Tuesday 22 August 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 4

[இரும்பூளை] பூளைச் செடி மகிமை!

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல்தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு குருஉருச் சிந்தித்தல் தானே.
திருமந்திரம்
காவிரிக் கரையில் அமைந்த சிவத் தலங்களில் குறிப்பிடத்தக்கது ஆலங்குடி. பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று புராணங்கள் போற்றும் திருக் கருகாவூர், திருஅவளிவன நல்லூர், திரு அரதைப் பெரும்பாழி, திருக்கொள்ளம்புதூர், திரு இரும்பூளை ஆகியவற்றில், திருஇரும்பூளை என்பது ஆலங்குடியைக் குறிக்கும். தேவாரப் பாடல் பெற்ற இந்தத் தலம், நவகிரகத் தலங் களில் குரு (வியாழன்) பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
பாற்கடலைக் கடைந்தபோது உருவான ஆலகால விஷத்தைப் பருகி தேவர்களைக் காத்ததால், ஸ்ரீஆபத் சகாயேஸ்வரர் எனும் திருநாமத்துடன் ஸ்வாமியும், ஸ்ரீஏலவார் குழலியம்மை எனும் திருநாமத்துடன் அம்பாளும் அருளும் அற்புதத் தலம் இது. ஆலம் (விஷம்) உண்ட ஸ்வாமி அருள்பாலிப்பதால் இந்தத் தலத்துக்கும் ஆலங்குடி என்றே பெயர் அமைந்தது.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குடி. இங்குள்ள கோயிலின் ராஜகோபுரம், மூலவரான ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் சந்நிதிக்கு நேராக அமையாமல், குரு பகவான் எழுந்தருளியிருக்கும் தெற்கு திசையில் அமைந்துள்ளது சிறப்பம்சம்!
பிரம்ம புத்திரரான ஆங்கீரச முனிவருக்கும் சிரத்தா தேவிக்கும் மைந்தனாகப் பிறந்தவர் குரு பகவான். கல்வி- கேள்வியில் சிறந்து விளங்கிய இவரை, இந்திரன் தனது அமைச்சராக்கிக் கொண்டதாகவும், தேவர்கள் அனைவருக்கும் இவரே குருவாகத் திகழ்ந்தார் எனவும் புராணங்கள் விவரிக்கின்றன. இவரின் திருவருள் கிடைத்தால் கல்வி ஞானமும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவர்; குபேர யோகத்துடன் வாழ்வர் என்பது ஐதீகம்.
தேவ குரு பிரகஸ்பதியின் திருவருள் பரிபூரணமாகக் கிடைப்பதற்கு சிவகுரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். இறைவனுள் இறைவியும் குடியிருக்கும் அற்புதத் திருவடிவமே ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அம்பிகை வேறு, தட்சிணாமூர்த்தி வேறல்ல; அம்மை- அப்பன் இருவரது சக்திகளும் சங்கமிக்கும் அற்புதமே ஸ்ரீதட்சிணாமூர்த்தம்! அப்பேர்ப்பட்ட மூர்த்தம் குடிகொண்டிருக்கும் ஒப்பற்ற திருத்தலம் ஆலங்குடி.
சரி... தேவ குருவும், அவருக்கும் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் அருளும் இந்தத் திருத்தலத்தின் ஸ்தல விருட்சம் என்ன தெரியுமா?
பூளை எனப்படும் பூளைச்செடி!
7-ஆம் நூற்றாண்டில் இந்தத் தலத்துக்கு வந்த திருஞானசம்பந்தர், இங்கே எங்கு திரும்பினாலும் பூளைச் செடி இருப்பதைக் கண்டார். இந்தத் தலத்தின் இறை வனை பாடித் தொழுதவர்...
'சீரார் கழலே தொழுவீ ரிது செப்பீர்வாரார் முலைமங் கையட்டும் உடனாகிஏரார் இரும்பூளையிடங் கொண்ட ஈசன்காரார் கடல்நஞ்சு அமுதுண்ட கருத்தே...''
- என்று பூளைச் செடியின் சிறப்பையும் போற்றி மகிழ்ந்தார். திருஇரும்பூளை தேவாரத் திருப்பதிகத்தில் அவர் போற்றிக் கொண்டாடிய பூளைச்செடி, இன்றைக்கும் கோயிலின் வெளிப் பிராகாரத்தில் அடர்த்தியாக வளர்ந்து நிற்கிறது.
