Friday, 12 May 2017

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1.7



வித்தியா தத்துவங்களைக் கூறத் தொடங்குதல்

17. ஓதியிடும் நாலாறும் உற்றான்ம தத்துவம் என்று

ஆதி அருள்நூல் அறையுங்காண்; தீதறவே

வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்பக்கேள்

உத்தமனே நன்றா உனக்கு.


பதவுரை

ஓதியிடும் இதுவரை சொன்ன

நால் ஆறும் இருபத்து நான்கு தத்துவங்களும்

உற்ற உயிர்க்கு நுகர்ச்சியாகப் பொருந்திய

ஆன்ம தத்துவம் என்று ஆன்ம தத்துவம் என்று

ஆதி அருள் நூல் சிவபிரான் அருளிச் செய்த ஆகம நூல்

அறையும் கூறும்

தீது அறவே இனி, உனது மயக்கம் நீங்கும் படியாக

வித்தியா தத்துவங்கள் தம்மை வித்தியா தத்துவங்களின் இயல்பை

உனக்கு உனக்கு

நன்றா ஐயமற

விளம்ப யாம் சொல்ல

உத்தமனே நன்மாணாக்கனே,

கேள் கேட்பாயாக.




பொழிப்புரை

இதுவரை யாம் விளக்கிக் கூறிய பூதங்கள் ஐந்து, தன்மாத்திரைகள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களையும் ஆன்ம தத்துவங்கள் என்று சிவாகமங்கள் குறிப்பிடும்.




நன்மாணாக்கனே! இனி, வித்தியா தத்துவங்களை உனக்கு உரைப்போம். கேட்பாயாக.




வித்தியா தத்துவங்களின் பெயர்

18. காலம்நியதி கருதும் கலை வித்தை

ஏல அராகம்புருடனே மாயை மால் அறவே

சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தம்உண்மை

உன்னி உரைக்கும் நாம் உற்று




பதவுரை

காலம் காலமும்

நியதி நியதியும்

கருதும் கலை ஆராய்ந்து கொள்ளத்தக்க கலையும்

வித்தை வித்தையும்

ஏல அராகம் பொருந்திய அராகமும்

புருடன் புருடனும்

மாயை மாயையும் என




(வித்தியா தத்துவங்களை)

மால் அற மயக்கம் நீங்க

அடைவாக வரிசைப்படுத்தி

சொன்னோம் கூறினோம்

சொன்ன இவ்வாறு பெயர் அளவில் சொல்லிய

இவை தன் உண்மை இத்தத்துவங்களின் இயல்பை

நாம் யாம்

உன்னி (உனக்கு விளங்கச் சொல்லும் முறையை) நினைந்து

உற்று அதனைக் கடைப்பிடித்து

உரைக்கும் கூறுவோம்




பொழிப்புரை

காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்னும் ஏழும் வித்தியா தத்துவங்கள் ஆகும். இவற்றின் இயல்பை இனி உரைப்போம்.




வித்தியா தத்துவங்களின் தொழில்

19. எல்லைபலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்

அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு ஒல்லை

அறிவு ஆசைஐம்புலனும் ஆரவரும் காலம்

குறியா மயக்குஎன்று கொள்.




பதவுரை (காலம் செய்யும் தொழிலாவது)

எல்லை இறந்த காலமாய் நின்று, வினைகளை நுகர்ச்சியினால் கழியச் செய்தல்.

பலம் நிகழ்காலமாய் நின்று, உயிரை வினைப்பயன்களோடு கூட்டி நுகரச் செய்தல்.

புதுமை எதிர்காலமாய் நின்று, வினைப் பயன்களை உயிர் எதிர்நோக்குமாறு செய்தல்.




(நியதி செய்யும் தொழிலாவது)

எப்போதும் நிச்சயித்தல் எப்போதும் வினைப்பயன் அதனைச் செய்த உயிரையே சாருமாறு நியமித்தல்.

(கலை செய்யும் தொழிலாவது)

ஆன்மாவுக்கு உயிருக்கு

அல்லல் தரும் வினைகளை ஈட்டித் துன்புறுதற்கு ஏதுவாகும்படி

கிரியை அதன் கிரியாசத்தியாகிய செயலாற்றலைச் சிறிதே விளங்கச் செய்தல்.

(வித்தை செய்யும் தொழிலாவது)

ஒல்லை விரைந்து

அறிவு அதன் ஞானசத்தியாக அறிவாற்றலைச் சிறிதே விளங்கச் செய்தல்.

(அராகம் செய்யும் தொழிலாவது)

ஆசை அதன் இச்சா சத்தியாகிய விழைவு ஆற்றலைச் சிறிதே விளங்கச் செய்தல்.




(புருடன் என்பது)

ஐம்புலனும் (உயிர் மேற்கூறிய ஐந்தோடும் கூடி நின்று) ஐம்புலன்களையும்

ஆர வரும் காலம் நுகர்தற்குத் தகுதி பெற்ற காலத்தில் அந்நிலையில் வழங்கும் பெயராகும்.




(மாயை என்பது)

குறியா மயக்கு உயிரின் அறிவு இச்சை செயல் ஆகிய மூன்றும் பிரிந்து தோன்றுதல் இன்றி, ஒன்றையும் குறியாத, பொதுவான மயங்குநிலையை உயிருக்குத் தருவது என்று கொள் என்று இவ்வாறு உணர்ந்துகொள்.




பொழிப்புரை

உயிருக்கு வினைப் பயன்களை இத்துணைப் பொழுது என வரையறுப்பது காலம் அது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றாகி நிற்கும். அவற்றுள் இறந்தகாலம் வினைகளை நுகர்ச்சியினால் கழியச்செய்து உயிரை அவ்வினையினின்றும் பிரிக்கும். இதுவே எல்லை எனப்பட்டது. நிகழ்காலம் உயிரை வினைப்பயன்களோடு கூட்டி நுகர்விக்கும் இதுவே பலம் எனப்பட்டது. எதிர்காலம் வினைப் பயன்களை உயிர் எதிர்நோக்குமாறு செய்யும். இதுவே புதுமை எனப்பட்டது.




நியதி எப்போதும் வினைப்பயன் அதனைச் செய்த உயிரையே சாருமாறு நியமிக்கும். இதுவே நிச்சயித்தல் எனப்பட்டது. கலை, உயிரின் செயலாற்றலைச் சிறிதே விளங்கச் செய்யும்; வித்தை அறிவாற்றலைச் சிறிதே விளங்கச் செய்யும். அராகம் விழைவாற்றலைச் சிறிதே விளங்கச் செய்யும். உயிர் இவ்வைந்தோடும் கூடி நின்று விடயங்களை நுகரும் தகுதி பெற்ற காலத்தில் புருடன் எனப்பெயர் பெறும். மாயை மயக்குதலைச் செய்யும்.




விளக்கம்

முந்திய செய்யுளில் வித்தியா தத்துவங்களின் பெயர்களை வரிசைப்படக் கூறிய ஆசிரியர், இச்செய்யுளில் அவை செய்யும் தொழிலை அதே வரிசை முறையில் நிறுத்திக் கூறியுள்ளார். எனவே அவற்றைப் பின்வருமாறு அமைத்துக் கொண்டால் பொருள் எளிதில் விளங்கும்.




வித்தியாதத்துவம் தொழில்

1. காலம் இறந்தகாலம் எல்லை

நிகழ்காலம் பலம்

எதிர்காலம் புதுமை

2. நியதி எப்போதும் நிச்சயித்தல்

3. கலை கிரியை விளங்கச் செய்தல்

4. வித்தை அறிவு விளங்கச் செய்தல்

5. அராகம் ஆசை விளங்கச் செய்தல்

6. புருடன் ஐம்புலனும் ஆரவரும் காலம்

7. மாயை மயக்குதல்




இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் சுத்த தத்துவங்கள் 5




வித்தியா தத்துவங்கள் ஏழினையும் ஆசிரியர் விளக்கிய முறையில் இதுகாறும் அறிந்தோம். அவை உயிரின் அறிவாற்றல், விழைவாற்றல், செயலாற்றல்களை மலத்தடையிலிருந்து நீங்கி எழுப்பி உயிரை உலக நுகர்ச்சியில் நோக்குடையதாகச் செய்யும் எனக் கண்டோம். ஆயின் அக்கருவிகள் தாமே சுதந்திரமாகச் செயற்படா. இறைவனது சத்தியே அவற்றைச் செலுத்தி நிற்கும்.




இறைவனது சத்தி பற்றி ஒன்றைச் சொல்ல வேண்டும். அது எதனையும் நேராகச் செய்யாது. ஒன்றை நிலைக்களமாகக் கொண்டு நின்றே செய்யும். நெருப்பு ஒரு பொருளில் தங்கி நின்று தன் தொழிலைச் செய்யுமேயன்றி அது தனித்து நிற்பதில்லை. அது விறகு, நெருப்புக்குச்சி முதலியவற்றுள் ஒன்றை ஆதாரமாகக் கொண்டு நிற்கிறது. அதுபோல இறைவனது சத்தி நின்று தொழிற்படுவதற்கு ஓர் ஆதாரம் நிலைக்களம் வேண்டும். அந்த நிலைக்களம் எது? தூய்மையற்ற அசுத்த மாயை தூயதாகிய இறைவனது சத்திக்கு நிலைக்களம் ஆகாது. எனவே சுத்த மாயையே அதற்கு நிலைக்களம் ஆவது என்பது விளங்கும்.




இறைவனது சத்தி சுத்த மாயையிற் பொருந்தி ஐந்து தத்துவங்களைத் தோற்றுவிக்கும். அவை சிவம், சத்தி, சதாசிவம், (அல்லது சாதாக்கியம்), ஈசுரம், சுத்தவித்தை என்பன. இவ்வைந்துமே இறைவனது சத்திக்கு நிலைக்களமாய் அமைவன இத்தத்துவங்கள் சுத்த மாயையில் தோன்றும் முறையைக் காண்போம்.




விருத்தி

பிரகிருதியிலும், அசுத்த மாயையிலும் தோன்றும் காரியங்கள் எல்லாம் பரிணாமமாய்த் தோன்றுவன என அறிந்தோம். ஆயின், சுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் அவ்வாறு பரிணமித்துத் தோன்றுவன அல்ல. அவை விருத்திப்பட்டுத் தோன்றுவனவாகும். விருத்தி என்றால் என்ன? என்பதை முதலில் விளங்கிக் கொள்வோம். சுருங்கி நிற்பது விரிவடைதல் விருத்தி எனப்படும். எடுத்துக் காட்டினால் இதனை விளக்கலாம். சர்க்கஸ் நடத்துவோர் அக் காட்சிக்கென்று பெரிய கூடாரங்களை அமைப்பர். மடித்து வைத்திருந்த முரட்டுத் துணிகளை விரித்துக் கால்களை நாட்டிக் கூடாரமாகச் செய்வர். முன்னே சுருங்கி நின்ற துணியே பின் விரிந்து கூடாரமாக மாறுகிறது. இம் மாற்றமே விருத்தி எனப்படும். சுத்த மாயையிலிருந்து இம்முறையில் விரிந்து தோன்றும் தத்துவங்கள் ஐந்து எனக் குறிப்பிட்டோம். அவை விரியும் முறை வருமாறு.




1. சிவதத்துவம்

முதலில் இறைவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் இது விரிவடையத் தக்கது எனப் பொதுவாக நோக்குவான். அவ்வாறு அவன் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதி காரியப்படுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறும். பக்குவப்பட்ட அப்பகுதி சிவதத்துவம் என்றும் நாதம் என்றும் சொல்லப்பெறும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது.




2. சத்திதத்துவம்

இறைவன் பின்னர் முதல் விருத்தியாகிய சிவ தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது கிரியா சத்தியால் இது விரிவடைக எனப்பொதுவாகக் கருதுவான். அவ்வாறு அவன் கருதிய அளவில் அப்பகுதி இரண்டாம் விருத்திப்பட்டு சத்தி என்றும், விந்து என்றும் பெயர் பெறும். இறைவனது கிரியா சத்தி மட்டும் செயற்படும் நிலை இது.




3. சதாசிவ தத்துவம்

இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தி தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் சிறப்பாக நோக்கியும், கிரியா சத்தியால் சிறப்பாகக் கருதியும் நிற்பான். இது இவ்வாறு விரிவடையத்தக்கது என்பது சிறப்பாக நோக்குதல். இது இவ்வாறு விரிவடைக என்பது சிறப்பாகக் கருதுதல். நோக்குதலும், கருதுதலும் சிறப்பாக நிகழும் இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது.




4. ஈசுர தத்துவம்

ஞான சத்தியையும் கிரியா சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவ தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியா சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான் அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியா சத்தி மிகுந்தும் ஞான சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.




5. சுத்த வித்தியா தத்துவம்

கிரியா சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுர தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞான சத்தியை மிகச் செலுத்தி நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். (அசுத்த மாயையின் காரியங்களுள் வித்தை என ஒன்று இருப்பதால் சுத்த மாயையின் காரியமாகிய இதனை அதிலிருந்து வேறுபடுத்தற்காகக் சுத்த வித்தை என்றனர்.) ஞான சத்தி மிகுந்தும் கிரியா சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. இறைவனது இச்சா சத்தி என்றும் ஒரு நிலையிலே நிற்க, ஏனைய ஞான சத்தியும் கிரியா சத்தியும் தனித்தனியாயும், தம்முள் ஒத்தும், ஒன்றின் ஒன்று மிகுந்தும் குறைந்தும் செயற்படுதலால் சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இவ்வைந்து தத்துவங்களும் சுத்த மாயையின் விரிவுகளாய்த் தோன்றலாயின எனச் சுருக்கமாகக் கூறலாம்.




சுத்த மாயை

(1. சிவம்(நாதம்) 2. சத்தி (விந்து) 3. சிதாசிவம் (சாதாக்கியம்) 4. ஈசுரம் 5. சுத்த வித்தை இவற்றைச் சுத்த மாயையிலிருந்து சிவபெருமானே நேரே தோற்றி ஒடுக்குவதால் இவை சிவதத்துவங்கள் எனப்படுகின்றன. சுத்த மாயையினின்றும் தோன்றிச் சுத்தமாய் இருத்தல் பற்றி இவை சுத்த தத்துவங்கள் என்றும் சொல்லப்படும். முன்னே சொன்னபடி இறைவனது சத்தி, சுத்த தத்துவங்களாகிய இவற்றை நிலைக்களமாகப் பற்றி நின்று இவற்றின் வழியாகக் கீழேயுள்ள ஏனைத் தத்துவங்களைச் செலுத்தி நிற்கும். செலுத்தும் கருவியாதல் பற்றி இத்தத்துவத் தொகுதி பிரேரக காண்டம் என்றும் சொல்லப்பெறும் பிரேரகம் செலுத்துவது.




சுத்த தத்துவங்களின் பெயர்

20. வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்

சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் நித்தமாம்

சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம் நல்

சத்திசிவம் காண் அவைகள் தாம்

பதவுரை

வித்தியா தத்துவங்கள் அசுத்த மாயையின் காரியமாகிய வித்தியா தத்துவங்கள்

ஏழும் ஏழினையும்

விளம்பினோம் இதுவரையில் விளக்கினோம்.

சுத்தமாம் தத்துவங்கள் இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் சுத்த தத்துவங்களின் இயல்பை

சொல்லக்கேள் கூறுகிறோம். கேட்பாயாக.

அவைகள் அத் தத்துவங்கள்

சுத்த வித்தை சுத்த வித்தையும்

ஈசுரம் ஈசுரமும்

பின் சொல்லும் அவற்றின் மேலாகச் சொல்லப்படும்

சதாசிவம் சிதாசிவமும்

நல்சத்தி நல்ல சத்தியும்

சிவம் சிவமும் என

காண் அறிவாயாக.




பொழிப்புரை

அசுத்த மாயையிலிருந்து தோன்றும் வித்தியா தத்துவங்கள் ஏழினையும் விளக்கிச் சொன்னோம். இனி, சுத்த மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்களின் இயல்பை உனக்குக் கூறுகிறோம். அவை சுத்த தத்துவங்கள் எனப்படும். அவை சுத்தவித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் என்னும் பெயரை உடையன. அவை நித்தமாக உள்ளன.




சுத்த தத்துவங்களின் நிலை

21. சுத்தவித்தை ஞானம்மிகும் தொன்மையாம் ஈசுரம் தான்

அத்தன் தொழில் அதிகம் ஆக்கியிடும் ஒத்தவிவை

சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை

ஆதார ஞானஉரு ஆம்




பதவுரை

சுத்த வித்தை சுத்த வித்தை என்ற தத்துவம்

ஞானம் மிகும் இறைவனது ஞானசத்தி மிகுந்து, கிரியா சத்தி குறைந்து நின்று தொழிற்படும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது.

தொன்மையாம் பழமையாகிய

ஈசுரம் ஈசுரதத்துவம்

அத்தன் தொழில் இறைவனது கிரியா சத்தி

அதிகம் ஆக்கியிடும் மேம்பட்டு நிற்க, ஞானசத்தி அடங்கி நிகழும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது.

ஓத்தலிவை ஞானசத்தியும் கிரியாசத்தியும் ஆகிய இவை ஒத்து இணைந்து நிகழும் நிலைக்கு நிலைக்களமாய் உள்ளது.

சாதாக்கியம் சதாசிவ தத்துவமாகும்.

என்றும் எப்போதும்

சத்தி சத்தி தத்துவம்

கிரியை ஆதார உரு இறைவனது சத்தி கிரியை மட்டுமாய் நின்று தொழிற்படும் நிலைக்கு நிலைக்களமாய் உள்ளது.

சிவம் சிவ தத்துவம்

ஞான ஆதார உருவாம் இறைவனது சத்தி ஞானமேயாய் நின்று தொழிற்படும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது.




பொழிப்புரை

சிவசத்தி மூத்திறப்பட்டு விளங்கும். அவை இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியா சத்தி என்பன. இச்சை என்றும் ஒரே நிலையில் இருப்பது. ஏனைய ஞானமும் கிரியையும் ஆகியவற்றின் தொழிற்பாட்டில்தான் வேறுபாடு உள்ளது. ஞான சத்தி மிகுந்து, கிரியா சத்தி குறைந்து நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு சிவசத்தி நிற்கும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது சுத்தவித்தை.




கிரியா சத்தி மிகுந்து, ஞான சத்தி குறைந்து நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு சிவசத்தி நிற்கும் நிலைக்கு நிலைக்களமாய் இருப்பது ஈசுரம். ஞான சத்தியும் கிரியா சத்தியும் சமமாய் நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு சிவசத்தி நிற்கும் நிலைக்கு நிலைக்களமாய் உள்ளது சதாசிவம். இனி, சிவசத்தி கிரியை மட்டுமாய் நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு கிரியையாய் நிற்கும் நிலைக்கு நிலைக்களமானது சத்தி தத்துவம். சிவசத்தி ஞானம் மட்டுமாய் நின்று தொழிற்படும் நிலை உண்டு. அவ்வாறு ஞானமேயாய் நிற்கும் நிலைக்கு நிலைக்களமானது சிவதத்துவம். இவ்வாறு சிவசத்திக்கு இடமாய் உள்ளவை இச் சுத்ததத்துவங்கள் ஆகும்.




