Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.5

81. சத்திதான் பலவோ? என்னில் தான் ஒன்றே; அரேகமாக
வைத்திடும் காரியத்தால்; மந்திரி ஆதிக்கு எல்லாம்
உய்த்திடும் ஒருவன் சத்தி போல் அரனுடையதாகி;
புத்திமுத்திகளை எல்லாம் புரிந்து அவன் நினைத்த வாறு ஆம்.

அப்படியானால் சத்திகள் பல உளவோ எனக் கேட்பின் அவ்வாறு அன்று. சிவசத்தி ஒன்றே ஆகும். அரசனின் ஆற்றல் ஒன்றே அமைச்சர், படைத்தலைவர் முதலியோரிடத்து அவரவர் தொழிற் பாட்டுக்கு ஏற்ப வேறுபடுவது போல சிவசத்தி ஒன்றே, இறைவனை விட்டுப் பிரிதல் இன்றி உயிர்களுக்கு இம்மை மறுமைப் பயன்களையும் வீடுபேற்றையும் அளித்திடும். இறைவன் நினைந்தவாறே சிவசத்தி தொழிற்படும்.

82. சத்திதன் வடிவு ஏது? என்னில் தடை இலா ஞானம் ஆகும்;
உய்த்திடும் இச்சை செய்தி இவை ஞானத்து உள்வோ? என்னில்
எத்திறம் ஞானம் உள்ளது அத்திறம் இச்சை செய்தி
வைத்தலால் மறைப்பு இல்ஞானால் மருவிடும் கிரியை எல்லாம்.

சிவசத்தியின் வடிவம் யாது எனின் தடையும் வரம்பும் அற்ற ஞானமே சிவசத்தியின் வடிவமாகும். இதுவே பராசத்தி எனப்படும். இந்த ஞானம் உயிர்களின் மலநீக்கத்தின் பொருட்டு ஐந்தொழில் செய்யும் போது அதன் ஒரு கூறு திரோதான சத்தி எனப்படும். விழைவு ஆற்றலும், செயல் ஆற்றலும் என்னும் இவை இரண்டும் ஞானத்தில் தோன்றுவனவோ எனக் கேட்பின் ஞானம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே விழைவும், செயலும் நிகழும் ஆதலால் அவை ஞானத்தினின்றும் வேறுபட்டன அல்ல என்று அறிக.

83. ஒன்றதாய், இச்சா, ஞானக் கிரியைஎன்று ஒருமூன் றாகி
நின்றிடும், சத்தி; இச்சை உயிர்க்கு அருள் நேசம் ஆகும்;
நன்றுஎலாம், ஞான சத்தி யான், நயந்து அறிவன்; நாதன்
அன்று, அருட் கிரியை தன்னால் ஆக்குவன், அகிலம் எல்லாம்,

சத்தியின் வடிவு தடையிலா ஞானம் என்று முந்தியப் பாடலில் குறிக்கப் பட்ட பராசத்தி ஒன்றே ஆகும். ஆயினும் அதன் செயல்பாடு பற்றி அதனை மூன்று என்றும் வகைப்படுத்திக் கூறுவர். அவை முறையே விழைவு, அறிவு, ஆற்றல் என்று பெயர் பெறும். அதன் மேலும் பல திறப்படக் கூறுவதும் உண்டு. இவற்றுள் விழைவு ஆற்றல் என்பது இறைவன் உயிர்களைப் பற்றி நின்ற மலத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்காகக் கொண்ட கருணையே ஆகும். இறைவனுடைய ஞானசத்தி என்பது உயிர்களை உய்விப்பதற்கு உரியனவற்றைத் திருவுளக் குறிப்பால் அறிதலாகும். அருளில் இருந்து மாறுபடாத தனது செயலாற்றலால் இறைவன் உயிர்களை உய்விப்பதற்கான யாவற்றையும் நினைந்த போதே நினைந்தவாறே செய்வான். நன்மை- நன்றெலாம் எனக் கூறப்பட்டது. அதாவது உயிர்களுக்கு நன்மை செய்யும் உத்தி.

84. சீவனும்,இச்சா ஞானக் கிரியையால், சிவனை யொப்பன்
ஆவன்என் றிடின், அ நாதி மலம்இவற் றினைம றைக்கும்;
காவலன் இவன்செய் கன்மத் தளவினில் கொடுப்பக் காண்பன்;
பாவிஆம் புத்தி முத்திப் பயன்கொளும் பண்பிற்று ஆகும்.

உயிர்களுக்கும் விழைவுஆற்றல், அறிவு ஆற்றல், செயல் ஆற்றல் என்ற மூன்றும் உள என்று கூறப்படுகிறது. ஆதலால் அம்மூன்று ஆற்றல்களும் உடைய சிவனை ஒத்தனவே உயிர்களும் என்று கொள்ளலாமோ என்று சிலர் வினவுவர். அவ்வாறு அன்று; உயிர்களுக்கும் இம்மூவகை ஆற்றலும் உளவேனும் அவற்றை உயிர்களைத் தோற்றமில் காலந்தொட்டே பற்றியுள்ள ஆணவ மலம் முற்றிலும் மறைத்து நிற்கும். இது உயிர்களின் கேவல நிலையில் நிகழ்வதாகும். உயிர்களின் வினைப்பயன்களுக்கு ஏற்ப உடல், கருவி முதலியவற்றை இறைவன் கொடுப்ப உயிர்கள் சகல நிலையை அடையும். அப்போது வினைப்பயனுக்கு ஏற்ற விழைவு, அறிவு, ஆற்றல் ஆகியவற்றை உயிர்கள் பெறும். இறைவன் திருவருளால் வீடு பேற்றையும் உயிர்கள் அடையும். எனவே சுத்த நிலையிலும் இறைவன் கொடுப்பவே உயிர்கள் கொள்ளும். இதுவே உயிரின் பண்பு ஆகும்.

85. ஞானமே ஆனபோது சிவன், தொழில் ஞானம், ஒக்கின்
ஈனம்இல் சதாசி வன்;பேர் ஈசன்ஆம், தொழிலது ஏறின்;
ஊனமேல் கிரியை வித்தை; உருத்திரன், இலயம் போகம்
ஆனபேர் அதிகா ரத்தோடு அதிகர ணத்தன் ஆமே.

மேலே கூறப்பட்ட இறைவனின் மூன்று சத்திகளுள்ளே இச்சாசக்தி என்னும் திருவருள் எப்போதும் எவ்விடத்தும் ஒரே தன்மை உடையதாய் விளங்கும். ஞான சத்தியும் கிரியா சத்தியும் என்னும் இவை இரண்டும் தனித்தும் ஒத்தும், கூடியும் குறைந்தும் விளங்குகின்ற நிலையில் ஒவ்வொன்றும் தனித்தனிப் பெயர் பெறும். முற்றிலும் அறிவே வடிவாக இறைவன் நிற்கின்ற நிலை சிவம் என்று பெயர் பெறும். முழுவதும் ஆற்றல் வடிவாகச் செயல்படும்போது சத்தி என்று பெயர் பெறும். ஞானமும் கிரியையும் ஆகிய இரண்டும் ஒத்து நிற்கின்ற நிலை சதாசிவம் எனப்படும். செயல் ஆற்றல் மிகுந்துஞானம் குறைந்து செயல்படும் போது மகேசுவரம் என்ற பெயர் பெறும். செயலாற்றல் குறைந்து அறிவு ஆற்றல் மிகுந்த நிலை சுத்தவித்தை என்று பெயர் பெறும். இந்த நிலைவேறுபாடுகள் ஐந்தும் இலயம், போகம், அதிகாரம் என்று மூன்றாகக் கூறப்பெறும்.

இலயம், போகம், அதிகாரம் என்னும் மூன்றும் இறைவனின் செயல் வேறுபாட்டுக்கு ஏற்ப மூன்றாகக் கூறப்படும் எனினும் அதனால் அவன் விகாரம் அடைவான் அல்லன் என்பது பின்வரும் பாடல்களில் ஆசிரியரால் விளக்கப்படுகிறது.

86. வித்தையோடு, ஈசர், சாதாக் கியம், சத்தி, சிவங்கள் ஐந்தும்
சுத்ததத் துவம்;சி வன்தன் சுதந்திர வடிவம் ஆகும்;
நித்தம் என்று உரைப்பர்? காலம் நீங்கிய நிலைமை யாலே
வைத்திலர், முற்பிற் பாடு; வருவித்தார், கருமத்தாலே.

சுத்தவித்தை, மகேசுவரர், சதாசிவர், சத்தி, சிவம் ஆகிய இவ்வைந்தும் சுத்ததத்துவங்கள் என்றும் கூறப்பெறும். இவை யாவும் சிவபெருமான் தன்வயமாகவே நின்று ஏற்றுக் கொள்ளும் திருவடிவங்கள் ஆகும். அன்றியும் இவை என்றும் அழியாதவை என்றும் பெரியோர் கூறுவர். சுத்த தத்துவமாகிய இவை ஐந்தும் காலம் என்னும் தத்துவம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியனவாகும். எனவே அவை காலதத்துவத்தைக் கடந்தவை என்று கொள்ளப்பெறும். ஆதலால் இவற்றுக்குக் கால வயப்பட்ட முன் பின் என்று வரிசை முறை கூறப்படுவதில்லை. எனினும் ஞானம் கிரியை ஆக இரண்டு சத்திகளும் செயற்படும் முறைபற்றி முன்பின்னாகக் கூறினர். சிவஞான சித்தியார் பகுதி-3

சாதாக்கியம்- சதாசிவம். 87. ஒருவனே, இராவ ண ஆதி பாவகம் உற்றாற் போலத்
தருவன், இவ் உருவம் எல்லாம்; தன்மையும் திரியான் ஆகும்;
வரும்வடிவு எல்லாம், சத்தி சத்திதான் மரமும் காழ்ப்பும்
இருமையும் போல மன்னிச், சிவத்தினோடு இயைந்து நிற்கும்,

நாடகத் தொழில் வல்லவன் ஒருவன் இராவணன் போன்ற பல வேடங்களைத் தாங்கி நாடகங்களில் நடித்தல் கூடும். ஆயினும் அவன் பூண்ட வேடங்கள் யாவும் அவனுடைய இயல்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தா. அதுபோலவே இறைவனும் உயிர்களிடத்துக் கொண்ட பேரருளால் அருவம், உருவம், அருஉருவம் என்னும் வடிவங்களைத் தான் நினைந்தவாறே தரித்துக் கொள்வான். ஆயினும் அவனுடைய தன்மையிலிருந்து சற்றேனும் திரிவான் அலன். இறைவன் கொள்ளுகிற வடிவங்கள் யாவும் சத்தியின் வடிவங்களே. அச்சத்தி, மரமும் அம்மரத்தின் உள்ளே உள்ள வயிரமும் ஒன்றோடு ஒன்று கூடி நீக்கமின்றி நிற்றல் போலச் சிவத்தினோடு இயைந்து நீக்கமின்றி நிற்கும். காழ்ப்பு- மரத்தின் வயிரம். இருமை என்றது இரண்டு என்ற எண்ணைக் குறித்தது.

88. பொன்மை, நீல ஆதி வன்னம் பொருந்திட, பளிங்கு அவற்றின்
தன்மையாய் நிற்கு மாபோல் சத்திதன் பேதம் எல்லாம்
நின்மலன் தானாத தோன்றி நிலைமைஒன் றாயே நிற்பன்;
முன்அருட் சத்தி தன்பால் முகிழ்க்கும்; தான் முளையான் அன்றே.

பொன்மை, நீலம் முதலிய வண்ணங்களைப் பொருந்திய போது பளிங்கு அந்தந்த நிறங்களின் தன்மையையே கொண்டு வேற்றுமை இன்றி நிற்பது போல, இறைவனும் தன் சத்தியின் வேறுபாடுகள்யாவும் தானாகவே தோன்றுமாறு வேற்றுமை இன்றி நிற்பன். அவன் தோன்றும் போதும் அருட்சத்தின் இடமாகவே தோன்றுவானே அன்றித் தானாக வேறு தோன்றுவான் அல்லன்.

பொன்மை- நீலம் என்பன இங்கு நம் முன்னோர்கள் அடிப்படை நிறங்களாகக் கொண்ட ஐந்து நிறங்களைக் குறித்து நின்றன. நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் என்று திருவாசகம் சிவபுராணத்தில் அருளியதையும் இங்கு நினைவு கூர்க.

89. சத்தியும் சிவமும் ஆய தன்மை, இவ் உலகம் எல்லாம்
ஒத்துஒவ்வா ஆணும்பெண்ணும் உணர்குண குணியும் ஆகி,
வைத்தனன்; அவளால் வந்த ஆக்கம்,இவ் வாழ்க்கை எல்லாம்;
இத்தையும் அறியார், பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்.

இவ்வுலகம் முழுவதும் வாழ்வதற்குக் காரணம் இறைவன் சத்தியும் சிவமுமாக வடிவு கொண்டு அருளியமையே ஆகும். உயிர்த் தொகைகள் யாவும் ஆணும் பெண்ணும் என்று இரு வகைப்பட்டன. இவை தம்முள் ஒரு வகையால் ஒத்தும், ஒருவகையால் ஒவ்வாமலும் விளங்குவன. குணமும் குணத்தை உடைய பொருளுமாக இறைவனே வாழவைத்தவன். உயிர்களுக்கு இத்தகைய ஆக்கம் நிறைந்த வாழ்க்கை சிவத்தோடு இயைந்த சத்தியினால் அருளப்பட்டது ஆகும். இதனை அறியாதவர்கள் பீடமும் லிங்கமுமாக விளங்குகின்ற திருமேனி சத்தியும் சிவமும் ஆகும் என்பதனையும் உணர்ந்திலர்.

90. சிவன்- அரு உருவும் அல்லன்; சித்தினோடு அசித்தும் அல்லன்;
பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடு வானும் அல்லன்;
தவம்முதல் யோக போகம் தரிப்பவன் அல்லன்; தானே
இவைபெற இயைந்தும், ஒன்றும் இயைந்திடா இயல்பி னானே.

சிவபெருமானுடைய தன்னியல்பு இன்னது என்று சொல்ல இயலாதது. சிவபிரான் அருவுமல்லன்; உருவுமல்லன்; அருஉருவுமல்லன். அவன் அறிவுடையதாகிய சித்துப் பொருளும் அல்லன். அறிவற்றதாகிய அசத்தின் வடிவினனும் அல்லன். சிவபிரான் படைப்பு முதலிய ஐந்தொழில்களும் இயற்றவானும் அல்லன். உயிர்களுக்கு அறிவுறுத்துவதற்காக யோக வடிவம், போக வடிவம் ஆகியவற்றைத் தரிப்பவனும் அல்லன். சிவபெருமான் உயிர்களின் பொருட்டுப் பொது இயல்பாகிய இவற்றைப் பொருந்தி நின்றானாயினும் உண்மையில் அவற்றோடு சிறிதும் பொருந்தாத தன்னியல்பு உடையவனாவான்.

இறைவனுடைய இயல்பு உண்மை இயல்பு, பொது இயல்பு என்று இரண்டு வகையாகக் கூறப் பெறும். அவை முறையே சொரூப இலக்கணம் என்றும், தடத்த இலக்கணம் என்றும் வழங்கும். உயிர்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டு இறைவன் தானாக மேற்கொள்ளுகிற வடிவங்களைப் பற்றி மட்டிலுமே இதற்கு முன் ஆசிரியர் கூறினார். அது இறைவனது தடத்த இலக்கணம் எனப்படும். சிவபெருமானது உண்மை இயல்பு என்ற சொரூப இலக்கணம் இந்த நூலின் உண்மை அதிகாரத்தில் ஆசிரியரால் விளக்கப்பெறும்.

இரண்டாம் நூற்பா 91. உலகுஎலாம் ஆகி, வேறுஆய், உடனும்ஆய், ஒளிஆய், ஓங்கி,
அலகுஇலா உயிர்கள் கன்மத்து ஆணையின் அமர்ந்து செல்லத்
தலைவனாய், இவற்றின் தன்மை தனக்கு எய்தல் இன்றித் தானே
நிலவுசீர் அமலன் ஆகி, நின்றனன், நீங்காது எங்கும்,

சிவபெருமான் கலப்பினால் உலகு உயிர்கள் அனைத்திலும் தானேயாய் நின்றனன். பொருள் தன்மையால் உலகு உயிர்களுக்கு வேறாகி நின்றனன். உயிர்க்கு உயிராக இருந்து அவற்றைச் சிவபெருமானே இயக்குகின்றான். ஆகையால் அவற்றின் உடனாய் நின்றனன். அந்தந்த உயிர்களின் வழி ஓங்கி நிற்பதாகிய ஒளி நிறைந்த சத்தி வடிவமாகவும் நின்றனன். சிவபிரானது ஆணையினால் வரும் இருவினைகளுக்கு ஏற்ப எண்ணற்ற உயிர்கள் ஐந்தொழிலுக்கு உட்பட்டுப் பிறந்தும், வாழ்ந்தும், இறந்தும் வருகின்ற காலத்துத் தானே தலைவனாய் இருந்து செலுத்துவான். இத்தகைய தன்மை உடைய உலகும் உயிர்களும் அவனை விட்டு நீங்காமல் நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்முதல் இன்றித் தான் இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவனாக நின்றனன். எங்கும் நீங்காது நிறைந்தும் நின்றனன்.

