இறைவன் ஒன்றாய் நிற்றல்
28. அன்றியும்கேள் ஆன்மாவால் ஆய்ந்துஅறியும் ஐம்பொறிகள்
இன்றி அறியா இவைஎன்ன நின்றதுபோல்
ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன்அறிவில்
மேவாமல் மேவி நாமே,
பதவுரை
அன்றியும் கேள் மேலும் கூறுவோம். கேட்பாயாக.
ஆன்மாவால் ஆன்மாவின் உதவியினாலேயே
ஐம்பொறிகள் அறிவுப் பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தும்
ஆய்ந்து அறியும் தத்தம் புலன்களை அறிவனவாம்.
இன்றி ஆன்மாவின் துணையில்லாமல்
அறியா அவை தாமே அறியமாட்டா.
இவையென்ன நின்றது போல் ஆன்மா இப்பொறிகளை இடங்கொண்டு பிரிப்பின்றிக் கலந்திருந்து அவை புலன்களை அறியுமாறு செய்தும், தான் காணப்படாமல் அவ்வப் பொறியாகவே நின்றதுபோல நாம் யாமும் (இறைவனும்)
உன் அறிவில் உனது அறிவினுள்
மேவாமல் மேவி பொருந்தாமல் பொருந்தி (நீயாகவே நின்று)
ஓவாமல் இடையறாமல்
உன்னை உணர்த்துவோம் உன்னறிவை விளக்கி வருவோம்.
பொழிப்புரை
இன்னும் கூறுவோம், கேள், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் உயிரின் துணையினாலேயே தம் தம் புலன்களை அறிகின்றன. அவை புலன்களை அறிவதற்கு உயிர் அவற்றில் பொருந்தி அவையேயாய் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். அவ்வாறு உயிர் அப்பொறிகளோடு ஒற்றுமைப்பட்டு நிற்கவில்லை என்றால் அப்பொறிகள் ஏதொன்றையும் அறியமாட்டா. இங்ஙனம் ஐம்பொறிகள் அறிவதற்கு உயிர் அப்பொறிகளை இடங்கொண்டு அப்பொறிகளேயாய் நிற்றல் போல, யாம் உனது அறிவினுள் பொருந்தாமல் பொருந்தி, நீயேயாய் நின்று உன்னை உணரும்படி செய்துவருவோம்.
விளக்கம்
ஐம்பொறிகள் உயிருக்கு உவமையாதல்
ஐம்பொறிகள் தாமாக அறியா. இது எப்படித் தெரிகிறது? உயிர் நீங்கிய உடம்பில் கண், காது முதலிய பொறிகள் கெடாமல் நல்ல நிலையில் இருந்தாலும் அவை அறிதலாகிய தொழிலைச் செய்வதில்லை. அவை தாமே அறியா என்பதும், உயிர் தம்மோடு பொருந்தி நின்றபோதே அவை அறியும் என்பதும் இதனால் விளங்கும். அந்த ஐம்பொறிகளின் நிலையில்தான் உயிரும் உள்ளது. உயிரும் தானாக அறிவதில்லை. உயிருக்கு உயிராக இறைவன் பொருந்தி நின்று அறிவிக்கும்போதே உயிர் யாதொன்றையும் அறியும் வன்மையைப் பெறுகிறது. எவ்வாறு ஐம்பொறிகள் உயிரால் அறிகின்றனவோ, அவ்வாறே உயிரும் இறைவனால் அறிகின்றது. இவ்வகையில் ஐம்பொறிகள் உயிருக்கு உவமையாகின்றன.