இனி, பாசமாகிய ஆணவமும் வினையும்

22. அறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக

மாறா மலம்இரண்டும் வாசொல்லக் கூறில்

அறியாமை ஆணவம் நீயானசுக துக்கம்

குறியா வினைஎன்று கொள்.




பதவுரை

ஆறாறு தத்துவமும் முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும்

அடைவாக முறையாக

சொன்னோம் விளக்கிக் கூறினோம்

(ஆணவம், கன்மம், மாயை என்ற பாசம் மூன்றனுள் இதுவரை மாயை பற்றிக் கூறிமுடித்தோம். இனி, எஞ்சியுள்ள)

மாறா உயிரை விட்டு நீங்காமல் தொடர்ந்து வரும்

மலம் இரண்டும் ஏனைய இரண்டு மலங்களின் இயல்பையும்

சொல்ல, வா யாம் கூறுவோம்; நீ கேட்க வருவாயாக.

கூறில் அவற்றை எடுத்துச் சொல்லுமிடத்து

அறியாமை அறியாமையைத் தருவது

ஆணவம் ஆணவ மலமாகும்.

நீயான உன்னில் வேறாகப் பிரித்தறிய முடியாமல், உன் இயல்பாகவே நீ கண்டுவருகின்ற

சுக துக்கம் இன்பத் துன்பங்களைப் பயந்து நிற்பது

குறியா வினை எதிர்பாராத வகையில் வந்து பொருந்துகின்ற கன்ம மலமாகும்

என்று கொள் என்று அறிவாயாக.




பொழிப்புரை

இதுவரை முப்பத்தாறு தத்துவங்களையும் முறையாகக் கூறி முடித்தோம். இனி, உயிரை விட்டு நீங்காதிருக்கும் ஆணவம், வினை என்னும் இரண்டு மலங்களின் இயல்பினை உனக்கு உரைப்போம். உனது அறிவை மறைத்து அறியாமையைத் தருவது ஆணவம்; உனக்கு இன்ப துன்ப நுகர்ச்சிகளைத் தருவது நல்வினை தீவினை என இரு வகைப்படும் வினையாகும் என்று அறிவாயாக.




விளக்கம்

ஆணவம்

உயிர்களாகிய நாம் அறிவுப் பொருள். அறிவுப் பொருளாகிய நம்மிடத்தில் அறியாமையும் இருக்கிறது. எவ்வாறெனில் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்ற பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டுத் துன்புற்று வருகிறோம். ஆயினும், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தோம் என்பதையோ பிறவி நமக்குத் துன்பம் தருவது என்பதையோ உணராதிருக்கின்றோம். நாம் செய்த வினை காரணமாகவே பிறவியும் துன்பங்களும் வருகின்றன என்பதையும் நாம் உணர்வதில்லை. இப்பிறவியிலிருந்து நம்மை எடுத்துக் காத்துப் பேரின்பத்துள் வைக்கவல்ல இறைவனது திருவருளையும் நாம் அறியாமல் அதனைப் பற்றிச் சிறிம் கவலை கொள்ளாமல் வாழ்கின்றோம். அறிவுப் பொருளாக இருந்தும் நாம் பிறவித்துயர், வினை, திருவருள் முதலியவற்றை அறியாதிருக்கிறோம். இவற்றை அறியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?




அகவிருள்

காணும் தன்மையுடைய கண் பொருள்களைக் காணவொட்டாதபடி இருள் என்ற பொருள் அக்கண்ணை மூடி மறைக்கின்றது. கண் பொருள்களை அறியாத தன்மை இருளால் உண்டாவது. கண்ணை மறைக்கின்ற புற இருள்போல உயிரோடு பொருந்தி அதனை மறைத்திருக்கின்ற அகவிருள் ஒன்று உள்ளது. அதுவே ஆணவமலம் எனப்படுவது. முன்னே கூறியபடி பிறவித்துயர். வினை, திருவருள் முதலிய அறியத்தக்க பல பொருள்களுள் ஒன்றையும் அறியவொட்டாதபடி செய்வது ஆணவ இருளேயாகும்.




அறியாமையே அறிவாகத் தோன்றுதல்

புறவிருள் வந்து கண்ணை மறைக்கும் போது கண் செயற்படாது போகிறது. உயிர் கண்ணுக்கு வேறாக இருப்பதனால் அக் கண் செயற்படாமையைக் கொண்டு அதனை மறைக்கக் கூடிய இருளாகிய பொருள் வந்துற்றது என்று உயிர் கருதி உணர்கிறது. இனி அகஇருளாகிய ஆணவமோ உயிரையே மறைத்து நிற்கிறது. அவ்வாறு மறைத்து நின்று அறியாமையை உண்டாக்குகிறது. உயிர் அவ்வறியாமையையே அறிவென்று நம்பி விடுகிறது. அதனாலேயே தன்னை ஒன்று மறைத்திருக்கிறது என்பதை எவ்வகையினாலும் உணர முடியாமற்போகிறது.




உலகில் இருள் வந்துற்றபோது அதனை உணர்ந்து அதனை நீக்கிக் கொள்ள வழி தேடுகிறோம். ஆணவ இருளினால் அறிவு மறைக்கப்படும் போது அம் மறைப்பினை நாம் உணர்வதில்லை. அதனால் ஏற்படும் அறியாமையையே அறிவு என்று நம்பி விடுகிறோம். அதனாலேயே அறியாமையைப் போக்கிக் கொள்ள வழி தேடாமல் இருக்கிறோம். ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். ஒரு குடும்பத்தலைவர் தமது மனைவி, மக்கள், உடன் பிறந்தார் பொருட்டு வாழ்நாளெல்லாம் பாடுபட்டுப் பொருள் ஈட்டினார். கடைசி காலத்தில் அவர்கள் தனக்குத் துணையாக இருப்பர் என்று உறுதியாக நம்பினார். ஆனால் நடந்தது என்ன? அவர் ஓய்வு பெற்ற பின்னர், அவருக்கு வருவாய் இல்லை என்று ஆன பின்னர், குடும்பத்தார் அவரிடம் நடந்து கொண்ட முறையில் அவர் வேறுபாட்டைக் கண்டார். தனக்கு உரிய மதிப்பினை அளிக்காமல் புறக்கணிக்கும் போக்கினைக் கண்டார். அவர்கள் கடைசி வரை தமக்குத் துணையாய் இருப்பர் என்று நம்பியது எவ்வளவு அறியாமை என்று எண்ணி வருந்தினார். இத்துணைக் காலமும் அவர் அறியாமையில் இருந்தார். ஆயினும் நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதை அவர் உணரவில்லை அதற்குக் காரணம், அந்த அறியாமையே அவருக்கு அறிவாகத் தோன்றியதுதான்.




ஆணவம் செய்யும் முழுமறைப்பு

இனி அறியாமையிலே இரு நிலைகள் உள்ளன. ஒன்று பேரறியாமை; மற்றொன்று, ஓரளவில் அறியாமை பேரறியாமையாவது உயிர் யாதொன்றையும் அறியமாட்டாமல் முழுஅறியாமையில் மூழ்கியிருத்தல். அந்நிலையில் உயிர், தான் ஒரு பொருள் உண்டு எனத் தன் இருப்பையும் கூட அறியாது நிற்கும். நாம் உறங்குங் காலத்தில் இப்படிப்பட்ட பேரறியாமையே நமக்கு உண்டாகிறது அப்பொழுது ஐம்பொறி முதலிய கருவிகள் செயற்படாது போதலினால் அறிவு விளங்காமற் போகிறது. உயிர் அந்நிலையில் ஆணவமலத்தின் வயப்பட்டு விடுகிறது. இருள் வயப்பட்ட கண் ஒன்றையும் அறிய மாட்டால் திகைந்து நிற்பதுபோல உயிரும் உறக்கத்தில் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு முழு அறியாமை உடையதாய் நிற்கிறது. இப்படிப்பட்ட பேரறியாமை நிலை, கேவல நிலை எனப்படும். நாள்தோறும் நாம் இக் கேவல நிலையை அடைந்துவருகிறோம்.




ஆணவத்தால் உண்டாகும் மயக்கவுணர்வு

இனி ஓரளவில் உள்ள அறியாமை என்றால் என்ன? என்பதைக் கூறுவோம். எங்கும் செறிந்த இருளிடத்தில் ஒரு விளக்கை ஏற்றினால் அவ்விளக்கொளியில் இருள் சிறிது விலகுகிறது. ஆனால் அது முற்றிலும் நீங்கி விடவில்லை. நீங்காதிருக்கிற அந்த இருள் விளக்கொளியின் காரணமாக முன்பு போலப் பொருள்களை முற்றிலும் மறைக்க முடியவில்லை. ஆனால் அது வேறு ஒரு காரியத்தைச் செய்கிறது. விளக்கொளியானது பொருள்களைப் புலப்படுத்துகிற போது இருளானது அந்த ஒளியோடு கலந்து பொருள்களை மங்கலாகப் புலப்படும்படி செய்கிறது. தரையில் கிடக்கும் கயிற்றைப் பாம்பு என்று தவறாகக் கருதும்படி செய்கிறது. இவ்வாறு இருள் ஒளியோடு சேர்ந்து பொருளின் இயல்பை வேறுபடுத்திக் காட்டுகிறது.




இந்தப் புறவிருளின் செய்கை போல அக இருளாகிய ஆணவத்தின் செயலும் அமைகிறது. ஆணவம் இருள் என்றால் அதனை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. நமக்கு வாய்த்துள்ள ஐம்பொறிகளும், மனம் புத்தி போன்றவையும் மாயையினின்றும் தோன்றிய கருவிகளே என்பது நாம் அறிந்தது. இக்கருவிகளின் செயற்பாட்டினால் அஃதாவது, மாயாமலத்தின் சேர்க்கையால் ஆணவ மலத்தின் சத்தி சிறிது விலகுகிறது. அறிவு விளங்குகிறது. மாயையின் காரணமாக ஆணவ இருள் முன்பு போல அறிவை முற்றிலும் மறைக்க முடியவில்லை. ஆனால் அது இப்பொழுது வேறு ஒரு காரியத்தைச் செய்கிறது. மாயா கருவிகளால் விளங்கும் அறிவை விபரீத அறிவாக மாற்றி விடுகிறது. அஃதாவது அற்பமான பொருளை உயர்வானது என்றும், நிலையில்லாத பொருளை நிலைத்தது என்றும் இவ்வாறு மாறி உணரும்படியாகச் செய்து விடுகிறது. இவ்வாறு ஆணவ இருள் மாயையோடு கூடிய நிலையில் உயிருக்கு மயக்க உணர்வை உண்டாக்குகிறது. நாமெல்லாம் நமக்கு வேறாகிய உடம்பையே நாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இது மயக்க உணர்வு தானே. நமக்கென்று என்ன உடைமை இருக்கிறது? நாம் பிறக்கும் போது எதையும் உடன் கொண்டு வரவில்லை. இறக்கும் போது எதையும் உடன் கொண்டு போவதும் இல்லை. அப்படியிருக்க எனது எனது என்று எண்ணி உடைமைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோமே. இது மயக்கவுணர்வு தானே. இம்மயக்கவுணர்வே ஓரளவில் அறியாமை என்று முன்னே குறிப்பிடப்பட்டது.




ஆணவத்தின் தன்னியல்பும் பொதுவியல்பும்

இதுவரை கூறியவற்றால் ஆணவ மலத்தின் இயல்பு இரண்டு என்பது புலனாகும். ஒன்று மாயையோடு சேராத தனி நிலையில் ஆணவமலம் உயிருக்குப் பேரறியாமையைத் தருதல். மற்றொன்று, மாயையோடு கூடிய நிலையில் உயிருக்கு ஓரளவில் அறியாமையைத் தருதல். ஆணவம் தனித்துச் செயற்படும் நிலை கேவலநிலை என்று குறிப்பிட்டோம். மாயையோடு கூடிச் செயற்படும் நிலை சகல நிலை எனப்படும். ஆணவம் தனி நிலையில் பேரறியாமையைச் செய்தல் அதற்குத் தன்னியல்பு ஆகும். அது மாயையின் சேர்க்கையைப் பெற்றவிடத்து மயக்கவுணர்வைச் செய்தல் அதற்குப் பொதுவியல்பு ஆகும். எனவே தனி நிலையிலும், மாயையோடு கூடிய பொது நிலையிலும் ஆன்மாவுக்கு அறியாமையைத் தருதலே ஆணவத்தின் இயல்பாகும். இதுபற்றியே அறியாமை ஆணவம் என்று குறிப்பிட்டார் ஆசிரியர். இத்தொடரின் நடுவே தருவது என்ற ஒரு சொல்லை வருவித்து அறியாமையைத் தருவது ஆணவம் எனக்கொள்ள வேண்டும்.




வினை

ஆணவத்தின் காரணமாக உண்டாவது கன்மம் எனப்படும் வினையாகும். ஆணவத்தினால் வினை எப்படித் தோன்றுகிறது என்பதைக் காண்போம். உயிர் இறைவனைப் போல அறிவுப் பொருளேயாகும். ஆயினும் சுதந்திரமான அறிவுடையதல்ல. அறிவதற்குத் துணை ஒன்றே வேண்டாது தானே அறிவதே சுதந்திர அறிவாகும். அத்தகைய சுதந்திர அறிவு உயிருக்கு ஏது? பிறந்தது முதற்கொண்டு பெற்றோர், ஆசிரியர், நூல்கள் முதலிய துணையைக் கொண்டு தானே அறிவு விளங்குகிறது. மேலும் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிவதற்கு ஐம்பொறிகள் அல்லவா துணை செய்கின்றன? இவ்வாறு பொறிகளின் துணையில்லாமல் யாதொன்றையும் அறிய மாட்டாத உயிர்க்குச் சுதந்திர அறிவென்பது ஏது? உயிருக்குச் சுதந்திர அறிவு இல்லாமை போலவே சுதந்திரமான செயலும் இல்லை. சுதந்திரமான செயலாவது எத்தடையுமின்றி நினைத்ததை நினைத்தவாறே செய்து முடித்தலாகும். இத்தகைய செயல் உரிமை உயிருக்கு இருக்கிறதா?

ஒன்றை நினைக்கில் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை

நினையாத முன் வந்து நிற்கினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்




எனவரும் அனுபவ வாக்கு உயிருக்குச் சுதந்திரமான செயல் இல்லை என்பதை உணர்த்தி நிற்கிறது.

பற்றுடன் செய்யும் முயற்சியே வினையாதல்

இறைவனையின்றி ஆன்மா எதனையும் தானே அறியவும்மாட்டாது; எதனையும் தானே செய்யவும் மாட்டாது. ஆயினும் ஆணவ மலம் உண்டாக்குகிற மயக்க உணர்வால் ஆன்மா எச்செயலுக்கும் தன்னையே வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழும். அவ்வாறு எழுந்த ஆன்மா ஆணவ சத்தியின் தூண்டுதலால் உலகப் பொருள்களை நோக்கி அவற்றின் மேல் இச்சை கொள்ளும். அவ் இச்சையினால் தனது அல்லாத அப்பொருள்களை எனது எனது என்று சென்று பற்றும். எனது என்பது புறப்பற்றும், யான் என்பது அகப்பற்றும் ஆகும். இவ்விரு பற்றுக்களின் வழியே செய்யும் முயற்சியே வினை அல்லது கன்மம் எனப்படும்.

ஆணவ மலத்தின் வழிப்பட்டது வினை

ஆணவ மலமே உயிருக்கு யான் என்னும் உணர்வை உண்டாக்கி செய்வோனாம் தன்மையைத் தருகிறது; எனது என்னும் உணர்வை உண்டாக்கி நுகர்வோனாம் தன்மையைத் தருகிறது. செய்வோனாம் தன்மையும், நுகர்வோனாம் தன்மையுமே வினை உண்டாவதற்கு ஏதுவாகின்றன. சுருங்கக் கூறினால், ஆணவ மலத்தின் வழியாகவே வினை வந்து உயிரைப் பற்றுவதாகிறது.

வினையின் மூவகை நிலைகள்

ஆன்மா தனது செய்வோனாம் தன்மையினால் ஒரு செயலைச் செய்யுங்கால் நிகழ்வது தூல கன்மம். புலப்படுகிற வினை என்பது அதற்குப் பொருள். அச்செயல் முடிந்த பின் அது தூல நிலை நீங்கிச் சூக்கும நிலையை அடைந்து நிற்கும். அதனைப் புலப்படாத வினை எனலாம். புலப்படும் வினை நல்வினை, தீவினை என இரண்டு வகையாய் அமையும் பின் அவைகளே புலப்படாத வினையாய் நிற்குங்கால் புண்ணியம், பாவம் எனப் பெயர் பெறும். புலப்படாத வினைகளே தத்தமக்குரிய காலம் வந்தபோது இன்பமும் துன்பமும் ஆகிய தம் தம் பயன்களைத் தம்மைச் செய்த ஆன்மாக்களுக்குக் கொடுக்கும். புலப்படும் நிலையில் நிகழும் வினை ஆகாமியம் எனப்படும். ஆகாமியம் என்பதற்கு விரும்பிச் செய்யப்படுவது என்பது பொருள். அச்செயல் முடிந்தபின், புலப்படா நிலையை அடைந்து சூக்குமமாய் நிலைத்து நிற்குங்கால் சஞ்சிதம் எனப்படும். சஞ்சிதம் என்பதற்கு நன்கு பெறப்பட்டது என்பது பொருள். புலப்படாத நிலையினின்று பயனாய் வந்து இன்ப துன்பங்களைக் கொடுக்கும் போது பிராரத்தம் எனப்படும். பிராரத்தம் என்பதற்கு நேர்படுவது என்பது பொருள்.

இன்ப துன்பங்களுக்குக் காரணம்

இதனால், ஒருவர் நல்வினை செய்தால் அது புலப்படாத நிலையில் புண்ணியமாய் நிலைத்து நின்று பின் காலம் வந்தபோது இன்பமாகிய பயனைத் தன்னைச் செய்தவருக்குக் கொடுக்கும் என்பதும், ஒருவர் தீவினை செய்தால் அது பாவமாய் நிலைத்து நின்று பின் காலம் வந்த போது துன்பமாகிய பயனைத் தன்னைச் செய்தவருக்குக் கொடுக்கும் என்பதும் புலனாகும். எனவே இன்ப துன்பங்களுக்குக் காரணம் வினை என்பது விளங்கும்.




நீயான சுகதுக்கம்

இன்ப துன்பங்கள் நமது இயற்கையல்ல. இயற்கையென்றால் என்றும் ஒரு தன்மையாய் இருக்கவேண்டும் மாறுதல் அடைவது இயற்கையாகாது. நமக்கு வருகின்ற இன்ப துன்பங்கள் இயற்கை எனின் அவை நம்மை விட்டு எப்பொழுதும் நீங்காதிருத்தல் வேண்டும். ஆயின் அவை சிறிது காலம் இருந்து பின் நீங்கக் காண்கிறோம். ஆகையால் அவை நம்மோடு என்றும் இருக்கும் இயற்கையல்ல. வினை என்னும் காரணத்தினால் வந்து பொருந்துகிற செயற்கையேயாகும். அக்காரணம் உள்ள வரையில் அவையும் இருந்து, அது நீங்கியவுடன் அவையும் நீங்கி விடும். நாம் இவ்வுண்மையை உணர்வதில்லை. இன்ப துன்பங்களை நமக்கு வேறானவை எனப் பிரித்து உணராது, அவற்றை நம் இயல்பாகவே கண்டு வருகிறோம். யான் இன்பமாய் இருக்கிறேன், துன்பமாய் இருக்கிறேன் என்று நம் இயல்புகளாகச் சொல்லி வருகிறோம். இது பற்றியே நீயான சுகதுக்கம் என்றார் ஆசிரியர். இங்கேயும் தருவது என்ற ஒரு சொல்லை வருவித்து, சகதுக்கம் தருவது குறியாவினை என்று கொள்ளவேண்டும்.




குறியாவினை

சுக துக்கத்திற்குக் காரணம் இன்னது என்பதை மேலே அறிந்தோம். சுகமும் துக்கமும் வருவதும் போவதும் நம் கையில் இல்லை. அவை எவ்வழியாக வரும்? எத்தனை காலம் நிற்கும்?என்று யாரால் சொல்ல முடியும்? உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. நீலவானம் மேகமேயில்லாமல் களங்கமற்று விளங்கி வருகிறது. திடீரென்று கருமேகங்கள் எங்கிருந்தோ திரண்டு வந்து, இடி இடித்து மின்னல் மின்னிப் பெருமழை கொட்டுகிறது. சில சமயம் காற்று என்பதே இல்லாமற் போய் விடுகிறது. மரங்களின் இலைகளும் அசையாமல் இருக்கின்றன. திடீரென்று எங்கிருந்தோ ஒரு சூறைக்காற்று வந்து சுழன்று அடிக்கிறது. அதன் வேகத்தில் பெரிய பெரிய மரங்களெல்லாம் வேருடன் பெயர்ந்து விழுகின்றன. சற்று முன்னால் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளித்த பசுஞ்சோலை இப்பொழுது நிலைகுலைந்து தரைமட்டமாகி விடுகிறது.




வாழ்க்கையும் இதுபோலத்தான். சுகம் எப்படி வருகிறது? துக்கம் எப்படி வருகிறது? என்பதை நாம் அறிய முடியவில்லை. காலம் வருமளவும் நுண்ணியதாய் அடங்கியிருந்து, காலம் வந்தவிடத்து உருப்பட்டு வந்து பொருந்தி இன்ப துன்பங்களைப் பயப்பதாகிய வினையின் இயல்பு அறிதற்கு அரிது. அதனைக் குறியாவினை என அடைமொழி கொடுத்துக் கூறினார் உண்மை விளக்க ஆசிரியர். குறியாவினை என்பதன் பொருளை நன்கு விளங்கிக் கொள்ளச் சங்க இலக்கியமாகிய அகநானூற்றில் வரும் ஒருதொடர் துணை செய்வதாகும். அத்தொடரையும், அத்தொடர் பயன்படுத்தப்பட்ட சூழலையும் முதலில் அறிந்து கொள்வோம்.




ஒரு வளமான மலைச்சாரல். எங்கே பார்த்தாலும் அடர்த்தியான காடு. அங்கே எத்தனை வகையான மரங்கள்! செழிப்பாக வளர்ந்துள்ள வாழை மரங்களில் பெரிய பெரிய குலைகள். அவற்றை வெட்டுவார் இல்லை. அவ்வாழைக் குலைகள் முற்றி முதிர்ந்து தாமாகப் பழுத்து நிற்கின்றன. கீழே பாறையான தரையில் குழிவான இடத்தில் சிறிய சுனை இருக்கிறது. தாமே பழுத்து உதிர்ந்த வாழைக் கனிகள் அச்சுனை நீரில் கலக்கின்றன. அருகிலே பலா மரங்கள் உள்ளன. அவற்றில் கொத்துக் கொத்தாகப் பலாப் பழங்கள் காட்சியளிக்கின்றன. அவை நன்றாகக் கனிந்து வெடித்து, அவற்றின் சுளைகள் உதிர்ந்து கீழே பாறையிலுள்ள சுனை நீரில் கலக்கின்றன. இவ்வாறு வாழைக் கனிகளும் பலாப்பழச் சுளைகளும் விழுந்து கலந்து பல நாள் ஊறி ஊறி அந்தச் சுனைநீர் தேன்போல ஆகிவிட்டது. இனிமையான அந்த மலைச் சாரலில் மனிதர்களின் நடமாட்டம் இல்லை. ஆனால் வளமான மரங்கள் நிறைந்த இடத்திலே வானரங்கள் மிகுதியாக இருப்பது இயற்கை தானே. மரமேறும் குரங்குகளுக்கு மரங்கள்தான் வாழும் அரண்மனை; பசி தீர்க்கும் உணவுச்சாலை; தாவி விளையாடும் ஊசல்; துயிலும் தொட்டில்! இதோ ஓர் ஆண்குரங்கு. அதற்குப் பொறுக்கமுடியாத தாகம் போலும். அது பாறையிலே தேங்கியிருந்த சுனை நீரை ஓடிச் சென்று குடித்தது. அது வெறும் நீரா? புளித்த தேன் (கள்) அல்லவா? அதன் தன்மையறியாமல் நீர் என்றே கருதிப் பருகி விட்டது.




சுனையின் பக்கத்தில் ஒரு சந்தன மரம் ஓங்கி நிற்கிறது. கள் ஆகிய நீரைப் பருகிய குரங்குக்கு ஒரே மயக்கம். சந்தன மரத்தில் அது ஏற முயல்கிறது. சிறிது தூரம் ஏறுவதற்குள் மயக்கம் கண்ணைச் சுழற்றுகிறது. மேலே செல்ல முடியாமல் கீழே விழுகிறது. விழுந்த இடமோ பல வகையான மலர்கள் உதிர்ந்து மெத்தென்று இருக்கிறது. மென்மையான அந்த மலர்ப்படுக்கையிலே விழுந்ததும் குடி மயக்கத்தால் தன்னை மறந்து இன்ப உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது. இந்த இன்ப உறக்கம் முயற்சியும் நினைப்பும் இன்றி, எதிர்பாராதவகையில் அதற்குக் கிடைத்ததாகும். அதனால், குறியாஇன்பம் என அதனைக் குறிப்பிட்டார் புலவர் (அகநானூறு,2) குறியா எதிர்பார்க்காத, நினைக்காத. இச்சங்க இலக்கியத் தொடரையொத்து அமைந்துள்ளது குறியா வினை என்ற உண்மை விளக்கத்தொடர், எதிர்பாராத வகையில், நாம் நினைக்காத முறையில், வந்து பொருந்தி இன்ப துன்பங்களைத் தருதலின் குறியா வினை எனப்பட்டது என்று கொள்ளலாம்.

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1.6



கன்மேந்திரியங்கள் செயற்படும் முறை

15. வாக்கு ஆகா யம்இடமா வந்துவச னிக்கும் கால்

போக்காரும் காற்றிடமாய் புல்கி அனல் ஏற்கும்

இடும் கை குதம் நீர் இடமா மலாதி

விடும் பார் இடம் உபத்தம் விந்து




பதவுரை

வாக்கு வாக்கு என்னும் இந்திரியம்

ஆகாயம் இடமா வந்து (வாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) சத்த தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று




வசனிக்கும் பேசுதலைச் செய்யும்

கால் பாதம் என்னும் இந்திரியம்

காற்று இடமாய் (கால் ஆகிய உறுப்பில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று

போக்கு ஆரும் போக்கு வரவினைச் செய்யும்

கை பாணி என்னும் இந்திரியம்

அனல் புல்கி (கை யாகிய உறுப்பில் நிற்கும்) உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று

ஏற்கும் இடும் ஏற்றல் இடுதலைச் செய்யும்

குதம் பாயு என்னும் இந்திரியம்

நீர் இடமா (எருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று

மல ஆதி விடும் மலம் முதலியவற்றை வெளிப்படுத்தும்

உபத்தம் உபத்தம் என்னும் இந்திரியம்

பார் இடம்(ஆக) (கருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று

விந்து(விடும்) ஆடவர்க்குச் சுக்கிலமும் மகளிர்க்குச் சோணிதமும் வெளிப்படுத்தி இன்பஞ் செய்யும்

பொழிப்புரை

வாக்கு என்ற இந்திரியம் (வாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) சத்த தன்மாத்திரையைப் பற்றி நின்று பேசுதலைச் செய்யும். பாதம் என்ற இந்திரியம் (கால் ஆகிய உறுப்பில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று போக்குவரவு செய்யும். பாணி என்ற இந்திரியம் (கை ஆகிய உறுப்பில் நிற்கும்) உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று ஏற்றல் இடுதலைச் செய்யும். பாயு என்ற இந்திரியம்(எருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று மலம் முதலியவற்றை வெளிப்படுத்தும். உபத்தம் என்ற இந்திரியம்(கருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று விந்தினை வெளிப்படுத்தி இன்பம் செய்யும்.




விளக்கம்

செய்யுளில் ஆகாயம், காற்று, அனல், நீர், பார் என்பன சூக்கும பூதங்களாகிய தன்மாத்திரைகளைக் குறிக்கும். வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் ஆகிய இந்திரியங்கள் புறத்தே காணப்படும் வாய் கால் கை எருவாய் கருவாய் ஆகிய உறுப்புகளில் நிற்கும் சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு கந்தம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு நின்று தம்தம் காரியத்தைச் செய்யும் என்பது கூறப்பட்டது. கன்மேந்திரியங்கள் செயற்படும் முறையைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்திக் காட்டலாம்.




இந்திரியம் சார்பு/பற்றுக்கோடு உறுப்பாகிய இடம் செய்யும் தொழில்

வாக்கு சத்த தன்மாத்திரை வாய் பேசுதல்

பாதம் பரிச தன்மாத்திரை கால் போக்கு வரவு செய்தல்

பாணி உருவ தன்மாத்திரை கை ஏற்றல் இடுதல்

பாயு இரத தன்மாத்திரை எருவாய் மலம் முதலியன வெளிப்படுத்தல்

உபத்தம் கந்த தன்மாத்திரை கருவாய் சுக்கில சோணிதங்களை வெளிப்படுத்தல்

இனி, அந்தக்கரணங்கள்

ஞானேந்திரியங்களைப் பற்றிக் கூறிய இடத்தில் அவற்றால் முதலில் பொருள்களைப் பொதுவாக அறிவதாகிய நிருவிகற்பக் காட்சியே உண்டாகும். எனவும், அதன் பின்னர் அப்பொருள்களின் பெயர், குணம், தொழில், முதலியவற்றைச் சிறப்பாக அறிவதாகிய சவிகற்பக் காட்சி அந்தக் கரணங்களினால் உண்டாவதாகும் எனவும் குறிப்பிட்டோம். அவ்வந்தக்கரணங்கள் தொழிற்படும் முறையினை இச் செய்யுளில் எடுத்துரைக்கின்றார் ஆசிரியர்.




16. அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள்

அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் சிந்தை இவை

பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு

உற்றது சிந்திக்கும் உணர்

பதவுரை

அந்தக் கரணம் அகக் கருவிகளை

அடைவே வரிசைப்பட

உரைக்க யாம் கூற

கேள் கேட்பாயாக

அந்த மனம் மனமும்

புத்தியுடன் புத்தியோடு

ஆங்காரம் அகங்காரமும்

சிந்தை சித்தமும் ஆகியவை

இவை இக்கருவிகளாம்

பற்றி பொறிவழியாக வந்ததை மனம் பற்ற

அது நிச்சயித்து மனம் பற்றியதனைப் புத்தி இஃது இன்னது என்று நிச்சயிக்க

பல்கால் எழுந்திருந்து அகங்காரம் இச்செயல்களுக்கு அடி நிலையாக அமைந்து நான் இதனைச் செய்வேன் எனப் பலகாலும் முந்தி எழ

அங்கு உற்றது சிந்திக்கும் அங்ஙனம் அறியப்பட்டதைச் சித்தம் மீள மீளச் சிந்திக்கும்

உணர் அந்தக் கரணங்களின் செயல்களை இவ்வாறு உணர்ந்து கொள்.




பொழிப்புரை

அகக்கருவிகள் நான்கினையும் முறையே கூறுகிறோம். கேள், அவைமனம், புத்தி, அகங்காரம், சித்தம் என அழைக்கப்பெறும். புறத்தே உள்ள ஒரு புலனை அதற்குரிய பொறியானது கவர்ந்து தர, மனம் அதனைப் பற்றும், மனம் பற்றியதனை புத்தி இஃது இன்னது என்று நிச்சயிக்கும் அகங்காரம் இச்செயல்களுக்கு அடி நிலையாக அமைந்து முன்னும் பின்னும் யான் செய்வேன் என முந்தியெழும் சித்தம் உற்ற அப்பொருளைப் பற்றி மீள மீளச் சிந்திக்கும்.




விளக்கம்

ஆன்மா இந்நான்கு கருவிகளையும் பற்றி நின்று உலகப் பொருள்களைச் சிறப்பாக உணர்ந்து அவற்றில் அழுந்துகிறது.




மனம்

நிருவிகற்பக் காட்சியின் பின்னர் ஆன்மா மனத்தைப் பற்றி நின்று இஃது அதுவாகுமோ, இதுவாகுமோ என்று பல வகையில் ஐயுறும். இங்ஙனம் ஐயுறுவதற்குக் கருவியாவது மனமாகும்.




புத்தி

பின் ஆன்மா புத்தியைப் பற்றி நின்று அப்பொருளின் பெயர், இனம், குணம், தொழில் முதலியவற்றை உணருமாற்றால் இஃது இன்னதே என்று துணியும். இவ்வாறு துணிவதற்குக் கருவியாவது புத்தியாகும்.




அகங்காரம்

இனி எச்செயலிலும் ஆன்மா முன்னர் முனைத்து எழுவதற்குக் கருவியாவது அகங்காரமாகும். அகங்காரம் என்பதற்கு யான் என்று எழுவது என்பது பொருள். இஃது ஆங்காரம் என்றும் வழங்கப் பெறும். எனவே மனம் நிருவிகற்பக் காட்சியைப் பற்றும் பொழுதும். புத்தி அதனை இன்னது என்று நிச்சயிக்கும் பொழுதும் ஆன்மா இடையிடையே அகங்காரத்தைப் பற்றி எழுதல் உண்டாகும் இது பற்றியே பல்கால் எழுந்திருந்து என்றார் ஆசிரியர். புத்தி நிச்சயித்த பின்பும் அகங்காரத்தின் செயற்பாடு வேண்டி உள்ளது. எவ்வாறெனில், நிச்சயித்தலின் பயன் அப்பொருளில் ஆன்மா அழுந்தி நுகர்வதுதான். அதற்கும் ஆன்மா யான் இதனை நுகர்வேன் என்று அகங்காரத்தைப் பற்றி முன்னர் எழ வேண்டும். இவ்வாறு நிச்சயித்த பின்பும் அகங்காரம் எழுதலின் நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து என நிச்சயித்தலின் பின்னர் அகங்காரத்தின் செயற்பாட்டை வைத்தார் ஆசிரியர்.




சித்தம்

இனி அழுந்தி அறிதலே அனுபவம் அல்லது நுகர்ச்சி எனப்படுகிறது. ஆன்மா தான் நிச்சயித்த பொருளின் தன்மைகளை எல்லாம் மீள மீளப் பலவாறு சிந்திக்கும் போதே அப்பொருளில் அழுந்தும் நிலை உண்டாகும். அவ்வாறு உற்று உற்றுச் சிந்திப்பதற்குக் கருவியாய் இருப்பது சித்தம் ஆம் இது பற்றியே உற்றது சிந்திக்கும் உணர் என்றார் ஆசிரியர். அனுபவமாகிய முடி நிலைக்குச் சித்தமே உதவியாய் இருத்தலின் சித்தத்தின் செயலை இறுதியில் வைத்து முடித்தார்.




கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக

சித்தத்தின் செயலை சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து விளக்கியுள்ளார் சேக்கிழார். சுந்தரமூர்த்திகள் தில்லை சென்று பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் பெருமானை நேர் நின்று கண்டார். அத்திருக்கோலத்தில் ஈடுபட்டு மெய்ம்மறந்து நின்றார். அவரது மனம் வேறு எப்பொருளையும் பற்றவில்லை. புத்தி வேறு பொருளிடத்தில் செல்லவில்லை. அகங்காரம் வேறு பொருளை அறிய எழவில்லை. சித்தம் மட்டுமே செயற்பட்ட நிலை அது. அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக, அவர் இறைநினைவில் மீளமீள ஈடுபட்டு அழுந்தி நின்ற அனுபவ நிலையைச் சேக்கிழார் நுட்பமாக எடுத்துக்காட்டியுள்ளார்.




உற்றதை மீளமீளச் சிந்தித்தல்

இனி புதிதாக வரும் பொருள்களை மட்டுமே சித்தம் சிந்திக்கும் என்பதில்லை. முன்னரே புத்தி உணர்ந்து வைத்துள்ள பொருள்களையும் சித்தம் மீளப்பற்றி நின்று சிந்திக்கும்; நாம் முன்பு நிகழ்ந்தவற்றையெல்லாம் இப்பொழுது நினைத்து வருந்துகிறோம். அல்லது மகிழ்கிறோம். முன்பு நடந்த சில இனிய நிகழ்ச்சிகளை இப்பொழுது நிகழ்வது போல எண்ணிக் களிக்கிறோம். இப்படியெல்லாம் சிந்திப்பதற்குச் சித்தமே கருவியாக உள்ளது. முன்னரே உணர்ந்தவற்றை சித்தமானது மீளச் சிந்திக்கும் என்பதற்கு ஒரு சான்று தருவோம். பழங்காலத்தில் ஒரு புலவர் இருந்தார். முதுமையே அவரைக்கண்டு வெறுக்கும் அளவுக்கு நரையும் திரையுமாய் மூப்புற்று விளங்கினார். நடக்கும் வலிமையைக் கால்கள் இழந்து விட்டன கோல் ஊன்றியே நடக்க வேண்டும். உடலில் நடுக்கம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து அவரால் பேச முடியாது. இடையிடையே இருமல் வந்து தொல்லை கொடுத்தது.




