Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞானபோதம் பகுதி- 7

ஏழாம் நூற்பா

முந்திய ஆறாம் நூற்பா பதியின் உண்மையியல்பைக் கூற அதனை அடுத்து வரும் இது, பசுவாகிய உயிரின் உண்மையியல்பைக் கூறுகின்றது.

முன் நூற்பாவில் சத்து, அசத்து ஆகியவற்றை வரைசெய்து உணர்த்தியமையால், முப்பொருள்களுள் பதி சத்து என்பதும், பாசம் அசத்து என்பதும் விளங்கின. அங்ஙனமாயின் மூன்றாவதாகிய பசு சத்து, அசத்து என்னும் இரண்டனுள் எவ்வகையின் பாற்படும் என்னும் வினா எழுகிறது. அவ்வினாவிற்கு இங்கு விடை கூறுகின்றார் ஆசிரியர். அவ்விடையே பசுவின் உண்மையியல்பு ஆகிய சொரூபலக்கணம் ஆம். இனி நூற்பாவைப் பார்ப்போம்.

நூற்பா

யாவையும் சூனியம் சத்து எதிர் ஆகலின்
சத்தே அறியாது; அசத்து இலது அறியாது;
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா

இந்த நூற்பா எதனைக் கூற எழுந்தது என்பதனைக் கருத்துரையுள் கூறுகின்றார் ஆசிரியர்.

ஆசிரியர் கூறும் கருத்துரை:

என்பது சூத்திரம். என் நுதலிற்றோ எனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

கருத்துரையின் விளக்கம்

சத்தும், அசத்தும் பற்றிப் பேசிய இடமாகிய முந்திய நூற்பாவில்தானே பசுவாகிய உயிர் அவற்றுள் எவ்வகையினது என்பதற்கும் விடை கூறியிருக்க வேண்டும். ஆயின் அவ்விடத்தில் அது கூறாமல் விடப்பட்டது. ஆகவே விடப்பட்ட அஃது அந்த நூற்பாவுக்கு ஒழிபு ஆயிற்று. அதனை எடுத்து இந் நூற்பா கூறுகின்றது. அது பற்றியே மேலதற்கோர் புறனடை (முந்திய நூற்பாவின் ஒழிபு) உணர்த்துதல் நுதலிற்று என்றார் ஆசிரியர்.

நூற்பாவின் பொருள்:

சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய பாசப் பொருள்கள் வேறாய் எதிர்ப்பட்டு நில்லா. ஆகையால் சத்தாகிய சிவம் தன்னெதிரே நில்லாத பாசப் பொருள்களை அறிந்து அனுபவியாது.

இனி, அசத்தாகிய பாசம் அறிவில்லாதது ஆகையால் அதுவும் சத்தாகிய சிவத்தை அறிந்து அனுபவியாது.

அவ்வாறாயின் சத்தும் அசத்தும் ஆகிய அவ்விரு பொருள்களையும் அறிந்து அனுபவிக்கும் தன்மையுடையதாக மூன்றாவது பொருள் ஒன்று இருத்தல் வேண்டும். அந்தப் பொருள் அந்த இரண்டும் அல்லாதது; சத்தும் அசத்தும் ஆகாதது; ஆயின் அவ்விரண்டின் தன்மையையும் உடையது. அதனால் அது சதசத்து எனப்படும். அதுவே ஆன்மாவாம்.

பதவுரை

சத்து எதிர் யாவையும் - சத்தாகிய சிவத்தின்முன் பாசங்கள் வேறாய்

சூனியம் ஆகலின் - எதிர்ப்பட்டு விளங்கி நில்லா ஆகையால்

சத்தே அறியாது - சிவம் பாசங்களை அறிந்து அனுபவிப்பது இல்லை

அசத்து இலது (ஆகலின்) - அசத்தாகிய பாசம் அறிவில்லாத சடம் ஆகையால்

அறியாது - அதுவும் சிவத்தையறிந்து அனுபவிப்பது இல்லை.

(இதனால், சத்தும், அசத்தும் தம்முள் ஒன்றனையொன்று அறிதல் இல்லை என்பது விளங்கும். அவ்வாறாயின் அவ்விரண்டினையும் அறிந்து அனுபவித்து வருவது எது? என்ற வினா எழும்.)

இரு திறன் அறிவு உளது - அவ்விரண்டனையும் அறியும் அறிவையுடையது

இரண்டு அலா ஆன்மா - அவ்விரண்டும் அல்லாத, அவ்விரண்டின் வேறாகிய ஆன்மாவாம்.

விளக்கம்

நூற்பாவில் யாவையும் சூனியம் என்பதற்கு, வேறாய் விளங்கி நில்லா என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.

சத்தே அறியாது என்ற தொடர் மாணவர்க்கு மலைப்பை உண்டாக்கக் கூடும். சிவம் எல்லாவற்றையும் அறியக் கூடிய முற்றறிவுடையது என்று கூறிவிட்டு இங்கே சத்தாகிய அஃது அறியாது என்று கூறுவது முரண்பாடு அன்றோ என மாணவர் எண்ணலாம். அத் தொடரின் பொருளை உள்ளவாறு உணர்ந்தால் முரண்பாடு தோன்றாது. அதனைச் சிறிது விளக்குவோம்.

இறைவன் சுட்டியறியான்:

உலகப் பொருள்கள் நமக்கு வேறாய் நம் எதிரில் முற்பட்டு நிற்கின்றன. அதனால் அவற்றை நாம் இஃது இன்னது எனச் சுட்டி அறிகிறோம்.

நம்மைப் போல இறைவனும் சுட்டியறிய வேண்டுமானால் அவனுக்கு வேறாய் அவனுக்கு எதிரில் பொருள்கள் இருக்க வேண்டும். அவனுக்கு வேறாய்-புறம்பாய் பொருள் ஏதும் இருந்தாலன்றோ அவன் அதனைச் சுட்டியறிதல் இயலும்! பசுவும் பாசமும் ஆகிய எல்லாமே அவனது வியாபகத்துள் அடங்கி வியாப்பியமாய் அன்றோ நிற்கின்றன.

அவனது பெரு நிறைவுள் அகப்படாது வெளியே தனியாக வேறாக நிற்கின்ற பொருள் ஏதும் இல்லை. ஆகவே சிவன் அசத்தாகிய பொருள்களைத் தனக்கு வேறாய்ச் சுட்டியறியுமாறு இல்லை.

இனி, பொருள்களைச் சுட்டியறிந்த அளவில் நாம் நின்று விடுவதில்லை. அறியப்பட்ட அப்பொருளிடத்தில் சென்று நம் உணர்வு அழுந்துகிறது.நம் உணர்வு அப்பொருளின் வேறாய் நில்லாது அதன் வயப்பட்டு அதனுள் மூழ்கி அதனோடு ஒன்றுகிறது. நுகர்ச்சி என்பதும் அனுபவம் என்பதும் இதுவேயாம்.

நுகர்பவனது உணர்வு நுகரப்படும் பொருளுக்கு வேறாய் நிற்பின் நுகர்ச்சி உண்டாதல் இல்லை. அவ்வுணர்வு நுகரப்படும் பொருளோடு ஒன்றி ஒடுங்கி நின்ற போதே நுகர்ச்சி உளதாகும் என்பது அறியத் தகும்.

மேற்கூறிய முறையில் நாம் அசத்தாகிய உலகப் பொருள்களை அழுந்தி அறிகிறோம்; நுகர்கிறோம்.

இறைவனுக்கு நுகர்ச்சி இல்லை:

இனி இறைவனது நிலையை நோக்குவோம். அவன் அசத்தாகிய பொருள்களைச் சுட்டியறிதல் இல்லை எனப் பார்த்தோம். அவன் எல்லாவற்றையும் தன்னுள் அடங்கக் கொண்டு, எல்லாவற்றினுள்ளும் கலந்து நிற்பவன் ஆதலின் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஒருங்கே அவன் அறிந்து நிற்பான்.

அவ்வாறு அறிந்து நிற்பினும் நம்மைப்போல அறியப்படும் பொருளின்கண் அழுந்தி நில்லான்; அதன் வயப்பட்டு நில்லான். இதுபற்றியே அவனது அறிவு சுதந்திர அறிவு எனப்படுகிறது. அவனது அறிவு நின்றாங்கு அறியும் அறிவு; எதனிலும் தோயாது நிற்கும் அறிவு.

ஆதலின் நுகர்ச்சி என்பதும், அனுபவம் என்பதும் நம்மனோர்க்கு உரியதேயன்றி இறைவனுக்கு அஃது இல்லையாம்.

இதுகாறும் கூறியவற்றால், சுட்டியறிதலும் அனுபவித்தலும் இறைவனுக்கு இல்லை என்பது தெளிவாகும். இதுபற்றியே சத்தே அறியாது என்றார் ஆசிரியர். அதன் பொருள் சத்தாகிய சிவம் எதனையும் சுட்டியறிந்து அனுபவியாது என்பதாம்.