மேவாமல் மேவுதல்
ஒரு பொருள் தன் தன்மையைச் சிறிதும் இழக்காமல் மற்றொரு பொருளோடு பொருந்தி ஒன்றுபட்டு அப்பொருளேயாய் நிற்றலே மேவாமல் மேவுதலாகும். இறைவன் உயிரோடு பொருந்தித் தான் சிறிதும் தோன்றாமல் உயிர் ஒன்றே உள்ளது என்று சொல்லும் படியாக அதனோடு ஒற்றுமைப்பட்டு நிற்கின்றான். அவ்வாறு நின்றாலும் அவன் தன்னியல்பில் சிறிதும் மாறுவதில்லை. எதிலும் தோயாமல் நிற்பவன் அவன். இந்நிலையே மேவாமல் மேவுதல் என்பது. உயிரின் நிலையோ இதனின் வேறுபட்டது. உயிரறிவு எப்பொருளைப் பொருந்தினாலும் அப்பொருளின் தன்மையைப் பெற்று அதன் வண்ணமாய்த்திரிந்து நிற்கும். இதுபற்றிய விளக்கத்தை முன்னே கூறியிருக்கிறோம் (செய்யுள் 24) இறைவன் உயிரில் பொருந்தி, உயிரேயாய் நின்று உணர்த்தி வருகிறான் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.
இறைவன் உடனாய் நிற்றல்
29. அக்கரங்கட்கு எல்லாம் அகரஉயிர் நின்றாற்போல்
மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் எக்கண்ணும்
நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவுஎன்று
நல்ஆகமம் ஓதும் நாடு
பதவுரை
அக்கரங்கட்கு எல்லாம் எல்லா எழுத்துக்களிலும்
அகர உயிர் அ என்னும் உயிரெழுத்து
நின்றாற் போல் இயைந்து அவற்றை இயக்கி நின்றாற் போல
மிக்க உயிர்க்கு எண்ணற்ற உயிர்களிடத்தில்
உயிராய் இயைந்து அவற்றை இயக்கும் உயிராய்
மேவினோம் யாம் பொருந்தியுள்ளோம்.
எக்கண்ணும் எவ்விடத்தும்
நில்லா விடத்து யாம் உடன் நின்று அறிவிக்காத போது
உயிர்க்கு அவ்வுயிர்களுக்கு
நில்லாது அறிவு என்று அறிவு விளங்காது என்று
நல் ஆகமம் குற்றமற்ற சிவாகமங்கள்
ஓதும் கூறும்.
நாடு இதனை நீ சிந்திப்பாயாக.
பொழிப்புரை
அகரம் ஆகிய உயிர் ஏனைய எழுத்துக்கள் எல்லாவற்றிலும் கலந்து உடனாய் நின்று அவற்றை இயக்கும். அதுபோல யாமும் எல்லா உயிர்களிடத்தும் உயிர்க்குயிராய் உடனிருந்து அவற்றை இயக்குவோம். அவ்வாறு யாம் எல்லா இடத்தும் நிறைந்து நின்று அறிவித்தாலன்றி உயிர்களுக்கு அறிவு நிகழாது என்று ஆகமங்கள் கூறும். அதனை ஆராய்ந்து அறிக.
விளக்கம்
அகர உயிரின் முதன்மை
ஒலிக்கும் முயற்சிகளுள் முதல் முயற்சி வாயைத் திறத்தல். அந்த முதல் முயற்சியிலேயே வாயைத்திறந்த அளவிலேயே உண்டாவது அ என்னும் ஒலி. மற்றைய ஒலிகள் வாயைத் திறப்பதோடு வேறு சில முயற்சிகளும் செய்யப் பிறப்பவையாகும். வாயைத் திறத்தல் ஆகிய அம்முதல் முயற்சியின்றிப் பிற முயற்சிகள் நிகழா என்பது தெளிவு. அம்முதல் முயற்சியோடு கூடியே பிற முயற்சிகள் நிகழ்கின்றன. எனவே முதல் முயற்சியில் பிறப்பதாகிய அகர வொலியோடு கூடியே பிற முயற்சிகளில் பிறப்பனவாகிய மற்றைய ஒலிகள் எழுகின்றன என்பதும், அகரவொலியின்றிப் பிற எழுத்தொலிகள் இல்லை என்பதும் புலனாகும் எனவே எழுத்துக்களுக்கெல்லாம் அடி நிலையாய் இருப்பது அகர வுயிரேயாகும். அதுபோல இறைவனே எப்பொருளின் இயக்கத்திற்கும் முதலாய் நிற்கின்றான்.
அகர உயிரும் நிகரில் இறையும்
எழுத்துக்கள் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் என இருவகைப்படும். அவ்விரு வகை எழுத்துக்களிலும் அகரவுயிர் கலந்திருக்கிறது. உலகம் சித்தும் சடமும் என இருவகைப்படும். சித்து என்பது அறிவுடைய உயிர்களின் தொகுதியைக் குறிக்கும். சடம் என்பது அறிவற்ற பொருள்களின் தொகுதியைக் குறிக்கும். இவ்விரண்டும் சேர்ந்ததே உலகம். சித்தும் சடமும் ஆகிய இவ்விரண்டிலும் இறைவன் கலந்து உடனிருக்கின்றான். எழுத்துக்களின் இயக்கத்திற்கு அகர வுயிர் இன்றியமையாதது. அதுபோலச் சித்தும் சடமுமாகிய உலகத்தின் இயக்கத்திற்கு இறைவன் இன்றியமையாதவன். இறைவன் சித்தாகிய உயிர்களோடு உடனாய் நின்று அவற்றின் அறிவை விளங்கச் செய்கின்றான் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.
நாதன் நடம்
இனி, இறைவன் இயற்றும் நடனத்தின் இயல்பு யாது? என்ற வினாவுக்கு விடை கூறுகின்றார் ஆசிரியர். அவ் விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன், நாதன் நடனம் பற்றிய சில செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.
இறைவனது அசைவு கூத்து எனப்படுதல்
எப்பொருளின் இயக்கத்திற்கும் அடிநிலையாய் இருப்பவன் இறைவன் என்பதனை முந்திய பகுதியால் அறிந்தோம். அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற பழமொழி இதனையே உணர்த்தி நிற்கிறது. அவன் அசையவில்லையாயின் எதுவும் அசையாது என்பது கருத்து. இதனையே உடன்பாட்டு வகையில், அனைத்தும் அசைய வேண்டி அவன் அசைகின்றான் என்று கூறலாம். அவனது அசைவையே ஆடல் என்றும், கூத்து என்றும் உயர்ந்தோர் குறிப்பிட்டனர்.
இறைவனது செயல்கள் விளையாட்டு எனப்படுதல்
அனைத்தையும் அசைவிக்கும் அவனது செயலை விளையாட்டு என்று நூல்கள் கூறும். காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி என்று திருவாசகத்தில் வருதல் காணலாம். விளையாட்டு என்பது எளிதிற் செய்யும் வலிமையைக் குறிப்பது. அண்ட கோடிகளையெல்லாம் அவன் தனது நினைப்பு மாத்திரத்தால் இயக்கி வருகிறான் என்றால் அவனது ஆற்றலை என்னென்பது! அச்செயல்களை அவன் அத்துணை எளிதிற் செய்தலின் அவன் செயல்களை விளையாட்டு என்று குறிப்பிடுவது மரபாயிற்று. விளையாட்டே கூத்து என்றும் நடனம் என்றும் சொல்லப்படுகிறது.
சிவனது திருக்கூத்தே அனைத்து இயக்கத்திற்கும் காரணம்
அவனது திருக்கூத்தினாலேயே அனைத்துப் பொருள்களும் நிலைத்துத் தத்தம் இயல்பிற்கேற்பச் செயற்படுகின்றன. அவை இயங்குங்கால் அவனது கூத்தும் அவற்றோடு உடனாய் இயங்கி நிகழ்கிறது. இதனால் சிவனது திருக்கூத்தே உலகத்தின் செயற்பாடு எல்லாவற்றிற்கும் காரணம் என்பது விளங்கும்.
திருக்கூத்து நிகழும் இரண்டு இடங்கள்
இறைவன் எங்கும் அருவாய் நின்று ஆடுகின்றான். எல்லா இடங்களும் அவன் நடம் புரியும் இடமேயாயினும் அவற்றுள் இரண்டு இடங்களைச் சிறந்தனவாக எடுத்துக் கூறுவர். ஒன்று உயிர்களின் அறிவும், மற்றொன்று தில்லைச் சிற்றம்பலமும் ஆகும்.
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி என்று திருவாசகம் இவ்விரண்டிடங்களையும் குறிப்பிடும்.