அந்நிலையில் அவர் கடந்து போன வாழ்க்கையைத் திரும்ப நினைத்துப் பார்த்தார். இளமையில் நான் எப்படி இருந்தேன்! கவலை என்பதை அறியாத அப்பருவத்தில், ஒளிவு மறைவு என்பதை அறியாத இளம்பிள்ளைகளுடன் நான் எப்படியெல்லாம் ஆடித் திரிந்தேன்! ஒரு சமயம் நான் துணிச்சலான ஒரு செயலைச் செய்தேன். என் இளைய நண்பர்களுடன் ஒரு நீர் நிலைக்குச் சென்றேன். அது ஆழமான நீரை உடைய கேணி. அதன் கரையிலே ஒரு மரம். அதன் ஒரு கிளை வளைந்து தாழ்ந்து கேணியின் நீர்ப்பரப்பின் மேலாகச் சென்றது. அதைப் பார்த்ததும் நண்பர்களுக்கு என்னுடைய திறமையைக் காட்ட இது ஒரு வாய்ப்பு என்று கருதினேன். நான் அந்த மரத்தின் மீது ஏறி நீர்ப்பரப்புக்கு மேலாக இருந்த கொம்பினை அடைந்தேன். அங்கிருந்து துடும் என அந்த ஆழமான மடுவில் குதித்தேன். கீழே மூழ்கிச் சென்றேன். தரையைத் தொட்டேன். அது மட்டுமா! தரையில் உள்ள மணலில் ஒரு கைப்பிடியை எடுத்துக்கொண்டு மேலே நீர்ப்பரப்பிற்கு வந்தேன். கரையில் நின்றவரெல்லாம் வியந்து கைதட்டும் படியாக அம்மணலை அவர்களுக்குக் காட்டினேன். அவர்களிடையே அப்பொழுது ஒரு வீரனாகக் காட்சியளித்தேன் அந்த இளமை எங்கே போயிற்று? இப்பொழுது பொல்லாத முதுமை வந்து வாட்டுகிறது. தண்டினை ஊன்றித் தளர்ந்து இருமலிடையே சில சொற்களே பேசும் நிலைக்கு ஆளானேன். அந்தப் பழைய காலம் மீண்டும் வருமா? இப்படிக் கழிந்து போனவற்றை மீள எண்ணிஎண்ணி இரங்குகிறார் அப்புலவர்! அவர் மட்டுமா? நாமும் கூட அதைத்தான் செய்கிறோம். உற்றது சிந்திக்கும் உணர் என்ற ஆசிரியரின் வாக்கு எவ்வளவு உண்மையாக உள்ளது.




இனி, அசுத்த மாயையிலிருந்து தோன்றும் வித்தியா தத்துவங்கள் 7

பூதங்கள் தொடங்கி அந்தக்கரணங்கள் இறுதியாக உள்ள ஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கினையும் ஆசிரியர் விளக்கிய முறையில் இதுகாறும் அறிந்தோம். இக்கருவிகள் மட்டுமே ஆன்மாவிற்குப் போதியன அல்ல. இவற்றுக்கு மேலும் வேறு கருவிகள் தேவைப்படுகின்றன. இஃது ஏன்? என்று வினவலாம். அவ்வினாவிற்கு விடை கூறுவோம். ஒன்றினை அறிதல், அதனை விரும்புதல், அதற்காக முயலுதல் என்னும் முத்திறனும் உயிருக்கு இயல்பாக உள்ளது. உயிருக்கு அமைந்த இம்மூன்றனுள் அறியும் திறன் ஞானசத்தி எனப்படும் விழையும் திறன் இச்சா சத்தி எனப்படும். செயல் திறன் கிரியா சத்தி எனப்படும். இந்த ஞானம், இச்சை, கிரியை என்னும் மூன்றும் செயற்படும் போதே உயிருக்கு உலக போகமாகிய நுகர்ச்சிப் பொருள்களிடத்தில் நாட்டம் உண்டாகும். அவற்றை அனுபவிக்கப்புகும் முயற்சி உண்டாகும். ஆயின், இவை செயற்பட முடியாதபடி ஆணவ மலமாகிய தளை உயிரைப் பிணித்திருக்கின்றது. அம்மலப்பிணிப்பிலிருந்து விடுபட்டால் அன்றி உயிரின் ஞானம், இச்சை, கிரியைகள் செயற்பட இயலாது. அவை செயற்படாத போது உலக போகத்தில் நாட்டமும் நோக்கமும் நோக்கமும் உண்டாகாவிடில் உலக போகமாகிய நுகர்ச்சிப் பொருள்கள் இருந்து என்ன பயன்? இந்திரியங்கள், அந்தக்கரணங்கள் முதலிய கருவிகள் எல்லாம் இருந்து என்ன பயன்? சுருங்கக் கூறினால் ஆன்ம தத்துவங்களால் என்ன பயன்? ஆணவ மலத்திலிருந்து நீங்கி உயிரின் அறிவு, விழைவு, செயல்கள் நன்கு செயற்படும் நிலை வரும்பொழுதுதான் உயிரானது மேற்கூறிய ஆன்மதத்துவங்களாகிய அகக் கருவிகள் புறக் கருவிகளைக் கொண்டு உலகப் பொருள்களை அறிந்து அனுபவிக்க முடியும்.




ஆகவே உயிரினது அறிவு இச்சை செயல்களை ஆணவ மலப்பிணிப்பிலிருந்து விடுவித்து உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்துவதாகிய உதவியைச் செய்வதற்குச் சில கருவிகள் தேவைப்படுகின்றன. மேலும் உயிர் பெறும் இன்ப துன்ப நுகர்ச்சி காலத்திற்கு உட்பட்டது என்பதை அறிவோம். உரிய கால அளவிற்கு மேல் நாம் நுகரும் இன்பத்தை நீட்டித்துக் கொள்ளவும் முடியாது. உரிய கால அளவு முடிவதற்குள்ளே நாம் வெறுக்கும் துன்பத்தை விலக்கிக் கொள்ளவும் முடியாது என்பது அனுபவ உண்மை. ஆகவே காலம் என்ற கருவியும் வேண்டும் என்பது புலனாகும். இது காறும் கூறியவற்றால் ஆன்ம தத்துவங்கள் மட்டும் போதா அவற்றிற்கு அப்பாற்பட்டனவாய் வேறு கருவிகளும் தேவைப்படுகின்றன என்பது தெளிவாகும். முன்பு கூறிய இருபத்துநான்கு தத்துவங்களுக்கு மேல் உயிருக்கு உதவும் கருவிகளாக ஏழு தத்துவங்கள் கொள்ளப்படுகின்றன. அவை பிரகிருதியிலிருந்து தோன்றுவனவல்ல. பிரகிருதிக்கு மேலேயுள்ள அசுத்த மாயையிலிருந்து தோன்றுவனவாகும். அவை மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம் புருடன் என்பன. இவை அசுத்த மாயை தத்துவங்கள் எனப்படும். இவை ஒவ்வொன்று பற்றியும் இனிக் காண்போம்.




மாயை

விரிவுடைய அசுத்த மாயையின் ஒரு சிறு பகுதியே மாயை என்னும் முதல் தத்துவமாகும். இந்த மாயை தத்துவத்திலிருந்தே காலம் முதலிய பிற தத்துவங்கள் தோன்றும். எனவே பிற அசுத்த தத்துவங்கள் தோன்றுவதற்கு ஏற்புடையதாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு பகுதியே மாயை எனக் கூறலாம். இதனை ஓர் உதாரணம் கொண்டு விளக்கலாம். இம்மண்ணுலகம் மிகப் பெரியது. இதன் ஒரு சிறு பகுதியே மண் எடுத்துக் குடம் முதலியன செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல விரிவுடைய அசுத்த மாயையின் ஒரு சிறு பகுதியே பிற தத்துவங்கள் தோன்றுவதற்குரிய தகுதி உடையதாய், மாயை அல்லது மாயா தத்துவம் எனப்படுகிறது.




காலம்

இம்மாயா தத்துவத்திலிருந்து முதலில் காலம் என்னும் தத்துவம் தோன்றும். இக் காலத்தத்துவத்தைச் சிறிது விளக்குவோம். காலம் என்பது இன்றி எச்செயலும் நடவாது என்பதை அனுபவத்தில் நாம் அறியலாம். எதற்கும் காலம் நேரம் வரவேண்டும் என்று மக்கள் பேசிக்கொள்வது அன்றாட நிகழ்ச்சி. ஒரு பெற்றோருக்குத் திருமண வயதில் பெண் இருக்கிறாள். அக்குடும்பத்தில் செல்வத்துக்குக் குறைவில்லை. அப்பெண்ணின் அழகுக்குக் குறைவில்லை. அப்பெற்றோரின் முயற்சிக்கும் குறைவில்லை. ஆயினும் அப்பெண்ணுக்குத் திருமணம் கூடாமலே நாட்கள் செல்லுகின்றன. எல்லாருக்கும் ஒரே கவலை. ஒருநாள் எதிர்பாராத நிலையில் எதிர்பாராத இடத்திலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே திருமணம் இனிதாக நடந்து முடிகிறது. இப்படி நடப்பதை வைத்துத்தான் காலம் வந்தால் எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று சொல்லுகிறார்கள். இதனால் எல்லாம் இருப்பினும் செயல் நிகழ்தற்குக் காலம் வேண்டும் என்பது தெளிவாகிறது. மூதுரை என்னும் நீதி நூல் இக்கருத்தைப் பின்வருமாறு சொல்லுகிறது. பழ மரங்கள் எல்லாக்காலத்திலும் பூத்துக் காய்த்துக் கனிகளைத் தருவதில்லை. அவ்வக்காலம் வந்தால் மட்டுமே காய்த்துப் பழுத்துப் பயன் தருவதைக் காண்கிறோம். அதுபோல ஒருவர் எவ்வளவு தான் முயன்றாலும் அவர் ஈடுபடுகிற செயல் அவர் நினைத்த வண்ணமே நிறைவேறிவிடுவதில்லை. அதற்குரிய காலம் வரும்போது தான் அக்காரியம் நிறைவேறும்.




அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா

இதுவரை கூறியவற்றால் கால தத்துவத்தின் இன்றியமையாமை ஒருவாறு விளங்கும். காலம் இறந்தகாலம் என்றும், நிகழ்காலம் என்றும், எதிர்காலம் என்றும் மூன்று பகுதிப்பட்டு நிற்கும். இறந்த காலம் செயலை முடிக்கும். நிகழ்காலம் செயலை நிகழ்விக்கும் எதிர்காலம் செயலைத் தோற்றுவிக்கும். காலம் ஒவ்வொரு பொருளிலும் வேறுவேறாக உள்ளது. மேலும் அளவால் பெரிதும் சிறிதுமாய் உள்ளது. ஒருவர் உடம்பில் காலம் நெடியதாய் இருக்குமாயின் அவர் நீண்ட ஆயுளை உடையவராகிறார் அவ்வாறின்றி அவர் உடம்பில் உள்ள காலம் அளவால் சிறியதாய் இருக்குமாயின் அதற்கேற்ப அவர் குறுகிய ஆயுளை உடையவராகிறார். இவ்வாறு பொருள் தோறும் காலம் வெவ்வேறு அளவினதாய் அமைந்து செயலை நிகழ்விக்கின்றது. காலம் சடப்பொருளேயாதலின் அது தானே செயற்படாது என்பதையும், இறைவனது சத்தி செலுத்தவே அது தன் காரியத்தைச் செய்யும் என்பதையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.




நியதி காலத்தின் பின்னர் மாயா தத்துவத்தினின்றும் நியதி என்னும் தத்துவம் தோன்றும். நமது வாழ்வில் நாம் நினைத்தபடியெல்லாம் நடந்து விடுவதில்லை. ஒருவர் படிக்கின்ற காலத்தில் மருத்துவத்துறையில் எப்படியாவது சேர வேண்டும் என்று முயல்கிறார். ஆனால் அது முடியாமலே போய்விடுகிறது மற்றொருவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தும் வேறொரு பெண்ணைக் கைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இன்னொருவர் பதவி உயர்வு பெறுதற்குரிய தகுதி எல்லாம் பெற்றிருந்தும் அவருக்குக் கிட்டாமல் அவர்க்குக் கீழ்நிலையில் உள்ள மற்றொருவருக்கு அது கிடைத்து விடுகிறது. இவற்றுக்கெல்லாம் காரணமாய் இதனையே நுகர்க ஏனையவற்றை நுகரற்க என வரையறுத்து நிறுத்துவது நியதி தத்துவமாகும். நியதி தத்துவம் அவரவர் செய்த வினையின் பயன்களை அவரவரே அனபவிக்குமாறு நெறிப்படுத்தி நிற்பதாகும். இறைவனது சத்தியே இவ்வாறு நியமித்து நடத்தும் என்று கொள்ளலாம் அல்லவா? நியதி என்ற ஒரு கருவி எதற்கு? என வினவலாம். கட்டு நிலையில் இறைவனது சத்தி தானே நேராக எதனையும் செய்யாது ஏதேனும் ஒரு கருவியைக் கொண்டு அதன் வழியாகவே செய்யும். ஆதலால் இறைவனது சத்தி வினைகளை வரையறுக்கும் செயலுக்கு இந்நியதி தத்துவம் கருவியாய் நிற்கிறது எனலாம். நியதி தானே சுதந்திரமாகச் செயற்படாது. என்பதையும், இறைவனது சத்தியின் வழி நின்றே செயற்படும் என்பதையும் கருத்திற்கொள்ளுதல் வேண்டும். நியதி வினைப்பயன்களை அவ்வவ்வுயிர்களே நுகரும் படி செய்யும் எனவும், காலம் அந்நுகர்ச்சியின் அளவை வரையறுத்து நிற்கும் எனவும் அறிந்தோம். இனி உயிர்கள் நுகர்ச்சியில் ஈடுபட வேண்டுமாயின் அவற்றின் அறிவு இச்சை செயல்கள் ஆணவ மல மறைப்பிலிருந்து விடுபட்டுத் தொழிற்பட வேண்டும் எனச் சற்று முன்னே கூறினோம். அங்ஙனம் அவை தொழிற்படுவதற்கு உதவும் கருவிகள் கலை, வித்தை, அராகம் என்பனவாகும். அக்கருவிகள் தோன்றும் முறையை இனிப் பார்ப்போம்.




கலை

மாயாதத்துவத்தினின்றும் நியதி தத்துவம் தோன்றிய பின்னர், கலை என்ற தத்துவம் தோன்றும். இக்கருவி ஆணவ மலமறைப்பைச் சிறிது நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை முதலில் எழுப்பித் தொழிற்படச்செய்யும். இங்கு ஓர் ஐயம் எழலாம். அறிவுப் பொருளாகிய ஆன்மா ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டு, அறியுந்திறனை இழந்து அறிவற்ற சடப்பொருள் போலக் கிடக்கும் நிலையில் முதலில் அதன் அறிவாகிய ஞான சத்தியையல்லவா எழுப்புதல் வேண்டும். அதனை விடுத்துக் கிரியா சத்தியை முதலில் எழுப்புவது எதற்கு? என்பதே அவ்ஐயம். ஞானசத்தியை முதலில் எழுப்புவதாக வைத்துக் கொள்வோம். ஞானசக்தி ஆணவ மலப் பிணிப்பிலிருந்து சற்று விடுபட்டு எழுந்தாலும் அது தானே செயற்படாது. ஆன்மா அதனைத் தொழிற்படுத்த வேண்டும் அப்பொழுது தான் ஞானசத்தி தொழிற்படும். ஆன்மா அதனைத் தொழிற்படுத்த வேண்டுமானால் அதற்குக் கிரியா சத்தி வேண்டும். கிரியா சத்தியின்றி எச்செயலும் நிகழாது. கிரியா சத்தி விளங்கப் பெற்ற போதே ஆன்மா எச்செயலையும் செய்வோன் என்ற நிலையை அடைகிறது. ஆதலால் ஞான சத்தி தொழிற்படுவதற்கும் கிரியா சத்தி வேண்டப்படுகிறது. அது பற்றியே கிரியா சத்தியை முதலில் எழுப்பும் கலை என்ற கருவி தோன்றுவதாயிற்று. கலித்தல் என்ற சொல்லிலிருந்து கலை என்பது வந்தது. கலித்தல் என்பதற்கு நீக்குதல், செலுத்துதல் என்ற பொருள்கள் உண்டு. எனவே ஆணவ மலத்தை நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை எழுப்பிச் செலுத்துகிற கருவிக்குக் கலை என்று பெயரிட்டது பொருத்தமாகும்.




வித்தையும் அராகமும்

கலை தோன்றிய பின்னர் அக் கலையிலிருந்தே வித்தை என்னும் தத்துவம் தோன்றும். வித்தை என்ற அக்கருவி ஆணவ மல சத்தியைச் சிறிது அடக்கி ஆன்மாவின் ஞான சத்தியை எழுப்பும். வித்தை தோன்றி பின்னர் அதிலிருந்தே அராகம் என்னும் தத்துவம் தோன்றும். அராகம் என்ற அக்கருவி ஆன்மாவின் இச்சா சத்தியை எழுப்பும். முன்னே சொன்ன காலம், நியதி, கலை என்னும் மூன்றும் மாயையிலிருந்து நேரே தோன்ற, வித்தையும் அராகமும் ஆகிய இரண்டும் அங்ஙனம் மாயையிலிருந்து நேரே தோன்றாமல் கலையிலிருந்து வித்தையும் அவ்வித்தையிலிருந்து அராகமும் தோன்றுவது நோக்குதற்குரியது. இதற்கான காரணத்தைப் பின்வருமாறு கூறலாம்.




ஆன்மாவினது அறிவு ஒன்றே அறிதல் விழைதல் செய்தல் என்னும் செயல் பற்றி ஞான சத்தி, இச்சா சத்தி, கிரியா சத்தி என மூன்றாக வழங்கப்படுகிறது. எனவே இம் மூன்றும் தம்முள் வேறல்ல என்பதும். அறிவாகிய ஒன்றன் நிலை வேறபாடே என்பதும் விளங்கும். கிரியா சத்தியும் ஞான சத்தியும் தம்முள் மாறுபட்டனவல்ல ஆகையால் கிரியையை எழுப்புவதாகிய கலையிலிருந்தே ஞானத்தை எழுப்புவதாகிய வித்தை தோன்றுவதாயிற்று. இச்சா ஞானத்தின் நிலை வேறுபாடேயாகையால் ஞானத்தை எழுப்புவதாகிய வித்தையினின்றும் இச்சையை எழுப்புவதாகிய அராகம் தோன்றுவதாயிற்று.




கிரியையும் ஞானமும் இச்சையும் வேறுவேறல்லவாயின் கலையாகிய ஒரு கருவியே இம்மூன்றையும் எழுப்புதல் இயலாதோ? கலை, வித்தை, அராகம் என வேறு வேறு கருவிகள் எதற்கு? எனக் கேட்கலாம். இங்கே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கருவி ஒரு நேரத்தில் ஒரு தொழிலைச் செய்யுமேயன்றிப் பல தொழில்களை ஒருங்கு செய்யமாட்டாது. ஆதலால் கிரியை, ஞானம், இச்சை ஆகிய மூன்றும் ஒருங்கே வேண்டப்படும்போது கலை என்ற கருவி கிரியையை எழுப்புதலாகிய ஒரு தொழிலை மட்டும் செய்யும் என்பதும், ஞானத்தையும் இச்சையையும் எழுப்புதலாகிய தொழிலைச் செய்வதற்கு வித்தையும் அராகமும் ஆகிய வேறு கருவிகள் வேண்டியுள்ளன என்பதும் தெளிவாகும்.




வித்தை என்னும் சொல் அறிவு எனப் பொருள்படும். ராகம் என்னும் வடசொல்லுக்கு விருப்பம் என்பது பொருள். அச்சொல்லே தமிழில் அராகம் என வந்துள்ளது.




