Friday, 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.14

276. கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தல் எனஈர் இரண்டாம் கிளக்கில் ஞானம்
வீட்டை அடைந் திடுவர் நிட்டை மேவி னோர்கள்
மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்கு
ஈட்டியபுண் ணியநாத ராகி இன்பம்
இனிதுநுகர்ந்து அரன் அருளால் இந்தப் பார்மேல்
நாட்டியநல் குலத்தினில் வந்து அவதரித்துக் குருவான்
ஞானநிட்டை அடைந்து அடைவர் நாதன் தாளே,

ஞானவேள்வியில் நான்கு வகைகள் கூறப்பட்டன. அவற்றுள் இறுதியாகக் கூறப்பட்டது கேட்டல், கேட்டலுடன் கேட்ட பொருளைப் பற்றிச் சிந்தித்தலும் சிந்தனையின் பயனாகத் தெளிவு பெறுதலும் அதன் பின்னர் நிட்டை கூடுவதும் என்று இவ்வாறு நான்கு வகையாக ஞானம் நிகழும். நிட்டை கை கூடியவர்கள் மேலாகிய வீட்டின்பத்தினைத் தலைப்படுவர். நிட்டை கை கூடாது முதல் மூன்று படிகளில் நின்று தாம் தாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப மேலான உலகங்களுக்குச் சென்று அங்குள்ள இன்பத்தை இனிது நுகர்ந்து மீண்டும் சிவபெருமான் அருளால் இந்த உலகில் நல்ல குடியில் வந்து பிறப்பார்கள். அதன் பின்னர் அருளாசிரியர்களிடம் பயின்று ஞானநிட்டை பொருந்தி இறைவன் திருவடியை அடைவார்கள்.

277. தானம்யா கம் தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள்
சாந்தி விர தம் கன்ம யோகங்கள் சரித்தோர்
ஈனம் இலாச் சுவர்க்கம்பெற்று இமைப்பள வில் மீள்வர்
ஈசன்யோ கக்கிரியா சரியையினின் நின்றோர்
ஊனம் இலா முத்திபதம் பெற்று உலக மெல்லாம்
ஒடுங்கும் போது அரன்முன் நிலாது ஒழியின், உற்பவித்து
ஞானநெறி அடைந்து அடைவர் சிவனை அங்கு
நாதனே முன்னிற்கின் நணுகுவர் நற்றாளே.

கொடை வேள்வி, புண்ணியத்துறைகளில் ஆடுதல், மாணவநெறி இல்லறநெறி கானகத்தவம், துறவு ஆகியவற்றின் வழி ஒழுகுதல், தவஞ்செய்தல், கழுவாய் செய்தல், நோன்பு நோற்றல், யோகநெறி நிற்றல் ஆகிய இவை எல்லாம் நல்வினைகளே. ஆயினும் இத்தகைய நோன்புகளை மேற்கொண்டவர்கள் குறைவற்ற துறக்க உலகினைச் சென்று இன்பங்களை நுகர்ந்து இமைப்பளவில் இவ்வுலகில் மீண்டும் வந்து பிறப்பர். ஆனால் இறைவன் அருளிய ஆகமநெறியில் கூறப்பட்ட மேம்பட்ட சரியை கிரியை யோகம் என்னும் சிவபுண்ணியங்களை இயற்றினோர் பதமுத்திகளை அடைந்து அங்கு நெடுங்காலம் வாழ்வர். உலகமெலாம் ஒடுங்கும் சங்கார காலத்தில் சிவபெருமான் இவர்களுக்கு முன்னின்று அருளானாகில், மீண்டும் இவ்வுலகில் பிறந்து ஞான நெறியைத் தலைப்பட்டு வீடுபெறுவர். பதமுத்திகளில் வைகுவோர்க்கு இறைவன் திருவருள் கிட்டுமாயின் அங்கிருந்தே அவன் திருவடியில் கலப்பர்.

இந்தப் பாடலில் பல்வகை நோன்புகளையும் தவங்களையும் விடச் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நால்வகை நெறிகள் உயர்ந்தன என்பது கூறப்பட்டது. எவ்வகையாயினும் ஞானத்தைப் பெற்றே வீடுபேறு அடைதல் கூடும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

சரித்தோர்-ஒழுக்கத்தைப் பூண்டவர்கள். உற்பவித்து-பிறந்து

278. சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்
திலம் அளவே செய்திடினும் நிலம்மலைபோல் திகழ்ந்து
பவமாயக் கடலின் அழுந்தாவகை எடுத்துப்
பரபோகம் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
தவம்ஆரும் பிறப்புஒன்றின் சாரப் பண்ணி
சரியைகிரி யாயோகந் தன்னிலும் சா ராமே
நவம்ஆகும் தத்துவஞா னத்தை நல்கி
நாதன் அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே.

சிவஞானிகளின் கையிலே அளித்த கொடை எள்ளளவே ஆயினும் நிலம் போல் அகன்றும் மலைபோல் ஓங்கியும் திகழும். அவ்வாறு வழங்கிய கொடை மீண்டும் பிறவிக் கடலுள் அழுந்தாதபடி எடுத்து மேலான இன்பங்களையும் நுகர்வித்து, பாசத்தை அறுப்பதற்கு ஏற்ற பிறப்பிலே சாருமாறு செய்து, சரியை கிரியை யோகம் என்பனவற்றை எளிதாக முற்றுவித்து, உண்மை ஞான நெறியை அடைவித்துச் சிவபெருமானுடைய செந்தாமரை மலர் போலும் திருவடியாகிய வீட்டின்பத்தினை எய்துவிக்கும். திலம்-எள்.

279. ஞானத்தால் வீடு என்றே நான்மறைகள் புராணம்
நல்லஆ கமம்சொல்ல அல்லவாம் என்னும்
ஊனத்தார் என்கடவர்-அஞ்ஞானத்தால்
உறுவதுதான் பந்தம் உயர் மெய்ஞ்ஞா னந்தான்
ஆனத்தால் அதுபோவதுஅ லர்கதிர்முன் இருள்போல்
அஞ்ஞானம் விடப்பந்தம் அறும்முத்தி ஆகும்
ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்
இறைவன் அடி ஞானமே ஞானம் என்பர்.

எல்லாவற்றிலும் மேலான சிவஞானத்தினாலேயே வீடுபேற்றை அடையமுடியும் என்று நான்மறைகளும் புராணங்களும் சிவாகமங்களும் முழங்குகின்றன. அதற்கு மாறாக வேறு வகை முயற்சிகளாலும் வீடுபேற்றை அடையலாம் எனக் கூறும் புறச் சமயத்தார் கூற்று குறைபாடு உடையது. உயிருக்கு அறியாமையினால் விளைவதே கட்டுநிலை. கட்டுநிலையிலிருந்து விடுபட வேண்டுமானால் உயர்ந்த மெய்ஞ்ஞானம் தோன்றுதல் வேண்டும். மெய்ஞ்ஞானம் தோன்றவே கதிரவன் முன் இருள் போல அறியாமை விலகும். அறியாமை நீங்கிய உடனே பாசப் பிணிப்பு அகலும். வீடுபேறும் வாய்க்கும். மற்றையோர்கூறும் ஞானங்கள் எல்லாம் ஞானம் ஆகாது. சிவபெருமான் திருவடி ஞானமே மெய்ஞ்ஞானம் என்று மேலோர் கூறுவர்.

பாசப்பிணிப்பு என்பது அறியாமையால் விளைவதாகும். எனவே பாசப்பிணிப்பு அறுவதற்கு மெய்ஞ்ஞானம் தோன்றுதல் வேண்டும். ஞானம் என்பது பாசஞானம் பசுஞானம் பதிஞானம் என்று மூன்றாகக் கூறப்படும். இவற்றுள் பாசஞானமும் பசுஞானமும் உயிருக்கு வீடுபேற்றை அளிக்கவல்லன அல்ல. இறைவன் திருவடிஞானம் எனப்பட்ட பதிஞானமே உயிர்களின் அறியாமையைப் போக்கி கட்டுக்களில் இருந்து விடுவித்து வீடு பேற்றையும் தரும் என்பதனை ஆசிரியர் இப்பாடலால் விளக்கினார்.

280. சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றியி டச்சோதி தோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான்வந்து அருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்; தோன்றத்
தூரியனாம் சிவன் தோன்றும் தானும்தோன்றும்
தொல்லுலக மெல்லாம்தன் னுள்ளே தோன்றும்
நேரியனாய் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும்
நின்றநிலை எல்லாம் முன் நிகழ்ந்து தோன்றும்.

செம்மை நிறம் பொருந்திய ஞாயிறு வானில் விளங்கித் தோன்றிய உடனே சூரிய காந்தக் கல்லில் நெருப்புத் தோன்றுவது போல மேலோனாகிய ஞான ஆசிரியன் தன் அருளால் காட்சி தரும் போது உயிரினிடத்துத் திருவடிஞானம் தோன்றும். அவ்வாறு தோன்றவே இறைவனாகிய சிவபெருமானும் நிருவிகற்பமாய் விளங்கித் தோன்றுவான். அவன் அணுவிற்கு அணுவாயும் எங்கும் நிறைந்து நிற்பவனாகவும் விளங்குவதால் உயிரின் இயல்பும் உலகின் இயல்பும் உடன் தோன்றும். இவை யாவும் ஈரிரண்டாம் கிளக்கில் ஞானம் என்று கூறப்பட்டவற்றுள் கேட்டலின் பயனாய் விளைவனவாகும்.

ஆரியன்-மேலோன்; இங்கே குருவடிவாய் எழுந்தருளி வந்த இறைவனைக் குறித்தது. நேரியன்-நுட்பமானவன். பரியன்-பருமை உடையவன்.

281. மிக்கது ஒரு பக்குவத்தில் மிகுசத்தி நிபாதம்
மேவுதலும் ஞானம்விளைந்து ஓர்ருருவின் அருளால்
புக்குஅ நுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள்
பூதலத்தில் புகழ்சீவன் முத்த ராகி
தக்கபிரி யாப்பிரியம் இன்றி ஓட்டில்
தபநியத்தில் சமபுத்தி பண்ணி சங்கரனோடு
ஒக்க உறைந்து இவர் அவனை அவன் இவரை விடாதே
உடந்தையாய்ச் சிவன் தோற்றம் ஒன்றுமே காண்பர்.

பக்குவம் முதிர்ந்த போது உயிர்களுக்குத் தீவிரதர சத்திநிபாதம் விளையும். அந்நிலையில் ஞானமும் முதிரும். அப்போது குருவின் அருளால் கேட்டு சிந்தித்து தெளிந்து நிட்டை கூடுதலும் கைகூடும். இவ்வாறு நிட்டை கூடியவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்திலேயே சீவன் முத்தி நிலையைப் பெறுவர். அவர்களுக்கு எதன் மேலும் விருப்பும் வெறுப்பும் இல்லாததால் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இயல்புடையவராய்ச் சிவபெருமானோடு ஒன்றி இருப்பர். சிவபெருமானை இவர்கள் சிக்கெனப் பிடித்த அடியார்களாகவும் அப்பெருமான் இவர்களைக் கை நழுவவிடாத அருளாளனாகவும் விளங்குவதால் இவர்கள் சிவத்தோற்றம் ஒன்றை மட்டிலுமே கண்டு இன்புற்றிருப்பர். பிரியாப்பிரியம்-விருப்பு வெறுப்பு. தபநியம்-தமனியம்-பொன்.

282. அறியாமை அறிவு அகற்றி அறிவினுள்ளே
அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து
குறியாதே குறித்து அந்தக் கரணங்க ளோடும்
கூடாதே வாடாதே குழைந்து இருப்பை யாயின்
பிறியாத சிவன்தானே பிரிந்து தோன்றி
பிரபஞ்ச பேதம்எல்லாம் தானாய்த் தோன்றி
நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி
நின்றுஎன்றும் தோன்றிடுவன் நிராதாரன் ஆயே.

திருவருளின் துணை கொண்டு அறியாமை எனப்படும் கேவ நிலையிலிருந்தும், அறிவு எனப்படும் சகல நிலையிலிருந்தும் நீங்கி அறிவுக்கு அறிவாக இருக்கிற இறைவனைச் சுட்டறிவினால் அல்லாமல் திருவருளால் தன் முனைப்பின்றி அறிந்து அடங்கி நிற்கப் பெறுவாரானால், தம்மை விட்டு ஒரு போதும் பிரியாத முதல்வன் பொருள் தன்மை பற்றிப் பிரிந்து தோன்றி, சிந்தித்தற் காலத்து உலகத்துப் பொருள்கள் யாவையினும் கலப்புப் பற்றி அவையேயாய்த் தோன்றி, அதன் பின்னர் தெளிந்த பின் இவ்விரண்டு மன்றி இவையாவும் அல்லவாகி ஒன்றிலும் தோய்வு இன்றி அருளுவான்.

