Wednesday, 23 August 2017

ஸ்ரீஅவிநாசியப்பரே போற்றி..!



'நீர்ஏறு நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியைப்
போர்ஏறு அதுஏறியைப் புக்கொளியூர் அவிநாசியைக் 
கார்ஏறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய 
சீர்ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே!’.
என்று பாடியுள்ளார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அவர் சொன்னது போலவே, அருளை அள்ளி வழங்கும் தந்தையாகவும் கருணையை வாரி வழங்கும் தாயாகவும் திகழ்கின்றனர், ஸ்ரீஅவிநாசியப்பரும் ஸ்ரீகருணாம்பிகையும். அதனால்தான் தாயை முன்னிறுத்தி இந்தக் கோயிலை 'கருணையாத்தாள் கோயில்’ என அழைக்கிறார்கள். கொங்கு நாட்டு மக்களுக்கெல்லாம் இவளே ஆத்தாள். கருணையாத்தாள்!
திருப்பூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவிலும், கோவையில் இருந்து சுமார் 43 கி.மீ. தொலைவிலும் உள்ளது அவிநாசி. புராண காலத்தில் திருப்புக்கொளியூர் என்றும் தட்சிண காசி என்றும் போற்றப்பட்டுள்ளது அவிநாசி திருத்தலம். அவிநாசி என்றால், அசைக்க முடியாத பலம் வாய்ந்தது, அழிக்க முடியாத சக்தி கொண்டது என்று பொருள். சர்வ வல்லமையைக் கொண்ட ஸ்ரீஅவிநாசியப்பர், இங்கே சகல பாவங்களையும் அநீதிகளையும் அழிப்பவராக, அகிலத்து மக்களை அரவணைப்பவராக எழுந்தருளி இருக்கிறார்.  
இந்தக் கோயில் தலபுராணம் சொல்லும் ஓர் அற்புதத் தகவலை இனி பார்ப்போம்.
சுந்தரமூர்த்தி நாயனார், தன் தோழரான சேரமான் பெருமானைச் சந்திக்கச் சென்றார். அப்போது, அவிநாசி தலத்துக்கும் வந்தவர், வழியில் ஒரு தெருவைக் கடக்கும்போது, எதிரெதிர் வீடுகளில் இருந்து ஒன்றுக்கொன்று மாறாக எழுந்த சத்தத்தைக் கேட்டார். 'என்ன இது?’ என்று ஆச்சரியத்துடன் விசாரித்தார்.
சில வருடங்களுக்கு முன்பு, சம வயது கொண்ட இரண்டு சிறுவர்கள் அருகில் உள்ள குளத்துக்கு நீராடப் போனார்களாம். மகிழ்ச்சியும் குதூகலமுமாக குளித்துக் கொண்டிருந்தபோது, முதலை ஒன்று பாய்ந்து வந்து ஒரு சிறுவனை விழுங்கிவிட்டது. தப்பிப் பிழைத்த மற்றொரு சிறுவனுக்கு இன்று உபநயனம். அந்த வீட்டிலிருந்து மங்கல ஓசை கேட்கிறது. 'என் மகன் உயிரோடு இருந்திருந்தால், அவனுக்கு இந்நேரம் உபநயனம் பண்ணிப் பார்த்திருப்போமே...’ என்று அழுகைக் குரல் எதிர் வீட்டில் இருந்து கேட்கிறது. இறந்த சிறுவனின் வீடு அது.  
இந்த விவரங்களைத் தெரிந்துகொண்ட சுந்தரமூர்த்தி நாயனார் உடனே அருகில் இருந்தவர்களிடம், 'என்னுடன் வந்து அந்தக் குளத்தைக் காட்டுங்கள்’ என்று சொல்லிவிட்டு, நடந்தார். கொஞ்ச நேரத்தில், ஊரே திரண்டு குளக்கரையில் நின்றது. அந்தக் குளம் வற்றிப் போயிருந்தது. ஸ்ரீஅவிநாசியப்பரை நோக்கி, மனமுருகிப் பாடத் துவங்கினார் சுந்தரர். அவர் பாடப் பாட, வற்றியிருந்த குளம் தண்ணீரால் நிறைந்தது. அப்போது, தண்ணீரில் நீந்தியபடி வந்த முதலை ஒன்று, கரையோரம் ஒதுங்கியது. தன் வாயில் இருந்து சிறுவனைக் கக்கிவிட்டு, நீருக்குள் சென்று மறைந்தது.
சிறுவனைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். நான்கு வயதுக் குழந்தையாக இருந்தபோது முதலையால் விழுங்கப்பட்ட அதே சிறுவன் இப்போது ஏழு வயது பாலகனாக வந்திருப்பதைப் பார்த்தால் யார்தான் ஆச்சரியப்படமாட்டார்கள்?! 'என் சிவமே... என் சிவமே...’ என நெக்குருகிப் போனார் சுந்தரர். சிறுவனின் பெற்றோர் கண்ணீரும் ஆனந்தமும் பொங்க சுந்தரருக்கு நன்றி தெரிவித்து, நமஸ்கரித்தார்கள். பிறகு, அந்தச் சிறுவனுக்கு உபநயனத்தை சுந்தரரே முன்னின்று நடத்திவைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.
இன்னொரு சிறப்பும் இந்த அவிநாசி திருத்தலத்துக்கு உண்டு. திருஆனைக்காவில் உறைந்திருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி நாயகியின் அருளால், ஸ்ரீஆதிசங்கரருக்கு இங்குதான் உபநயனம் நடைபெற்றது என்றும் ஒரு தகவல் உண்டு. அதை நினைக்க நினைக்க... சிலிர்க்கிறது உடல்; மெய்மறக்கிறது மனம்.
இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீகாலபைரவர், மிகுந்த வரப்பிரசாதி. தேய்பிறை அஷ்டமி நாளில் இவருக்கு வடைமாலை சார்த்தி பிரார்த்தித்துக்கொள்ளும் பக்தர்கள் ஏராளம்! காசியம்பதிக்கு நிகரான திருத்தலம் இது என்கிறது ஸ்தல புராணம். கோயிலில் உள்ள கிணற்றில், காசியில் இருந்து கங்கா தீர்த்தம் வந்து ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். காசிக்கும் இந்தத் தலத்துக்குமான தொடர்புகளில் இதுவும் ஒன்று.
கொங்கு நாட்டில் தேர்த்திருவிழா பிரமாண்டமாக நடைபெறும் ஆலயங்களில், அவிநாசிக்கு முக்கிய இடம் உண்டு. திருவாரூர்த் தேருக்கு அடுத்து அவிநாசியப்பரின் திருத்தேர் பிரமாண்டம் எனப் போற்றப்படுகிறது.
சித்திரை மாதத்தில், 12 நாட்கள் நடைபெறும் விழாவை பிரம்மாவின் தவம் எனச் சொல்வார்கள். தவிர, ஆடி மாதத் தில் ஆடித்தபசு விழாவும் இங்கு பிரசித்தம். அறுபத்து மூவர் உத்ஸவமும் அடியார்களால் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தலத்தின் விருட்சம்- பாதிரி மரம்.
மாணிக்கவாசகரும் திருமூலரும் அருணகிரிநாதரும் இங்கு வந்து ஆனந்தமாகப் பாடி, இறைவனைத் தொழுதிருக்கிறார்கள். சுந்தரரின் அணுக்கத் தொண்டனாகத் திகழ்ந்த சுந்தரபாண்டியன் எனும் மன்னன் கட்டிய அற்புதமான ஆலயம், கொங்கு நாட்டு ஏழு சிவாலயங் களில் முதன்மையான தலம் எனக் கொண்டாடப்படுகிறது.  
அவிநாசி தலத்துப் பெருமைகளை உணர்ந்து, ஸ்ரீஅவிநாசியப்பரையும் ஸ்ரீகருணாம்பிகையையும் வணங்கித் தொழுவோம்; வளம் பெறுவோம்!

ஸ்வாமிக்கு வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி கொண்டிருக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று! இங்கே... அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு விளக்கேற்றி வழிபடுகின்றனர், பக்தர்கள். அப்படி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்; விஷ ஜந்துக்களால் வருகிற கனவு, பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment