Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.9

156. இரந்தரமாகி வான் தான் இடம் கொடுத்திடும்; சலித்துப்
பரந்தவை திரட்டும், கால் தீ சுட்டு ஒன்று வித்தல் பண்ணும்
நிரந்தரம் குளிர்ந்து நின்று பதஞ்செயும், நீர் மண் தானும்
உரந்தரு கடின மாகித் தரித்திடும் உணர்ந்து கொள்ளே.

இங்கே கூறப்பட்ட ஐம்பெரும் பூதங்களுள் வான் பெருவெளியாகித் தன்னிடத்திலே மற்றைப் பொருள்கள் யாவும் இயங்குவதற்கு இடம் தரும். காற்று சலித்தலும் பரந்தவற்றைத் திரட்டுதலுமாகிய இயல்பும் தொழிலும் உடையது. நெருப்பு சுடுதலும் ஒன்றுவித்தலுமாகிய தன்மைகளை உடையது. நீர் எப்போதும் குளிர்ந்து இருக்கும். அதன் தொழில் பதம் செய்தல் ஆகும். மண் வலிமை உடையதாகிக் கடினமாக விளங்கும். யாவற்றையும் தாங்குவதாகிய தொழிலைச் செய்யும்.

இந்தப் பாடலில் ஐம்பெரும் பூதங்கள் ஒவ்வொன்றின் பண்பும் தொழிலும் கூறப்பட்டன.

157. மண் புனல், அனல், கால், வான்; பால் வடிவு நாற்கோணம், ஆகும்-
தண்பிறை மூன்று கோணம் தகும் அறுகோணம் வட்டம்.
வண்பொன்மை வெண்மை செம்மை கறுப்போடு தூமம் வன்னம்.
எண்தரும் எழுத்துத் தானும் ல, வ, ர, ய அவ்வுமாமே.

ஐம் பெரும் பூதங்கட்கும் தனித்தனி வடிவமும் நிறமும் எழுத்தும் இன்னவென்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. மண்ணின் வடிவம் நாற்கோணம். அதன் நிறம் பொன்மை. அதற்குரிய எழுத்து லகரம், நீருக்கு உரிய வடிவு தண்ணியபிறை. அதன் நிறம் வெண்மை, எழுத்து லகரம், நீருக்கு உரிய வடிவு தண்ணியபிறை. அதன் நிறம் வெண்மை, எழுத்து லகரம், தீயின் வடிவு முக்கோணம். நிறம் செம்மை. எழுத்து ரகரம். காற்றின் வடிவு அறுகோணம். அதன் நிறம் கருமை. அதற்குரிய எழுத்து யகரம். விண்ணின் வடிவு வட்டம். அதன் நிறம் புகைநிறம். இதற்குரிய எழுத்து அகரம்.

158. குறிகள் வச்சிரத்தினோடு கோகநதம் சுவத்தி
அறுபுள்ளி அமுதவிந்து அதிதெய்வம்- அயன் மால் ஆதி
செறிபுகழ் ஈசனோடு சதாசிவம் பூத தெய்வம்
நெறிதரு கலை ஐந்திற்கும் நிகழ்த்துவர் இந்த நீர்மை.

ஐம் பூதங்கட்கும் உரிய அடையாளமும் அதி தெய்வமும் இப்பாடலில் கூறப்படுகின்றன. மண்ணிற்குரிய அடையாளம் வச்சிராயுதம். அதி தெய்வம் அயன். நீருக்குரிய அடையாளம் தாமரை. அதி தெய்வம் திருமால். நெருப்பிற்கு உரிய அடையாளம் இருதலை மேழி. அதிதெய்வம் உருத்திரன். காற்றுக்கு உரிய அடையாளம் அறு புள்ளி. அதன் அதி தெய்வம் மகேசுவரன். விண்ணிற்கு உரிய அடையாளம் அமுதத்துளி. அதன் அதிதெய்வம் சதாசிவன். நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளுக்கும் உரிய தெய்வங்களும் இந்த முறையிலேயே அமையும் என்பர்.

ஐந்து கலைகளாவன நிவிருத்தி கலை, பிரதிட்டா கலை, வித்தியா கலை, சாந்தி கலை, சாந்தியதீத கலை என்பனவாகும்.

159. சுத்ததத் துவங்கள் என்று முன்னமே சொன்ன ஐந்தும்
இத்தகைமையின் இயம்பும் இவை முப்பத் தொன்று மாக
தத்துவம் முப்பத்தாறாம் சைதன்னி யங்கள் ஐந்தும்
சித்து அசித்து ஆன்மா ஒன்று முப்பதும் அசித்தே செப்பில்.

முன்பே கூறப்பட்ட சுத்த தத்துவங்கள் ஐந்தும் அதன் பின்னர்க் கூறப்பட்ட அசுத்த தத்துவங்கள் 31-ம் ஆகத் தத்துவங்கள் மொத்தம் 36 ஆகும். இவற்றுள் முதலில் கூறப்பட்ட ஐந்தும் அறிவுடையவை ஆகும். உயிர் என்பது சார்ந்ததன் வண்ணம் ஆவதாலும் உணர்த்த உணர்தலாலும் சித்தசித்து எனப்படும். இவை ஆறும் தவிர்ந்த மற்றைய முப்பதும் அறிவற்றனவேயாகும்.

சுத்ததத்துவங்கள் பற்றி இந்நூலின் பாடல் 86-ல் ஆசிரியர் எடுத்துரைத்தார். அதற்குப் பின்வரும் பாடல்களிலும் அசுத்த தத்துவங்கள் முப்பத்தொன்றையும் விரித்துக் கூறினார். இவற்றுள் சுத்ததத்துவங்கள் ஐந்தும் அறிவற்றனவே ஆயினும் சித்சத்திக்கு உரிய வடிவங்களாக விளங்குவதால் அவை அறிவுடையனவாகவே கொள்ளப்பெறும் ஆன்மா ஒரு வகையால் அறிவுடையதாகியும் மற்றொரு வகையால் அறிவற்றதைச் சார்ந்தும் நிற்பதால் அதனைச் சித்தசித்து என்றனர். மற்றைய முப்பது தத்துவங்களும் அறிவற்றனவே. சித்து- அறிவுடைப் பொருள். அசித்து- அறிவற்ற பொருள். சைதன்யம்- அறிவுடையன.

160. ஐந்துசுத் தத்தின் கீழ் ஏழ்- சுத்தாசுத் தம் அசுத்தம்-
தந்திடும் புமான் கீழ் எண்மூன்றாயதத் துவம்; சீவர்க்கு
வந்திடும் பிரேர காண்டம் ! மருவுபோக சயித்தி ரத்தோடு
அந்தம் இல் அணுக்களுக்குப் போக்கிய காண்டம் ஆமே.

மேலான தத்துவங்கள் ஐந்தும் சுத்த தத்துவங்கள் எனப்பட்டன. இத்தொகுதி பிரேரக காண்டம் என்றும் பெயர் பெறும். சுத்த தத்துவத்தின் கீழ்ப்பட்டனவாகிய ஏழு தத்துவங்களும் ஒரு தொகுதியாகக் கொள்ளப்படும். இதனை மிசிர தத்துவங்கள் என்பர். இத்தொகுதி கீழ்பட்டதாகிய 24 தத்துவங்களும் அசுத்த தத்துவங்களாகும். இத்தொகுதியை போக்கிய காண்டம் என்பர். எண்ணற்ற உயிர்களுக்கு இன்பத் துன்ப நுகர்வுகளைத் தருவன இவையே.

