|
அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் , வைத்தீஸ்வரன் கோவில்
சுவாமி : அருள்மிகு வைத்தியநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு தையல் நாயகி.
மூர்த்தி : பஞ்சமூர்த்திகள், முத்துக்குமார சுவாமி, அங்காரகன் (செவ்வாய்) தன்வந்திரி, ஜடாயு பத்ரகாளி, அறுபத்து மூவர்.
தீர்த்தம் : சித்தாமிர்த தீர்த்தம்.
தலவிருட்சம் : வேம்பு மரம்.
மூர்த்தி, தலம், விருட்சம், தீர்த்தம் மற்றும் கீர்த்தி என ஐந்து அம்சங்கள் ஆலயத்தில் இருக்க வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் சாலையோரங்களிலும், குறுகலான இடங்களிலும் ஆலயம் அமைப்பது பெருகிவிட்ட தற்காலச் சூழலில், ஸ்தல விருட்சங்களின் முக்கியத்துவம் குறையத் துவங்கியிருப்பது வேதனையான விஷயம்.தெய்வீக மகத்துவம் மட்டுமின்றி தேக ஆரோக்கியத்துக்கும் வழிகாட்டும் ஸ்தல விருட்சங்கள் குறித்து விழிப்பு உணர்வை இன்றைய இளைய தலைமுறையினர் பெறவேண்டும்.
சூரியனார் கோயில் மற்றும் சந்திரன் கோயில் மகிமைகளையும் ஸ்தல விருட்ச சிறப்புகளையும் பார்த்தோம். இந்த இதழில், அங்காரகன் எனப்படும் செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலைப் பார்ப்போம். இந்தத் தலத்தின் விருட்சம் - வேம்பு!
நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது வைத்தீஸ் வரன் கோயில். தீராத நோயுடன் தன்னை நாடி வரும் பக்தர்களின் நோயைத் தீர்த்து வைக்க, ஸ்ரீவைத்தியநாதனாக ஈசன் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற ஆலயம். புள்ளிருக்குவேளூர் எனும் திருநாமமும் இந்தத் தலத்துக்கு உண்டு.
புள் (ஜடாயு), இருக்கு (ரிக் வேதம்), வேள் (முருகப்பெருமான்), ஊர் (சூரியன்) ஆகிய நால்வரும் பூஜித்ததால் புள்ளிருக்குவேளூர் எனப்படுகிறது. ஜடாயுவின் வேண்டுகோளின்படி, அவரது உடலை ஸ்ரீராமன் தகனம் செய்த தலமும் இதுவே. எனவே, 'ஜடாயு குண்டம்' என்ற பெயரும் உண்டு.
ஊரின் நடுவே, அழகுற அமைந்துள்ளது ஆலயம். தருமபுர ஆதின மடத்தின் பராமரிப்பின் கீழ் வரும் இந்த ஆலயத்தில், ஸ்ரீவைத்தியநாதர் மேற்கு நோக்கியும் ஸ்ரீதையல்நாயகி தெற்கு நோக்கியும் அருள்கின்றனர். ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீகற்பக விநாயகர் மற்றும் ஸ்ரீகாளிதேவி ஆகியோர் திசைக்கு ஒருவராக காவல் தெய்வங்களாக காட்சி தருகின்றனர்.
சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப்பெருமான் வேல் வாங்கியது இந்தத் தலத்தில்தான்! இங்கேயுள்ள ஸ்ரீசெல்வமுத்துக்குமார ஸ்வாமிக்கு அர்த்தசாம பூஜையில் சாத்தப்படும், 'நேத்திரப்பிடி' சந்தனப் பிரசாதத்தை அணிந்துகொண்டால், வேண்டிய பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.
அங்காரகன் எனப்படும் செவ்வாய், இங்கே தனிச்சந்நிதியில் அமர்ந்து அருள்கிறார். ஆகவே இது, செவ்வாய் தோஷம் நீக்கும் ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. பார்வதிதேவியைப் பிரிந்த சிவபெருமான், கல்லால மரத்தின் கீழ் தவத்தில் இருந்தபோது, அவரது நெற்றிக் கண்ணில் இருந்து நீர்த்துளி ஒன்று பூமியில் விழுந்தது. அதிலிருந்து பிறந்தவரே அங்காரகர். இதனால் குஜன் (பூமியின் மைந்தன்) என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர், பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து, பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்றும், தட்ச யாகத்தை அழித்த ஸ்ரீவீரபத்திரர், தேவர்களின் வேண்டுகோளை ஏற்று உக்கிரம் தணிந்து அங்காரக வடிவம் பெற்றார் என்றும் செவ்வாய் பகவான் குறித்து பலவாறு சிலாகிக்கின்றன புராணங்கள்.