இதுகாறும் வந்தவற்றுள் அராகம் ஆன்மாவின் இச்சா சத்தியையும் வித்தை ஞான சத்தியையும், கலை கிரியா சத்தியையும் விளக்கி ஆன்மாவை நுகர்ச்சியில் ஈடுபடச் செய்யும். நியதி இதனையே நுகர்க என வரையறுத்து நிறுத்தும். காலம் இந்த நுகர்ச்சியை இத்தனைக் காலம் நுகர்க என எல்லைப்படுத்தும். இவ்வைந்து கருவிகளும் ஆன்மாவுக்கு இன்றியமையாதனவாய். ஆன்மாவோடு எப்பொழுதும் நீங்காமல் சட்டை போல ஒன்றாய் ஒட்டியேயிருக்கும். அதனால் அவை பஞ்சகஞ்சுகம் என்னும் பெயர் பெறும். கஞ்சுகம்சட்டை.




புருடன்

இந்த ஐந்து சட்டைகளையும் அணிந்து நிற்கும் நிலையில் ஆன்மாபுருடன் எனப் பெயர் பெறும். போகத்தை நுகரும் தகுதியுடைமை பற்றி ஆன்மா புருடன் எனப்படுகிறது. இந்நிலையே புருடதத்துவம் எனச் சொல்லப்படுகின்றது. தத்துவம் என்று கூறப்படினும் இஃது ஏனையவை போல ஒரு தனித் தத்துவம் அன்று என்பது அறிதற்குரியது. பஞ்சகஞ்சுகத்துடன் கூடிப் புருடன் என நின்ற ஆன்மா பொதுவகையில் போகத்தை நுகரும் தகுதியைப் பெறும் பின்னர் பிரகிருதியோடு தொடர்பு கொள்ளும் போதே அத்தகுதியைச் சிறப்பு வகையாற்பெறும். பிரகிருதியே உலக அனுபவத்தைத் தருவது ஆதலால் அதனோடு பொருந்தும் போதே ஆன்மா புருடனாம் நிலையைச் சிறப்பாகப் பெறுகிறது. இதனால் காலம் முதலிய ஐந்தினாலே வரும் தகுதி பொதுத் தகுதி என்பதும், பிரகிருதியினாலே வரும் தகுதி சிறப்புத் தகுதி என்பதும் விளங்கும்.




பிரகிருதியைப் பற்றி முன்னே குறிப்பிட்டபோது அஃது அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியம் எனச் சொன்னோம். அது பொதுவாகச் சொன்ன கூற்றேயாகும். குறிப்பிட்டுச் சொல்வதானால், அது அசுத்த மாயையின் காரியங்களில் ஒன்றாகிய கலையிலிருந்து தோன்றுவதாகும். தோசை என்ற உணவுப் பண்டத்திற்கு மூலப் பொருள் எது என்று கேட்டால் மாவு என்றும் சொல்லலாம்; அரிசி என்றும் சொல்லலாம். மாவு நேரான மூலப்பொருள். அரிசி முடிவான மூலப்பொருள். அதுபோல, பிரகிருதிக்குக் கலை நேரான முதற்காரணம்; அசுத்த மாயை முடிந்த முதற்காரணம் என அறிதல் வேண்டும்.




கலை என்னும் தத்துவத்தினின்றும் வித்தை என்னும் தத்துவமும் அவ்வித்தையினின்றும் அராகம் என்னும் தத்துவமும் தோன்றும் எனக் கூறினோம். அவற்றின் பின்னர்க் கலையினின்றும் நேரே பிரகிருதி தோன்றும். ஆன்மா பிரகிருதியைப் பொருந்திய நிலையில் நுகர்வோன் என்னும் சிறப்புத் தகுதியைப் பெற்றுப் புருடனாய் நிற்கும் எனக் கண்டோம். காலம் முதலிய ஐந்தோடு புருடன் என்பதைச் சேர்க்கத் தத்துவங்கள் ஆறாகும். அவற்றோடு முதலிற் சொன்ன மாயா தத்துவம் என்பதைச் சேர்க்கத் தத்துவங்கள் ஏழாகும். இவ்வாறு காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை (மாயா தத்துவம்) ஆகிய இவ் ஏழும் அசுத்த மாயா தத்துவங்கள் ஆயின.




அசுத்த மாயை

1. மாயா தத்துவம் (மாயை) (காலம், நியதி, கலை(பிரகிருதி, வித்தை(அராகம்), புருடன்))




இவற்றுள் மாயையும் புருடனும் நீங்கலாக மற்றையவை பரிணாம முறையில் தோன்றுவனவாகும். மாயையின் ஒரு கூறு காலமாகப் பரிணமிக்கும். மற்றொரு கூறு நியதியாகப் பரிணமிக்கும். மற்றுமொரு கூறு கலையாகப் பரிணமிக்கும். கலையின் ஒரு கூறு வித்தையாகவும். வித்தையின் ஒரு கூறு அராகமாகவும் பரிணமிக்கும். கலையின் மற்றொரு கூறே பிரகிருதியாகப் பரிணாமம் அடையும் என்பது அறிதற்குரியது.




வித்தியா தத்துவம் பெயர்க் காரணம்

அசுத்த மாயா தத்துவங்கள் ஏழும் வித்தியா தத்துவம் என்னும் பெயரைப் பெறும். பெயருக்கான காரணத்தை நோக்குவோம். இத்தத்துவங்கள் இறைவனது ஏவல் வழி நிற்கும் அனந்த தேவர் என்பவரால் தோற்றவும் ஒடுக்கவும்படுகின்றன. அவர் வித்தியேசுரருள் சிறந்தவர். எனவே அவர் பெயரால் இவை வித்தியா தத்துவங்கள் எனப்படுகின்றன. வித்தை இங்கு வித்தியேசுரரைக் குறிக்கும். இது மரபாகச் சொல்லி வரும் விளக்கம். இனி வித்தை என்பது அறிவாகும். எனவே ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களைத் தோற்றுவிக்கும் கருவிகளாதல் பற்றி வித்தியா தத்துவம் எனப்பட்டன என்று கூறுதலும் அமையும். இவ்வித்தியா தத்துவங்களுக்கு போசயித்திரு காண்டம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவை ஆன்மாவிடத்தில் நுகர்வோனாம் தன்மையை உண்டாக்குதலால் இப்பெயர் பெற்றன. போசயித்திரு நுகர்வோன்; காண்டம் தொகுதி. இனி ஆசிரியர் வழியில் நின்று வித்தியா தத்துவங்களைப் பற்றிய செய்யுட்களின் பொருளைக் காண்போம்.

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1.5



11. ஞானேந் திரியங்கள் நன்றா உரைக்கக் கேள்

ஊன மிகு பூதம் உற்றிடமா ஈனமாம்

சத்தாதி யை அறியும் தானம் செவி தோல் கண்

அத்தாலு மூக்கென்று அறி.


பதவுரை

ஞானேந்திரியங்கள் ஞானேந்திரியங்களின் இயல்பை

நன்றா தெளிவாக

உரைக்கக் கேள் உரைக்கின்றோம் கேட்பாயாக.


(அவ்விந்திரியங்கள்)

ஊனம் மிகு தாமத குணம் மிகந்த

பூதம் சூக்கும பூதம் எனப்படும் தன்மாத்திரைகளை

இடமா உற்று இடமாகக் கொண்டு

ஈனமாம் இழிந்தனவாகிய

சத்த ஆதியை ஓசை முதலிய விடயங்களை

அறியும் அறிந்து வரும்

தானம் அவ்விந்திரியங்கள் தங்கித் தொழிற்படும் இடமாகிய உறுப்புக்கள்

செவி தோல் கண் செவியும், தோலும், கண்ணும்

அத்தாலு மூக்கு என்று அந்த நாக்கும் மூக்கும் என்று

அறி அறிவாயாக.

பொழிப்புரை

ஞானேந்திரியங்கள் ஆகிய ஐம்பொறிகளின் இயல்பை யாம் விளக்கமாகச் சொல்வோம். நீ கேள். ஞானேந்திரியங்கள், சூக்கும பூதங்கள் எனப்படும் தன் மாத்திரைகளைத் தமக்கு இடமாகக் கொண்டு ஓசை முதலிய புலன்களை அறிந்துவரும். அவ் இந்திரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உறுப்பில் நின்று ஒவ்வொரு புலனைக் கவரும். அவற்றிற்கு இடமாகிய உறுப்புகள் செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்று அறிவாயாக.


விளக்கம்

இந்திரியங்களுக்கு இடமாய் உள்ளவை

தமிழில் செவி முதலிய உறுப்புக்களின் பெயரே அவ்விடங்களில் நின்று அறியும் இந்திரியங்களுக்கும் பெயராக வழங்குகின்றன. அவ்வவ் உறுப்புக்களில் இருந்து அறியும் ஆற்றல்களே இந்திரியங்கள் எனக் கூறியுள்ளது நினைவிருக்கலாம். எனவே இந்திரியங்களுக்கு இடமாவன உறுப்புக்கள் என்பது விளங்குகிறது. இனி, சூக்கும பூதங்களாகிய தன்மாத்திரைகளும் இந்திரியங்களுக்கு இடமாய் உள்ளன என்று கொள்ளப்படுகிறது. அவ்வாறாயின், இந்திரியங்களுக்கு உறுப்புக்களும் இடம்; தன்மாத்திரைகளும் இடம் என்று ஆகிறது. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது? ஓர் உவமையின் மூலம் இதனை விளக்குவோம்.


ஊர்தியும் நிலமும் உவமையாதல்

ஒருவன் ஊர்தியில் ஏறிச் செல்கிறான். அவனுக்கு அவ்ஊர்தி நேரே இடமாய் அமைகிறது. அந்த ஊர்திக்கு இடமாய் உள்ளது நிலம். அம்முறையில் நிலமும் அவனுக்கு இடமாகிறது. இந்திரியம் ஊர்தியில் செல்பவனைப் போன்றது. தன்மாத்திரை ஊர்தி போன்றது. உறுப்பு நிலம் போன்றது. இதனால், இந்திரியங்களுக்குத் தன்மாத்திரைகள் நேரே இடம் என்பதும், உறுப்புக்கள் தன்மாத்திரை வழியாக இடம் என்பதும் விளங்கும். இந்திரியம், தன்மாத்திரை, உறுப்பு என்ற இம்மூன்றையும் இணைத்து இனிவரும் செய்யுட்களில் காண்போம்.


ஞானேந்திரியங்கள் அறியும் முறை

12. வான்இடமா நின்று செவி மன்னும் ஒலியதனை

ஈனமிகும் தோல்கால் இடமாக ஊனப்

பரிசம் தனை யறியும் பார்வையின்கண் அங்கி

விரவி உரு வங்காணு மே.


பதவுரை

செவி செவி என்னும் இந்திரியம்

வான் இடமா நின்று (உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

ஒலியதனை ஓசையாகிய புலனை

மன்னும் அறிந்து வரும்

ஈனமிகும் இழிவு மிகுந்த

தோல் தோல் என்னும் இந்திரியம்

கால் இடமாக (உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

ஊனப் பரிசம் தனை குற்றமுள்ள ஊறு என்னும் புலனை

அறியும் அறிந்து வரும்

பார்வை கண் என்னும் இந்திரியம்

அங்கியின் கண் விரவி (உறுப்பாகிய கண்ணில் நிற்கும்) உருவ தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

உருவம் உருவமாகிய புலனை

காணும் அறிந்து வரும்


பொழிப்புரை

செவி என்னும் இந்திரியம் (உறுப்பாகிய காதில் நிற்கும்) சத்த தன்மாத்திரையைப் பற்றி நின்று ஓசையாகிய புலனை அறியும். தோல் என்னும் இந்திரியம்(உறுப்பாகிய தோலில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று ஊறு என்ற புலனை அறியும். கண் என்னும் இந்திரியம் (உறுப்பாகிய கண்ணில் நிற்கும்)உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று உருவம் என்ற விடயத்தை அறியும்.


விளக்கம்

ஆசிரியர் வான் இடமாய் எனவும் கால் இடமாக எனவும், அங்கி விரவி எனவும், பூதங்களை இந்திரியங்களுக்கு இடம் என்று கூறியுள்ளார். நாம் முன்பு கூறியவாறு தன்மாத்திரைகளே இந்திரியங்களுக்கு இடமாக இருக்கவும், பூதங்களை இடம் என்று ஆசிரியர் கூறியது ஏன்? இதற்குப் பின்வருமாறு விடை கூறலாம். தன்மாத்திரைகளும் பூதங்களும் முறையே முளையும் மரமும் போல சூக்குமமும் தூலமுமாய் நிற்பவை, பூதங்களின் சூக்கும நிலையே தன்மாத்திரைகள். தன்மாத்திரைகளோடு பூதங்களுக்கு உள்ள இவ் ஒற்றுமையைக் கருதி ஆசிரியர் தன்மாத்திரைகளுக்குப் பதில் பூதங்களை இடம் என்று கூறினார் எனலாம். மேலும், தெரிந்த பருப் பொருளாகிய பூதங்களைக் கூறித் தன்மாத்திரைகளைப் பெற வைத்தார் என்பதும் ஆசிரியரது இயல்புக்குப் பொருந்துவதேயாகும்.


ஆகவே செய்யுளில் வான் என்பது சத்த தன் மாத்திரயையைக் குறிக்கும். அங்கி என்பது உருவ தன்மாத்திரையைக் குறிக்கும்.


செவி, தோல், கண் ஆகிய இந்திரியங்கள் புறத்தே காணப்படும். காது, தோல், கண் ஆகிய உறுப்புக்களில் நிற்கும் சத்தம், பரிசம், உருவம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு நின்று தம்காரியத்தைச் செய்யும் என்பது கூறப்பட்டது.


ஞானேந்திரியங்கள் அறியும் முறை(தொடர்ச்சி)


13. நன்றாக நீர்இடமா நாஇரதம் தான்அறியும்

பொன்றா மணம் மூக்கு பூஇடமா நின்று அறியும்

என்று ஓதும் அன்றே இறைஆ கமம் இதனை

வென்றார் சென்றார் இன்ப வீடு.


பதவுரை

நா நாக்கு என்னும் இந்திரியம்

நீர் இடமா (உறுப்பாகிய நாவில் நிற்கும்) இரத தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

இரதம் சுவையாகிய புலனை

நன்றாக நல்ல முறையில்

அறியும் அறிந்து வரும்

மூக்கு மூக்கு என்னும் இந்திரியம்

பூ இடமா நின்று (உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த தன்மாத்திரையை இடமாகப் பற்றி நின்று

பொன்றா மணம் கெடாத மணம் ஆகிய புலனை

அறியும் அறிந்து வரும்

என்று இவ்வாறு

இறை ஆகமம் சிவாகமங்கள்

ஓதும் கூறும்

இதனை இவ்விந்திரியங்களை

வென்றார் உலக விடயங்களில் செல்லாதபடி அடக்கிய ஞானிகளே

இன்ப வீடு பேரின்ப வீட்டினை

சென்றார் அடைந்தவராவார்.


பொழிப்புரை

நாக்கு என்னும் இந்திரியம் (உறுப்பாகிய நாக்கில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று சுவையாகிய புலனை நன்றாக அறியும் மூக்க என்னும் இந்திரியம் (உறுப்பாகிய மூக்கில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று மணமாகிய விடயத்தை அறியும். இவ்வாறு சிவாகமங்கள் கூறும். இவ் இந்திரியங்களைப் புலன்களில் செல்லாதபடி அடக்கிய ஞான வீரவே பேரின்ப முத்தியைப் பெறுவார்கள்.

விளக்கம்

முந்திய செய்யுளிற் போலவே இங்கும் பூதங்களாகிய நீர் பூ(நிலம்) என்பன தன்மாத்திரைகளைக் குறிப்பன எனக் கொள்ளல் வேண்டும். நாக்கு, மூக்கு ஆகிய இந்திரியங்கள் புறத்தே காணப்படும் நாக்கு, மூக்கு ஆகிய உறுப்புக்களில் நிற்கும் இரதம். கந்தம் ஆகிய தன்மாத்திரைகளை இடமாகக் கொண்டு நின்று தம் காரியத்தைச் செய்யும் என்பது கூறப்பட்டது.


வென்றார் சென்றார் இன்ப வீடு

ஞானேந்திரியங்கள் ஐந்தும் தத்தம் புலன்களை அறியும் முறையினை மேற்போந்த இரண்டு செய்யுட்களில் வகுத்துக் காட்டிய ஆசிரியர் அவ்விந்திரியங்களை வென்றார் எய்தும் பயனையும் உடன் சேர்த்துக் கூறினார்.


இந்திரியங்களை வெல்லுதல் என்றால் அவற்றைக் கெடுத்தல் என்பது பொருளன்று. சமணரும் சாக்கியரும் புலன்களைக் கவர்கின்ற ஐம்பொறிகளையும் அழிப்பதே அவற்றை வெல்லுதல் என்பர். சைவ சமயத்திற்கு அஃது உடன்பாடன்று ஐம்பொறிகளைக் கெடுத்தொழித்தால் உயிர் யாதொன்றையும் அறிய மாட்டாது அறிவற்ற சடம் போல ஆகிவிடும். ஆதலால் அவற்றைக் கெடுத்திடாது செயற்பட வைத்தே அவற்றால் கவரப்படும் புலன்களில் பற்றின்றி இருத்தலே அவற்றை வெல்லுதலாகும். ஐம்பொறிகள் நம்மைக் கெடுக்கவில்லை. ஐம்பொறிகளின் வழி ஐம்புலன்களின் மேற் செல்லுகின்ற ஆசையே நம்மைக் கெடுக்கின்றது. அவ் ஆசையை ஆரா இயற்கை அவா என்றார் திருவள்ளுவர். ஆராமையாவது நிரம்பாமை. ஐம்புலன்களுக்குச் சார்பாயுள்ள பொருள்களை எவ்வளது தான் பெற்றாலும், எத்தனை காலம்அனுபவித்தாலும் அவற்றின் மீதுள்ள ஆசை நிரம்புவதேயில்லை. அது பற்றியே ஆரா இயற்கை எனப்பட்டது.


உலகம் நிலையற்றது என்பதைக் கூறும் நூல்களைப் பல கால் படித்திருக்கிறோம். அவற்றின் பொருளைப் பலர் விளக்கிப் பேசியதையும் கேட்டிருக்கிறோம். இவ்வாறு உலகம் கானல் நீர் போன்றது என்பதைக் கல்வியினாலும் கேள்வியினாலும் உணர்ந்தாலும் அவையெல்லாம் இந்திரியங்களை அடக்குவதற்குத் துணை செய்யா. நிலையாமையை எவ்வளவுதான் உணர்ந்திருந்தாலும். நம் மனம் நிலையில்லாத ஐம்புலப் பொருள்களின் மேல் அவாக் கொண்டு அவற்றை நோக்கியே முடிவின்றி ஓடுகிறது. அவ்வாறு ஓடுகின்ற மனத்தை அடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர் வழியாகும். ஓடுகின்ற மனத்தை அடக்குமாறு எவ்வாறு? மதங் கொண்டு செல்கின்ற யானையை ஒரு தறியில் கட்டிவிடுதல் போல, ஐம்புலப் பொருள்களை விரும்பிச் செல்கின்ற மனத்தை அச் செலவினின்றும் மீட்டு, சிவபெருமானது உருவத் திருமேனியிலே படிந்து நிற்குமாறு சிவ வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும். இறைவனை உள்ளன்போடு வழிபாடு செய்து வரின் ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். இந்திரியங்களும் பிற வழியிற் செல்லாது.


