தஞ்சகன், தாரகன், தண்டகன் எனும் மூன்று அரக்கர்களை உமையவள் அழித்தொழித்ததும்... அப்போது, தஞ்சகன் எனும் அரக்கன் வேண்டுகோள் விடுக்க... அதனால் அரக்கன் அழிந்த ஊர், தஞ்சாவூர் என்றானதும் தெரியும்தானே?!
தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் ஆலயம். இங்கே, ஸ்ரீஆனந்தவல்லி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள், உமையவள்.
அம்பிகை, அரக்கர்களை அழித்தாள். சிவனாரோ... அனுதினமும் பூஜித்து வந்த தனது பக்தருக்கு அருளுடன் சேர்த்துப் பொன்னையும் பொருளையும் அள்ளித் தந்தருளினார். இழந்த அனைத்தையும் பெற்று விட்ட குதூகலத்துடன் இன்றைக்கும் ஆலயத்தில் காட்சி தருகிறார் அந்தப் பக்தர்! அவர்... ஸ்ரீகுபேரன்.
சகலத்தையும் இழந்த நிலையில், தான் தினமும் பூஜித்து வணங்கிவந்த சிவலிங்கத்தை எடுத்து வந்து, காவிரிக்கரையில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து வந்தார் குபேரன். இதில் மகிழ்ந்த சிவனார், குபேரனுக்குத் திருக்காட்சி தந்ததுடன், இழந்த செல்வங்கள் அனைத்தையும் வழங்கி, குபேரனை செல்வத்துக்கே அதிபதியாக்கி அருளினார்.
குபேரனுக்குத் தஞ்சம் தந்து, ஈசன் அருள் வழங்கியதால், இந்த ஊர் தஞ்சாவூர் என்றானதாகவும் சொல்கின்றனர். எது எப்படியோ... ஸ்ரீதஞ்ச புரீஸ்வரரையும் குபேரனையும் தரிசித்து வணங்கினால், நமக்குத் தஞ்சம் தந்து, அருளும் பொருளும் அள்ளித் தருவார்கள் என்பது உறுதி!
கருவறையில் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர். முன்னதாக உள்ள தூணில், குபேரன் சிவலிங்க பூஜை செய்யும் சிற்பங்கள் அமைந்துள்ளதைக் காணலாம். கோயிலில், ஸ்ரீஅஷ்ட லட்சுமியரும் கொலுவிருக்கும் மண்டபம் உள்ளது. இங்குதான், குபேரன் வழிபட்ட சிவலிங்கம், ஸ்ரீகுபேரர், மற்றும் ஸ்ரீகுபேர லட்சுமி ஆகியோர் தரிசனம் தருகின்றனர். அமாவாசை நாளில், இவர்களுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரங்களும் நடைபெறுகின்றன.
ஐப்பசி மாத அமாவாசை நாளில்தான், குபேரன் இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றதாக ஐதீகம். எனவே ஐப்பசி அமாவாசையில், அஷ்ட லட்சுமி மண்டபத்தில், மகா குபேர யாகம் வருடந்தோறும் நடைபெறுகிறது. யாகத்தில் கலந்துகொண்டு, குபேரனையும் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீதஞ்சபுரீஸ்வரரையும் மனதார வழிபட்டால், இழந்த செல்வம் மற்றும் பதவியை மீண்டும் பெறலாம்; சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம் என்கிறார் கோயிலின் அர்ச்சகர் துரைசாமி சிவாச்சார்யர்.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... சிவாலயத்தில் ஸ்ரீஅனுமனைத் தரிசிப்பது அரிது. அதுவும் இங்கே, தனிச்சந்நிதியில், பஞ்சமுகங்கள் கொண்ட ஆஞ்சநேயரை அற்புதமாகத் தரிசிக்கலாம்.
அமாவாசை நாளில் நடைபெறும் குபேர பூஜையில் கலந்துகொண்டால், சொத்துப் பிரச்னை, இழுபறி வழக்கு ஆகியன முடிவுக்கு வருமாம்; இழந்த பதவியையும் சொத்துக்களையும் பெறலாம் என்கின்றனர். பிறகென்ன?! இன்னல் தீர்க்கும் குபேரனைத் தரிசிப்போம்; இழந்ததை மீட்டு இன்புறுவோம்!
|
No comments:
Post a Comment