இறைவனின் திருவிளையாடல்படி வேர்வைத் துளியிலிருந்து அங்காரகன் செந்நிற வடிவத்துடன் வேலுடன் தோன்றி சிவபெருமானை வணங்கினார்.
அப்போது அங்காரகனுடைய மேனியில் செங்குட்டம் இருப்பதைக் கண்டு இந்திராதி தேவர்கள் அஞ்சினார்கள். சிவபெருமான் அங்காரகனிடம் காவிரிக்கரையருகில் வைத்தியநாத தலம் ஒன்று உள்ளது. அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பூசித்து வணங்கினால் உனக்கு ஏற்பட்டுள்ள செங்குட்டம் நீங்கி விடும் என்று கூறினார். அதன்படி அங்காரகன் சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி செங்குட்டம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ வைத்தியநாதரை தினசரி முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்தார். இறைவன் மனமகிழ்ந்து அங்காரகன் முன்தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களைக் கேட்க கூறினார்.
அங்காரகன் இறைவன் திருவடியை மறக்காத மனமும், செவ்வாய்க்கிழமைகளில் வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் சற்புத்திரப் பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். சிவபெருமானும் அங்காரகனுக்கு “செவ்வாய் கிழமைகளில் உன்னை வந்து துதிப்போருக்கு கிரகபீடையை நீக்கி நன்மை செய்யவும், நவக்கிரகங்களில் மூன்றாவதாகத் திகழ்க” என வரம் அளித்தார்.
அங்காரகன் செந்நிறமானவர் ஆதலால், செவ்வாய் என்பர். விண்ணில் செவ்வொளி வீசி விளங்கும் செவ்வாய் கிரகத்தை, 'செம்மீன்' என்கின்றன தமிழ் இலக்கியங்கள். இத்தனை பெருமைகளையும் ஒருங்கே கொண்ட ஆலயத்தின் விருட்சம்- வேம்பு. ஆலயத்தின் வேம்பு மரத்தடியில், ஸ்ரீஆதிவைத்தியநாதர் காட்சி தருகிறார்.
தஞ்சை மாவட்டம் திருக்குடந்தைக் காரோணம்- ஸ்ரீசோமீசர் ஆலயம், திருச்சி சமயபுரம்- ஸ்ரீமாரியம்மன், திருவாட்போக்கி- ஸ்ரீரத்தினேஸ்வரர் ஆகிய ஆலயங்களிலும் வேப்ப மரமே ஸ்தல விருட்சமாக விளங்குகிறது.
விருட்சங்களில் வேம்புக்கு தனி மகத்துவம் உண்டு. அம்மை நோய் வந்தால், வேப்பிலையைப் பரப்பி அவர்களை படுக்கவைப்பதும், அம்மைக் கொப்புளங்கள் மீது வேப்பிலையை அரைத்துப் பூசுவதும், அம்மை பரவாமல் இருக்க, வீட்டு வாசலில் வேப்பிலைக் கொத்துகளை செருகி வைப்பதும் வழக்கம். நச்சுக்கிருமிகளை அழிக்கும் வல்லமையும் வேம்புக்கு உண்டு என உலக அளவிலான ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. வேப்பம்பூ பசியைத் தூண்டும்; நா வறட்சி, வாந்தி, ஏப்பம் மற்றும் வாய்வுப் பிரச்னையைத் தீர்க்கும். அந்தக் காலத்தில் பல வீடுகளில் அடிக்கடி வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுவார்கள். வேப்பெண்ணெய் சிறந்த பூச்சிக்கொல்லி மருந்து. தலையில் உள்ள பொடுகு, சிரங்கு, சொறி, கரப்பான் ஆகியவற்றை தீர்க்கவல்லது. வேப்பங்குச்சியால் பல் துலக்கினால், பல் நோய்கள் வர வாய்ப்பே இல்லையாம்! வந்துவிட்ட பல் நோய்களையும் வேப்பங்குச்சி அடித்து விரட்டும் என்பர். தினமும், வேப்பந்தளிர் இரண்டை மென்று விழுங்க, சர்க்கரைநோயைத் தவிர்க்கலாம்.
கசப்பு சுவையுடைய எந்த உணவும் உடலுக்கு நன்மையைத் தரும் என்றனர் முன்னோர். வேம்பின் கசப்பும் லேசான புளிப்பும் கண்டு கொசுக்கள் தலைதெறிக்க வேறு திசை நோக்கி பறந்துவிடுமாம்! கொசுவில் இருந்து விடுதலை பெற, வீட்டுக்கு ஒரு வேம்பை வளர்ப்போம்!
திருச்சாத்துருண்டையின் மகத்துவம்!
''வைத்தீஸ்வரன் கோயில் திருச்சாத்துருண்டை, அபூர்வமான மருந்து! இங்குள்ள விபூதி குண்டத்தின் விபூதி, சித்தாமிர்தத் தீர்த்த நீர் ரெண்டையும் கலந்து அரைச்சு, மிளகு அளவுல உருண்டையா செஞ்சு, அம்பாளோட திருவடியில வைச்சு, அர்ச்சனை பண்ணிக் கொடுப்போம். இதை உட்கொண்டால், தீராத நோயும் தீரும்!
இங்கே... தனிச்சந்நிதில காட்சி தர்றார் அங்காரகன். மூணு குணங்கள்ல, ராஜச குணத்தைக் கொண்டவர்; பூமிகாரகன்! பெருந் தன்மை, கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை அருள்பவர்! அங்காரகனுக்கு உகந்த நிறம் சிவப்பு. அதனால, சிவப்பு நிற வஸ்திரம், சிவப்பு நிறப் பூக்களை இவருக்கு சார்த்துவது சிறப்பு. அதேபோல, இங்கேயுள்ள ஸ்ரீசுப்ரமணியரை வழிபடுறதும் பவழத்தை மாலையாகவோ மோதிரமாகவோ அணியறதும், சிவப்பு நிற ஆடையை உடுத்துவதும் துவரை தானியத்தையும் சிவப்பு நிறம் கொண்ட காளையையும் தானம் செய்றதும் நல்லது. கிருத்திகை தினங்களிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் விரதம் இருந்தா,செவ்வாய் தோஷம் விலகும்'' .
சேரனுக்கு பனம்பூ; சோழனுக்கு ஆத்திப்பூ; பாண்டியனுக்கு வேப்பம்பூ என அடையாளமாகத் திகழ்ந்தனவாம் விருட்சங்கள். அவர்களின் படை வீரர்களும் அந்தந்தப் பூக்களைச் சூடிக் கொள்வராம்! யுத்தத்தில், எந்த மன்னனின் படைவீரர்கள் என்பதை அறிய இந்தப் பூக்கள் உதவுமாம். 'கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்' என குறுந்தொகையும் 'கருஞ்சினை விறல் வேம்பு' என பதிற்றுப்பத்தும் இதுபற்றி விவரிக்கின்றன.
'பாண்டியன் தலையாலங் காணத்து செருவென்ற நெடுஞ்செழியன், கன்னிப் போருக்குப் புறப்பட்டான். மதுரை மூதூரின் வாயிலில் அமைந்த குளத்தில் நீராடினான்; பொது மன்றத்து வேம்பின் குலையைச் சூடினான்; வெற்றி மடந்தையை நாடிப் புறப்பட்டான்' என்கிறார் இடைக்குன்றூர்க்கிழார் எனும் புலவர். 'பாண்டியன் நெடுஞ் செழியன், போர் முடிந்த இரவில் பாசறையில் புண்பட்டுக் கிடந்த வீரர் களுக்கு ஆறுதல் கூறச் சென்றான். அவன் கையில் வேல் இருந்தது. அதன் உச்சியில் வேப்பிலை செருகப்பட்டிருந்தது' என்கிறது நெடுநல்வாடை.
சுமார் 400 வருடங்கள் வரை முதிர்ந்து வளருமாம் வேம்பு. இந்த மரத்தை கரையான் அரிப்பதில்லை! |
|
|
No comments:
Post a Comment