Friday 18 August 2017

மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!

க்த மார்க்கண்டேயன் என்றதும் நம் நினைவுக்கு வருவது திருக்கடவூர் திருத்தலம்தான். காலனை உதைத்த கோலத்தில்,  கால சம்ஹாரமூர்த்தியாக ஈஸ்வரன் அருளும் இந்தத் தலத்தில்தான், மார்க்கண்டேயனுக்கு சிரஞ்ஜீவி வரமும் கிடைத்தது என்பதை அறிவோம்.

ஆனால், பக்த மார்க்கண்டேயனுக்கு அபயமளித்து, அவன் சிவனருளைப் பெற வழிகாட்டிய திருத்தலங்கள் குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது. மகத்தான அந்த க்ஷேத்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்வோமா?!

மார்க்கண்டேயன் ஆலயம்

சிவபக்தரான மிருகண்டு மகரிஷி தம்பதியினர் நீண்ட காலமாகக் குழந்தையில்லாமல் ஏங்கி, குழந்தைப்பேறு வேண்டி இறைவனைத் தினமும் மனமுருகி வணங்கி வந்தனர்.
பல நாள்கள் அவர்கள்  மனம் உருக பிரார்த்தித்து வந்ததைத் தொடர்ந்து ஒரு நாள் நேரில் தோன்றிய இறைவன், ‘‘உங்களுக்கு 16 ஆண்டுகள் மட்டுமே ஆயுளுடன் இருக்கும் அழகும் அறிவும் நிறைந்த குழந்தை வேண்டுமா, தீய பண்புகளுடன் தீர்க்காயுள் உள்ள குழந்தை வேண்டுமா?’’ என்று கேட்க... 

‘கொஞ்சநாள் இருந்தாலும், கொஞ்சி மகிழ அழகும் அறிவும் கொண்ட குழந்தையே வேண்டும்’ என்று கூறினர். இறைவனும் அங்ஙனமே அருள்பாலித்து மறைந்தார். அதன் பலனாக அந்தத் தம்பதிக்குக் குழந்தையாக மார்க்கண்டேயன் பிறந்தான்.
மார்க்கண்டேயன் பிறந்து வளர்ந்தது திருக்கடையூர் அருகேயுள்ள தி.மணல்மேடு பகுதியில். இன்றைக்கும் இந்தக் கிராமத்தில் மார்க்கண்டேயனுக்கு தனிக்கோயில் உள்ளது. திருக்கடையூரில் ஆயுஷ் ஹோம பூஜைகள் செய்பவர்கள் இந்தக் கோயிலுக்கும் தவறாமல் வந்து செல்கின்றனர். 

கதிராமங்கலம் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயில் 

மார்க்கண்டேயனுக்கு 16 வயது பூர்த்தியானவுடன் பாசக்கயிற்றுடன் யமன் நெருங்க, மார்க்கண்டேயன் உயிர்பிழைக்க முதலில் சென்றது மயிலாடுதுறை அருகேயுள்ள கதிராமங்கலம் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயிலுக்குத்தான்.
இந்த அம்பிகையைத் தன் தாயாகவே எண்ணி அனுதினமும் வழிபடுவானாம் மார்க்கண்டேயன். பதினாறு வயது பூர்த்தியடைந்ததும் காலன் அவனைத் தேடிவந்தபோது மார்க்கண்டேயன் இந்த அம்பிகையின் சந்நிதிக்கு ஓடினான்.
‘‘அம்மா நான் இன்று காலனிடம் சிக்கி உயிரை விடவேண்டியதுதானா? உயிர் பிழைக்க வழியேயில்லையா?” என்று மன்றாடினான்.அவனுக்குக் கதிராமங்கலம் அம்பிகை ஒரு வழிகாட்டினாள்... ‘‘அபயம் என்று வருவோருக்கு அடைக்கலம் தருபவள், மயிலாடுதுறை மயூரநாதருடன் அருளும் அபயாம்பிகை. அவளிடம் செல். உனக்கு நல்வழியைச் சொல்வாள்” என்று அருள்பாலித்தாள் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி. அதன்படியே மயூரநாதர் ஆலயத்துக்குச் சென்றான் மார்க்கண்டேயன். நாமும் அவனுடன் சேர்ந்து பயணிப்போம்.
மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோயில்

மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோயில் குருக்களான பாலாமணி குருக்களிடம், மார்க்கண்டேயன் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிந்தது குறித்து விவரம் கேட்டோம். 

“அபயாம்பாளிடம் அபயம் கேட்டுவந்த மார்க்கண்டேயனுக்கு, ‘நீ உடனே ஆக்கூர் சென்று அங்கு அருளும் தான்தோன்றீஸ்வரரிடம் சரணடைந்து விடு. நீ ஈசனைச் சென்றடையும் வரை, வழியெங்கும் உனக்குப் பாதுகாப்பு இருக்கும் கவலைப்படாதே’ என்று அம்பாள் சொல்கிறாள். மார்க்கண்டேயனுக்கு, இந்தச் செய்தி பெரும் ஆறுதலாக இருந்தது. 

‘‘கிழக்கு வாசலில் யமதர்மன் நிற்கிறாரே அம்மா! நான் என்ன செய்வது? எப்படிச் செல்வது?’’ என்று அவன் கேட்க, ‘‘நீ வடக்கு வாசல் வழியாகச் செல்வாயாக என்று உத்தரவிட்டாள் அபயாம்பாள்’’ என்றார் பாலாமணி குருக்கள்.

அதன்படியே அங்கிருந்து வெளியேறி ஆக்கூர் சென்றான் மார்க்கண்டேயன். வழியில் காளஹஸ்தினாபுரம், மாத்தூர் தலங்களிலும் சிவானுக்ரஹத்தால் காலதேவனிடம் இருந்து தப்பித்தான் மார்க்கண்டேயன்.