கண்காள் காண்மின்களோ கடல்

நஞ்சுண்ட கண்டன் தன்னை

செவிகாள் கேண்மின்களோ சிவன்

எம்இறை செம்பவள

எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்

செவிகாள் கேண் மின்களோ


வாயே வாழ்த்து கண்டாய் மத

யானை யுரிபோர்த்துப்

பேய் வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை

வாயே வாழ்த்து கண்டாய்


என்று அருளாசிரியர் அறிவுறுத்திய வழியிற் செல்லும், எனவே, இந்திரிய அடக்கம் என்பது உண்மையில் மன அடக்கமேயாகும். மேற்கூறிய வகையில் இந்திரியங்களையும், மனத்தையும் அடக்கி அவற்றை ஞானநெறியில் செலுத்தியவர் பேரின்ப வீட்டைத் தலைப்படுவர் என்பது இச் செய்யுளில் கூறப்பட்டது.


ஞானேந்திரியங்கள் அறியும் முறையைப் பின்வருமாறு அட்டவணைப் படுத்திக் காட்டலாம்.

இந்திரியம் சார்பு/பற்றுக்கோடு உறுப்பாகிய இடம் அறியப்படும் புலன்

செவி சத்த தன்மாத்திரை காது ஓசை

தோல் பரிச தன்மாத்திரை தோல் ஊறு

கண் உருவ தன்மாத்திரை கண் ஒளி

நாக்கு இரத தன்மாத்திரை நாக்கு சுவை

மூக்கு கந்த தன்மாத்திரை மூக்கு மணம்


இனி, கன்மேந்திரியங்கள்


14. கண்ணுதல்நூல் ஓதியிடும் கன்மேந் திரியங்கள்

எண்ணும் வச னாதிக்கு இடமாக நண்ணியிடும்

வாக்குப் பா தம் பாணி மன்னு குதம் உபத்தம்

ஆக் கருதும் நாளும் அது

பதவுரை

கண்ணுதல் நூல் சிவபெருமான் அருளிச் செய்த சிவாகம நூல்

ஓதியிடும் சொல்லுகின்ற

கன்மேந்திரியங்கள் தொழிற் பொறிகள்

எண்ணும் வேறு வேறாய்க் கருதப்படும்

வசன ஆதிக்கு பேச்சு முதலிய செயல்களை

இடமாக தோற்றுவிப்பனவாக

நண்ணியிடும் பொருந்தும்.


(அத் தொழிற்பொறிகள் யானை எனில்)

வாக்கு வாய்

பாதம் கால்

பாணி கை

மன்னு குதம் பொருந்திய எருவாய்

உபத்தம் ஆ(க) கருவாய் என

அது அச்சிவாகமம்

நாளும் எப்போதும்

கருதும் ஆராய்ந்துரைக்கும்


பொழிப்புரை


இறைவன் அருளிச்செய்த ஆகம நூலில் சொல்லப்பட்டுள்ள கன்மேந்திரியங்கள் பேசுதல், போக்கவரவு செய்தல், ஏற்றல் இடுதலைச் செய்தல், கழிவுப் பொருள்களை வெளியேற்றுதல், சிற்றின்பம் செய்தல் ஆகிய செயல்களைச் செய்யும், அக்கன்மேந்திரியங்களாவன வாய், கால், கை, எருவாய், கருவாய் என்பன. அவை வடமொழியில் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்று கூறப்படும்.

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1. 4



அருளல்

இனி அருளலாவது, உயிர்கள் அறிவு முதிர்ந்த பக்குவ நிலையில் தம்மை உணர்ந்து அதனாலே தலைவனையும் உணர்ந்து, பிறப்பு இறப்புக்களினின்றும் நீங்கி வீடு அடையும்படி செய்தலாகும். இதுவரை ஐந்தொழில்களைப் பற்றி விளக்கமாக அறிந்தோம். ஐந்தொழில்களில் படைத்தல் முதலிய மூன்றினையும் செய்வோர் பிரமன், மால், உரத்திரன் என்பத பலரும் அறிந்தது. ஏனைய மறைத்தலையும் அருளலையும் மகேசுரரும் சதாசிவரும் செய்வர். இவ்வாறு பலர் கூறப்படினும் உண்மையில் எல்லாவற்றையும் செய்பவன் சிவபெருமான் ஒருவனே என்பது உளங் கொள்ளுதற்குரியது சிவபிரானது ஓர் அதிகார சத்தியே அவரவரிடத்தில் நின்று அவ்வச் செயலை ஆற்றுகிறது. இந்நாளில் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்யும் முதல்வருக்கே எல்லா அதிகாரமும் உண்டு. அவருக்குக் கீழ் பல அமைச்சர்கள் இருப்பினும் அவர்களுக்கென்று சுதந்திரமாக எந்த அதிகாரமும் இல்லை முதல்வரது கருத்திற்கு மாறாக ஒரு சொல் கூறினாலும் அவர் பதவியில் இருக்க முடியுமா? இஃது எதைக் காட்டுகிறது? அமைச்சர்க் கென்று தனி அதிகார சத்தியில்லை என்பதைத் தானே காட்டுகிறது. மேலும் எந்த அமைச்சர் எந்தத் திட்டத்தை நிறைவேற்றினாலும் அது முதல்வர் நிறைவேற்றிய திட்டம் என்று தானே சொல்லப்படுகிறது. எனவே அமைச்சர்களிடத்தில் உள்ள அதிகார சத்தி முதல்வருடைய அதிகார சத்தியே என்பது விளங்கும். அது போலத் தவ மிகுதி காரணமாகப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் அதிகாரிகள் ஆனோர் பிரமன் முதலியோர் அவர்களிடத்து நின்று அவர்களை வாயிலாகக் கொண்டு செய்விப்பது சிவசத்தியேயாகும். எனவே எல்லாச் செயல்களும் சிவனுடைய செயல்களேயாம்.

ஐந்தொழில் இரண்டாய்ச் சொல்லப்படுதல்

இறைவன் உயிர்க்குயிராய் மறைந்து நின்று, உயிர்களைப் பிறப்பு இறப்புக்களில் மீள மீளச் செலுத்தி, உலக நுகர்ச்சியில் அழுத்தியும் இளைப்பாற்றியும் வருவதே மறைத்தல், ஆதலின் இம் மறைத்தல் தொழிலில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களும் அடங்கும் என்பது ஊன்றி நோக்குவார்க்குப் புலனாகும். எனவே ஐந்தொழிலும் மறைத்தல், அருளல் என்ற இரண்டாய் அடங்கும் என்பது விளங்கும். மறைத்தல் பந்தம் என்றும், அருளல் வீடு என்றும் கூறப்படும். பந்தமுமாய் வீடும் ஆயினாருக்கு என வரும் திருவாசக அடியில் (திருப்பொற்சுண்ணம் 20) ஐந்தொழிலும் இவ்வாறு இரண்டாய்ச் சொல்லப்பட்டமை காணலாம்.


முத்தொழிலில் அடக்கிக் கூறுதல்


பல சமயத்தவரும் பொதுவாகக் கொள்வது படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையே, அதற்கேற்ப ஐந்தொழிலை முத்தொழிலில் அடக்கிக் கூறலாம். அங்ஙனம் கூறும் போது, மறைத்தல், காத்தல் தொழிலில் அடங்கும்; அருளல் அழித்தல் தொழிலில் அடங்கும்.

திடப் பெறவே

இச் செய்யுளில் ஆசிரியர் பிற தொழில்களை வாளா கூறி, மறைத்தல் தொழிலை மட்டும் திடப் பெறவே, என அடைகொடுத்துக் குறித்துள்ளமை நோக்குதற்குரியது. ஏனைய தொழில்களை மாணாக்கர் எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மறைத்தல் தொழிலை விளங்கிக் கொள்ளுதல். அத்துணை எளிதன்று. அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்ளுதலும் எளிதன்று. அதனைக் கருதியே ஆசிரியர்அடைமொழி தந்து, மறைத்தலின் நோக்கத்தைக் கிளந்தெடுத்துக் கூறுகின்றார். திடப் பெறவே என்பதற்கு உறுதியடையும் படி என்பது பொருள். உயிர்கள் உறுதியடையும்படி மறைத்தலைச் செய்கின்றான் என்பது கருத்தாகிறது. உறுதியடைதல் என்றால் என்ன?


ஆணவ மலத்தின் தூண்டுதலால் உயிர் யான் யான் என்று எச்செயலுக்கும் தன்னையே தலைவனாகக் கொண்டு செருக்குற்று நிற்கும். இறைவனது மறைத்தல் தொழிலால் உயிர் பிறப்பு இறப்புக்களில் மாறி மாறிச் சுழன்று அளவிலாத் துயரங்களை மாறி மாறி அனுபவிக்கும் போதுதான் உயிரைப் பிணித்துள்ள ஆணவ மலத்தின் சத்தி குறையும். அறியாமை தேய்ந்து நல்லுணர்வு தோன்றும். தனக்கென ஒரு செயலும் இல்லை என்பதையும், எல்லாம் அவன் செயல் என்பதையும் சிறிது சிறிதாக உணரும்.


இதுவரை தன்னையே பெரிதாக மதித்திருந்த உயிர் இப்பொழுது இறைவனே என் வாழ் முதலாகிய பொருள் என்ற உறுதியைப் பெறும். ஆடை நெய்யுமிடத்தில் நூல் இழைகளின் ஊடே இங்குமங்கும் மாறி மாறி ஓடும் குழல் போல எனது உள்ளம் உலக ஆசைகளிற் பட்டு அலைந்தது அதனால் உன்னை மறந்தேன். மயக்கத்தைச் செய்யும் உடம்பிலே கிடந்து இளைத்தேன். உடையாய், அடியேன் உன் அடைக்கலம். என்று இறைவனிடம் முறையிடும். உலகத்தை நோக்காது இறைவனையே நோக்குகின்ற இந்த உறுதிதான் உயிரின் பக்குவ நிலையாகும். இந்த உறுதி நிலையை உயிர்கள் பெறும் பொருட்டே இறைவன் மறைத்தல் தொழிலைச் செய்கின்றான்.

இவ்வாறெல்லாம் விரித்துப் பொருள் கொள்ளும் படியாக் திடப் பெறவே என்ற சிறிய அடைமொழியை அமைத்துள்ள ஆசிரியரின் சொல்லாட்சி எண்ணி மகிழ்தற்குரியது.


ஐம்பூதங்களின் செய்தித் தொகுப்பு

இதுவரையிலும் நாம் அறிந்த ஐம்பூதங்களின் வடிவம் முதலிய செய்திகளை இங்கே தொகுத்துக் கூறுவோம்.


பிருதிவி(மண்)

வடிவம் நாற்கோணம்

நிறம் பொன்மை

குறி(அடையாளம்) வச்சிராயுதம்

எழுத்து லகர மெய்

அதி தெய்வம் பிரமன்

அப்பு(நீர்)

வடிவம் அரைவட்டம்

நிறம் வெண்மை

குறி தாமரைப்பூ

எழுத்து வகர மெய்

அதி தெய்வம் திருமால்

தேயு(தீ)

வடிவம் முக்கோணம்

நிறம் செம்மை

குறி சுவத்திகம்

எழுத்து ரகர மெய்

அதி தெய்வம் உருத்திரன்

வாயு(காற்று)

வடிவம் அறுகோணம்

நிறம் கருமை

குறி ஆறு புள்ளி

எழுத்து யகர மெய்

அதி தெய்வம் மகேசுரன்

ஆகாயம்(வான்)

வடிவம் வட்டம்

நிறம் புகைமை

குறி(அடையாளம்) அமுத விந்து

எழுத்து ஹ

அதி தெய்வம் சதாசிவன்



பூதங்களின் குணமும் செயலும்



9. மண் கடின மாய்த் தரிக்கும்; வாரிகுளிர்ந் தே பதமாம்

ஒண் கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் வண்கால்

பரந்து சலித் துத்திரட்டும் பார்க்கில் ஆ காயம்

நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து.


பதவுரை

பார்க்கில் ஆராய்ந்து பார்த்தால்

மண் கடினமாய் மண் திண்மைக்குணம் உடைய தாய்

தரிக்கும் பொருள்களைத் தாங்கும்

வாரி நீர்

குளிர்ந்தே குளிர்ச்சிக் குணம் உடையதாய்

பதமாம் பொருள்களை மென்மைப் படுத்தும்

ஒண்கால் ஒளி பொருந்திய தீ

சுட்டு வெம்மைக்குணம் உடையதாய்

ஒன்றுவிக்கும் பொருள்களை நீறாக்கி ஒன்றுபடுத்தும்

வண்கால் வளமையுடைய காற்று

ஓவாமல் ஒழியாமல்

பரந்து சலித்து எங்கும் பரவி இயங்கி

திரட்டும் பொருள்களைத் திரட்டும்

ஆகாயம் ஆகாயம்

நிரந்தரம் ஆய் வெளியாதல் ஆகிய குணம் உடையதாய்

நிறைந்து நிற்கும் எப்பொருளிலும் ஊடுருவி நிறைந்து நிற்கும்

குறிப்பு: ரந்திரம்வெளி, அதனோடு நி என்பது சேர்ந்து நிரந்தரம் என்றாயிற்று. நி என்பதற்குத் தனிப்பொருள் ஏதும் இல்லை.


பொழிப்புரை

மண்ணின் குணம் திண்மை; செயல், எப்பொருளையும் தாங்குதல். நீரின் குணம் தண்மை, செயல், பொருள்களை மென்மைப்படுத்துதல், காற்றின் குணம் அசைவு(சலனம்) செயல், பரந்து கிடக்கும் பொருள்களை ஒருங்கு திரட்டுதல், ஆகாயத்தின் குணம் வெளியாதல்; செயல் எப்பொருளுக்கும் இடங்கொடுத்தல்.


விளக்கம்

இச்செய்யுளில் கூறப்பட்ட பூதங்களின் குணங்களையும் தொழில்களையும் பின்வரும் அட்டவணையில் நிரல்படக் காணலாம். பூதத்தின்கண் உள்ளதாய் உணரப்படும் இயல்பு குணம் என்றும், அதனால் பிற பொருளின்கண் நிகழும் விளைவு செயல் என்றும் கொள்ள வேண்டும். காரணமாகிய தத்துவங்களில் இவை இருத்தலால்தான் காரியப் பொருள்களிடத்தும் காணப்படுகின்றன.


பூதங்கள் குணம் தொழில்

மண் திண்மை பொருளைத் தாங்குதல்

நீர் குளிர்ச்சி பொருளை மென்மைப்படுத்துதல்

தீ வெம்மை பொருளை நீறாக்கி ஒன்றுபடுத்துதல்

காற்று அசைவு பொருளைத் திரட்டுதல்

வான் வெளியாதல் பொருளில் ஊடுருவி நிறைந்து நிற்றல்


இனி, ஐம்புலன்


10. உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்

கள்ளமிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் மெள்ளவே

ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம்

ஆசை தரும் ஐம்புலனே யாம்.


பதவுரை

உன்றனக்கு (நன்மாணாக்கனே) உனக்கு

மாபூதம் பெரும் பூதங்களின் இயல்பை

உள்ளபடி உள்ளவாறு


ஓதினோம் விளக்கிச் சொன்னோம்

கள்ளிகும் ஐம்புலனும் இனி, மனத்தைக் கவரும் ஐம்புலன்களை

கட்டுரைக்கில் எடுத்துச் சொல்வதாயின்

ஓசை பரிசம் உருவம்

சுவை நாற்றம் ஓசையும், ஊறும், உருவமும், சுவையும், மணமும் என்பவை

ஆசை தரும் ஆசையை மிகுவிக்கும்

ஐம்புலனேயாம் ஐம்புலன்களாகும்


பொழிப்புரை

இதுவரை தூல பூதங்களின் இயல்பை உள்ளவாறு எடுத்துரைத்தோம். இனி, மனத்தைக் கவர்ந்து வசஞ்செய்யும் ஐம்புலன்கள் இவை எனச் சொல்வோம். அவை ஓசை, பரிசம், உருவம், சுவை, மணம் என்பன. இவை ஆசையை மிகுவிப்பனவாகும்.


விளக்கம்

ஐம்புலன் என்பதற்குச் சிலர் கூறும் பொருள்

தூல பூதங்களைக் கூறிய பின்னர் அடுத்துக் கூற வேண்டுவது அப்பூதங்களுக்கு முதற்காரணமாய் உள்ள தன்மாத்திரைகளை ஆனால் ஆசிரியர் தன்மாத்திரைகளைப் பற்றிக் கூறாமல் ஐம்புலன்களைப் பற்றிக் கூறுலுறுகின்றார். அதனால் இச்செய்யுள் சிலருக்குத் தடுமாற்றத்தை உண்டாக்கியிருப்பதில் வியப்பில்லை. இவ்விடத்தில் ஐம்புலன்களைக் கூறுதற்கு ஏதும் இயைபில்லையே என்று கருதிய அவர்கள் ஐம்புலன் என்றதற்குத் தன்மாத்திரைகள் என்றே பொருள் எழுதிச் சென்றார்கள். அவ்வாறு பொருள் கூறுதல் பொருந்துமா என்பதை நோக்குதல் வேண்டும்.


ஆசிரியர் வாளா ஐம்புலன் என்று கூறியிருந்தால் அதற்குத் தன்மாத்திரைகள் என்று பொருள் கூறுதல் பொருந்துவதாகலாம். எவ்வாறெனில், ஓசை முதலிய ஐந்தும் பொறிகளால் கொள்ளப்படும் சிறப்பு நிலையை எய்திய பொழுது புலன் எனப்படும். அவை செவி முதலிய பொறிகட்குப் புலனாகாமல் நுண்மையாய் நிற்கும் நிலையும் உண்டு. அந்நிலையில் அவை தன்மாத்திரைகள் எனப்படும். புலனாகாமை பற்றி அவற்றை நுண்புலன்கள் என்றும் கூறலாம். அம்முறையில் செய்யுளில் ஐம்புலன் என்றும் மட்டும் கூறியிருந்தால் நுண்புலன்களை அவை குறிப்பதாகக் கொண்டு தன்மாத்திரைகள் எனக் கூறுதற்கு இடம் உண்டு.


அடை மொழிகளால் ஆசிரியர் உணர்த்துவது

ஆசிரியர் ஐம்புலனைக் குறிப்பிடும் இரண்டு இடங்களிலும் அடை மொழி புணர்ந்துக் கூறியுள்ளார். கள்ளமிகும் ஐம்புலன் என்றும் ஆசை தரும் ஐம்புலன் என்றும் கூறியுள்ள அடை மொழிகளை நோக்குதல் வேண்டும். ஓசை முதலிய ஐந்தும் பூதங்களின் குணங்களாய் வெளிப்பட்டு நின்று செவி முதலிய பொறிகளால் கொள்ளப்படும் போதே அவை நம் மனத்தைப் பற்றுகின்றன. ஆசையை மிகுவிக்கின்றன. இவ்வகையில் அவை பொறிகளுக்கு விடயங்கள் ஆகின்றன. தன்மாத்திரைகள் அங்ஙனம் பொறிகளுக்கு விடயம் ஆவதுமில்லை. ஆசையை மிகுவிப்பதும் இல்லை. எனவே ஆசிரியர் அமைத்துள்ள அடை மொழிகளை நோக்கினால் அவர் இங்கே தன்மாத்திரைகளைக் குறிக்கவில்லை என்பதும் புலப்படும். நிலையினவாகிய ஐம்புலன்களையே குறிப்பிட்டார் என்பதும் தெளிவாகும்.


