் சொல்ல அமைந்த வடிவமே சோமாஸ்கந்த மூர்த்தம். ‘அன்புடன் வழிபடுவோர் இல்லற நெறியில் இன்பம் துய்த்து, நன்மக்கட் பேறுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து, வீடு பேறும் அடைவார்கள் என்பதை உணர்த்தவே சோமாஸ்கந்த வடிவம் அமைந்தது!’ என்கிறார் கச்சியப்பர்.
அறுபத்துமூவரில் சிறுத்தொண்ட நாயனாருக்கு மட்டும் சோமாஸ்கந்த வடிவில் இறைவன் காட்சியளித்ததை பெரிய புராணம் காட்டுகிறது.
இந்த மூர்த்தம் புத்திர பாக்கியத்தை அளிக்க வல்லது. ஆகையால், இந்த வடிவில் உமையம்மை ‘புத்திர சௌபாக்கிய பிரதாயினி’ என்று போற்றப் பெறுகிறார்.
ம ண்ணில், நவரத்தின மணிகள் ஒளி வீசுகின்றன. நீரில், அலை மோதுகிறது. நெருப்பு, தனது ஜுவாலை நாக்கை நீட்டி ஆடுகிறது. காற்று, தென்றலாகவோ புயலாகவோ வீசுகிறது. வானில், மின்னல் ஒளிர்கிறது. இவ்வாறு பஞ்ச பூதங்களிலும், ஒரு வகை நடனம் நிகழ்கிறது. உயிர்கள் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும், பேரின்ப நிலையில் பொருந்துவதும் ஆடல்வல்லானின் அசைவினாலே நிகழ்கின்றன. நுண்ணிய அணுகூட அசைவற்று இருப்பதில்லை. இயக்கம் என்பது உலகின் மாபெரும் அறிவியல் தத்துவம். இதை வெளிப்படுத்தும் இணையற்ற இறை வடிவம் நடராஜ வடிவமாகும்.
இறைவன் தன் அடியார்களைப் பாதுகாத்து, அரக்கர் முதலிய எதிர்ப்பு ஆற்றல்களை வென்று, வெற்றிக் களிப்பால் ஆடிய ஆடல்களே தாண்டவங்கள்.
சிவபெருமானது ஏழு வகைத் தாண்டவங்கள் ஆகமங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவை: ஆனந்த தாண்டவம் (தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் தாண்டவம்), சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம் (சண்ட தாண்டவம்), திரிபுர தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என ஏழு வகைப்படும். இவற்றுள் முதன்மையாகத் திகழ்வது நடராஜ அமைப்பே.
தமிழ்நாட்டின் தனிப்பெரும் கலைச் செல்வமாக, கவர்ச்சியுடன் பொலிவுறுவது ஆடல்வல்லான் எனும் நடராஜரது திருவுருவம். சங்க காலத்தில் இருந்து நடராஜ பெருமானின் அருமை பெருமைகளை இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.
தீர்த்தம் என்பது சிவகங்கையே ஏத்தரும் தலம் எழிற் புலியூரே மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே...
என்று நடராஜ பெருமானின் வடிவை குமரகுருபரர் வியந்து போற்றுகிறார். (புலியூர்= சிதம்பரம்; சிவகங்கை= சிதம்பரம் கோயில் திருக்குளம். அம்பலக் கூத்தன்= சிதம்பரம் நடராஜ மூர்த்தி).

அனைத்துத் தரப்பு பக்தர்களுக் கும் வியப்பையும், ஈடுபாட்டையும் அளித்து, மகிழ்வித்து, ஈர்த்து, மனத்தைக் கவரும் அற்புத வடிவம். இதைப் படைத்து உதவிய அருட்பெரும் சான்றோர்கள் மற்றும் சிற்பிகளின் சிந்தனையின் ஆற்றல் போற்றுதற்கு உரியது.
இந்த வடிவம் அறிவியல் உண்மையும் கொண்டது. உலகம் ஆகிய அண்டம் அமைந்திருப்பது போல், நம் உடம்பான பிண்டமும் அமைந்துள்ளது. இறைவன் அண்டவெளியில் திருநடம் புரிவது போலவே, நம் உடல் பிண்டத்திலும் திருநடம் புரிந்து அருள்கிறான். அண்ட வெளி நடனம், தில்லை சிற்றம்பலத்தில். பிண்டமான உடம்பினுள்- இதயத்தில் நடனம் நடைபெறுகிறது. இதயத்தின் அசைவும், இயக்கமும் நின்று விட்டால், உடல் பிணமாகும். அவ்வாறே தில்லையில் நடராஜ பெருமானின் திருக்கூத்து நிகழவில்லையானால், அண்டம் அசைவற்று அழியும். அணுக்களும், அண்ட கோடிகளும், தத்தம் நிலையிலும், நெறியிலும் முறையே இயங்கும் மூல காரணம் ஸ்ரீநடராஜரது ஆடலும், அருள் இயக்கமுமே ஆகும்.
நடராஜ வடிவத்தின் தத்துவ நுட்பங்களை சைவ சித்தாந்த சாத்திரங்கள் விளக்குகின்றன. இறைவன் மந்திர வடிவினன். அவன் திருவுருவம் ‘நமசிவாய’ எனும் தூல பஞ்சாட்சர வடிவமானது. திருவடியில்-ந, வயிற்றில்-ம, தோளில்-சி, முகத்தில்-வ, திருமுடியில்-ய. இந்த வடிவம் ‘லயாங்கம்’ எனப்படுகிறது. இறைவனின் ஆடலில் பஞ்ச கிருத்தியம் எனும் ஐந்தொழில்கள் நடைபெறுகின்றன.
உடுக்கை ஏந்திய திருக்கரம், ஆன்மாக்களின் வினைகளுக்கு ஏற்ப உலகை சிருஷ்டிக்கிறது (படைத்தல்). அமைந்த திருக்கரமான ‘அபயம்’, எல்லா உயிர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது (காத்தல்). நெருப்பு ஏந்திய திருக்கரம் மலத்தை அழிக்கிறது (சம்ஹாரம்). ஊன்றிய திருப்பாதம் மறைப்பு (திரோபாவம்), தூக்கிய திருவடி அருளல் (அனுக்ரஹம்) என்று ஐந்தொழில்களையும் ஒரு சேர ஆற்றுகிறது.

No comments:

Post a Comment