பாரிசேடம்:

இரண்டாம் நூற்பாவின் இரண்டாம் கூறில், பாரிசேடம் (ஒழிபு) என்னும் முறையைக் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். அதனை இங்குப் பயன்படுத்துகிறார் ஆசிரியர். அசத்தாகிய சடப்பொருள்கள் அனுபவித்ததற்குரிய பொருள்களாக உள்ளன. சத்தாகிய சிவமும் இனிய குணங்களையுடைய இன்பப் பொருளாய் அனுபவித்தற்கு உரியதாய் உள்ளது. ஆயின், அசத்தும் சத்தும் ஆகிய அவை ஒன்றனை யொன்று அறிந்து அனுபவியா என்பது தெளிவு. அவ்வாறாயின், அவ்விரண்டனையும் அறிந்து அனுபவிக்கும் பொருள் எது? முப்பொருள்களுள் சத்தாகிய பதியும், அசத்தாகிய பாசமும் அறியா என விலக்கப்பட்டமையால் எஞ்சியுள்ள பசுவாகிய உயிரே அவ்விரண்டனையும் அறிந்து அனுபவிக்கும் என்பது பாரிசேடத்தால் விளங்குகிறது.

கூறுகள்:

இந்நூற்பாவின் பொருளை மூன்று கூறுகளாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர். அக்கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு:

கூறு பொருள்

முதற் கூறு - சத்தின் இயல்பு
இரண்டாம் கூறு - அசத்தின் இயல்பு
மூன்றாம் கூறு - சதசத்தின் இயல்பு

முதற் கூறு

சத்து அசத்தை யறிதல் இல்லை என்பதனை மேற்கோளும் ஏதுவும் அமைத்து நிறுவுகிறார் ஆசிரியர்.

மேற்கோள்

ஈண்டு சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என்றது.

மேற்கோள் விளக்கம்

சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய பாசம் விளங்கித் தோன்றாது என்பது இதன் பொருள்.

நூற்பாவில் சூனியம் என்று குறித்த ஆசிரியர் அதனையே பிரகாசியாது என்று இங்கும் குறிப்பிடுகிறார்; சூனியம் என்பதும், பிரகாசியது என்பதும் ஒரு பொருளில் வந்தன. வேறாய் விளங்கி நில்லாது என்பது அவற்றின்பொருளாகும். குடம், ஆடை, முதலியன இது இது என்று சுட்டியறியுமாறு அவனின் வேறாய் நிற்றல் போல, அசத்தாகிய பாசம் சிவனால் சுட்டியறியுமாறு அவனின் வேறாய் நில்லாது என்பதாம்.

ஏது

மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான்.

ஏது விளக்கம்

என்றும் மாறாது நிலைத்து நிற்பதாகிய சத்து மெய் எனப்படும். சத்தினது அறிவும் மாறுதல் இன்றி ஒரு தன்மைத்தாய் நிற்பது. அது மெய்யுணர்வு எனப்படும். ஏதுவில் மெய் என்றது இம் மெய்யுணர்வையே யாகும்.

ஒரு நிலையாய் நில்லாமல் மாறுதல் அடைவதாகிய அசத்து பொய் எனப்படும். அசத்தை அறிவதாகிய சுட்டறிவு பொய்யுணர்வாகிய சுட்டறிவையே குறிக்கும்.

மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்கும் என்ற ஏதுவின் கருத்து, சத்தினது அறிவாகிய மெய்யுணர்வு-பதி ஞானம் விளங்கப் பெற்ற ஞானியரிடத்தில் பொய்யுணர்வாகிய சுட்டறிவு நிகழ்தல் இல்லை என்பதாகும். இதனைச் சிறிது விளக்குவோம்.

அணைந்தோர் அசத்தை அறிதல் இல்லை

சத்தினது அறிவாகிய பதிஞானத்தை-திருவருளை முற்றப் பெற்ற ஞானியர் அணைந்தோர் எனப்படுவர். அவர்கள் பாசத்தினின்றும் நீங்கிச் சத்தினது அறிவாகிய வியாபக வுணர்வு தம்மிடத்து விளங்கப் பெற்ற நிலையில், அவர்களுக்கு ஒருபோதும் சுட்டறிவு நிகழ்தல் இல்லை. அதனால் அவர்கள் அசத்தாகிய உலகப் பொருள்களைச் சுட்டியறிந்து அவற்றில் அழுந்துவதில்லை. அவர்களுக்கு அசத்தாகிய உலகப் பொருள்கள் வேறாய்ப் புலப்படுவதில்லை. அவர்கள் அசத்தைக் காணாது. சிவம் ஒன்றையே கண்டு கொண்டிருப்பவர் என்பதற்கு அவர்கள் கூறும் அனுபவமொழிகளே சான்றாகும்.

அப்பன் நீ; அம்மை நீ; ஐயனும் நீ;
அன்புடைய மாமனும் மாமியும் நீ;
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ;
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ; (அப்பர் தேவாரம்)

கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ (திருவாசகம்)

என்றாற் போல வரும் திருவாக்குகளைக் காணலாம்.

ஞானசம்பந்தப் பிள்ளையார் எற்புக் குடத்தினின்றும் எழுந்த பூம்பாவையாரிடம் மாயா காரியமாகிய உருவ அழகைக் காணவில்லை என்றும், சிவபெருமானது கருணை வெள்ளத்தையே கண்டார் என்றும் சேக்கிழார் கூறுவர்.

திருவையாற்றில் அப்பர் பெருமான் அனைத்துப் பொருள்களிலும் சிவமுதற்பொருளையே கண்ட காட்சியையும் எண்ணலாம்.

சத்தினது அறிவைப் பெற்றவராகிய அணைந்தோர் அசத்துப் பொருள்களை அறிதல் இல்லையாகிய இவ்வனுபவத்தைக் கொண்டே அச்சத்தும் அசத்தை அறியுமாறு இல்லை என்று நாம் முடிவு செய்யலாம்.

சத்தாகிய சிவம் வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத அதீதப் பொருள் ஆதலின் அதன் இயல்பை எவ்வாறு அறிதல் கூடும் எனில், அதனை அணைந்தோர் இயல்பை அறிதல் வாயிலாகவே அதன் இயல்பை அறிதல் கூடும். எனவே சிவத்தினை அணைந்தோர்க்குச் சுட்டறிவு நிகழ்தல் இல்லை என்பதனைக் கொண்டே அவர்களால் அடையப்பட்ட சிவத்திற்குச் சுட்டறிவு இல்லை என்று நாம் துணியலாம்.

சிவத்தை அணைந்து சிவமாம் தன்மையைப் பெற்றோர் அசத்தைக் காணார் எனவே, அச் சிவமும் அசத்தைக் காணாது என்பது சொல்லாமலே விளங்கும். அது பற்றியே சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என மேற்கோளில் கூறினாராயிற்று.

இனி, சத்தாகிய சிவன் அசத்தை அறியமாட்டான் என்று கூறினால் அஃது அவன் எல்லாவற்றையும் அறிபவன் என்பதனோடு முரணும் அன்றோ என எழும் ஐயத்தை நீக்குதற்குப் பின்வரும் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு

வெண்பா

40. அன்னியம் இலாமை அரற்கு ஒன்று உணர்வு இன்றாம்;
அன்னியம் இலான் அசத்தைக் காண்குவனேல் - அன்னியமாக்
காணான்; அவன்முன் கதிர்முன் இருள்போல
மாணா அசத்து இன்மை மற்று.

இதன் பொருள்:

பசு, பாசங்கள் ஆகிய ஏனைய எல்லாப் பொருள்களும் சிவனிடத்தில் அடங்கியே நிற்பன. ஆகையால் அவனுக்கு வேறாகச் சுட்டியறியும் படியாக நிற்கின்ற பொருள் எதுவும் இல்லை. எல்லாவற்றோடும் ஒன்றாய்க் கலந்து நிற்கின்ற அவன் அசத்தாகிய பொருள்களை அறியக் கருதினானாயின், என்றும் அறியப்பட்ட பொருளாக அறிவானே யன்றி நம்மைப் போல அவற்றைப் புதிதாகச் சுட்டியறியான். அசத்தாகிய அவை கதிரவன் முன் இருள் வேறாக விளங்கி நில்லாமை போல, அவன் முன் விளங்கி நிற்க மாட்டாவாம்.

பதவுரை

அன்னியம் இலாமை - பசு, பாசங்கள் ஆகிய யாவும் வேறு நில்லாது சிவனிடத்தில் அடங்கியே நிற்பன ஆதலால்

அரற்கு ஒன்று உணர்வு இன்றாம் - இது என்று தனக்கு வேறு வைத்துச் சுட்டி உணர நிற்பதாய் யாதொரு பொருளும் இல்லையாம்.

அன்னியம் இலான் - பசு பாசங்களின் வேறாய் நில்லாது அவற்றில் ஒன்றாய்க் கலந்து நிற்கின்ற அம்முதல்வன்

அன்னியமாக் காணான் - (என்றும் அறியப்பட்ட பொருளாக அறிவானேயன்றி) நம்மைப் போல அவற்றைப் புதியனவாகச் சுட்டியறியான். (அஃது எதனால் எனின்)

மாணா அசத்து - நன்மையில்லாத உலகம் (அஃதாவது அவனுக்குப் பயன்தராத உலகம்)

கதிர் முன் இருள் போல - கதிரவன் முன் இருள் விளங்கி நிற்க மாட்டாது அடங்கியிருத்தல் போல

அவன் முன் இன்மை - அவன்முன் விளங்குதல் இன்றி அடங்கி நிற்பது ஆகலான்.