முதலாவதாகக் கூறப்பட்ட சுத்த தத்துவங்களுக்கு சிவதத்துவம் என்னும் பெயர் வழங்கும். இவையே உயிர்களின் நுகர்வுகளைச் செயற்படுத்துவன. எனவே இவற்றுக்குப் பிரேரக காண்டம் என்று பெயர்.

அதனை அடுத்துக் கூறப்பட்ட ஏழு தத்துவங்களும் வித்தியா தத்துவங்கள் என்றும் பெயர் பெறும். இவை உயிர்களின் அறிவையும், தொழிலையும் ஓரளவு விளக்கும் தன்மை உடையன. இத்தொகுதி சுத்தமும், அசுத்தமும் ஆகிய கலப்பு என்பதால் சுத்தா சுத்தம் எனவும் மிச்சிராத்துவா எனவும் கூறப்படும். மிச்சிரம்- கலப்பு. உயிர்களுக்கு இன்பத் துன்ப நுகர்வுகளை ஊட்டுவதற்குக் காரணமாக இருப்பதனாலே இது போசயித்திரு காண்டம் எனப் பெயர் பெறும்.

அதன் பின்னர் வருகின்ற எண்மூன்று (8*3) இருபத்து நான்கு தத்துவங்களும் ஆன்ம தத்துவங்கள் என்று பெயர் பெறும். இவை அனைத்தும் உயிர்களுக்கு நுகர்ச்சியைத் தருதலின் போக்கிய காண்டம் என்று பெயர் பெறும். புமான்- புருடதத்துவம்.

161. தத்துவ ரூபமாகும் தரும் அரு உருவம் எல்லாம்;
தத்துவம் தூல சூக்க பரங்களும் ஆகி நிற்கும்
தத்துவம் தன்னில் சாரும் அணுக்கள் சாதாக்கியத்தில்
தத்துவம் சத்தம் சாரும் சகலமும் தத்துவம் காண்,

உலகத்தில் காணப்படுகின்ற அருவம், உருவம், அரு உருவம் ஆகிய எல்லாப் பொருள்களும் மாயையிலிருந்தும் தோன்றிய இத்தத்துவங்களின் வடிவமேயாகும். இம்முப்பத்தாறு தத்துவங்களும் பருப் பொருளானவை என்றும், நுண்பொருளானவை என்றும், மீநுண்பொருளானவை என்றும் ஒவ்வொன்றும் மூன்று வகைப்பட்டு விளங்குவனவாகும். உயிர்கள் இத்தத்துவங்களைப் பொருந்தியே நிற்கும். அந்தந்தத் தத்துவத்தின் அதி தெய்வங்களுக்கும் அந்தந்தத் தத்துவங்களின் பெயரே பொருந்தும். எனவே, எல்லாப் பொருளும் தத்துவமாகவே காணப்படும்.

162. தத்துவம் எண் மூன்றும் சென்று ஆன்மதத் துவத்து ஒடுங்கும்
வித்தையின் ஒடுங்கும் ஆறும் சிவத்தினில் ஒடுங்கும் மூன்றும்
நித்ததத் துவம் இம்மூன்றும் என்பார்கள் இரண்டும் நின்ற
சத்தமாம் சிவத்து ஒடுங்கும்; தோற்றமும் இதுபோல் ஆகும்.

இப்பாடலில் முப்பத்தாறு தத்துவங்களும் ஒடுங்குங் காலத்து எவ்வாறு ஒடுங்கும் என்பதைத் தொகுத்துக் கூறுகிறார் ஆசிரியர்.

முப்பத்தாறு தத்துவங்களும் ஒடுங்கும் போது நிலம் முதல் மூலப் பகுதி வரையுள்ள இருபத்து நான்கும் சீகண்டருத்திரனில் அடங்கும். அதற்கு மேல் உள்ள ஏழு தத்துவங்களும் வித்தைக்கு உரிய அனந்தரில் ஒடுங்கும். அதற்கு மேல் உள்ள மூன்று தத்துவங்களும் இலய சிவனில் ஒடுங்கும். மற்ற இரண்டாகிய சத்தி தத்துவம், சிவதத்துவம் என்பன சுத்த சிவனில் ஒடுங்கும். மீண்டும் இவை தோற்றுவிக்கப்படும் போது அவையவை அவரவரால் தோற்றுவிக்கப்படும் என்று மேலோர் கூறுவர்.