அநாதி முத்த சித்துரு (பாடல் 21) என்று ஆசிரியரால் முன்னர்க் கூறப்பட்ட இறைவன் எதிலும் தோய்வின்றித் தானே ஒளி வடிவாய் நிற்கின்ற தன் உண்மை நிலையில் சிவம் எனப்படுவான். உலகெலாம் ஆகிவேறாய் உடனுமாய் உயிர்களின் வழி நிற்கும் தன்மையில் சத்தி எனப்படுவான். இவ்வாறு ஒருமையில் இருமை தாதான்மியம் என்று பெயர் பெறும். இறைவன் ஐந்தொழில் செய்யும் தன்மையில் பதி எனப் பெயர் பெறுவான். இவ்வியல்பு சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளது. அதனை உணர்த்துவதற்கே இந்நூலாசிரியர் இவ்வாறு பகுத்து ஓதினார் என்பது சிவஞான முனிவரின் உரை விளக்கம். சிவஞான போதத்தின் இரண்டாவது நூற்பாவின் கருத்து இந்நூலாசிரியரால் இப்பாடலில் கூறப்பட்டது. அது போலவே இப்பாடலும் நான்கு கூறுகளை உள்ளடக்கியது.

முதல் அதிகரணம் 92. ஒன்று என மறைகள் எல்லாம் உரைத்திட, உயிர்கள் ஒன்றி
நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவது என்னை? என்னின்,
அன்று; அவை பதிதான் ஒன்றுஎன்று அறையும்; அக்கரங்கள் தோறும்
சென்றிடும் அகரம் போல நின்றனன், சிவனும் சேர்ந்தே.

மறைகள் யாவும் ஆன்மா ஒன்றே என்று கூறுகின்றன. அவ்வாறு இருக்க உயிர்கள் எண்ணிறந்தன என்றும், இறைவன் அவற்றோடு ஒன்றி நிற்பான் என்றும் கூறுவது பன்மைக் கருத்து அன்றோ. இது பொருந்துமோ என்று சிலர் வினவுவர். அவ்வாறு அன்று; மறைகள் எல்லாம் இறைவன் ஒருவனே என்று கூறுகின்றன. உயிர்களை ஒன்று என மறைகள் கூறிற்றல. உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்கள் யாவற்றுடனும் ஒன்றாகியும். அவற்றிலிருந்து வேறாகியும் அவற்றின் உடன் இருந்து இயக்குவதாயும் விளங்கும் அகர உயிர் போலச் சிவபெருமானும் உலகு உயிர்களோடு சேர்ந்து நின்றனன். மறைகள் யாவும் ஆன்மா ஒன்றே எனக் கூறியதற்கு உட்கிடை இறைவன் ஒருவனே என்பதாகும். அகர முதல எழுத்து எல்லாம் எனத் தொடங்கும் திருக்குறளும் அகர உயிர் போல அறிவாகி எனத் தொடங்கும் திருவருட்பயன் பாடலும் இங்கே நினையத்தக்கன.

93. உருவொடு கருவி எல்லாம் உயிர்கொடு நின்று வேறாய்
வருவது போல, ஈசன் உயிர்களின் மருவிட வாழ்வன்;
தரும், உயிர் அவனை ஆகா, உயிரவை தானும் ஆகான்;
வருபவன், இவை, தான் ஆயும் வேறும் ஆய் மன்னி நின்றே.

உயிர் உடம்பையும், ஐம்பொறி முதலிய கருவிகளையும் கொண்டு உடம்பின் உடனாக நிற்பதே எனினும் உடம்பிற்கும் உயிர்க்கும் வேறுபாடு உண்டு. உடம்பைச் செலுத்துவது உயிரே. அதுபோல உயிர்களைச் செலுத்துபவன் இறைவனே. எனினும் உயிர்கள் இறைவனாகா; இறைவனும் உயிர்களாக மாட்டான். இறைவன் அவ்வுயிர்களோடு கலந்து நிற்பான். எனினும் அவற்றிற்கு வேறாகவும் இருப்பான்.

முந்திய பாடலாலும் இப்பாடலாலும் இறைவன் உயிர்களோடு ஒன்றாயும் உடனாயும் வேறாயும் நிற்பான் என்பது ஆசிரியரால் விளக்கப்படுகிறது. மற்றைச் சமயத்தவர் பேதம் (வேறுபாடு) பேதா பேதம் (ஒருவகையால் வேறுபட்டும் ஒரு வகையால் வேறுபடாதும் இருப்பது) அபேதம் (வேறுபாடு அற்றது) என்ற மூன்றில் ஒன்றையே கொள்வர். சைவ சித்தாந்தம் ஒன்றாய் உடனாய் வேறாய் என்ற மூன்று கொள்கைகளையும் ஒரு சேர ஏற்றுக் கொள்ளும்.