(அசத்தாகிய பாசங்களை இறைவன் உயிர்களின் பொருட்டுத் தன்னுள் வியாப்பியமாகவே அறிவான் என்பதும், அவற்றை அவன் அனுபவியான் என்பதும் இங்குக் கூறப்பட்டன.)

விளக்கம்

இங்கு அசத்து என்றது மாயையின் காரியமாகிய உலகமும் உலகப் பொருள்களும் ஆகும்.

கதிர்முன் இருள்:

கதிர்முன் இருள் என்ற உவமையை எடுத்தாண்ட நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். சூரியவொளிக்கு மறுதலைப் பொருளாக-பகைப் பொருளாக இருப்பது இருள். அது போலச் சத்தாகிய இறைவனுக்கு அசத்தாகிய உலகம் எதிராகிய பகைப் பொருள் என்று கருதி விடுதல் கூடாது.

முதல்வனுக்கு மறுதலைப் பொருளாக இருப்பது ஆணவ மலம் ஒன்றேயாகும். ஆணவ மலம் போல மாயையும் அதன் காரியமாகிய உலகமும் முதல்வனுக்குப் பகைப் பொருள் அல்ல. மாயை முதல்வனுக்குப் பயன்படுகின்ற பரிக்கிரக சத்தியாய் அமையும் என முன்னே கூறியதை நினைவு கூர்தல் வேண்டும். மாயையும் அதன் காரியமும் விளக்கொளி போல நின்று உயிரறிவை விளக்கக் கூடியவை என்பதையும் எண்ணுதல் வேண்டும்.

அவ்வாறாயின், கதிர் முன் இருள் போல என மாயையின் காரியமாகிய உலகத்தை இருளோடு ஒப்பிட்டது ஏன் எனில், கதிர் முன் இருள் வேறாய் நிற்பதில்லை; விளங்காது அடங்கியே நிற்கும். அதுபோல அசத்தாகிய உலகமும் முதல்வனுக்கு வேறாக நிற்பதில்லை; முதல்வனுக்குள் வியாப்பியமாய் அடங்கியே நிற்கும் என்னும் அவ்வளவிற்கே இவ்வுவமையைப் பொருத்திக் கொள்ள வேண்டும். எனவே, கதிர் முன் இருள் என்பது விளங்காது அடங்கி நிற்றல் என்பதை மட்டுமே உணர்த்த வந்த உவமையாகும்.

அசத்தாகிய உலகப் பொருள்களால் இறைவனுக்கு யாதும் பயனில்லை என்பதைத் தெரிவித்தற்கு மாணா அசத்து என்றார். மாணாமை-நன்றாகாமை; இன்பம் ஆகாமை. ஆகவ இறைவன் அவற்றைத் தன் பொருட்டு அறியான் என்பதும், உயிர்களின் பொருட்டே அறிவான் என்பதும் பெறப்படும்.

அவ்வாறு அறியும் போதும் புதிதாகச் சுட்டியறியாது, தன்னுள் வியாப்பியமாகவே அறிவான். அவ்வாறு அறிவது நின்றாங்கு அறிந்து நிற்றல் என்றும், அறிந்தாங்கு அறிதல் என்றும் கூறப்படும்.

இங்ஙனம் இம் முதல் கூறில், சத்து அசத்தையறிந்து அனுபவியாது எனச் சத்தின் இயல்பு உணர்த்தப்பட்டது.

இரண்டாம் கூறு

நூற்பாவில் அசத்து இலது அறியாது என்றதனை விளக்குவதாய் அமைவது இவ்விரண்டாம் கூறாகும். அசத்தாகிய பாசப் பொருள் அறிவற்றது ஆகையால் அது சத்தாகிய சிவத்தை அறிந்து அனுபவியாது என்பது அத்தொடரின் பொருள் என்பதை முன்னே பார்த்தோம்.

தனு கரண புவன போகங்களாகிய உடம்பும், உடம்பிலுள்ள கருவிகளும், உலகமும், உலகப் பொருள்களும் ஆகிய நான்குமே அசத்து எனப்படுமாயினும், இங்கு அசத்து என்று சிறப்பாகக் குறிப்பிடுவது கரணம் எனப்படும் கருவிகளையேயாகும்.

ஏனைய உடம்பும், உலகமும், உலகப் பொருள்களும் அறிவற்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயின் அவை போலன்றிக் கருவிகள் அறிதலாகிய தொழிலைச் செய்கின்றன. கண், செவி முதலிய புறக்கருவிகள் காண்டல், கேட்டல் முதலியவற்றைச் செய்கின்றன. மனம் முதலாக உள்ள அகக்கருவிகள் ஐயுறுதல், சிந்தித்தல், நிச்சயித்தல் முதலிய செயல்களைச் செய்கின்றன. ஆகவே அவற்றை அறிவற்றன என்று கூறுதல் பொருந்தாது என்பர் சைவருள் ஒரு சாரார் (சங்கிராந்தவாத சைவர்.)

அக் கருவிகள் பெத்த காலத்தில் பசு கரணங்களாய் உலகப் பொருள்களை அறியும்; முத்தி காலத்தில் சிவத்தைச் சார்ந்து சிவகரணங்களாய்ச் சிவத்தை யறியும் என்று மேலும் கூறுவர். ஆதலால் அசத்தாகிய கரணம் சத்தாகிய சிவத்தை அறியாது என்றல் பொருந்தாது என அவர் கூறுவர்.

அவர் கூற்றை மறுத்து, அசத்து அறியாது என்பதை நிறுவுதற்கு மேற்கோளும் ஏதுவும் அமைக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோள்

இனி, அசத்தினுக்கு உணர்வின்று - என்றது.

மேற்கோள் விளக்கம்

அசத்தாகிய கரணத்திற்கு அறிவில்லை; அதனால் அது சத்தாகிய சிவத்தை அறியுமாறு இல்லை என்பது பொருளாகும்.

கரணத்திற்கு அறிவில்லை என்னும் இதனை ஒப்புக்கொள்ளாமல் அவர்கள் பின்வருமாறு வழக்கிடுவர்.

ஞானமாவது பாச ஞானம் எனவும், பசு ஞானம் எனவும், பதி ஞானம் எனவும் மூவகையாக வழங்கப்படுகிறது. அவற்றுள் பதி ஞானம் என்பது பதியினது அறிவு என்றும், பசு ஞானம் என்பது பசுவாகிய உயிரினது அறிவு என்றும் பொருள்படும். அவை போலவே பாசமாகிய கருவிகளது அறிவே பாச ஞானம் எனப்படுகிறது. ஆதலால் கருவிகளுக்கு அறிவில்லை என்று கூறுதல் பாச ஞானம் என்னும் வழக்கிற்கு மாறுபட்ட உரையாய் முடியும் என அவர்கள் தடை நிகழ்த்துவர். அத்தடைக்கு ஏதுவால் விடை கூறுகின்றார் ஆசிரியர்.

ஏது

அதுதான் நிரூபிக்கின் இன்றாகலான்

ஏது விளக்கம்

நிரூபித்தலாவது, காரண காரிய முறையில் நன்கு ஆராய்ந்து ஐயத்திற்கு இடமின்றி நிறுவுதல்.

கருவிகளுக்கு அறிவில்லை:

அவ்வாறு ஆய்வு முறையில் நோக்காமல் பொதுவாக நோக்கும்பொழுது கருவிகள் அறிவுடையன போலத் தோன்றும். காட்டாக, கண்களை அறிவுடையன போல வைத்துக் கூறும் முறையைத் திருக்குறளில் காணலாம்.

என் கண்கள் பின் விளையப் போவதை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கின; இன்று கண்ணீர் உகுக்கின்றன. இத்துன்பம் நாமே தேடிக் கொண்ட தாகலின் பொறுத்துக் கொள்ளத்தானே வேண்டும் என்பதை உணராது இக்கண்கள் வருந்துவதனால் என்ன பயன்? என்பது ஒரு தலைவி கூற்று. (குறள்-1172)

பேச்சு வழக்கிலும் மனத்தை அறிவுடையதாக வைத்து, நெஞ்சு அறியப் பொய் சொல்லுகிறான் என்றாற் போலச் சொல்லும் முறையைக் காணலாம்.

இத்தகைய கூற்றுக்களெல்லாம் பொதுவாகச் சொன்னவையேயன்றி ஆராய்ந்து கூறியவையல்ல. உண்மையான் ஆராய்ந்து நோக்குங்கால், கருவிகளுக்கு அறிவில்லை என்பதே முடிவாகும். அதுபற்றியே அசத்தினுக்கு உணர்வு இன்று எனப்பட்டது.

பாச ஞானம் என்பதன் பொருள்:

ஆகவே பொதுவாக உணரும்போது, பாச ஞானம் என்பது பாசமாகிய கருவிகளது அறிவு என்ற பொருளைத் தருவது போலத் தோன்றினாலும், உண்மையாக ஆராய்ந்து நோக்கினால் பாசமாகிய கருவிகளால் உயிருக்கு உண்டாகும் அறிவு என்பதே அதன் பொருளாகும். அதனையறியாது பாசஞானம் என்பதைப் பிறழ உணர்ந்து, பாசமாகிய கருவிகளுக்கு அறிவுண்டு என வழக்கிடுதல் பொருந்தாது.