நான்காம் அதிகரணம் 163. மொய்தரு பூதம் ஆதி மோகினி அந்தம் ஆக
பொய்தரு சமயம் எல்லாம் புக்கு நின்றிடும் புகன்று
மெய்தரு சைவ மாதி இருமூன்றும் வித்தை ஆதி
எய்துதத் துவங்கள் ஏயும் ஒன்றும் இன்று எம் இறைக்கே.

மெய்யை உணராத உலோகாயதம் முதலாகக் கூறப்படுகின்ற புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப்புறச் சமயம் என்பன யாவும் மேலே கூறப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. ஆகவே அச்சமயத்தவர் நிலம் முதல் தூவாமாயை முடிய உள்ள தத்துவங்களையே கொண்டனர். எனவே அவர்களுக்கு அவரவர் கொண்ட தத்துவங்களின் எல்லை வரை புகுதல் கூடும். இவர்க்கு மேலாக அகச் சமயத்தவர் அறுவகையினரும் இறை, உயிர், தளை என்ற முப்பொருள் உண்மை கொள்பவர் ஆவர். எனவே அவர்கள் எய்துகின்ற தத்துவங்களாவன சுத்தவித்தை முதலிய ஐந்து தத்துவங்களுள் ஒன்றாகவே அமையும். சித்தாந்த சைவத்திற்கு இறைவனாக விளங்குகின்ற சுத்தசிவன் இம்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்பவன் ஆவான்.

மேலே 91-வது பாடலிலே நிலவு சீர் அமலன் ஆகி நின்றனன் என்று இறைவனைப் பற்றி ஆசிரியர் கூறியதை இப்பகுதி விளக்குகிறது. எந்தெந்த சமயத்தினர் எந்தெந்தத் தத்துவங்களைக் கொண்டார்களோ அதன் அளவினன்றி அதற்கு மேல் அவர்களுக்குச் செல்லுதல் கூடாது. ஆகையினால் அதுவரையிலே சென்று புகுவர் என்றார். சைவ சித்தாந்தம் தத்துவங்கள் முப்பத்தாறு எனக் கொண்டு இறைவனாகிய சிவபெருமானைத் தத்துவங்களைக் கடந்தவன் என்று கூறுவதையும் இப்பாடலில் ஆசிரியர் விளக்கினார்.

164. சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும் அருவம் நாலு இங்கு உருவநால் உபயம் ஒன்று ஆய்
நவம் தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.

சிவம், சத்தி, நாதம், விந்து சதாசிவம் மகேசுரன், உருத்திரன், திருமால் அயன் ஆகிய இவ்வடிவங்கள் ஒன்பதும் முறையே ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றும். இவை அனைத்தையும் நவந்தரு பேதம் என்பர். சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய முதல் நான்கும் அருவத் திருமேனிகள். நடுவிலே உள்ள சதாசிவம் என்பது அருஉருவத் திருமேனி. மகேசுரன், உருத்திரன், திருமால், அயன் ஆகிய நான்கும் உருவத் திருமேனிகள். இவ்ஒன்பது வடிவுகளையும் கொண்டருள்பவன் இறைவன் ஒருவனே என்று மேலோர் கூறுவர்.

165. சத்தியாய் விந்து சத்தி யாய் மனோன் மணி தானாகி
ஒத்துறும் மகேசை ஆகி உமை திரு வாணி ஆகி
வைத்துறும் சிவாதிக்கு இங்ஙன் வரும் சத்தி ஒருத்தி ஆகும்
எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்.