உடம்பும் உயிரும் தமக்குள் வேற்றுமை இன்றி நிற்கின்றன. அவ்வாறே இறைவன் உயிர்களோடு ஒன்றாய் நிற்பான் என்பது விளக்கப்பட்டது.

உடம்பும் உயிரும் ஒற்றித்து நின்றாலும் உடம்பு வேறு உயிர் வேறு என்பது தெளிவாக அறியப்படுகிறது. உடம்பு கண்ணுக்குப் புலனாவது. அதற்கு என அறிவற்றது. அழியும் இயல்பு உடையது. இதற்கு மாறாக உயிர் கண்ணுக்குப் புலனாகாதது. தனக்கென ஓர் அறிவுடையது அழிவற்றது. இவ்வாறு இறைவன் வேறாய் நிற்பது விளக்கப்பட்டது.

உயிர் வேறு உடம்பு வேறு எனினும் உயிரோடு கூடினால் அன்றி உடம்புக்குச் செயற்பாடு இல்லை. அது போல இறைவனும் உயிரோடு உடனாய் நின்று செலுத்தினால் அல்லது உயிருக்கும் செயற்பாடு இல்லை. இவ்வாறு இறைவன் உடனாய் நிற்பது விளக்கப்பட்டது.

இக்கருத்தின் விரிவு இந்நூலின் இனிவரும் பகுதிகளில் விளக்கமாகக் கூறப்படும் என்பது பற்றி ஈண்டு விரித்திலர் என்றார் சிவஞான முனிவர்.

இரண்டாம் அதிகரணம் 94. இருவினை இன்பத் துன்பத்து, இவ்வுயிர், பிறந்து இறந்து
வருவது போவது ஆகும்; மன்னிய வினைப்பலன்கள்
தரும், அரன் தரணியோடு தராபதி போலத் தாமே
மருவிடா, வடிவும் கன்ம பயன்களும்; மறுமைக் கண்ணே.

முற்பிறவிகளில் உயிர்கள் ஈட்டிய இருவினைக்கு ஈடாக இந்தப் பிறவியில் இன்ப துன்பங்களை நுகரும். அவ்வாறு நுகரும் காலத்து மேலும் வினைகளைச் செய்யும். இவ்வாறு மேலும் மேலும் வினையை ஈட்டுகிற உயிர்கள் இவ்வுலகத்தில் பிறந்தும் இறந்தும் துறக்க நிரயங்களில் சென்றும் மீண்டும் வரும். வினையின் பயன்களை உயிர்களுக்கு மருத்துவரைப் போலவும் மன்னனைப் போலவும் சிவபெருமானே தனது ஆணையால் கூட்டுவிப்பான். உடம்பும் வினைப்பயன்களும் அறிவற்றன. ஆதலால் அவை தாமாகவே மறுமையில் உயிரை வந்து பொருந்தா. தரணம்- கடத்தல், நோயைக் கடப்பிப்பதனால் மருத்துவனைத் தரணி என்றார். இந்நூலின் 125- வது பாடலில் மருத்துவன் நோய் தீர்க்கும் முறைமை விரித்துக் கூறப்படும். தராபதி- அரசன்.

95. இருவினை என்னை; இன்பத் துன்பங்கள் இயல்பது? என்னின்
ஒருதன்மை இயல்புக்கு உள்ளது; ஒருவனுக்கு இரண்டு செய்தி
வருவது என்? மலரும் தீயும் மருவலின், வாசம் வெம்மை
தருவதுஎன், நீர்என் செய்து? தான் இயல்பு ஆகும் அன்றே.

உலகில் ஒருவனுக்கு இன்பமும் துன்பமும் வருவதற்குக் காரணம் இருவினையின் பயனே என்பது எவ்வாறு பொருந்தும். இன்பமும் துன்பமும் இயல்பாக வருவனவே யன்றி அவற்றுக்கு ஒரு காரணம் கூறுவானேன் என்று சிலர் வினவுவர். ஒரு பொருளின் இயல்பு என்பது ஒரு தன்மையாக இருப்பதன்றி இரு வேறுபட்ட தன்மைகள் ஒரு பொருளுக்கு இருத்தல் இயலாது. அவ்வாறு ஒருவனுக்கே இரண்டு வேறுபட்ட நுகர்வுகள் வருவனவாயின் அவை ஓர் காரணம் பற்றியே வரும்.