இதனால், பாசஞானம் என்பது தனியொரு ஞானம் அன்று என்பதும், உண்மையில் அது பசுவினது ஞானமே என்பதும் தெளிவாகும்.

பொதுவாகக் காணும் பொழுது, கருவிகள் அறிவுடையன போலத் தோன்றும் எனவும், ஆராய்ந்து பார்க்கும் பொழுது அறிவில்லனவாய்ப் போகும் எனவும் பார்த்தோம். இங்கே ஓர் ஐயம் எழலாம். ஒரு பொருள் பொதுவகையால் நோக்கிய பொழுது ஒரு வகையாய்த் தோன்றிப் பின்னர் ஆராய்ச்சியில் வேறு வகையாய் முடிதலும் உண்டோ என ஐயுறலாம். அவ்வையத்தை உவமை காட்டி நீக்குதற்கு எடுத்துக் காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு

வெண்பா

41. பேய்த்தேர் நீர் என்று வரும் பேதைக்கு மற்று அணைந்த
பேய்த் தேர் அசத்தாகும் பெற்றிமையின் - வாய்த்ததனைக்
கண்டுணர்வார் இல்வழியிற் காணும் அசத்தின்மை;
கண்டுணர்வார் இல்லதெனக் காண்.


இதன் பொருள்:

பாலை நிலத்தில் நண்பகற் போதில் கடும் வெய்யிலால் கானல் நீர் தோன்றும். அது நீர் நிலை போலத் தென்படும். அவ்வுண்மையை அறியாத பேதை ஒருவன் அதனை நீர் என்றே கருதிப் பருகுவதற்கு நெருங்கிச் செல்லச் செல்ல அவ்விடத்து நீர் இல்லையாகும். அதுபோல ஞானாசிரியரது உபதேச மொழியைப் பெற்றுக் கருவிகளின் இயல்பை உள்ளவாறு உணர்பவர் இல்லாது, ஏனையோர் உள்ள பொழுது அவர்களுக்குக் கருவிகளின் உண்மையியல்பாகிய அசத்தாம் தன்மை தோன்றாது, சத்தாம் தன்மையே தோன்றும். அஃதாவது அக்கருவிகள் அறிவுடையனவாகவே தோன்றும். ஞானசிரியரது அருள் மொழி வாய்க்கப் பெற்று, அக் கருவிகளின் இயல்பை ஆராய்வார்க்கு அவை அறிவற்றவை என்ற உண்மை தெளிவாகும்.

பதவுரை

பேய்த் தேர் - பாலை நிலத்தில் தோன்றுகின்ற கானல் நீரை

நீர் என்று - பருகும் நீர் என்று கருதி

வரும் பேதைக்கு - அதனைப் பருகி நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ள வருகின்ற அறிவிலிக்கு

அணைந்த பேய்த்தேர் - அவன் நெருங்கிச் சென்ற அக் கானல் நீர்

மற்று அசத்து ஆகும் பெற்றிமையின் - நீராகத் தோன்றிய தோற்றம் பொய்யாகி விடும் தன்மை போல

வாய்த்து - நல்லாசிரியனது அருள் கிடைக்கப் பெற்று

அதனைக் கண்டு உணர்வார் இல்வழியில் - அசத்தாகிய கருவிகளின் இயல்பை உள்ளவாறு உணர்பவர் இல்லாமல் உணரமாட்டாத ஏனையோர் உள்ள பொழுது

அசத்து இன்மை காணும் - அக் கருவிகளிடத்தில் சித்துத் தன்மையே காணப்படும். (அஃதாவது, அவை அறிவுள்ளவை போலவே காணப்படும்.)

கண்டு உணர்வார் (உள்வழியில்) - நல்லாசிரியனது அருள் வாய்க்கப் பெற்று அக் கருவிகளின் இயல்பை உள்ளவாறு உணர்பவர் உள்ள பொழுது

இல்லது எனக் காண் - அவற்றினது சித்துத் தன்மை இல்லையாகும். (அஃதாவது, அவை அறிவில்லாதவை என்ற உண்மை புலப்படும்.) இதனை அறிவாயாக.

விளக்கம்

வாய்த்து என்பதற்கு ஞானாசிரியரது உபதேச மொழி வாய்க்கப் பெற்று எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

அசத்தாகிய கருவியினிடத்தில் அறிவாம் தன்மையைக் காண்பதற்குக் கானல் நீரிடத்தில் பருகும் நீரின் தன்மையைக் காணும் நிலை உவமையாயிற்று.

கட்டு நிலையில் உள்ள நாமெல்லாம் ஐம்பொறி, மனம் முதலிய கருவிகளையே நாமாக நினைக்கின்றோம்; அவையெல்லாம் அறிவற்ற சடம் என்பதையும், நாம் அவற்றின் வேறாகிய அறிவுப் பொருள் என்பதையும் உணர்வதில்லை. ஆசிரியரது அருள் மொழியைப் பெற்று ஆராயும் பக்குவம் உடையவருக்கே கருவிகளின் உண்மையியல்பு உள்ளவாறு விளங்கும்.

மேற்கூறிய உவமையைப் பின்வருமாறு பொருத்திக் காட்டலாம்.

உவமை பொருள்

1. நீர் எனக் கருதும் பேதை - பக்குவம் பெறாத உயிர்
2. கானல் நீர் - அசத்தாகிய கருவி
3. நீர் போலத் தோன்றுதல் - அறிவுடையதாகத் தோன்றுதல்
4. ஆராய்ச்சியில் இல்லையாய்ப் போதல் - உபதேசம் பெற்று ஆராய்வார்க்கு அறிவற்றதாய்ப் போதல்

அசத்தினுக்கு உணர்வு இன்று என்பதைத் தெளிந்து, அவற்றைத் தம்மியல்பின் வேறாகக் கண்டு நீங்குவர் திருவருள் உடையோர்.

இவ்வாறு இவ்விரண்டாம் கூறில், அசத்தாகிய கருவிகள் அறிவுடையனவாதல் இல்லை என்பதை விளக்கி, அதனால் அசத்து சத்தை அறியாது என்பதைத் தெளிவுறுத்தினார் ஆசிரியர்.

மூன்றாம் கூறு

முந்திய இரண்டு கூறுகளிலும், சத்தும் அசத்தும் தம்முள் ஒன்று மற்றொன்றனை அறிந்து அனுபவியாது என்பது நிறுவப்பட்டது. அந்த இரண்டு பொருள்களே உள்ளன என்றால், எந்த ஒன்றும் எதற்கும் பயன்படாது என்பதாய் முடியும். ஆகவே அவ்விரண்டனையும் அறிந்து பயன கொள்ளும் பொருள்- அனுபவிக்கும் பொருள் வேறொன்று இருத்தல் வேண்டும். அதுவே ஆன்மாவாம் எனக் கூறி, அதன் இயல்பை வரையறுத்து உணர்த்துதற்கு இம் மூன்றாம் கூறினை அமைக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோள்

இனி, இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா- என்றது

மேற்கோளின் பொருள்

இரு திறன் என்பவை சத்தும், அசத்தும். சத்தாவது சிவம். அசத்தாவது உலகம். இவ்விரண்டனையும் அறிந்து அனுபவிப்பது ஆன்மாவாம். அவ்வான்மா சத்தும் அன்று; அசத்தும் அன்று. அவ்விரண்டும் ஆகாது, அவ்விரண்டின் தன்மையையும் உடையதாய் சதசத்தாய் நிற்கும்.

மேற்கோள் விளக்கம்

சதசத்து:

ஆன்மாவைச் சத்து என்பதா? அசத்து என்பதா? சத்து என்று கொண்டால், அசத்தாகிய உலகத்தை அஃது அறியாது எனல் வேண்டும். மாறாக, ஆன்மா உலகத்தை அறிந்து அனுபவிப்பதாக உள்ளது. ஆகவே அதனைச் சத்து என்றல் பொருந்தாது.

இனி, ஆன்மாவை அசத்து என்று கொண்டால், சத்தை அஃது அறியாது எனல் வேண்டும். மாறாக, முத்தியில் ஆன்மா சத்தாகிய சிவத்தையறிந்து அனுபவிப்பதாக உள்ளது. ஆகவே அதனை அசத்து என்றலும் பொருந்தாது.

இதனால் ஆன்மா சத்தும் ஆகாது; அசத்தும் ஆகாது என்பது விளங்கும்.

ஆன்மா சத்து ஆகாதெனினும் சத்தினின்றும் முற்றிலும் வேறானதன்று; ஒரு வகையில் சத்தாம் தன்மையை உடையது. அதனாலேயே அது சத்தைச் சார்ந்த பொழுது அதனோடு ஒன்றுபட்டு நிற்பதாகிறது.

இனி, ஆன்மா அசத்து ஆகாதெனினும் அசத்தினின்றும் முற்றிலும் வேறானதன்று; ஒருவகையில் அசத்தாம் தன்மையுடையது. அதனாலேயே அஃது அசத்தாகிய உலகத்தோடு ஒன்றுபட்டு நிற்பதாகிறது என்பது விளங்கும்.

