Sunday 31 July 2016

ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவெண்காடு

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர், 

ஸ்ரீ வெண்காட்டு நாதர். 

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி

தேவாரப்பதிகம் : திருஞானசம்பந்தர் - 3, திருநாவுக்கரசர் - 2, 

சுந்தரர் - 1



காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோவில் உள்ளே நான்கு பிரகாரங்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் இராஜ கோபுரங்கள் உண்டு. வெளிப் பிரகாரத்திலிருந்து உள்ளே செல்ல இரு கூடகோபுரங்கள் இருக்கின்றன.


சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் பல தானங்களைச் இக்கோவிலுக்கு செய்திருப்பது தெரிய வருகிறது. ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு ஸ்தலத்திற்கு உண்டு.


மூலவர் சுயம்பு வடிவானவர். இங்கும் சிதம்பரம் போன்றே நடராஜர் சபை, ஸ்படிக லிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் 4 முறை அபிஷேகமும் நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறையும் அபிஷேகம் நடைபெறுகின்றன. இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே போன்று இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராஜர் சபைக்கு அருகில் மஹா விஷ்னுவின் சந்நிதி இருக்கிறது.


இங்குள்ள அகோரமூர்த்தி இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு பெற்றவர். பிரம்மாவிடம் பெற்ற வரங்கள் காரணமாக மருத்துவன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியதனால் அவர்கள் திருவெண்காடு வந்து தங்கி இருந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து மேலும் தேவர்களுக்கு துன்பத்தைத் தர ரிஷபதேவர் அசுரனுடன் தேவர்களைக் காப்பாற்ற போரிட்டார். மருத்துவாசுரன் ரிஷபதேவர் மீது மாயச் சூலத்தை ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதையறிந்த இறைவன் சிவபெருமான் கோபமுற்று அவருடைய 5 முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோரமூர்த்தியைக் கண்டவுடன் அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்தான்.


அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து மருத்துவாசுரனை அழித்தநாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 10 மணிக்குமேல் (இரண்டாங்கால முடிவில்) அகோரமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிபாட்டைத் தரிசிக்க வேண்டும். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.


இத்தலத்தில் உள்ள மூர்த்திகள் மூன்று - சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி
இத்தலத்தில் உள்ள சக்திகள் மூன்று - பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை
இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம்
இத்தலத்தில் உள்ள தலவிருட்சங்கள் மூன்று - வடவால், வில்வம், கொன்றை.


இக்கோவிலில் உள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதம் இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த தலங்களில் திருவெண்காடு தலமும் முக்கியமான ஒன்றாகும்.

ஆதி சிதம்பரம்: திருவெண்காடு தலம் ஆதி சிதம்பரம் என்று போற்றப்படுகிறது. நடராச சபை சிதம்பரத்தில் உள்ளது போன்றே செப்பறையில் அமைந்துள்ளது. உள்ளே இருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கும் சிதம்பரத்தில் நடப்பது போன்று நாடொறும் பூசை நடைபெறுகிறது. சிதம்பர ரகசியமும் இங்குள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம், காளி தாண்டவம், கெளரி தாண்டவம், முனி தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க தாண்டவம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம் ஆகிய ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார்.

இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது.

நவக்கிரஹ ஸ்தலம்: திருவெண்காடு நவக்கிரஹங்களில் புதனுக்கு உரிய ஸ்தலமாகும். அம்பாள் பிரம்ம வித்யா நாயகியின் கோவிலுக்கு இடது பக்கத்தில் தனி சந்நிதியில் புத பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புதனின் தந்தையான சந்திரனின் சந்நிதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும் புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. புத பகவானை வழிபட்டால் உடலில் உள்ள நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குதல், கல்வி மேன்மை, நா வன்மை, செய்யும் தொழில் சிறப்பு ஆகிய நலன்கள் உண்டாகும்.இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர்.





நன்மக்கட்பேறு பெற: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகங்கள் ஒன்றின் 2வது பாடலில் இதை குறிப்பிடுகிறார்.





63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெணகாட்டுநங்கை பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவெண்காட்டிற்கு உண்டு. இந்திரன், ஐராவதம், சுவேதகேது, சுவேதன், மகாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர்.


நன்றி www.shivatemples இணையதளத்திற்கு

ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிடைமருதூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிருஹத் சுந்தர குசாம்பிகை, 

ஸ்ரீ நன்முலைநாயகி

தேவாரப்பதிகம் : திருஞானசம்பந்தர் - 6, திருநாவுக்கரசர் - 5, 

சுந்தரர் - 1


காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.

திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீ சைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது.

மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழிபாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.


இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.


அஸ்வமேதப் பிரகாரம்: இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.


கொடுமுடிப் பிரகாரம்: இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.


ப்ரணவப் பிரகாரம்: இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள் திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன.


திருவலஞ்சுழி - விநாயகர்

சுவாமிமலை - முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)

திருவாரூர் - சோமஸ்கந்தர்

சிதம்பரம் - நடராஜர்

ஆலங்குடி - தட்சினாமூர்த்தி

திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்

திருசேய்நலூர் - சண்டிகேஸ்வரர்

சீர்காழி - பைரவர்

சூரியனார்கோவில் - நவக்கிரகம்

தலத்தின் சிறப்பு: திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்து விட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.

அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.

அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.


இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத் தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில் பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தீர்த்தச் சிறப்பு: கோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில் தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்க வைக்கும் செய்தி. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.

இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திர கீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத் தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத் தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

இத்தல விநாயகர் அருள்மிகு மகாலிங்கப் பெருமானைப் பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான் அருள்மிகு ஆண்ட விநாயகர் என்னுந் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார். அகத்திய முனிவர் முதலிய முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொத்த சிறப்புடைய இத்தலத்தில், அம்முனிவர்களின் பொருட்டு அருள்மிகு மகாலிங்கப்பெருமானைக் குறித்து, அம்பிகையானவள் மௌனத்துடன் மூகாம்பிகையாக இருந்து தவம் புரிய, பெருமான் சோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகைக்கும் முனிவர்களுக்கும் காட்சி கொடுத்தருளினார்.


உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும். இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன. இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.



இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் முதலானோர் பாடிப் பரவியுள்ளனர். பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்.

இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன. பட்டிணத்தடிகளாரால் மும்மணிக்கோவை பாடப் பெற்றது.

இத்தலத்தில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்புடையது. சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்துள்ளனர். சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன.

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

ஸ்ரீ காளீஸ்வரர் திருக்கோவில் திருக்கானப்பேர்




இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ காளீஸ்வரர், ஸ்ரீ சோமேஸ்வரர், ஸ்ரீ சுந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொர்ணவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ மீனாட்சி

கோவில் அமைப்பு: இவ்வாலயம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம், மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு கோபுரம் ஆக இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. இவைகளில் சிறிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், பெரிய இராஜகோபுரம் மருது சகோதரர்களாலும் கட்டப்படவையாகும். இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவில் மூன்று இறைவன் சந்நிதிகளைக் கொண்டு தனித்தனியே விளங்குகிறது.


மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் சுவர்ணகாளீசுவரர். இவரே இத்தலத்தின் தேவாரப் பாடல் பெற்ற மூர்த்தியாவார். வலது பக்கத்தில் இருப்பவர் சோமேசுவரர். இடது பக்கத்தில் இருப்பவர் சுந்தரேசர் கோவில் செத்துக்கள் யாவும் சுவர்ணகாளீசுவரர் பெயரில் தான் உள்ளன. விழாக்காலங்களில் சோமேசுவரர் கோவில் மூர்த்திகள் தான் வீதியுலா வருவர். படையல் நிவேதனம் முதலியவைகள் சுந்தரேசுவரருக்குத் தான் நடைபெறும். இவ்வாறு சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இறைவன் சந்நிதிகள் மூன்றும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவி சுவர்ணவல்லி சந்நிதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.


தல வரலாறு: 

சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள். பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற காளையார்கோவில்.

ஐராவதம் வழிபட்டது: இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டது. தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கி தேவலோகம் சென்றது. யானை உண்டாக்கிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு யானை மடு (கஜபுஷ்கரணி) என்று பெயர். இத்தீர்த்தம் என்றும் வற்றாத நிலையில் இருக்கிறது. சதுர வடிவில் உள்ள இந்த தீர்த்தக்குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் அமைந்துள்ளது. இராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. இந்த கஜபுஷ்கரணி தீர்த்தம் கோவிலுக்கு வெளியே கோபுரங்களுக்கு எதிரிலுள்ளது.


இத்தலத்திலுள்ள சிவகங்கை தீர்த்தம் காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். மேலும் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் முதலிய தீர்த்தங்களும் உள்ளன. தலவிருட்சமாக கொக்குமந்தாரை விளங்குகிறது. இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி என்று தலபுராணம் கூறுகிறது.. 

இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பல சிவாலயங்களை தரிசித்து வந்தபோது இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது மற்றொரு சிறப்பம்சம்.