நவம் தரு பேதம் என்று மேலே கூறப்பட்ட ஒன்பது சிவ வடிவங்களுக்கும் ஒத்த சத்தி வடிவங்களும் ஒன்பது ஆகக் கூறப்படும், அவை முறையே சிவம், சத்தி, நாதம் விந்து மனோன்மணி மகேசுவரி உமைதிருமகள், கலைமகள் என்பன. இவை ஒன்பதாகக் கூறப்படினும் அனைத்தும் சிவசத்தியின் வடிவங்களே. சிவபெருமான் ஒன்பது வடிவங்களைக் கொண்டு இவ்வுலகை நடத்தி வருகிறானோ அவன் திறத்துக்கு ஏற்ப அவனுக்குத் துணையாய் நின்று சத்தியும் நடத்தி வருவாள்.

166. சத்திதான் நாதம் ஆதி தான் ஆகும்; சிவமும் அந்தச்
சத்திதான் ஆதி ஆகும்; தரும்வடிவு ஆன எல்லாம்
சத்தியும் சிவமும் ஆகும் சத்திதான் சத்தனுக்கு ஓர்
சத்தியாம் சத்தன் வேண்டிற்று எல்லாம் ஆம் சத்திதானே.

சத்தி, நாதம் முதலிய எல்லாவற்றோடும் கூடி நிற்கும். சிவமும் சத்தி முதலியவற்றை இடங்கொண்டிருக்கும். எனவே சத்தியினால் தரப்படும் எல்லா வடிவங்களும் சத்தி, சிவம் இரண்டிற்கும் பொது வடிவங்களேயாகும். சத்தன் ஆகிய சிவன் வேண்டியவாறு எல்லாம் ஆவது சத்தியே. சத்தியே சிவபெருமானுக்கு ஒப்பற்ற தேவியும் ஆகும்.

167. சிவம் சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்
உவந்து இரு வரும்புணர்ந்து இங்கு உலகு உயிர் எல்லாம் ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும்; பான்மொழி கன்னி ஆகும்;
தவம் தரு ஞானத் தோர்க்குஇத் தன்மைதான் தெரியும் அன்றே.

சிவத்திலிருந்து சத்தி தோன்றும். சத்தியிலிருந்து சிவம் தோன்றும். சத்தியும் சிவமுமாகிய இருவரும் கூடி உயிர்களிடத்துக் கொண்ட பெருங் கருணையினால் அறிவுடையதும், அறிவற்றதுமாகிய உலகு உயிர்களைத் தோற்றுவிப்பர். அவ்வாறு இருந்தும் சிவபெருமான் பிரமசாரியே ஆவன். பாலினும் இனிய மொழியுடைய சத்தி இளங்கன்னியே ஆவாள். தவத்தினால் ஞானம் பெற்றவர்களுக்கு இவ்வுண்மை விளங்கும்.

பரசிவத்திலிருந்து பராசத்தியும் பராசத்தியிலிருந்து ஞானவடிவே யான சிவமும் அதிலிருந்து கிரியா சத்தியாகிய ஆற்றலும் தோன்றும் என்பது முன்னர் 164-வது பாடலில் ஆசிரியரால் விளக்கப்பட்டது.

திருவாசகத்தில், திருபொற்சுண்ணம் பதின்மூன்றாவது பாடலில், என்னுடைய ஆரமுது எங்களப்பன் எம் பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி என்று மாணிக்கவாசகர் அருளிச் செய்தார். அது போலவே திருக் கோவையாரில், அவள் அத்தனாம் மகனாம் தில்லையாம் (பாடல் 112) என்று அருளினார். இப்பகுதிக்குப் பேராசிரியர் உரை எழுதும் போது சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்திதத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார் என்று விளக்கியுள்ளதும் காண்க.

குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட் கோவையுள் (பாடல் 33) கனகமார் கவின்செய் மன்றில், அனக நாடகற்கு எம் அன்னை, மனைவி தாய் தங்கை மகள் என்று அருளியதும் இங்கே நினைவு கூர்க.

168. தனு கரண புவன போகம் தற்பரம் பந்தம் வீடு என்று
அணுவினோடு எல்லாம் ஆகி அடைந்திடும் தத்துவங்கள்
இனிது அறிந்து இவை நிவிர்த்தி முதல் கலை இடத்தே நீக்கி,
நனிபரம் உணர்ந்தோன்- அந்தத் தத்துவ ஞானி ஆவன்.

உடல், கருவி, உலகம் நுகர்ச்சிப் பொருள் என்பன உயிர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவை ஆகும். அவற்றுக்கு மேலாக விளங்குவனவாகிய சிவதத்துவங்கள் ஐந்தும் உயிர்களை வீட்டு நிலைக்கு இட்டுச் செல்வனவாகும். இவ்வாறு தத்துவங்களினாலேயே உயிர் கட்டுநிலைக்கு உட்பட்டும் வீட்டு நிலையைத் தலைப்பட்டும் வரும். தத்துவங்கள் யாவும் உயிர்களோடு பொருந்துவனவேயன்றி இறைவனோடு பொருந்துவனவாகா. இதனை இனிது அறிந்து நிவிருத்தி கலை முதலாகக் கழியும் முறைமையில் கழித்து தத்துவங்களைக் கடந்த பரம் பொருளை உணர்ந்தவன் எவனோ அவனே தத்துவஞானி ஆவான். முந்திய பாடலில் தவம் தருஞானத்தோர்க்கு இத்தன்மைதான் தெரியுமன்றே என்று கூறிய ஆசிரியர் அத்தகைய ஞானம் பெற்றவர்கள் யார் என்பதை இந்தப் பாடலில் விளக்கினார்.

169. எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்தது என், அணுவுக்கு ? என்னின் தொல்லாய கன்மம் எல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற்கும் பின் நில்லாமை முற்று வித்து நீக்கவும் கூடி நின்ற பொல்லாத ஆணவத்தைப் போக்கவும் புகுந்தது அன்றே. இங்கே கூறப்பட்ட தத்துவங்கள் உயிரோடு எல்லாமாகி இயைந்தது எதன் பொருட்டு எனில் பழமையான இருவினைகளையும் உயிரை நுகர்வித்து நீக்குவதற்காகவும், மேலும் வினைகள் ஏறாமல் தவிர்க்கவும் உயிரோடு தோற்றமில் காலந்தொட்டே கூடிநின்ற பொல்லாத ஆணவமலத்தைப் போக்குவதற்காகவும் என அறிக.

இங்ஙனம் கூறுவதால் நீக்கப்பட வேண்டிய மலகன்மங்கள் உயிருக்கே பொருந்துவனவன்றிச் சிவத்தோடு பொருந்துவனவல்ல என்பதனையும் தெளிவித்தார். அணு- உயிர்.

170. ஒன்றதாய் அநேகசத்தி உடையதாய் உடனாய் ஆதி
அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து
நின்று போத்திருந்து வத்தை நிகழ்த்தி செம்பினில் களிம்பு ஏய்ந்து
என்றும் அஞ்ஞானம் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே.

ஆணவமலம் என்பது ஒன்றே. ஆனாலும் அது எண்ணற்ற ஆற்றல்களை உடையது. செம்பில் களிம்பு போலத் தோற்றமில் காலந்தொட்டே ஆணவமலம் உயிர்களுடன் இயைந்து நின்றது. கேவல நிலையில் ஆன்மாவின் அறிவையும், செயலையும் ஆணவமலம் முற்றிலும் மறைத்து நிற்கும். உயிர்களின் சகலநிலையில் அவற்றை இன்ப, துன்ப நுகர்ச்சிக்கு வினை முதலாகுமாறு செய்யும். கேவநிலை, சகநிலை என்று கூறப்பட்ட இரண்டு நிலைகளிலும் உயிர்களுக்கு அறியாமையைச் செய்யும் இயல்புடையது ஆணவமலம்.