சுருங்கக் கூறினால், ஆன்மா சத்து, அசத்து என்னும் இரண்டும் ஆகாமல், ஒரு வகையில் அவ்விரண்டின் தன்மையையும் உடையதாகின்றது என்பது புலனாகும். அது பற்றியே சதசத்து எனத் தனிப் பொருளாய்க் கொள்ளப்படுகின்றது.

சதசத்து என்பதற்கு, சத்தும் ஆகாது அசத்தும் ஆகாது, சத்தோடு கூடியபொழுது சத்தாயும், அசத்தோடு கூடியபொழுது அசத்தாயும் நிற்பதொரு தன்மை என்பது பொருளாகும்.

இவ்விடத்தில் ஓர் ஐயம் எழலாம். சத்துத் தன்மையும், அசத்துத் தன்மையும் தம்முள் மாறுபட்டவை. இரண்டு மாறுபட்ட தன்மைகள் ஒரு பொருளிலே இருத்தல் இயலுமோ என்பதே அவ் ஐயம்.

சதசத்து என்பதற்கு சத்துத் தன்மை, அசத்துத் தன்மை ஆகிய இரு தன்மையும் உடையது என்பது பொருளன்று; இரண்டிற்கும் பொதுவாகிய வேறொரு தன்மை உடையது என்பதே பொருளாகும்.

சத்து, அசத்து ஆகிய இரண்டற்கும் பொதுவாய் நிற்றலின், சத்தோடு கூடியபோது சத்தாம் தன்மையும், அசத்தோடு கூடியபோது அசத்தாம் தன்மையும் உடையதாய் நிற்கிறது. இதனை விளங்கிக் கொண்டால் மேற்குறித்த ஐயம் நீங்கி விடும்.

சார்ந்ததன் வண்ணமாதல்:

மேற்கூறியவற்றால், ஆன்மா தான் சார்ந்த பொருளின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்கும் என்பது விளங்கும். இத் தன்மை சார்ந்ததன் வண்ணம் ஆதல் எனப்படும்.

சார்ந்ததன் வண்ணமாய் நிற்கின்ற பொருள்கள் பல உலகத்தில் உண்டு. காட்டாகப் பளிங்கு, கண் என்பவற்றைக் குறிப்பிடலாம். பளிங்கு தன்னை அடுத்துள்ள பொருளின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்கும் என்பது யாவரும் அறிந்தது. அருகில் நீலமணியிருந்தால் பளிங்கு நீல நிறமாய் விளங்கும். செம்மணியிருந்தால் செம்மை நிறமாய் விளங்கும். கண்ணின் தன்மையும் இத்தகையதேயாகும். கண் இருளில் இருக்கின்றபோது இருளைச் சார்ந்து இருளாய் நிற்கும்; ஒளிவந்த காலத்தில் அவ்வொளியோடு கூடி ஒளியாய் நிற்கும்.

கண்ணும் பளிங்கும் போன்றது ஆன்மா. அசத்தாகிய உடம்பைச் சார்ந்து நிற்கின்ற பெத்த காலத்தில் உடம்பின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்கும். உடம்பின் தன்மையாவன வளர்தல் தேய்தல், விழிப்பு உறக்கம், பிறப்பு இறப்பு முதலியன. உயிருக்கு இவையில்லை. ஆயினும் உடம்போடு கூடியிருப்பதனால் உடம்பின் தன்மைகளாகிய இவற்றைத் தன் தன்மைகளாகக் கொண்டு நிற்கிறது.

பின், சத்தாகிய சிவத்தை உணர்ந்து அதனைக் கூடி நிற்கின்ற முத்திக் காலத்தில் சிவத்தின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்கும். சிவத்தின் நிலைமையாவது, பிறப்பு இறப்பின்றி என்றும் ஒரு தன்மையனாய் நிற்றல். சிவத்தைச் சார்ந்த உயிர் சிவத்திற்குரிய அந் நிலைமையையே தன்னிலைமையாகப் பெற்று இன்புறும். இதுவே சிவமாம் தன்மைப் பெரு வாழ்வு என்பது.

இனி, ஆன்மா சத்தும் அசத்தும் ஆகிய அவ்விரண்டும் ஆகாத வேறொன்று என்பதே மேற்கோளாகும். அக்கருத்து, இரு திறன் அறிவுளது என்ற தொடரை விளக்கினாலே விளங்கிவிடும். ஆதலால் தனியே வேறு ஏதுக் கூறாமல், அத்தொடரின் பொழிப்புரையை மட்டும் தருகின்றார் ஆசிரியர்.

பொழிப்புரை

இவ் விரண்டனையும் அறிவதாய், உபதேசியாய் நின்ற, அவ்விரண்டன்பாலும்
அறிவு உளதாய் உள்ள அதுவே அவ்வான்மாவாம்- என்றது

விளக்கம்

இப் பொழிப்புரையில் மூன்று வாக்கியங்கள் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு தனித்தனியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

1. இவ்விரண்டனையும் அறிவதாய் நின்ற அதுவே அவ்வான்மாவாம்.
2. உபதேசியாய் நின்ற அதுவே அவ்வான்மாவாம்
3. அவ்விரண்டன்பாலும் அறிவு உளதாய் உள்ள அதுவே அவ்வான்மாவாம்.
இவற்றுள், முதல் வாக்கியத்தை முதலில் நோக்குவோம்.

ஆன்மா அசத்தையும் சத்தையும் அறிதல்:

சத்தும், அசத்தும் தம்முள் ஒன்றையொன்று அறிதல் இல்லை எனப் பார்த்தோம். ஆன்மா ஈரிடத்தும் அறிபவனாக நிற்பது அவ்விரண்டும் அல்லாத சதசத்து ஆகிய ஆன்மாவேயாம். அறிபவனை ஞாதா அல்லது ஞாதிரு எனக் குறிப்பிடுதல் உண்டு.

ஆன்மா அறிபவன் எனில், அவனால் அறியப்படும் பொருள்கள் சத்தும் அசத்தும் ஆகிய அவ்விரண்டுமே என்பது விளங்கும். பெத்த காலத்தில், அசத்தாகிய புறப்பொருள்கள்-உலகப்பொருள்கள் அறியப்படும் பொருகளாய் அமையும். முத்தி காலத்தில், உயிர்க்குயிராய் உள் நிற்கும் சத்தாகிய சிவமே அறியப்படும் பொருளாய் நிற்கும். அறியப்படும் பொருளே ஞேயம் எனப்படும். இனி, அறிபவனாகிய ஆன்மா தனது அறிவைக் கொண்டே பொருள்களை அளந்து அறிகின்றான். பொருள்களை அறிவதற்கு அவனது அறிவே கருவியாய் அமைகிறது. அறிதற் கருவியாகிய ஆன்மாவின் அறிவு ஞானம் எனப்படும். எனவே, அறிதலாகிய தொழில் நிகழ்வதற்கு அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற இம்மூன்றும் இன்றியமையாதனவாம். ஞாதிரு, ஞானம், ஞேயம் என்ற இம்மூன்றையும் சேர்த்துக் திரிபுடி என்பர்.

முதல் வாக்கியத்தில் இவ்விரண்டு என்றது சத்து, அசத்து என்பவற்றை. இவ்விரண்டையும் அறிபவன் ஆன்மாவே என்பது உணர்த்தப்பட்டது.

ஆன்மா அசத்தாலும் சத்தாலும் அறிதல்:

இனி, இரண்டாவது வாக்கியத்தை நோக்குவோம். அறிபவன் ஆன்மா எனவும், அறிதற் கருவியாவது அவனது அறிவே எனவும் பார்த்தோம். ஆன்மாவினது அறிவு தானே தனித்து நின்று பொருள்களை அறிய மாட்டாது. ஆன்ம அறிவின் நிலைக்குக் கண்ணை ஒப்பிடுதல் பொருத்தமாகும். காண்பது கண்ணேயாயினும் அது விளக்கொளி அல்லது சூரியவொளி உள்ளபொழுதே காணவல்லதாகும். கண்ணொளி விளங்கிக் காணும் தகுதியைப் பெறுவதற்கு விளக்கொளி அல்லது சூரியவொளி இன்றியமையாது வேண்டப்படும். இன்றியமையாத இத் துணைப் பொருள் இல்லாத பொழுது கண் எதனையும் காணமாட்டாது.

அதுபோல ஆன்மாவினது அறிவு தன்னை விளக்குகின்ற துணைப் பொருள் இல்லாதபொழுது எதனையும் அறிய மாட்டாது. பெத்த நிலையில் அதற்கு இன்றியமையாத் துணைப் பொருள்களாய் உள்ளவை ஐம்பொறி முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக்கருவிகளும், சொற்கள் நூல்கள் போன்றவையும் ஆகும். இக்கருவிகளெல்லாம் அசத்து என்பது சொல்லாமலே விளங்கும். இவற்றின் துணையினாலேயே ஆன்ம அறிவு அசத்தாகிய உலகப் பொருள்களை அறிகின்றது. சுருங்கக் கூறின் பெத்த காலத்தில் ஆன்மா அசத்தாகிய உலகத்தை அசத்தாகிய கருவிகளால் அறிகின்றது எனலாம்.

இனி, முத்தி நிலையில் அறியப்படும் பொருளாய் நிற்பது சத்தாகிய சிவமே எனப் பார்த்தோம். அதனை ஆன்ம அறிவு அறிவதற்கு அசத்தாகிய கருவிகள் துணை செய்யா. சிவனது ஞானமாகிய திருவருளே அதற்குத் துணையாகி நின்று விளக்கும். அத் திருவருள் சத்தேயாகும். எனவே முத்தி காலத்தில் ஆன்மா சத்தாகிய சிவத்தைச் சத்தாகிய திருவருளால் அறிகின்றது எனலாம்.

இதுவரை கூறியவற்றால், ஆன்மா பெத்த காலத்தில் அசத்தாகிய கருவிகள் அறிவிக்க அறியும் என்பதும், முத்தி காலத்தில் சத்தாகிய திருவருள் அறிவிக்க அறியும் என்பதும் விளங்கும். இக் கருத்தையே இண்டாவது வாக்கியம் உணர்த்தி நிற்கிறது. உபதேசியாய் என்பதற்கு அறிவிக்க அறிவதாய் என்பது பொருள்.

ஆன்மா அசத்திலும் சத்திலும் அழுந்துதல்:

இனி, மூன்றாவது வாக்கியத்தின் பொருளைக் காண்போம். ஆன்மாவினது அறிவு அசத்தாகிய உலகப் பொருளை அறிந்த அளவில் நிற்பதில்லை; அறிந்த அப்பொருளிடத்தே அழுந்தி விடுகிறது. அஃதாவது, ஆன்ம அறிவு அப்பொருளின் வேறாய் நில்லாது, அதனுள் மூழ்கி ஒடுங்கி அதுவாய் நிற்கிறது. எடுத்துக்காட்டுக் கூறினால் இது நன்கு விளங்கும்.

நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சியொன்றைக் கூறுவோம். வீட்டிலுள்ளோர் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே அமர்ந்து, அதில் ஓடும் திரைப்படத்தைப் பார்க்கிறார்கள். அவர்களது உணர்வு அப்பொழுது அப்படக்காட்சியோடு ஒன்றி விடுகிறது. அதன் கண்ணே அழுந்தி விடுகிறது. அந்நேரத்தில் திருடர் புகுந்தாலும், வீட்டிலுள்ளவற்றையெல்லாம் எடுத்துச் சென்றாலும் அவர்கள் அறியப்போவதில்லை. அவர்களது அறிவு அவர் வசமாய் நின்றால் அல்லவா அவற்றை யெல்லாம் அறிய முடியும். அதுதான் எதிரில் ஓடும் படக்காட்சியில் மூழ்கி ஒடுங்கிப் போய்விட்டதே. ஆன்ம அறிவு இவ்வாறு ஒரு பொருளில் அழுந்தி நிற்குங்கால், பிற பொருள்களை அறியாது நிற்கும். அழுந்துதல் என்பதை விளக்குவதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேண்டுமோ?

இங்ஙனம், அறியப்படும் உலகப் பொருளில் அழுந்தி நிற்றலே உலக அனுபவம் எனப்படுகிறது.

எனவே, ஆன்மா பெத்த காலத்தில் அசத்தாகிய உலகப்பொருள்களை அசத்தாகிய கருவிகளால் அறிந்து, அவ்வசத்தாகிய பொருளின் கண்ணேயே அழுந்தி நிற்கும். இனி, அசத்தின் தொடர்பு நீங்கிய முத்தி காலத்தில் ஆன்மாவுக்குச் சார்பாய் இருப்பது சத்தாகிய சிவமேயாகும். அந் நிலையில் ஆன்மா சத்தாகிய சிவத்தைச் சத்தாகிய திருவருளால் அறிந்து, சத்தாகிய அச் சிவத்தின் கண்ணே அழுந்தி நிற்கும். இதுவே சிவானுபவம் எனப்படுகிறது. மூன்றாவது வாக்கியத்தில் உள்ள உளதாய் என்பதற்கு அழுந்தி நிற்பதாய் என்பது பொருளாகும்.

இதுகாறும் விளக்கிக் கூறிய மூன்று வாக்கியங்களின் பொருளை, அஃதாவது, பொழிப்புரையின் பொருளைப் பின்வருமாறு அமைத்துக் கொள்ளலாம்.

பெத்தம் முத்தி

1. ஆன்மா அசத்தாகிய உலகத்தையே அறியும் 1. ஆன்மா சத்தாகிய சிவத்தையே அறியும்
2. ஆன்மா அசத்தாகிய கருவிகளால் அறியும் 2. ஆன்மா சத்தாகிய திருவருளால் அறியும்
3. ஆன்மா அசத்தாகிய உலகத்தில் அழுந்தி நிற்கும் 3. ஆன்மா சத்தாகிய சிவத்தில் அழுந்தி நிற்கும்.
இவ்வாறு வகுத்துக் காட்டிய இவ்விரு நிலைகளையும் பின் வருமாறு தொகுத்துச் சுட்டலாம்.
1. ஆன்மா அசத்தை அசத்தால் அறிந்து அவ் அசத்தினிடத்தே அழுந்தி நிற்கும்.
2. ஆன்மா சத்தைச் சத்தால் அறிந்து அச்சத்தினிடத்தே அழுந்தி நிற்கும்.


நூற்பாவிலுள்ள இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா என்ற தொடரையே மேற்கோளாக வைத்துக் கொண்டு, அதன் விளக்கமாகவே பொழிப்புரையை வரைந்தார் எனப் பார்த்தோம்; பொழிப்புரைக்கு மூலம் ஆகிய இருதிறன் அறிவுளது என்ற தொடரை நோக்குவோம். அத்தொடரும் மூன்று வகையாக விரித்துக் கொள்ளும்படி அமைந்து நிற்கிறது.

அவை,

1. இரு திறனையும் அறியும் அறிவுளது
2. இரு திறனாலும் விளங்கும் அறிவுளது
3. இரு திறனிலும் அழுந்தும் அறிவுளது
என்பன.

இவற்றின் பொருள், ஆன்மா அசத்தையும் சத்தையும் அறியக் கூடியதாய் உள்ளது; அசத்தினாலும் சத்தினாலும் அறிவு விளங்கப் பெறுவதாய் உள்ளது. அசத்தினிடத்தும் சத்தினிடத்தும் அழுந்தக் கூடியதாய் உள்ளது என்பதாம்.

இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா என்ற தொடரினாலும், அதன் பொழிப்புரையினாலும் ஆன்மாவினது இயல்பு மூன்றாகும் என்பது விளங்கும்.

1. சத்தும் ஆகாமல், அசத்தும் ஆகாமல் அவற்றின் வேறாய் நிற்றல்.
2. விளக்கும் பொருள் உள்ளபொழுது அறிவு விளங்கியும், அப்பொருள் இல்லாத பொழுது அறிவு விளங்காதும் நிற்றல்.
3. தன் தன்மை தோன்றாமல் சார்ந்ததன் வண்ணமாய் நிற்றல் என்பன.

ஆன்மாவினது உண்மையியல்பு:
இந்நூற்பா ஆன்மாவினது உண்மையியல்பைக் கூறுவது எனத் தொடக்கத்தில் குறிப்பிட்டோம். சத்து, அசத்து என்னும் இரண்டினாலும் விளங்கி, அவ்விரண்டையும் அறிந்து, அவ்விரண்டிலும் அழுந்தி அது அதுவாதல் ஆகிய இதுவே ஆன்மாவினது உண்மையியல்பு எனப்படும் சொரூபலக்கணம் ஆகும். இன்னும் சுருங்கச் சொன்னால், சார்ந்ததன் வண்ணமாதலே உயிரினது உண்மையியல்பாம்.

இனி, ஆன்மா சத்து, அசத்து ஆகிய இரண்டனையும் அறிவது என்பதனை விளக்குவதற்கு முதல் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு-1

வெண்பா

42. அருஉருவம் தான் அறிதல் ஆய்இழை ஆய் ஆன்மா
அருஉருவம் அன்றாகும்; உண்மை-அரு உருவாய்த்
தோன்றி உடன்நில்லாது; தோன்றாது நில்லாது;
தோன்றல் மலர்மணம் போல் தொக்கு.

இதன் பொருள்:

நுண்ணிய நூல்களை ஆராய்வதாகிய ஆன்மா நுண்பொருளாகிய சத்து, பருப்பொருளாகிய அசத்து ஆகிய இரண்டினையும் அறிவதனால் அஃது அவ்விரண்டனுள் ஒன்றாகாது அவற்றின் வேறாம் என்பது விளங்கும்.

இவ்விடத்தில் ஒரு வினா எழும். அவ்விரண்டின் வேறாகிய ஆன்மா தன்னை அறியுமோ? அறியாதோ? என்பதே அவ்வினா. தன்னை அறியும் என்று விடையிறுத்தால், நூற்பாவில் மூன்றையும் அறியும் என்று கூறாமல் இரு திறனை அறியும் என்றது பொருந்தாததாய் முடியும். அது பற்றித் தன்னை அறியாது என்று விடை கூறினால், அறியப்படாத பொருள் இல்பொருளாய்- சூனியமாய் முடியும். எனவே, இவ்விரண்டு விடைகளும் பொருந்தாமையால் வேறு எப்படித்தான் விடையிறுப்பது என்னும் மலைப்பு உண்டாகிறது. அதனைத் தீர்த்துப் பின்வருமாறு விடை கூறுகிறார் ஆசிரியர்.