நீர் இயல்பாக மணமற்றது. குளிர்ந்தது. நீரோடு மலர் சேர்ந்தால் அந்நீர் மணம் உடையதாகிறது. நீரோடு நெருப்புச் சேர்ந்தால் அது வெப்பம் உடையதாகிறது. இதனால் நீரின் வினைக்கு ஏற்ப மணமும் வெப்பமும் வந்தன என்று கூற முடியுமா. இவை இயல்பு ஆவது போல இன்பமும் துன்பமும் உடம்புக்கு இயல்பே ஆம் என்று அவர்கள் கூறுவர். இதனை அடுத்த பாட்டில் மறுக்கின்றார்.

96. தன்இயல்பு ஒழிய, பூவும் தழலும் வந்து அணைய, நீரின்
மன்னியது இரண்டு செய்தி; வரும்இரு வினையி னாலும்
உன்னிய இன்பத் துன்பம் உறும், உயிர்; உணர்வு இல்லாத
துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே.

நீருக்கு இயல்பாய் உள்ள குளிர்ச்சி மாறிப் பூவும் நெருப்பும் வந்து பொருந்துவதால் அதற்கு மணமும், வெப்பமும் செயற்கையாக உண்டாயின. இன்ப துன்ப உணர்ச்சிகள் அறிவுடையதாகிய உயிருக்கே உளவாகும். அறிவற்ற உடலை இன்பமும் துன்பமும் பொருந்தும் என்பது கூடாது.

97. இம்மையின், முயற்சி யாலே இருநிதி ஈட்டி, இன்பம்
இம்மையே நுகர்வர்; செய்தி இலாதவர் பொருளும் இன்றி
இம்மையே இடர்உ ழப்பர்; வேறுஇரு வினையது உண்டேல்;
இம்மையின் முயற்சி இன்றி எய்திட வேண்டும், இங்கே.

இப்பிறவியிலேயே நல்ல முயற்சி உடையவர். அதனால் பெரும் பொருள் ஈட்டி அதனைக் கொண்டு இம்மையிலேயே இன்பம் துய்ப்பர். ஆள்வினை இல்லாதவர் முயற்சி இல்லாமையினாலே பொருளும் இன்றி இப்பிறவியிலேயே துன்பத்தில் உழல்வர். இதுதான் நியதி. இருவினை உண்டு. எனில் இம்மையிலே எவ்வித முயற்சியும் இன்றிப் பெரும் பொருள் ஈட்டுதல் வேண்டும். அவ்வாறு யாரையும் கண்டதில்லை. எனவே செல்வத்துக்கும் இன்பத்துக்கும் முயற்சியே காரணமாகும். இருவினை காரணமாகாது என்று அவர்கள் மீண்டும் கூறுகிறார்கள். இதனை அடுத்த பாட்டில் மறுக்கின்றார் ஆசிரியர். செய்தி இல்லாதவர் - செயற்பாடு அற்றவர்கள். அதாவது முயற்சியற்றவர்கள்.

98. இருவினைச் செயல்காண்; இம்மை இரும்பொருள் இன்பம் வேண்டி
வருவினை செய்யுங் காலை, மடிவரும்; மடியும் இன்றித்
தருவினை அதனில், அத்தம் தான் அறும்; துயரும் தங்கும்;
ஒருவினை செய்யா தோரும் உடையர் இவ் வுலகத் துள்ளே.

இப்பிறவியில் மிகுந்த பொருளை ஈட்டி இன்பம் பெறுதல் வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒருவன் செயலாற்றும் போது அவனுக்குச் சோம்பல் வருவதைக் காண்கிறோம். அந்தச் சோம்பலினால் அவனுடைய முயற்சியில் தளர்வு வரும். அதுவும் இன்றி முயற்சி பயன்தராமல் பொருள் இழப்பு நேர்வதையும் காண்கிறோம். அதனால் அவன் துயர்படுவதையும் காண்கிறோம். இதற்கு மாறாக எந்த முயற்சியும் செய்யா தார்க்கும் செல்வம் மிகுவதையும் காண்கிறோம். இவற்றால் பொருள் ஈட்டுவதற்கும், இன்பம் துய்ப்பதற்கும் கண்ணுக்குப் புலப்படாத வேறு ஒரு காரணம் உண்டு என்பதை உய்த்து உணர்கிறோம். அதுவே இருவினைப் பயன் என்று அறிக.

உடையார்- செல்வம் உடையார். மடி- சோம்பல் ஆகூழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள், போகூழால் தோன்றும் மடி (குறள் 371) என்பதனை இங்கு நினைவு கூர்க.

99. பேறுஇழவு இன்ப மோடு, பிணிமூப்புச் சாக்காடு என்னும்
ஆறும்முன் கருவுள் பட்டது; அவ்விதி அனுப வத்தால்
ஏறிடும்; முன்பு செய்த கன்மம் இங்கு இவற்றிற்கு ஏது
தேறுநீ- இனிச்செய் கன்மம் மேல்உடற் சேரும், என்றே.