தன்மாத்திரைகளைக் கூறாமல் புலன்களைக் கூறிய காரணம்


தன்மாத்திரைகளே தத்துவங்கள் என்றும், ஐம்புலன்கள் என்பவை புலப்படும் குணங்களாகிய தாத்துவிகங்கள் என்றும் முன்னே குறிப்பிட்டது நினைவிருக்கலாம். இவ்விடத்தில் தன்மாத்திரைகளைக் கூறுதலே முறை. அதை விடுத்துத் தாத்துவிகங்கள் ஆகிய புலன்களைக் கூறியிருப்பது எக்காரணம் பற்றி? என வினவலாம். ஆசிரியரின் அணுகு முறையைப் பற்றி முன்னேயே கூறியுள்ளோ. தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் பெறவைத்தல் என்பது அவர் பின்பற்றும் முறையாகும். நமக்கு நன்கு தெரிந்தவை ஐம்புலன்களாகிய விடயங்கள். சிறப்பு நிலையில் விளங்கி நிற்கும் குணங்களாகிய அப்புலன்களை எடுத்துக் காட்டி, அவற்றிற்கு மூலமாய் பொதுமையில் விளங்காது நுட்பமாய் நிற்கும் நிலைகள் உண்டு எனவும், அவையே தன்மாத்திரைகள் எனவும் குறிப்பாய் உணர்த்தினார் ஆசிரியர். குணமாதல் ஒப்புமை பற்றியும், பருப்பொருளாக வைத்து முதற்கண் உணர்த்துதல் எளிமையாதல் பற்றியும் புலன்களே இங்குக் குறிக்கப் பெற்றன எனக் கொள்ளலாம்.

இனி, ஞானேந்திரியங்கள்

ஞானேந்திரியங்கள் ஆகிய அறிகருவிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. மெய் என்பது உற்று அறிவதாகிய தோலினைக் குறிக்கும். வாய் என்பது சுவைத்து அறிவதாகிய நாக்கினைக் குறிக்கும். இவை தோன்றும் முறையினை முன்னே அறிந்தோம். இவை புலன்களை அறியும் முறையினை இப்போது காண்போம்.


அறிதலின் இரண்டு வகை

ஆன்மா ஞானேந்திரியங்கள் ஆகிய இவ் வைம்பொறிகளைக் கொண்டு புறத்தே உள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐம்புலன்களைப் பொதுவாக அறியும். பொதுவாக அறிதல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டினால் இதனை விளக்கலாம். தொலைவில் ஒருவர் வருகிறார். முதலில் நம் கண்களுக்கு ஏதோ ஓர் உருவம் என்ற அளவில் மட்டுமே தெரிகிறது. பிறகு அவர் நெருங்கி வரவர அவரைப் பற்றிய விவரங்கள் தெரிகின்றன. அவரது பெயர் இன்னது என்று தெரிகிறது. கன்னங்கரிய அவரது நிறம் தெரிகிறது. தலையில் உள்ள வழுக்கை தெரிகிறது. அவர் அணிந்துள்ள சட்டைப் பையில் வைத்திருக்கும் பணம் கூடத்தெரிகிறது. அவரது நடையின் வேகமும் தெரிகிறது. இக்காட்சியில் முதலில் நம் கண்களுக்குத் தெரிந்தது இஃது ஓர் உருவம் என்ற அளவில் மட்டும்தான். இதுவே பொதுவாக அறிதல் என்பதாகும். பின்னர் பெயர், நிறம், தலையின் அமைப்பு, அணிந்துள்ள சட்டை, நடக்கும் பாங்கு முதலிய விவரங்கள் சிறப்பாகப் புலப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அவர் இன்னார் என்று வேறுபடுத்தி அறிகின்றோம். இது சிறப்பாக அறிதலாகும். இதனால் அறிவில் இரண்டு வகை உண்டு என்பது புலனாகும். ஒன்று பொருள்களைப் பொதுவாக அறிதல், மற்றொன்று பொருள்களைச் சிறப்பாக அறிதல்.


ஞானேந்திரியங்களால் நிருவிகற்பக் காட்சி நிகழ்தல்

செவி முதலிய ஞானேந்திரியங்கள் பொருள்களைப் பொதுவாக அறியுமேயன்றிச் சிறப்பாக அறியமாட்டா. செவி இஃது ஓர் ஓசை என்று மட்டுமே அறியும். தோல் இஃது ஓர் ஊறு என்று மட்டுமே என்று அறியும். கண் இஃது ஓர் உருவம் என்று மட்டுமே அறியும். நான்கு இஃது ஓர் சுவை என்று மட்டுமே அறியும். மூக்கு இஃது ஓர் மணம் என்று மட்டுமே அறியும்.


எனவே ஆன்மா ஞானேந்திரியங்களால் புலன்களைப் பொதுவாகவே உணரும் என்று சொல்லலாம். பொதுவாக அறிவதை நிருவிகற்பக் காட்சி என்பர். நிருவிகற்பம் வேறுபாடின்மை, ஒரு பொருளுக்குரிய பெயர், குணம், தொழில் முதலிய வேறுபாடுகள் ஏதும் தெரிய வாராமல் இஃது ஒன்று என்ற அளவில் மட்டும் அறிவதால் இது நிருவிகற்பக் காட்சி என்று குறிக்கப்பட்டது. இனி, அவ்வேறுபாடுகள் தெரிந்து இஃது இன்ன பொருள் என்று சிறப்பாக அறிதல் மனம் முதலிய அந்தக்கரணங்களில் செயற்பாட்டினால் விளைவதாகும். இவ்வாறு சிறப்பாக அறிவதை சவிகற்பகாட்சி என்பர். சவிகற்பம் வேறுபாட்டோடு கூடியது. அந்தக்கரணங்களினால் உண்டாகும் சிறப்புக் காட்சியைப் பற்றிப் பின்னால் (செய்யுள் 16) நாம் பார்க்க இருக்கின்றோம். இப்பொழுது ஞானேந்திரியங்களைப் பற்றி ஆசிரியர் வழியில் நின்று அறிந்து கொள்வோம்.

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1.3


தாத்துவிகங்கள்:

இனி தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. பல்வேறு வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும். பின்வரும் அட்டவணையில் அவற்றைக் காணலாம்.

தாத்துவிகம் 60

பிருதிவியின் கூறு 5 எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு

அப்புவின் கூறு 5 சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் அல்லது சோணிதம்

தேயுவின் கூறு 5 இருதயத்தில் வெப்பம், பசித்தீ, கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், கபால வெப்பம்

வாயுவின் கூறு 10 உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், 
நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன், தனஞ்சயன் என்னும் வாயுக்கள்

ஆகாயத்தின் கூறு 10 அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் நாடிகள்
ஞானேந்திரியங்களின் 5 சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்
விடயங்கள்

கன்மேந்திரியங்களின் 5 வசனம்(பேச்சு), கமனம்(நடை), தானம்(கொடை), விசர்க்கம்(போக்கு), ஆனந்தம்(இன்பம்) விடயங்கள்

அகங்காரத்தின் கூறு 3 தைசதம், வைகாரியம், பூதாதி

குற்றம் 5 காமம், குரோதம், உலோபம், மோகம், மதம்(மாற்சரியம் குரோதத்துள் அடங்கும்)

குணத்தின் கூறு 3 சாத்துவிகம், இராசதம், தாமதம்

வாக்கு 4 சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி

பிரகிருதி தன் முக்குணங்களால் மயக்குதல்

இவ்வாறு பிரகிருதி மாயை இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி உலக நுகர்ச்சியைத் தருகிறது. காரணத்தில் உள்ளது காரியத்திலும் இருக்கும் எனப் பார்த்தோம். முதற்காரணமாகிய பிரகிருதி முக்குண வடிவானது. ஆகவே அதன் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமாயிருக்கும். இவற்றைப் பொருந்துகிற ஆன்மாக்களும் முக்குணவயப்பட்டு இன்ப துன்ப மயக்கவுணர்வுகளை அடையும். பிரகிருதி தனது முக்குண வேறுபாட்டான் உயிர்களது உள்ளத்தைப் பலவாறு மயங்கச் செய்யும். இவ்வகையில் பிரகிருதி மயக்கும் தன்மையுடைய ஒரு பெண் மகளைப் போன்றது. அவள் தன் ஆடை அணிகளாலும் குணங்களாலும் ஆடவனை மயக்குவது போலப் பிரகிருதி தன் காரியமாகிய முக்குணங்களால் ஆன்மாக்களை மயக்குகிறது என்று சொல்லப்படுகிறது. மேற்கூறிய தத்துவம் இருபத்து நான்கும் ஆன்மாக்களுக்குப் போக சாதனமும், போக்கியமுமாய் அமைகின்றன ஆதலின் அவை போக்கிய காண்டம் என்று சொல்லப்படும். போக்கியம்நுகரப்படுவது; காண்டம்தொகுதி.


ஆன்ம தத்துவம்பெயர்க் காரணம்

இத்தத்துவங்கள் இருபத்துநான்கும் ஆன்ம தத்துவம் எனப்படுகின்றன இப்பெயருக்கான காரணம் அறிதற்குரியது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாலும் கட்டுண்ட ஆன்மாக்கள் சகலர் எனப்படுவர். சகலராகிய ஆன்மாக்களுக்குத் தலைவர் சீகண்டவுருத்திரர். அவரே இறைவனது ஆணை வழி நின்று பிரகிருதி முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களைத் தோற்றி ஒடுக்குபவர் ஆவர். ஆன்ம தத்துவம் என்பதில் உள்ள ஆன்மா என்ற சொல் சகலராகிய ஆன்மாக்களை முதலில் குறித்துப் பின்னர் அவர்கட்குத் தலைவராகிய சீகண்டவுருத்திரரைக் குறித்தது அவரால் செயற்படுத்தப் படுதலின் அத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப் பெயர் பெற்றன. இது மரபாகச் சொல்லி வரும் விளக்கம். இவ்வாறன்றிச் சகலராகிய ஆன்மாக்களுக்குச் சிறப்பாக உரியனவாய் நிற்றல் பற்றி இத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப்பட்டன என்று கூறுதலும் அமையும்.


இதுகாறும் நாம் விரிவாக அறிந்த செய்திகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். உலகுக்கு முதற் காரணம் மாயை. அது சுத்த மாயை, அசுத்த மாயை என் இருபகுதியாய் நிற்கும். அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியமே பிரகிருதி மாயை, நாம் வாழும் உலகுக்கும், நமது உடம்புக்கும் நேரே காரணமாய் இருப்பது இப்பிரகிருதியேயாகும். பிரகிருதியிலிருந்து முதலில் அந்தக்கரணங்களும் பின்னர் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றும். பூதங்களின் பரிணாமமே இவ்வுலகம்.


ஆசிரியர் கீழிருந்து விளக்கிச் செல்லுதல்

பிரகிருதியிலிருந்து தொடங்கிப் பூதங்கள் முடியவுள்ள இருபத்துநான்கு தத்துவங்களையும் அவை தோன்றும் முறையிலே வைத்துக்காட்டினோம். இது தோற்ற முறையாகும். ஆயின் ஆசிரியர் மனவாசகம் கடந்தார் இம்முறையினை மேற்கொள்ளவில்லை. அவர் கீழிருந்து தொடங்குகிறார். அஃதாவது பூதங்களை முதலில் விளக்கிப் பின் மேல் மேல் உள்ளவற்றை விளக்கிச் சொல்கிறார். ஆசிரியரது அணுகுமுறை பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் என்பதே அவர் பின்பற்றும் முறையாகும். தத்துவங்கள் அனைத்திலும் தூலமாய் உள்ளவை பூதங்களாகும் அவற்றின் காரியங்களே இவ்வுலகும், இதன்கண் உள்ள அளவற்ற பொருள்களுமாகும். இவ்வாறு பூதங்கள் தூலமாய், காரியப்பாட்டில் புலனாகும் பொருளாய் நிற்றலின், நமக்குத் தெரிந்த பொருளாகிய அவற்றையே முதலில் எடுத்துக் கொண்டு விளக்கப் புகுகின்றார் ஆசிரியர்.


ஐம்பூதங்களின் வடிவு

4. நாற்கோணம் பூமி, புனல் நண்ணு மதி யின் பாதி

ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் ஆர்க்கும்

அறுகோணம் கால் வட்டம் ஆகாயம் ஆன்மா

உறுகாயம் ஆம் இவற்றால் உற்று.


பதவுரை
பூமி மண்

நாற்கோணம் நாற்கோண வடிவு உடையது

புனல் நீர்

மதியின் பாதி நண்ணும் பாதியாய் உள்ள சந்திரனைப் போல அரைவட்ட வடிவினதாய் இருக்கும்

அனல் நெருப்பு

முக்கோணம் ஏற்கும் முக்கோண வடிவைப் பொருந்தும்

எப்போதும் ஆர்க்கும் கால் எப்போதும் இயங்கி ஓசை செய்யும் காற்று

அறுகோணம் அறுகோண வடிவினதாகும்

ஆகாயம் வான்


வட்டம் வட்ட வடிவாய் இருப்பது

ஆன்மா உறு காயம் உயிர் வினைக்கு ஈடாகப் பொருந்துகின்ற தூல சரீரம்

இவற்றால் இப்பூதங்களின் பரிணாமத்தால்

உற்று ஆம் ஏற்பட்டு உயிருக்கு அமைந்ததாகும்


பொழிப்புரை

ஐம்பூதங்களுள் நிலம் நாற்கோண வடிவாய் இருக்கும்; நீர் பாதி மதி போல அரைவட்ட வடிவாய் இருக்கும்; நெருப்பு முக்கோண வடிவாய் இருக்கும்; காற்று அறுகோண வடிவாய் இருக்கும்; வான் வட்ட வடிவாய் இருக்கும். உயிர் பெறுகின்ற உடம்பு இப்பூதங்களின் சேர்க்கையால் ஆனது.

விளக்கம்

நிலம் முதலிய ஐம்பூதங்கள் வட மொழியில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் எனப்படும். இவற்றுக்குரிய வடிவங்கள் மேற்கூறியவாறு ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. நமக்குக் கிடைத்துள்ள பருவுடம்பு பஞ்ச பூதங்களின் கூட்டத்தால் அமைந்தது. உடம்பிலுள்ள என்பு, தசை, மயிர், தோல், நரம்பு என்பவை பிருதிவியின் கூறுகளாகும். சிறுநீர், குருதி, வியர்வைவ முதலியவை அப்புவின் கூறுகள், பசித்தீ, உடம்பில் வெப்பம் முதலியவை தேயுவின் கூறுகள், பிராண வாயு முதலியவை வாயுவின் கூறுகள். பத்து வகையான நாடிகள் ஆகாயத்தின் கூறுகளாகும். நமக்குப் புலப்படுகின்ற நிலம், நீர், முதலியவை தத்துவங்கள் அல்ல. இவை காரியப் பொருள்கள். இவற்றிற்குக் காரணமான பஞ்ச பூத தத்துவங்களுக்கே இங்கு வடிவம் முதலியவை கூறப்படுகின்றன.


பூதங்களின் நிறமும் எழுத்தும்


5. பொன்பார்; புனல்வெண்மை; பொங்கும் அனல் சிவப்பு

வன்கால் கருணை; வளர் வான்தூமம்என்பார்

எழுத்து ல வ ர ய அ பாராதிக்கு என்றும்

அழுத்தமதாய் நிற்கும் அது


பதவுரை

பார் பொன் மண் பொன்னிறம் உடையது

புனல் வெண்மை நீர் வெண்ணிறம் உடையது

பொங்கும் அனல் சிவப்பு ஓங்கியெழும் நெருப்பு செந்நிறம் உடையது

வன்கால் கருமை வலிமை பொருந்திய காற்று கருநிறம் உடையது

வளர் வான் தூமம் பரந்து விரிந்த ஆகாயம் புகை நிறம் உடையது

என்பார் இவ்வாறு ஐம்பூதங்களின் நிறங்களை யோகக் காட்சியால் கண்டுணர்ந்தார் கூறுவர்

பார் ஆதிக்கு மண் முதலிய இப் பூதங்களுக்கு உரிய,

எழுத்து அவைகளின் உடன் நின்று தொழிற்படுத்தும் வித்து எழுத்துக்கள்(பீஜ அக்கரங்கள்)

ல வ ர ய அ முறையே ல,வ,ர,ய,ஹ எனப்படும் மெய்யெழுத்துக்களாம்

அது அவ்வெழுத்து(அப்பூதங்களில்)

என்றும் எப்போதும்

அழுத்தமதாய் நிற்கும் அழுந்தி நிற்கும்

பொழிப்புரை

மண் பொன்னிறம் உடையது. நீர் வெண்ணிறம் உடையது. பொங்கி எழும் இயல்புள்ள நெருப்பு செந்நிறம் உடையது வலிமை மிக்க காற்று கரு நிறம் உடையது. எங்கும் பரவி நிற்கும் ஆகாயம் புகை நிறம் உடையது. இவ்வாறு பூதங்களின் நிறங்களை யோகக் காட்சியில் கண்டுணர்ந்த பெரியோர் கூறுவர். மண் முதலிய பூதங்களை உடன் நின்று செலுத்தும் மூலம் எழுத்துக்கள் முறையே ல,வ,ர,ய,ஹ எனப்படும் மெய்யெழுத்துக்களாம்.

விளக்கம்

மூல எழுத்து வடமொழியில் பீஜ அட்சரம் எனப்படும். பீஜம்வித்து, ஹ என்ற வித்தெழுத்து செய்யுளில் அ எனக் குறிக்கப்பட்டுள்ளது. எல்லாப் பொருள்களுக்கும் மூல ஒளிகள் உள்ளன என்று கொள்ளப்படும். அவையே அவ்வப் பொருள்களுக்குரிய மந்திரங்கள் அல்லது வித்து எழுத்துக்கள் ஆகும். அம்முறையில் இங்குப் பூதங்களுக்குரிய வித்தெழுத்துக்கள் கூறப்பட்டுள்ளன. எல்லாப் பொருள்களுக்கும் மூல ஒளிகள் உள்ளன என்று கொள்ளப்படும். அவையே அவ்வப் பொருள்களுக்குரிய மந்திரங்கள் அல்லது வித்து எழுத்துக்கள் ஆகும். அம்முறையில் இங்குப் பூதங்களுக்குரிய வித்தெழுத்துக்கள் கூறப்பட்டுள்ளன.