அறியாமை நிலை என்பது உயிரின் கேவல நிலையைக் குறித்தது. அறிவு என்பது உயிரின் சகல நிலையைக் குறித்தது. சகல நிலையில் உயிருக்கு நிகழ்வது சுட்டறிவே யாகும். இறைவன் உயிரின் அறியாமைக் காலத்தும் ஏகதேச அறிவு எனப்படும். சுட்டறிவுக் காலத்தும் உயிருக்குப் புலப்படாத தன்மையை உடையவன். எனவே அறியாமை அறிவு அகற்றி என்றார். அறிவுக்கு அறிவாய் நிற்கும் இறைவனை நான் அறிகிறேன் என்ற உணர்வோடு அறிய முயலும் போது உயிருக்குத் தன் முனைப்பு எழும் ஆதலால் திருவருளோடு ஒற்றித்துக் கண்டால் அல்லது அவனைக் காண இயலாது. ஆதலால் அறிவின் உள்ளே அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து என்றார். அவ்வாறு தன் முனைப்பு இன்றி அறிந்த பிறகு மீண்டும் அந்தக் கரணங்களோடு கூடாமலும் அவற்றுக்கு ஆட்பட்டு வாடாமலும் சிவபெருமானின் திருவடிக்கு அன்பு செய்து நெஞ்சம் குழைந்து நிற்றல் வேண்டும் என்பதை உணர்த்த அந்தக்கரணங்களோடும் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயின் என்றார். இந்நிலையிலே இறைவன் நிராதாரனாகத் தோன்றி அருளுவான் என்பது தெளிதலின் பயன்.

பார் விரித்த நூல் எல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஓர் விருத்தப் பாதி போதும் என்று குருஞான சம்பந்தரும் பாதிவிருத்தத்தால் இந்தப் பார்விருத்தமாக உண்மை சாதித்தார் பொன்னடியைச் சாரும் நாள் எந்நாளோ என்று தாயுமானவரும் போற்றிப் பாராட்டிய பாடல் இவ்விருத்தப்பாவின் முற்பகுதி என்பர் பெரியோர்.

283. புண்ணியம்மேல் நோக்குவிக்கும் பாவம்கீழ் நூக்கும்
புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே
நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
எண்ணும்இக லோகத்தே முத்திபெறும் இவன்தான்
எங்குஎழில்என் ஞாயிறு எமக்கு என்று குறைவு இன்றி
கண்ணுதல்தன் நிறைவு அதனில் கலந்து காயம்
கழிந்தக்கால் எங்குமாய்க் கருது அரன்போல் நிற்பன் ,

ஓர் உயிர் செய்த புண்ணியத்தின் பயனாக அது மேல் உலகுக்குச் சென்று துறக்க இன்பத்தினை நுகர்ந்து மகிழும். ஓர் உயிர் பாவத்தின் பயனாகக் கீழ் உலகத்துக்குச் சென்று நிரயத் துன்பத்தில் அழுந்தும் சிவபெருமான் திருவடிகளைத் தவறாது வழிபட்ட சிவ புண்ணியத்தினாலே உண்மையான சிவஞானம் உயிர்களுக்குக் கிட்டும். கிட்டவே சிவ புண்ணியம் என்னும் வாளினால் முதலில் கூறப்பட்ட புண்ணிய பாவங்களின் தளைகளை அறுத்து இவ்வுலகத்திலும் கீழ் உலகத்திலும் மேல் உலகத்திலும் அடைவதைத் தவிர்த்து இம்மையிலேயே சீவன் முத்தராகி விளங்குவர். இச்சீவன் முத்தர்கள் நெற்றிக் கண்ணை உடைய சிவபிரானின் முழு நிறைவிலே கலந்து சூரியன் எங்கே உதித்தால் என்ன? எமக்கு ஒரு குறையும் இல்லை என்று இறுமாந்து வாழ்வர்; உடலைத் துறக்கும் காலம் வரும் பொழுது இவர்கள் நீக்கமின்றி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுடன் கலந்து நிற்பர்.

நூக்குதல்- கீழ் நோக்கிச் செலுத்துதல். காயம்-உடம்பு. திருவாசகத்தில் திருவெம்பாவையில் எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்(பாடல் 19) என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய் (பாடல் 9) என்று மாணிக்க வாசகர் அருளி இருப்பதும் நினையத்தக்கது. இப்பாடல் நிட்டையும் அதன் பயனும் கூறிற்று.

284. ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு
நன்மையொடு தீமை இலை நாடுவது ஒன்று இல்லை
சீலம்இலை தவம்இல்லை விரதமொடு ஆச் சிரமச்
செயல்இல்லை; தியானம்இல்லை; சித்தமலம்இல்லை
கோலம்இலை புலன்இல்லை கரணம் இல்லை
குணம் இல்லை; குறி இல்லை; குலமும் இல்லை
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவி
பாடலினொடு ஆடல் இவை பயின்றிடினும் பயில்வர்.

இவ்வுலகத்தில் ஞானத்தின் உயர்நிலை ஆகிய நிட்டையைக் கை கூடினோர்களுக்கு நன்மையும் இல்லை; தீமையும் இல்லை. அவர்கள் எதனையும் நாடுவதில்லை. அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சமய நெறிகள் இல்லை, தவ ஒழுக்கம் இல்லை. நோன்புகளோ, ஆசிரம நெறிகளோ, செயல்களோ இல்லை. அவர்கள் தியானத்தைக் கைக் கொள்ள வேண்டியது இல்லை. அவர்கள் சித்தத்தில் மாசு இல்லை. அவர்களுக்குப் புறச் சின்னங்கள் தேவையில்லை. ஐம்புலன்களாலும் அகக்கருவிகளாலும் அவர்களுக்கு நுகர்வு எதுவும் இல்லை. அவர்கள் முக்குணவயப்படுவதில்லை. அவர்கள் எய்த வேண்டிய குறிகள் ஏதும் இல்லை. அவர்கள் குல வேறுபாடுகள் பாராட்டுவதில்லை. குழந்தைகள் போலவும், பித்தர் போலவும், பேய் பிடித்தவர் போலவும் அவர்கள் பாடி ஆடி வருவதும் உண்டு.

285. தேசம் இடம் காலம் திக்கு ஆசனங்க இன்றி
செய்வதுஒன்று போல்செய்யாச் செயலதனைச் செய்து அங்கு
ஊசல்படும் மனம் இன்றி உலாவல் நிற்றல்
உறக்கம் உணர்வு உண்டிபட்டினி இருத்தல் கிடத்தல்
மாசு அதனின் தூய்மையினின் வறுமை வாழ்வின்
வருத்தத்தின் திருத்தத்தின் மைதுனத்தின் சினத்தின்
ஆசையினின் வெறுப்பின் இவை அல்லாதும் எல்லாம்
அடைந்தாலும் ஞானிகள்தாம் அரன் அடியை அகலார்.

சிவஞானம் கைவரப் பெற்றவர்கள் நாடு, ஊர், காலம், திக்கு, இருக்கை இவற்றை எல்லாம் ஒரு பொருட்டாகக் கொள்ளார். செயற்கரிய செயல்களை மிக எளிதாகச் செய்வர். அவர்கள் மனம் ஒரு போதும் ஊசலாடாது. நிலைத்த சிந்தையராய் இருப்பர். உலாவுதலும் நிற்றலும், உறங்கலும், விழித்தலும், உண்ணுதலும் பட்டினி கிடத்தலும், இருத்தலும் கிடத்தலும் மாசும் தூய்மையும் வறுமையும் செல்வமும் துன்பமும் மகிழ்ச்சியும் கூடுதலும், பிரிதலும், விரும்பலும் வெறுத்தலும் இவற்றுள் எது நேர்ந்தாலும் அதனால் சிவஞானியர் தமது ஒருமை நிலையிலிருந்து பிறழ மாட்டார்கள். எது நேரிடினும் இவர்கள் சிவ பெருமான் திருவடியை விட்டு அகலார்.