இத்தலத்திலுள்ள பெரிய இராஜகோபுரத்தைப் பற்றி ஒரு வரலாறு உண்டு. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும் மருதுபாண்டிய சகோதரர்களுக்கும் மூண்ட போரில் தப்பித்த மருது சகோதரர்கள் காட்டில் ஒளிந்து இருந்தனர். மருதுபாண்டிய சகோதரர்களைக் கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இந்த பெரிய கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, பின்னர் வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்றனர்.


சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியல் தலத்திற்கு வந்தார். அங்கு இறைவனை வழிபட்டுவிட்டு இரவு தங்கினார். இரவில் அவர் கனவில் காளை வடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் கொண்டு திருமுடியில் சுழியும் அணிந்து காட்சி தந்த இறைவன் "யாம் இருப்பது கானப்பேர்" எனக்கூறி மறைந்தார். கண் விழித்த சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து பதிகம் பாடிப் பரவினார். கானப்பேர் திருத்தலத்தில் காளை வடிவில் குடியிருக்கும் இறைவனே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திருக்காணப்பேர் தற்போது காளையார்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

நன்றி shivatemples இணையதளத்திற்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர் திருக்கோவில் திருநின்றியூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மகாலட்சுமிநாதர், 

ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ லோகநாயகி

மூவர் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் திருநின்றியூர் லக்ஷ்மிபுரீசுவரர் ஆலயமும் ஒன்று. இவ்வாலயம் மூன்று நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தியும், கொடிமரத்து விநாயகரும் இருப்பதைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. அடுத்து பரசுராமர் வழிபட்ட லிங்கமும், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்து நவக்கிரக சந்நிதியும், பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியிலும் உள்ளன. பிரகார வலம் முடித்து, துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டு, துவாரபாலகர்களைத் தொழுது, உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதியும், வலதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன.


தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னி முனிவரும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார்.

பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராம லிங்கமாக காட்சி தருகிறார். ஜமதக்னி முனிவருக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற் பெயருடன் சிறிய பாண வடிவில் காட்சி தருகிறார். அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே தான் இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்திரன், அகத்தியர், பரசுராமர், ஐராவதம், பசு, சோழ மன்னன் ஆகிய பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறுகள் யாவும் பெற்றுள்ளனர்.


சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்கும் வழக்கும் உடையவன் அவ்வாறு தனது படைகளுடன் செல்லும் போது இத்தலம் இருக்கும் காட்டு வழியே தான் தினமும் செல்வான். இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து, இத்தல எல்லையைத் தாண்டியவுடன் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெற, மன்னன் காட்டில் மாடுகளை மேய்ந்து கொண்டிருந்த ஒரு இடையனிடம் இத்தலத்தில் ஏதேனும் விசேஷம் உண்டா எனக் கேட்டான். இடையன் பசுக்கள் இங்கு ஓரிடத்தில் தானாகவே பாலை கறப்பதைக் கண்டதாகக் கூறினான்.


மன்னன் அவ்விடத்தில் நிலத்தைத் கோடாரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது. மன்னன் மேலும் அவ்விடத்தை ஆராய ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அதன் பாணத்தின் மேல் பகுதியில் கோடாரி பட்டு இரத்தம் வருவதையும் கண்டு மிவும் வருத்தம் அடைய, அப்போது அசரீரி மூலம் இறைவன் தான் இருக்குமிடத்தை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்ததாகக் கூறி, இவ்விடத்தில் ஆலயம் எழுப்ப மன்னனுக்கு ஆணையிட்டார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் கோவிலைக் கட்டினான் என்று தல வரலாறு கூறுகிறது. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைப் பார்க்கலாம். இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் எழுந்தருளியுள்ளார். தீப்பந்தம் திரி நின்ற ஊர் ஆனதால் இத்தலம் திரிநின்றஊர் என்று பெயர் பெற்று தற்போது மருவி திருநின்றியூர் என்று வழங்குகிறது.


தேவாரம் பாடப்பட்ட காலத்தில் இத்தலமும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இத்தலம் மூவர் தேவாரப் பாடலும் பெற்ற சிறப்புடையதாகும் இத்தலத்திற்கு அப்பர் பாடிய பதிகம் 1, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் 1, சுந்தரர் பாடிய பதிகங்கள் 2 என 4 பதிகங்கள் உள்ளன. இவை தவிர மற்ற தலப்பதிகங்களிலும், பொது பதிகங்களிலும் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தரரின் இரண்டு பதிகங்களில் ஒன்று இங்கு தரப்பட்டுள்ளது. அதில் முதல் 7 பாடல்களே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 8, 9, 10 பாடல்கள் சிதைந்து போய் விட்டன.