காளஹஸ்தினாபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயில் 

இவ்வூரில் சிவனார் அருள்புரிந்த அற்புதத்தை நிகழ்ந்த அற்புதச் சம்பவங்களை மாத்தூர் மகாலிங்க குருக்கள் விவரித்தார்: 

‘‘காளை கத்திய புரம்தான், தற்போது காளஹஸ்தினாபுரம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்கண்டேயனை யமதர்மன் விரட்டிவரும் பாதையின் குறுக்கே, ஆயிரக்கணக்கான காளை மாடுகளை அனுப்பிவைத்தார் ஈசன். இதனால்,  காலதேவனின் வேகம் தடைப்பட்டது. அதற்குள் மார்க்கண்டேயன் மாத்தூரைத் தாண்டிச் சென்றுவிட்டான்’’ - இவ்வூருக்கு அடுத்தபடியாக மாத்தூரை அடைந்தான் மார்க்கண்டேயன்.

மாத்தூர் ஸ்ரீசத்யவாசகர் கோயில் 

‘சத்யவாசகர் பெயரே விசேஷமாக உள்ளதே’ என்ற கேள்வியோடு  இக்கோயிலின் மகாலிங்க குருக்களைச் சந்தித்தோம். அவர் கூறிய விவரம் நம்மைச் சிலிர்க்க வைத்தது.

“மார்க்கண்டேயனுக்கு ‘சத்ய வாசகம்’ கூறி அனுப்பிய ஸ்ரீ சத்ய வாசகர், ‘இந்தப் பக்கம் வந்த சிறுவன் எவ்வழி சென்றான்?’ என்று கேட்ட யமனுக்கு, வழியை மாற்றிச் சொன்னார். அதனால், இவ்வூருக்கு மாற்று ஊர் என்று பெயர் ஏற்பட்டு, பின்னர் அதுவே தற்போது ‘மாத்தூர்’ என்றாகி விட்டது’’ என்று புன்னகைத்தார் மகாலிங்க குருக்கள். அடுத்ததாக மார்க்கண்டேயனின் வழியில் ஆக்கூருக்குப் புறப்பட்டோம்.
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்

ஆக்கூர், தான்தோன்றீஸ்வரர் கோயில் குருக்களான வைத்தியநாத குருக்கள், தான்தோன்றீஸ்வரர் காலனை சம்ஹாரம் செய்த நிகழ்வை விவரித்தார்.

‘‘இக்கோயிலுக்கு விரைந்து வந்த மார்க்கண்டேயன் தல விருட்ச மான கொன்றை மலரைப் பறித்துச் சமர்ப்பித்து, ‘இறைவா! என்னை யமனிடமிருந்து காப்பாற்று’ என்ற விண்ணதிர அபயக்குரல் எழுப்பினான். உடன், லிங்க மூர்த்தத்தின் பாணம் பிளந்து கொன்றைப்பூவின் உருவம்கொள்ள, அதேநேரத்தில் யமன் மார்க்கண்டேயனை நோக்கிப் பாசக்கயிற்றை வீசினான். அந்தக் கயிறு, மார்க்கண்டேயன்மீது மட்டுமின்றி சிவனாரின்மீதும் சேர்ந்து விழுந்தது. இதனால் கடும்கோபம் கொண்ட ஈசன், காலனைக் காலால் உதைத்து வைத்தார். இன்றைக்கும் இக்கோயிலில் லிங்க பாணம் பிளந்த நிலையில் இருப்பதைக் காணலாம். இதற்குச் சான்றாகத் திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில், ‘காலனைக் காலால் கடந்தார் போலும்’ என்றும், திருஞானசம்பந்தர் ‘கொங்குசேர் தன் கொன்றை மாலையினான் கூடற்றடரப் பொங்கினான்’ என்றும் பாடியுள்ளனர். யமனின் தலைவிழுந்த இடம் அருகிலுள்ள ‘தலைச்சங்காடு’ என்பது செவிவழிச் செய்தி’’ என்றார்.
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் 

நிறைவாக திருக்கடவூர் சென்றோம். அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கணேச குருக்கள் அற்புதமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘யமனைச் சம்ஹாரம் செய்ததால் பூவுலகில் மரணங்கள் சம்பவிக்கவில்லை. உயிர்கள் பெருகின. பாரம் தாங்கமுடியாத பூமாதேவி சிவனாரைச் சரணடைந்தாள். அவளின் வேண்டுகோளை ஏற்று காலனை உயிர்ப்பித்தார் சிவனார். யமனை உயிர்ப்பித்து எழுப்பியதால் ‘எழுப்பிவிட்டான் சேரி’ என்று அழைக்கப்பட்ட ஊர், தற்போது ‘எருக்கட்டாஞ்சேரி’ என்ற பெயரில் (திருக்கடவூர் அருகிலுள்ளது) திகழ்கிறது.
மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என சிரஞ்ஜீவி வரம் அளித்து, கால சம்ஹார மூர்த்தியாக சிவனார் அருளும் தலமாதலால்,  ஆயுளை நீடிக்கும் ஆயுஷ் ஹோமத் திருமணங்கள் இக்கோயிலில் தினந்தோறும் நடைபெறுகின்றன’’ என்றார் கணேச குருக்கள்.

மிக அற்புதமான பயணம் இனிதே நிறை வடைந்தது. திருக்கடவூர் அபிராமியம்மையையும் அமிர்தகடேஸ்வரரையும் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்தத் திருத்தலங்களையும் அவசியம் தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்விலும் யம பயம் நீங்கும்; ஆரோக்கியம் செழிக்கும்!

No comments:

Post a Comment