உயிர்களின் அறிவில் நின்று அவன் இடைவிடாது உணர்த்தி வருகின்றான். அச்செயல் அதிசூக்கும ஐந்தொழில் எனப்படும். அதனைப் பரநடனம் எனக் குறிப்பிடுவர். புருவ நடுவில் நிகழ்வதாகிய இந்நடனம் இல்லையேல் உயிர்களுக்கு அறிவு விளங்குதல் இல்லை. ஒருநாமம், ஓருருவம், ஒன்றும் இல்லாத இறைவன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான். உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான்.
நாளும் நினைக்கவேண்டுவது நாதன் நடனம்
இறைவன் எண்ணற்ற உயிர்களிடத்து என்றும் உடனாய் நீங்காது நின்று அவைகளுக்கு வேண்டும் எல்லா நலங்களையும் எப்போதும் புரிந்து வருகிறான். அவன் ஆணவத்தில் அழுந்திக் கிடந்த உயிர்களை அக்கேவல நிலையிலிருந்து எடுத்துச் சகல நிலையிற் கொண்டுவந்த அருட்செயலையும், அச்சகல நிலையில் உயிர்கள் பல வகைப் பிறப்புக்களைக் கடந்து மனிதப் பிறப்பை அடையும்படி செய்கின்ற அவனது பேருதவியையும், உயிர்கள் உலகிற் பிறந்தும் இறந்தும் உழன்று படிப்படியாகப் பக்குவ முதிர்ச்சி பெற்ற காலத்தில் குருவாய் வந்து தத்துவங்களின் இயல்புகள் தன்னியல்பு ஆகிய எல்லாவற்றையும் விளங்கக் காட்டி அம்மெய்யுணர்வின் பயனாகப்பாசநீக்கம் வருவித்து அவ்வுயிர்களைத் தானாகச் செய்து தன்னொடு சேர்த்துக் கொண்டு பேரின்பம் அளித்து வரும் பெருங்கருணையையும் பலபடியாக எடுத்துக் கூறிப்போற்றுகின்றன நமது திருமுறைகளும் சாத்திரங்களும்.
இறைவன் இவ்வாறு செய்து வரும் எண்ணிறந்த அருட்செயல்கள் யாவும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தில் அடங்குவனவாகும். அவ் வைந்தொழில்களையும் நாம் உணரும்படி காட்டி நிற்கும் திருக்கோலம் கூத்தப் பெருமான் திருவடிவமே. ஒருவராலும் அறியப்படாத சிவ முதற்பொருள் தானே தனது கருணையினால் அனைவரும் எளிதாகத் தன்னைக் காணும்படி நடனவுருக்கொண்டு அம்பலத்தில் தோன்றி நிற்கின்ற தன்மையை வியந்து,
ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
அம்பலத் துள்நின்று ஆடுவார்
என்றார் சேக்கிழர் பெருமான். மேலும் அவர், கற்பனை கடந்த சோதியாகிய அது கருணையே உருவமாகி, அற்புதக் கோலம் நீடி, திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ் செய்கின்றது என்றும் போற்றினார். இந்நடனத்தை எண்ணிப் பார்க்குங்கால் அறிவுடையோர்க்கு உள்ளம் உருகாமல் இருக்குமோ? கைம்மாறு கருதாத கருணை காரணமாக இறைவன் இடையறாது நிகழ்த்தி வரும் இந்நடனத்தை ஒருபோதும் மறவாது நினைந்து அவனை உளம் உருகிப் போற்றுவதைத் தவிர உயிர்களாகிய நாம் அவனுக்குச் செய்யக்கூடியது வேறு ஒன்றும் இல்லை. அவனது நடனத்தை ஒருபோதும் மறவாது நினைவதையே கடமையாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதை,
கொன்றையம் முடியினாய்
கூடல் ஆல வாயிலாய்
நின்றயங்கி ஆடலே
நினைப்பதே நியமமே
என்று திருஞான சம்பந்தரும்,
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ
என்று திருநாவுக்கரசரும் அருளியுள்ள திருவாக்குகளால் அறியலாம்.