இப்பதிகத்தின் முதல் பாடலில் சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்ததைக் குறிப்பிடுகிறார்.

2-வது பாடலில் 4900 பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசருக்கும், சண்டேசுர நாயனாருக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் அருள் செய்ததை குறிப்பிடுகிறார்.

3-வது பாடலில் இத்தலத்தின் புராணத்தைக் குறிப்பிடுகிறார். பரசுராமர் தனக்கு காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ, 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவருக்கு தன் திருவடியை அளித்த இறைவன் என்று குறிப்பிடுகிறார்.

4-வது பாடலில் பசு ஒன்று தன் மடியாகிய கலசத்திலிருந்து பாலைச் சொரிந்து வழிபட்டு இறைவன் திருவடியை அடைந்ததைக் குறிப்பிடுகிறார்.

5-வது பாடலில் இத்தலத்திலுள்ள இறைவனை இந்திரன் வழிபட அவனுக்கு வான நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை வழங்கியதையும், அகத்தியருக்கு பொதியமலையில் வீற்றிருக்க அருள் புரிந்ததையும் குறிப்பிடுகிறார்.

7-வது பாடலில் துர்வாசர் சாபத்தால் காட்டானையாகி திரிந்த தேவலோக யானை ஐராவதம் இறைவனை வழிபட அதற்கு முன்னை வடிவத்தையும் விண்ணலகம் அடையும் பேற்றையும் வழங்கியதைக் குறிப்பிடுகிறார்.

வைத்தீஸ்வரன்கோயில் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து கோவில் செல்ல பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

நன்றி : shivatemples இணையதளத்திற்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஸ்ரீ பழமலைநாதர் திருக்கோவில் திருமுதுகுன்றம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், 


ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாயகி, 

ஸ்ரீ விருத்தாம்பிகை

திருமுதுகுன்றத்தில் உள்ள சிவாலயம் 4 புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் காண்போரைக் கவரும் விதமாக நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. ஆலயத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் இவ்வாலயத்தில் உள்ளன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது. முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. பாதாள விநாயகர் என்று அழைக்கப்படும்.


இவரை வணங்கினால் எல்லக் குறைகளும் நீங்கி நல்ல வாழ்வு அமையும் என்பதால் பக்தர்கள் இங்கு வந்து இவரை வணங்குகின்றனர். விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோவிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கால பைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்புக் கொண்டது.

ஆகமக் கோவில்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.


28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக் கோயில் என்றும் அழைப்பார்கள்.


இத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் ஆறுமுருகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார்.

பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார்.

தலத்தின் சிறப்பு: இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.


"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்

மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி

ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த

காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."

(கந்தபுராணம் - வழிநடைப்படலம்)

ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும். இந்த புண்ணிய மடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால் அவை கூழாங்கற்களாக மாறிவிடும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும், பிணிகள் யாவும் அகன்று சித்தி அடைவர் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.


குருநமசிவாயர் என்னும் மகான் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற போது வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை துதித்து

"நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி

என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற

நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி

மலைக் கிழத்தி சோறு கொண்டு வா” 

என்று பாடினார். பெரிய நாயகி, முதியவடிவில் எதிரே தோன்றி "என்னைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்?" கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர முடியும் என்று கேட்க, குருநமசிவாயர்

"முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே

பத்தர் பணியும் பதத்தாளே - அத்தன்

இடத்தாளே முற்றா இளமுலை மேலார

வடத்தாளே சோறு கொண்டு வா” 

என்று பாடினார். அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இவ்வாலயத்தில் இளமை நாயகிக்குத் (பாலாம்பிகை) தனிக்கோயில் உள்ளது.

தேவாரப் பாடல்களில் திருமுதுகுன்றம் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 கி.மி. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் இருந்து விருத்தாசலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

நன்றி : shivatemples இணையதளத்திற்கு



ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருமறைக்காடு


இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன், 

ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள், 

வேதநாயகி

வேதங்கள் வணங்கிய திருத்தலம். சப்த விடங்கத் திருத்தலங்களுள் ஒன்று. தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார்.


இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள்.

துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.


இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது. இராமர் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால் இத்தலத்திலுள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி கோவிலின் மேற்கு வெளிப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சந்நிதிக்கு கொடிமரமும் உள்ளது. இதற்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது.

இத்தலத்தில் உள்ள இந்த முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர். இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.

இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம்.

கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் விசேஷமாக கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.


ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு.

அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.