இறைவனது சத்தியாகிய திருவருள் எதனையும் நேராகத் தொழிற்படுத்தாது. அது சுத்த மாயையை ஊடகமாகவும் நிலைக்களமாகவும் கொண்டு நின்று பிறவற்றைத் தொழிற்படுத்தும் என்பது அறிதற்குரியது. மூல ஒலிகள் என்பவை சுத்த மாயையில் தோன்றுவன. அவை திருவருளுக்கு ஊடகமாகவும் நிலைக்களமாகவும் அமைகின்றன. திருவருள் அவற்றின் இடமாகக் கொண்டு பதிந்து நின்று அவற்றின் வழியாக ஐம்பூதங்களையும் செலுத்தும், அது பற்றியே மூல ஒலிகள் பூதங்களை உடன் நின்று செலுத்தும் என்று கூறப்பட்டது.




பூதங்களின் அடையாளம்

6. குறி குலிசம் கோகனதம் கொள்சுவத்தி குன்றா

அறு புள்ளி ஆரமுத விந்துபிறிவின்றி

மண் புனல்தீக் கால் வானம் மன்னும் அடைவே என்று

ஒண்புதல்வா! ஆகமம் ஓ தும்.




பதவுரை

ஒண் புதல்வா சிறந்த மாணாக்கனே!

குறி அடையாளமாக

குலிசம் வச்சிராயுதத்தையும்

கோகனதம் தாமரையையும்

கொள்சுவத்தி பொருந்திய சுவத்திகத்தையும்

குன்றா அறுபுள்ளி குறையாத ஆறு புள்ளியையும்

ஆர் அமுத விந்து அமுதத் துளியையும்

அடைவே முறையே

மண் புனல் தீக்கால் வானம் மண்ணும் நீரும் தீயும் காற்றும் வானும் ஆகிய ஐம்பூதங்களும்

பிறவின்றி நீங்காமற் கொண்டு

மன்னும் என்று நிலை பெறும் என

ஆகமம் சிவாகமங்கள்

ஓதும் கூறும்




முதலில் அடையாளங்களை ஒரு வரிசையில் நிறுத்தி, மூன்றாம் அடியில் அவ்வடையாளங்களைக் கொண்டுள்ள பூதங்களை அதே வரிசையில் முறையே நிறுத்தியுள்ள பான்மையைக் காணலாம். எனவே, மண்ணிற்கு வச்சிரப் படையும், நீருக்குத் தாமரையும், தீக்குச் சுவத்திகமும், காற்றுக்கு ஆறு புள்ளியும், வானுக்கு அமுதத் துளியும் அடையாளங்களாம் என்பது விளங்கும். சுவத்திகம் என்பது ஸ்வஸ்திக் என்ற வடிவம். இதனை தமிழில் இருதலை மேழி என்பர்.




பொழிப்புரை

நன்மாணாக்கனே! மண்ணைக் குறிக்கும் அடையாளம் வச்சிராயுதம்; நீருக்கு அடையாளம் தாமரைப்பூ; நெருப்பிற்கு அடையாளம் கவத்திகம்; காற்றுக்கு அடையாளம் ஆறு புள்ளி; வானுக்கு அடையாளம் அமுதத் துளி. இவ்வாறு சிவாகமம் கூறும்.




அதிதெய்வங்களும் அவர்கள் தொழில்களும்

7. பாராதி ஐந்துக்கும் பன்னும் அதி தெய்வங்கள்

ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் ஓரோர்

தொழில் அவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்

பழுதறவே பண்ணுவர்கள் பார்.




பதவுரை




பார் ஆதி மண் முதலிய

ஐந்துக்கும் ஐந்து பூதங்களுக்கும்

பன்னும் (சிவாகமங்கள்) சொல்லுகின்ற

அதி தெய்வங்கள் அதி தெய்வம் ஆவார்

ஆர் ஆர் யார் யார்? என்றால்

அயன் ஆதி பிரமன் முதலிய

ஐவராம் ஐவரும் ஆவர்

ஓரோர் தொழில் ஒவ்வொரு தொழில்

அவர்க்குச் சொல்லுங்கால் அவர்களுக்குச் சொல்லப்படும் அங்ஙனம் சொல்லுங்கால்

தோற்றம் முதல் ஐந்தும் படைத்தல் முதலிய தொழில்கள் ஐந்தினையும்

பழுது அறவே குற்றமின்றி

பண்ணுவர்கள் அவர்கள் செய்வார்கள்

பார் இதனை அறிவாயாக

பொழிப்புரை

நிலம் முதலிய ஐம்பூதங்களுக்கும் உரிய அதிதெய்வங்களை ஆகமங்கள் குறிப்பிடும். பிரமன் முதலிய ஐவரே அந்த அதிதெய்வங்கள். அவர்கள் முறையே படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்வர்.




விளக்கம்

இச்செய்யுளில் அதிதெய்வங்களையும், அவர்கள் தொழில்களையும் தொகுத்துக் கூறினார் ஆசிரியர் அடுத்த செய்யுளில் வகுத்துக் கூறுவார்.




அதி தெய்வங்களின் தொழில்களை வகுத்துக் கூறுதல்




8. படைப்பன் அயன். அளிப்பன் பங்கயக்கண் மாயன்

துடைப்பன் உருத்திரனும் சொல்லில் திடப்பெறவே

என்றும் திரோபவிப்பார் ஈசர்; சதாசிவரும்

அன்றே அநுக்கிரகர் ஆம்




பதவுரை

சொல்லில் முந்திய செய்யுளில் தொகுத்துக் கூறிய தொழில்களை இங்கு வகுத்துக் கூறினால்

அயன் பிரம தேவன்

படைப்பன் படைத்தல் தொழிலைச் செய்வான்

பங்கயக் கண் மாயன் தாமரை போன்ற கண்களை உடைய மாயோன்

அளிப்பன் காத்தல் தொழிலைச் செய்வான்

உருத்திரனும் உருத்திரனும்

துடைப்பன் அழித்தலைச் செய்வான்

திடம் பெறவே உயிர்கள் உறுதி அடையும் படி

ஈசர் மகேசுரர்

என்றும் எப்பொழுதும்

திரோபவிப்பர் மறைத்தலைச் செய்வார்

அன்றே (மறைத்தல் தொழிலின் பயனாகப் பக்குவம் எய்திய உயிர்களுக்கு) அப்பொழுதே

சதாசிவரும் சதாசிவரும்

அனுக்கிரகர் ஆம் அருளும் தொழிலைச் செய்வார்

பொழிப்புரை

பிரமன் படைத்தல் ஆகிய தொழிலைச் செய்வான் மாயோன் ஆகிய திருமால் காத்தல் ஆகிய தொழிலைச் செய்வான். உருத்திரன் அழித்தல் ஆகிய தொழிலைச் செய்வான். உயிர்கள் பக்குவம் பெறுதற் பொருட்டு என்றும் மறைத்தல் ஆகிய தொழிலைச் செய்பவர் மகேசுரர். அதன் பயனாகப் பக்குவம் எய்திய உயிர்களுக்கு அப்பொழுதே அருள்புரியும் தொழிலைச் செய்பவர் சதாசிவர்.

விளக்கம்

ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாம்.

படைத்தல்

படைத்தலாவது இல்லாததைத் தோற்றுவித்தல் அன்று. இல்லாதது என்றும் இல்லாததேயாம். அதனை ஒரு காலத்தில் தோன்றச் செய்ய முடியாது. முயலின் தலையில் கொம்பு என்பது இல்லாதது. அதனை எக்காலத்திலேனும் தோற்றுவிக்க முடியுமா? ஆதலால் படைத்தல் என்பதற்கு உள்ளதைத் தோற்றுவித்தல் என்பதே கருத்தாகும். உள்ளதை ஏன் தோற்றுவிக்க வேண்டும்? அதுதான் உள்ளதாயிற்றே என வினவலாம். உள்ளது என்பதன் பொருளை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று காரணநிலை; மற்றொன்று காரியநிலை. காரணநிலையாவது ஒரு பொருள் தனது காரணத்தில் நுட்பமாய் ஒடுங்கிப் புலப்படாதிருக்கும் நிலையாகும். காரிய நிலையாவது அப்பொருள் தனது காரண நிலையிலிருந்து வெளியே புலப்பட்டு நிற்கும் நிலையாகும். களிமண்ணால் ஆகிய குடத்தை எடுத்துக் கொள்வோம். குடமானது தோன்றுவதற்கு முன்னே தனது காரணமாகிய களிமண்ணில் நுட்பமாய் ஒடுங்கியிருந்தது. அதுவே குடத்தின் காரணநிலை. பின் வனைபவனின் முயற்சியால் அது வெளிப்பட்டுப் புலப்படும் நிலையை எய்தியது. இந்நிலையே காரிய நிலை. இவ்விரு நிலைகளும் எல்லாப் பொருள்களுக்கும் உண்டு. காரணநிலையில் புலப்படாமல் உள்ள பொருளைப் புலப்படும் காரி நிலைக்குக் கொண்டு வருதலே படைத்தல் அல்லது தோற்றுவித்தல் எனப்படும். உள்ளதைத் தோற்றுவித்தல் என்பதன் பொருள் இதுவேயாகும். உலகைப் படைத்தல் என்பதனை இந்த வகையில் நாம் நோக்க வேண்டும். படைப்பதற்கு முன்னும் உலகம் தனது காரணத்தில் நுட்பமாய் ஒடுங்கியிருந்தது என்று கொள்ள வேண்டும். குடத்திற்கு மூலகாரணமாய் நிற்பது களிமண். அதுபோல உலகிற்கு மூலமாய் நிற்பது எது? அதுவே மாயை. மாயை என்னும் மூலப் பொருளைப் பற்றி நாம் முன்பே விரிவாக அறிந்துள்ளோம். அந்த மாயையிலே தான் இந்த உலகம் ஒடுங்கியிருந்தது. அதிலிருந்து உலகை வெளிப்படுமாறு செய்தலே படைத்தல் தொழில் என்பதாகும். இவ்வுலகானது உடல், கருவி, நிலம், நுகர்ச்சிப் பொருள் என நான்காகப் பாகுபட்டு நிற்கும். இவை தனு, கரணம், புவனம், போகம் எனப்படும். இவற்றைத் தோற்றுவித்து உயிர்களோடு பொருத்துதலே படைத்தல் தொழிலாகிறது.




காத்தல்

உடம்பைப் பெற்ற உயிர்கள் உலகிடைப் போக்குவரவு புரிகின்றன. அறிகருவிகள், தொழிற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு உலகப் பொருள்களை அறிந்து பயன் கொள்ளுகின்றன. வினைகளைச் செய்கின்றன. வினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகர்கின்றன இவ்வாறு வினை நுகர்ச்சியின் பொருட்டு, உயிர்களுக்குக் கொடுக்கப்பட்ட உடம்பு முதலியவற்றைக் குறித்த காலம் வரை நிற்கும்படி செய்தலே காத்தல் தொழிலாகும்.




அழித்தல்

இனி, உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து பிரித்து, அவற்றின் காரணத்தில் ஒடுக்குதலே அழித்தல் தொழில் எனப்படுகிறது. எந்த உயிரும் தனக்குக் கொடுக்கப்பட்ட உடம்பையும் உலகையும் விட்டுப் பிரிவதை விரும்புவதில்லை. சாவு என்பது உயிருக்குச் செல்ல முடியாத துன்பமாகும். சற்று முன் வரை நன்றாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தவர் துடுமென மாண்டு விழுவதைக் காணும்போது அவரைச் சார்ந்தவர் மனம் என்ன பாடுபடுகிறது? இறைவனே இது என்ன அநியாயம்? உனக்குக் கண்ணில்லையா? என்று கதறுகிறார்கள். இப்படிப்பட்ட அழித்தலை இறைவன் செய்தல் நன்றோ? என ஐயுறலாம், ஓர் எடுத்துக்காட்டினால் இதற்கு விடைகூறலாம். மகன் நோய்வாய்ப்பட்டு இளைத்திருந்தான். தந்தை மிகவும் கவலைப்பட்டார். மருத்துவர் வந்து பார்த்தார். பையனுக்கு இப்பொழுது முழு ஓய்வு தேவை. படிப்பது கூட அவனது நிலையைப் பாதிக்கலாம். என்று கூறிச் சென்றார். அவர் சொன்ன அறிவுரையைப் பையன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் வெளியே சென்று விளையாட விரும்பினான். ஆனால் தந்தையார் அனுமதிக்க வில்லை. இரவு நேரத்தில் கண் விழித்துப் படிக்க விரும்பினான்; அதற்கும் தந்தையார் விடவில்லை புத்தகத்தை எடுத்துப் பூட்டி வைத்தார். விளக்கை அணைத்து விட்டார் இதையெல்லாம் கண்டு மகனுக்கு ஆத்திரம் வந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? அப்பாவாயிற்றே! மகனுடைய பார்வையில் தந்தையின் செயல் கொடுமையானதாகத் தெரிகிறது. ஆனால் மகன் மீது கொண்ட அன்பினால் அல்லவா தந்தை இப்படியெல்லாம் செய்கிறார்? விளையாட்டுப் பொருளை அவனிடமிருந்து விலக்கி வைக்கிறார். விளக்கை அணைத்து வைக்கிறார்; புத்தகத்தை அவனிடமிருந்து பிரித்து வைக்கிறார். இத்தந்தையின் செயல் போன்றது இறைவன் செயல். வினைப்பயன்களாகிய இன்ப துன்பங்களை மாறி, மாறி நுகர்ந்த உயிர்கள் அதனால் இளைப்பு எய்தி நிற்கும். அவ்இளைப்பினை நீக்கக் கருதுகிறான் இறைவன். அதன் பொருட்டே உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து பிரித்து வைக்கிறான் உயிர்களின் பார்வையில் இச்செயல் கொடுமையானதாகத் தோன்றலாம். ஆனால் ஆழ்ந்து நோக்கினால், உயிர்களின் மீது கொண்ட கருணையினால் அல்லவா இறைவன் இப்படிச் செய்கிறான் என்பது புலனாகும்; இறைவன் அழித்தலைச் செய்வது உயிர்களின் நன்மைக்காகவே என்பது விளங்கும். மேற்கூறிய முத்தொழில்களும் மாயாகாரியமாகிய சடப்பொருள்களிடத்தே இறைவன் செய்கின்ற தொழில்களாகும். சடமாகிய உடம்பு முதலியவற்றைத் தோற்றுவித்தல் அவற்றை நிலைநிறுத்துதல், பின் அவற்றை ஒடுக்குதல் என்பது பற்றி இவ்வுண்மை அறியப்படும். இனிச் சித்தாகிய உயிரினிடத்தே செய்கின்ற தொழில்களே அடுத்து வரும் மறைத்தலும், அருளலும் ஆகும்.




மறைத்தல்

மறைத்தலாவது, மாயை கன்மங்களைச் செயற்படுத்தி உயிர்களைப் பிறப்பு இறப்புக்களிற் பட்டு உழலச் செய்தல். இதற்கு மறைத்தல் என்ற பெயர் ஏன்? எனில், மாயை கன்மங்கள் செயற்படும் பொழுது உயிர்களுக்கு மெய்யுணர்வு ஆகிய பேரறிவு தோன்றாமல், மயக்கவுணர்வு ஆகிய சிற்றறிவே தோன்றும். அச்சிற்றறிவு உயிர்களை உலகப் பொருள்களோடு பிணித்து அப்பொருள்களையே மேலும் மேலும் பெற்றுத் துய்க்கும் படியான நாட்டத்தைச் செய்யும். இறைவனை நோக்கவிடாது உலகையே நோக்கி நிற்கச் செய்யும். அதன் காரணமாக உயிர்கள் பல அல்லல்களை அடையும். இவ்வாறு உயிர்கள் தம்மையும், தலைவனையும் அறியாது மயங்கி நிற்கச் செய்தலின் அவ்வகையில் இறைவனது செயல் மறைத்தல் எனப்படுகிறது. மறைத்தலை இறைவன் ஏன் செய்ய வேண்டும்? என வினவலாம். ஆணவமாகிய நோய்க்கு மருந்தாகவே உயிர்களுக்கு மாயை கனமங்களைச் சேர்க்கின்றான். அவற்றின் வயப்பட்ட உயிர்கள் உலக வாழ்வில் பல அல்லல்களை அடைகின்றன. இவ்வாறு உயிர்களை உழலச் செய்தலின் பயன், ஆணவ மலத்தின் சத்தி தொழிதலேயாகும் ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். தெரு முனையில் ஒரு சிறிய காபிக் கடை. கடையின் முன்னே பெருங்கூட்டம் நாம் மெய் வருத்தம் பாராது முட்டி மோதி உள்ளே புகுந்து கடைக்காரனை அடைகிறோம். அவன் ஒரு சிறிய கண்ணாடித் தம்ளரில் (அதை அவன் எங்குதான் கண்டுபிடித்து வாங்கினானோ) காபியை சுடச்சுட ஊற்றிக் கொடுக்கிறான். வாய் பொறுக்காத அளவுக்குச் சூடு. கையில் கூட வைத்திருக்க முடியவில்லை. அருகில் இருந்த பலகையில் அதை வைக்கிறோம். நேரம் போகிறதே தவிரச் சூடு போகவில்லை. நாமோ விரைந்து போக வேண்டும். ஆகவே கடைக்காரனிடம் அப்பா கொஞ்சம் ஆற்றிக் கொடு என்கிறோம். அவன் வெறுமையாக இருந்த மற்றொரு தம்ளரை எடுத்துக் கொண்டு இதையும் அதையும் மேலும் கீழுமாக வைத்துக் கொண்டு காபி வானுக்கும் மண்ணுக்குமாகப் போய் வரும்படி ஆற்றுகிறான்! ஒரு துளி கூடச் சிந்தவில்லை(காபி ஆற்றுவதும் ஒரு கலைதான்) பிறகு நம் கையில் தருகிறான். இப்பொழுது சூடு தணிந்து விட்டது. காபியைத் தம்ளரிலேயே அசையாமல் வைத்திருந்தால் அதன் சூடு குறையப் போவதில்லை. அதையே மேலும் கீழுமாகச் செலுத்தியவுடன் அதன் சூடு தானாகத் தணிந்து போயிற்று. அதே போல, உயிரானது இயக்கமற்றுக் கிடந்தால் அதனைப் பற்றியுள்ள ஆணவ மலம் நீங்கப் போவதில்லை. அது கருதியே இறைவன் மாயை கன்மங்களைக் கூட்டி உயிரைச் செயற்படுத்துகின்றான். உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தியும், இளைப்பாற்றியும் வருகின்றான் இவ்வாறு உயிர் செயற்படச் செயற்பட அதனைப் பற்றியுள்ள ஆணவமும் செயற்பட்டு அதன் சத்தி மெல்ல மெல்லத் தேய்ந்து மெலிகிறது. அதன் பொருட்டே இறைவன் உயிர்க்குயிராய் மறைந்து நின்று மறைத்தல் தொழிலைச் செய்கின்றான். ஆணவத்தின் சத்தி மெலிவடைகிறது என்றால் அதன் மறைப்பு நீங்கி உயிரின் அறிவு வளர்ந்து வருகிறது என்பது கருத்தாகும். அழித்தலைச் செய்வது உயிர்களின் நன்மைக்காகவே என்று முன்னே கூறினோம். அதே போல மறைத்தலைச் செய்வதும் உயிர்களின் அறிவை வளர்த்து உய்வித்தற் பொருட்டே என்பதை உணர்தல் வேண்டும்.