இந்தப் பிறவியில் நிகழ்கின்ற நற்பேறுகளும், இழப்புகளும், இன்பமும், துயரமும், மூப்பினால் வரும் நரை திரையும், இறப்பும், என்னும் இவை ஆறும் ஒரு உயிர் கருவாய்க் கிடந்த போதே அதற்கு உரியனவாக அமைந்து கிடந்தன. அவையே பின்னர் அவ்வுயிர் வாழும் காலத்து அதனை வந்து பொருந்தும். முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனே இங்குக் கூறப்பட்ட ஆறனுக்கும் காரணமாக அமைந்தவை என்பதைத் தேறித் தெளிக. இந்தப் பிறவியில் மீண்டும் ஈட்டப்படும் வினைகள் அவ்வுயிரால் இனிமேல் எடுக்கப்படும் பிறவிகளில் இந்த ஆறுவகை நுகர்வுகளுக்கும் காரணமாக அமையும்.

மாதவச் சிவஞானமுனிவர் சிவஞான சித்தியார் பொழிப்புரையில் மூப்பு என்ற சொல் உயர்வையும், சாக்காடு என்ற சொல் இழிவு என்ற பொருளையும் தருவன என்று உரை வரைந்துள்ளார். அவ்வாறு உரை வரைந்தமைக்கு நான்கு காரணங்கள் காட்டி அமைதியும் கூறினார்.

அவருடைய உரை வருமாறு. ஈண்டு மூப்பு என்றது உயர்ச்சியின் மேற்று. அது விண்ணோர்க்கு எல்லாம் மூப்பாய் என்பதனானும், மூத்த திருப்பதிகம் என்பதனானும் உணர்க.

சாக்காடு போறலின் இழிவைச் சாக்காடு என்று உபசரித்தார். ஏனை மூப்புச் சாக்காடுகள் பேறு இழவு இன்பம் பிணி போலத் தம்முள் மறுதலை ஆகாமையானும் அவற்றின் மறுதலைப் பொருள்களை உடன் கூறாமையானும், இவற்றுள் அடங்குதலின் வேறு கூற வேண்டாமையானும், காலம் பற்றி ஒரு தலையான் வரும் மூப்பின்கண் ஐயம் அறுத்தல் வேண்டாமையானும் அவற்றை உடன் வைத்து எண்ணி உரை செய்தல் பொருந்தாமை அறிக.

100. உடற்செயல் கன்மம்; இந்த உடல்வந்த வாறு ஏது என்னின்
விடப்படும் முன் உடம்பின் வினை இந்த உடல் விளைக்கும்;
தொடர்ச்சியால் ஒன்றுக்கு ஒன்று தொன்று தொட்டு அநாதி- வித்தின்
இடத்தினின் மரம், மரத்தின் வித்தும் வந்து இயையு மாபோல்.

இங்கு ஒரு வினா எழும். கன்மம் எனும் வினையைச் செய்வதற்கு உடல் இன்றியமையாது வேண்டப்படும். எனவே இந்த உடல் எவ்வாறு வந்தது என்பதே வினா. முந்திய பிறப்பில் செய்யப்பட்ட வினைகள் இந்தப் பிறவியில் வருகின்ற உடம்பைத் தோற்றுவிக்கும். அவ்வாறே இந்தப் பிறப்பில் செய்யப்பட்ட வினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமையும். சங்கிலித் தொடர் போல ஒன்றுக்கு ஒன்று தொன்று தொட்டுத் தோற்றமில் காலம் தொடங்கி இவ்வாறு வரும். வித்திலிருந்து மரமும் மரத்திலிருந்து வித்தும் தோன்றுவது போன்றது இத் தொடர்ச்சி.

இவ்வாறு வருவது பிரவாக அநாதி என்று கூறப்படும். அதாவது ஓடுகின்ற வெள்ளநீர் இடம் பெயர்ந்து கொண்டே அந்த இடத்தை மேலும் வரும் நீர் நிரப்பியது போன்ற தொடர்ச்சி. இவ்வாறு விடையிறுப்பதால் வரம்பின்றி ஓடி அநவத்தை என்னும் குற்றம் நிகழும் என்று கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் காணப்படும் பரு உடம்பிற்கு வேறாக நுண் உடம்பு (சூக்கும உடம்பு) ஒன்று உண்டு ஆகையால் என்று சிவஞான முனிவர் விளக்குகிறார்.

No comments:

Post a Comment