286. இந்நிலைதான் இல்லையேல் எல்லாம் ஈசன்
இடத்தினினும் ஈசன் எல்லா இடத்தினினும் நின்ற
அந்நிலையை அறிந்து அந்தக் கரணங்கள் அடக்கி
அறிவது ஒரு குறி குருவின் அருளினால் அறிந்து
மன்னுசிவன் தனை அடைந்து நின்றவன்த னாலே
மருவுபசு கரணங்கள் சிவகரண மாக
துன்னியசாக் கிரம் அதனில் துரியா தீதம்
தோன்றமுயல் சிவா நுபவம் சுவாநுபூ திகமாம்,

இவ்வாறு இறை நிறைவில் அழுந்துவதாகிய நிட்டை கூடுதல் கை வரப் பெறாதவர் கடைப்பிடிக்க வேண்டிய நெறி ஒன்று உண்டு. அது யாதெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்றும், எல்லாப் பொருளிலும் அவன் உளன் என்றும், அவன் இல்லாது எப்பொருளும் இல்லை என்றும் அறிதல் வேண்டும். உட்கருவிகள் யாவற்றையும் அடக்கி, மெய்ப் பொருளாகிய சிவபெருமானை ஞானாசிரியரால் அருளப்பட்ட நெறியிலே சென்று சிவன் திருவருளைப் பொருந்திப் பசு கரணங்கள் யாவும் சிவ கரணமாக சகல சாக்கிர நிலையிலேயே நின்மல துரியாதீத நிலை கைகூடும்படி முயலுதல் வேண்டும். முயற்சியின் பயனாகச் சிவானுபவத்தைத் தமது அனுபவமாக நுகர்தல் கைகூடும்.

ஞான நிட்டை கை கூடப் பெறாதவர்க்கு அதனைப் பெறும் வழி இப் பாடலால் கூறப்பட்டது.

287. சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகில்
சருவசங்க நிவர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுஎன்? இம்மையிலே உயிரின்
பற்று அறுத்துப் பரத்தை அடை பராவுசிவர் அன்றோ?
ஆக்குமுடி கவித்துஅரசு ஆண்டு அவர்கள் அரிவையரோடு
அனுபவித்து அங்கு இருந்திடினும் அகப்பற்று அற்று இருப்பர்
நோக்கி இதுபுரியாதோர் புறப்பற்று அற்றாலும்
நுழைவர் பிறப் பினில் வினைகள் நுங்கி டாவே,

முந்திய பாடலில் கூறப்பட்ட படி சகல சாக்கிரத்தில் நின்றே நின்மல துரியாதீதத்தைப் புரிந்தவர்கள் இவ்வுலகத்தில் யாவற்றையும் பற்றறத் துறந்த பெருந்தவத்தோர் ஆவர். இவர்கள் பெற்ற பெரும் பேற்றினை எவ்வாறு சொற்களால் கூற முடியும்? இம்மையிலேயே அகப் பற்றøயும் புறப் பற்றையும் அறுத்துச் சிவபெருமானோடு கலந்து நிற்கின்ற இவர்கள் நம்மால் வணங்கத் தகுந்த சிவனே ஆவர் அன்றோ? இத்தகையோர் முடியுடை வேந்தராக அரசாண்டு மகளிரோடு கூடி இன்புற்று இருந்தாலும் தமது அகப்பற்றை முற்றிலும் அறுத்தவராவர். இந்நிலை கை கூடாதவர் புறப்பற்றை ஒழித்தாலும் அகப் பற்றை ஒழியாமையினால் அவர்கள் மீண்டும் பிறப்புட் படுவர். அவர்களின் வினைகளும் கெடா.

சர்வசங்க நிவிர்த்தி-யாவற்றிலும் பற்று அறுதல். தபோதனர்-துறவிகள் பராவு சிவர்-வணங்கத்தக்க சிவத் தன்மை உடையவர். நுங்கிடா-கெடா.

மூன்றாம் அதிகரணம்

288. கருவிகழிந் தால்காணார் ஒன்றும் எனில் காணார்
காணாதார் கன்னிகைதான் காமரதம் காணாள்
மருவி இரு வரும்புணர வந்த இன்பம்
வாயினால் பேசரிது மணந்தவர்தாம் உணர்வர்
உருவின் உயிர் வடிவதுவும் உணர்ந்திலர் காண் சிவனை
உணராதார் உணர்வினால் உணர்வதுகற் பனைகாண்
அருள்பெறின் அவ் இருவரையும் அறிவுஇறந்து அங்கு அறிவர்
அறியாரேல் பிறப்பும் விடாது ஆணவமும் அறாதே.

கருவிகளை விட்டு நீங்கப் பெற்றவர்கள் எதனையும் காண முடியாதவர் ஆவார் அன்றோ? எனவே அந்தக்கரணங்களோடும் கூடாதே நின்றவர்களே இறைவனைக் காண்பார் என்பது பொருந்துமா? என்று சிலர் வினவுவர். உலகியற் பொருளைக் காண்பதற்கு உட்கருவி புறக்கருவி ஆகியவற்றின் துணை வேண்டும் என்பது உண்மையே. ஆனால் ஞான நிட்டை கூடியவர்கள் இறைவனைக் கண்டவர்கள் ஆதலால் சிவ ஞானத்தால் யாவற்றையும் அறியும் அறிவு பெற்றவர்கள். எனவே திருவருளைப் பெற்றவர்கள் தம்மையும் தலைவனையும் கருவி அறிவைக் கடந்து அறிவார்கள். இது எத்தகையது எனில் திருமணமாகாத கன்னிப் பெண் ஒருத்தி இன்பச் சுவையை அறிய மாட்டாள். ஒருவனும் ஒருத்தியுமாகக் கலந்து அனுபவிக்கும் இன்பம் இத்தகையது எனச் சொல்லினால் உணர்த்த இயலாது. அவ்வின்பத்தைத் துய்த்தவரே அதனை உணர்வர். அது போலவே இறைவனைக் கண்டவர்கள் பெறுகின்ற இன்பமும் இத்தகையது என்று உணர்த்த இயலாது. திருவருள் வழி நின்று உணராதவர்கள் தாம் உணர்வதாகக் கூறினால் அது கற்பனையே அன்றி வேறன்று. திருவடி ஞானம் பெற்றவர்க்கு அல்லாமல் பிறர்க்குப் பிறப்பும் நீங்காது. ஆணவமும் அறாது.

289. பல்நிறங்கள் அவை காட்டும் படிகம் போல் உள்ளம்
பல புலன்கள் நிறம்காட்டும் பரிசு பார்த்திட்டு
இந்நிறங்கள் என்நிறம் அன்று என்று தன்தன்
எழில்நிறம் கண்டு அருளினால் இந்நிறத்தின் வேறாய்
பொய்ந்நிற ஐம்புல நிறங்கள் பொய்யெனமெய் கண்டான்
பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை
முன்நிறைநீர் சிறை முறிய முடுகி ஓடி
முந்நீர்சேர்ந்து அந்நீராய்ப் பின்நீங்கா முறைபோல்.

தன்னை அடுத்தபொருள்களின் பல்வேறுபட்ட நிறங்களைத் தன்னுடையது போலக் காட்டும் இயல்புடையது படிகம். இது போலவே உயிரும் தான் சார்ந்திருக்கும் கருவிகளின் இயல்பையே தன்னுடையது போலக் காட்டும். இது ஆன்மாவின் பொது இயல்பு ஆகும். முதலில் இப் பொது இயல்பைச் சிந்தித்து அறிந்து கொண்டு தனது சிறப்பு இயல்பு இவற்றின் வேறாய் உண்டு என்று அறிந்து கொண்டு, கருவிகளால் வந்த இயல்பு பொய் என்று கண்டு கழித்தவன் உண்மையை உணர்ந்தவன் ஆவான். அவனே சிவத்தினோடும் பொருந்திடுவான். சிவத்தைப் பொருந்திய பின் அதனை விட்டு நீங்கான்,. அணைகட்டித் தடுத்துத் தேக்கி வைக்கப்பட்ட வெள்ளம் அணை உடைந்த போது விரைந்து ஓடி கடல் நீரோடு சேர்ந்து பின் அதனை விட்டு நீங்காத தன்மை போன்றது இவன் தன்மை.

290. எங்கும்தான் என்னின் நாம் எய்த வேண்டா
எங்கும்இலன் என்னின் வேறு இறையும் அல்லன்
அங்கம்சேர் உயிர்போல்வன் என்னின் அங்கத்து
அவயவங்கள் கண்போலக் காணா ஆன்மா
இங்கு நாம் இயம்பும் தத்தவங்களின் வைத்து அறிவது
இறைஞானம் தந்து தாள் ஈதல் சுடர் இழந்த
துங்கவிழிச் சோதியும்உட் சோதியும் பெற்றாற்போல்
சோதிக்குள் சோதியாய்த் தோன்றிடுவன் காணே.

இறைவன் உலகு உயிர் யாவற்றிலும் நிறைந்திருக்கிறான் என்றால் நாம் அவனைச் சென்று அடைய வேண்டியது இல்லை. இறைவன் உயிருக்கு வேறாய் நிற்பன் என்று கொண்டால் அவனுடைய இறைமைத் தன்மைக்கு இழுக்காகும். அவ்வாறு அன்று உடம்புக்கு உயிர்

போல இறைவன் உயிருக்கு உயிராய் நின்பான். உயிர் உடம்பு முழுவதும் நிறைந்திருந்தாலும் கண்ணைக் கொண்டே உயிரால் காண முடியும். அவ்வாறே சிவம் உயிரோடும் நிறைந்து கலந்திருந்தாலும் நிட்டையாகிய கண் ஒளியும் சிவனருளாகிய பேரொளியும் கலந்த போதே உயிர் தனது இயல்பையும் இறைவனது இயல்பையும் உள்ளவாறு அறிய முடியும். நிட்டை கூடிய போதே விழியிலான் ஒருவன் கண் பெற்றது போல இறைவனைக் காணும் தன்மை உயிருக்கு வாய்க்கும்.

291. பாசி படு குட்டத்தில் கல்லினை விட்டு எறியப்
படும் பொழுது நீங்கி அது விடும் பொழுதில் பரக்கும்
ஆசுபடும் மலம்மாயை அருங்கன்மம் அனைத்தும்
அரன்அடியை உணரும்போது அகலும் பின் அணுகும்
நேசமொடும் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே ஆகி
ஆசையொடும் அங்கும்இங்கும் ஆகிஅல மருவோர்
அரும்பாசம் அறுக்கும்வகை அருளின்வழி உரைப்பாம்.

ஒரு நீர் நிலையில் உள்ள தண்ணீரை நீர்ப்பாசி முற்றிலும் மறைத்துக் கொண்டிருக்கிறது. அதிலே ஓர் கல்லினை விட்டெறிந்தால் அக்கல்குளத்தில் படும்போது நீரை மறைத்துள்ள பாசி சற்றே விலகும், பின்னர் சற்று நேரத்தில் அப்பாசி மீண்டும் பரந்து நீர் முழுவதும் மூடிக் கொள்ளும். குற்றம் பொருந்திய மலமும் மாயையும் வினையும் உயிர் சிவத்தை உணரும் போது நீங்கி உணராத நேரம் வருமாயின் மீண்டும் குளத்துப் பாசி போல் பற்றிக் கொள்ளும். இடையறாத அன்போடு சிவ பெருமான் திருவடியில் பொருந்தி நிற்கின்ற நிட்டை கைவரப் பெற்றவர் அந்நிலையிலேயே பிறழாது நிற்பர். அவ்வாறு நில்லாது உலகியல் ஆசைகளினால் கருவிகளிடத்திலும் சிவன் திருவடியிலுமாக அலமருவோர் தமது மலத்துன்பத்தைப் போக்கும் உபாயத்தை இதன் பின்னர் உரைப்போம். சிவஞான சித்தியார் பகுதி-5

ஒன்பதாவது நூற்பா 292. பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
நீழல்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
ஆசைதரும் உலகம்எலாம் அலகைத்தே ராம்என்று
அறிந்து அகல அந்நிலையே ஆகும் பின்னும்
ஓசைதரும் அஞ்சு எழுத்தை விதிப்படி உச்சரிக்க
உள்ளத்தே புகுந்து அளிப்பன் ஊனமெலாம் ஓட.

சிவபெருமான் பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறிய இயலாத தன்மையினை உடையவன். அப்பெருமானை அவனுடைய திருவருள் வழியில் நின்று பதிஞானத்தால் தன் உள்ளத்தின் உள்ளே அன்பினோடும் தேடி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத போது இவ்வுலகியல் உணர்வு மேல் எழுதல் கூடும். உலகியல் உணர்வை வெறும் கானல் நீர். நொடிப் பொழுதில் மறையும் தன்மை உடையது என்று உணர்ந்து அதனை விட்டு நீங்கி இறைவன் திருவடியை விட்டு விலகாத ஆற்றலைத் தரவல்ல திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். அந்நிலையில் திருவடி ஞானம் விளங்கி உயிரின் குற்றம் எல்லாம் நீங்குமாறு இறைவன் திருவருள் பாலிப்பான்.

முதல் அதிகரணம்

293. வேதம் சாத்திரம் மிருதி புராணம் கலைஞானம்
விரும்பு அசபை வைகரி ஆ தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வான எல்லாம் பாசஞானம்
நணுகிஆன்மா இவை கீழ் நாட லாலே
காதலினால் நான்பிரமம் என்னும் ஞானம்
கருதுபசு ஞானம் இவன் உடலில் கட்டுண்டு
ஓதிஉணர்ந்து ஒன்றுஒன்றாய் உணர்ந்திடலால் பசு ஆம
் ஒன்றாகச் சிவன் இயல்பின் உணர்ந்திடுவன் காணே.

மறைகள், சாத்திர நூல்கள், மிருதி நூல்கள், புராண வரலாறுகள், உயர்ந்த கலை ஞானங்கள், விரும்பத் தக்க அசபை என்ற மந்திரம் வைகரி முதலிய நால் வகை வாக்குகள், மண் முதல் நாதம் முடிவாக உள்ள தத்துவங்கள் ஆகிய இவற்றினால் உயிர் பெறும் அறிவு பாச ஞானம் எனப்படும். ஏனெனில் இவற்றால் விளைந்த அறிவு உலகியல் பற்றைத் தோற்று வித்து அதனால் உயிரை மீண்டும் பிறப்புக்கு உட்படுத்தும். உயிர் தன் முனைப்போடு நானே பிரமம் என்று கூறிக் கொள்ளும் அறிவு பசு ஞானம் எனப்படும். ஏனெனில் ஆன்மா ஆகிய இவன் உடல்களில் கட்டுண்டு நிற்பவன். தானாக அறியாமல் உணர்த்த உணரும் அறிவினை உடையவன். தானே அறியாமல் பொறிகளின் துணையால் ஒவ்வொன்றாய் உணர்ந்து வரும் இயல்பினை உடையவன். எனவே இவனைப் பசு என்றும் இவனது அறிவைப் பசு ஞானம் என்றும் பெரியோர் கூறுவர். இறைவனோ தன் வயமுடைய முற்றறிவினன். எனவே தான் இறைவன் பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் காண்டற்கு அரியவன் என்பர் மேலோர்.

294. கரணங்கள் கெட இருக்கை முத்தி ஆம் என்னின்
கதி ஆகும் சினை முட்டை கரு மரத்தின் உயிர்கள்
மரணம்கொண் டடி உறங்க மயங்கிமூர்ச் சிக்க
வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச்
சரணங்கள் புகும்நிழல்போல் தனை அடையும் சமாதி
தவிராது மலம் இதுவும் பசுஞானம் ஆகும்
அரணங்கள் எரித்தவன்தன் அடியை அறிவு இறந்து அங்கு
அறிந்திடீர்! செறிந்ததுகள் அகற்றிடீரே.

உயிர்கரணங்களோடு பொருந்தாது. அவற்றைக் கெடுத்திருத்தலே வீடுபேறு என்று சிலர் கூறுவர். இது பொருந்துவதன்று. ஏனெனில் சினையிலும் முட்டையிலும், கருவிலும், மரத்திலும் உயிர் உண்டு. உயிர் இருந்தும் அந்நிலையில் அவற்றுக்குக் கருவியும் கரணமும் இல்லை. எனவே அந்நிலையை வீடுபேறு என்று கூறுதல் அடாது. மேலும் இறப்பு நிலையிலும், உறக்க நிலையிலும், மயங்கி மூர்ச்சித்த நிலையிலும், உயிர்க் காற்றை அடக்கிய நிலையிலும், கொடிய நஞ்சு தலைக்கு ஏறிய நிலையிலும், கரணங்கள் செயல்படுவதில்லை ஆயினும் அவை எல்லாம் வீடுபேற்று நிலையாகா. வேறும் சிலர் யோக நிலையில் நின்று ஆன்மா தன்னுள் ஒடுங்கி நிற்பதே வீடுபேறு என்பர். காலைப் பொழுதிலும், மாலைப் பொழுதிலும் ஒருவனுடைய நிழல் அவனை விட்டு வெகு தொலைவுக்கு நீண்டு கிடக்கும், உச்சிப் பொழுதிலே அவனது நிழல் அவன் காலடியிலேயே அடங்கி நிற்கும். யோகநிலையில் உயிர் இவ்வாறே தன்னில் அடங்கி நிற்கும். அதுவே வீடுபேறு என்பது இவர்கள் கொள்கை. இக்கொள்கையும் பொருந்துவதன்று. ஏனெனில் சமாதி நிலையிலும் உயிரை விட்டு மலம் நீங்குவதில்லை. எனவே இதுவும் பசுஞானமேயாகும். முப்புரங்களை எரித்தவனாகிய சிவ பெருமானுடைய திருவடியைப் பற்றி அறிவு கடந்து அவனை அறியும் போதே மலமாக அகலும்.

295. சிவனை அவன் திருவடிஞா னத்தால் சேரச்
செப்புவது செயல் வாக்கு சிந்தை எல்லாம்
அவனை அணு காஎன்றும் ஆதலானும்
அவன்அடி அவ் ஒளிஞானம் ஆத லானும்
இவனும் யான் துவக்கு உதிரம் இறைச்சி மேதை
என்பு மச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ
அவம்அகல எனை அறியேன் எனும்ஐயம் அகல
அடி காட்டி ஆன்மாவைக் காட்டலானும்.

மனம், வாக்கு, மெய் ஆகியவற்றால் உயிர் சிவபெருமானை ஒருபோதும் அணுக இயலாது ஆதலானும், சிவபெருமானின் திருவடி ஒளிமயமான ஞானத்தைத் தரும் ஆதலாலும், ஆன்மாவாகிய இவனோ நான் தோல் குருதி, தசை, நரம்பு, எலும்பு, எலும்பின் உள்ளே உள்ள செங்குருத்து, வெண்ணீர் இவற்றால் ஆகியவனோ? அல்லது ஐம்பொறிகளின் கூட்டத்தால் ஆகியவனோ? என்று தன்னை உள்ள படி அறியாது உறுகின்ற ஐயத்தைத் திருவடி ஞானமே விலக்கும் ஆதலானும் சிவபெருமானை அவனுடைய திருவடி ஞானத்தின் துணை கொண்டே அறிதல் வேண்டும் என்று பெரியோர் கூறுவர்.

பதிஞானம் என்னும் திருவடி ஞானமே உயிருக்குத் தன்னையும் உணர்த்தித் தலைவனையும் உணர்த்தும் ஆதலால் இப்பாடலில் பதியை அறியும் முறையினைக் கூறினார். கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று சார்தலுமே தானெனக்கு
மரணம் பிறப்பென்று இவைஇரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி

(திருவாசம்-திருக்கோத்தும்பி-9) என்பது காண்க.