ஆன்மா தனித்து நில்லாது:

சத்துப் பொருளும், அசத்துப் பொருளும் ஆகிய இரண்டும் தனிப் பொருள்களாய்ப் புலப்பட்டு வேறாய் விளங்கி நிற்கக் கூடியவை. அவை போல ஆன்மா தனிப் பொருளாய்ப் புலப்பட்டு நிற்பதன்று. எவ்விடத்தும் எக்காலத்தும் எந்நிலையிலும் ஆன்மாவுக்குத் தனித்த இருப்பு என்பது இல்லை. சத்து, அசத்து என்பவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பற்றியே நிற்குமன்றித் தனித்து நில்லாது. கேவல நிலையில் ஆன்மா ஆணவ மலத்தைப் பற்றி நின்றது; சகல நிலையில் மாயா காரியமாகிய உடம்பையும் கருவிகளையும் பற்றி நிற்கிறது; சுத்த நிலையில் சிவத்தைப் பற்றி நிற்கக்கூடியது. ஆகவே எந்நிலையிலும் அது தன்னைத் தனியே வைத்து அறிவது இயலாது.

இனி ஆன்மா தன்னை அறியாமலும் போகாது. அது தன்னை எவ்வாறு அறியும். எனில், மலரில் உள்ள மணம் அம்மலருக்கு வேறாகத் தனித்து நிற்பதில்லை. அம்மலரை மோந்து அறியும்போது மணம் அதற்குள்ளே அடங்கித் தோன்றுகிறது. அதுபோல ஆன்மா சத்து, அசத்து என்பவற்றில் ஏதேனும் ஒன்றில் வைத்து அதன் வண்ணமாகவே தன்னை அறியும் என்பதாம்.

பதவுரை

ஆய் இழை - நுண்ணிய நூல்களை

ஆய் - ஆராய்வதாகிய

ஆன்மா - ஆன்மா

அரு - நுண் பொருளாகிய சத்து

உருவம் - பருப்பொருளாகிய அசத்து (என்னும் இரண்டினையும்)

தான் அறிதல் - அறியும் ஆகையால்

அருவுருவம் அன்றாகும் - அஃது சத்தும் ஆகாது; அசத்தும் ஆகாது; அவ்விரண்டின் வேறேயாம்.

(அங்ஙனமாயின், சத்தையும் அசத்தையும் அறிவதாகிய ஆன்மா தன்னை அறியுமோ? அறியாதோ? எனின்)

உண்மை - ஆன்மாவின் உண்மைத் தன்மை

அருவுருவாய் - சத்து, அசத்துக்களைப் போல

தோன்றி உடன் நில்லாது - புலப்பட்டுத் தனியொரு பொருளாய் வேறு நில்லாது.

தோன்றாது நில்லாது - ஒரு வகையாலும் தான் அறியப்படாமலும் போகாது.

தோன்றல் - அது புலப்படுதல்

மலர் மணம் போல் தொக்கு - மலரின் மணம் அம்மலருக்கு வேறாய்த் தனியாகத் தோன்றாமலும், தோன்றாமலே போகாமலும் அம்மலரின் கண் அடங்கித் தோன்றுதல் போன்றதாகும்.

(ஆன்மா சத்து அசத்துக்களை அறியும் பொழுது அவற்றின் வண்ணமாக அவற்றிற்குள் அடங்கித் தோன்றும். எனவே ஆன்மாத் தன்னைச் சத்து அசத்துக்களின் வேறு வைத்துத் தனியாக உணர்தல் இயலாது. அவ்விரண்டனுள் ஒன்றில் வைத்து அது வழியாகவே தன்னை உணரும்.

விளக்கம்:

அரு என்பது சுட்டியறியப்படாத நுண் பொருளாகிய சத்தினைக் குறித்தது. உரு என்பது சுட்டியறியப்படும் பருப் பொருளாகிய அசத்தினைக் குறித்தது.

ஆன்மா சத்து, அசத்து என்பவற்றுள் ஒன்றாயின், மற்றதனை அறியமாட்டாது. மாறாக அவ்விரண்டனையும் அறிவதாயிருத்தலால் ஆன்மா அவ்விரண்டும் ஆகாமை விளங்கும். இது பற்றி முன்னேயும் விளக்கியது நினைவிருக்கலாம்.

ஆன்மா சத்தும், அசத்தும் போலத் தனிப் பொருளாய் அறியப்படுவதில்லை யாகையால், நூற்பாவில் மூன்றனையும் அறியும் என்று கூறாராயினார் ஆசிரியர். அஃது ஒரு வகையில் அறியப்படுவதாயிருத்தலால் அதனை இல்பொருள் என்றோ, சூனியம் என்றோ கூறுதல் பொருந்தாது என்பது புலனாகும்.

ஆன்மா எதனைப் பற்றினாலும் தன் தன்மை தோன்றாமல் அதுவாகவே நிற்பது. கட்டு நிலையில் உடம்பைப் பற்றி நிற்கும் ஆன்மா உடம்பாகவே நிற்கிறது; உடம்பின் வண்ணமாகவே தன்னை அறிகிறது. முக்தி நிலையில் அது சிவமாய் நிற்கும். அவ்வண்ணமாகவே தன்னை உணரும்.

இனி ஆன்மாவினது அறிவு தானேயறியும் சுதந்திர அறிவாய் இல்லாமல், இரண்டினாலும் விளங்கப் பெறும் அறிவாயிருத்தலை விளக்கிக் காட்டுதற்கு இரண்டாவது எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு - 2

வெண்பா

43. மயக்கம் அது உற்றும் மருந்தின் தெளிந்தும்
பெயர்த்து உணர்நீ சத்து ஆகாய்; பேசில்-அசத்தும் அலை;
நீயறிந்து செய்வினைகள் நீயன்றி வேறு அசத்துத்
தானறிந்து துய்யாமை தான்.

இதன் பொருள்:

ஆன்மா தனது அறிவை விளக்கும் துணைப் பொருள் இல்லாத பொழுது அறியாமையாகிய மயக்கத்தை அடைகிறது.; பசி மயக்கத்தைப் போக்கும் உணவு போல அவ்வறியாமையைத் தீர்க்கும் மருந்தாய் உள்ள மாயா கருவிகள் கூடி அறிவை விளக்கியபொழுது பொருள்களை நன்கு அறிகின்றது.

ஆன்மா சத்து ஆகாமை:

இங்ஙனம் அறியாமையையும் அறிவையும் மாறி மாறி அடைந்து, பொருள்களை மறந்தும் நினைந்தும் உணர்ந்து வருகின்ற உனது நிலை எங்கே! எக்காலத்தும் தனது தன்மையில் சிறிதும் வேறுபடுதல் இன்றி, எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்தவாறே அறிந்து நிற்கின்ற சத்தாகிய சிவத்தினது நிலை எங்கே! எனவே, நீ சத்தினது அறிவைப் போன்ற சுதந்திர அறிவை உடையவன் ஆகாய்.

ஆன்மா அசத்து ஆகாமை:

அங்ஙனமாயின் யான் அறிவில்லாத அசத்து ஆவேன் என்று கூறலாம் எனில், அதுவும் பொருந்தாது. எவ்வாறெனில், வினையை அறிவு இன்றிச் செய்தல் இயலாது. நீ தான் அறிந்து வினைகளைச் செய்தாய்; அவ்வினைகளின் பயனையும் நீதான் நுகர்கின்றாய். நுகர்ச்சியும் அறிவு இல்லாமல் நிகழாது அன்றோ? அசத்தாய் உள்ளவை அறிவற்றவை ஆதலின் அவற்றுள் ஒன்றேனும் வினைப்பயனை அறிந்து நுகரும் என்றல் கூடாது. அறிந்து துய்ப்பவன் நீயே யாதலால் நீ அந்த அசத்தும் ஆகாய்.

பதவுரை

மயக்கமது உற்றும் - உனது அறிவை விளக்கும் துணைப்பொருளாகிய கருவிகளோடு கூடாத பொழுது அறியாமையாகிய மயக்கத்தை அடைந்தும்

மருந்தின் தெளிந்தும் - அவ்வறியாமையைத் தீர்க்கும் மருந்தாய் உள்ள மாயா கருவிகள் கூடியபொழுது அவ்வறியாமையின் நீங்கி அறிவை அடைந்தும்

பெயர்த்து உணர் நீ - இவ்வாறு அறியாமையையும் அறிவையும் மாறி மாறிப் பொருந்திப் பொருள்களை மறந்தும் நினைந்தும் உணர்ந்து வருகின்ற ஆன்மாவாகிய நீ

சத்து ஆகாய் - வேறு எதனாலும் தன் தன்மை திரியாமல், எக்காலத்தும் தூய அறிவாய் நின்று எல்லாப் பொருள்களையும் ஒருங்கே அறிந்து நிற்கின்ற சத்தாகிய சிவத்தைப் போன்று ஒரு காலத்திலும் சுதந்திர அறிவை உடையவன் ஆகமாட்டாய்.