இறைவன் கொள்ளும் அருள்திருமேனி
இறைவன் கொள்ளுகின்ற உருவத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாயையினால் ஆனதன்று. உயிர்களாகிய நாமெல்லாம் மலம் உடையவர் ஆதலின் மலங்களில் ஒன்றாகிய மாயை நமக்கு உடம்பாக வந்து பொருந்துகிறது. இறைவன் மலம் இல்லாதவன் ஆதலின் மாயை அவனுக்கு உருவமாய் அமைதல் இல்லை. தூயதாகிய அவனது அறிவே அவனுக்கு உருவமாய் அமையும். அறிவின் இயல்பாவது பிறர் நிலைக்கு இரங்குதல்; கருணை கொள்ளுதல், அருளுதல், இறைவனது அறிவு பெருங் கருணையாயும், பேரருளாயும் நிற்கும். அது பற்றியே அவனது அறிவை அருள் என்றும், கருணை என்றும் குறிப்பர் பெரியோர். இறைவன் தனது அறிவினால் கொள்ளுகிற உருவம் எல்லாம் அருள் திருமேனி எனப்படுகிறது. அவனது திருமேனி அருள். ஆதலினால் அத்திருமேனியிற் காணப்படும் ஆடை, அணிகலம், படைக்கலம் முதலியனவும் அருளேயாம்; அவன் காட்சி தந்து நிற்கின்ற இடமும் அருளேயாம். இறைவனது உடம்பு அங்கம் எனப்படும். திருவடி, திருக்கரம் முதலிய உறுப்புக்கள் பிரத்தியங்கம் எனப்படும். அங்கத்துடன் கூடியுள்ள சூலம், மழு, பாம்பு, அபய முத்திரை, நெருப்பு முதலியவை சாங்கம் எனப்படும். அங்கத்தின் சார்பிலிருக்கும் ஆடை, அணிகலம், மாலை. அமரும் இருக்கை முதலியவை உபாங்கம் எனப்படும். அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் ஆகிய இந்நான்கும் அருளேயாம். இறைவனது திருமேனி உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகைப்படும். அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க, இறைவன் அத்திருமேனிகளில் நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.
மந்திரத்தைத் திருமேனியாகக் கொள்ளுதல்
இனி, இறைவனுக்கு மந்திரம் சிறப்புத் திருமேனியாகச் சொல்லப்படுகின்றது. இதுபற்றிச் சிறிது சொல்ல வேண்டும். இறைவன் அனைத்து உலகங்களிலும் கலந்து அவையேயாய் நிற்கின்றான். உயிர் உடலெங்கும் கலந்து தான் சிறிதுந் தோன்றாமல் உடலேயாய் நிற்பது போன்றது இது. அவ்வாறு கலந்திருக்கும் உயிருக்கு உடம்பு வடிவமாய் அமைகிறது. அதுபோல எல்லாவற்றிலும் கலந்திருக்கும் இறைவனுக்கு அவையனைத்துமே வடிவமாய் அமைகின்றன.
எனவே எல்லாப் பொருள்களுமே இறைவனுக்குத் திருமேனிகள்தாம் என்று சொல்லலாம். ஆயினும் அவற்றுள்ளும் மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனியாய் நிற்கின்றன. எவ்வாறெனில், சொற்களும் சொற்றொடர்களும் ஆகிய மந்திரங்கள் சுத்த மாயையில் தோன்றியவை. இறைவன் சுத்த மாயையை இடமாகக் கொண்டு நின்றே அசுத்த மாயையின் காரியமாய் உள்ள பொருள்களையெல்லாம் இயக்கி நிற்பான் என்பது நாமறிந்தது. இம்முறையில் அவன் மந்திரங்களைத் தனக்கு நேரே இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகத் தவத்தோர்க்குப் புத்தி, முத்திகளாகிய பயன்களைத் தருவான். இறைவனுக்கு மந்திரங்கள் சிறந்த வாயில் ஆதலாலும், இறைவன் அவற்றைப் பற்றி அவையேயாய் நிற்பன் ஆதலாலும், அம்மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனிகளாய்ச் சொல்லப்படுகின்றன. கல், மண், பொன் முதலிய பொருள்களும் இறைவன் அவற்றில் கலந்துள்ள கலப்பினால் அவனுக்கு வடிவமேயாயினும், மந்திர வடிவம் அவற்றினும் சிறந்தது என்பது உணர்தற்குரியது. மந்திரங்களுள் தலையாயது ஐந்தெழுத்து மந்திரமாகும். அதுவே ஞானத்தைத் தருவது. கூத்தப்பெருமான் திருவைந்தெழுத்தைத் தனது திருவுருவமாகக் கொண்டு ஆடல் புரியும் அருட்பெருமையை ஆசிரியர் இப்பகுதியில் விளங்கக் காட்டியுள்ளார்.