296. கண்டிடும் கண் தனைக்காண கரணம் காணா
கரணங்கள் தமைக்காணா உயிரும் காணா
உண்டிஅமர் உயிர் தானும் தன்னைக் காணாது
உயிர்க்குயிராம் ஒருவனையும் காணா தாகும்
கண்டசிவன் தனைக்காட்டி உயிரும் காட்டி
கண்ணாகிக் கரணங்கள் காணாமல் நிற்பன்
கொண்டு அரனை உளத்தில் கண்டு அடிகூடின் பாசம்
கூடாது கூடிடினும் குறித்து அடியின் நிறுத்தே.

புறப்பொருள்களை எல்லாம் காண்கின்ற கண்கள் தம்மைக் காண மாட்டா. தம்மைச் செலுத்துகின்ற உட்கரணங்களையும் அவை காண மாட்டா. அது போலவே மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய உட்கருவிகளும், வித்தியா தத்துவம் முதலிய உள் அந்தக்கரணங்களும் தம்மையும் காண மாட்டா, தம்மைச் செலுத்துகின்ற உயிரினையும் காணமாட்டா. அவற்றைப் போலவே வெளியுலகை அறிந்து வருகின்ற உயிரும் தன்னையும் காணாது. தனக்கு உயிர்க்கு உயிராய் விளங்கி உணர்த்தி வருகின்ற இறைவனையும் காணாது. இவை யாவற்றையும் அறிந்தாங்கு அறிந்து நிற்கின்ற இறைவன் தன்னியல்பையும் விளக்கி, உயிரின் இயல்பையும் விளக்கிக் காட்டுகின்ற ஞானமேயாக, கரணங்களால் அறியப்படாதவனாக நிற்பான். ஆதலால் அச் சிவஞானத்தையே துணையாகக் கொண்டு இறைவனைத் தன் அறிவின் உள்ளே கண்டு அவனது திருவடியைப் பற்றி நின்றால் பாசங்கள் அகலும். எப்போதேனும் பாசம் மீளவருமானாலும் சிவபாவனையை விடாது செய்து அவன் திருவடிக்கீழ் நிற்றல் வேணடும்.

கண்ணாகி என்ற சொல் உயிருக்கு அறிவினைக் காட்டுவதாகிய இறைத் தன்மையைக் குறித்தது. சிவஞான போதம் ஐந்தாம் நூற்பா இரண்டாம் அதிகரணத்தில் முதல் எடுத்துக்காட்டு வெண்பாவில் சொன்ன சிவன் கண்ணா என்று முதல் நூலாசிரியர் இச்சொல்லை இப் பொருளில் ஆண்டிருப்பதை ஒப்பு நோக்குக.

இரண்டாம் அதிகரணம்

297. குறித்து அடியில் நின்று, அட்ட குணம்எட்டுச் சித்தி
கோகநதன் முதல்வாழ்வு குலவுபதம் எல்லாம்
வெறுத்து, நெறி அறுவகையாவும் மேலோடு கீழ் அடங்க
வெறும்பொய் என நினைந்து இருக்க; மேலோடு கீழ் இல்லான்
நிறுந்துவது ஓர்குணம் இல்லான், தன்னை ஒரு வர்க்கும்
நினைப்பரியான், ஒன்றும் இலான், நேர்படவந்து உள்ளே
பொறுப்பு அரிய பேரன்பை அருளி அதன்வழியே
புகுந்திடுவன் எங்கும் இலாப் போகத்தைப் புரிந்தே.

இறைவன் திருவடியிலே உறைப்போடு நின்றால் புறச்சமயத்தார் கூறும் எட்டுவகைக் குணம், அட்டமாசித்திகள், நான்முகன் முதலிய வானவர் பதங்கள் எல்லாம் ஒரு பொருட்டன்று என்ற வெறுப்புத் தோன்றும். எனவே அவற்றை எல்லாம் ஒதுக்கி சிவபெருமான் திருவடியில் பொருந்தி நிற்றல் வேண்டும். அடிமுடி என்னும் வரையறைக்கு உட்படாதவனாகவும், இத்தகையவன் என்று ஒருவராலும் நினைப்பதற்கு அரியவனாகவும், குலம் குறி ஏதும் இல்லாதவனாகவும், விளங்குகின்ற சிவபெருமான் அறிவுக்கு அறிவாய் நேர்பட வந்து பேரன்பினை அருளி அதன் வாயிலாக எங்கும் காணுதற்கு அரிய இன்பத்தினை வழங்கி ஆட்கொள்வான். கோகநதம்-தாமரை, கோகநதன்-தாமரையை இருப்பிடமாகக் கொண்ட அயன்.

மூன்றாம் அதிகரணம்

298. கண்டஇவை அல்லேன் நான் என்று, அகன்று, காணாக்
கழிபரமும் நான் அல்லேன் எனக்கருதி, கசிந்த
தொண்டினொடும் உளத்து அவன்தான் நின்றகலப் பாலே,
சோகமெனப் பாவிக்க, தோன்றுவன்வேறு இன்றி
விண்டுஅகலும் மலங்கள் எல்லாம், கருடதியா னத்தால்
விடம்ஒழியு மதுபோல விமலதையும் அடையும்,
பண்டைமறை களும் அதுதான் ஆனேன் என்று
பாவிக்கச் சொல்லுவதுஇப் பாவகத்தைக் காணே.

சுட்டறிவுக்குப் புலப்படுகின்ற இவ்வுலகப் பொருள்கள் அனைத்தும் நான் அல்லேன் என்று அவற்றை விட்டு அகலுதல் வேண்டும். என்னறிவுக்கு எட்டாத பிரமப்பொருளும் நான் அல்லேன் என்பதைக் கருதி உணர்தல் வேண்டும். அவ்வாறு கருதி உணர்வதனால் உயிராகிய நான் பாசப்பொருளும் அல்லேன். பதிப்பொருளும் அல்லேன் என்று புலனாகும். அன்போடு உளம் கசிந்து தொண்டு செய்யும் அடியவர் உளத்தில் இறைவன் அத்துவிதக் கலப்போடு எழுந்தருளுவான். அந்நிலையில் அவன் நான் என்று பாவிக்க இறைவன் தோன்றித் தோன்றுவன். அதனால் உயிரின் மலங்கள் எல்லாம் உயிரை விட்டு அகலும், உயிர் தூய நிலையையும் அடையும், கருட தியானத்தால் பாம்பின் விடம் நீங்குவது போல சிவோகம் பாவனையால் உயிரைப் பற்றி நின்ற மலங்கள் ஒழிந்து உயிர் தூய்மை நிலையைப் பெறும். பண்டை மறை நூல்களும் அது நான் ஆனேன் என்று பாவிக்குமாறு வலியுறுத்தின. அதுவே இப்பாவகமாகும்.

சோகம்-ச+அகம். அதுநான் என்று பொருள்படும். சிவ+அகம்=சிவோகம். சிவனே நான் என்று பொருள்படும். வேதாந்தம் பிரமப் பொருளை அது என்ற சொல்லால் குறிக்கும். எனவே சோகம் என்பது வேதாந்தக் கருத்தும், சிவோகம் என்பது சித்தாந்தக் கருத்துமாகும். விமலதை-மலத்தில் நின்றும் நீங்கிய தூயநிலை. பண்டை மறைகள்-தொன்மையான மறைமுடிவைக் கூறும் உபநிடதங்கள்.

299. அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும்
அரன் உருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்டு
அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி
ஆன்மாவின் அஞ்செழுத்தாளல் இதயத்து அர்ச்சித்து
அஞ்செழுத்தால் குண்டலியின் அனலை ஓம்பி
அணைவு அரிய கோதண்டம் அணைந்து அருளின் வழிநின்று
அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்க,மதி அருக்கன்
அணைஅரவம் போல் தோன்றும், ஆன்மாவில் அரனே.

திருவைந்தெழுத்தின் துணை கொண்டு ஆன்மா சிவபெருமானுக்கு உடைமை என்பதையும் சிவபிரான் உடையானாக விளங்குபவன் என்பதையும் அறிதல் வேண்டும். சிவபெருமானுடைய திருஉருவமும் திருவைந்தெழுத்தால் அமைந்தது என்பதனையும் அறிந்திடல் வேண்டும். திருவைந்தெழுத்தை ஓதி உறுப்புக்களைத் தொட்டும், கைகளைத் தொட்டும் தூய்மை செய்து கொள்ளுதல் வேண்டும். இதயத்தைப் பூசைக்கு உரிய இடமாகவும், உந்தியை ஓமத்திற்கு உரிய இடமாகவும் புருவநடுவை தியானத்திற்கு உரிய இடமாகவும் கற்பித்துக் கொண்டு இதயத்தில் சிவபரம் பொருளை எழுந்தருளுவித்து வழிபடுதல் வேண்டும். திருவைந்தெழுத்தால் உந்தியில் உள்ள அருட்சத்தியை எழுப்பி, சேர்வதற்கு அரிய புருவநடுவில் அதனைச் சேர்த்து, திருவருளின் வழி நின்று திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். இவ்வாறு செய்யும் வழிபாட்டால் கிரகண காலத்தில் ராகு, கேது ஆகிய இரண்டும் திங்களிடத்தும், கதிரவனிடத்தும் காணப்படுவதைப் போல ஆன்மாவினிடத்தில் சிவபெருமான் விளங்கித் தோன்றுவான்.

முந்திய பாடலில் பாவனையைக் கூறிய ஆசிரியர் இந்தப் பாடலில் வழிபாட்டுக்குரிய மந்திரமும் அதற்கு உரிய கிரியையும் கூறினார். திருவைந்தெழுத்தே சிவபெருமானுடைய திருமேனியாக அமையும் என்பது உண்மை விளக்கம் நூலில் விரித்து உரைக்கப்பட்டுள்ளது. அங்கநியாசம், கரநியாசம் என்பன வழிபாட்டிற்கு முன் உறுப்புகளையும் கைகளையும் தொட்டு மந்திரங்களால் தூய்மை செய்து கொள்ளுவதை உணர்த்தின. இங்கே அதற்குரிய மந்திரமாகத் திருவைந் தெழுத்தைக் கூறினார்.

ஒன்பது கோள்களுள் மற்றைய ஏழும் போல இராகுவும் கேதுவும் கண்களுக்குப் புலனாகா. அவை கிரகண காலத்தில் மட்டும் திங்களிலும் கதிரவனிலும் காணப்படும். அது போலப் பாசப் பொருளும், பசுப் பொருளும் உயிர்களுக்கு எல்லாக் காலத்தும் புலப்படும். பதிப் பொருள் புலப்படாது. இங்குக் கூறப்பட்ட பாவனை, மந்திரம், கிரியை ஆகியன நிகழ்ந்த போதே பதிப்பொருள் ஆன்மாவின் அறிவில் விளங்கித் தோன்றும் என்றார்.

குண்டலி-அருட்சத்தி, கோதண்டம்-வில் போன்று விளங்கும் புருவநடு, அருக்கன்-ஞாயிறு. அரவம்-இராகு கேது.

300. நாட்டும்இத யந்தானும் -நாபியினில் அடியாய்
ஞாலம் முதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய்
மூட்டுமோ கினிசுத்த வித்தைமலர் எட்டாய்
முழுஇதழ்எட்டு அக்கரங்கள் முறைமையினில் உடைத்தாய்
காட்டு கமலாசனமேல் ஈசர், சதா சிவமும்
கலாமூர்த் தமாம்; இவற்றின் கண்ணாகும் சத்தி
வீட்டை அருள் சிவன் மூர்த்தி மானாகி சத்தி
மேலாகி நிற்பன்; இந்த விளைவு அறிந்து போற்றே.

உந்தியில் நிலமாகிய தத்துவம் கிழங்காகவும் அதனை அடுத்து இருபத்து மூன்று தத்துவங்களும் எட்டுவிரல் அளவுள்ள நாளமாகவும் தூவாமாயையின் காரியமாகிய வித்தியா தத்துவங்கள் ஏழும் சுத்தவித்தை ஆகிய தத்துவத்துடன் கூடிய எட்டு இதழ் வடிவமாகவும், அவ்விதழ்கள் எட்டும் பிரணவம் முதலிய எட்டு எழுத்துக்களை உடையதாகவும், ஈசுவரம், சதாசிவம் என்ற இரண்டுதத்துவங்களும் அறுபத்து நான்கு கேசர வடிவாகவும், சத்தி தத்துவம் அக்கேசரங்களுக்கு நடுவிலே உள்ள பொகுட்டு வடிவமாகவும், அதனில் காணப்படும் ஐம்பத்தொரு வித்து வடிவமாகவும் விளங்குகின்ற இதயகமலம் இறைவன் எழுந்தருளும் ஆசனமாகும். இவ்வாறு பாவித்து வீடுபேற்றை அருள வல்லவனாகிய சிவபெருமான் அச்சத்தியினும் மேலான மூர்த்திமானாக விளங்குவதாகக் கொண்டு உள்ளத்தின் உள்ளே கண்டு வழிபாடு செய்தல் வேண்டும்.

நாளம்-தண்டு. இதயத்தாமரை இங்கு உருவகிக்கப்பட்டது. இது அகவழிபாடு இயற்றுகின்ற முறைமையை உணர்த்திற்று. இதனை அந்தர் யாக பூசை என்பர். சிவஞான போதத்தில் ஒன்பதாம் நூற்பாவில் மண் முதல் நாளம் என்று தொடங்குகின்ற எடுத்துக்காட்டு வெண்பாவை இங்கு நினைவு கூர்க.

No comments:

Post a Comment