செம்பில் களிம்பு இடையில் வந்து பொருந்தியதன்று. அது போலவே ஆணவமலம் உயிர்களைத் தோற்றமில் காலந் தொட்டே பற்றியிருக்கிறது. ஆணவமலம் ஒன்றே. ஆயினும் எண்ணற்ற ஆற்றல்களை உடையது. கேவல நிலையில் உயிரின் அறிவையும், தொழிலையும் முற்றிலும் மறைத்து நிற்கும் ஆணவமலத்தின் ஆற்றல் ஆவாரகசத்தி எனப்படும். சகல நிலையில் உயிர்களின் அறியாமைக்குக் காரணமாகும் ஆணவமலத்தின் ஆற்றல் அதோநியாமிகா சத்தி எனப்படும்.

171. மலம் என வேறு ஒன்று இல்லை மாயாகா ரியமது? என்னின்
இலகு உயிர்க்கு இச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை;
விலகிடும் மலம் இவற்றை வேறும் அன்று; அதுவேறாகி
உலகு உடல் கரணம் ஆகி, உதித்திடும், உணர்ந்து கொள்ளே.

ஐக்கியவாத சைவர் போன்றோர் ஆணவ மலம் என ஒன்று இல்லை என்றும், உயிர்களின் அறிவை மறைப்பது மாயையின் காரியங்களே என்றும் வாதிடுவர். விளங்குகின்ற உயிர்களுக்கு விழைவு, அறிவு, செயல் என்ற மூன்று ஆற்றல்களையும் தோன்றச் செய்வது மாயையே ஆகும். இதற்கு மாறாக ஆணவ மலம் இவை மூன்றனையும் மறைத்து நிற்பதாகும். மேலும் ஆணவமலம் தோற்றமில் காலந் தொட்டே உயிரோடு ஒற்றித்து நிற்கும். எனவே ஆணவ மலத்துக்கும், மாயைக்கும் இடையே உள்ள வேற்றுமை மிகப் பெரிது. மாயை உயிர்களுக்கு வேறாக நின்று உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும்.

இந்த வேற்றுமையை அடிப்படையாகக் கொண்டே திருஞான சம்பந்தர் திருமுதுகுன்றப் பதிகத்தில், மாயையை ஒண்தளை என்று அருளினார் (1-12-3).

172. மாயையே ஆன்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்கும்-
தூய அப்பரிதி தன்னைச் சுடர்முகில் மறைத்தாற் போல
போய்முகில் அகலச் சோதி புரிந்திடும் அதுவே போல
காயமும் அகல, ஞானத் தொழில் பிரகாசம் ஆமே.

தூயதாகிய கதிரவனின் ஒளிக்கற்றைகளை மேகம் படர்ந்து மறைத்தாற் போல மாயையே உயிரின் அறிவு., விழைவு ஆற்றல்களை மறைத்து நிற்கும். மேகங்கள் நீங்கிய போது அதுவரை மøறைக்கப்பட்டிருந்த ஞாயிற்றின் பேரொளி விளங்கித் தோன்றும். அது போலவே மாயையின் காரியங்களாகிய உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருள் ஆகியவை நீங்கினால் உயிரின் அறிவு முதலிய ஆற்றல்களும் விளங்கித் தோன்றும் என்று சிலர் வாதிடுவர்.

173. பரிதியை முகில்ம றைப்பப் பாய் ஒளி பதுங்கி னாற்போல்
உரு உயிர் மறைக்கின் ஞானக் கிரியைகள் ஒழிக்குமாகும்;
கருதிடும் இச்சா ஞானக் காரியம் காயம் பெற்றால்
மருவிடும் உயிர்க்குக் காயம் வந்திடா விடில், மறைப்பே.