(அங்ஙனமாயின் யான் அசத்து ஆவனோ? எனின்)

நீ அறிந்து செய்வினைகள் - உனது வினைகள் யாவும் நீ அறிவின்றிச் செய்தன அல்ல. அறிவில்லாத பொருள் வினையைச் செய்தல் கூடாது. எனவே உனது வினைகளை நீ அறிந்தே செய்தாய்.

நீயன்றி - அறிவுடைய நீயே அவ்வினைகளின் பயனை நுகர்ந்து நிற்கின்றாய். அந்நுகர்ச்சியும் அறிவு இல்லையேல் கூடாது. எனவே அறிந்து நுகர்பவன் நீயேயன்றி

வேறு அசத்துத்தான் அறிந்து துய்யாமை - நின்னின் வேறாய், அசத்தாய், அறிவற்றனவாய் உள்ளபாசம் வினைப்பயனை அறிந்து நுகரும் என்றல் கூடாது. ஆதலின்

பேசில் அசத்தும் அலை - இதனை ஆராய்ந்து கூறுமிடத்து நீ அந்த அசத்தும் ஆகாய்.

விளக்கம்

அறியாமையைப் பசி நோயாகவும், அறியாமையை நீக்கும் ஐம்பபொறி முதலிய கருவிகளை உணவாகிய மருந்தாகவும் உருவகம் செய்தார் ஆசிரியர். உணவு உண்ணும் போது பசி போய் விடுகிறது. அதுபோலக் கருவிகள் செயற்படுங்காலத்தில் அறியாமை நீங்குகிறது. உண்டு தீர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் பசிக்கிறது. அதுபோலக் கருவிகள் செயற்படாமல் மடங்கிய காலத்தில் மீள அறியாமை உண்டாகிறது. இவ்வாறு அறியாமையும் அறிவும் மாறி மாறி வருவனவாகும்.

ஆன்மாவினது அறிவு சிவத்தினது அறிவு போலத் தானே சுதந்திரமாய் விளக்குவதன்று; விளக்கும் பொருள் உள்ளபோது விளங்கியும், அப்பொருள் இல்லாதபோது விளங்காதும் நிற்கும் இயல்பினது என்பது உணர்த்தப்பட்டது.

இனி, ஆன்மாவினது அறிவு இரண்டின்பாலும் உளதாதலை வலியுறுத்துதற்கு மூன்றாவது எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு - 3

வெண்பா

44. மெய்ஞ்ஞானம் தன்னில் விளையாது அசத்தாதல்
அஞ்ஞானம் உள்ளம் அணைதல் காண்;- மெய்ஞ்ஞானம்
தானே உள அன்றே தண் கடல்நீர் உப்புப்போல்
தான் ஏய் உளம் உளவாத் தான்.

இதன் பொருள்:

விளக்கும் பொருள் உள்ளபொழுது விளங்கியும், அப்பொருள் இல்லாத பொழுது விளங்காதும் இவ்வாறு நிலையற்றதாய் உள்ள அறிவை உடையது ஆன்மா.

விளக்கும் பொருளை வேண்டாது, இயல்பாகத் தானே விளங்கி நிற்கின்ற நிலையான அறிவையுடையது சிவம்

அஞ்ஞானம் நிலையில்லாத அசத்து ஆகையால் அது நிலையில்லாத ஆன்ம அறிவையே பற்றி நிற்கும்; நிலைபெற்று விளங்குவதாகிய சிவத்தினது அறிவைப் பற்ற மாட்டாது.

சிவம் என்று உள்ளதோ அன்றே தான் பொருந்துதற்குரிய ஆன்மாவும் உள்ளது. ஆதலால் அஞ்ஞானம் அதனை மட்டுமே பற்றிச் சிவத்தைப் பற்றாதிருத்தல், உப்பு கடலில் உள்ள நீரை மட்டுமே பற்றி அக்கடலைப் பற்றாதிருத்தல் போன்றது.

பதவுரை

அஞ்ஞானம் - அறியாமை
அசத்து ஆதல் - அசத்து ஆகையால்
மெய்ஞ்ஞானந்தன்னில் - அறிவே வடிவாய் உள்ள சத்தாகிய சிவத்தில்
விளையாது - பொருந்தமாட்டாமல்
மெய்ஞ்ஞானம் தானே உள அன்றே - அச்சிவம் என்று உள்ளதோ அன்றே
தான் ஏய் உளம் உளவா - தான் பொருந்துதற்கு உரிய உயிர்கள் உள்ளனவாக
உள்ளம் அணைதல் - அவ்வுயிர்களை மட்டுமே பற்றி நிற்றல்
தண்கடல் நீர் உப்புப் போல் - கடலாகிய வெளியைச் சென்று பற்றமாட்டாது அக்கடல் வெளியில் நிறைந்திருக்கும் நீறைச் சென்று பற்றி நிற்கும் உப்பினது செயல் போன்றதாம்.
காண் - இதனை நீ அறிவாயாக.

விளக்கம்:

மெய்ஞ்ஞானம் என்பது சிவத்தைக் குறித்து நின்றது. அஞ்ஞானம் என்பது அதனை உண்டாக்கும் பொருளாகிய ஆணவ மலத்தைக் குறித்து நின்றது. தண்கடல் நீர் உப்பு என்ற உவமையை முதலில் விரித்து நோக்குவோம். கடல் என்பது நீர்க்கு இடங்கொடுத்து நிற்கும் வெளி. அவ்வெளியோடு இயைந்து நிற்பது நீர். அந்நீரோடு இயைந்து நிற்பது உப்பு. உப்பு பருமையானது. அது பருப்பொருளாகிய நீரைப் பற்றியிருக்குமேயன்றி நுண்ணியதாகிய கடல்வெளியைப் பற்ற மாட்டாது. எனவே, உப்பிற்கும் நீருக்கும் இயைபு உண்டே தவிர உப்பிற்கும் கடலுக்கும் இயைபு இல்லை என்பது புலனாகும். ஆயின் நீருக்குக் கடல் வெளியோடு இயைபு உண்டு; உப்போடும் இயைபு உண்டு. இனி, இவ்வுவமையைப் பொருளோடு பொருத்திப் பார்ப்போம். பதியாகிய சிவம் நுண்ணிய பொருளாய்- பேரறிவாய் இருப்பது. பசுவாகிய ஆன்மா பருப்பொருளாய்- சிற்றறிவாய் இருப்பது. பாசமாகிய ஆணவமலம் பருப் பொருளாய்- அறிவற்றதாய் இருப்பது. பதியாகிய சிவம் ஏனைய பசு பாசங்களைத் தனது வியாபகத்துள் அடங்கக் கொண்டுள்ளது. பதி வியாபகம் என்றும், அதில் அடங்கிய பசு, பாசங்கள் வியாப்பியம் என்றும் கூறப்படும்.

கடல் வெளி போன்றது சிவத்தினது வியாபகம். கடல் வெளியில் அடங்கியுள்ள நீர் போன்று சிவ வியாபகத்தில் அடங்கியிருப்பது ஆன்மா. நீரைப் பற்றியிருக்கும் உப்பைப் போன்று அவ் ஆன்மாவைப் பற்றி நிற்பது ஆணவ மலம்.

உவமை பொருள்

கடல் - பதி
நீர் - பசு
உப்பு - பாசம்

பசு பாசத்தோடும் பதியோடும் இயைபு கொள்ளுதல்:

பாசமாகிய ஆணவ மலம் பருப்பொருள் ஆதலின் அது பருப்பொருளாகிய ஆன்மாவையே பற்றுவதாயிற்று. அது சிவ வியாபகத்தில் உள்ளதாயினும் நுண்ணியதாகிய சிவத்தைப் பற்ற மாட்டாதாயிற்று. எனவே சிவத்திற்கும் ஆணவ மலத்திற்கும் இடையே இயைபு இல்லை என்பது உணர்தற்குரியது.

கடல், நீர், உப்பு என்னும் மூன்றனுள் கடலுக்கும் உப்புக்கும் இடையே இயைபு இல்லாமற் போக, நடுவில் உள்ளநீர் அவ்விரண்டினோடும் இயைதல் போல, பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களில் பதிக்கும் பாசத்திற்கும் இயைபு இல்லா தொழிய, நடுவில் உள்ள பசுவாகிய உயிரே அவ்விரண்டினோடும் இயைபு கொள்வதாயிற்று.

முப்பொருள்களும் அநாதி:

பதியாகிய சிவம் என்று உள்ளதோ அன்றே பசுவாகிய ஆன்மாவும் உள்ளது. அதனைப் பற்றுவதாகிய பாசமும் உள்ளது. ஆகவே முப்பொருள்களும் என்றும் இருப்பவை. எந்த ஒன்றும் எந்த ஒன்றையும் தோற்றுவிக்கவில்லை. எந்த ஒன்றிலிருந்தும் எந்த ஒன்றும் வரவில்லை. அவை மூன்றும் அநாதியாவன என்னும் சைவ சித்தாந்த அடி நிலைக் கருத்து இச்செய்யுளில் கூறப்பட்டிருத்தலைக் காணலாம்.

தண்கடல் நீர் உப்புப்போல் என்னும் உவமையால் ஆன்மாவினது அறிவு இரண்டன்பாலும் உளதாதல் வலியுறுத்தப்பட்டது.

ஏழாம் நூற்பா முடிந்தது.

No comments:

Post a Comment