இறைவன் புரியும் ஆடலின் இயல்பைக் கூற வேண்டுதல்
30. நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்செழுத்தால்
உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி பெற்றிடநான்
விண்ணார் பொழில்வெண்ணை மெய்கண்ட நாதனே!
தண்ணார் அருளாலே சாற்று
பதவுரை
விண் ஆர் பொழில் வானை அளாவி எழுந்த சோலைகள் சூழ்ந்த
வெண்ணை திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியுள்ள
மெய்கண்ட நாதனே மெய்கண்ட தேவரே,
நல் தவத்தோர் நல்ல தவத்தைச் செய்தவர்கள்
காண காணும்படி
நாத அந்தத்து நாதத்தின் முடிவில்
அஞ்செழுத்தால் திருவைந்தெழுத்தால்
உற்ற உருவாய் நின்று திருவுருக்கொண்டு
ஆடல் முதல்வன் செய்யும் திருக்கூத்தின் இயல்பை
உள்ளபடி நான் பெற்றிட உள்ளவாறு அறிந்து அடியேன் நன்மை எய்தும்படியாக
தண்ணார் அருளால் குளிர்ந்த அருளால்
சாற்று சொல்லியருள வேண்டும்
பொழிப்புரை
நல்ல தவம் செய்தவர் காணும்படி நாதத்தின் முடிவில் திருவைந்தெழுத்தால் திருவுருக் கொண்டு சிவபெருமான் திருக்கூத்தினை இயற்றுவன். திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளியுள்ள மெய்கண்ட நாதரே, அத் திருக்கூத்தின் இயல்பை அடியேன் உள்ளவாறு அறியும் வகையில் அதனை விளக்கியருள வேண்டும் என மாணவர் வேண்டுகிறார்.
விளக்கம்
நாதாந்த நடனம்
தத்துவங்களில் இறுதியாக, எல்லாவற்றிற்கும் மேலே உள்ளதாகச் சொல்லப்படுவது நாதம் ஆகும். அதனையும் கடந்தால்தான் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்ததாகும். தத்துவங்களைக் கடத்தலாவது ஆன்மா அவற்றைத் தனக்கு வேறாகக் கண்டு நீங்குதல். நிலம் முதல் நாதம் ஈறாகிய தத்துவம் முப்பத்தாறனையும் கடந்த நிலையில் அவை நீங்கிய நிலையில் ஆன்மா தான் அவற்றின் வேறாய் இருத்தலை உணரும். ஆணவத்திற்கு மாற்றாகவே மாயையிலிருந்து தத்துவங்கள் இறைவனால் கூட்டப்பட்டன. ஆதலால் அவை நீங்கிய இடத்து ஆணவம் நிற்றல் இயல்பாகும். ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம். ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக்கும் என்று கூறியுள்ளபடி, பக்குவம் இல்லாத பொழுது சிவம் மறைந்திருக்க ஆணவ இருள் மேலிட்டிருந்தது. பக்குவம் வந்துற்ற இப்பொழுது ஆணவம் மேலிட மாட்டாமல் இருக்க, சிவமே மேலிடும். சிவம் மேலிட்டபோது ஆன்மா அதனைச் சார்ந்து, தான் வேறு தோன்றாது அதனோடு ஒன்றிவிடும் கதிரொளியில் விளக்கொளி போல உயிருணர்வு சிவத்தில் அடங்கி நிற்கும். அவ்விடத்தில் ஆன்மா பேரா இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்தும். அவ்வாறு நாதாந்தத்தில் ஆனந்த வாரிதியின் ஆன்மாவை அழுத்தும் குறிப்புடையது கூத்தப் பெருமான் செய்யும் திருக்கூத்து. அத்திருக்கூத்தின் இயல்பை விளக்கியருளும்படி மாணவர் வேண்டுகிறார்.

No comments:
Post a Comment