கதிரவனை ÷மேகம் மறைத்தவுடனேயே கதிரவனின் ஒளி பரவாமல் மறைந்து போகும். அது இங்கே உவமை ஆகுமானால் உயிர் உடலைப் பெற்ற உடன் ஆன்மாவின் அறிவும், விழைவும், ஆற்றலும் மறைதல் வேண்டும். அதற்கு மாறாக உயிர் உடம்போடு பொருந்திய போதே உயிருக்கு அறிவு விழைவு ஆற்றல்கள் உளவாகின்றன. உடம்பில்லாத போது உயிரின் ஆற்றல்கள் மறைந்து போகின்றன. எனவே இந்த உவமை இங்கே பொருந்துவதன்று.

174. போத காரியம் மறைத்து நின்றது புகன்மலம்காண்;
ஓதலாம் குணமுமாக உயிரினுள் விரவலாலே
காதலால் அவித்தை சிந்த தரும் கலை ஆதி மாயை
ஆதலால் இரண்டும் சோதி இருள் என வேறாம் அன்றே.

உயிரின் அறிவு இச்சை செயல்களை மறைத்து நிற்பது ஆணவமேயன்றி மாயை ஆகாது. ஆணவமலம் தோற்றமில் காலந் தொட்டே உயிரோடு கலந்து நிற்றலால் அதனை உயிரின் குணமும் ஆகவே கூறத்தகும். ஆனால் மாயை கலை முதலிய தத்துவங்களைத் தோற்றுவித்து உயிரின் அறிவை முற்றிலும் மறைத்து நின்ற ஆணவ மலத்தினால் விளைந்த அறியாமையைப் போக்கி அறிவைத் தோற்றுவிக்கும். ஆதலால் மாயை ஒளி போன்றது. ஆணவம் இருள் போன்றது.

குணமும் என்பதில் உள்ள உம்மை எதிர்மறைக் கண் வந்தது என்று உரை வரைகிறார். சிவஞான முனிவர். இந்த நான்கு பாடல்களாலும் ஆணவமலம் என ஒன்று இல்லை என்று கூறும் ஐக்கியவாத சைவர் பாசுபதர் ஆகியோரின் கொள்கை மறுக்கப்பட்டது. ஆணவமலம் உண்டு என நிறுவப்பட்டது.

175. புருடன்தன் குணம்அ வித்தை எனின், சடம், புருடன் ஆகும்;
குருடன்தன் கண்ணின் குற்றம் கண்ணின்தன் குணமோ? கூறாய் !
மருள் தன்தன் குணம தாகி, மலம்அசித் தாகி நிற்கும்;
தெருள் தன்தன் குணம தாகிச் சித்தென நிற்கும், சீவன்.

உயிரின் இயல்பே அறியாமை என்று கூறினால் உயிர் அறிவற்றது எனப்பட்டு வழுவாகும். குருடனுடைய கண், படலத்தால் மறைக்கப்பட்டிருப்பதால் அவன் பார்வையை அது தடுக்கிறது. படலம் என்னும் குற்றம் அவன் பார்வையை மறைக்கிறது என்று கொள்ள வேண்டுமே தவிர அதுவே கண்ணின் குணம் என்று கூற முடியுமா? உயிரின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவம் உயிரின் குணம் என்று கொள்ளுதல் தகாது. ஆணவ மலம் அறியாமையைத் தன் குணமாக உடைய குணிப் பொருள். ஆணவமலம் அறிவற்றது. அறிவுடைமையைத் தனது குணமாகக் கொண்டு குணிப் பொருளாக நிற்பது உயிர். உயிர் அறிவுடைப் பொருள் ஆகும்.

பாடாணவாதிகள் அறியாமை உயிரின் குணம் என்று சொல்வார்கள். இப்பாடல் அவர்களை மறுப்பதற்கு எழுந்தது.

No comments:

Post a Comment