கணுவுக்குக் கணு மொட்டுக் கட்டினாற் போல், அரும்பிப் பூத்திருக்கும் பூளைப் பூக்கள், வெகு அழகு!
கண்ணில் பூளை வழிந்ததுபோல் இருப்பதால், கண்ணுப் பூளைச் செடி என்றும் சொல்வர். துளசி, தும்பை போலவே, பூளைச் செடியும் மருத்துவ மகத்துவம் வாய்ந்தது! துளசியைப் போலவே, விஷ ஜந்துக்களை அண்டவிடாமல் தடுக்கும் சக்தி, பூளைக்கும் உண்டு. ஆலங்குடியில் விஷ ஜந்துக்கள் கடித்து எவரும் பாதிக்கப்பட்டது இல்லை என்பதற்கு, பூளைச் செடியும் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் பக்தர்கள்.
குழந்தைகளுக்கு நெஞ்சில் கபம் கட்டிக் கொண்டால், மூலிகைச் சாறுடன் பூளைச் செடி இலையின் சாற்றையும் சேர்த்துக் கொடுப்பார்கள். துளசியில் ஒருவித காரம் உண்டு; கசக்கும் தன்மை கொண்டது வேப்பிலை. ஆனால், பூளை இலையின் சாறு இப்படியெல்லாம் இருக்காது!
இன்னொரு விஷயம்... கிராமப்புறங்களில் பொங்கல் விழாவின்போது, கோயில் மற்றும் வீட்டு வாசல்களில், வண்டி- வாகனங்களில்... ஆவாரம்பூ, மாவிலை ஆகியவற்றுடன் பூளைச் செடியையும் தோரணமாகக் கட்டித் தொங்க விடுவர். இதனால், விஷப் பூச்சிகள் ஏதும் ஊருக்குள் அண்டாது; எந்தக் குறையுமின்றி விழாவும் சிறப்பாக நடைபெறும் என்கின்றனர் ஊர்மக்கள்!
இலக்கியங்கள் போற்றும் வெற்றிப் பூ
பிலர் தனது குறிஞ்சிப் பாட்டில், 'குரீ இப் பூளை குறு நறுங் கண்ணி' என்று குறிப்பிடுகிறார். கோட்டை மதிலைத் தாக்க எழுந்த யானை, பூளையடு உழிஞைப் பூவையும் சூடிச் சென்றதாக பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
பூளைப் பூக்களை 'வெற்றிப் பூ' எனக் கொண்டாடுகிறது பிங்கல நிகண்டு. அவ்வளவு ஏன்... திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ஈசனைக் குறிப்பிடும் போது, 'பூளைச் சூடி' என்று பாடுகிறார் கம்பர்.
மஞ்சள் நிறம் பிடிக்கும்!
''நல்ல மனைவி, அருமையான குழந்தைகள், ஆதரவான உறவு, நிலையான கௌரவம், புத்தியில் தெளிவு, தேர்ந்த ஞானம் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கும் வள்ளல், குரு பகவான்!'' 
''குரு பார்த்தாலே கோடிக் குற்றங்கள் நீங்கும் என்பார்கள். அகத்தியர், காகபுஜண்டர், சுகப்பிரம்மர் முதலான ரிஷிகளும் முனிவர்களும் இங்கே குருவருள் பெற்றுள்ளனர். திருமணத் தடையால் அவதிப்படுவோர், வியாழக் கிழமையில் இங்கு வந்து குரு பகவானை வழிபடுவது உத்தமம். அதேபோல, பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும் குரு பகவானை வேண்டினால், குழந்தை வரம் கிடைப்பது உறுதி.
குரு தோஷம் உள்ளவர்கள், இங்கு 24 முறை வந்து, 24 நெய்த் தீபங்களை ஏற்றி வழிபட்டால், தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். தவிர, தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதி, குரு பகவான். எனவே இந்த ராசிக்காரர்கள், குருவுக்கு உகந்த வியாழனன்று வந்து, அவருக்குப் பிடித்த மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சித்து வழிபடுவது விசேஷ நன்மைகளைத் தரும்'' .
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment